Saturday, 2 March 2013

ஆன்மீகமா ஐயையோ...முதலில் எல்லம் ஆன்மீகமும் பக்தியும் வேறு வேறு என்ற அடிப்படையான விஷயம் கூட யாருக்கும் தெரியாத அளவு ஆன்மீகம் சாமன்யர்களிடம் அந்நியப்பட்டு இருந்தது. ஆனால் இப்போதோ ஆட்டோக்காரர், வங்கி அலுவலர், பள்ளி ஆசிரியர், பேக்கரி கடைக்காரர், பஸ் கண்டக்டர், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஆன்மீகத்தை விரல் நுனியில் வைத்துள்ளனர். பஸ்ஸிலோ, இரயிலிலோ தனியாக மாட்டினால் 3 மணி நேரம் வரை கூட ஓயாத சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதற்காகவே பயணங்களின் போது ஹெட் ஃபோனை பாட்டு கேட்க வில்லை என்றாலும் கூட சும்மானாலும் போட்டு வைத்து கொள்ள வேண்டியது. எல்லோருக்கும் இல்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் 30% மக்களுக்காவது ஆன்மீகத்தை பற்றி ஒரு மணி நேரம் வகுப்பு எடுக்கும் அளவிற்கு விஷயங்கள் தெரிந்திருக்கிறது. கோவிலில் தான் ஆன்மீகம் என்ற நிலை போய், அவரவர் வீடுகளில் டி.வி.டி, டி.வி.டிக்களாக கார்ப்பரேட் குருமார்களின் ஆன்மீக சொற்பொழிவை அடுக்கி வைத்துள்ளனர். நினைத்த நேரத்தில், எத்தனை முறையாயினும் யாராலும் ஆன்மீகத்தை அணுக முடிகிறது. ஆனால் இருந்தும் நாடும், மாநிலமும் அப்படியே இருக்கிறதே, அது மட்டும் எப்படி? மாநிலம் அளவிற்கு இல்லை என்றாலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரம், மேல்மருவத்தூர், பிடதி ஆழியார், பாண்டிச்சேரி, பெங்களூர் மக்கள் பகுதி மக்களாவது இந்நேரம் அமைதியின் திருவுருவமாக அரும்பியிருக்க வேண்டுமே… ஒன்றும் மாறாமல் அப்படியே இருப்பதற்கு என்ன காரணம்…!

நான் முதன்முதலில் ஆன்மீகத்தை கைகுலுக்கி கொண்டது முதல் எனக்கும் ஆன்மீகத்திற்கும் ஏக பொருத்தம். நான் ஆறாவது முடித்து, ஏழாவது தொடங்கிய சமயம் ஒரு circular வந்தது. அதாவது பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவருக்கும் தியான வகுப்பு எடுக்கப்படும், மாலை 03.45ல் இருந்து 04.00 மணி வரை தியான வகுப்புக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்கள். எங்கள் வாழ்விலே இது போல் தியான வாய்ப்பு எல்லாம் கதவை தட்டியது, அது தான் முதல் முறை. அப்போதெல்லாம் தியானம் கற்று கொள்ள வேண்டும் என்றால், இமய மலையில் சாமியாருக்கு கூஜா தூக்கி கற்று கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தேன். இதையே தான் பராமார்த்த குரு போல், பல கதைகளில் படித்திருந்ததாலும், எனக்கு அது நம்ப எளிதாக இருந்தது. இப்போது, கூஜா ஏதும் தூக்காமல், சாமியாரிடமே ஓராண்டு காலம் தங்கி இருந்து பணிவடைகள் எல்லாம் செய்யாமல் தியானம் கற்று கொள்ள போகிறோம் என்ற பரவசம் இருந்தாலும், மிகவும் கூச்சமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் வருடத்திற்கு 50 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றதால் அசாதரணமாய் இருந்தது. என் உடன் படிக்கும் மாணவர்களுக்கும் அப்படி தான் இருக்க வேண்டும். என்றாலும், ஒரு சிலருக்கு தியானம் யோகா போன்றதெல்லாம் வேடிக்கையான விஷயமாக இருந்ததால், தியான வகுப்புக்கு பெயர் கொடுப்போர் எல்லாத்தையும் அநியாயத்திற்கு கலாய்த்து கொண்டிருந்தனர். அதன் காரணமாக நானும் பெயர் கொடுக்க தயங்கினேன். அவர்களுடன் சேர்ந்து நானும் என் சக மாணவர்களை, தியானம் கத்துக்கறவங்கல்லாம் சாமியாராய் போய்ட போறீஙக என்று நக்கலடித்து கொண்டிருந்தேன். பெயர் கொடுக்க கடைசி தேதி வரை விளையாட்டாகவே இருந்தேன். பார்த்தால், என்னுடன் சேர்ந்து நக்கல் அடித்து கொண்டிருந்தவன் எல்லாம் பெயர் கொடுத்து விட்டு இருந்தான்.

என்ன விஷயம் என்று விசாரித்தால், க்ளாஸ்ல உட்கார்றதுக்கு அங்கயாவது போய் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம் என்று ஒரு பலே தகவலை சொன்னார்கள். அதனால் நானும் 50 ரு செலுத்தி தியானவாதி ஆக தயாரானேன். பள்ளியில் இருந்த 10th standard class room ஷிப்ட் பண்ணி அதை meditation hall ஆக்கினார்கள். ஆனால், வழக்கம் போல் 4 மணி வரை வகுப்புகள் நடந்து கொண்டே தான் இருந்தன, எங்களை யாரும் காப்பாற்றி தியான வகுப்புக்கு அழைத்து போகவில்லை. அதனாலே எப்போது டா தியானம் கற்று கொள்ள போகிறோம் என்று ஒரே ஒரே ஏக்கம் ஏக்கமாக இருந்தது. அரையாண்டு பரீட்சையே முடிந்த பின்னாலும் கூட யாரும் தியான வகுப்பு பற்றி மறு பேச்சு எடுக்கவில்லை. காசு வாங்கி கொண்டு போனதோடு சரி. இதை பற்றி எங்களது பெற்றோர்கள் parents meetingல் சில குமுறு குமுறியதும், அடுத்த சில நாட்களிலே விடையும் கிடைத்தது. ஆனால் நாங்கள் யாரும் அதை ரசிக்கவில்லை. சொன்னபடி 03.45 முதல் 04.00 மணி வரை இல்லாமல், 04.00 மணிக்கு பிறகு ஒவ்வொரு வகுப்பு வாரியாக attendance வரிசைப்படி மாணவர்களை கூப்பிட்டு சொல்லி கொடுத்தனர். அதை அவர்கள் கற்று 04.00 மணிக்கு பிறகு வீட்டிற்கு போய் தவறாமல் செய்ய சொல்லி வலியுறுத்தினர். என் பெயர் S வரிசையில் வேறு வருகிறதா முழு ஆண்டு தேர்விற்கு ஒரு வாரம் முன் தான் என் முறை வந்தது. எங்கள் வகுப்பிலிருந்து 5 பேர் போனோம். முதலில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லி கொடுப்பதாய் இருந்தது, பின் vice principal தனி கவனம் எடுத்து சொல்லி கொடுப்பதாய் மாறி போனது. ஏனெனில் தியான வகுப்பு யோசனையே அவர் தான் கொடுத்தது. அதனால் அவரே தியான ஆசிரியர் ஆக வேண்டிய நிர்பந்தம். அதனால் அவரது ஆபீஸுக்கு சென்றோம். ஒவ்வொருவராய் உள்ளே கூப்பிட்டு எப்படி தியானம் செய்வது என்று சொல்லி கொடுத்தார். எனக்கு முன்னாடி போய் வந்தவன் எல்லாம். வெளியே வந்து எங்கள் யார் கூடவும் பேசாமல், கண்ணை மூடி யோகி போல் உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பித்து விட்டான். உள்ளே என்னா டா சொன்னாங்க என்று கேட்டாலும் கூட பதிலே இல்லை.

என் முறை வந்தது. என் சுய தகவல்களை கேட்டார். சொன்னேன். பின் எனக்கு பிடித்த கடவுள் பெயரை கேட்டார். எனது vice principal வேறு கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு இந்து கடவுள்களின் பேர் சொல்வதா, இல்லை ஜீசஸ் பேர் சொல்வதா என்று குழப்பம் ஏற்பட்டு போனது. கடவுள்களிலே பிடித்த கடவுள் என்று எல்லோரும் ஒவ்வொன்றை வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது வரைதெரியாமல் போயிற்று. இந்து கடவுள்களின் பேரே சொல்ல வேண்டும் என்றாலும் கூட யார் பெயரை சொல்ல வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டது. இந்து கடவுள்களின் பெயரை சொல்லி என்ன ஆக போகிறது, ஜீசஸ் பெயரை சொன்னாலாவது, அவரை ஐஸ் வைத்த மாதிரி இருக்குமே என்று ஜீசஸ் என்றே சொன்னேன். கேட்ட மாத்திரத்தில் ஏன் ஜீசஸ் பிடிக்கும் என்று ஆச்சர்யமாய் கேட்டார், சும்மா தான் சார் என்று தலையை சொறிந்தேன். சரி கண்ணை மூடு என்றார். ஒரு பெரிதான அதிசயத்தை என்னுள் ஏற்று கொள்ள நான் முழுதாய் தயாரானேன்.

நான் சொல்வதை அப்படியே திரும்ப சொல்லுமாறு ஜீசஸ் ஜீசஸ் ஜீசஸ் என்று ராகமாய் நிறுத்தி நிறுத்தி சொன்னார். நானும் பின்னாடியே ராகமாய் பாடி கொண்டு வந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் சொல்வதை நிறுத்தி விட்டார், அது தெரியாமல் நான் ஒரு ஜீசஸ் எக்ஸ்ட்ரா சொல்லி விட்டேன். வெடுக்கென்று கண்ணை திறந்து பார்த்தேன். அப்படியே சொல்லிட்டே இருப்பா என்றார். நான் கொஞ்ச நேரம் ஜீசஸ் சொல்லி கொண்டே இருந்தேன். கொஞ்ச நேரத்தில் என்னை இடைமறித்து, இப்போ மனசுக்குள்ளே சொல்லு பார்ப்போம் என்றார். இரண்டு நிமிடம் அப்படி கழிந்தது. நான் எனக்குள் மிக தீவிரமாய் ஜீசஸை கூப்பிட்டு கொண்டிருந்தேன். நெற்றி, புருவம், முக தசைகளையெல்லாம் இறுக்கி, முக்கி, கதறி ஜீசஸை சொல்லி கொண்டிருந்தேன். பிறகு, என் தோளை தொட்டு கண்ணை திறக்க சொன்னார். மிளிரும் கண்களோடு அவர் என்னை பார்த்து அந்த கேள்வியினை கேட்டார்.
தியானம் எப்படி இருந்தது?”
எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னது இது தான் தியானமா, இதை கத்து கொடுக்கவா ஒரு வருஷமா இழுத்தடிச்சுகிட்டு இருந்தீங்க... இதை கத்துக்கவா நான் ஒரு வருஷமா காத்துகிட்டு இருந்தேன். இருந்தாலும் அவர் அந்த கேள்வியை கேட்டு விட்டாரே, என்று நான் பதிலுக்கு, சூப்பராய் இருந்தது சார் என்று சொன்னேன்.
இப்ப மைண்ட்டும் பாடியும் நல்லா ஃப்ரீயா இருக்கா?”
”அப்படியே தான் சார் இருக்கு” என்றேன். குழப்பமான ஒரு பார்வை பார்த்து விட்டு, சரி, வெளியே போய் யாரிடமும் பேசாமல் தியானம் செய், போ போய் அடுத்த ஆளை வர சொல்லு என்றார்.

நானும் வெளியே போய் யோகியாய் மாறி முக்கி முக்கி ஜீசஸை கூப்பிட்டு பார்த்தேன். ம்ஹூம்

எல்லோருக்கும் கற்று கொடுத்த முடிந்தவுடன் எல்லோரையும் உள்ளே கூப்பிட்டார்.
-    இந்த தியானத்தை தினமும் வீட்டில் படிப்பதற்கு முன் செய்ய வேண்டும்.
-    குளித்தால் மட்டுமே அன்றைய தியானத்தை செய்ய வேண்டும்
-    எக்காரணத்தை கொண்டும் உங்களுக்கு சொல்லி கொடுத்த மந்திர சொல்லை யாருக்கும் சொல்லி விட கூடாது.
-    அப்படி சொல்லி விட்டால் தியானத்தின்பவர்போய் விடும்.
-    இவ்வளவு தான் தியானம்.

அவர் சொன்ன கடைசி விஷயம் மட்டும், 50 ரூபாய் அநியாயமாய் பறிபோனதை வலியுறுத்தியது.

எல்லாமும் சொல்லி முடித்தவுடன், ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று சொன்ன மாத்திரத்தில் பிரகாசமாகி ஒரு சந்தேகம் கேட்டேன்.
“10 நாள் கழிச்சு ஜீசஸ்ங்கறது மறந்து போய்டுச்சுனா முருகர் பேரை மாத்திக்கலாமா?” என்று வரலாற்று சிறப்பு மிக்க அந்த சந்தேகத்தை கேட்டு, அவரை அசரடித்து, மந்திர சொல்லை பிறர் முன் சொன்னதற்காக தலையில் இரண்டு கொட்டு வாங்கி, நான் ஒரு இடியட் என்று அவர் வாயிலாக தெரிந்து கொண்டேன். ஆனால் பதிலை மட்டும் அவர்  சொல்லவேயில்லை.

ஏழாவது வரை முதல் ராங்க் வாங்கி கொண்டிருந்த நான், அதன் பின் 8-வது ராங்கிற்கு, துக்கியடிக்க பட்டு, பின் பாஸ் மார்கிற்கே முக்குமளவிற்கு, படிப்பில் நொண்டியடித்தேன். ஒரே குற்றவுணர்வாக இருக்கும். ஒரு வேளை தியானம் ஒழுங்காக செய்யாமல் கடவுளை ஏமாத்துவதால் தான், இப்படி நடக்கிறதோ என்று பயந்து போய் சமயத்தில் 2 மணி நேரம் எல்லாம் தியானம் செய்வேன். ஒண்ணும் நடக்காது. நேரம் இன்னும் விரயம் ஆகி, மேலும் மார்க் கம்மி ஆகும். 30க்கு மேல் மார்க் வாங்கினாலாவது, “சார் சார் 35 வாங்கினா பாஸ் சார்” என்று கெஞ்சி சொச்ச மார்க்கை வாங்கிடலாம். நாளுக்கு இரண்டு மணி நேர தியானத்திற்கு பிறகு 22 மார்க்குக்கெல்லாம் தூக்கியடிக்க பட்டேன்.   அப்போதெல்லாம், சே, என்ன டா இது, இந்த தியானத்தை கத்துக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும். தியானத்தை மேற்கொண்டு செய்வதா, இல்லை தலை முழுகுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் சென்ற நாட்கள் அவை. தலை முழுகியிருந்தால் எவ்வளவோ தேவலாம்..

                                           (தொடரும்…..)

No comments:

Post a Comment