Saturday, 25 May 2013

சே....!

ஜேம்ஸ் பாண்டு படங்கள் நமக்கு தெரியும். அந்த படத்தை பார்த்து ஒருவர் ரொம்பவும் சிலிர்த்து போய், நாமும் இப்படியான ஒரு கதையை எடுக்க வேண்டும் என முடிவு செய்து கதையில் ஒரு ஆண் கதாபாத்திரம் துப்பறிவதற்கு பதிலாக, ஒரு பெண் கதாபாத்திரம் துப்பறிவதாக மாற்றி போட்டு ஜேம்ஸ் பாண்டு கதையை, அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார். அதற்கு ரிவால்வர் ரீட்டா என்று பெயர் வைக்கிறார் என்று வைத்து கொள்வோம். இப்போது இந்த ரிவால்வர் ரீட்டாவை மற்றொருவர் பார்க்கிறார், இவரும் சிலிர்த்து போகிறார், நல்ல கதையாக இருக்கிறதே, நாமும் ஜெராக்ஸ் எடுத்து விடுவோம் என ஆசை பட்டு, பெண் கதாபாத்திரத்தை ஆண் கதாபாத்திரமாக மாற்றி போட்டு ஒரு படம் எடுக்கிறார். அதற்கு துப்பறியும் துரைசாமி என்ற பெயர் வைத்து ரிலீஸ் செய்கிறார் என்று வைத்து கொள்வோம்.

இப்போது என்ன ஆகும், ஜேம்ஸ் பாண்ட் படமும், துப்பறியும் துரைசாமி படமும் ஒன்று போலவே இருக்கும், இல்லையா... அதாகப்பட்டது A=B, B=C, So A==C. இதே தான் சேட்டை மற்றும் டெல்லி பெல்லியிலும் நடந்திருக்கிறது.

வில்லனின் வைர பொட்டலம் எங்கெங்கோ சுற்றி வந்து ஹீரோ கையில் சிக்கும், அதனால் ஹீரோவிற்கு ஏகப்பட்ட சிக்கல் வரும், அதையெல்லாம் ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்ற கதையை ஹிந்தி சினிமாவும், தமிழ் சினிமாவும் கண்டு கண்டு சலித்து போனதால் தான், நிறைய adults only விஷயங்களை சேர்த்து டெல்லி பெல்லி வெளிவந்தது, அந்த adults only விஷயம் தமிழக மக்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என்று எப்படியோ உளவுத்துறை உதவியுடன் கண்டுபிடித்து, ‘பலான’ விஷயங்களை மட்டும் எடுத்து விட்டு புதுப்பொலிவுடன் “சேட்டை” வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து விட்டு, திரையரங்கை விட்டு வெளியே வரும் மக்கள், ஏனோ ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு ஓடும் குழந்தைகள் போல், முண்டியடித்து வீட்டுக்கு ஓடுகின்றனர். அது தான் ஏன் என்று தெரியவில்லை....

இயக்குனர் கண்ணனுக்கு என் அனுதாபங்கள்...!

‘டெல்லி பெல்லி’ படம் அமோகமான வசூலை அள்ளியதால் கண்ணன் இப்படத்தினை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டியிருந்திருக்க கூடும், ஆனால் துயரம் என்னவென்றால், இந்த படம் எதற்காக ஹிட் ஆனது என்ற அடிப்படையை கூட அவர் புரிந்து கொள்ளாமல், ரீமேக்கில் குதித்து விட்டார். கதை பிரமாதமான கதை, அது தான் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்று நினைத்து விட்டாற் போலும்... ஆனால் மக்களுக்கு பிடித்தது அதில் இருந்த ‘பலான’ மேட்டர்களும், கெட்ட வார்த்தைகளும், அருவருப்பான நகைச்சுவைகளும் தான் என்று அவருக்கு புரியாமல் போய் விட்டது.

எழுதுவதற்கே சலிப்பாக இருக்கிறது.

Adults only படங்கள் இந்தியாவை தவிர நிறைய நாடுகளில் சக்கை போடு போடுகிறது. American Pie படம் மட்டுமே 8 பாகம் வெளியானது. Hardcore ஆன படங்களை விட “காமெடி கலந்த செக்ஸ்” படங்கள் தான் வசூலை அள்ளும். இப்படி பட்ட படங்கள் இந்தியாவில் மட்டும் வெளிவராமலே இருந்தது. காரணம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்ற யூகம். அதனால், தலையில் துண்டு போர்த்தி வந்து பார்க்கும் அங்கிள்களுக்கு மட்டும் ஷகிலா படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருந்தது நம் திரை உலகம். அதிலும் கூட இப்போதெல்லாம், முன்பு போல் அதிகம் படம் வருவதில்லை என சகல திசைகளில் இருந்தும் புகார்கள் வர ஆரம்பித்து விட்டன. இப்படியான ஒரு கட்டத்தில் தான் ஆமிர் கான் தயாரிப்பில் டெல்லி பெல்லி வந்தது. ஒரு மைல் கல், ஓர் புரட்சி, ஓர் ஆராய்ச்சி என பத்திரிக்கைகள் வானளாவ புகழ்ந்தது.

படம் முழுக்க எத்தனை Fuck உச்சரித்தார்கள் என்று விரல் விட்டு எண்ண கூட முடியாது. சராமரி Fuck கள் படம் முழுக்க இருக்கும். ஒரு இந்திய சினிமாவை செக்ஸுவல் வெர்ஷனில் மாற்றியிருப்பார்கள்.

ஒரு கல்யாண வீட்டில், மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்ட போகும் சமயத்தில், மணப்பெண்ணின் உண்மை காதலன் உள்ளே புகுந்து “நிறுத்துங்க... அவ என்னோட காதலி” என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தியதை எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் டெல்லி பெல்லி படத்தில் கல்யாண வீட்டில் புகுந்து “இந்த கல்யாணம் நடக்காது... this girl has given me blow job, and because, I am 21st century man, I’ve given her Oral pleasure also... ” என்று சொல்வான். இதெல்லாம் தமிழில் அப்படியே உருவி விட்டார்கள், ஏனென்றால் தமிழ் மக்கள் ஒழுக்கசீலர்கள் ஆயிற்றே.... இப்போது என்ன பிரச்சனையென்றால் சேட்டை படமும், பஞ்சதந்திரம் படமும் ஒன்று போலவே இருக்கிறது. கலகலப்பும் கூட....

மற்ற படி, படத்தில் எல்லாமே அட்டை காப்பி, தமிழகத்திகு ஒரு ஜெயம் ராஜா போதாது என்று மற்றுமொருவர் வந்தே விட்டார். கதைக்களத்தை கூட மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றவில்லை, இப்படியிருக்க எதற்கு இந்த படத்தை ரீமேக் செய்தார்கள் என்றே தெரியவில்லை. பேசாமல் ‘பிட்டு’ சீன்களை எல்லாம் உருவி விட்டு வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் செய்திருக்கலாம். கண்ணனுக்கு மொழிபெயர்ப்பு மேல் ஏன் நம்பிக்கையில்லை என எனக்கு புரியவில்லை, ஜாக்கி சான் படத்தையெல்லாம் மொழிபெயர்ப்பிற்காகவே போய் பார்க்கும் கூட்டம் இருக்கிறது என யாராவது அவரிடம் சொல்ல வேண்டும்.

கதைக்கு ஹன்சிகா தேவையே இல்லை. ஏதாவது சாதாரண ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டே போதும். ஆனால் ஹன்சிகாவை போட்டதுமில்லாமல் அவருக்கு வெயிட்டேஜ் கொடுக்கிறேன் என்று சொல்லி பாட்டு மேல் பாட்டாக போட்டு தியேட்டர் கேன்ட்டீனுக்கு நல்ல லாபம் கொடுத்தார்.

நாசர், ஒரு இடத்தில் ஹன்சிகாவிடம் நீ கடைசியாக ஆர்யாவை எங்கு வைத்து சந்தித்தாய் என்று கேட்பார். பீச்சில் வைத்து சந்தித்தேன் என்று ஒரே வார்த்தையாக சொல்லியிருக்கலாம். அதற்கு ஒரு ப்ளாஷ்பேக், அதில் ஒரு பாட்டு, 6 நிமிட ப்ளாஷ்பேக்கில், 5 நிமிடம் பாட்டு தான், ஒரே நிமிடம் தான் வசனம். என்னத்த சொல்வது, jab we met—ஐ கற்பழிப்பு செய்த கும்பல் என்று தெரிந்த போதே சுதாரித்து கொண்டிருந்திருக்க வேண்டும். சந்தானத்திற்காக போய் ஏமாந்தது தான் மிச்சம். சந்தானம் கஷ்டப்பட்டு அடிக்கும் காமெடிகள் எல்லாம், டெல்லி பெல்லி படத்தில் விஷுவலாகவே இருந்தது. வீணாக அதை கெடுத்தது தான் மிச்சம்.

படத்தில் குட்டி குட்டியாக ஏகப்பட்ட சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும், அதெல்லாம் சந்தானத்தாலே பாழாய் போனது. ஒரு காட்சியில், இம்ரான் கானும்(ஆர்யா), செனாஸும் (ஹன்சிகா) குடும்பத்தோடு உட்கார்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது அந்த அமைதியான வீட்டில், திடீரென்று 15 கடிகாரங்கள் ஒரே நேரத்தில் அலறி அடங்கும். எல்லோரும் செனாஸின் அம்மாவை திரும்பி பார்ப்பார்கள், அவள் சிரித்து கொண்டே “It;s one” என்பாள். அதாவது மணி ஒன்று. அப்படியானால் 12 மணி ஆனால் வீடு எப்படி அலறும் என்று நம் கற்பனைக்கு விட்டு விடுவார்கள். ஆனால் இந்த காட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவர்களாகவே நினைத்து கொண்டார்கள், அதனால் நீக்கி விட்டார்கள். ஏன் தான் தமிழனை எல்லாரும் முட்டாள் ஜந்து என நினைக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் இதே தமிழகத்தில் தான் Da vince code –ம் மரண ஹிட் அடித்தது, அதை ஏன் நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என தெரியவில்லை.

இன்னும் நிறைய சொல்லலாம், ending title card பாட்டையே காணோம். அது தான் மிக மிக முக்கியமான பாட்டு, அதை எடுத்து விட்டார்கள்.

எந்த ஜோசியர் “சே” என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் படி படம் வையுங்கள் என்ற சொன்னாரோ தெரியவில்லை, சேட்டை என்று பெயர் வைத்து விட்டார்கள். படத்தின் பெயரை பெயருக்கு “சேட்டை டா” என்று இறுதியில் உபயோக படுத்த படுகிறது. அதை எதற்கு சொல்கிறார்கள் என்று யாருக்கு வெளிச்சமோ தெரியவில்லை !

ஆனால் படக்குழுவினரின் ஜோசியரை நான் மிகவும் பாராட்டுகிறேன். அவருக்கு தான் படம் பார்த்து வெளியே வரும் மக்களின் ரியாக்‌ஷன் முன்னமே தெரிந்திருக்கிறது... ஜோசியம் எல்லாம் உண்மை தான் போல் இருக்கிறது....!  

ப்ராய்லர் கோழிகள் - 2

ஃபேஸ்புக்கில் ப்ராய்லர் கோழிகள் பதிவினை பார்த்து, பூங்குலழி சண்முகம் தெரிவித்த எதிர்வினை இது:

1) பசி தீர்ந்த ஒரு மிருகம் போல்? உலவி கொண்டிருந்தேன்.

குஜராத், சிலோன் ரயிலெரிப்பு.எல்லா கொடுமைகளும்.
இப்படித்தான் ஆரம்பமாயிருக்கும். (ஒட்டககதைபோல்.) உறவுகளையே காயப்படுத்திவிட்டு.உலகத்தில் அமைதியையே எதிர்பார்ப்பது
எந்தவகையில் சரியாகும். ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள அவரின் நண்பரை பாருங்கள் என்பார்கள்.நண்பர்களே போதும் என்றால் நண்பரை எவ்வகையில் சரிபார்ப்பது.

நாய்.எழும்புத் துண்டைக் கடித்து அத்துண்டு போய் நாயின் வாயை குத்தி -கிழித்து ரத்தம் வரும்போது,.அது ரசித்துசுவைப்ப்து.போல் தன ரத்தமே என்பதை அறியாமல் எங்கிருந்தோ அதற்கு ரத்தம் கிடைத்து சுவைப்பதுபோல் எண்ணிக்கொள்கிறது.... -

அது போல் நீ நான்கு நாட்களாக உனக்குள்ளேயே ஒரு வஞ்சக மனத்தை உருவாக்கிக் கொண்டு.யாரையோ ஜெயித்து விட்டதைப்போல் எண்ணிக்கொண்டிருக்கிறாய்.

வடிவுக்கரசியே ஆனாலும் அவளின் வாழ்க்கையே ஏமற்றமாகி விட்டதால் வந்த வலியும்,அவள் இடத்தி இருந்து பார்த்தால் அதுவும் சரியாவே இருக்கும்.

உன்னைக் கட்டுபடுத்தவே உன்னால் முடியவில்லையே ,அம்மா, அப்பா யார் சொன்னாலும் நீ செய்ததே சரியென்றால் குஜராத் இலங்கை எல்லாமே சரியாத்தான் இருகிறதோ ?
ஆரம்பத்த்தில் இப்படிதான் உருவாக்கி இருப்பார்கள்.

ஏசு,அன்னை தெரசா,காந்தி,நம் முன்னோர்கள் பாட்டிகள். போன்றவர்கள் தான் அவமானப் பட்டாலும் நாம் யாரையும் அவமானப் படுத்திவிடக் கூடாது.
என்று எண்ணிக்கொண்டும், இன்னும், கூட இருப்பவர்களுக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்.நம்மிடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பசி தீர்ந்த ஒரு மிருகம் போல் உலவி கொண்டிருந்தேன்.
கூட்டிக்கழித்துப்பார் , எங்கு தவறு நடந்திருக்கிறது மாற வேண்டியவர்கள் யார்?

லளிகம் என்கிற கிராமத்தைத் தவிர உலகமே தெரியாமல்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ,(உலகமே கைக்குள் ) என்று படித்த நீ செய்ததும் சரியா?
என்ன மாற்றத்தை எதிர்பார்த்ததாய்/ மாற்றம் வரவேண்டியது நமக்குத்தான்.
வளர வேண்டிய வயது, வயதானவர்களை வேதனைப் படுத்தக் கூடாது.

இந்த சூழ்நிலையை நீ மட்டுமே உடனே சரி செய்தாக வேண்டும் , இல்லையென்றால் அவர்கள் உன்னை மன்னித்து விடுவார்கள்

ஒருவரைப் பழி வாங்க வேண்டும் என்றாலும் மன்னிப்பது
ஒன்றே சரியான வழி.---- வாழ்க வளமுடன்
(எனக்கும் பெரியதாக எழுதத் தெரிந்திருக்கிறது).


2) பஸ்ஸில். நடந்தது என்ன?

டூர் பஸ்ஸில் முன்னதாக ஏறினால் முன்னாடி சீட் .நாங்கள் வழக்கம்போல் கடைசியில் தான் ஏறுவோம். கடைசி சீட்டிற்கு. முன்னாடி காலியாக இருந்ததால் சம்பந்தப்பட்டவர். உட்கார்ந்துவிட்டனர். இடையில் ஓடிவந்த பெண் அவர்களை எழுப்பிவிட்டு விட்டாள். இவர்களும் அந்தப்பெண்ணிடம் "பேசசு வாங்க முடியாமல்" கடைசி சீட்டிற்கே வந்து விட்டனர்.இடையில் அந்தப் பெண் பேசியது அதிகம்தான்
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் கடைசி சீட்டிற்க்கு உரிமையாளர்கள் வந்து சேர்ந்தோம்.? இதுநடந்து இரண்டு மணிநேரம் கழித்துத் தான். அந்தப்பெண் எங்கள் சீட்டிற்க்கு
வர விரும்பியது. அந்தப் பெண்ணிற்கு இடம் கொடுக்கப
பிடிக்காததால் நான் எதற்கு இடையில் என்று சொல்லி எழ முயற்சி செய்தார் சம்பந்தப்பட்டவர்."யார் என்று புரிந்ததா?
இது எதுவுமே தெரியாமல் கடைசியில் வந்தவர்கள் எழுந்தவர் மீது கோபப்படுகின்றனர்.

இதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் சேர்த்து வைத்த எண்ணங்கள்தான்.கண்,காது,மூக்கு. வைத்து இவ்வளவு பெரியதாகப் போய்விட்டது.(வேடன் வில் அம்பு கதை அந்தக காலததுக்கதை).பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதுபோல் ஆகிவிட்டது.--
------வாழ்க வளமுடன்.                                                                           - பூங்குழலி சண்முகம்அன்புள்ள பெரியம்மா, 

 


உப்பு சப்பு இல்லாத, லாஜிக் இல்லாத, நடுநிலை இல்லாத, ஆர்வக்கோளாறு கொண்ட, பிற்போக்கு தனமான கமெண்ட்டுகளுக்கும் அறிவுரைகளுக்கும் நான் பதில் அளிப்பதே இல்லை... அதிலும், நீங்கள் கேட்டுள்ள பல கேள்விகளுக்கு, பதிவிலே பதில் இருக்கிறது. பதிவை ஒழுங்காக படித்து இருந்தாலே, உங்களின் கமெண்ட்டின் நீளமும், அறிவுரையின் நீளமும் சற்று கம்மியாகி இருக்கும்... என்ன செய்வது? பெரிதாக எழுத வேண்டும் என விருப்பப்பட்டு, பதிவினை முழுமையாக கூட படிக்காமல் அறிவுரையை ஆரம்பித்து விட்டீர்கள்... இப்போது இதற்கெல்லாம் பதில் சொன்னாலும் கூட, கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருப்பீர்கள். நீங்கள் சொன்ன அறிவுரையை முழுக்க ஏற்று கொள்ளும் வரை, ஒரே விஷயத்தை வட்டமடிப்பீர்கள்... இப்போது, நான் என்ன தான் பதில் சொன்னாலும், உங்களின் ஈகோ அதை ஒப்பு கொள்ளாது, கடைசி வரை நீங்கள் சொன்ன அறிவுரையின் பக்கமே நின்று, நீங்கள் சொல்வது தான் சரி என்று வாதம் செய்வீர்கள். அதுவும் வாழ்க வளமுடன் என்ற இறுதி வரிகளோடு...  

இது போல் உப்பு சப்பு இல்லாத அறிவுரைகள் எல்லாம் எனக்கு மிகவும் வேண்டியவர்களிடமிருந்து தான் வருகிறது, இதற்கெல்லாம் நான் மண்டையை மண்டையை ஆட்டி விட்டு எஸ்கேப் ஆகி விடுவது தான் வழக்கம்... ஆனால், இது என்னுடைய மிகவும் பெர்சனலான விஷயம் என்பதாலும், நீங்களும் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறீர்கள் என்பதாலும், இதற்கு தகுந்த எதிர்வினை ஆற்ற கடமை பட்டிருக்கிறேன். இது போல் உப்பு சப்பு இல்லாத அறிவுரைகளுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றினால் என்ன பிரச்சனை வரும் என்றால், எதிர்த்து பேசுபவன் என்று பெயர் வந்து விழும்... வந்து விட்டு போகட்டும், புரிந்து கொள்ளாத உறவுகளை நான் கட்டாயப்படுத்துவதில்லை... அதே போல் நல்லவனாக இருத்தல் வேண்டும், என்ற கோட்பாட்டில் எனக்கு எப்போதோ நம்பிக்கை போய்விட்டது. காரணம் எல்லோரும் என்னை ஏறி மிதிக்கிறார்கள். அதனால் நானும் எப்பவோ கெட்டவன் அவதாரம் எடுத்து விட்டேன்...

சொல்ல போனால் இந்த வடிவுக்கரசி விஷயம் ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் வடிவுக்கரசியின் குணத்திற்கான ஒரு differential விஷயத்தை தான் அவர் செய்துள்ளார். நானும் அதற்கான ஒரு differential விஷயத்தை தான் எதிர்வினையாய் செய்துள்ளேன். இதை differential ஆக பார்ப்பதால் விஷயம் சிறியதாக தெரிந்தாலும், இதனுடைய integerration பிரம்மாண்டமானது.

ஒரு 14 வயது தாண்டிய சிறுமியை பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டியுள்ளது. அந்த சிறுமியை விளையாட அனுப்புவதில்லை, ஆண் நண்பர்களிடத்து பழக விடுவதில்லை, ஆண் உறவினர்களிடம் கூட சகஜமாக பேச அனுமதிப்பதில்லை... இதெல்லாம் ஏன்? பெண்ணின் திருமணத்தில் சிக்கல் வந்து விட கூடாது என்ற முன்னெச்சரிக்கை. ஒரே ஒரு பையனிடம் பேசினால் கூட, கண் காது மூக்கு வைத்து பேச ஒரு கூட்டமே தயராக இருக்கிறது. அதிலும் பெண்கள் பங்கு அதில் சரி பாதி என்று ஒத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு கூட்டமே அடுத்தவர்களின் படுக்கை அறைகளை ஓர கண்ணால் உத்து பார்த்து கொண்டிருக்கிறது. அந்த கண்களின் மேல் கல் வீசுவது தான் என் காரண காரியம்... இதை நீங்கள் என் பதிவை படித்த போதே புரிந்திருக்க வேண்டும்... உங்களுக்கு புரியவில்லை... பெரியம்மாவாக போய் விட்டீர்கள், அதனால் விளக்கி சொல்ல வேண்டியதாய் போயிற்று... மற்றவர்களுக்கு இந்த சலுகைகளை அவ்வளவு சாதாரணமாக தர மாட்டேன். வேண்டுமானால் ப்ரவீன் வின் என்று ஒரு அன்பர் இருக்கிறார், அவரை கேட்டு பாருங்கள்... சொல்வார்.

ஒரு பைத்தியக்காரன் சாக்கடைக்குள் நின்று கொண்டு, போவோர் வருவோர் மேல் எல்லாம் சாக்கடையை வாரி இறைத்து கொண்டிருக்கிறான். அவனை தடுக்க திராணியற்று எல்லோரும் பொட்டைத்தனமாய் எதிர்க்காமல் இருக்கிறீர்கள், கேட்டால் அவனை மன்னித்தருள வேண்டும் என ஆன்மீகம் பேசுகிறீர்கள். எனக்கு அதில் உடன்பாடில்லாமல், நான் சாக்கடையினுள் இறங்கி அவன் கைகளை கட்ட பார்க்கிறேன். இப்போது நான் அவனது கைகளை கட்டும் போது அவன் அய்யோ அம்மா என்று கூப்பாடு போடுகிறான். அவன் கூப்பாடு போடுகிறானே, பாவம் அவன் என்பதால் நீங்கள் என்னிடம் பரிந்து பேசி கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலைப்பாட்டில் தான் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீகள். அதுவாவது தெரிகிறதா...? என் அனுபவம் கம்மி என்றாலும், என் அனுபவத்தின் மேல் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு சொல்கிறேன்... உலகத்தின் மீதான உங்களின் ஒட்டுமொத்த பார்வையும், உங்களின் கமெண்ட்டும் மிகவும் பிற்போக்கு தனமாக இருக்கிறது.

நிரூபனங்கள் இதோ...

1.   //குஜராத், சிலோன் ரயிலெரிப்பு. எல்லா கொடுமைகளும் இப்படி தான் ஆரம்பமாகியிருக்கும். உறவுகளையே காயப்படுத்தி விட்டு, உலகத்தில் அமைதியை எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் சரியாகும்//

சிலோனில் ரயில் எரித்தார்கள் என்பது பற்றி நான் எங்கேயும் சொல்லவில்லை. நீங்கள் எங்கேயே தவறாக புரிந்து கொண்டீர்கள். கோத்ராவில் தான் ரயில் எரித்தார்கள் என்று கூறியுள்ளேன். இப்போது இந்த ரயில் எரித்தது எல்லாம் யார் என்று பார்த்தால், எல்லாம் பெரியவர்கள். வயது காரணமாக, மரியாதைக்குரியவர்கள். இவர்களெல்லாம் ஒரு கூட்டத்தையே துவம்சம் செய்து, எரித்து கொலை செய்கிறார்கள் என்றால் ஒரே நாளில் இவர்கள் வன்முறைக்கு பழக்க பட்டிருக்க மாட்டார்கள். முதலில் மனைவியை அடித்திருப்பான், அடுத்து பக்கத்து வீட்டுக்காரனை அடித்திருப்பான், அடுத்து பக்கத்து தெருக்காரனை கொன்றிருப்பான்... இதையெல்லாம் தாண்டி தான் அவன் இறுதியில் ஒரு ரயிலையே எரிக்கும் அளவிற்கு அவன் அவனை தயார் படுத்தியிருப்பான்... அப்படி தானே.. முதன்முதலில், அவன் அடுத்த வீட்டுக்காரனை அடித்திருந்த போதே, போலீஸ் அவனை கைது செய்து, அவனை 4 தட்டு தட்டிருந்தால், பின்னாளில் இவ்வளவு கொலைகள் அரங்கேறிருக்குமா...?

அதனால் தான் நான் ஒரு போலீஸாக இருந்து, வடிவுக்கரசியின் வாயை பூட்ட பார்க்கிறேன். பின்னாளில், இவர் இன்று பேசியது போல் வேறு யாராவது ஒரு பெண்ணை வஞ்சம் வைத்து திரித்து பேசி, அந்த பெண் அவமானத்தில் எந்த ஒரு தப்பான முடிவுக்கும் போய் விட கூடாது என்பதில் நான் முழு கவனத்துடன் இருக்கிறேன். ஒரு பையனாகிய எனக்கே, யாரோ ஒரு பெண்ணின் உயிர் மீது இருக்கும் பயமும் பற்றுதலும் கூட, ஒரு நவீன பெண்ணாகிய உங்களுக்கு அக்கறை இல்லாதது குறித்து ஆச்சர்யமும், கவலையும், வெட்கமும் ஒரு சேர அடைகிறேன்...

எனக்கு இந்த உலகத்தின் மீதும், இந்த உலகத்தின் மீதுள்ள மனிதர்களின் மீதும் ஒரு பிரம்மாண்ட காதல் உள்ளது. உலகத்தை சுத்த படுத்த வேண்டுமானால், அதை நான் என் வீட்டில் இருந்து தான் தொடங்க வேண்டும்... வீட்டை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் நான் என் தலைமுறையினருக்கும், என் நண்பர்களுக்கும் இந்த இணையம் வாயிலாக சொல்லி கொண்டிருக்கிறேன்... உங்கள் வயது சாக்கடைகளை ஜாக்கிரதையாக இருந்து கொள்ள சொல்லுங்கள்... .     

2.   // ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள அவரின் நண்பரை பாருங்கள் என்பார்கள். நண்பர்களே போதும் என்றால் நண்பரை எவ்வகையில் சரிபார்ப்பது//

உண்மையிலே சொல்கிறேன். இதை நான் 25 முறைக்கும் மேலே படித்தாயிற்று. தலை கீழாய் திருப்பி வைத்து கூட ஒரு முறை படித்து பார்த்து விட்டேன்... சத்தியமாக புரியவில்லை. பெரிதாக எழுத வேண்டும் என்ற முனைப்பில், எழுதி சாதித்தது போல்... அடுத்த முறை தெளிவாக புரியும் படி எழுதும் முனைப்பில் ஈடுப்பட்டு அதை சாதித்து காட்டும் படி தாழ் பணிந்து வணங்குகிறேன்.


3.   நாயை பற்றி உவமை சொல்லி என்னை நாய் என்று திட்டு விட்டீர்கள். நல்லது. எனக்கு நாய்கள் மிக விருப்பமானவை. ஒரு வேளை என்னை நீங்கள் மனிதன் என்று சொல்லி திட்டியிருந்தால் எனக்கு கோபம் வந்திருக்குமோ என்னவோ...

சரி, நாய் கதைக்கு வருகிறேன்... முதலில் இது போல் ஏதாவது சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டு இருக்கிறீர்களா... நாய்கள் மிக புத்திசாலியானவை, எவ்வளவு வறட்சியான சூழ்நிலையிலும் நாய்களுக்கு எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்று தெரியும். இதற்காக நாய்கள் மோப்ப சக்தியை வரமாக வாங்கி வந்திருக்கின்றன...

சரி, இந்த கதை உண்மை என்ற அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறேன். இப்போது யார் நாய், யார் எலும்பு துண்டு....?

நீங்கள் என்னை நாய் என்றும், வடிவுக்கரசியை எலும்பு துண்டு என்றும் உவமை படுத்துகிறீர்கள்... அப்படி தானே. அதாவது வறட்சியான சூழ்நிலை என்பதை இப்படி உவமை படுத்தலாம்... அதாவது உலகம் முழுதும் நல்லவர்கள் இருக்கிறார்கள், எனக்கு திட்ட யாரும் கிடைக்காமல், வடிவுக்கரசியை திட்டுகிறேன்... நீங்கள் என்னிடம் வந்து அப்படி திட்ட வேண்டாம் என்றும், மன்னித்து விட்டு போகுமாறும், வீணாக திட்டுவதால் என் உடல்நலம் தான் குன்றும் என்று அறிவு போதிக்கிறீர்கள்... அப்படி தானே... சரி, கிடக்கட்டும்... நான் முட்டாள் நாயாகவே இருந்து விட்டு போகிறேன்.

அதற்கு முன்...

சம்பந்தப்பட்ட பெண் வடிவுக்கரசியுடன் ஏதோ பிரச்சனை செய்து விட்டார். அதனால் வடிவுக்கரசி, வஞ்சம் வைத்து இருந்து கொண்டு, மிக சரியாக அந்த பெண்ணை இடம் பார்த்து அடித்து விட்டார். அதுவும் அந்த பெண்ணின் கற்பு விஷயத்தில்... நீங்களும் அங்கே தானே இருந்தீர்கள்.... அப்படி, வடிவுக்கரசி அந்த பெண்ணை திட்டியவுடன், வடிவுக்கரசியை கூப்பிட்டு வைத்து இந்த நாய் எலும்பு கதையை சொல்லியிருக்கலாமே... அவரிடத்து அந்த கதையை சொல்லாமல், என்னிடம் மட்டும் இந்த கதையை வந்து சொல்லும் ரகசியம் என்னவென்று நீங்கள் தயவு செய்து சொல்ல வேண்டும்.. அப்படியானால் அந்த பெண் திட்டு வாங்கட்டும் என்று, நீங்களும் வஞ்சம் வைத்து வடிவுக்கரசி திட்டுவதை வேடிக்கை பார்த்தீர்களா...

என்னை பார்த்தால் மாங்காய் மடையன் போல் தெரிகிறதா... அறிவுரை சொல்வது எளிது என்பதால், கிளம்பி வந்து விட வேண்டாம்.
        
வடிவுக்கரசி பழி வாங்கியதை குறித்து எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. அந்த பெண் செய்ததில் வடிவுக்கரசிக்கு ஏதும் மனவருத்தம் இருந்தால் தாரளமாக பழிவாங்கி கொள்ளட்டும். ஆனால் அதில் ஏன் என்னை இழுக்க வேண்டும். பெண்ணுக்கு மட்டும் தான் கற்பா? ஏன், எனக்கெல்லாம் கற்பு என்பது ஒரு சென்சிட்டிவான விஷயமாக இருக்க கூடாதா...

சரி, என்னை விடுங்கள். வடிவுக்கரசிக்கு ஒரு பெண்ணிடம் பிரச்சனை என்றால் அந்த பெண்ணை பழிவாங்குவதற்காக, அந்த பெண்ணின் கற்பு குறித்து தான் 10 பேர் முன்னிலையில் ஆபாசமாக கமெண்ட் அடித்து தன் வஞ்சத்தை தீர்த்து கொள்ள வேண்டுமா?

இப்போது எனக்கு வடிவுக்கரசியின் மேல் வஞ்சம் இருக்கிறது, நான் வடிவுக்கரசியின் கற்பு குறித்து நான் ஆபாசமாக எழுதட்டுமா....

அது எப்படி... ஒரு அருவருக்க கூடிய செயலை ஆண் செய்தால் ஆவேசமாக ஓடி வருகிறீர்கள், பெண் செய்தால் மட்டும் கண்டும் காணாமல் இருக்கிறீர்கள். இது, உண்மையில் ஆணாதிக்க சமூகமா, இல்லை பெண்ணாதிக்க சமூகமா என்று தயவு கூர்ந்து நீங்கள் சொல்ல வேண்டும். இதற்கு மகளிர் காவல் நிலையங்களில் கொடுக்க கூடிய அநியாய, அபாண்ட புகார்களே நிகழ்கால சாட்சியங்கள் ஆகும்... ஒரு பெண் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று, ஒருவனை கை காட்டி, இவன் என்னை கற்பழிக்க வந்தான் என சொன்னாலே போதும், தூக்கி ஜெயிலில் தள்ளி விடுகிறார்கள்.

4.   // அதே போல் நீ 4 நாட்கள் உனக்குள்ளே ஒரு வஞ்சக மனத்தை உருவாக்கி கொண்டு ....//

ஒரு சிறிய திருத்தம், 4 நாட்கள் என்பது தவறான தகவல் ஆகும்... நான் எனது சிறிய வயது முதலே கொக்கு மீனிற்காக காத்து கொண்டிருப்பது போல் காத்து கொண்டு தான் இருந்தேன் J

5.   // வடிவுக்கரசியே ஆனாலும் அவளின் வாழ்க்கையே ஏமாற்றமாகி விட்டதால் வந்த வலியும், அவள இடத்தில் இருந்து பார்த்தால் அதுவும் சரியே ஆகும் //

இதையெல்லாம் தான் பிற்போக்கு சிந்தனைகள் என்று கட்டம் கட்டுகிறேன்.

ஒரு போலீஸ் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள், அவன் ஊரில் உள்ள மக்களின் ஒவ்வொருவரின் இடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தால் ஜெயிலே காலியாக தான் கிடக்கும். ஊரில் தப்பு செய்பவர்களின் இடத்தில் இருந்து பாவம் பார்ப்பதா போலீஸின் வேலை...

அப்படியானால்... நீங்கள் ஒசாமா பின் லேடன், கோத்ரா இரயில் எதிர்ப்பாளர்கள், ஊழல் அரசியல்வாதிகள், கற்பழிப்பாளர்கள், ஹிட்லர், இடி அமீன், முசோலினி, ராஜ பக்சே, தர்மபுரி பஸ் எரிப்பாளர்கள் என வரிசையாக ஒவ்வொருவரின் இடத்தில் இருந்து கொண்டும் பார்த்து அவர்களுக்கு நல்லவர்கள் சர்ட்டிபிகேட் கொடுத்து, வீட்டிற்கு கூப்பிட்டு சாப்பாடு போடுங்கள்... அதன் பிறகு அறிவுரைக்கு ஆள் தேடுங்கள்.

முதல் மரியாதை வடிவுக்கரசி விஷயத்திற்கு வருவோம்... ஊரில் குழந்தை இல்லாதவர்களே இல்லையா... எனக்கு தெரிந்த பெரும்பாலான குழந்தை இல்லா பெண்மணிகள், சாமான்ய பெண்களை விட அதிக கரிசனமும், மனிதத்துவமும் கொண்டிருக்கின்றனர். எல்லோருமா நாக்கில் நரம்பு இல்லாமல், விஷ வார்த்தைகளை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்....

6.   //உன்னை கட்டுப்படுத்தவே உன்னால் முடியவில்லையே, அம்மா அப்பா யார் சொன்னாலும்....//

நான் ஏன் என் அப்பா அம்மாவிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவர்களுக்கு எங்கிருந்து அந்த உரிமை வந்தது, என்னை பெற்று எடுத்து விட்டதாலா.. நான் என்ன பொருளா, பண்டமா? இது என்ன மாதிரியான பிற்போக்கு சிந்தனை. உதாரணத்திற்கு என் அப்பா என்னை கஞ்சா கடத்த தூண்டுகிறார் என்று வைத்து கொள்வோம், எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று வைத்து கொள்வோம்... நான் என் அப்பாவின் அடக்குமுறைக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது தான் உங்களின் அறிவுரையா...?

நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உங்களுக்கு யார் சொன்னது.... பதிவை ஒழுங்காக முழுதும் படித்தீர்களா....?

நான் என் முழு கட்டுப்பாட்டில் எதை செய்ய வேண்டும், எதை பேச வேண்டும் என்ற முன்னேற்பாட்டில் இருந்ததால் தான், இன்று வடிவுக்கரசி நலமுடன் இருக்கிறார்... இல்லையெனில், அன்று பேருந்தில் வைத்தே வடிவுக்கரசியை ஒரு வழி செய்து மருத்துவமனைக்கு அனுப்பியிருப்பேன்.

7.   இறுதியாக மன்னிப்பு பற்றி நீங்கள் எழுதியிருக்கும் விஷயமெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு சின்ன பையன் இருக்கிறான், ஐஸ் சாப்பிடுவதற்காக என்று அப்பாவின் சட்டை பையிலிருந்து சில்லறை திருடி மாட்டி கொள்கிறான். அவனை மன்னிப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது. பல காலமாக கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் கும்பல் வசமாக சிக்குகிறது என்றால் அவர்களையும் மன்னித்து விடலாமா?

சரி, வடிவுக்கரசியை எங்கள் வீட்டினருக்கு பல காலமாகவே தெரியும், அவரும் பல காலமாக அப்படியே தான் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகிறார், எங்கள் வீட்டு நபர்களும் தொடர்ந்து அவரை மன்னித்து கொண்டு தான் இருக்கிறார். என்ன மாறி விட்டது... வடிவுக்கரசி திருந்தி விட்டாரா...? இல்லையே, மன்னிப்புகளை advantage எடுத்து மேலும் மேலும் பேசி கொண்டு தானே இருக்கிறார்.

காந்தியை பற்றிய உங்கள் புரிதலே எனக்கு விநோதமாக இருக்கிறது. காந்தி உண்மையிலே ஒரு போராட்டக்காரர், மன்னித்து கொண்டிருக்கும் மாங்காய் மடையன் அல்ல... அநியாயத்தை கண்டால் கொதிப்பவர். அவரின் போராட்ட குணம் தான், ஆங்கிலேயர்களை துரத்தி அடித்து, நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது.  நீங்கள் சொல்வது போல், ஆங்கிலேயரின் அடக்குமுறையை மன்னித்து கொண்டிருக்கவில்லை... சுபாஷ் சந்திர போஷ், அரவிந்தர், காந்தி, பெரியார் என அவரவர் ஒவ்வொரு வழியினை தேர்ந்தெடுத்து போராட்டங்களை மேற்கொண்டனர். உங்கள் எல்லோரை போலவும், ப்ராய்லர் கோழிகளாக உருவெடுத்து சொரணை இல்லாமல் எல்லோரையும் மன்னித்து கொண்டிருக்கவில்லை...


உங்களின் ஒட்டுமொத்த கமெண்ட்டிலும், வடிவுக்கரசி செய்தது தவறு என்பது பற்றி, ஒரே ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. இப்படி நடுநிலையில் இல்லாத உங்களுக்கு, அறிவுரை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வயது மூத்தவர், என் பெரியம்மா என்றெல்லாம் சொல்ல வராதீர்கள்... வயது, உறவு எல்லாம் ஒரு தகுதியே கிடையாது.

இப்படி ஒரு சார்புள்ள நீங்கள் இனியும் மேற்கொண்டு இது சம்பந்தமாக பேச உரிமையில்லை என்பதனை கண்டிப்புடனே சொல்லி, கெட்ட பெயரை வாங்கி கொள்கிறேன்.

உங்களை போன்று ப்ராய்லர் கோழிகளுக்கு நல்லவனாய் இருப்பதை விட, கெட்டவனாகவே இருந்து கொள்கிறேன்... எனக்கு அது சற்று சௌகரியமாக இருக்கிறது.

மற்றபடி அறிவுரைக்கு நன்றி.

அறிவுரை பிடிக்காது என்றாலும், அறீவுரை கூறும் உள்ளம் பிடிக்கும்...

                                           - SurYakumaR


 

ப்ராய்லர் கோழிகள்White tiger நாவலில் இப்படி ஒரு வாசகம் வரும்... அதாவது நம் இந்தியர்கள் அனைவரும் ப்ராய்லர் கோழிகள் போல, அவர்கள் அடைப்பட்டிருக்கும் கூண்டை திறந்து விட்டாலும், அவர்கள் போக தெரியாமல் உள்ளேயே தான் கிடப்பார்கள் ... எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...

முதல் மரியாதை படம் பார்த்திருப்போம், அதில் வடிவுக்கரசி கதாபாத்திரத்தை வெறுக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சதா முகத்திற்கு பின் அடுத்தவர்கள் பற்றி பேசுவதும், மூஞ்சிக்கு நேரே குத்தி காட்டி பேசுவதும், வதந்தி பரப்புவதும் என அத்தனை அருவறுப்பான கதாபாத்திரம் அது... உண்மையில் முக்கால் வாசி தற்கொலைகள் இவர்களின் இருப்பாலே நிகழ்கிறது என்பது என் கருத்து. நம் நிகழ் உலகிலே இது போல் நமக்கு எத்தனை வடிவுக்கரசியை தெரியும்... ஆனால் நாம் அவர்களை தொடுவதில்லை, தொட முடியாத அளவிற்கு அவர்கள் சாக்கடையாக கிடக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக வாய் கொடுத்து பேச முடியாது என்ற காரணம் ஒன்று இருந்தாலும், பேசுபவர் பெண் என்பதே பெரும்பாலான தயக்கத்திற்கு காரணம்... பெண்களை எதிர்ப்பது என்பது எப்பவுமே ஒரு சர்ச்சையான விஷயமாகவே பார்க்கப்படுகிறது, எதிர்ப்பிற்கான காரணங்கள் பார்க்கப்படுவதில்லை.

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் இருக்கிறார், அவர் ஒரு பெண், பேத்தியெல்லாம் கண்டு விட்டவள். என் சிறு வயது முதலே எனக்கான பணிவிடைகளை அவ்வப்போது செய்தும் இருக்கிறார், ஆனால் அவர் மேல் நான் கொண்டிருக்கும் அபிப்ராயமானது பூஜ்யம் தான், ஏனெனில் அவர் மேலே சொன்னது போல் புறங்கூறும் பழக்கமுடையவர். கல்யாண வீடென்றாலும், சாவு வீடென்றாலும் ஒரு சின்ன குறையை கண்டு விட்டால் 50 பேர் முன் சத்தம் போட்டு உரிய நபரை தலை குனிய வைப்பது, கல்யாண வீட்டில் வந்து மணப்பெண்ணின் நடத்தை குறித்து இல்லாததும் பொல்லாததும் நேரில் கண்டது போல் தரைமட்டத்திற்கு கமெண்ட் அடிப்பது, ஊரில் ஒரு ஆணோ பெண்ணோ சாதாரணமாக பேசி கொண்டால் கூட அதை ஊதி பெரிதாக்கி 10 பேரிடம் பேசி உள்ளூர மகிழ்ந்து கொள்வது... என இவரின் பயோடேட்டாவை அடுக்கி கொண்டே போகலாம். இவரை போலவே என் சொந்தத்திற்குள்ளாகவே, 4-5 பேர் இருக்கிறார்கள், சில ஆண்களும் இருக்கிறார்கள், அவர்களையும் இவர்களுடன் இணைத்து கொண்டால் எண்ணிக்கை 10-15ஐ தொடும்... இவர்களை 5-6 நாட்கள் கூர்ந்து கவனித்தாலே, அவர்களின் மனப்போக்கை படித்து விடலாம்... யாரும் கௌரவுத்தடன் இருத்தல் கூடாது என்ற sadist தனம் தான் அவர்களை, பேசாததை எல்லாம் பேச வைக்கும். மற்றவர்களின் மனத்தை காயப்படுத்தும் வித்தையை எல்லாம் அநாயசமாக “ஜஸ்ட் லைக் தட்” கையாள்வார்கள்.

நாளடைவில், இது போல் நபர்களை சுற்றி இருப்பவர்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருந்து கொண்டும், அவர்களுக்கு ஏற்றார் போல் அவர்களின் குணாதிசியத்தை மாற்றி கொண்டும் காலத்தை தள்ளுவார்கள். ஏனென்று அவர்களிடையே கேட்டால், சண்டை போட்டு அசிங்கப்படுவதை விட, தலைகுனிந்து அசிங்கப்படுவது அளவீட்டளவில் குறைவாக இருக்கும் என பதில் அளிப்பர். அதாவது, நம்மவர்கள் அவர்களை சாக்கடையில் இருந்து விழுந்து எழுந்த பன்னியை போல் பார்த்து ஒதுங்கி போவார்கள், ஆனால் வடிவுக்கரசிகளோ தங்களை தாங்களே சிங்கம் என நினைத்து கொள்வது தான் இங்கே தாங்கி கொள்ள முடியாதது...

நான் மேலே குறிப்பிட்ட உறவினருக்கு ஒரு மகன் உண்டு, அவருடைய மகனுக்கு எங்கள் வீட்டு பெண்ணை மணம் முடிப்பதற்காக கேட்டனர், எங்கள் யாருக்கும் அவர் மீதும், அவர் மகன் மீதும் கொஞ்சமும் நல்ல அபிப்ராயம் இல்லாததால் மறுத்து விட்டனர். இதனால் எங்கள் குடும்பத்தினரை காயப்படுத்துவதில் அன்றிலிருந்து கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

சில சமயம் கொடுமை என்னவெனில், என்னுடைய அப்பா அம்மா இல்லாத போது அவர்களை பற்றி தரக்குறைவாக பேசி கொண்டிருக்கும் போதே, என் அப்பாவோ அம்மாவோ வந்து நின்றால் அப்படியே பேச்சை மாற்றி, வந்தவர்களிடம் இனிக்க இனிக்க பேசுவார்கள். அதையெல்லாம் சின்ன வயதில் இருக்கும் போது தட்டி கேட்டிருக்கிறேன், அதற்கு “அவனை பேசினா உனக்கென்னடா, உன்னை விட அவனை பேச எனக்கு தான் உரிமை அதிகம்... அதை தெரிஞ்சிக்கோ முதல்ல...” என்பன போல பதில் தான் வரும். ஒன்றும் மேற்கொண்டு பேச முடியாது, இதை பெற்றோரின் கவனத்திற்கு எடுத்து சென்றால், “அவங்க பேசினா பேசிட்டு போறாங்க விடு... என்னை தான பேசறாங்க, நீ கண்டுக்காத...” என்று பதில் வரும்.

உள்ளுக்குள் நெருப்பாய் கொதிக்கும், எதற்கு தான் இப்படி ஒரு கேவலமான இரட்டை வேஷம் போட்டு இப்படி நெருங்கின சொந்தத்தை புறம் கூறுகிறார்களோ என்று ஆத்திரமாய் வரும். பெத்த அப்பா அம்மாவை பற்றி அடுத்தவர் அபாண்டம் சொல்வதை கேட்டு கொண்டு, போபம் அடக்கி கொண்டிருக்கும் தருணத்தை ஒருவன் உணர்ந்து பார்த்தால் தான் தெரியும். சொந்தமாய் போய் விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பல்லை கடித்து கொண்டிருக்கும் நரக வேதனை தாங்க முடியாதது. அந்த நேரத்தில் எல்லாம், பெண்ணியம் பேசி, ஆணாதிக்கத்தை அடக்கும் போராளிகளை உயிருடன் எரித்து விடலாம் போல், உள்ளுக்குள் கனன்று எரியும்...

என் பெற்றொர்களை அபாண்டம் பேசினார்கள், சகோதரர்களை பேசினார்கள், பாட்டியை பேசினார்கள், என் அம்மாவின் உறவினர்களை பேசினார்கள், சில பிஞ்சு குழந்தைகளை பேசினார்கள், கிராமத்தில் குடித்தனம் நடத்தி கொண்டிருக்கும் பெண்களை தரக்குறைவாக பேசினார்கள், என் அப்பாவின் உறவினர்களை பேசினார்கள், எங்களது தொழிலை பேசினார்கள், என்னை பற்றி பேசாமலே இருந்தார்.... எப்போது என்னை பற்றி பேசுவார் என, என் முறை வரும் வரை காத்திருந்தேன்...

அந்த பொன்னான நாள் வந்தது... அந்த நாள் வெற்றியா, தோல்வியா என்பது எனக்கு தேவையில்லாத ஒரு விஷயமாக பட்டது, பல நாள் பசி தீர்ந்த ஒரு மிருகம் போல் நான் அன்று உலவி கொண்டிருந்தேன்...

சமீபத்தில் சுற்றுலா போயிருந்தோம். அது ஒரு Group Tour. நாங்கள் சென்ற சுற்றுலாவில், என் வயதில் ஒரே ஒரு பெண்ணும் வந்திருந்தார். என்னை ஆரம்பம் முதலே ‘அண்ணா’ என்றே அழைத்து வந்தார். மொத்த சுற்றுலாவிலும் சேர்த்து மொத்தமாக 5 நிமிடம் கூட அந்த பெண்ணிடம் நான் முழுதாக பேசியிருக்க மாட்டேன். அதுவும் “இந்தாங்க ஸ்நேக்ஸ் எடுத்துக்கோங்க” போன்ற உரையாடலே அது. ஒரு சமயம், நாங்கள் எல்லோரும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம், அப்போது அந்த பெண்ணிற்கு உட்கார இடம் இல்லாததால் எங்களின் இருக்கைக்கு அருகே உட்கார வந்தாள். அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் கடைசி சீட்டில் உட்கார்ந்து இருந்தோம், அந்த 6 பேர் சீட்டில், எனக்கும் ‘வடிவுக்கரசி’க்கும் இடையே மட்டும் ஒரே ஒரு இருக்கை காலி இருந்தது. அப்போது நம் வடிவுக்கரசி, இடம் விடுவது பற்றி கொஞ்சமும் யோசிக்காதவராய் மரம் போல் உட்கார்ந்திருந்தார். நிலைமையை பார்த்து விட்டு, எனது தாயார், வடிவுக்கரசியை தள்ளி உட்கார சொன்னார்கள். அதை சொன்ன உடனே, நம் வடிவுக்கரசி, அந்த பெண் உள்ளே வந்து உட்காருவதற்கு ஏற்ப வழி விட்டார். எங்கள் எல்லோருக்கும் மிகவும் வித்தியாசமாய் போயிற்று, அந்த பெண் எப்படி என் அருகில் வந்து அமர்வாள், ஏன் இப்படி புரியாதது போல் நடந்து கொள்கிறார்கள் என ஆச்சர்யப்பட்டு, வடிவுக்கரசியை என்னருகிலே வந்து உட்கார்ந்து கொள்ளும் படியும், அந்த பெண்ணை உங்கள் அருகில் உட்கார வைத்து கொள்ளுங்கள் என்று நானும் என் தாயாரும் விளக்கி சொல்லும் படி ஆயிற்று... அதன் பின் தான் வடிவுக்கரசி என்னருகே வந்து அமர்ந்து கொண்டு, அந்த பெண் உட்கார இடம் கொடுத்தார்..... அப்படி நகர்ந்து கொண்டே உட்கார இடம் கொடுத்த போது, வடிவுக்கரசி சொன்ன வசனம் தான் இங்கே ஆக முக்கியமானது....

“நான் வேற எதுக்கு இடைஞ்சலான்னு பார்த்தேன்...”

இதை சொன்னதும் சாதாரணமாக சொல்லவில்லை, குரலில் ஒரு நக்கல், ஒரு ஏற்ற இறக்கம், வேண்டுமென்றே 20 பேருக்கு கேட்கட்டும் என்ற தொனியில் சத்தமாக சொல்லி முடித்து, ஒன்றும் தெரியாதது போல் உட்கார்ந்து கொண்டார். அப்போது என்னுடைய பெற்றோர் மட்டுமில்லாமல், அந்த பெண்ணினுடைய பெற்றோரும் முன் இருக்கையில் தான் அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் சங்கடமாக போயிற்று... அந்த பெண்ணும் சரி, பெண்ணின் பெற்றோரும் சரி அவமானத்தில் தலை குனிந்தவர்கள் குனிந்தவர்களாகவே இருந்தனர்... அவர்களது வாழ்நாளிலே இது போல் அசூயையான சூழ்நிலையும், ஈனமான ஜந்துவையும் அவர்கள் கண்டதில்லை போலும்... இது போல் பல ஜந்துவை பார்த்த எனக்கே அந்த சூழ்நிலை ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது, கன்னத்திலே பளார் பளார் என கன்னம் பிய்ந்து தொங்கும் வரை அடிக்கலாம் என கோபம் உள்ளூர கிளம்பி வந்தாலும், நெருங்கிய சொந்தம் என்பதால், அந்த நேரத்தில் மூடி கொண்டு இருக்க வேண்டியதாய் போயிற்று... என்ன ஆச்சர்யம் என்றால், என் அம்மாவும் சரி, அப்பாவும் சரி... அப்படி ஒரு விஷ வார்த்தைகளை உமிழ்ந்த அந்த வடிவுக்கரசியை “ஏன் இப்படி சொன்னீர்கள்?” என வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்கவில்லை. இப்படி பல வடிவுக்கரசிகளை பார்த்து சொரணை உணர்வையே இழந்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டேன். இதே எனக்கொரு பையன் இருந்து, அவனை இது போல் நக்கல் பேசியிருந்தால், பேசியவனை தலை கீழாய் தொங்க விட்டு அடித்து வெளுத்திருப்பேன்...

அப்போது என் முடிவு, மிக தெளிவானதாக இருந்தது... நாமும்  நம் பெற்றோர் போல் வடிவுக்கரசிகளை சகித்து கொண்டு இருத்தல் கூடாது, கண்டிப்பாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தேன். ஆனால், சுற்றுலா முடித்து, ஊருக்கு போய் பார்த்து கொள்ளலாம், சுற்றுலா ‘மூட்’ஐ அநாயவசியமாக கெடுக்க வேண்டாம் என பொறுமை காத்தேன். இடைப்பட்ட நாளில், என்ன மாதிரியான எதிர்வினை ஆற்ற வேண்டும், திட்டுவது என்றால் என்ன சொல்லி திட்ட வேண்டும் என்பதை எனக்குள் ஒத்திகை பார்த்து கொண்டேன். பழிக்கு பழி என்பது அறிவற்ற செயலாக இருந்தாலும், அதை பின்பற்றவே நான் பரபரத்தேன். இந்த விஷயத்தில் நல்லவனாய் இருப்பது குறித்து கூட எனக்கு எந்த அவசியமும் இல்லை என பட்டது. நல்லவனாய் இருந்து கஷ்டப்படுவதை விட, கெட்டவனாய் இருந்து சொரனையோடு இருக்கலாம் என்பதில் தெளிவாய் இருந்தேன். என்ன... எதிர்வினைக்கு பின்பு, இந்த ஜந்து நம் குடும்பத்திடம் பேசாது அவ்வளவு தானே, இது போல் சொந்தங்கள் எல்லாம் தேவையே இல்லை... நண்பர்கள் வட்டமே போதும், ஒரே ஒரு சொந்தம் இருந்தாலும், அது நமக்காக உயிரையே கொடுக்கும் உறவாக இருக்க வேண்டும், காட்டி கொடுக்கும் உறவாக இருக்க கூடாது.

சுற்றுலாவும் முடிவை நெருங்கி கொண்டிருந்தது. இடையில் நான் வடிவுக்கரசியிடம் பேசுவதை நான் முழுதும் தவிர்த்தேன். அடங்காமாட்டா கோபம் கனன்று விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்போதும் கூட அந்த பெண்ணிற்காகவும், பெண்ணின் குடும்பத்திற்காகவும் தான் நான் வருத்தப்படுகிறேன், நான் அவமானப்படுத்த பட்டது பற்றி எனக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. ஏனெனில், என் அளவீட்டில் இதெல்லாம் ஒரு அவமானமே இல்லை, இதை விட பெரிய அவமானமெல்லாம் நான் சந்தித்து இருக்கிறேன். இருப்பினும் இந்த சம்பவத்திற்கு எதிர்வினை ஆற்றுவது பற்றி நான் ஏன் இவ்வளவு ஜரூராக இருக்கிறேன் என்றால்... ஆரம்பத்திலிருந்து நடந்த சம்பவங்கள் தான். என் கண் முன்னாலயே பெற்றோரை, சகோதரர்களை எல்லாம் முதுகு பின்னால் பேசும் போதும் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று. ஏனெனில், சம்பந்தப்பட்டவரே என்னை தடுப்பவராய் இருந்தார். ஆனால் வடிவுக்கரசி தொட்டிருப்பதோ என்னை... இதுவே என் வாய்ப்பு, இத்தனை நாட்கள் புறம் கூறியதிற்கும் எதிர்வினை ஆற்ற இதுவே சந்தர்ப்பம். இதை நழுவ விட கூடாது.

மற்றவர்கள் மனம் புண்படும் படி, சுறுக்கென பேசும் ஈன வித்தையை கற்று வைத்து கொண்டு தானே இத்தனை நாளும் வடிவுக்கரசி அத்தனை பேரையும் ஆதிக்கம் செலுத்தினாள். இதோ காட்டுகிறேன், எனக்கும் பேச தெரியும் என... எதிர்காலத்தில் இதனால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டால் கூட, அதுவே எனக்கு போதும்.

சுற்றுலா முடிவில், மொத்த கூட்டத்திற்கும் ரயிலில் return ticket conform ஆகவில்லை. அதனால் அவசர வேலையாக செல்பவர்கள், திட்டமிட்ட நாளில் செல்லுமாறும், மற்றவர்கள் ஒரு நாள் கழித்து செல்லுமாறும் அறிவுறுத்த பட்டது. அதன் படி நான் முதலிலும், என் குடும்பமும், வடிவுக்கரசி குடும்பமும் அடுத்த நாளும் பயணப்பட்டு வீடு வந்தோம். இதற்கிடையில் நான் எந்த மாதிரியான எதிர்வினையை நான் புரிய வேண்டும் என்று முடிவிற்கு வந்து விட்டேன். வடிவுக்கரசி, எப்படியும் தானாகவே முன் வந்து பேசி விடுவாள், அப்படி பேசும் போது இனி என்னிடம் பேச வேண்டாம் என்பதை hard ஆக சொல்ல வேண்டும் என்பதை நிலை நிறுத்தி கொண்டேன்.

ஊருக்கு வந்ததும், அடுத்த நாள் காலை, தான் சுற்றுலா போய் வந்த பெருமைகளை பட்டியல் போட்டு பெருமை பீத்தி கொண்டிருந்தார் நம் வடிவுக்கரசி. அந்த வழியே சவரம் செய்வதற்காக Shaving set டன் வந்த என்னிடம் பேச்சு கொடுத்தார் வடிவுக்கரசி...

“என்ன... நேத்து ஆஃபிஸ் போய்ட்டு வந்துட்டியா...?”

“ம்ம்ம்” – இந்த சமயத்தில் கொஞ்சம் இடம் பொருளை ஒரு glance விட்டேன். சாதகமாகவே இருந்தது. அடுத்த கேள்வி கேட்பதற்குள் என்னை நானே தயார் படுத்தி கொண்டேன். அடுத்த கேள்வி கொஞ்சம் நக்கல் கலந்து வரவே எனக்கு அது முழுசாதகமாக போயிற்று.

“ஒரு நாள் முன்னாடியே வந்தியே... நல்லா வசதியா இருந்ததா?”

“நீங்கெல்லாம் எங்கிட்ட பேசவே கூடாது... அப்படியே போயிரணும்... எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு என் கிட்ட பேசறீங்க... 10 பேர் முன்னாடி வெச்சு அவமானப்படுத்திட்டீங்க தான... எங்கிட்ட பேசாதீங்க...இதே வேற யாராவது நீங்க பேசினதை பேசி இருந்தாங்கனா, மூஞ்சியிலே காறி துப்பியிருப்பேன், நீங்களா போனதால அமைதியா விட்டுட்டேன்...”

20 விநாடி கூட இல்லை... தயார் படுத்தி வைத்திருந்ததை பேசியாயிற்று. கோபத்தில் வேறு எதையும் பேசி விட கூடாது என்பதும் திட்டமாய் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை... அதன் பின் எல்லாம் விளக்கம் தான்.

பக்கத்தில் இருந்த அண்ணன், அண்ணி, அக்கா, பெரியம்மா, பாட்டி எல்லோரும் என்னை தடுப்பதற்குள் பேசி முடித்து விட்டேன். என்னளவில் ஒரு பெரிய stunt ஐ முடித்து விட்ட திருப்தியில் இருந்தேன். சுற்றி நின்றவர்களுக்கு தான் தலை கால் புரியவில்லை, குய்யோ முய்யோ என அலறி ஏன் இப்படி பேசுகிறாய் என விளக்கம் கேட்டனர். எல்லோருக்கும் புரியும் வகையில் நடந்ததை விளக்கமாக சொன்னேன். எல்லாம் சொல்லி முடித்தவுடன், வடிவுக்கரசி போட்டாளே ஒரு போடு, “ஐயோ நான் அப்படி சொன்னது கூட எனக்கு ஞாபகமே இல்லை... என்னமோ மூஞ்சியிலே காறி துப்புவானுமில்ல... அப்படி என்ன டா நான் பண்ணிட்டேன்..” என சுற்றி நின்று கொண்டிருப்பவரிடம் நியாயம் கேட்க ஆரம்பத்தாள். நியாயம் கேட்க கேட்க கண்களில் பொலபொலவென அழ ஆரம்பித்தாள்...

“____ , நீங்க ‘நான் ஏன் இடைஞ்சலான்னு’ அந்த பொண்ணை பார்த்து சொல்லலை? ”   

“என்னை ____ னு கூப்படாத..”

“உங்களை கூப்படனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா... சொன்னீங்களா இல்லையா,,, அதை சொல்லுங்க”

“நான் அப்படி சொன்னதே எனக்கு ஞாபகம் இல்லை...”
“உங்களுக்கு வசதியா மறந்துட்டேன்னு சொல்லாதீங்க... நீங்க சொன்னதை அம்மா, அப்பாவும் கேட்டுட்டு தான் இருந்தாங்க.. வேணும்னா அவங்களை போய் கேட்டுக்கோங்க... நீங்க சொன்னீங்களா இல்லையான்னு ”

“யப்பா சாமி, இனி உன் சங்காத்தமே வேண்டாம்டா... ” இப்போது சுற்றி இருப்பவர்களை பார்த்து, “இனிமே நான் நம்ம வீட்டுக்கே வர மாட்டேன், இனிமே நான் எதுக்கும் வர மாட்டேன், நான் செத்துட்டுன்னு நினைச்சுக்கோங்க” கதற ஆரம்பித்தாள்.

இத்தனைக்கும் நான் ஒண்ணுமே சொல்லவில்லை. திட்ட வேண்டும் என்றால் எப்படி எப்படியோ திட்டி இருக்கலாம், ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் இருந்திருக்காது, Short and sweet ஆக இருக்க வேண்டுமே என்பதற்காக தான் மேற்சொன்ன வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நான் இனிமே உங்களிடம் பேச மாட்டேன் என்றேன். இதற்கே இப்படி பொலபொலவென கண்ணீர் வருகிறது என்றால், வடிவுக்கரசியின் பாணியிலே ரெய்டு விட்டிருந்தால் இந்நேரம் தூக்கிலே போய் தொங்கி இருப்பாள் போலிருக்கிறது. நான் அவர்களுக்கு உணர்த்த விரும்பிய விஷயமும் அதே தான்... ஒண்ணுமில்லாத இந்த உப்பு சப்பற்ற வார்த்தைகளுக்கே இப்பிடி எழவு விழுந்த மாதிரி அழுகிறார்களே, வடிவுக்கரசி வார்த்தைகளுக்கு எத்தனை மனம் சுக்கு நூறாகி இருக்கும். நல்லா அழட்டும் என்று போகிற போக்கில் விட்டுவிட்டு, நான் என் பாட்டுக்கு ஷேவிங் செய்ய ஆரம்பித்தேன். இடையில் வடிவுக்கரசி நான் இருக்கும் திசை பார்த்து சாஷ்டாங்கமாக கீழே விழுந்து இனி என்னிடம் பேச மாட்டேன் என்று சொன்னதாய் ஞாபகம், அவள் செத்தாலும் நான் சாவுக்கு வரகூடாதாம். அவள் செய்த தப்பை மறைப்பதற்காக, என் வார்த்தைகளின் கொடூரத்தை மேற்கோள் காட்டி, அனுதாபம் சம்பாதிக்கும் மும்மரத்தில் வடிவுக்கரசி தீவிர பணி ஆற்றி கொண்டிருந்தாள். நான் அதையெல்லாம் எதையும் கண்டுகொள்ளவில்லை. பசி தீர்ந்த ஒரு மிருகம் போல் உலவி கொண்டிருந்தேன்.

சற்று நேரம் கழித்து தான் என் அப்பா வந்தார், என்னவென கேட்டார். அதற்கும் சற்று நேரம் கழித்து தான் என் அம்மா வந்தார். என்னவென கேட்டு, இப்படியெல்லாம் பேசலாமா என திட்டி என்னை அந்த இடத்தை விட்டு போகும் படி செய்தனர். இதற்கிடையில் என் பாட்டியை தவிர, ஒருத்தர் விடாமல் நான் செய்தது ரொம்ப ரொம்ப தப்பு என என்னை கரிச்சு கொட்டினர். வடிவுக்கரசி என்ன செய்திருந்தாலும், நான் அது போல் ஒரு எதிர்வினை ஆற்றி இருக்க கூடாதாம். இதை சொல்பவர்கள் வேறு யாரும் இலர். என் பெரியம்மாவும், அக்காவும், அண்ணாவும். இவர்கள் மூவரும் ஒரு காலத்தில் வடிவுக்கரசி புறங்கூறலை சகித்து கொள்ள முடியாமல், துயரத்தால் வாடியதை நான் அறிவேன். ஆனால், இன்றே அவர்களே எனக்கெதிராய் நின்று வடிவுக்கரசிக்கு அனுதாபம் செழுத்தி கொண்டிருந்தனர். அதிலும் என் அக்கா சொன்னது என் காதில் விழுந்து கொண்டே இருந்தது... என்ன தான் நடந்திருந்தாலும், சூர்யா பண்ணது தப்பு தான்... இதையே மந்திரமாக திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தாள். போகட்டும்... நான் நினைத்தது நிறைவேறி ஆயிற்று. இந்த அரைவேக்காட்டு குழந்தைகளிடம் எல்லாம், நான் என் நியாயத்தை சொல்லி கொண்டிருக்க வேண்டியதில்லை என அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.

இதுவும் கூட என் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமாம். ஆனால், இது என் அக்கா சொன்னதா, என் அண்ணன் சொன்னதா என என் ஞாபகத்தில் இல்லை. இது என்ன மாதிரியான ஒரு பொது புத்தியோ தெரியவில்லை. ஒருவனுக்கு மரியாதை கிடைக்க பெற வேண்டுமென்றால், அவன் மனிதனாக பிறந்து 60 வயது வாழ்ந்து, தார் டின் போல் உருவம் வைத்து கொள்ளலே போதுமானதா... வேறு எதுவும் தேவையில்லையா... அப்படியென்றால் கோத்ரா இரயில் எரிப்பு, குஜராத் வன்முறை, நாஜிக்களின் இனவெறி, சிங்களரின் இனவெறி ஆகியவற்றிக்கும் துணை போகிறவர்கள் பெரியவர்கள். அவர்களை எல்லாம் கூப்பிட்டு பாதபூஜை செய்து மரியாதை செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா என்ன? யார் பெரியவர்கள் என்ற வரைமுறை இல்லை...?

என் வயது 25, நான் ஒரு பையன். இப்போது நான் வயதுக்கு வந்த ஒரு பெண்ணையோ, இல்லை கல்யாணம் ஆன ஒரு பெண்னையோ இப்பிடி பொது வெளியில் வைத்து அநாகரீகமாக ஆபாச கமெண்ட் அடிக்கிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். அப்போது கூட்டத்தினரின் எதிர்வினை என்னவாக இருக்கும்... கூட்டத்தினரின் எதிர்வினையை விடுங்கள், என் அக்காவின் எதிர்வினையே என்னவாக இருக்கும்... பளார் என கன்னத்திலேயே கொடுக்க மாட்டாளா என்ன? ஆனால் அதே ஆபாச கமெண்ட்டை ஒரு 50 வயது பெண்மணி அடித்தால் பொத்தி கொண்டு இருக்க வேண்டுமா? இவளை தான் ‘பெரியவங்க’ என்று மரியாதை கொடுத்து, காலில் விழுந்து காலை நக்க வேண்டுமா....

ரொம்ப நேரத்திற்கு வடிவுக்கரசிக்கு சமாதானம் சொல்லி கொண்டிருந்தார்கள். நடுநடுவே என்னை வசை பாடி கொண்டும் இருந்தார்கள். வடிவுக்கரசி அளவிற்கு இல்லையென்றாலும், பெரியம்மாவும், அக்காவும் முதுகு பின் பேசுபவர்கள் தாம். நாளை வடிவுகரசி நிலை தமக்கும் வரலாம் என்று யோசித்தோ என்னவோ, என்னை ரொம்ப நேரம் திட்டி கொண்டு இருந்தார்கள். மூணு மணி நேரம் இருக்கலாம். அந்த வழியே அவர்களை கடந்து நடந்து போன போது, நான் கேட்ட உரையாடல் இது... “அவன் ஒரு பைத்... கோவக்காரன், அவன் பேசினதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க..” என்னை பார்த்த பிறகு, பைத்தியக்காரன் என்னும் வார்த்தையை கோவக்காரன் என்று மாற்றி விட்டார்கள்...  என் மீது என்ன அப்படி ஒரு பயமோ?

இவர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்கு வருத்தம் இல்லை, என் அப்பா அம்மாவும் கூட இந்த சம்பவத்திற்கு பிறகு பேசுவதை குறைத்து ஸ்ட்ரைக் செய்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் நான் யாருக்காக பேசியிருக்கிறேன் கூட தெரியவில்லை. இது போல் குத்தி பேசி அடக்குமுறை கையாண்டு,  கூண்டில் அடைத்து வைத்திருப்பவர்களை காக்கும் பொருட்டு, கூண்டில் இருந்து தப்பி வருவதற்கு கதைவை திறந்து வைத்திருக்கிறேன்.... ஆனால் கூண்டையே வீடாக்கி கொண்டு விட்டதால், சுதந்திரம் வீண்வேலையாக தெரிகிறது இந்த பொட்டை கோழிகளுக்கு....

இந்த சம்பவத்திற்கு பிறகு, வடிவுக்கரசி என் அம்மாவிடம் வந்து, “நீ அங்கேயே இருந்தும் அவனை பேச விட்டு வேடிக்கை பார்த்த இல்ல...” என அபாண்டம் சுமத்தினார். அப்படியெல்லாம் இல்லை, நான் கடைசியாக தான் வந்தேன், அங்கேயே இருந்திருந்தால் அவனை பேச விட்டிருக்க மாட்டேன் என வடிவுக்கரசிக்கு வலிக்காமல் என் அம்மா எடுத்துரைத்ததாக கேள்வி பட்டேன்...

விஷயம் இன்னும் முடியவில்லை... மீண்டும் என் முறை வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க போகிறேன்..