Friday, 25 January 2013

ஸ்வாதி ராகவ் 6அன்பு சொல்லி முடித்து ஒரு இடைவெளி விட்டது கிட்டதட்ட  எல்லோருக்கும் பதற்றத்தையும், ஆர்வத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியது. அவன் பேச பேச அவனது பேச்சின் சாரத்தில் உணர்ச்சிகள் வேகம் எடுத்துகொண்டு இருந்தன. அந்த வேகம் மொத்தமும் எதை நோக்கிய உணர்வு என்று யாரும் யூகிக்க முடியா வண்ணம் இருந்தது. ஆத்திரமா, கோபமா, வன்முறையா, கதறலா, அழுகையா இதில் எதில் இந்த மொத்த பேச்சும் சென்று முடிய போகிறது என்ற பதற்றம் கிட்ட தட்ட எல்லோரது கண்களிலும் தெரிந்தது. கடற்கரையில் அவர்களை கடந்து செல்லும் அனைவரும், அவர்களை ஒரு கணம் திரும்பி பார்க்கும் தருணம் அவர்களுக்குள் மிகுந்த அசூயை ஏற்படுத்தியது. அன்பு பேசாமல், அமைதி காத்த தருணத்தில் யாரும் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ள விரும்பவில்லை, பார்வை மொழி மட்டுமே அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது. அவனை ஆறுதல் படுத்தவோ, ஆசுவாச படுத்தவோ யாரும் எத்தனிக்கவும் இல்லை, காரணம் அவன் அவனது முழு கட்டுப்பாட்டில் இருந்தான், மிகுந்த வலி ஏற்படுத்திய தருணங்களை சொல்ல விரும்பாமல் தவிர்த்து தவிர்த்து சொல்லி கொண்டிருந்தான், எங்கே அவனது வலி மிகுந்த பேச்சு உச்சத்தை அடைந்துவிடுமோ என்ற பயம் எல்லோரையும் அழுத்தி கொண்டிருந்தது. இந்த இரண்டு வருடத்தில் அவனது மலர்ச்சியான முகம், பேச்சில் தெறிக்கும் கேலிகள், எல்லாமும் காணாமல் போய் இருந்ததை எல்லோராலும் அப்போது தான் உணர முடிந்திருந்தது. அன்பு சொல்ல வரும் விஷயத்தை கேட்க முழுதுமாய் ஆர்வம் இருந்தாலும், அவனை பேச விடாமல் தடுப்பதே நலம் என்ற எண்ணமே அனைவரது மனத்திலும் இருந்தது. காரணம் பேசி கொண்டிருக்கும் இடம் பொது வெளி என்பதே அனைவருக்கும் இடைஞ்சல் கொடுத்து கொண்டு இருந்தது. ஆனால் யார் அதை செய்வது என்பதில் தடுமாற்றங்கள் கண்டு கொண்டிருந்தனர். ஏனெனில் அன்பு முகம் சமாதான் படுத்தும் அளவிற்கான தேவையை ஏற்படுத்தாமல் தெளிவானதாகவே இருந்தது. நிறைய நாட்களாக யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்த விஷயத்தை சொல்லும் போது அவனுள் இருக்கும் உணார்ச்சியை அவர்களால் உணர முடிந்தாலும், அவனது முதிர்ச்சி தான் அவர்களை ஆச்சர்யப்படுத்தியது.

அன்பு பேசாமல் இருப்பதால் ஏற்பட்டு கொண்டிருக்கும் மௌனம் யாராலும் தாங்கி கொள்ள முடியாமல் இருந்தது, நொடிக்கு நொடி அதை பாரத்தை அளித்து கொண்டிருந்தது, அந்த மௌனத்தை ரோஹித்தே துணிந்து உடைத்தான். மிகவும் கம்மிய குரலில் பேச்செடுத்தான், “அன்பு, வீட்டுக்கு போய் பேசிக்கலாமா?” என்று சொல்லி முடித்த போது நிர்மலாவும் அவனோடு சேர்ந்து கொண்டாள், “ஆமா அன்பு, வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” அவளை தொடர்ந்து ஸ்வாதியும் அவளை ஆமோதித்தாள், ராகவ் மட்டும் அவர்கள் பக்கம் நிற்காமல், ”விடுங்க, அவன் பேசட்டும், பேசினா தான் அவன் பாரம் மொத்தமும் இறங்கி Relief ஆவான்”

அவன் சொல்லி முடிக்கும் முன்னரே, அன்பு குறுக்கிட்டு, “என் பாரத்தை இறக்கி வைக்க ஒண்ணும் உங்களை நான் கூப்பிடலை, அப்படி யாரும் நினைக்க வேண்டாம், யார்கிட்டயும் இவ்ளோ நாளா இந்த விஷயத்தை சொல்லாம உங்க கிட்ட சொல்றேன்னா, வெட்டி அனுதாபத்துக்காக இதை சொல்லிட்டு இருக்கலை” -  பேச்சின் உஷ்ணம் ராஜீவ்வை மட்டும்  அல்லாமல் எல்லோரையும் தூக்கிவாரி போட்டது. ராஜீவ் மெலிதான குரலில் அவனை மன்னிக்க சொல்லி கேட்டு, மேலே தொடர சொன்னான்.

“3 மாசத்துக்கு முன்னால Iscope technology ங்கற Software companyல சேர்ந்தேன். அதுவும் ஒரு Backdoor process மூலமா தான் சேர்ந்தேன். மறுபடியுமா backdoorல சேர்றனு நிறைய அப்பா, அம்மா, அண்ணனுங்க எல்லாம் கேட்டாங்க. ஆனா என்னால வேலை இல்லாம இருக்கவே முடியலை. ஒரு வேலை கிடைக்கிற மாதிரி கிடைச்சு கிடைக்காம போனதே, என்னை ஒரு வேலைக்கு போக சொல்லி அதிகம் துரத்திச்சு. ஏற்கனவே கிடைச்ச அனுபவத்துல இருந்து பாடம் கத்துக்கிட்டதுல இந்த முறை எவ்வளவோ உஷராய் இருந்தும், கடைசியில ஒண்ணுமில்லாம தான் போனேன். இதுல போய் சேர்ந்தது எப்படினு கேட்டா இதுவும் consultancy மூலமா தான். ஆனா இவங்களை ஓரளவுக்கு கூட நேரடியா தெரியாம போனது தான் சிக்கலா போச்சு.

இந்த consultancy ஐ எப்படி தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சாலே, அது ஒரு பெரிய கதையாய் போய் முடியும்னாலும், இந்த இடத்துல இது ரொம்ப தேவைங்கறதால சொல்றேன். இந்த கன்ஸல்டன்சியை நான் நேரடியா கூட தேடி போய் புடிக்கலை, ஏதாவது தெரிஞ்ச இடத்துல வேலை இருந்தா சொல்லுங்கன்னு நிறைய பேர்கிட்ட சொல்லி வெச்சுருந்தோம். அதுல ஒரு புண்ணியவான் கோத்து விட்டது தான் இந்த கன்சல்ட்டன்சி. அந்த புண்ணியவான் பேரு ரகு. ஒரு நாள் அவனா போன் செஞ்சி ஒரு பொண்ணோட நம்பரை கொடுத்து பேச சொன்னான், அந்த பொண்ணு இன்னொரு பொண்ணு நம்பரை கொடுத்து பேச சொல்லிச்சு, அந்த பொண்ணு இன்னொரு பையன் நம்பரை கொடுத்து பேச சொன்னான். அந்த ஒருத்தன் தான் கன்ஸல்டன்சிக்காரன். இப்படி அந்த கன்ஸல்டன்சியையே 4-5 பேர் கை மாறி தான் தெரியும். இதுல இன்னொரு விஷயம் என்னான்னா அந்த கன்ஸல்டன்சி காரன் மனோஜ்ங்கறவன இன்னைய வாரைக்கும் நான் பார்த்ததேயில்லை, அவன் ஆபீஸும் எங்க இருக்கும்னு எனக்கு தெரியாது. ஆனா ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல போன்ல பேசிப்போம். ஆரம்பத்துல இவனுக்கு போன் பண்ணி பேசும் போதும், இவன் மேலயும் பெரிசா நம்பிக்கை ஏற்படலை. அவன் ரெஸ்யும்மை அனுப்ப சொன்னதுக்காக நானும் கடனுக்குனு மெயில்லை அனுப்பி வைச்சேன். அவன் அடுத்த நாள் சாயங்காலமே எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணான். அப்ப இருந்து ஒரு நாளைக்கு 2 முறையாவது போன் பண்ணி அங்க வேலை இருக்கு, இங்க வேலை இருக்கு, 3 லட்சம் ஆகும், 4 லட்சம் ஆகும்னு சொல்வான். அவன் சொல்ற கம்பெனியெல்லாம் HMT, CTS, Ramco Cementsனு இந்த ரீதியில தான் இருக்கும். இது வரைக்கும் 15 கம்பெனியையாவது சொல்லி இருப்பான். ஒரு சில கம்பெனிங்களோட கமிட்மெண்ட்டை 6 லட்சத்துக்கு மேல சொன்னா மட்டும் அதை வேணாம்னு சொல்லிடுவேன். மீதி 5 லட்சத்துக்கு கீழ இருக்குற எல்லா கம்பெனியையும் இன்டர்வ்யூ ஏற்பாடு பண்ணுங்கன்னு தான் சொன்னேன். அவனும் சரின்னு தான் சொல்வான். ஒவ்வொரு இன்டர்வ்யூக்கும் தேதியை வேற 15 நாளைக்கு முன்னாடியே சொல்லிடுவான். ஆனா கரெக்டா அந்த தேதி வரும் போது, ஏதாவது காரணம் சொல்லி இன்டர்வ்யூ போக வேண்டாம்னு சொல்லிடுவான். அவன் சொல்ற காரணமெல்லாம் இருக்கே ஏதேதோ சொல்வான், சில காரணத்தையெல்லாம் கேட்டாலே கடுப்பாகிரும், ஒண்ணுமில்லாத காரணமெல்லாம் சொல்லி இண்டர்வ்யூ கேன்சல் ஆய்டுச்சுன்னு சொல்வான். உண்மையிலே பார்த்தா, அவன் கிட்ட experienced candidates அ அனுப்பி விட சொல்லி தான் கேட்டு இருப்பாங்க. ஆனா இவன்கிட்ட எல்லோருமே என்னை மாதிரி freshersஅ இருக்கிறதால, இவன் அவங்க கிட்ட எங்களை சேர்த்திக்க சொல்லி கேட்டு, கமிஷன் கொடுக்கிறதா சொல்லி HR கிட்ட பேசி பார்ப்பான். HR, கம்பெனியில பேசி பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லி இருப்பாரு. அவங்க கம்பெனியில இவங்க பயந்த மாதிரியே வேண்டாம்னு சொல்லிடுவாங்க. இதுக்கு நடுவுல கன்சல்டன்சிக்காரன் எனக்கு இண்டர்வ்யூ தேதி கொடுக்கறதெல்லாம் ஒரு காமெடி தான். சில சமயம் 5-6 experienced candidates ஐ கன்சல்டன்ஸி கூட்டிட்டு வந்தான்னா வேணா ஒரு 2 freshers candidates ஐ எடுத்துப்பாங்க. அந்த நம்பிக்கையில தான் இவனுங்க கம்பெனிக்காரன் பின்னால தான் தொங்குவானுங்க. அவனுங்க எப்பாவாவது முடிஞ்சா பார்ப்பானுங்க, பெரும்பாலும் கழட்டி தான் விடுவாங்க. இதுல என்னை மாதிரி ஸ்டூடண்ட்ஸ் ஏமாந்து போறதை விட கன்சல்டன்சிக்காரனுங்க தான் அதிகம் காஞ்சி போவானுங்க. இந்த விஷயமெல்லாம் எனக்கு லேட்டா தான் தெரிஞ்சது. ஆனா, இதுல் எனக்கு என்ன ஒரு குழப்பம்னா, ஏன் இந்த கன்சல்டன்சிக்காரன் தேவையில்லாம இன்டர்வ்யூ தேதிலாம் சொல்லி நமக்கு ஹோப் கொடுத்து கடுப்பேத்தறான்னு நிறைய நாள் புரியலை. அதுல என்ன விஷயம்னா இந்த மாதிரி இந்த மாதிரி இந்த இந்த கம்பெனியில எல்லாம் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்னு அவன் போய் எப்படி சொல்லுவான், ஒரு கன்சல்டன்சிக்காரன் அவ்வளவு transparentஆ இருந்தா ஒரு candidate எப்படி அவனோடயே இருப்பான்னு, அவனுக்கு ஹோப் கொடுத்து கொடுத்து, இன்னும் 10 நாள்ள எப்படியும் வேலைக்கு சேர்ந்திடலாம்னு நம்பிக்கை சொல்லி, வேற கன்சல்டன்சி பக்கம் போகாம பார்த்துக்க தான் இந்த ஏற்பாடு. மூனு மாசத்துக்கு மேல ஆகியும் ஒரு நல்ல கம்பெனியையும் அவனால புடிக்க முடியலை. நல்ல கம்பெனி அனுப்பினா தான் அவனுக்கும் லாபம் அதிகம் கிடைக்கும். ஆனா எதுவும் இல்லாததுக்கு என்னை கடைசியா இந்த iscope technnology ல கொண்டு வந்து விட்டான்.

வேலை கிடைச்சா போதும்னு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த முறையும் ஏமாந்துற கூடாதுன்னு உஷாராவே இருந்தேன். அதனாலே எவ்ளோ பணம்னாலும் முதல் மாசம் சம்பளம் வாங்கனதுக்கு அப்புறம் தான் கொடுப்பேன்னு சொல்லிட்டேன். அவனும் சரின்னு சொன்னதால மேற்கொண்டு பேசினோம். கமிட்மண்ட் தொகை ‘டூ பாய்ண்ட் ஃபைவ் லேக்ஸ்’ என்று அறிவித்தான். இது வரை சொன்ன கமிட்மெண்ட் தொகையிலேயே இது ரொம்ப சின்ன தொகையா இருக்கும் போதே நான் சந்தேகப்பட்டு இருந்திருக்கனும், ஆனா அவன் அதை ஒரு சின்ன கம்பெனின்னு தெளிவா சொல்லிட்டதால இன்டர்வ்யூக்கு ஒத்துகிட்டேன்.

தெரிஞ்சவங்க கிட்டலாம் இந்த கம்பெனி எப்படின்னு விசாரிக்க சொன்னேன், விசாரிச்சா யாருக்குமே இந்த கம்பெனியை பத்தி தெரிஞ்சிருக்கலை. சென்னையில இது மாதிரி நிறைய சின்ன கம்பெனிங்க இருக்கும், சின்ன கம்பெனின்னு பார்க்காம் போய் சேர்ந்துக்கோன்னு சொன்னாங்க, அவங்கல்லாம், நான் சேர போறது, பணம் கொடுத்துனு தெரிஞ்சா போய் சேர்ந்துக்கோனு சொல்வாங்களான்னு தெரியலை. அப்புறம் கடைசியா இன்டர்வ்யூக்கு போனேன். நெல்சன் மாணிக்கம் ரோட்ல தான் அந்த கம்பெனி இருந்துச்சு. என்னோட சேர்ந்து 4 பேர் இன்டர்வ்யூக்கு வந்திருந்தாங்க. நான் எப்படி சந்தேகமாவும், தயக்கமாவும், வேலை கிடைக்க போகுதுன்னு அடி  மனசுல ஒரு சந்தோஷத்தோட வாந்திருந்தேனோ அவங்களும் அதே மாதிரி வந்திருந்தாங்க. அதுலயே அவங்களும் backdoor மூலமா தான் வந்திருக்காங்கன்னு புரிஞ்சது. எங்க 5 பேரையும் ஒரு குட்டி ரூமுக்குள்ள விட்டு ஒரு written examination வெச்சாங்க. அந்த exam-ஐ எதுக்கு வெச்சாங்கன்னு கூட தெரியலை. அடுத்தவன் பேப்பரை எட்டி பார்க்கலாம் தேவை இல்லாத மாதிரி, திரும்பி பார்த்தால்லே எல்லாமே தெரியற அளவிற்கு நாங்கல்லாம் அவ்வளவு பக்கத்துல உட்கார்ந்துட்டு இருந்தோம். என் கூட வந்தவனுங்க என்னை விட மக்கு சாம்பிராணிங்களா இருந்தானுங்க, ரொம்ப ஸிம்பிளான ப்ராப்ளத்தை கூட என்னை கேட்டு எழுதி போய் கொடுத்தானுங்க.

கம்பனியுடைய இன்டீரியர்ஸ்லாம் நல்லா இருந்ததுனாலயும், employeesலாம் கணிசமா இருந்ததுனாலயும் என் மனசுல இருந்த தயக்கம்லாம்ம்  காலி ஆய்டுச்சு. Written exam முடிச்ச ரெண்டாவது நிமிசத்துலேயே HR Roundக்கு கூப்டானுங்க. நாங்க எழுதி கொடுத்த பேப்பரை திருத்துனாங்களா, நாங்க செலக்ட் ஆகிட்டோமா இல்லையான்னு எதுவுமே சொல்லாம HR Roundக்கு கூப்பிட்ட முதல் கம்பெனி இது தான். என் பேரை தான் முதல்ல சொல்லி கூப்பிட்டாங்க, கூப்பிட்டு ஒரு கான்ஃப்ரன்ஸ் ரூம்ல உட்கார வைச்சாங்க. கொஞ்ச நேரத்துல ஒரு சின்ன பையன் மாதிரி ஒருத்தன் உள்ள நுழைஞ்சு எனக்கு எதிர்ல உட்கார்ந்தான், என்ன  தான் பார்த்தாலும் என்னை விட 2 வயசு தான் பெரியவனா இருப்பான். நான் மேலயும் கீழயும் பார்க்கறதை பார்த்துட்டு, அவனாவே HR லீவு, அதனால நான் தான் இன்டர்வ்யூ எடுக்க போறேன்னு சொல்லி இளிச்சான். அவனாலேயே அவனை ஒரு knowledged person-அ காட்டிக்கவே முடியலை. வந்து உட்கார்ந்து tell me about yourself னு சொன்னான். கடகடன்னு சொல்லி முடிச்சேன். அப்புறம் ஒரு நிமிஷம் வரைக்கும் என்ன கேக்கறதுன்னு தெரியாம ரெஸ்யுமையே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தான். அப்புறம் கடைசியா program போடுவீங்களான்னு கேட்டன், போடுவேன்னு சொன்னான். Odd number series generate பண்ண சொல்லி ஒரு ப்ரொக்ராம் எழுத சொன்னான். கரெக்டா எழுதிட்டேன். அப்புறம் matrix multiplication போட சொன்னான். அதையே போட்டு அவன் கையில கொடுத்தேன். ஆனா, நான் போட்டதுல என்னமோ அவனுக்கு ஒரு சந்தேகம் வந்துடுச்சு போல… Program logicஅ follow பண்ணி, follow பண்ணி ஒவ்வொரு output ஆ எழுதி சரி பார்த்துட்டு இருந்தான். அப்புறம் ஒரு கட்டத்துல, அவன் அவனோட cabin போய் அவன் notes-அ refer பண்ணி, அதை இன்னொருத்தன் கிட்ட கேட்டு, கடைசியா வந்து ஒரு சின்ன semicolon mistake மட்டும் தான் தப்புனு சொல்லி, என்னை போய் reception ல உட்கார சொன்னான்.

என்னை மாதிரியே மத்தவங்களையும் கூப்பிட்டு, அதே ப்ரொக்ராமை போட சொல்லியிருக்கான். என்ன டா ஒரு HR லீவு போட்டு போய்ட்டா, அவருக்கு alternate கூடவா இல்லாம கம்பெனி நடத்துறாங்கன்னு நினைச்சிகிட்டேன். ஒரு 2 நிமிஷம் கூட இல்லை, எங்க எல்லாரையும் ஒருத்தர் ஒருத்தரா கூப்பிட்டு appointment order அ கொடுத்து, ஒரு தேதி சொல்லி எல்லாத்தையும் வர்ற சொன்னாங்க. எப்படியோ வேலை கிடைச்சது டா சாமின்னு, சந்தோஷமா வெளியே வந்தேன். வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணி இந்த மாதிரி வேலை கிடைச்சதுன்னு சொன்னேன், அப்படியே கன்சல்டன்சிக்கும் போன் பண்ணி, இண்டர்வ்யூ முடிஞ்சதுன்னு சொன்னேன். அவன் தடாலடியா எப்ப பணம் பண்ணுவிங்கன்னு கேட்டுட்டான், நான் தான் முதல் மாசம் சம்பளம் வந்ததுக்கு அப்புறம் தான் கட்டுவென்னு உறுதியா சொல்லியிருந்தேனேன்னு அவனுக்கு ஒரு முறை ஞாபக படுத்த வேண்டியதாய் போயிடுச்சு, அப்ப ஒ,கே சொன்ன பக்கி, அன்னைக்கே ராத்திரியே மறுபடியும் போன் பண்ணி, இல்லை சார், பணத்தை உடனடியா கட்ட சொல்லீ கம்பெனியில கேட்கறாங்க, இல்லைன்னா உங்க position இன்னொரு ஆளை appoint பண்ணிடுவேன்னு சொல்றாங்கன்னு சொல்லி தலையில குண்டை தூக்கி போட்டான்.

நானும், எங்க வீட்டில உள்ளவங்களும் எவ்வளவோ பேசி பார்த்தோம், அவன் எதுக்கும் மசியலை, பணம் உடனடியா வேணும்னு கராறா நின்னான். முந்தி ஏமாந்த மாதிரி, ஏதும் நடந்துடுமோன்னு ரொம்ப பயந்தேன். எங்க அப்பா, முடிவை என் கிட்ட விட்டுட்டாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அன்னைக்கு இன்டர்வ்யூவே ஒரு தினுசா நடந்ததுனால, நிறைய சந்தேகம் வந்தாலும், அது ஒரு புது கம்பெனிங்கறதால அப்படி இருக்கும், போக போக சரியாகிடும்னு நினைக்கறதா, இல்லை இந்த லட்சனத்துல இன்டர்வ்யூ வைக்கிற கம்பெனிக்கெல்லாம் கண்டிப்பா போய் தான் ஆகணுமான்னு ரொம்ப confuse ஆனேன். கடைசியா, அந்த சாமிகிட்டயே சீட்டு எழுதி போட்டு கேட்டேன். சீட்டுல ’கொடுன்னு’ன்னு வந்துச்சு. அவன்கிட்ட 2 நாள் டைம் கேட்டு, பணத்தை கொடுக்கிறேன்னு சொல்லி ஒத்துகிட்டேன்.

இரண்டாவது நாள், நானும் என் அப்பாவும் அவன் கேட்ட டூ பாய்ண்ட் ஃபைவ் லேக்ஸ், அதாவது இரண்டரை இலட்சம் பணத்தை அவசர அவசரமா பொரட்டி அவனை பார்க்க எடுத்துட்டு போனோம். இரண்டரை லட்சட்ம் பணத்தை முழுசா கொடுக்க வேண்டாம், பேரம் பேசி பார்க்கலாம்னு பேச்சு இருந்தாலும், எதுக்கும் இருக்கட்டும்னு முழு பணத்தையும் எடுத்துட்டு போனோம். அங்க போனா அவன் வராம அவன் நண்பன்னு சொல்லி யாரையோ அனுப்பியிருந்தான். அவன் கிட்டயே பணத்தை கொடுத்து விட சொல்லி சொன்னான். எங்களுக்கு என்ன பண்றதுன்னு வேற தெரியலை. இந்த பணத்தை கொடுக்குறதுக்காக வேண்டி, என் அப்பா வேற ஊர்ல இருந்து வந்து இருந்தார். கொடுத்தா உன் கிட்ட தான் கொடுப்பேன்னு சொல்றது, அந்த இடத்துல தேவையில்லாத ஒண்ணா இருந்துச்சு, அதனால அவன் சொன்ன ஆள் கிட்ட்யே பணத்தை கொடுக்கிறதா சொல்லி, தயவுசெய்து ரேட்டை மட்டும் குறைச்சுக்கோங்களேன், இரண்டரை லட்சம்லாம் ரொம்ப அதிகம்னு பேசி பார்த்தோம். அதுக்கு அவன், நான் எப்போங்க இரண்டரை லட்சம் கேட்டேன், வெறும் இரண்டு இலட்சத்தி ஐயாயிரம் தானே கேட்டேன்னு அவனும் ஷாக்காகி, எங்களையும் ஷாக்காக்கினான். என்ன டா விஷயம்னு விசாரிச்சா, அவன் சொன்ன டூ பாய்ண்ட் ஃபைவ் லேக்ஸ்ங்கறது, அவங்க ஊர்ல ரெண்டு லட்சத்தி அம்பதாயிரம் கிடையாதாம். வெறும், ரெண்டு லட்சத்தி ஐயாயிரம் தானாம். என்ன எழவு டா இதுன்னு, எங்க அப்பா அவனை அங்கேயே காறி துப்பினாரு. அப்புறம் அவன் சொன்ன இரண்டு இலட்சத்தி ஐயாயிரத்தில இருந்தே பேரம் பேசி, ஒன்றரை இலட்சமாக்கினோம்.

அப்பாடி, 55,000 த்தை மிச்சம் படுத்திட்டோம்னு, அன்னைக்குலாம் நிம்மதியா தூங்கினோம். எப்ப அந்த கம்பெனிக்காரன் ஓடி போனானோ, அன்னைக்கு இருந்து, 1,50,000 மும் போச்சேன்னு தூக்கம் கெட்டு கிடக்கிறோம்…
    

                                                (தொடரும்…)

Wednesday, 16 January 2013

பூனைகுட்டிஎங்கள் வீட்டு பூனை இரண்டு குட்டிகள் போட்டிருந்ததை எல்லோரும் அறிவீர்கள். அது இரண்டுமே பெண் பூனைகள். ஆக மொத்தமாக 3 பெண் பூனைகள், எங்கள் வீட்டிலேயே கொஞ்ச நாளாக இருந்து வந்தது. இப்படி 3 பெண் பூனைகளை பராமரித்து வந்தால், இன்னும் ஒரு வருடம் கழித்து மூன்றும் இரண்டு இரண்டு குட்டிகள் போடும் என்று வைத்து கொண்டால் கூட, வீட்டில் 9 பூனைகள் ஆகி விடும் என்பதால் புதிதாய் பிறந்த இரண்டு குட்டிகளையும், தெரிந்தவர்களிடம் கொடுத்து விட்டோம். அதில் ஒரு பூனைகுட்டி எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த வீட்டோடு ஒட்டி கொண்டது. ஆனால் இன்னொரு பூனை நாள் பூராவும் அம்மா அம்மா என்று அழைத்து ஆர்பாட்டம் செய்து, சாப்பிடாமல் கொள்ளாமல் சோக மையமாக  இருப்பதாய் சொன்னார்கள். அதனால் அந்த பூனையை மட்டும் வீட்டோடு கூட்டி வந்து வைத்து கொண்டோம். அதை கூட்டி வந்து விட்டதும், மனிதர்களுக்கு இணையாக தாயும் மகளும் கட்டி பிணைந்து ம்யாவ் ம்யாவ் என்று அதன் செல்ல குரலில் ஆனந்ததில் கட்டி புரண்டது, இதை பார்த்த வீட்டாருக்கு கண் ஓரத்தில் கண்ணீரையே கசிய வைத்து விட்டது.

ஏற்கனவே இருந்த பூனை பெரிதாகி விட்டதால், அது அதிகம் குறும்பு பண்ணாமல் மிகவும் professional ஆக நடந்து கொண்டது. இப்படி இருப்பதால், வீட்டில் இன்னொரு பூனை குட்டி இருப்பதையே வீட்டில் இருப்பவர்களும் விரும்பினர். அம்மா பூனை எப்படி இருந்ததோ, குட்டியும் அச்சு அசல் அதே போல் இருக்கும். உடம்பு பூராவும் மின்னும் வெள்ளை நிறத்திலும், வால் பூராவும் கருப்பு சாம்பல் நிறமாகவும், தலையில் நெத்தி பகுதிக்கு மேல் கறுத்தும் அத்தனை அழகாக இருக்கும். அம்மாவையும் குட்டியையும் பக்கம் பக்கம் நிற்க வைத்து பார்த்தால், அப்படியே குட்டி பூனை அதன் அம்மாவின் மினியேச்சர் போல இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம், அம்மாவிற்கு இடது வயிற்று புறத்தில் ஒரு சிறிய கறுப்பு புள்ளி இருக்கும், குட்டிக்கு மூன்று சிறிய கறுப்பு புள்ளிகள் இருக்கும். அம்மா பூனை அதன் சிறுவயதில், அதாவது எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன்பு என்ன என்ன சேட்டைகள் செய்ததோ சொல்லி வைத்தாற் போல் இதுவும் அதே சேட்டைகளையே செய்தன. இதோடு பிறந்த இன்னொரு பூனை அப்படி இருக்கவில்லை. அது வேறு மாதிரி சேட்டைகள் செய்தன. அது பெரும்பாலும் தூங்கி இருக்கவே பெரும் ஆர்வம் காட்டியது, அதை இன்னொரு வீட்டில் கொடுத்ததில் இருந்து, அதன் சேட்டை விவரங்களை விசாரிப்பதில்லை. எப்போதாவது போய் பார்த்து விட்டு வருவதோடு சரி. மூன்று நாள் முன்பு கூட தற்செயலாய் அந்த வழியாய் வீதியில் நடந்து போன போது, எங்கயோ பார்த்த திசையில் திமிறி கொண்டு நின்றிருந்தது. சற்று கொஞ்சி விட்டு வந்தேன். அந்த பூனைக்கு அவ்வளவாக உடம்பு பிடிக்கவில்லை. நோஞ்சான் பூனையாக இருந்தது. பார்த்தால் ஒரு கவர்ச்சியே இல்லை. எங்களுடனே வளர்ந்து இருந்தால், இது நடந்திருக்காது தான், என்ன செய்ய என்று, அடுத்த வேலையை பார்க்க போய் விட்டேன்.

எங்கள் வீட்டில் குட்டி வளர வளர அது எங்களை வேலையாட்கள் போல் உபயோகிக்க ஆரம்பித்து கொண்டது, அதன் அம்மா பூனை போலவே… நாங்களும் சேவை செய்து கொண்டு வந்தோம். சற்று நாட்களிலே அம்மா பூனை பால் கொடுப்பதை நிறுத்தி விட்டது. பால் கிடைக்காததால் குட்டி பூனையும் அம்மாவோடு சேர்ந்து, நன்றாக பால் சோறும், கருவாடுமாக சாப்பிட்டு வளர ஆரம்பித்தது. குட்டி பூனை மட்டும் கொஞ்ச நாட்கள் வீட்டுக்குள்ளேயே ‘உச்சா’ போய் கொண்டு இருந்தது. அதற்காக ஒரு அட்டை பெட்டியில் மண் கொண்டு வந்தெல்லாம் வைத்து கொண்டிருப்போம். 15 நாட்கள் கூட இல்லை, அதுவே வெளியே போய் உச்சா உட்கார தெரிந்து கொண்டது. அதற்கு எப்போதெல்லாம் பால் சாதம் வேண்டுமோ, அப்போதெல்லாம் மெலிதாய் மியாவ் மியாவ் சொல்லி, அதன் வாலை நன்றாக விறைப்பாக்கி எங்கள் கால்களில் படும் வண்ணம் சுத்தி சுத்தி பால் சாதம் தட்டை பார்த்து பார்த்து கத்தும்.

கருவாடு வேண்டுமென்றால் கூட அப்படி தான். கருவாடு டப்பாவை, சற்று உயரமான இடத்தில் தான் வைத்து இருக்கிறோம், அது சரியாக வாஷிங் மெஷினுக்கு வெகு அருகில் இருக்கும். கருவாடு வேண்டுமென்றால் வாஷிங் மெஷின் மேல் ஏறி கொண்டு மியாவ் மியாவ் கொடுக்கும். அப்போதே எடுத்து போட்டு விட்டால் தப்பித்தோம், இல்லையெனில் யாரையும் ஒரு வேலை செய்ய விடாது. வாலை விறைப்பாய் வைத்து கொண்டு, குழந்தை குரலில் மியாவ் சொல்லி காலை காலை சுற்றி வரும், நடக்கவே விடாது. இந்த கூத்து அனைத்தும் சரியாக எங்கள் வீட்டு நபர்கள் காலையில் பணிக்கு செல்லும் போது தான் நடக்கும்.

இதற்கிடையில் அம்மா பூனை, வீட்டில் தங்குவதே அரிதாகி போனது. எப்போதாவது வரும், குட்டி பூனைக்கு வைத்திருக்கும் பால் சாதத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டி, வெளியே கிளம்பி விடும். கருவாடு கூட கேட்பதில்லை.

எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு வேளைக்கும், ஒரு தெரு நாய் வரும். அந்த நாயை பார்த்தால் எங்களுக்கே சமயத்தில் பயமாய் இருக்கும், எனெனில் அது அவ்வளவு பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். ஆனால், எங்கள் எல்லோரிடமும் மிகவும் விசுவாசமானதாகவும், பாசமாகவும் இருக்கும். இந்த நாய், எங்கே பூனை தெருவில் சுத்தி கொண்டு இருக்கும் போது, அடித்து சாப்பிட்டு விடுமோ, என்று நாங்கள் கலக்கமுற்று இருந்த போது, என் அப்பா தான் பூனையை தைரியமாக கையில் வைத்து கொண்டு நாய்க்கு அருகில் எடுத்து சென்று அறிமுகம் செய்து, அதனுடன் பழக வைத்தார். அம்மா பூனையை கூட அவர் அப்படி தான் செய்தார். நாளடைவில், பூனையும் நாயும் சகஜமாக உலாவ ஆரம்பித்து விட்டன. முதலில் எல்லாம், பூனைகுட்டி ஓடி ஓடி போய் நாயை அடித்து விட்டு, அடித்து விட்டு வீட்டிற்குள் ஓடி வரும், அது ஏதாவது எதிர்வினை ஆற்றுகிறாதா என்று ஆர்வமுடன் பார்க்கும். அது சிரித்த முகமாகவே நிற்கும். ஒன்றும் செய்யாது. பின்பு பூனைகுட்டிக்கே அலுத்து போய் விட்டது போலும், அடித்து விளையாடுவதை நிறுத்தி விட்டது.

ஒரு நாள், எனக்கு சின்ன சந்தேகம் வந்தது. நம் பூனைகுட்டி எதிரிகளை சமாளிக்கும் வகையில் ஆற்றல் இருக்கிறதா, அல்லது ஓடி விடவாவது தயராய் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள தேடல் தாகம் எடுத்தது. அதை சோதிக்கும் வகையில், அது எதிர்பார்க்காத போது, அதன் பின்னால் போய் தட்டென்று செருப்பு காலில் சத்தம் ஏற்படுத்தி குதித்து நின்றேன். அது பயத்தில், என் முட்டி உயரம் வரை ஒரு குதி குதித்து, ஹஸ்ஸ் என்று என் காலில் தும்மியது, அந்த நேரம் பார்த்து பர்மடாஸ் வேறு போட்டு இருந்தேன், கால் எல்லாம் குட்டி குட்டி சாரல்.

சில நாட்களில், அம்மா பூனை வீட்டிற்கு வருவதையே விரும்பாமல், அது சாப்பிட வந்தால் குட்டி பூனை விரட்டி விட்டது. பிறந்து 2 மாசத்திலே தனது ஏரியாவை நிர்வாகம் செய்ய தொடங்கி விட்டது போலும், என்று அதை செல்லமாய் திட்டி, அறையினுள் விட்டு தாளிட்ட பின்பு தான் அம்மாவிற்கு சாப்பாடு போட வேண்டியதாய் இருக்கும். அம்மா பூனையின் வயிறு மறுபடியும் வளர ஆரம்பித்தது. எப்போது வேண்டுமானாலும் குட்டி போடும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். அது தீவரமாய் குட்டி போட இடம் தேடி கொண்டிருந்தது. சமயத்தில், உயரமான இடங்களில் போய் உட்கார்ந்து கொண்டு, யார் கூப்பிட்டாலும் வராமல் இருக்கும்.

அப்போதெல்லாம் செந்தில் முருகன் போட்ட பதிவு தான் நினைவில் வரும். நாய் நமக்கு அடிமை போல் நடந்து கொள்ளும், பூனை நமக்கு எஜமானன் போல் நடந்து கொள்ளும் என்று அந்த பதிவின் ஒரு இடத்தில் வரும். ரொம்ப ரசித்து படித்ததால், அப்படியே நினைவில் தங்கி விட்டது.

பூனைகுட்டிகளுக்கு நாங்கள் பெயர் சூட்டுவதில் எல்லாம் ஆர்வமே காட்டவில்லை. ஆளாளுக்கு வாயில் என்ன பெயர் வருகிறதோ, அதை கூப்பிட்டு கொள்வார்கள். அப்பா சுந்தரி என்று கூப்பிடுவார், பாட்டி சில்லி என்று கூப்பிடுவார். இதில் வேடிக்கை என்னவென்றால், தாய்க்கு ஒரு பெயர், குட்டிக்கு ஒரு பெயர் என்ற பேதமே கிடையாது. இரண்டுக்கும் ஒரு பேர் தான். நாங்கள் அனைவரும் அம்மா பூனை, பூனைக்குட்டிபூனை எங்கள் வாழ்விற்குள் வந்ததன் பிறகு, எங்கள் வீடே பெரிதும் மாறி இருக்கிறது. முன்பெல்லாம் பாட்டி, எல்லா சமயமும் ஒரு வித தனிமையிலே இருப்பது போல உணர்வார். வீடு பூராவும் ஆட்கள் இருந்தாலும், எங்களில் யாராலும் அவரது தனிமைக்கு மருந்து தேட முடியவில்லை. ஆனால், அந்த மருந்தை இந்த பூனைகள் தான் எத்தனை அழகாய் தேடி கொடுத்து விட்டன. நினைத்து பார்க்கும் போதே சில சமயம் ஆச்சர்யமாய் இருக்கும். ஒரு காலத்தில் மொனமொனவென்று வாயிற்குள்ளேயே புலம்பி கொண்டு கடுகடுவென இருந்த பாட்டி, இப்போதெல்லாம், பூனைகளோட இருக்கும் தருணத்தில் குழந்தையாகவே மாறி விடுகிறார். மாயஜாலம் போல உணர்வோம். எங்களுக்கும் நாங்கள் எங்கு இருந்தாலும், நாங்கள் வீடு திரும்ப ஒரு கூடுதலான காரணம் இருந்தது. அது பூனை தான், வீட்டிற்கு சென்று பூனையை கொஞ்ச போகிறோம் என்ற உணர்வே அத்தனை ஆனந்தமாக இருக்கும்.

ஒரு நாள் அம்மா பூனை, எப்போதும் போல் சாப்பிட உள்ளே வரும் போது கவனித்தால், உப்பியிருந்த அம்மா பூனையின் வயிறு தட்டையாய் கிடந்தது. குட்டி ஏதேனும் போட்டு விட்டதா என்று எங்கள் வீடு முழுவதும் தேடினால் எங்கேயும் காணோம். இந்த பூனை முதல் முறை குட்டி போடும் போதே அதை ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸாக வெளியிட்டு என் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்ட போது, இதே செந்தில் முருகன் கமெண்ட்டில் வந்து வாழ்த்துக்களை சொல்லி கூடுதலாய் ஒரு தகவலையும் சொன்னார். தாய் பூனை, குட்டிகளை தின்று விடும், ஜாக்கிரதை என எச்சரித்தார். அது இப்போது தான் ஞாபகத்தில் வந்து தொலைத்தது. நெஞ்சே கனத்து போனது.

எதற்கும் எதிர்த்த வீட்டிலும் தேடலாமே, என்று எம் வீட்டு மக்கள் தேடியிருக்கிறார்கள். நல்ல வேளை, நான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை.

அழகழகாய் 4 குட்டிகள்.