Monday, 28 April 2014

Nimirndhu nil

நிமிர்ந்து நில் ஓர் சிறப்பான படமாக வந்திருக்க கூடிய ஒன்று. சிவாஜி படத்திற்கும், நிமிர்ந்து நில்  படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தான் நினைக்கிறேன். சிவாஜி படம் ஏன் மக்களை முகம் சுளிக்க வைத்தது என்று மேலோட்டமாக ஆராய்ந்து இருந்தாலே, நிமிர்ந்து நில் படம் உண்மையாகவே நிமிர்ந்து நின்றிருக்கும்.

இரண்டு படத்திலும் நாயகன் ஆனவன், ஒரு சராசரி குடிமகனை பிரதிபலிப்பவனாக இருக்கிறான். இன்றைய காலக்கட்டத்தில் சராசரி மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளும் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு, ஒரு க்ளாஸிக் சினிமாவிற்கான எதிர்பார்ப்பை தன்னிச்சையாகவே வரவழைக்கிறது. மிக முக்கியமாக படம் பார்க்கும் மக்கள், தம்மை மிக எளிதாக நாயகனுடன் பொருத்தி பார்க்கிறார்கள்.

முதல் பாதியின் முடிவில், நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் சிறப்பாக தொகுத்து வழங்கி விட்டு, பிற்பாதியில் அத்தனை பிரச்சனைகளையும் நாயகன் ஜஸ்ட் லைக் தட் தனது ஹீரோயிச சாயம் கொண்டு சமாளிப்பது மக்களால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது. அங்கேயே இந்த படம் தனது தனித்துவத்தை இழந்து, இது ஒரு ஃபேக் மூவி என்று மக்களுக்கு புரிந்து விடுகிறது.

அது வரை, தம்மை நாயகனுடன் பொருத்தி பார்த்து, பிரச்ச்னைகளுக்கு என்ன தான் தீர்வு என்று மக்கள் ஆவலுடன் திரையை நோக்குகையில், ஒரு சராசரி மனிதனால் சாத்தியமே இல்லாத ஒன்றை சொல்லி காதில் பூ சுத்துகையில் தான் கடுப்பாகி போகிறார்கள்.  ஒன்னுத்துக்கும் உதவாத கமர்ஷியல் படத்தை ஏதோ புரட்சி படம் போல் பில்ட் அப் கொடுத்தது தான் படத்திற்கு எதிராக வேலை செய்து ஓரமாக உட்கார வைத்துவிட்டது.

ஏதோ சமுதாய விழிப்புணர்விற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட படம் போல் ஆங்காங்கே பாசாங்கு செய்து விட்டு, கடைசியில் எல்லாமே வியாபார யுக்தி என்று தெரிய வரும் போது, நமக்கே நம் மீது கடுப்பாக வந்து தொலைக்கிறது. விஷயம் என்னவென்றால், நம் நிகழ்கால பிரச்சனைகளை நல்லபடியாக பதிவு செய்த இவர்கள், திரைக்கதையை ஓட்ட தெரியாமல் எங்கோ புளிய மரத்தில் விட்டு விட்டார்கள். பதிவு செய்ததோடு நிறுத்தி தொலைத்திருக்கலாம், ஆர்ட் மூவி அந்தஸ்தாவது கிடைத்திருக்கும். ஆனால் சில்லறை புரளாது, அதற்காக டபுள் ரோல், குத்து பாட்டு, ஆக்‌ஷன் சீக்குவன்ஸ், அது இது என்று அலைக்கழித்து விட்டனர்.

எல்லாம் முடித்து, உங்களை நீங்களே செதுக்கி கொள்ள வேண்டும் என்று மெஸேஜ் வேறு... வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று நூறு நூறு ரூபாயை மக்களிடம் வசூலித்து, கடைசியில் எவன் எவன் பொண்டாட்டி பத்தினியோ அவனுக்கு மட்டும்தான் கடவுள் தெரியும் என்று சொல்ல, எல்லோரும் இல்லாத கடவுளை தரிசித்து வருவார்கள்.

அதுபோல், இந்த மெஸேஜ் ஒரு சிறப்பான மெஸேஜாக இருந்தாலும், பிரச்சனைக்கான தீர்வை சொல்லவில்லை. இருந்தாலும் மெஸேஜ் சிறப்பாக இருக்கிறதே என்று கேள்வி ஏதும் கேட்காமல் வர வேண்டிய நிலைக்கு ஆளாகின்றோம்.

நான் கேட்கிறேன் , ஜெயம் ரவி இந்த படத்தில் அப்பழுக்கில்லாத, கள்ளம் அறியா புனித ஆத்மா... அவர் ஏன் தன்னை தானே திருத்தி கொள்ள வேண்டி, தன்னை தானே சுத்தியால் அடித்து கொள்கிறார். ஒன்றும் புரியவில்லை.

தற்போது வந்து கொண்டிருக்கும் குப்பை தமிழ் சினிமாக்களில், இது ஓரளவுக்கு தேறுகிறது. அட்லீஸ்ட் எழுந்து ஓடும் அளவிற்காவது இல்லாமல் இருக்கிறது. அதுவரை நிம்மதி.



Accidents



சுத்தி முத்தி கேள்விப்படும் சமாச்சாரங்கள் அனைத்தும் தாறுமாறாக இருக்கின்றன.

1) தெரிந்த பாட்டி ஒருவரும், அவரது மகளும் பாட்டிக்கு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துவிட்டு திரும்ப நடந்து வந்திருக்கிறார்கள். யாரோ ஒரு ஓவர் ஸ்பீடு குடிமகன், வந்த ஸ்பீடில் தனது இடது ஹேண்டில் பாரால் பாட்டியை லைட்டாக தட்டி விட்டு, அவன் பாட்டிற்கு விர்ர்ர்ரென்று பறந்து விட்டான். பாட்டிக்கு கை முறிவு, திரும்ப மருத்துவமனைக்கே நடந்து கையில் கட்டு போட்டு கொண்டு வீடு திரும்பினார்.

2) மாமா ஒருவர் சமீபத்தில் திருப்பதி போய் வந்தார். அவரது வீட்டருகே பட்டறை ஒன்று இருக்கிறது. அந்த பட்டறை ஆட்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு லட்டு கொடுக்க உள்ளே நுழைந்திருக்கிறார், கொடுத்து விட்டு வெளியில் வருகையில் வேட்டி எதிலோ பட்டு இழுக்க, தடுமாறி கீழே விழுந்திருக்கிறார், விழுந்த இடத்தில் ஒரு கம்பி, அது கையில் ஏறி, பலத்த காயம். 9 தையல் போட்டிருக்கிறார்கள்.

3) என்னுடைய பெரியம்மாவுக்கு தெரிந்த ஒருவர் கிருஷ்ணகிரியில் அவரது வீட்டில் க்ரைண்டரில் மாவு ஆட்டி கொண்டிருந்தார். அவரது உறவினர் ஒருவர் பெங்களூர்  நாராயண ஹிருதாலயாவில் என்ன காரணத்திற்காகவோ அட்மிட் ஆகி இருப்பதாக போன் வரவே, போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி இருக்கிறார். மருத்துவமனை போய் பேஷண்ட்டை பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தவரை ஒரு க்ரூப் ஃப்ரீ செக் அப் செஞ்சிக்கோங்க என்று மடக்கி இருக்கிறது. நான் நல்லா தான் இருக்கேன், எனக்கு அதெல்லாம் வேணாம் என்று சொல்லியவரை வம்படியாக செக் அப் செய்து விட்டு, ரிசல்ட்டுக்காக ஒரு இடத்தில் வெய்ட் பண்ண சொல்லியிருக்கிறார்கள். உட்கார்ந்திருந்தவர் அங்கேயே Low BP வந்து இறந்துவிட்டார். வீட்டில் இருந்திருந்தாலும் இறந்திருப்பாரா என்பது தெரியவில்லை.





Maan karathey


நான் கவனித்த வரையில் A.R.முருகதாஸ் திரும்ப திரும்ப ஒரே தவறை தான் வம்படியாக செய்கிறார். அப்போதைய ட்ரெண்டில் யார் டாப்பில் இருக்கிறார்களோ அவர்களை நம்பி படத்தை ஆரம்பிக்கிறாரே தவிர, கதை - திரைக்கதை அம்சங்களை உதாசீனம் செய்கிறார். ஒரே விதிவிலக்கு, எங்கேயும் எப்போதும்... மீதி எல்லாம் வரிசையாக அடி வாங்கி கொண்டிருக்கிறது, படம் ரீலிஸான 2-3 நாட்களுக்கு தியேட்டர்கள் பரபரப்பாக இயங்கும். அதன்பின் படத்தின் லட்சனம் தெரிந்து உஷாராகி கல்தா கொடுத்து விடுவார்கள். சிலரே சிலர் மட்டும் அவரின் தயாரிப்பில் வெளி வந்த படங்களை க்ளாஸிக் என்று சிலாகித்து கொண்டிருப்பர், அதுவும் 10 நாட்களுக்கு மட்டுமே. இது ஆரம்பத்தில் 'பலராக' இருந்தது, இப்போது 'சிலராகி' விட்டது , இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் அருகி டோட்டலாக காலியாகி விடும்.

பெரும்பாலான திரைப்படங்கள் ஒன்-லைனகள் கேட்டே ஓகே செய்யப்படுகிறது என நினைக்கிறேன். அந்த வகையில் "மான் கராத்தே" திரைப்படமும் கூட பிரமாதமான ஒன்-லைனை கொண்டிருக்கும் திரைப்படம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கு எப்படி திரைக்கதை என்னும் தீனி போடுவது என்று தெரியாமல் தவியாய் தவித்து இருக்கிறார்கள். பார்க்கவே பாவமாக கூட இருந்தது.

பொதுவாக ஹீரோயின்களை லூஸு போல் சித்தரிப்பது தான், தமிழ் சினிமாவின் பிரதான வழக்கம். இதில் ஒரு படி மேலே போய் ஹீரோயினின் அப்பாவையே லூஸாக சித்தரித்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

+2 டொக்கு அடித்த பெண்ணின் அப்பனே, இப்போதெல்லாம் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று கறார் காட்டுகிறார்கள்.  அப்படியே கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைகள் பொண்ணு பார்க்க வந்தாலும் அவர்களிடமே salary slip, allotment order, bank balance, pass book எல்லாம் காட்ட சொல்லும் இந்த காலக்கட்டத்தில், ஹன்சிகாவின் அப்பாவான சாயாஜி ஷிண்டே, 10 திருக்குறளை சொல்லும் பையனுக்கே தன் பொண்ணை கொடுப்பேன் என்று எண்டர்டெயின்மெண்ட் மூவி டச் கொடுக்கிறார்... கொடுமை.

ஆங்காங்கே அனிருத், முருகதாஸ் மற்றும் சில நடன கலைஞர்கள் எல்லாம் எட்டி பார்க்கிறார்கள். இவர்கள் என்னா பெரிதாக புடுங்கி விட்டார்கள் என்று Guest appearance கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கென்னமோ சிவகார்த்திகேயன், ஹன்சிகாவே Guest appearance கொடுத்தது போல் தான் இருந்தது.