Tuesday 5 March 2013

சொல்வதெல்லாம் உண்மை….

மிக்க நெருங்கிய நண்பர் ஒருவருக்கு இன்று இரவு மணி 9 அளவில் போனில் தொடர்பு கொண்டு, என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன். மெகா சீரியல் பார்த்து கொண்டிருப்பதாய் சொல்கிறான்…
இவனை போன்றவர்களை என்ன தான் செய்ய… இவனுக்கு zee டி வியில் சொல்வதெல்லாம் உண்மையை பார்ப்பதை விட வேறு என்ன உருப்படியான் வேலை இருந்த விட முடியும். மெகா சீரியல் பார்க்கின்றானாம், மெகா சீரியல். ப்ளடி ஃபெல்லாவ்…

மெகா சீரியல் என்பதென்ன, எங்கோ யாருக்கோ நடந்த பிரச்சனையை கதையாக்கி, டேக் ஓ.கே செய்து, எடிட்டிங் பார்த்து, சம்பளம் பட்டுவாடா செய்து, டி.வி.யில் ஒளிபரப்புவது. இங்கே லைவ்வாக ஒரு பிரச்சனை ஓடி கொண்டிருக்கிறது, அதை பார்ப்பதை விட ஒரு இந்திய பிரஜையான இவனுக்கு என்ன தலையாய கடமை இருக்க முடியும், ஸ்டுபிட் கய்ஸ்.

சொல்வதெல்லாம் உண்மை பார்க்கும் போது, 7 ஆரண்ய காண்டம், 15 மதுபான கடை, 77 கற்றது தமிழ், 3 ஆப்கானிய சினிமா, 16 ஆப்பிரிக்க சினிமா பார்க்கும் போது எப்படி என்னுள் உள்ள கலை தாகம் அடங்குமோ, அதையெல்லாம் சொல்வதெல்லாம் உண்மையின் ஒரு எபிசோட் பார்க்கும் போதே கிடைக்கிறது. அத்தகைய மேன்மை பொருந்திய, எழுத்தில் வடிக்க முடியாத, சிறப்பு மிக்க நிகழ்ச்சியை பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன், அடப் போடா, என்கிறான், ஸ்கௌண்டரல் ஃபெல்லோவ்.

இரண்டு வயதுக்கு வந்த பெண்களை வைத்து கொண்டும், ஒரு குடிகார சந்தேக புத்தி கொண்ட கணவனிடம் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை zee டி.வியை விட யாரால் சிறப்பாய் சொல்ல முடியும். அவளுடைய பணக்கஷ்டம், துக்கம், ஏக்கம், வேதனை, துயரம், கண்ணீர், அழுகை, கதறல், ஏழ்மை, நிர்பந்தம், கொடுமை, வெட்கம், அவமானம் அத்தனையும் யார் அறிந்தார்? யார் காது கொடுத்து கேட்டார்? யார் தீர்வு கொடுத்தார்? யார் ஆறுதலாய் இருந்தார்? யார் கண்ணீர் துடைத்தார்? …. யாரும் இல்லை.

ஒரு பாலைவன காட்டில், வீட்டிலே செல்லமாக வளர்த்த ஒரு கொழுகொழு பன்னிக்குட்டி எப்படி அல்லலுற்று, வேதனையின் உச்சத்திற்கு சென்று விரக்தியில் வீழுமோ… அது போல் வீழ்ந்தாள், எம் தமிழ் பெண், ராஜீ.

அப்போது வந்தவன் தான் புஷ்பராஜ், 18 வயது வாலிபன், வீட்டிற்கு முதலும் கடைசியுமான ஒரே பையன். எல்லோரை போலவும் ஒரு அப்பா, ஒரு அம்மா கொண்ட வீரவேங்கை. அன்பில் சிறந்தவன். கருணையின் கடைக்குட்டி. ஆம், அவனது கருணை எம் தமிழ் பெண் மேலும் கடைக்கண் ஆற்றியது. அவளுக்கு வேண்டியதை செய்தான். தேவையானதை ஈந்தான். பாதுகாப்பின் உரியவனாய் நின்றான். அவள் கேட்கும் பட்சத்தில் பல சமயம் கட்டில் சுகத்தையும் கொடயாய் அளித்தான் எம் கொடை வள்ளல், புஷ்பராஜ். எம் தமிழ் பெண் ராஜீயின் வாழ்க்கையில் வெளிச்சம் அரும்பியது, மலர்கள் மலர்ந்தது, வாசம் திரும்பியது, காதல் பெருகியது. இப்படி ஒப்பற்ற மேன்மையான, கள்ளம், கபடமில்லாத ஒரு உறவை தான், கள்ள தொடர்பு என்று கேவலப்படுத்தியது சமூகம்.
என்னே என் தமிழ் பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!
என்னே என் கொடை வள்ளலுக்கு வந்த சோதனை!

புஷ்பராஜின் பெற்றோர்களும், ராஜியின் குடும்பமும் zee. டி.வி.யை நாடியது! இவர்கள் அடிப்பது அனைத்தும் கூத்து என்றது! கொட்டம் என்றது!

என்னே தர்மத்திற்கு வந்த சத்திய சோதனை!
எங்கே சென்றாள் நீதி தேவதை!

இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு அல்லலுறும் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கையளித்தது, கூத்தா…!

ஒரு வேலையில்லாத வாலிபன் ஆசை படுகிறானே என்றும், அவன் காம உந்துதலில் யாரையும் சென்று பலாத்கார படுத்தி விடக் கூடாது என்றும் கட்டிலில் ஒரு ஓரமாக இடம் கொடுத்தது கொட்டமா….!

இது சமூக சேவை அன்றோ…?

மடப்பயல்கள்…

ஒட்டுமொத்த நிகழ்ச்சி குழுவினரும், சமூகமும், இரு குடும்பமும் எம் தமிழ் பெண் ராஜி செய்ததையே குற்றம் என்று கட்டம் கட்டி, பழி சுமத்தி, அவள் கண்களில் கண்ணீரை கக்க வைத்தனர். இளம் வாலிபன் புஷ்பராஜ் வாழ்க்கையை சீரழிக்கிறாள் என்று அபாண்ட பழியை ராஜி மேல் சுமத்தினர்.

கண்ணீர் சிந்தினாளே தவிர, அழவில்லை எம் தமிழ் பெண்.
கதறினாளே தவிர கலங்கவில்லை எம் தமிழ் பெண்.

நான் செய்ததில் என்ன தப்பு என்று கேட்டாள் ராஜி. யாருக்கு வரும் இவள் துணிவு. யாருக்கு வரும் இவள் வீரம். யாருக்கு வரும் இவள் நெஞ்சுரம்.

யாரும் அவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத வண்ணம், வெட்கி தலை குனிந்தனர். அவமானத்தில் தரை பார்த்தனர்.

இருந்தாலும் நிகழ்ச்சி குழுவினர் கேட்டு கொண்டதற்கு இணங்க, புஷ்பராஜை விட்டு விடுகிறேன் என்று ஒப்பு கொண்டாள் எம் தமிழ் பெண். அங்கே நிற்கிறாள் அவள், எத்தனை பொன்னியின் செல்வன் படித்தும் தியாக உணர்வு கொஞ்சமும் எட்டி பார்க்காத பல மெத்த படித்த மனிதர்கள் வாழும் இப்பாரத பூமியில், படிப்பறிவில்லாத எம் தமிழ் பெண் ராஜி மட்டுமே தியாகத்தின் திருவுருவாய் விளங்கி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்து, கைதட்டலை அள்ளினாள்.

எம் தமிழ் பெண்ணை குடும்பத்தோடு போய் இருக்க சொன்னார்கள், zee டி.வி.யினர். மறுத்தாள் அவள்….!

வாரம் ஒரு புடவையும், மாதம் ஒரு நகையும், ECR ரோட்டில் டூ வீலர் ரைடும், கேட்கும் போது புஷ்பராஜை போல் கொடையுள்ளத்துடன் கொடுக்கும் பணமும், சுகமும் கொடுக்காத அந்த குடிகார, கொடுங்கோல, ஆணாதிக்க, சர்வாதிகார, குறுகிய மனம் கொண்ட, பாவியான கணவனை வேண்டாம் என்று மறுத்தாள் அவள். தன்னையும் புஷ்பராஜையும் பல முறை சந்தேகப்பட்டான் அந்த பாவி என்று கதறி அழுதாள் ராஜி. அதை கண்ட அனைவரது கண்களும் கண்ணீர் வற்றும் அளவிற்கு அழுதது.

என்ன குற்றம் செய்தாள் இவள்… ஏன் இவளுக்கு மட்டும் இப்படி ஒரு விதி… ஏன் இவளை சுற்றி மட்டும் இத்தனை சதி…. அக்கிரமக்காரர்களை தூக்கி போட்டு மிதி!

இறுதியில் தனியாகவே யாருடனாவது, வாழ்ந்து விட்டு போகிறேன் என்று சபதம் பூண்ட ராஜியிடம், குழந்தைகளையாவது கூட்டி செல்லுமாறு ஒருங்கினைப்பாளர் கேட்டு கொண்டார்.

அதையும் மறுத்தாள் எம் தமிழ் பெண்!
கோவத்தை கக்கினாள் எம் குலப் பெண்!
யாரும் தேவையில்லை என்று மறுதலித்தாள், எம் தவ புதல்வி!

வேண்டுமானால் நீங்களே ஹாஸ்டலில் சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினாள், எம் சீர்த்திருத்த சித்தாந்தம் ராஜேஸ்வரி, புஷ்பராஜ் இல்லாத திசை பார்த்து…

No comments:

Post a Comment