Friday 1 March 2013

ஸ்வாதி ராகவ் -7



Appointment order ல சொன்ன தேதியில போய் அந்த ISCOPE Tech கம்பெனியில போய் வேலைக்கு சேர்ந்தோம். என்னோடு சேர்த்து 11 பேர் வேலைக்கு சேர்ந்திருந்தாங்க. எங்க எல்லாரையும், அந்த Officeலேயே சின்னதா இருக்கிற ரூம்ல காத்திருக்க வைச்சாங்க. அன்னைக்கு மதியம் வரைக்கும் அங்கே தான் காத்து கிடந்தோம். 12.30 மணிக்கு தான் ஒருத்தன் உள்ளே வந்து, எங்களை எல்லாம் Welcome பண்ணான். அதுக்கப்புறமா 11 பேர்ல 6 பேருக்கு மட்டும் Cabin கொடுத்து உட்கார வைச்சாங்க. எங்க 5 பேரை, அடுத்த ரெண்டு நாளும்கூட அதே ரூம்ல தான் உட்கார வைச்சாங்க. ஒரு வேலையும் இல்லாம, போவோம், உட்காருவோம், வருவோம்னு இருந்தது. வேலை இல்லாம் கிடக்கிறோமேன்னு, பணத்தை புரட்டி இங்க வந்தா இங்கயும் வேலை இல்லாம சும்மா இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்தது. யார் யாருக்கு எந்த ‘டிவிஷன்’னு கூட சொல்லாம எங்களை வைச்சிருந்தாங்க.

ஒரு வேலையும் இல்லைன்னாலும் நாங்க கரெக்ட் டைம்க்கு வர்றோமா, போறோமான்னு பார்த்து, லேட்டா வர்றவங்களை காச் மூச்னு கத்தனாங்க. நாங்க 5 பேரு பேசறது, கொஞ்சம் சத்தம் வெளியே போய்ட்டாலும் சரி, உள்ளே வந்து நின்னுருவான் அந்த எம்.டி. 5 நிமிஷத்துக்கு தாளிச்சு தள்ளிட்டு போவான். தூங்கினாலும் போச்சு, அதுவும் மதியம் சாப்பிட்டு வந்துட்டு, அந்த ஏ.சி ல தூங்காம இருக்கிறத்துக்கு ரொம்ப கஷ்டப்படுவோம். அந்த மாதிரியான சமயத்துல எங்களுடைய ஒரே ஆறுதல் ’காபி மெஷின்’. ரொம்ப மட்டமான காபியா தான் இருக்கும். குடிக்கும் போதே சுடு தண்ணி எது, பால் பவுடர் எது, சர்க்கரை எதுன்னு தொண்டையை கடந்து போற வரைக்கும் தனித்தனியா தெரியும். இருந்தாலும் அந்த காபியையும் ஒரு நாளைக்கு அரை டஜனை உள்ளே தள்ளுவோம். காபி சீக்கரம் சீக்கரம் தீர்றதை பார்த்துட்டு, காபி கம்மியா குடிக்க சொல்லி Circularஏ போட்டுட்டாங்க. சரின்னு வெளியே போய் குடிக்கலாம்னா, வெளியேவும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க. காலைல உள்ளே வந்துட்டா, ஆபீஸ் முடிஞ்சதுக்கப்பறம் தான் வெளியே போணும்னு இங்க மட்டும் தான் கேள்வி படறேன்.

வேலைக்கு சேர்ந்த 3-வது நாள் தான் எங்களுக்குன்னு cabin கொடுத்தாங்க. அதுலயும் ஒரு 2 பேரை, ஒரே cabinல அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்னாங்க. நல்லவேளையா எனக்கு ஒரு தனி cabinஅ, பில்டிங்கோட கார்னரா பார்த்து கிடைச்சது. இந்த 2 நாள், உட்கார இடம் இல்லாம் இப்ப மட்டும் எப்படி டா இடம் கிடைச்சதுன்னு விசாரிச்சா, கொஞ்சம் பேரு வேலையை விட்டுட்டு போய்ட்டதால தான் இந்த இடமே கிடைச்சதாம், இல்லைனா அன்னைக்கும் அந்த குட்டி ஹால்ல தான் உட்கார்ந்து இருந்திருப்போம்.  

போய் ஒரு 6 நாள் கழிச்சு தான், ஒரு மிட்டிங் போட்டு கம்பெனி நிலைமைய சொன்னாங்க. என்ன விஷயம்னா அவங்களுக்கு தற்சமயம் Project எதுவும் இல்லைன்னும், project-க்காக முயற்சி பண்ணிட்டு இருக்கிறதாகவும் சொல்லி, அது வரைக்கும் எங்க எல்லாரையும் படிச்சு வைச்சிக்க சொன்னாங்க. TCS கம்பெனியே ப்ராஜக்ட் இல்லாம பல பேரை இப்படி தான் ‘பெஞ்ச்’ல உட்கார வைச்சிருக்கறதாகவும், அதனால ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம்னும் தைரியம் சொன்னாங்க. இந்த கம்பெனிக்கு வேணும் வேணும்னு ஏன்டா வந்து சேர்ந்தோம்னு ஆய்டுச்சு, சரி, என்ன பண்றது, பணத்தை கட்டியாச்சு, இனி எல்லாம் தலையெழுத்துன்னு வேலைக்கு போய்ட்டு இருந்தோம்.

காலையில போவோம், attendance கையெழுத்து போடுவோம், எல்லோருக்கும் ஒரு “Hi..” சொல்லிப்போம், Internet open பண்ணி படிக்க உட்காருவோம், காபி குடிக்க போவோம், Facebook போவோம், சாபிட போவோம், மறுபடியும் பழைய மாதிரி வந்து கம்ப்யூட்டரை நோண்டிகிட்டு இருப்போம், 6 மணி ஆயிடும் வீட்டுக்கு வந்துருவோம்.

இதுக்கு நடுவுல அந்த எம்.டி ஒரு நாளைக்கு 5 முறையாவது, பொண்ணுங்களை உள்ளே கூப்பிட்டு பேசி அனுப்புவான். அப்படி என்ன பேசினாங்கன்னு விசாரிச்சா, வெட்டி கடலையா இருக்கும். Sunday எல்லோரும் வாங்க, treat வைக்கிறேன்லாம் கூப்பிட்டு அந்த பிள்ளைங்களை கலவரப்படுத்தினான். நடுவுல M.E படிக்க சொல்லி கேன்வாசிங் வேற பண்ணுவான். அவன் லண்டன், துபாய், அமெரிக்காலாம் போய்ட்டு வந்ததாகவும் வார்த்தைக்கு மூணு முறை பீத்திகிட்டதாகவும், ஏதாவது டவுட்னா போன் பண்ண சொன்னதகவும் தினமும் ஏதாவது வழிஞ்சுகிட்டு இருப்பான். கரிச்சு கொட்டுவாங்க.

இதுக்கு நடுவுல, எங்களுக்கு சேர்ந்த Employees ஓட நல்லா பேசி பழக ஆரம்பிச்சோம். அவங்க சொல்லி தான் அந்த கம்பெனியை பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டோம். இந்த கம்பெனி ஆரம்பிச்சே 8 மாசம் தான் ஆகுது. ஆரம்பத்துல என்னமோ, 3 project பிடிச்சி செஞ்சது என்னமோ உண்மை தான், ஆனா அதுக்குப்பறம் 6 மாசத்துக்கு மேல ஆகியும் எந்த project-ம் வந்த பாடில்லை. அது மட்டுமில்லாம, இந்த கம்பெனியில சேர்ந்த ஒவ்வொரு Fresher-ம் பைசா கொடுத்து தான் வந்திருக்காங்க. வெளியில நீங்க எவ்வளவு கொடுத்தீங்களோ தெரியாது, ஆனா கம்பெனிக்கு வர்றது 1 லட்சம் மட்டும் தான். அப்படி சொன்னதை கேட்டவுடனே, எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. 50000 ரூபாயை வெறும் கன்சல்டன்சிக்கு மட்டுமே நாமே தண்டம் அழுந்துருக்கோம்னு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். என் கூட சேர்ந்திருந்த நிறைய பேரு, என்னை மாதிரியே தான் வருத்தப்பட்டாங்க. அதுலயும் என் கூட சேர்ந்திருந்த ஒரு பொண்ணு, 2 லட்சம் கொடுத்து உள்ளே வந்திருந்துச்சு, அதெல்லாம் வாழ்க்கையையே வெறுத்துடுச்சு. இங்க இருக்கிற Experienced candidates ஒரு 10-15 பேரு மட்டும் தான் காசு கொடுக்காம உள்ளே வந்தவங்க. சம்பளம் ஏதோ சுமாரா வாங்கறாங்கன்னாலும், அவங்களுக்கும் இங்க ஏண்டா வந்தோம்னு தான் இருந்தாங்க. அவங்க ரொம்ப தீவரமா அடுத்த கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. அப்படி தாவி போறவங்க ஸீட்ல தான் நாங்க ஒவ்வொருத்தரா உட்கார்ந்துட்டு இருந்தோம்.

என்ன தான் கம்பெனி நஷ்டத்துல போனாலும், அந்த மாச சம்பளத்தை கரெக்டா கொடுத்தாங்க. 12500/-. இந்த மாதிரி 12 சம்பளம் வாங்கினா தான் நான் போட்ட காச எடுக்க முடியும். ஆனா அதுவரைக்கும் கம்பெனி இருக்குமா அப்படிங்கறது தான் எங்க எல்லோருடைய கேள்விக்க்குறியாய் இருந்தது. இப்ப கொடுக்கிற சம்பளம் எல்லாம் நாங்க கொடுத்த பணத்துல இருந்து தான் கொடுத்துட்டு இருக்காங்கன்னு யாரும் சொல்லாமலே எங்களாலே தெரிஞ்சிக்க முடிஞ்சது. நாளைக்கே இந்த பணமெல்லாம் தீர்ந்துடுச்சுன்னா, என்ன பண்ண போறான், ஒரு வேளை கம்பெனி இழுத்து மூட போறங்கன்னு முடிவு பண்ணா, எங்க பணத்தையெல்லாம் கொடுத்துட்டு மூடுவானா, இல்லை சுருட்டிட்டு ஓடிடுவானா… எதுவுமே புரியாம கிடந்தோம்.

Google போய் Iscope technology ன்னு கொடுத்தாலே, அது ஃப்ராடு கம்பெனி, ஏமாந்துராதீங்கன்னு வரிசையா லிங்க்கா கிடந்தது. அதை பத்தி என்னன்னு எம்.டி கிட்ட விசாரிச்சி இருக்காங்க, அது வேற , இது வேறன்னு ஜென்மம் மழுப்பிச்சு. கொஞ்ச நாள்லயே கம்பெனிக்கு பேர் மாத்த போறோம், நல்ல பேரா இருந்தா சொல்லுங்கன்னு எம்.டி வந்து நின்னான். இது மாதிரியெல்லாம் ஒரு கம்பெனி இருக்குமான்னு, ரொம்ப நொந்துட்டேன். ஆளாளுக்கு ஒரு பேரை சொன்னாங்க. கடைசியில அதுவா I-S infotech நல்லாயிருக்கான்னு கேட்டு, அது தான் வைக்க போறேன்னு ரூமுக்குள்ள போயிடுச்சு. இந்த கருமத்துக்கு எங்க கிட்ட எதுக்கு கேட்கணும் கேட்காமலேயே இருந்து தொலைய வேண்டியது தானே…

எங்களை சேர்த்து விட்ட கன்சல்டன்சிக்காரனுக்கு ஃபோன் அடிச்சு, கம்பெனியை பத்தி சொல்லி, சுத்தமா சரியில்லைன்னு பணத்தை திருப்பி கேட்டேன். அதெல்லாம் தரமுடியாது, கம்பெனி நல்லா தானே போய்ட்டு இருக்குன்னு திமிரான பதில் வந்தது.

எங்க கம்பெனியோட websiteஐ பார்த்தாலே, கேவலத்துக்கு இருக்கும். ஏதோ மார்க்கெட்டிங் கம்பெனியோட website page மாதிரி இருக்கும். ஒரு software கம்பெனி website மாதிரியே இருக்காது. இப்ப புதுசா கம்பெனி பேரை வேற மாத்திட்டாங்களா, வெப்ஸைட்டையும் மாத்துங்கடான்னு எம்.டி சொல்லிட்டாரு. HCL websiteஐ reference வைச்சு, அதே மாதிரி ஒரு புது வெப்ஸைட்டை உருவாக்க சொன்னாங்க.

கம்பெனி வந்து அது தான் முதல் வேலை வேறயா… ஆளாளுக்கு எடுத்து செஞ்சாங்க. ஒவ்வொரு வேலையையும் டீம், டீம்மா பிரிச்சு உட்கார்ந்து ராப்பகலா ப்ரோக்ராம் அடிக்க ஆரம்பிச்சோம்.

அப்ப Contact us பகுதியில போடறதுக்காக எங்க சென்னை அட்ரஸ் மட்டுமில்லாம, ஒரு அமெரிக்க அட்ரஸ்ஸையும் கொடுத்தாங்க. ஒரு பையனோட மாமா, அமெரிக்காவுல அந்த அட்ரஸை தேடி பார்த்துட்டு, அப்படி ஒரு அட்ரஸ்ஸே இல்லைன்னு அடிச்சு சொல்லிட்டாரு. அமெரிக்காவுலயும் ஒரு கம்பெனி இருக்கிறதா போட்டுகிட்டு MNC கம்பெனின்னு சொல்லி எங்களை மாதிரியே பத்து பேரை ஏமாத்தலாம்னு திட்டம். அந்த வெப்ஸைட் பில்டிங்கை, கொடுத்த ஒரு வாரத்துலயே, கில்லியா முடிச்சுட்டாங்க.. நாங்க உருவாக்கன website பார்த்து தான் நாளைக்கு ஒரு கூட்டம் ஏமாற போகுதுன்னு யோசிச்சாலே, ஏன்டா அப்படி ஒரு வேலையை செஞ்சி கொடுத்தோம்னு இருக்கும்.

ஒரு நாள் திடீர்னு, websiteல vacancy இருக்குனு, carrers columnல போட சொன்னாங்க. நிறைய கன்சல்ட்டன்சிக்காரங்க வர்றதும் போறதுமா இருந்தாங்க. இந்த முறை ரேட்டு 1.25 லட்சம்னு, காத்து வாக்குல எல்லாரும் பேசிகிட்டாங்க. நமக்கே இங்க வேலை இல்லையே, இன்னும் அவங்க வந்து என்ன பண்ண போறாங்க, முதல்ல உட்கார இடம் ஏதுன்னு எங்க எல்லாருக்கும் குழப்பம்.

Interview அன்னைக்கு வசவசன்னு பயங்கர கூட்டம். 3 நாளா interview நடந்து முடிஞ்சது. மொத்தம் 40 பேரை எடுத்திருக்காங்கன்னு சொன்னாங்க. காசு கொடுத்தவங்களை மட்டும் தான் எடுத்து இருக்காணுங்க. அப்படி இருக்கறவங்க, எதுக்கு மத்தவங்களை interviewக்கு கூப்படணும். கேட்டா கம்பெனி ஃபேமஸ் ஆகனுமாம். தலையெழுத்துன்னு நினைச்சிகிட்டோம். அவங்க எல்லாரையும் 15-வது நாள் வந்து சேர்ந்துக்க சொல்லி ஆர்டர் டைப் பண்ணி கொடுத்திருந்தாங்க, இதுக்கு நடுவுல ஏதோ professional-ஆ போய்க்கிட்டு இருக்கிற கம்பெனி மாதிரி எங்களுக்கு Salary account, CUG Sim எல்லாம் ஏற்பாடு பண்ணி கொடுத்தாங்க.

எப்பவும் போல ஒரு திங்கட்கிழமை, வேலைக்கு போனா ஆபீஸ் பூட்டி கிடந்தது. யார்யாருக்கோ போன் பண்ணாங்க, எல்லோருடைய போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது, ஒவ்வொண்ணு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்னு வந்தது. யாருக்கும் என்ன பண்றதுன்னே தெரியலை. பொண்ணுங்க எல்லாரும் அழ ஆரம்பிச்சுட்டாங்க, பசங்கள்ள கொஞ்ச பேரு கூட கண்ல தண்ணிய விட்டுட்டு மூலைல உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் எங்கள்ல ஒரு பையன் எப்படியோ யார் யாருக்கோ போன் போட்டு எம்.டியோட பொண்டாட்டி நம்பர் வாங்கி, எம்.டி கிட்ட கொடுக்க சொல்லி பேசினான். எம்.டி , ஜஸ்ட் லைக் தட், இன்னைக்கு லீவுப்பா, போய்ட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்லிட்டான். எங்களுக்கு அதை நம்பறதை தவிர வேற வழியில்லை. அந்த நாள் வீட்டுக்கு போய்ட்டு, அடுத்த நாள் வந்தா, அடுத்த நாளும் ஆபீஸ் பூட்டியே கிடந்தது. அடுத்த நாளும் எல்லா நம்பரும் நாட் ரீச்சபள். நேத்து போன் பண்ண நம்பரும் சேர்த்து நாட் ரீச்சபள். போலிஸுக்கு போறது பத்தி யோசிச்சோம், இன்னும் ஒரு நாள் பார்க்கலாம்னு பொண்ணுங்க சொன்னதால, அன்னைக்கும் திரும்ப வீட்டுக்கு போய்ட்டோம். அடுத்த நாளும் பூட்டி தான் இருக்கும்னும் தெரிஞ்சும், போய் பார்த்தோம். பூட்டியே கிடந்தது. ஆனா, நேத்து கம்பெனிக்குள்ள இருந்த நிறைய கம்ப்யூட்டர்கள், டேபிள், சேர்கள் இன்னைக்கு இல்லை, ஆபிஸ்ல கண்ணாடி கதவுங்கறதால தான் அதையும் பார்க்க முடிஞ்சது. அப்புறம் தான் போய் செக்யூரிட்டியை விசாரிக்கணும்ங்கற எண்ணமே வந்துச்சு.

அவனை போய் விசாரிச்சதுல, ஞாயிற்றுகிழமையே பாதி சாமானங்களை வந்து எடுத்துட்டு போய்ட்டதாவும், நேத்து ராத்திரி 8 மணி போல இன்னும் கொஞ்சம் சாமானங்களை எடுத்துட்டு போனதாகவும் சொன்னார். ஞாயிற்றுகிழமை எடுத்துட்டு போனது, வெளியே இருந்து பார்த்தா தெரியாத மாதிரி இடங்கள்ள இருந்து எடுத்துட்டு போனதால, எங்களால கண்டுபிடிக்க முடியாம போய்டுச்சு. ஆனா நேத்து எடுத்த போது, கண்ணுக்கு தெரியற இடத்துல இருந்து பொருலை எடுத்ததால தான் கண்டுபிடிக்க முடிஞ்சது. இந்த விஷயத்தை தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, போலீஸுக்கு போறதுன்னு ஒட்டு மொத்தமா முடிவு பண்ணோம். அதுவும் கமிஷ்னர் ஆபிஸுக்கே போய் நேரடியா புகார் கொடுத்தா தான் மனசு ஆறும்னு, ஆளாளுக்கு பஸ், ஆட்டோன்னு பிடிச்சு, 90 பேரும் போய் கமிஷ்னர் ஆபிஸ் முன்னாடி போய் நின்னோம். எல்லோரையும் உள்ளே வர விடலை. எங்க புகாரை ஒரு பேப்பர்ல எழுதி அத்தனை பேரும் கையெழுத்து போட்டு 2 பேரை மட்டும் உள்ளே வர சொன்னாங்க. எங்க சைட்ல இருந்து, ஒரு பொண்ணும் ஒரு பையனும் போய் கமிஷ்னரை நேரா பார்த்து விஷயத்தை சொல்லிட்டு வந்தாங்க. மீடியா ஆட்களும் என்ன விஷயம்னு கேட்டு, போட்டோ எடுத்துட்டு போனாங்க. அடுத்த நாள் பேப்பர்ல கூட இரண்டாவது பக்கமே விஷயம் வந்தது, ஆனா இன்னமும் நல்ல செய்தி தான் எதுவும் வராம கிடக்கு  

மொத்தமா 70 லட்சத்துக்கு மேல சுருட்டிட்டு ஓடுனதா பேப்பர்ல செய்தி போட்டுருந்தாங்க. அந்த ஒரு நாள் அந்த நியூஸ் வந்ததோட சரி, அதுக்கப்புறம் எந்த ஒரு follow up நியூஸும், மீடியா கொடுக்கலை.

நான் என்னோட கன்சல்டன்சிக்கு போன் பண்ணேன். நான் சொல்றதுக்கு முன்னாடியே அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு. அவன் கம்பெனிக்கு கொடுத்த 1 லட்சம் போக, மீதி 50000 ரூபாயை தந்திடறதா சொன்னான். அதெல்லாம் முடியாது, எனக்கு முழு பணமும் வேணும்னு சண்டை போட்டேன். அவன் அதுக்கெல்லாம் அசர்ற ஆளா இல்லை. சரி, முதல்ல 50000 பணத்தை தரட்டும், மித்ததை அப்புறம் வாங்கிக்கலாம்னு பொறுமையா இருக்கேன். இன்னமும் ஒரு ரூபா அவன் தரலை. போன் பண்ணும் போதெல்லாம், ரொம்ப பணக்கஷ்டம், 1 வாரம் அவகாசம் வேணும்னே சொல்றான்.

எதுக்கும் கம்பெனி போய் பார்க்கலாம்னு, நாங்க ஒரு 4 பேரு மட்டும் ஒரு நாள் போனோம். கம்பெனியோட கண்னாடி கதவுல பெருசா ஒரு கீறல் இருந்தது. யாரோ, அடிச்சு உடைக்க முயற்சி பண்ண கீறல்னு நல்லாவே தெரிஞ்சது. கம்பெனியோட கண்ணாடி Name boardஐயும் சல்லி சல்லியா நொறுக்கி இருந்துருக்காங்க. நாங்க 4 பேரும், கம்பெனி முன்னாடி போய் நின்ன கொஞ்ச நேரத்துலேயே, அந்த காம்ப்ளெக்ஸ் செக்யூரிட்டிகள் 3-4 பேரு ஓடி வந்து, எங்களை அங்கிருந்து துரத்த ஆரம்பிச்சாங்க. ஆபிஸை இதுக்கு முன்னாடி நிறைய பேரு கூட்டமா வந்து அடிச்சதாகவும், பெரிய பிரச்சனை ஆகிட்டதால இனிமே இங்க யாரையும் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க, அது மட்டுமில்லாம ஆபிஸையும், வேற ஒருத்தருக்கு வாடகைக்கு விடறதுக்காக அட்வான்ஸ் வாங்கிட்டதாகவும் சொன்னாங்க.

பணத்துக்கு பணம், வேலை, நேரம், நாள், அலைச்சல், சந்தோஷம் எல்லாமும் என் பேராசையால வீணா போய்டுச்சு. ஆனா இவ்வளவு ஆனதுக்கு அப்புறமும், என் வீட்டுல உள்ளவங்க என்னை ஒரு வார்த்தை கூட சொல்லை, வருத்தப்பட்டாங்களே தவிர ஏன்டா இப்படி அறிவில்லாம் பண்ணேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லை. நான் ஒழுங்கா படிச்சிருந்தா இதுல எந்த பிரச்சனையும் நான் பார்த்திருக்க தேவையில்லை. ஆனா என் வீட்டுல உள்ளவங்க என்னை திட்டாம, என்னோட விதியை தான் திட்டுனாங்க. அவங்க அப்படி என்னை திட்டாம போனது தான், எனக்கு நெஞ்சு அடைக்க வைக்குது…..”

அதற்கு மேல் வார்த்தைகள் வலுவிழந்து கண்ணீர் அதன் மொழிகளை பேச எத்தனித்த போதே, அன்பு அதை கை கொண்டு தடுத்துவிட்டான். உணர்ச்சிகள் மொத்தமும் அவன் கட்டுக்குள் இருந்தாலும், கண்கள் மட்டும் எப்படியோ கட்டுபாடு இழந்ததை, அன்பு அவனது கையை, அவன் விழியருகே எடுத்து சென்ற போது தான் மற்றவர்கள் பார்த்தனர்.

”ரோஹித்தும், நிர்மலாவுக்கும் இப்போதைக்கு வேலை இல்லாம இருக்கு, என்னை மாதிரி எந்த அவசரத்துலயும் யாரும் ஆழம் தெரியாம காலை விட்டுட கூடாதுங்கறதுக்காக தான் இதெல்லாம் சொல்றேன். நிர்ம்லா என் கிட்ட பல முறை என்னோட கன்சல்டென்சில சொல்லி வேலை வாங்கி தர சொன்ன போது வேண்டாம்னு சொன்னதுக்கு இது தான் காரணம்”.

ராஜீவ் தன் ஆழமான பார்வையால், அன்பை பார்த்தான். வார்த்தைகள் உதவ முன் வராத காரணத்தால் அவனது இரு கையையும் பற்றினான். அன்பு அவனது மெல்லிய புன்னகையை வரவழைத்து, கையை விடுவித்து கொண்டான்.

அந்த தருணத்தில் தான் ஸ்வாதி, “நாமெல்லாம் சேர்ந்து ஏன் ஓர் பிஸனஸ் பண்ண கூடாது…. ” என கேட்டாள். நிர்மலாவும் அவள் பங்குக்கு ஹோட்டல் வைப்பதை பற்றி யோசனை சொன்னாள். அது வேலையாட்களை எதிர்பார்த்து இருக்க வேண்டியதன் அவசியம் சொல்லி, “ஒய் நாட் புக் ஷாப்….?” என்றாள். யாருக்கும் அதில் ஆட்சேபணை இருக்கவில்லை. எல்லோரது சம்மதங்களும் தன்னிச்சையாய், தெரிவித்தது போல் இருந்தன. சூழ்நிலையின் மாற்றம் விரும்பியோ என்னவோ, ரோஹித் “Lets celebrate” என்று சொல்ல, ஸ்வாதி சற்று தொலைவில் இருந்த ஐஸ்கிரீம் பார்லரை காட்ட, எல்லோரும் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.


                                           (தொடரும்…..)

No comments:

Post a Comment