Thursday 3 October 2013

மேன்ஷன் வாழ்க்கை



ஜான் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவன். நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் என்னுடைய ஒரே ஆதரவு, ஒரே அரவணைப்பு, ஒரே பிடித்தம் யாரென்றால் அது ஜான் மட்டுமே. நான் இருக்கும் மேன்ஷன் பளிங்கு தரைகள் ஜொலிக்க, புதிதாக ரோஸ் வர்ணம் பூசிய சுவர்கள் இருக்கும் மேன்ஷன் என்றாலும், எலி பொந்து போல் சிறிதாக இருக்கும். ஆபிஸ் பக்கமாக இருக்கிறதே என்று இந்த மேன்ஷனிற்கு வர வேண்டியதாய் போயிற்று. அதுவுமில்லாமல் இந்த மேன்ஷன் கிடைக்கவே, உன் பாடு என் பாடு என்றாகி போனது. இதையே ப்ரோக்கர் வைத்து தான் தேடினேன். தண்ணீர் மஞ்சளாக வரும், சாப்பாடு வெளியில் தான் சாப்பிட்டு கொள்ள வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், காதலியிடம் போன் பேச இடம் இருக்காது, மொட்டைமாடி, படிகள், வராண்டா என எல்லா இடத்தையும் ஏற்கனவே பிடித்து வைத்திருப்பார்கள், சிகரெட் தண்ணி என எந்த பழக்கத்திற்கும் தடை இல்லை, வண்டி வைத்து கொள்ளலாம் ஆனால் பார்க்கிங் இல்லை, கேட் வெளியே தெருவில் தான் நிறுத்து கொள்ள வேண்டும், வண்டி திருடு போனால் மேன்ஷன் நிர்வாகம் பொறுப்பேற்காது, இது தவிர அறைகளிலும் பர்ஸ் செல்போன் போன்றவைகள் திருடு போகும், ஒரே சிறிய அறையில் குறுக்க நெடுக்க 5 கட்டில்கள் போடப்பட்டிருக்கும், பொருட்களை வைத்து கொள்ள அலமாரியும் கிடையாது, சுவற்றில் ஆணியும் அடிக்க கூடாது, ஆனாலும் எங்களுக்கு முன்பிருந்தவர்கள் ஆணி அடித்து ஹேங்கர் வைத்திருந்தனர், எல்லார் ஹேங்கரிலும் கிட்டத்தட்ட 40 கிலோ எடைக்கு சர்ட் பேன்ட்கள் தொங்கி கொண்டிருக்கும்இது தவிர அவ்வப்போது கரண்ட் கட் வேறு, யூதர்கள் 5 அடுக்கு அலமாரி போன்றிருக்கும் இடங்களில் எப்படி அடைந்து கிடந்து தங்கியிருப்பார்கள் என்றும், எப்படி வெக்கையில் வெந்திருப்பார்கள் என்பது கைகளில் அகப்படாமல் கொசுக்கள் ரீங்கரித்து சொல்லி கொண்டே இருக்கும்

என்னுடைய ஆபிஸ் மாற்றலாகியும் கூட இதே மேன்ஷனில் இருந்தே போய் வந்து கொண்டிருக்கிறேன். தினமும் போக முக்கால் மணி நேரம், வர முக்கால் மணி நேரம் ஆனாலும் கூட எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. அது போக பெட்ரோல் செலவு வேறுஆனாலும் இங்கேயே குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்ஒரே காரணம் ஜான்

எனக்கும் பலரை போல, சிலரை பார்த்த மாத்திரத்திலே பிடித்து விடும். அது போல பிடித்து போனவன் தான் ஜான், காரணமே இல்லாமல் பிடித்து போனாலும், இப்போது அவனுக்காகவே இந்த குப்பை மேன்ஷனில் இருக்குமளவிற்கு பிடித்து போனதற்கு ஓர் தீர்க்கமான காரணம் இருக்கிறது.

இப்போது நான் உயிருடன் இருக்கிறான் என்றால் அதற்கு ஜான் தான் காரணம். அப்போது திவ்யா என்னை வேண்டாம் என்று உதறி விட்டு சென்றிருந்த காலம் அது. அப்போது எனக்கு வேலையிலும் சிலபல சிக்கல்கள் இருந்தன. ரொம்பவும் மன அழுத்தத்தில் ஒரு நாள் விஷம் குடிக்க முடிவு செய்து விட்டேன். கடைக்கு போய் வாங்கி வந்து என் பையில் தான் வைத்திருந்தேன். ஆனாலும் ஜான் அதை கண்டு பிடித்துவிட்டான். அதை எப்படி கண்டுபிடித்தான் எனக்கு இன்று வரை தெரியவில்லை, ஆனாலும் எப்படியோ கண்டுபிடித்து விட்டான். அதை எல்லாரும் தூங்கியதற்கு பிறகு இரவு குடிக்கலாம் என்று தான் வைத்திருந்தேன், ஆனாலும் அதில் எதிர்பாராத தடை ஏற்பட்டு விட்டப்படியால் அது ரத்தாகி போனது. இப்போது அதை பற்றி நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வரும்.

அந்த நாள் உண்மையிலே எனக்கு மறக்க முடியாத நாள். ஜான் அன்று இரவு இரண்டு மணி நேரம் என்னிடம் பேசினான். நிறைய தைரியம் சொன்னான், நிறைய கதைகள் சொன்னான், நிறைய நம்பிக்கை வார்த்தைகள் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் இப்போது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை, ஆனாலும் அவன் என்னிடம் பேசிய போது, நான் என்னை எவ்வளவு கம்பீரமாக உணர்ந்தேன் என்பது மட்டும் எனக்கு மறக்கவேயில்லை. அந்த நாள் உண்மையிலே என் வாழ்வில் ஓர் திருப்புமுனை, அதன்பின் ஒரே வாரத்தில் என் வேலை சம்பந்தமான சிக்கல் மறைந்து போனது. திவ்யா இல்லாத சோகமும் ஓரளவு பழக்கத்திற்கு வந்தது. ஒரு மாதம் கழித்து, திவ்யா போனது எல்லாம் எனக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. கொஞ்ச நாட்களிலே அபர்ணா என் வாழ்வில் வந்து விட்டாள். வாழ்க்கை திரும்பவும் அழகாகிவிட்டது.

ஜான் வேலை செய்வது ஓர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில், டைல்ஸ், க்ரானைட் சம்பந்தமான பொருட்களையெல்லாம் மார்க்கெட்டிங் செய்வான். அறையில் இருக்கும் முக்கால்வாசி நேரம் யாரிடமாவது போனில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருப்பான். அவன் போனில் தான் ஆங்கிலத்தில் பிச்சு உதறவானே தவிர, எங்களிடம் பேசுவது அக்மார்க சென்னை தமிழில். எப்போது வேலைக்கு போவான், வருவான் என்றே தெரியாது. சில நேரம் ஜாமத்திற்கு வருவான், விடியற்காலையே கிளம்புவான். சில நேரம் மூன்று நாட்கள் வரையிலும் கூட எங்கயும் போகாமல் அறையிலே இருப்பான்.

இதற்கிடையில் மேன்ஷனில் திருட்டு பிரச்சனை அதிகமாகி கொண்டு வந்தது. சமயத்தில் என் பர்ஸில் இருந்து கூட பைசாக்கள் நழுவின. அன்றிலிருந்து பர்ஸில் அதிகமாக பணம் வைத்து கொள்வதில்லை. அப்படியே வைத்து கொண்டாலும், ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையெழுத்திற்கு சற்று கீழே, கண்ணிற்கே தெரியாத வகையில் பென்சிலில் மூன்று ஸ்டார்கள் வரைந்து கொள்வேன். அது அவ்வளவு எளிதில் யார் கண்ணிற்கும் தெரியாது, நானே உற்று பார்த்து தேடினால் தான் கிடைக்கும்.

மேன்ஷனில் திருட்டு பிரச்சனை அதிகமானதில் எனக்கு ஓர் தனிப்பட்ட உபாயம் ஏற்பட்டது. பொதுவாக நான் அறை நண்பர்களுக்கு மட்டும் என் போனை கொடுப்பேன், ஏதேனும் அவசர கால் பேச வேண்டுமென்றாலோ, மொபைலில்கேம்ஸ்விளையாட கேட்டாலோ கொடுத்து விடுவேன். நான் மட்டுமில்லாமல் மற்ற அறை நண்பர்களும் கூட அப்படி தான் இருப்பார்கள். அப்படி ஒரு நாள் கொடுத்ததில், தான் சிக்கலாகி போயிற்று. ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து அபர்ணாவிற்கு, ஓர் தெரியாத நம்பரில் இருந்து தேவையில்லாத கால்களும், மெஸெஜ்களும் வந்து கொண்டே இருந்தன. வரும் மெஸெஜ்களில் முக்கால்வாசி ஆபாச மெஸெஜ்கள், மீதி ஐ லவ் யூ மெஸெஜ்கள். இதை யாரோ வெளியாள் தான் செய்து கொண்டிருப்பதாய் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் என் அறை நண்பன் தினேஷின் மொபைல் திருடு போயிற்று, அன்று இரவு யதேச்சையாக அபர்ணாவிடம் விசாரித்தேன், இன்று ஏதேனும் அந்த நம்பரில் கால் வந்ததா என்று கேட்டேன், இல்லை என்று சொன்னாள். அப்போது தான் எனக்கு தினேஷ் மீது மெலிதாக சந்தேகம் வந்தது. ஒருவேளை இவன் தான் நம் மொபைலில் இருந்து அபர்ணா நம்பர் எடுத்து தொந்தரவு கொடுக்கிறானே என்று சந்தேகித்தேன். ஆனால் அவனிடம் அது பற்றி கேட்கவில்லை. ஆதாரம் இல்லாமல் என்னவென்று கேட்பது, ஒருவேளை அவனாக இல்லாமல் போனால் பெரும் சங்கடம் ஆகி போகும் என விட்டுவிட்டேன்.

இரண்டு நாட்கள் மொபைல் இல்லாமல் தான் இருந்தான். அந்த இரண்டு நாளும் அபர்ணாவிற்கு கால் ஏதும் வரவில்லை. மூன்றாம் நாள் புது மொபைல் வாங்கி வந்தான். அன்று இரவே வழக்கம் போல, அபர்ணாவிற்கு கால் வந்தது. ஆனால் அதே நம்பரில் இருந்து தான் வந்தது என்றாள். அப்படியென்றால் அவன் தொந்தரவு கொடுப்பதற்கென்றே தனியாக ஓர் சிம் வைத்திருக்கிறான் என்று ஊர்ஜிதமானேன். இது நாள் வரையிலும் அபர்ணாவிற்கு கால் வந்த நேரங்களில், தினேஷ் எப்போதும் அறையில் இருந்தது இல்லை. மொட்டை மாடியில் தான் இருப்பான். ஜானிடம் விஷயத்தை சொன்னேன். அவன் ஒரு மூன்று பேரை கூட்டி வந்தான், நேராக மொட்டை மாடிக்கு போனோம், யாரிடமோ பேசி கொண்டிருந்தான். தூரத்தில் நின்று கொண்டே அவன் நம்பருக்கு கால் செய்தோம், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என வந்தது, அப்ர்ணாவிற்கு வரும் ராங் கால் நம்பருக்கு போன் அடித்தோம், வெய்ட்டிங் வந்தது. அன்று இரவு அவனை காட்டு அடி அடித்து விட்டு, அடுத்த நாள் காலை போலிஸில் கம்ப்ளைன்ட் செய்தோம்.

எனக்கும் அபர்ணாவிற்கும் அப்படி ஒரு நிம்மதி, அபர்ணா ஜானை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னாள். ஜானிடம் விஷயத்தை சொன்னதற்கு, கூட வந்து அடிச்சதுக்கெல்லாம் நன்றியா என்று கேலி செய்தான். வரும் ஞாயிற்றுகிழமை ஜானிற்கு பிறந்த நாள் வருவதாகவும், அன்று மாலை Pelita-வில் சந்திக்கலாம் என்று சொன்னான்.

ஜானிற்கு ஏதேனும் வாங்கி கொடுக்க வேண்டும் போல் இருந்தது. என்ன வாங்குவதென்றே தெரியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தோம். ஜான் ஓர் பழைய ஓட்டை போன் வைத்திருப்பதால், அவனுக்கு ஒரு புதிய போன் வாங்கி கொடுக்கவே முடிவு செய்தோம். அன்று ஏதேனும் சினிமாவிற்கு போகலாம் என்று அபர்ணா சொன்னாள், அவளே மூன்று பேருக்கும் சேர்த்து இணையத்தில் டிக்கெட்களை பதிவு செய்தாள். சினிமாவிற்கு போவதற்கு முன்பே, ஒரு மொபைல் ஷாப் போய் வாங்கி கொடுக்கலாம் என முடிவானது.

ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலான ஏடிம்களில் பணம் இருப்பதில்லை என்பதால் சனிக்கிழமை இரவே 10000 பணத்தை எடுத்து வைத்து கொண்டேன். அதில் ஸ்டார்களை போடவும் மறக்கவில்லை. முந்தைய நாள் இரவு ஜான் எல்லார்க்கும் பார்ட்டி கொடுத்ததால், மட்டையாகி காலை 10 மணிக்கு தான் எழுந்தேன். எல்லோருமே தூங்கி கொண்டு தான் இருந்தார்கள். பணம் இருக்கிறதா என்று எதேச்சையாக பர்ஸை எடுத்து பார்த்தேன், இருந்தது.

அபர்ணாவை நேரடியாக மொபைல் ஷாப் வர சொல்லி விட்டு, நானும் ஜானும் குளித்து முடித்து கிளம்பினோம். ஜானிடம் தியேட்டரிற்கு போவதற்கு முன்னர் ஒரு சிறிய வேலை இருக்கிறது, ஒரு மொபைல் ஒன்று வாங்க வேண்டும் என்றேன். யாருக்கு என்று கேட்டான், அபர்ணாவின் தங்கைக்கு என்று சொல்லி சமாளித்து விட்டேன்.

மொபைல் ஷாப்பில் மூவரும் சேர்ந்து 9000 ரூபாய்க்கு ஒரு மொபைலை தேர்வு செய்தோம். ஜானிற்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டோம், மிகவும் பிடித்திருப்பிதற்காக சொன்னான். அவனுக்கு சந்தேகம் வர கூடாது என்று அபர்ணாவும் தன் தங்கையிடம் அடிக்கடி போன் குறித்து பேசுவதாய் பாவனை செய்தாள். இன்று அனைவரும் விடைபெறும் போது கொடுப்பதாய் தான் ஏற்பாடு.

அபர்ணாவும், ஜானும் பேசி கொண்டிருக்க நான் மட்டும் Billing Section சென்றேன். பில்லை வாங்கி, பணம் கொடுக்க எண்ணினால், எத்தனை முறை எண்ணினாலும் 8000 தான் வந்தது. ஒருவேளை பணம் திருடு போயிருக்குமோ என்று சந்தேகம் வந்தது. எது எப்படி இருந்தாலும் மேன்ஷன் போய் பேசி கொள்ளலாம், இப்போது இங்கிருந்து கிளம்பும் வழியை பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். மீதி 1000 மட்டுமே இடிக்கிறது. அபர்ணாவிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாமென்று, ஜானை கூப்பிட்டு 1000 ரூபாயை கடன் கேட்டேன்.

பர்ஸில் இருந்து எடுத்து, இரண்டு 500 ரூபாய்களை நீட்டினான். இரண்டிலுமே கவர்னர் கையெழுத்திற்கு கீழே மூன்று ஸ்டார்கள் இருந்தன.  




Flipped



சமீபமாக Flipped என்கிற ஆங்கில திரைப்படம் பார்த்தேன். என் வாழ்க்கையிலே இது போன்று ஓர் மென்மையான கதையை பார்த்ததே இல்லை. பெரும்பான்மையான ஆங்கில திரைப்படங்கள் போல, இதுவும் கூட நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் என்றாலும், எங்கேயும் அலுப்போ, தொய்வோ இல்லை. அதுவே பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.

மேலும், அமெரிக்க திரைப்படங்களில் வரும் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் நம்மை பயமுறுத்தும் வகையில் இருக்கும். சொல்லிவைத்தாற் போல் எல்லா மாணவர்களும் ஜோடியாக சுற்றுவார்கள், டேட்டிங் போவார்கள், Basket ball அல்லது Base ball விளையாடுவார்கள், கெட்ட வார்த்தைகளாலே திட்டி கொள்வார்கள், இப்படி பலபார்க்கும் நமக்கே, இது தான் அமெரிக்காவின் மொத்த ரூபமா என்று சந்தேகம் வலுத்து விடும், அது எப்படி, அமெரிக்காவில் நம்மை போல் ஒருவர் கூடவா இல்லாமல் போய் விடுவார்கள் என்றே தோன்றும். ஆனால் Flipped திரைப்படம் இந்த இடத்தில் முற்றிலுமாக வேறுபடுகிறது, இதுவும் ஓர் பள்ளிப்பருவ மாணவர்கள் கதை என்றாலும் திரைப்படத்தின் எல்லா கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் யதார்த்தத்துடன் இருக்கின்றன.

கதை என்று பார்த்தால் மிகவும் எளிய கதை தான். ஆனால் திரைக்கதை உருவாக்கங்கள் தான் நம்மை லயிக்க வைக்கிறது. நம்மில் எத்தனை பேர் நம் பக்கத்து வீட்டினருடன் சகஜமாக பேசுகிறோம், எத்தனை பேர் வீட்டிற்கு கூப்பிட்டு டின்னரின் போது பேசுகிறோம், எத்தனை பேர் ஓர் உயரமான மரத்தின் மீது ஏறி பரந்து விரிந்த உலகத்தை தரிசிக்கிறோம், முட்டையில் இருந்து வெளிவரும் கோழி குஞ்சை கண்கள் விரிய பரவசத்துடன் வரவேற்கிறோம்சொல்ல போனால் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று நமக்குள் ஆசைகள் இருக்கவே செய்கின்றது, ஆனால் தயக்கம் காரணமாக கிடப்பிலே போட்டு விடுகிறோம், இந்த படத்தை பார்க்கும் போது நம் தயக்கங்கள் தகர்த்தெறிய ஓர் வாய்ப்பு இருக்கிறது.
                    
திரைப்படங்கள் ஆகட்டும், நாவல் ஆகட்டும், சீரியல் ஆகட்டும், கட்டுரை ஆகட்டும்அதனை பார்க்கும் போதோ, படிக்கும் போதோ, நமக்குள் சிறிதளவேனும் ஓர் மாற்றம் வர வேண்டும். நம் வாழ்க்கை முறை அடுத்த படியை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். அதுவே அந்த கலை படைப்பின் வெற்றி. அந்த வகையில் இது உங்களவேனும் சிறிதளவேனும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும்.

படத்தின் பெரிய அட்ராக்ஷன், படத்தின் கதாநாயகி. ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி போல் இருக்கிறாள்முக்கியமாக அவள் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே, அன்பாக இருக்கிறாள். ஆனால் அதை மிகைப்படுத்தாமல், மிக இயல்பாக காட்டியிருப்பது தான் இத்திரைப்படத்தின் விஷேஷமாக பார்க்கிறேன்.

அதே சமயம் பெண்களின் மென்மையான உணர்வு ஆங்காங்கே தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் ஜுலியா, அவ்வப்போது sycamore என்ற மரத்தின் உச்சிக்கு ஏறி உட்கார்ந்து மொத்த கிராமத்தையும் ரசிப்பாள். அந்த மரம் இருப்பது அவள் ஸ்கூல் பஸ் வந்து நிற்கும் இடத்தில்ஒவ்வொரு நாள் காலையிலும் மேலே ஏறி, ஸ்கூல் பஸ் எங்கே வருகிறது என்பதை பார்ப்பாள், பக்கம் வந்த பின்பு தான் மரத்தை விட்டு கீழ் இறங்கி வருவாள். ஒரு நாள் அவள் மேல் அமர்ந்து இருக்கும் போதே, அந்த மரத்தை வெட்ட ஆட்கள் வந்து வெட்ட ஆரம்பிக்கும் போது, அவள் மேலிருந்து குரல் கொடுப்பாள். அவளை இறங்கி வர சொல்வார்கள். ஆனால் மறுத்து விடுவாள். வெட்டுவதாக இருந்தால், வெட்டி கொள்ளுங்கள் என்று மேலயே உட்கார்ந்து கொள்வாள். உடன் படிக்கும் நண்பர்களை உதவிக்கு அழைப்பாள், ஆனால் ஸ்கூலிற்கு நேரம் ஆகி விட்ட படியால் யாரும் அவளுக்கு உதவ முன்வராமல் போய் விடுவார்கள். அவளின் சிறு வயது தோழனான Bryce-ம் கூட கண்டு கொள்ளாமல் கிளம்பி விடுவான். பிறகு அவளது தந்தை வந்து அவளை சமாதானம் செய்து இறக்கி செல்வார்.

இன்னொரு சமயம், ஜூலியா கோழிப்பண்ணையில் கோழிகள் நிறைய முட்டைகள் போட ஆரம்பிக்கும், அன்று முதல் தினமும் Bryce வீட்டிற்கு ஒரு டஜன் முட்டைகளை கொடுப்பாள். ஜுலியா குடும்பம் நடுத்தரமான குடும்பம் என்பதாலும், ஜுலியா குடும்பத்தின் மேல் இருக்கும் காரணமற்ற வெறுப்பினாலும், ப்ரைஸின் அப்பா, அந்த முட்டைகள் சுதாகாரமற்றவையாக இருக்கக் கூடும், அதனால் அதனை திருப்பி கொடுத்து விடு என்று சொல்லி விடுவார். ஆனால் ப்ரைஸிற்கு ஜுலியாவின் உணர்வுகளை புண் படுத்த மனம் வருவதில்லை. அதனால் பெற்றொர்களுக்கு தெரியாமல்,  ஒவ்வொரு நாளும் முட்டைகளை வாங்கி கொள்வானே தவிர, அவளுக்கு தெரியாமல் அதனை குப்பையில் வீசி விடுவான். இதனை ஒரு நாள் ஜுலியா கண்டு பிடித்து மிகவும் நொந்து போவாள்.

இப்படி படம் நெடுகினும், பெண்ணின் மனதை ஆண், தெரிந்தோ தெரியாமலோ துன்புறுத்திய வண்ணமே தான் இருப்பான். அவள் ஒவ்வொரு முறை ஒடிந்து போனாலும், அதனை வெளிக்காட்டாமல் தொடர்ந்து அன்பு செலுத்துவாள். அளவுக்கடந்த பாசம் வைத்த ஒரே காரணத்தால், ப்ரைஸ் மீது பகைமை பாராட்டாமல், தூய அன்புடன் இருப்பாள். இப்படியே போய் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில், ஜுலியா அவனிடம் பேசுவதை மொத்தமாக தவிர்த்து விடுவாள். அவன் எவ்வளவு இறைந்தும் அவள் செவி சாய்க்காமல் இருந்து விடுவாள், அவளின் காயங்கள் அவளை பெரிதும் கலங்கடித்தப்படியே இருந்தாலும், அவளின் பாசம் அவளை அவனிடம் பேச சொல்லி கொண்டபடியே தான் இருக்கும்.

இறுதியாக ப்ரைஸ், அவளிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக, அவள் வீட்டு தோட்டத்தில் வந்து ஓர் sycamore மரக்கன்றை நடுவான். சொல்லப்போனால், மொத்தமாகவே அவன் அவளுக்காக செய்தது அது ஒன்று தான். அதுவே அவளின் ஒட்டு மொத்த கோபங்களையும் மறக்கடித்து விடும். மீண்டும் பழைய படி பேச ஆரம்பித்து விடுவாள். இது தான் பெண்களின் யதார்த்த குணம், இங்கு படம் நிறைவடைகிறது.

மேலோட்டமாக மென்மையான படமாக இருந்தாலும், மிக ஆழமாக ஆண்களின் மனப்போக்கையும், பெண்களின் மனப்போக்கையும் படம் நெடுகிலும் சுவாரஸ்யமான திரைக்கதைகளுடன் சொல்லப்படுகிறது.

இவ்வளவு மென்மையான, அழகான கதையை பார்ப்பது இதுவே முதல் முறைஇது வரை மூன்று முறை பார்த்து விட்டேன்.. நீங்களும் பார்த்து விடுங்கள்


ராஜா ராணி - பேஷ் பேஷ் காப்பி பிரமாதம்




சமீபகாலமாகவே மேட்டூரில் எந்த நல்ல திரைப்படங்களையும் திரையிடாத காரணத்தாலும், அப்படியே திரையிட்டாலும் கூட்டம் வராத காரணத்தை காட்டி, அதை அதற்கடுத்த நாளே தூக்கும் அநியாயங்கள் நடந்து கொண்டிருப்பதாலும்…. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முதல் நாளே திரையரங்குகளை முற்றுகை இடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனாலே ராஜா ராணியையும், ஓநாயும் ஆட்டுக்குட்டியையும் முதல் நாளே பார்த்து விட வேண்டி காத்திருந்தேன். என்ன ஓர் ஏமாற்றம்ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் மேட்டூரில் வெளியாகவே இல்லை. மேட்டூரில் இருக்கும் இரண்டு திரையரங்குகளிலுமே ராஜா ராணி மட்டுமே திரைக்கு வந்துள்ளது. சரி இதையாவது மாலை போய் பார்த்து கொள்ளலாமே என்று தான் இருந்தேன், ஆனால் காலைக்காட்சி பார்த்து விட்டு என்குல சிங்கங்கள் எல்லாம் ராஜா ராணி சூர மொக்கை என ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பெருமினர். அய்யகோ, இந்த படத்தையும் பார்க்க முடியாதோ என்று, ஆபிஸில் இரண்டு நிமஷத்துல வந்துடறேன் சார்னு, நானும் நண்பனும் திரையரங்கிற்கு விரைந்தோம். நல்ல வேளை மதிய காட்சிக்கு ராஜா ராணி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஒருவேளை இப்போது வராமல் போயிருந்தால், இந்த படத்தை மாலையே எடுத்து விட்டுபுல்லுக்கட்டு முத்தம்மாபோட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என எண்ணி ஆசுவாசப்படுத்தி கொண்டோம்.

உள்ளே போனால் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். எங்கே ஷோவை கேன்சல் செய்து, திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று உயிரை கையில் பிடித்து கொண்டு காத்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக மெல்ல மெல்ல கூட்டம் சேர்ந்து 20 பேர் தேறினர். படம் ஆரம்பித்து கோச்சடையான், முகேஷ் என எல்லா கண்டத்தையும் தாண்டி, ராஜா ராணி டைட்டிலை பார்க்கும் வரைக்கும் நிம்மதியே இல்லை. அதன் பின் தான் முன் சீட்டில் காலை போட்டு, ஹாயாக சரிந்து படுத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.

படத்தின் டைட்டில் கார்டை வேடிக்கை பார்த்து கொண்டே வந்ததில், ஜீ.வி.பிரகாஷ்குமார் பெய்ரை பார்த்ததும் தான் எங்கள் இருவருக்குமே உரைத்தது. பஞ்சு எடுத்து வர மறந்து விட்டோம். ஏற்கனவே பரதேசி, தலைவா படம் பிண்ணனி இசை எல்லாம் கேட்டு, காதில் இரத்தம் வந்து அவதிப்பட்ட போதே, அடுத்த படத்துக்கு பஞ்சு எடுத்து வைத்து செல்வதாய் திட்டம் வைத்திருந்தோம். ஆனால் வரும் அவசரத்தில் மறந்து விட்டோம்.

படம் ஆரம்பத்திதில் இருந்து ஜி.வி.பிரகாஷின் பிண்ணனி இசை, அது பாட்டுக்கு ஒரு ஓரமாக சத்தமாக ஒலித்து கொண்டு இருந்த்து. படம் ஆரம்பித்ததில் இருந்து யாருமே விசிலோ, கைத்தட்டலோ, சத்தமோ எதுவுமே போடவில்லை. ஆர்யாவை காட்டினார்கள், யாரும் விசிலடிக்கவில்லை, நயன்தாராவை காட்டினார்கள் அதற்கும் யாரும் விசிலடிக்கவில்லை, நஸ்ரியா, சத்யராஜ், முருகதாஸ், அட்லி என எத்தனையோ பேரை டைட்டில் கார்டில் காட்டிய போதும் எல்லோரும் மயான அமைதி காத்தனர். ஜி.வி.பிரகாஷின் இசை மட்டுமே திரையரங்கு முழுக்க வியாபித்திருந்தது. என்ன விஷயமென்று, பார்வையாளர்களை திரும்பி பார்த்தால் எல்லாரும் இரண்டு கைகளாலும் காதை பொத்தினப்படி இருந்தார்கள். ஐயோ பாவம் என்று நினைத்து கொண்டேன். இரண்டு கைகளையும் வைத்து காதை பொத்தி கொண்டிருந்தால், எப்படி விசிலடிப்பது, எப்படி கை தட்டுவது

இந்த அழகில் பாடல்களையும் அதகளம் பண்ணியிருக்கிறார் ஜி.வி. வழக்கமாக க்ளைமாக்ஸிற்கு சற்று முன்னால் வந்து, “கவலைப்படாதே சகோதராஎங்கமா கருமாரி காத்து இருப்பாகாதலை தான் சேர்த்து வைப்பா…” என பாடும் கானா பாலா, படத்தின் ஆரம்பத்திலே வந்து தன் சீரிய வேலையை செவ்வனே செய்து விட்டு, கிளம்பி விட்டார். இத்தோடு கானா பாலா சகாப்தம் முடிந்தது என்றே நினைக்கிறேன். முன்பு கானா உலகநாதன், இப்போது கானா பாலா…. காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை.

நயன்தாராவிற்கும் ஆர்யாவிற்கும் விருப்பமே இல்லாமல் திருமணம் நடக்கிறது. நயன்தாராவின் அப்பா சத்யராஜ் சொல்லி விட்டாரே என்று நயன்தாராவும், ஆர்யாவின் நண்பன் சந்தானம் சொல்லி விட்டாரே என்று ஆர்யாவும் இழு இழு என இழுத்து ஒரு திருமணத்தை செய்து கொள்கின்றனர். கல்யாணம் ஆனதில் இருந்து சண்டையும் சச்சரவுமாகவே இருக்கின்றனர். ஒரு நாள் திடீரென நயன்தாராவிற்கு வலிப்பு வர, அவரை ஆர்யா ஆம்புலன்ஸை கூப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அங்கே வைத்து ஆர்யா நயன்தாராவின் கதையை விசாரிக்கிறார். அம்மணியும் ஒரு ஸ்டோரியை ஓப்பன் செய்கிறார்

Airvoice கம்பெனியில் (கம்பெனி பேரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்குல்ல, அதாங்க சஞ்சய் ராமசாமியோட கம்பெனி…. முருகதாஸ் சார் தான் ப்ரோட்யூசர் தான் ப்ரொட்யூஸர், அவருக்காக இதை கூட பண்ணலைன்னா எப்படிங்க….) கஸ்டமெர் கேர் அதிகாரியாக வேலை பார்க்கும் ஜெய்க்கு, கம்பெனி நிமித்தமாக நயன்தாராவிடம் புகார் வருகிறது. நயன்தாரா கம்பெனி மீது உள்ள கோபத்தில் ஜெய்யை கன்னாபின்னாவென திட்ட, ஜெய்யும் நயன்தாரா நம்பரை கம்பெனி database—ல் இருந்து எடுத்து, அவரும் கன்னாபின்னாவென திட்டுகிறார். மோதலில் இருந்து காதல் ஆகிவிடுகிறது. என்ன டா இப்படி, ஒரே வார்த்தையில் மோதலில் இருந்து காதல் ஆகி விடுகிறது என்று சொல்கிறேனே, என்று தப்பாக எண்ண வேண்டாம். அங்கனயும் அந்த கருமாந்திரத்தை ஒரே நிமிஷத்தில் தான் காட்டினார்கள். அதனால் தவறு என் மீது அல்லஅதன் பின் இருவரும் தேவாலயத்தில் வைத்து மோதிரத்தை மாற்றி கொள்கின்றனர். கல்யாணம் பேச முயற்சிக்கின்றனர். ஆனால் ஜெய்யின் அப்பா, ஓர் கலாச்சார காவலாளி என்பதால் மாப்பிளை கொடுக்க மறுத்து விடுகிறார். அதன்பின் ரெஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் காலையில் நயன்தாரா மட்டுமே ஆபிஸில் ஆஜராகிறார், ஜெய்கட்அடித்து விட்டு அமெரிக்கா கிளம்பி விடுகிறார். எதற்கு போகிறார் என கேட்கிறீர்களாபடம் பார்த்து வந்து விட்ட எங்களுக்கே அது தெரியவில்லை. ஸோ, வெரி ஸாரிஅமெரிக்கா போன ஜெய், தற்கொலை செய்து கொள்கிறார் என செய்தி வர, நயன்தாரா மயங்கி விழ, முதல் கட்ட ஃப்ளாஸ் பேக் முடிவிற்கு வருகிறது. மனசு வந்து இடைவேளை விடுகிறார்கள். நண்பன் பக்கம் திரும்பினால், “படம் சூப்பர்ல…?” என கண்கள் மின்ன கேட்டான்.

எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது, நான் மேலே ஒரே பத்தியில் சொன்ன விஷயத்தை தான் ஒன்றரை மணி நேரம் இழுத்து அடித்து கொண்டிருந்தார்கள். இதை எப்படி தான் சூப்பர் என்று சொல்கிறானோ என்ற சந்தேகத்தில், டேய் இதெல்லாம் ஒரு படமா டா, இது மாதிரி தான் ஏகப்பட்ட படம் வந்துடுச்சே டா, நீ வேணா பாரு, ஜெய் செத்திருக்க மாட்டான், அவன் அவனோட அப்பனுக்கு பயந்து ஓடியிருப்பான், செகன்ட் ஆஃப்ல ஆர்யா நஸ்ரியாவை லவ் பண்ணுவான், அந்த பொண்னை யாருக்காச்சும் கட்டி வெச்சிருவாங்க, இல்லைனா செத்துரும்நீ வேணா பாருஎன்றேன். உனக்கெல்லாம் சினிமாவை பத்தி என்னா டா தெரியும் என திட்டி திர்த்தான்.

அவன் கெட்ட நேரம், நான் என்ன சொன்னேனோ அதே எழவு தான் நடந்தது. அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. அவனும் அவன் பங்கிற்கு இட்லியைசாரி அட்லியை திட்டி தீர்த்தான்.

நானும் பல வருடங்களாக ஹாலிவுட் சினிமாக்களை கவனித்து வருகிறேன். படத்தில் ஒருவருடைய நடிப்பு கூட எதார்த்தத்தை மீறி இருக்காது. அது மட்டுமில்லாமல், ஒருவரது நடிப்பு இன்னொருவரின் நடிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கெல்லாம் இல்லாமல் கச்சிதமாக இருக்கும். ஹீரோ முதல் டாக்ஸி ட்ரைவர் வரை அவரவர் அவரது பங்கை, சம அளவில் அளித்திருப்பார்கள். ஆனால் 100 ஆண்டுகளை கடந்த இந்திய சினிமாக்கள், இன்னமும் கடைநிலை ரசிகன் கூட நடிகர்களின் நடிப்பை நொட்டை சொல்லும் அளவிற்கே இருக்கிறது.

தம்பி இட்லி…. ச்சீ.. தம்பி அட்லிஎங்கேயும் எப்போதும்படத்தையும், ‘சர்வம்படத்தையும் பார்த்து உருகோ உருகு என உருகியிருக்கிறார் என புரிகிறது. ஆனால், எதற்காக கதாநாயகிகளை மட்டும் மாற்றி, முதல் பாதியில்எங்கேயும் எப்போதும்படத்தையும், இரண்டாம் பாதியில்சர்வம்படத்தையும் மறுபடியும் ஷூட் செய்து வைத்திருக்கிறார் என புரியவில்லை. ஆனாலும் கதாநாயகர்களை கூட மாற்றாமல் அப்படியே வாந்தி எடுத்து வைத்திருக்கிறார் என்றால், உண்மையிலே அட்லி துணிச்சல்காரர் தான். இன்னொரு பக்கம் அட்லி போன்றோர்களுக்கு தான் கோலிவுட்டில் பெரும் மவுசு என்பதால், அட்லி மார்க்கெட் அள்ள போகிறது. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், பல முண்ணனி ப்ரொட்யூசர்களும், முண்ணனி நட்சத்திரங்களும் அட்லியை, நான், நீ என போட்டி போட்டு புக் செய்ய போகின்றார்கள். இதற்கிடையில், இயக்குனர் விஜய்யை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது, பாவம், இத்தனை நாளாய் போட்டியே இல்லாமல் வண்டியை ஓட்டி கொண்டிருந்தார்இனி அவர் நைஜீரியா, ஐரோப்பா, ஜப்பானிய, திபெத்திய படங்களையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கும்….

படத்தில் எல்லா காட்சிகளும், கதாப்பாத்திர உருவாக்கங்களும், காதலும் மிக செயற்கையாக இருக்கின்றன. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் Touching ஆக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கூரிய முனைப்போடு செயல்பட்டு இருக்கிறார்கள். படத்தின் பெரும்பகுதியில் யாராவது ஒருவர் அழுந்து கொண்டே இருக்கிறார்கள். படம் வேறு ஒரே இழுவையாக போய் கொண்டிருக்க, சீரியல் தான் பார்த்து கொண்டிருக்கிறோமா என்று கூட பல சமயத்தில் சந்தேகங்கள் எழுகின்றன.

படத்தின் கதையை இப்படி அநியாயமாக சொல்லி விட்டேனே என்று யாரும் எண்ணி வருந்த வேண்டாம். இதே கதையை ஏற்கனவேமௌன ராகம்என்ற தலைப்பில், மணிரத்னம் எடுத்து இந்த உலகிற்கு சொல்லி விட்டார். அதன் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் இந்தராஜா ராணி’. அதில் ரேவதி இரயில்வே ஸ்டேஷனுக்கு போவார் இல்லையா, இதில் நயன்தாரா ஏர்போர்ட்டிற்கு போவார்அவ்வளவு தான்லேட்டஸ்ட் வெட்ஷன் ரெடி

மற்ற ஊர்களில் ஒரு படம் நிறைய நாட்கள் ஓடினால் நல்ல படம் என்றும், சீக்கரத்தில் எடுத்து விட்டால் அது மொக்கை படம் என்றும், படம் ஓடும் நாட்களை வைத்து குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கலாம். அப்படி இல்லையென்றால் விமர்சங்களை வைத்தாவது படம் பார்ப்பதை குறித்து யோசிக்கலாம். ஆனால் மேட்டூரிலோ, அதற்கெல்ல்லாம் அவகாசமே தராமல், ஆபிஸில் பெர்மிஷன் சொல்லி விட்டு வந்து படம் பார்க்கும் நிலைக்கு ஆளாக்குகிறார்கள். இல்லையென்றால் அடுத்த நாளே ஏதேனும் பிட்டு படத்தை போட்டு விடுகிறார்கள். இதற்காகவே ஒவ்வொரு படத்தையும் பார்த்து தொலைக்க வேண்டியதாய் உள்ளது.

ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன் சார்னு சொல்லிட்டு அப்படியே ஓடியாந்துட்டேன்….. நாளைக்கு ஆபிஸில் என்ன நடக்க போதோ…?

மாதேஸ்வரன் மலை



நேற்று மாதேஸ்வரன் மலை சென்று வந்தோம். டூ வீலரிலே செல்லலாம் என திடுமென புறப்பட்டு செல்லலானோம். மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டது, மாலை 03.30 மணி சுமாருக்கு தான் மலைக்கு சென்று சேர்ந்தோம். இத்தனைக்கும் மேட்டூரில் இருந்து வெறும் 45 கி.மீ மட்டுமே

45 கி.மீ தொலைவை, இரண்டு மணி நேரம் உருட்ட நேரிட்டதற்கு இரண்டு காரணங்கள்.. முதலில் என் வண்டி செய்த சதி, கொஞ்ச நேர மலையேற்றத்திற்குள்ளாகவே என்னுடைய Honda Shine வண்டி மூச்சிறைத்து அழ ஆரம்பித்து விடுகிறது. ஆகையால் ஓய்வு.. பயணம்.. ஓய்வு.. பயணம் என்று செல்ல வேண்டிய சூழ்நிலை. மைலேஜுக்கு மட்டுமே லாயக்கு

இரண்டாவதாக சாலைகள்மாதேஸ்வரன் மலை கர்நாடாகா பகுதிக்கு உட்பட்டுள்ளது. போகும் வழியில், கர்நாடகா பார்டர் ஆரம்பிக்கும் வரையில், சாலைகள் தகுந்த பராமரிப்புடன் இருக்கிறது. ஆனால் கர்நாடகா பார்டர் ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலே, எப்போதோ ராஜீவ் காந்தி காலத்தில் போட்ட ரோடு நம்மளை நக்கலுடன் வரவேற்கிறது. அதில் உருட்டி, புரட்டி செல்லவே இரண்டு மணி நேரம் பிடித்தது.

தமிழ்நாட்டில் இருந்து மாதேஸ்வரன் மலை செல்லும் கூட்டம் தான் அதிகம், அதன் பொருட்டே பார்டர் வரையில் சாலைகளை கனக்கச்சிதமாக பராமரிக்கிறது தமிழக அரசு, ஆனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூரிற்கு வரும் கூட்டம் வெகு குறைவு, அதனாலே அவர்கள் தரப்பு சாலைகளை கண்டு கொள்ளாமல் விட்டு தமிழகத்தினரை கழுத்தறுக்கிறது.

இறங்கும் போது சீக்கரத்திலே வந்து விட்டோம். 01.15 மணி நேரத்திற்குள்ளாகவே திரும்ப வந்து விட்டோம். அதோடு, இறங்கும் போது கிட்ட தட்ட 14 கிமீ, இஞ்சினை அணைத்து விட்டு, பள்ளத்திலே ஓட்டி வந்தோம். மேலே சொல்லி கொள்ளுமாறு பெரிதாய் ஒன்றுமில்லைபிரசத்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் இருக்கிறது, அது தவிர ஒரு மடம் இருக்கிறதுஇது தவிர காடும், காட்டு விலங்கும் தான் இந்த மலையில் சிறப்பு..

போகும் வழியில் ஒரு சிறப்பு என்னவென்றால், அதிகமான வாகன நேரிசலோ, ஜன நெரிசலோ இருக்கவே இருக்காது. ஆபத்தான விஷயமும் அதுவே தான்ஆள் அரவமற்ற மலை அது. எப்போதாவது தமிழ்நாட்டு போக்குவரத்து பஸ்களோ, கர்நாடகா பஸ்களோ கடந்து செல்லும், ஞாயிற்று கிழமையாக இருந்தால் சில கார்களும் கடந்து செல்லும், மற்றப்படி  லோக்கல் ஆட்கள் எப்போதாவது தான் அவ்வழியே வருவார்கள்வனவிலங்குகள் எப்போதேனும் குறுக்கிடும் பகுதி அது

இதையெல்லாம் எதுவுமே தெரியாமல், இருட்டும் போது மட்டுமே விலங்குகள் வரும் என்ற குருட்டு தைரியத்தில் மலை ஏறி இறங்கி வந்தே விட்டோம். இன்று ஆபிஸில் வந்து மாதேஸ்வரன் மலை சென்று வந்ததை பற்றி, தமிழ்ச்செல்வன் என்று உடன் பணி புரியும் அலுவலரிடம் பகிர்ந்தேன்.

என்னது மாதேஸ்வரன் மலையா?

ஆமா சார்

எதுல போனீங்க..

பைக்ல

எத்தனை பைக்…?

ஒண்ணு தான் சார்

எத்தனை பேர்..

ரெண்டு பேர்..

எத்தனை மணிக்கு

மதியம் கிளம்பினது, ஈவ்னிங்க்குள்ள வந்துட்டோம்

ஏதும் பிரச்சனையில்லையே

ஒண்ணும் இல்லை சார்சில குரங்குங்க தான் இருந்ததுங்கஅதுவும் கூட சாதுவா தான் இருந்துச்சுங்க

ஓகே ஓகேஇனிமேல் இப்படியெல்லாம் விசாரிக்காம போகாதீங்க சூர்யாரொம்ப ரிஸ்கான மலை அதுநீங்க உயிரோட வந்ததே பெரிய விஷயம்… - என சொல்லி நெருப்பள்ளி போட்டார். என்ன விஷயம் என கேட்ட்தற்கு, அவர் அவரது அனுபவங்களை பகிர்ந்தார்….


என் உடன் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவர், மாதேஸ்வரன் மலை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார். அவர் 10 வருடங்களாக மாதேஸ்வரன் மலை தொடர்ச்சியாக சென்று வந்திருக்கிறார். நண்பர்களுடன் சென்று அடிக்கடி சரக்கடித்து விட்டு வருவார், ஆனால் அதை எங்களிடம் சொல்லும் போது கூல் ட்ரிங்க்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் என்று குறிப்பிட்டு சொல்வார். கொஞ்சம் நடுவயது ஆள் என்பதால் அது பற்றி மேற்படி விசாரணைகள் செய்ய மாட்டோம். இடையில் எப்போதோ ஒரு முறை ரோட் ஆக்ஸிடன்ட் ஆனதில் இருந்து, மாதேஸ்வரன் மலை செல்வதை நிறுத்தி விட்டார். அதை அவர் சொல்லும் போதே, அவர் மாதேஸ்வரன் மலையை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ரோட் ஆக்ஸிடன்ட் ஆனதில் இருந்து அவர் எந்நேரமும் தலைவலியுடனே தான் உட்கார்ந்து இருப்பார், எல்லாத்தையும் மறந்து விடுவார். அவர் உடன் வைத்திருக்கும் touchscreen phone—ல் எல்லாத்தையும் பதிந்து வைத்து கொள்வார். எதை கேட்டாலும் போனை பார்த்தே பதில் சொல்வார். நாளை ஞாயிற்று கிழமை என்பதை கூட சில சமயம் மறந்து விடுவார். ஆனால் இது போன்ற குறிப்புகளை தான் மறந்து விடுவாரே தவிர, சம்பவங்கள், அனுபவ அறீவு எல்லாத்திலும் ஆள் கெட்டி

மாதேஸ்வரன் மலைக்கு சென்று முக்கால் மலையில் அமர்ந்து ஆர ஆமர நண்பர்களுடன் பேசி கொண்டே சரக்கடிப்பதும், மலையை ரசிப்பதும் தான் தமிழ்ச்செல்வனின் மாதமொறு முறை வாடிக்கை.

பல இடங்களில், sine wave வடிவத்தை ஒத்த ரோடுகள் உண்டு, நீங்கள் ஒரு பள்ளத்தில் இருக்கும் போது, அடுத்த பள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. அப்படி, ஒரு முறை ஒரு மேடு ஏறி, அதன் முகட்டிற்கு வரும் போது பார்த்தால்…. மூன்று யானைகள்முழுவதுமாக சாலையை கடந்து புதரிற்குள் செல்லும் குட்டியானை, குட்டியானைக்கு ஒட்டினாற்போல் நடந்து செல்லும் ஒரு மீடியம் சைஸ் யானை, பாதி சாலையை அடைத்து நிற்கும் கம்பீரமான உயரமான ஆண் யானை

இதையெல்லாம் பார்த்து கிரகித்து முடிப்பதற்குள்ளாகவே வண்டி பள்ளத்தில் இறங்க ஆரம்பித்து விட்டது. இனி ப்ரேக் அடித்தாலும் யானைக்கு அருகில் போய் நின்று ஹலோ சொல்லி கை குலுக்க வேண்டியது தான் பாக்கியானை சொல்லும் ஹலோ தனி ரகமாய் இருக்குமென்பதால், ஓடி விடுவது ஒன்று தான் வழி என்று ஆக்ஸிலரேட்டரை முறுக்கி, அடுத்த மேட்டில் கஷ்டப்பட்டு ஏற்றி தப்பி வந்திருக்கிறார்கள். இது அத்தனையும் யானை சுதாரிப்பதற்குள் நடந்தது. இதை அறிந்த யானை துரத்த ஆரம்பித்தது. அது இருக்கும் சைஸிற்கு 4 எட்டு எடுத்து வைத்தாலே பிடித்து விடும் தூரத்தில் தான் இருந்தார்கள். யானை சுதாரிப்பதற்குள் அடுத்த மேட்டின் முகட்டிற்கு வந்து வண்டியை பள்ளத்தில் செலுத்த ஆரம்பித்ததால், வண்டி வேகம் பிடித்து வந்து விட்டது. எதேச்சையாக திரும்பி பார்த்ததில் யானை துரத்தி கொண்டு வருகிறது. பின்னால் இருப்பவர்அது வருதுடா, சீக்கரம் போடாஎன்ற போட்ட கூச்சலும், தமிழ்ச்செல்வனின் உயிர் பயமும் வண்டியை 60 கிமீ வேகத்தில் 6 கிமீக்கு பறக்க செய்தது. யானை கிட்டத்தட்ட அரை கி.மீக்கும் அதிகமாக துரத்தி வந்ததாக பின்னால் இருப்பவர் சொன்னாராம்.

இன்னொரு முறை செல்கையில், நூற்றுக்கணக்கான காட்டெருமைகளும், மான்களும் எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து சென்று கொண்டிருந்த்து. சமதளமான ரோடு என்பதால், இந்த முறை 5-6 மீட்டர் முன்பே நிறுத்தி விட்டார். அமைதியாக கடந்து சென்று விடும் என்று எதிர்பார்த்தப்படி காத்து இருந்த கும்பலுக்கு காத்திருந்தது ட்விஸ்ட்மொத்த கூட்டமும் கடந்து முடித்து. கடைசியாக சென்ற மான் மட்டும், இந்த இரண்டு பேரையும் பார்த்து திடுக்கிற்றது. அது என்ன நினைத்ததோ தெரியவில்லை, திடீரென பதறி அடித்து கொண்டு ஓட, எல்லா மானுக்கும், எல்லா காட்டெறுமைகளுக்கும் பதற்றம் தொற்றி கொண்டு எல்லாமும், அதன் திசையில் ஓடியது. இவர்கள் வண்டியை எடுத்து கொண்டு வந்து விட்டனர். நல்லவேளையாக கடைசியாக கடந்த மான் தான் திடுக்கிட்டு, மொத்த கூட்டத்தையும் ரகளை செய்தது. ஒருவேளை கூட்டத்தின் இடையே கடந்து சென்று கொண்டிருக்கும் மானோ, காட்டெருமையோ பதறி இருந்தால், கூட்டம் சிதறி இவர்கள் இருக்கும் திசை பார்த்து கூட வந்திருக்க கூடும். வந்து ஒட்டு மொத்த கூட்டமும் ஆட்களை மிதித்துவாறே தலைதெறிக்க ஓடியிருக்கும். பாதி மிருகங்கள் எதற்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் தான் ஓடியதாக சொன்னார். அப்படி இருக்கையில், தங்களை நோக்கி, எந்த காட்டெருமையும் மானும் தலைதெறிக்க ஓடி வராமல் போனது, அதிர்ஷ்டம் தான் என்றார்.

ஒரு முறை வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது, வண்டியில் பின்னால் அமர்ந்து இருந்தவர், “காட்டு பன்றி நிக்குது டா, வண்டியை நிறுத்திக்கோ…” என்று சொல்ல, இவரும் வண்டியை நிறுத்தி விட்டு தேடுகிறார். எங்கேயும் காணோம், அங்க நிக்குது பாரு.. அங்க நிக்குது பாருஎன திரும்ப திரும்ப சொல்லியும், காட்டு பன்றியை கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லா மிருகங்களை விடவும் காட்டு பன்றி, மிகவும் அபாயகரமானது, கொடூரமாக தாக்க கூடியது. யாராக இருந்தாலும் அது முதலில் தாக்குவது, அடிவயிற்றை தான். அதோடு அதன் பற்களும், தந்தங்களும் மனித உடலை நார் நாராக கிழித்து விடும். அதற்கு பயந்து இவரும் 5-6 நிமிடங்கள் அப்படியே தேடி இருக்கிறார், ஒன்றும் கண்ணில் படக்காணோம். அந்த தைரியத்தில் லேசாக ஆக்சேலரேட்டரை முறுக்க, அது பயந்து புதரிற்குள் ஓடி சென்று விட்டது. அது எழுந்து ஓடும் போது தான், அது இவ்வளவு நேரமும் எங்கே இருந்தது என்பதையே பார்க்க முடிகிறது. அதுவரை அது ஓர் பாறை போல் தான் காட்சியளித்திருக்கிறது. கவனிக்காமல் செல்லும் பொருட்டு, பாய்ந்து இருந்தாலோ, குறுக்கே வந்து வண்டி மேல் விழுந்து இருந்தாலோ ஒன்றும் செய்திருக்க முடியாது. கொஞ்ச நேரம் காப்பாற்ற சொல்லி கத்தியிருந்திருக்கலாம்.
                            
இன்னொரு முறை குடும்பத்துடன் செல்கையில், மயில் ஒன்றை கண்டு அதனை மகளுக்கு காட்டலாம் என வண்டியை, சாலை ஓரமாக நிறுத்தி இருக்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, பெருத்த சத்தத்துடன், பஸ்ஸை ப்ரேக் பிடித்து நிறுத்தியே விட்டது. கண்டக்டர் உள்ளிருந்தப்படியே எட்டி பார்த்து, என்னாச்சு என பீதியுடன் கேட்க, மயில் பார்க்க தான் நிறுத்தினோம் என சொல்லநல்லதாய் நாலு வார்த்தை திட்டி, நாங்க கூட யானைன்னு நினைச்சு பயந்துட்டோம் என்று சொல்லி பேருந்தை கிளப்பி சென்று இருக்கிறார்கள்.

மாதேஸ்வரன் மலை சுற்றி 150 ஏக்கரக்கும் மேலாக காடு மட்டுமேஒரு முறை காட்டு வழியாக ஒகேனக்கல் செல்லலாம் என முயற்சித்து வண்டியில் சென்றிருக்கிறார்கள். அதெல்லாம் வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப்பகுதிகள். கொஞ்ச தூரத்திலே ஒரு செக் போஸ்ட் வர, அதற்கு மேல் செல்ல அனுமதி இல்லை என தடை செய்து விட்டது. யார் யாருக்கோ போன் செய்து சிபாரிசு கேட்டும் ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. ஆனால், ஒரு டிராக்டரில் உள்ளூர் ஆட்கள் எதிரில் இருந்து வந்து இருக்கிறார்கள். அவர்களை மட்டும் விடுகிறீர்களேஏன்.. என்று கேட்க, அவர்கள் எல்லாம் யானை வந்தாலும், பாம்பு வந்தாலும் மோப்பம் பிடித்தே உஷாராகி விடுவார்கள், உங்களால் அது போல் முடியாதுவீணாக உங்கள் பாடியை தேடி எங்களால், நடுக்காட்டில் அலைய முடியாது, தயவு செய்து சென்று விடுங்கள் என்று துரத்தியே விட்டனர். 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தும் கூட வாங்கவில்லை.

இன்னொரு முறை செல்லும் போது ஓர் வெள்ளை கலர் Hyundai accent கார், நடுரோட்டில் நின்று கொண்டு இருந்திருக்கின்றது. அதற்கும் முன்னால் சாலையோரமாக ஓர் யானைக்கூட்டம் மேய்ந்து கொண்டு இருக்கிறது. போனால் சர்ரென்று உடனடியாக போய் விடலாம், ஆனால் ஏன் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று புரியாமல், அவர்களுக்கு ஆன வரைக்கும் சிக்னல் கொடுத்து பார்த்துள்ளார்கள், நின்று சொல்லும் அளவிற்கு அங்கே அவகாசம் இல்லை. 15-20 யானைகளுக்கும் மேலாக ரொம்ப பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த்து. அவர்கள் சிக்னலையும் பார்த்த மாதிரி தெரியவில்லை, யானைகளையும் பார்த்த மாதிரி தெரியவில்லை. ஓர் 30 வயது மதிக்கத்தக்க ஆளும், பக்கத்தில் ஓர் வயசான அம்மாவும் மட்டுமே உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

இவர்கள் மேலே வந்து செக் போஸ்ட்டில், ஓர் வெள்ளை கார் யானை கூட்டத்திற்கு அருகே நின்று கொண்டிருக்கிறது. பெட்ரோல் தீர்ந்து விட்டதா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்று தெரியவில்லை, போய் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால், அங்கு இருக்கும் போலிஸ்காரர்களே வர மறுத்து விட்டனர். பேசி கொண்டு இருக்கும் போதே, ஓர் Tata ace வண்டி, செக் போஸ்ட்டை கடந்து சென்று விட்டது. இது ஏதுடா வம்பா போச்சு என்று டூ வீலரை எடுத்து கொண்டு, அந்த வண்டியை விரட்டி பிடித்து யானை கூட்டம் இருக்கும் விஷயத்தை சொல்லப்பட்டது. சொன்னவுடனே, அவன் வண்டியை திருப்பி கொண்டு செக் போஸ்டிற்கே வந்து விட்டான். இத்தனைக்கும் அவன் லோக்கல் ஆள் தானாம்.

கொஞ்சம் நேரத்தில், அந்த வெள்ளை கார் செக் போஸ்ட் வந்து சேர்ந்தது. எதற்காக நிறுத்தி இருந்தீர்கள் என்று விசாரித்ததில், அவர் டிஸ்கவரி சேனல்காரர் என்றும், போட்டோ எடுக்க நின்று கொண்டிருந்ததாகவும் சொல்லி சென்றார். “போங்க டா நொன்னைகளா, உங்களை காப்பாத்தறதுக்கு நாங்க நிக்க இருந்தோம டாஎன்று திட்டி தீர்த்து விட்டனர்.

ஆனால் நாங்கள் சென்றிருந்த போது குரங்கை தவிர ஒன்றையும் பார்க்கவில்லை, அது எப்படி என்று கேட்டதற்கு, அதற்கும் அவரே பதில் சொன்னார். பெரும்பாலும் கோடை காலத்தில் மட்டுமே, விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து திரியும், இப்போது மழை பொழிந்து கொண்டிருப்பதால், அதனின் இடங்களிற்கே தண்ணீர் வந்து விட்டிருக்கும், அதனால் தான் அதை பார்த்து இருந்திருக்க முடியாது என்று சொன்னார். அதற்காக நாளைகே வீரவேசமாக கிளம்பி விட வேண்டாம், இணை தேடவும், மதம் பிடித்தும் கூட யானைகளோ, பிற காட்டு விலங்குகளோ உங்களை வரவேற்கலாம் என்று சிரித்த படியே சொன்னார்