Monday 2 September 2013

தலைவா - விமர்சனம்

தலைவா படம், உண்மையில் ஒரு படமே அல்ல. இந்த படத்தை விமர்சிக்கும் அளவிற்கு இதில் ஒன்றுமேயில்லை. விஜயகாந்திற்கு ஓர் ரமணா படம் அமைந்த்து போல், சிரஞ்சீவிக்கு ஓர் ஸ்டாலின் படம் அமைந்தது போல், எம்ஜிஆருக்கு பல படங்கள் ஓர் அரசியல் எண்ட்ரி கொடுக்க பயன்பட்டது போல், இயக்குனர் விஜய்யை நம்பி ‘தலைவா’ படத்தை ஓர் அரசியல் எண்ட்ரிக்காக உபயோகப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை, வழக்கம் போல் இதுவும் காமெடி பீஸானது தான் மிச்சம்.

இருந்தாலும், “தமிழ் மக்களுக்கு தலைவா படத்தை ரசிக்க தெரியவில்லை”, என்று இயக்குனர் விஜய் சமீபமாக ஓர் ஸ்டேட்மன்ட் அடித்திருப்பதால், நாமும் அவர் படத்தை இறங்கி அடிக்காமல் போனால் தெய்வ குற்றம் ஆகி விடும். ஆரண்யகாண்டம் படத்தை எடுத்த தியாகராஜன் குமாரராஜா கூட இது போல் ஸ்டேட்மண்ட்கள் ஏதுவும் போகிற போக்கில் கொடுக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

படம் ஆரம்பிப்பது ஆஸ்திரேலியாவில்… அது ஏன் ஆஸ்திரேலியா, இயக்குனர் விஜய் சுற்றி பார்க்காத இடமா, அது? என்பன போன்ற குமுறல்கள் எல்லாம் ஒர் பக்கம் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள், அதை தட்டி கேட்கவே ‘தலீவா’ டீம் ஆஸ்திரேலியாவை முற்றுகையிட்டு, ஆஸ்திரேலியவாசிகளை ரவுண்டு கட்டி குமுறிவிட்டு வந்தது என்பதை பலரால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை, இந்த பிரச்சனை எப்பவோ நடந்து முடிந்துவிட்ட பிரச்சனை. இதை ஏற்கனவே விஜயகாந்த் கூட தன் ‘விருதகிரி’ படத்தின் மூலம் ஒரு கை பார்த்து விட்டார் என்பது வரலாறு ஸ்திரம்பட பதிவு செய்துகொள்ளவில்லை என்பதனை அறிந்து இம்மேன்மையான காரியத்தை செய்து வந்துள்ளார்கள் ‘தலீவா’ டீம். இப்போது இந்த படத்தை ஆஸ்திரேலிய மாணவர்கள் சப்-டைட்டிலோடு பார்க்க முற்படுகையில், இந்திய மாணவர்களுக்கு என்னாகுமோ என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியர்களுக்கு வேறு பல உருப்படியான வேலைகள் இருக்கும் என்பதனை நாம் நம்புவோமாக…

அது என்னமோ தெரியவில்லை, எந்த படத்தில் வெளிநாட்டினை பார்த்தாலும்,  நம் வெளிநாட்டு வாழ் உறவினர்கள் தங்களது Handycam மூலம், அவர்கள் பதிவு செய்த வீடியோவை பார்க்கும் தரத்தில் தான் இருக்கிறது. பில்லா படத்தின் மூலம் மலேஷியாவை காண்பித்து ஒளிப்பதிவில் மிரட்டிய நிராவ் ஷா, இம்முறை அசிஸ்டன்களிடம் கேமிராவை கொடுத்துவிட்டு, ஆஸ்திரேலியா அழகிகளை பார்க்க கிளம்பி விட்டார் என எண்ணுகிறேன். ஜி.வி.பிரகாஷும் ‘அதே அதே’ ரகம் தான். இவர்கள் இருவரும் மிரட்டிய “ஓரம் போ ஆட்டோ” என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் படம். ட்ரிப்ளிக்கேன் ஆட்டோ பாட்டில் போட்டிருக்கும் உழைப்பில் பாதியை கூட இவர்கள் இருவரும் ‘தலீவா’ படத்தில் போடவில்லை. அதிலும் ‘தமிழ் பசங்க’ பாடலெல்லாம் அருவருப்பின் உச்சக்கட்டம். இனிமேல் எவனும் rap songs பக்கம் தலை வைத்து படுக்க கூடாது, என்ற கோபத்தில் மெட்டமைத்த பாடலா என்பது தெரியவில்லை. வெளிநாடுகளை ஷூட் செய்வதில், எனக்கு தெரிந்தவரை நிராவ் ஷா, ரவி.கே.சந்திரன் இவர்களை விட ரவிவர்மன் (வேட்டையாடு விளையாடு) தான் பெஸ்ட் என்பது என் கருத்து. அது ஏனென்று தெரியவில்லை, அதே நிராவ் ஷா உள்ளூரில் எடுத்த காட்சிகள் எல்லாம் க்ளாசிக்காக இருக்கிறது… மேஜிக்கல் மேன்…

கொரியோகிராப்பியில் தினேஷ் மட்டுமே மிளிர்கிறார். ஆனால், இன்னும் எவ்வளவு நாளைக்கு ‘வந்தனமாம் வந்தனம்’ நடனத்தையே வெவ்வேறு பாணியில் கொடுப்பார் என்று தெரியவில்லை. ஆனாலும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை பார்க்கும் போது, அவ்வளவு நேர மொக்கைகளை பார்த்த களைப்பில் மைண்ட் ரெஃப்ரெஷ் ஆகி விடுகிறது என்பதையும் சொல்ல தான் வேண்டும்…

சத்யராஜை வஞ்சித்து விட்டார்கள். அவரை ‘டான்’ஆக காட்டுவதா, இல்லை அப்பாவியாக காட்டுவதா என்பதில் ஓர் தீர்மானம் இல்லாததால், அவர் எந்த இடத்திலும் மனதில் நிற்கவே மாட்டேங்குறார். அவரை ஏதோ நல்லவராக காட்டுகிறார், ஆனால் ஆஸ்திரேலியாவில் பையனுக்கு மினரல் வாட்டர் ஃபேக்டரி அமைத்து கொடுக்கிறார் போல் காட்சியமைப்பு வருகிறது, அது யார் வீட்டு பணம் என்பதை சொல்ல தவறுகிறார்கள். புத்திசாலியாக காட்டுகிறார்கள், கடைசியில் பரிதாபத்திற்கு தனியாய் போய் போலீஸில் கைதாகிறார். பதுங்கி இருப்பது போல் காட்டுகிறார்கள், ஆனால் விஜய்யை பார்க்க மொட்டைமாடி வந்து பேசி கொண்டிருக்கும் போது பெரும்திரளான கூட்டமே அவர் அங்கு வந்ததை அறிந்து கையசைத்து, விசலிடித்து மகிழ்கிறார்கள். அவரை கொல்வதும், கைது செய்வதும் வில்லனுக்கும், போலீஸுக்கும் மிக கடினமாக இருந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் சிரிப்பு தான் வந்து தொலைக்கிறது.

சத்யராஜ் கேங் லீடர் ஆவதால், விஜய்யை ரயிலில் உட்கார்ந்திருக்கும் நாசரிடம் போய் ஒப்படைத்து ஆஸ்திரேலியாவிற்கு(!) வழி அனுப்பி வைக்கிறார் சத்யராஜ். மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ரயில் சேவை அளிக்கும் அளவிற்கு ரயில்வே துறையினர் வளர்ந்திருப்பது ஆச்சர்யமளிக்க கூடிய ஒன்றாகும். அதை விடுங்கள், அங்கு விஜய்யை பெற்று கொள்ளும் நாசர், விஜய்க்கு என்று தனியே ரயில் டிக்கெட் எடுக்க செல்வது போல் எதுவும் காட்டப்படவில்லை. அது தவிர, ஆஸ்திரேலியாவில் நடன சுற்று ஒன்றில் அநியாயமாய் கோட்டை விடும் விஜய், ஓர் பொது வெளியில் லாரி மீதெல்லாம் ஏறி ஆடி, செலக்ஷன் கமிட்டிக்கு ஐஸ் வைத்து குறுக்கு வழியில், ஃபைனல்ஸில் உள்ளே போய் வெற்றி கோப்பையை கைப்பற்றுகிறார். சத்யராஜ் இறந்ததும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று எல்லாரும் யோசித்து கொண்டிருக்கையில், மனோபாலா, பொன்வன்னன் போன்ற சீனியர் தாதாக்கள் எல்லாம் இருக்கும் போது, நான் ரௌடியாகிறேன் என்று திடீர் தாதா ஆகிறார். இப்படி பல வித் அவுட் ட்ராவல் அடிக்கும் விஜய், இளைய அரசியல்வாதிகளுக்கெல்லாம் தீவரமாக என்னவோ சொல்ல வருகிறார்… அது மட்டும் ஓரளவு புரிகிறது. ஆனால் எல்லாருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் போல் ஓர் அப்பா கிடைப்பாரா என்பதும், எல்லாராலும் சினிமா ஹீரோ ஆக முடியுமா என்பது தான் இங்கு மில்லியன் டாலர் கேள்வி.

திரைப்படத்தின் இடையே, திடீரென்று ஜீப்பேறி நானும் ரௌடி தான் என்று சத்யராஜ் இடத்திற்கு வரும் விஸ்வா, தன்னுடைய முதலான நோக்கமே தன் அப்பாவின் சாவிற்கு காரணமானவர்களை பழி வாங்குவது தான் என்று சொல்கிறார், போய் கூட்டத்துடன் போய் சட்டுபுட்டுனு வில்லனை கொன்று விட்டு வருவாரா என்று பார்த்தால், அங்கு தான் இயக்குனர் நமக்கெல்லாம் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார். கியர் இல்லாத காரை ஆர்டர் செய்து பொன்வன்னனின் பையனுக்கு கொடுத்து டிரைவர் ஆக்குகிறார், சத்யராஜ் பெயரில் ஓர் ஆஸ்பத்திரி ஆரம்பிக்கிறார், தமக்கென்று ‘பாடி கார்ட்’ பதவிக்கு ஆள் எடுத்து, அவர்களுக்கெல்லாம் வங்கியில் அக்கவுண்ட் ஆரம்பித்து, அதன் ஏடிம் கார்டு விநியோகிக்கிறார், இன்னும் பல இரண்டு மூன்று மாதங்கள் இழுக்கும் சமாச்சாரங்களை செவ்வனே செய்கிறார். ஆனால் சபதம் மட்டும் நிறைவேற்ற கிளம்புகிறாரா என்றால் அது தான் இல்லை. க்ளைமாக்ஸில் கூட ரௌடியை கொல்ல வேண்டி எல்லாம் சொரணை வந்து கிளம்பவில்லை, பொன்வன்னனை மீட்டு வரவே தடலாடியாக கிளம்புகிறார். க்ளைமாக்ஸ் வந்து தொலைகிறது. நல்லவேளையாக வில்லன் மனது வைத்து, பொன்வன்னனை கடத்தி, விஸ்வாவை தன் இடத்திற்கு வர வைத்து, பறந்து பறந்து சண்டையிட்டு செத்து மடிகிறார். இல்லையென்றால் படம் எவ்வளவு மணி நேரத்திற்கு நீண்டிருக்குமோ என்று யோசிக்கும் போதே, வயசாகி தலை நரைத்து போகும் படியெல்லாம் கற்பனை விரிகிறது.

விஜய் படத்தில் லேடீஸ் சென்டிமென்ட் இல்லாமலா… காட்டி கொடுக்கும் அமலா பாலையே தன் மேனரிசத்தால் கவுக்கிறார், குஜராத்தி அம்மணி உட்பட பலரை தன் ஏரியாவிற்கு கூட்டி வந்து தன் ஏரியாக்காரர்களை தத்து எடுத்து கொள்ள சொல்கிறார், ஒரு மணிரத்னம் பட குட்டி பாப்பாவை கூட்டி வந்து நிறுத்தி ஒரு வசனம் கொடுத்து பேச சொல்லியிருக்கிறார், பாங்கு பாலை பாதாம் பால் என நினைத்து தவறுதலாக குடித்து விடுகிறார், அப்படி விஸ்வா பாங்கு பாலை குடித்து மல்லாந்து விட்டதால் ஏகப்பட்ட பேரை காப்பாற்றாமல் போய் விடும் துயரத்தை சொல்லி குடிக்கெதிரான மறைமுக பிரச்சாரம் செய்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக விஸ்வாவை நம்பி மொத்த மும்பை நகரமும் வீட்டிற்கு தாழ்ப்பாள் கூட போடாமல் “அந்த சாமி பார்த்துக்கும்” என்ற நம்பிக்கையில் வீட்டை திறந்து போட்டு தூங்குகிறார்… அப்பப்பா… நானும் கூட திரையரங்கை விட்டு வெளியே வரும் போது, பழனியில் கோவிலுக்கு வெளியே முருகன் போட்டோ விற்பது போல், வெளியே விஜய் போட்டோ விற்கிறதா என்று பார்த்தேன், அப்படி ஒன்றும் காணோம்.

பீட்டர் ஹெய்ன் மார்க்கெட்டையே தூக்கி சாப்பிட்ட ஸ்டன் சிவா, இந்த படத்தில் சும்மா வந்து தலை காட்டி போனது தவிர ஒன்று செய்யவில்லை. மும்பையின் சாலை ஒன்றில். ஓர் சண்டை காட்சியில் விஸ்வா அடியாட்களை எல்லாம் வேகமாக போகும் வண்டி மீது மோதி தெறிக்க விடுகிறார். இது போல் 10 வண்டிகளை சேதப்படுத்தினாலும் கூட, எந்த வண்டிக்காரனும் பைசல் செய்ய வேண்டி, வண்டியை நிறுத்தி இறங்கவில்லை, அட சுத்தி நின்னு வேடிக்கை பார்க்க கூட யாரும் வரவில்லை. இந்தியாவில் தான் இந்த சண்டை நடக்கிறதா என்று சந்தேகமே வந்து விட்டது. போன வாரம், நான் என் வண்டியை ஓர் ஷேர் ஆட்டோ மீது விட்டு விட்டேன். யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை, ரொம்ப மைனரான ஆக்ஸிடன்ட் அது, ஆனாலும் 45-50 பேர் கூட்டம் போட்டு விட்டனர். ஷேர் ஆட்டோவின் back bumper மட்டும் லைட்டாக வளைந்து விட்டது. ஷேர் ஆட்டோ ட்ரைவர் இறங்கி சண்டைக்கு வந்தான். பின்னால் இருந்த நண்பனை ‘குவார்ட்டர் எவ்ளோ டா?’ என்று கேட்டேன், 70 ரூபாய் என சொல்ல, அவன் வருவதற்குள் 70 ரூபாயை எடுத்து நீட்டினேன், அவன் சந்தோஷமாக வாங்கி கொண்டு, பார்த்து போங்க தம்பி என்று ஃப்ரீ அட்வைஸ் கொடுத்து சென்றான்.

படத்தின் இடையே ஓர் வீடியோ கேசட் பிக்பாக்கெட் ஆகி விடுகிறது. அதை விஸ்வா, ரெட் பட ஸ்டைலையும், பொல்லாதவன் பட ஸ்டைலையும், துப்பாக்கி பட ஸ்டைலையும் கலந்து கட்டி கண்டுபிடித்து விடுகிறார். மும்பை பிக்பாக்கெட் பெரிய நெட்வொர்க் என்று பந்தா காட்டும், அடுத்த நிமிடமே வீடியோ கேசட்டை கண்டுபிடித்து விடுகிறார் என்பது இங்கே குறிப்பிட்த்தக்கது. இன்னொரு ஸீனில், மும்பை பிக்பாக்கெட்காரர்கள், தாதாக்கள், ரௌடிக்கள் எல்லாரையும் கூப்பிட்டு, மீட்டிங் வைத்து “நிறுத்தணும், எல்லாத்தையும் நிறுத்தணும்” என்று சொல்கிறார். கெடா மாடு போல் இருக்கும் 15-20 ரௌடிகள், பூனைக்குட்டி போல் இருக்கும் விஸ்வாவை தூக்கி போட்டு அல்லையிலே மிதிக்காமல், ஏதோ சுடுதண்ணீரை காலில் ஊற்றியது போல் குதித்து குதித்து பிக்பாக்கெட் அடிக்க பெர்மிஷன் கேட்கிறார்கள், என்ன கருமாந்திரமோ, என்று தலையே சுற்றுகிறது…

இந்த கதை மும்பையில் நடக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, தமிழகத்தில் உள்ள வடசென்னை அல்லது மதுரை, திருநெல்வேலியில் கூட எடுத்திருக்கலாம், ஆனால் இங்கிருக்கும் தலைவர்களை ஏன் பகைத்து கொள்ள வேண்டும் என்று மும்பையில் கதை எடுத்து தொலைத்திருக்கிறார்கள், ஆனாலும் சுக்கிரன் கட்டம் கட்டி அடிப்பது தான் வரலாற்று சோகம்.

அகதிகளுக்கு வாழ்வு கொடுப்பது, பிக்பாக்கெட்கார்ர்களை அடக்குவது, ரியல் எஸ்டேட்காரர்களை ஊரை விட்டு ஓட வைப்பது, இஸ்லாமியர்களுக்கு இடையிடையே சலாம் வைப்பது, டேன்ஸ் ஆடவும் தெரியும் அரசியல் பண்ணவும் தெரியும் என்று சொல்வது, ராஜ தந்திரம் செய்வது, ஒற்றுமை போற்றி கலவரத்தை அடக்குவது, பெண்களுக்கு அரணாய் நிற்பது என பல விஷயங்களை விஜய் இப்படத்தின் மூலம் ஏதோ வாக்குறுதி அளிப்பது போல் இருக்கிறது. மொத்தத்தில் படம் என்டர்டெயின் செய்வது, கலெக்ஷன் செய்வது என்றெல்லாம் இரண்டாம் நோக்கம் தான். விஜய் நல்லவர், பண்பாளர், அண்ணா வழி நடந்து அண்ணாவையே மிஞ்சுபவர், மனிதாபிமானம் படைத்தவர் போன்ற எண்ணற்ற தாக்கங்களை தமிழக மக்களிடையே இப்படத்தினை எடுத்து இருக்கிறார்கள் என வெளிப்படையாகவே தெரிகிறது.

விஜய்க்கு அரசியல் வேண்டும் என்றால், படத்தில் போட்ட சீன்களை பாதி நிஜத்தில் போட்டிருந்தால் கூட இந்நேரம் ஏதாவது ஓர் மினிஸ்ட்ரியை பிடித்து இருக்கலாம். விஜய் அரசியலுக்கு வர கூடாது, அவர் தகுதியற்றவர் என ஏதேனும் இருக்கிறதா என்ன… தாரளமாக வரலாம், பல்வேறு குற்ற பிண்ணனியுள்ளவர்களும், கிரிமனல் கேஸ்களுக்காக கோர்ட் வீடு என்று அழைந்து கொண்டிருக்கும் ஆட்களே அரசியலில் இருக்கும் போது, விஜய் அரசியல் காலடி தடம் பதிக்க அவருக்கு எல்லா வகையிலான ஜனநாயக உரிமையும் இருக்கிறது. இதை அவர் துள்ளாத மனமும் துள்ளும் கையோடு பண்ணியிருந்தால் கூட அட்லீஸ்ட், இந்நேரம் எதிர்கட்சியில் அமர்ந்திருப்பார். ஆனால் அந்த தைரியம் அவரிடத்து வரவில்லை, படங்களின் மூலம் போதிய முத்திரை பதித்து விட்டு, பிறகு அரசியலில் இறங்கலாம் என்று காத்திருந்து காத்திருந்தே காலங்கள் போகிறது… இப்படி self confidence, guts, boldness எதுவும் இல்லாத ஓர் ஆளை எதற்கு தேர்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். விஜய்யின் நடவடிக்கைகளும் அதற்கேற்றாற் போல் தான் இருக்கிறது.

மொத்தத்தில் தலீவா படம், Ktv யில் சூப்பர் சீன்ஸ் பார்த்தது போல் ஓர் காக் டெயில் அனுபவமாக இருந்தது. தேவர் மகன், சுந்தரபாண்டியன், பாய்ஸ், சர்கார், தலைநகரம், தேவதையை கண்டேன், ஜோதா அக்பர், megamind, புன்னகை மன்னன், துப்பாக்கி, புதிய பறவை, ஆதிபகவன், நாயகன், பொல்லாதவன், ரெட், விருதகிரி போன்ற எண்ணற்ற சரக்கை கலந்து அடித்தாலும் ஏன் போதை ஏறவில்லை என்பது தான் புரியாத புதிர்….