Monday, 12 January 2015

Kayal - Movie review
எங்கள் ஊர் தர்மபுரியில், இப்போதெல்லாம் திரைப்படங்கள் ரிலீஸ் தேதியன்று ரிலீஸ் ஆகாமல் ஒரு வாரம், 10 நாள் என நாட்கள் தள்ளி ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. என்ன காரணம் என்று விசாரித்ததில், ரசிகர் மன்றங்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வரும் வழக்கமான பிரச்சனை என தெரியவந்தது. படம் ஓடுவதே 10 நாள், அதில் முதல் நாள் ஷோ கலெக்‌ஷன் முழுவதும் ரசிகர் மன்றமே எடுத்து செல்வதால், லட்சக்கணக்கு முதலீடு போட்டு பிழைப்பு நடத்தும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கல்லாவை நிறைப்பதில்லை. அதனால் திரையரங்க உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து, எவ்வளவு பெரிய படத்தையும் கொஞ்ச நாட்கள் கழித்தே ரிலீஸ் செய்யலாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கும் நஷ்டம் தான் என்றாலும், அவர்களுக்கும் ரசிகர் மன்றத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று தெரியவில்லை. எனவே, லிங்கா படத்தை கூட ஒரு வாரம் கழித்து ஆர ஆமர தான் ரிலீஸ் செய்தனர். ஐ படம் எப்படி என்று தெரியவில்லை.

கயல் படமும் கூட அவ்வண்ணமே ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்யப்பட்டது.

ஒரு படத்தை பார்க்கும் போது என்னுடைய குறைந்தப்பட்ச எதிர்பார்ப்பு ஆனது, வேறு எந்த படமும் என் நினைவில் குறுக்கிட கூடாது என்பது மட்டுமே. இந்த படத்தை பார்க்கும் போது, மைனா அளவுக்கு இல்லை, கும்கிக்கு இது பரவாயில்லை என்று இடைவிடாமல் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

அதுவாவது பரவாயில்லை, படத்தின் ஒரு கட்டத்தில் இந்த படம் ஆங்கிலத்தில் வெளியான The Impossible (2012) படத்தின் இன்ஷ்பிரேஷன் போலவே இருக்கிறதே என யோசித்தால், சந்தேகமே இல்லாமல் க்ளைமாக்ஸ் நெருங்குவதற்கு உள்ளாகவே The Impossible தான் என ஊர்ஜிதமாகி, ஊறுகாய் ஆனாது..

100 மார்க் எடுக்கும் Topper மாணவனின் ஆன்ஸர் பேப்பரை பார்த்து, ஒருவன் 3 மணி நேரம் காப்பி எடுத்து 2 மார்க் வாங்கினால் எவ்வளவு கடுப்பேறும்? அதே போல் தான், ஆங்கில / உலக சினிமாக்களை காப்பியடிக்கும் தமிழ் சினிமாக்களும் குறைந்தபட்சம் அதன் மூலத்தை கூட தொட முடியாமல் மண்ணை கவ்வி கடுப்பேற்றுகின்றன.

மெமெண்டோ படத்தை பார்த்த ஏ.ஆர்.முருகதாஸிற்கு, அந்த கதாநாயகனின் short term memory loss கான்செப்ட் மட்டும் தான் அவருக்கு பிடித்தது அல்லது புரிந்தது என்று அறியும் போது என்ன பெரிதாக பிரமிப்பேற்பட்டு விட முடியும்? இதேபோல், ஏ.எல்.விஜய், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் காப்பி அடிப்பதை கூட ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு ஏற்றுக் கொண்டாலும், மூலப்பிரதியில் அவர்கள் என்ன விஷயத்தை கவனித்தார்கள் என்பதையும், அட்லீஸ்ட் மூலப்பிரதியினை நகலெடுக்கும் நல்லதொரு ஜெராக்ஸ் மெஷினாக செயல்படவாவது இயக்குனர்கள் அவர்கள் தரப்பில் இருந்து நல்லபடியாக முயற்சி எடுத்தார்களா என்பதை கேள்விக்குள்ளாக்கினால், கேள்விக்குறிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

மோட்டார் பைக்கை பார்த்து ஒருவன் நுங்கு வண்டி செய்தால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தமாக இருக்கிறது தமிழ் இயக்குனர்களின் காப்பி பேஸ்ட் வித்தை.

முதலில் கயல் கதையை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்… முதல் சில சந்திப்புகளிலேயே காதல் மலர்ந்து விடும் காதலன் காதலி, சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகின்றனர். ஒருவரை ஒருவர் முடிந்தமட்டும் தேடுகின்றனர். ஒரு கட்டத்தில் சுனாமி அலைகள் சூறையாட காத்திருக்கும் கன்னியாக்குமரியின் ஒரு கடற்கரையில் நாயகனும் நாயகியும் சந்தித்து விட, சுனாமிப் பேரலையும் கரை பகுதியை தாக்க, ஆளுக்கொரு திசையாக பிரிந்து விடுகின்றனர். பின்னர் சேர்ந்து விடுகின்றனர். அவ்வளவு தான் கதை.

என்னுடைய தோழி ஒருத்தி, ஓரளவு விறுவிறுப்பான துப்பாக்கி படத்தையே fast forward button-ஐ நொங்கெடுத்து 15 நிமிடத்தில் பார்த்து விட்டதாக சொன்னார். இந்த படத்தை அவர் பார்த்து முடிக்க, அவருக்கு ஐந்து நிமிஷ அவகாசமே அதிகம் என்று நினைக்கிறேன். நமக்கும் கூட படம் பார்க்கும் போது, கைகள் Miss u fastfwd, என்று சோகமாக கவிதை(!) எழுதுகிறது.

கதை அறிமுகம், கதாநாயகன் அறிமுகம் எல்லாவற்றையும் voice overல் சொல்லி விட்டு, படத்தில் உள்ள பாட்டை தவிர்த்து விட்டு பார்த்தால், படம் முக்கால் மணி நேரம் வந்தால் அதிகம்! ஹீரோவும், அவனது நண்பனும் யார், என்ன செய்கிறார்கள், அவர்களது வாழ்க்கை பற்றிய தத்துவம் என்ன, போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் எப்படி அவர்கள் ரம்பத்தை போட்டு காதில் ரத்தம் வரவைக்கிறார்கள் என்பதெல்லாம் படத்தில் விலாவாரியாக சொல்லப்பட்டு கொண்டே இருக்கிறது. மனமோ ஒரு ஷார்ட் கமெர்ஷியல் ப்ரேக்குக்கு கூட வழியில்லாமல் தவிக்கிறது.

எல்லா பிரபு சாலமன் படத்தை போலவும், இந்த படத்திலும் பெரும்பாலானவர்கள் பயங்கரமான நல்லவர்கள். அவர்களை பார்க்கும் போது நமக்கே நைஸாக கால்கள் நடுங்குவதை உணர முடிகிறது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில், வரும் ஜமீன் குடும்பக் கதை மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது. குறிப்பிட்ட அந்த போர்ஷனை மட்டும், நான் மிகவும் ரசித்தேன். ஓடிப்போன பெண்ணின் தாத்தா மற்றும் அப்பாவின் characterization அவ்வளவு நேர்த்தி! அதுவே படம் முழுதும் நீண்டு இருந்திருந்தாலும் காண்டேறிருக்கும் என்றாலும், அந்த குறிப்பிட்ட போர்ஷன் குறும்படமாக வந்திருந்தால் 100/100 மார்க் கொடுத்திருப்பேன்.

ஹீரோவின் நண்பனாக வரும் கதாபாத்திரம், ஹீரோவிற்கு புத்தி சொல்கிறார், சொல்கிறார், சொல்லி கொண்டே இருக்கிறார். இப்படியெல்லாம் எனக்கொரு நண்பன் இருந்திருந்தால் என்றைக்கோ நான் காவி கட்டி காசி ஓடியிருப்பேன். இருந்தாலும், படத்தில் தாஜ்மஹால் பற்றிய ஒரு உரையாடலின் போது, “கவுன்சிலர் கிட்ட சொல்வோம்” என அடித்த டைமிங் ஃப்ரெஷ்ஷாக இருந்தது. ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்லையென்றாலும், இப்படி நிறைய காமெடிகள் இருந்திருக்கலாமே என தோன்றுகிறது.

படத்தின் இடைவேளையின் போது, உதயநிதி ஸ்டாலின் நண்பேண்டா ட்ரைலர் பார்த்தேன். முந்தைய படத்தை போலவே அதே ஹாரிஸ் ஜெயராஜ், அதே நயந்தாரா, அதே ஃபாரின் லொக்கேஷன், அதே ரொமாண்ட்டிக்கான காக்கா வலிப்புகள். எதற்காக இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்? என்னை கேட்டிருந்தால் இதற்கைய முந்தைய படமான இது கதிர்வேலன் காதல் படத்தில் இருந்து இரண்டு பாடல்களை உருவி போட்டிருந்தால் கூட எவனாலும் கண்டுபிடித்திருந்திருக்க முடியாது. என்னமோ போங்கய்யா !


இப்போதெல்லாம், இண்டர்வெல் முடித்து படத்திற்காக காத்திருப்பதே யுகம் கடப்பது போல் இருக்கிறது. ட்ரைலர்கள், மத்திய அரசு விளம்பரங்கள், தனியார் விளம்பரங்கள், முகேஷ் அப்க்ரேடட் விளம்பரங்கள் என முடித்து படம் ஆரம்பிப்பதற்குள், இதே படத்தை டோரண்ட்டில் டவுன்லோடியே முடித்திருக்கலாம். எல்லாம் முடித்து, படம் ஆரம்பித்தால் 2வது நிமிடமே பாட்டு… எனக்கெல்லாம் வெறி தலைக்கேறுகிறது…! என்னாத்த செய்ய என விட வேண்டியதாய் இருக்கிறது.

சமீபகாலமாக எந்த பாடல் வரிகளுமே, நடன அசைவுகளுமே புதுமையின் வாசனை கூட எட்டி பார்க்காமல் இருக்கிறது. அதே அரதப்பழமையான ரெக்கார்டை போட்டு போட்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். இதையெல்லாம் ஏன் யாருமே கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? நான் மட்டும் தான் பினாத்தி கொண்டிருக்கிறேனா?

என்ன தான் இமான் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளராக இருந்தாலும், இந்த படத்தை பார்க்கையில் இமான் மீது வெறுப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. 2ம் பாதி முழுக்க, பாட்டு பாட்டு என பாடல்களே வரிசை கட்டிக் கொண்டு, பிராணனை எடுக்கின்றன.

என்னுடைய எஞ்சினியரிங் மூளை, நன்கு படித்த இயக்குனர் சமுதாயத்திற்கு சொல்லும் சொல்லுதற்கரிய அறிவுரை என்னவெனில், நாங்கள் பாடம் எடுக்கும் போது Assume this duster as a fast moving train என ஒரு துடைப்பானையே ரயிலாக்கும் அசூமிங் வித்தையை, நீங்களும் கையில் எடுக்கலாம் என நினைக்கிறேன். பாடல்கள் வரவேண்டிய இடத்தில், தயவுசெய்து, Assume a sad song sung by here என போட்டு விட்டு, அடுத்து ஆக வேண்டிய வேலையை பார்க்கலாமே… என்ன கெட்டு விட போகிறது.

ஹீரோ ஹீரோயின் முகங்களே சில சமயம், ஓவர் க்ளோஸப்பில் காட்டும் போது சற்று திகிலாக இருக்கிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், பேய்ப்படத்தில் உலவ வேண்டிய சில கதாபாத்திரங்களையெல்லாம், இந்த அரிய கலைத்திரைப்படத்தில் உலவ விட்டு க்ளோஸப்பில் வசனம் பேச வைக்கும் போது, இதயம் எகிறி எகிறி திரையரங்கை விட்டு வெளியில் ஓட பார்க்கிறது. இது பரவாயில்லை, சில நேரங்களில் ஹீரோவின் நண்பனுக்கு ஜூம் போகும் போது, எங்கே ENT doctor போன்று தொண்டைக்குள்ளும் கேமராவை எடுத்து சென்று விடுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளை, நம் தமிழகத்தில் வரும் கலைத்திரைப்படங்கள் இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை.

இங்கே, The Impossible கதை பற்றி முடிந்தவரை சுருக்கமாக காணலாம். Henry Bennett, Maria Bennett தம்பதியினர் தமது மூன்று மகன்களுடன் (Age of 12, 7, 5) தாய்லாந்திற்கு 2004ஆம் ஆண்டின் X’Mas னை கொண்டாட வந்திருப்பார்கள். கிருஸ்துமஸிற்கு அடுத்த நாள், ஹோட்டலில் இருக்கும் போது சுனாமி வர, மொத்த குடும்பமும் திசைக்கு ஒருவராக பிரிந்து விட, மூத்த மகனும் அம்மாவும் மட்டும் அதிர்ஷ்டவசமாக சந்திப்பார்கள். மரியாவிற்கு சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தால் உடம்பில் பல இடங்களில் தீவிரமாக அடிப்பட்டிருக்கும். எப்படியோ அந்த ஊரின் உள்ளூர் ஆட்களின் உதவி கொண்டு, மருத்துவமனையில் அனுமதித்து, மீதி குடும்ப நபர்களை தேடி கண்டுபிடிப்பதே படம்.

சுனாமி ஆனது, கடல் உள்ளிழுக்கப்பட்டு, அன்றைய நாளே இருமுறை தாக்கிற்று. ஆனால் தசாவதாரம் படத்தில் வெறுமனே சுனாமி வருவது மட்டும் காட்சி படுத்தப்பட்டிருக்கும். கயல் படத்தில், கடல் உள் இழுக்கப்படுவது காட்டப்பட்டிருந்தாலும் இரண்டாம் முறை சுனாமி பேரலை தாக்குவதை காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால், The Impossible படத்தில் இது தெளிவாக காட்டப்பட்டிருக்கும். அதோடு கயல் படத்தில் கடல் ஊருக்குள் வரும் காட்சி, அச்சு அசல் The Impossible படத்தை பார்த்து எடுக்கப்பட்டிருக்கிறது என அந்த படத்தை பார்க்கும் எவரும் சொல்லி விட முடியும். ஆனாலும், சப்பைக்கட்டு கட்ட தமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததே பாராட்டுதலுக்குரிய விஷயம் என நம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ள மனம் வரவில்லை. ஏற்கனவே எடுத்த ஒன்றை ஏன் மறு உருவாக்கம் செய்ய வேண்டும். வேண்டுமானால் மொழிபெயர்த்து வெளிவிடலாமே?

ஏனென்றால், அங்கு சுனாமி என்பது படத்தின் ஆரம்பம், சுனாமிக்கு பிறகு மக்கள் எப்படி மருத்துவ வசதி போதாமையாலும், நெருங்கியவர்களை தொலைத்துவிட்டு எப்படி தவித்தனர் என்றும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மருத்துவமனைகளிலும் சரி, காவல் நிலையங்களிலும் சரி, இராணுவ அமைப்புகளிலும் சரி மனிதர்கள் எல்லோருமே எந்த ஊழலும், எந்த சோம்பலும் இன்றி சேவையே கண்ணாய் நினைத்து ஓடி உதவி கொண்டிருப்பார்கள்.

இந்த படத்தை பார்க்கும் போது, மேலை நாடுகளில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்றே நினைத்து கொண்டேன். தமிழகத்தில் சுனாமி பேரழிவு நடந்ததன் பின்னர் நடந்த கூத்துகளும், ஊழல்களும், கதறல்களும், அலட்சியங்களும், அரசியல் தந்திரங்களும் என் கண் முன்னர் வந்து போயின.

ஆனால் இப்போது எடுக்கப்பட்டிருக்கும், கயல் திரைப்படம் நாயகனும் நாயகியும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதில் மட்டுமே கருத்தாய் இருக்கிறது. படத்தின் நாயகனும் நாயகியும் இணைந்ததன் பின்பு, சுனாமியால் இறந்தவர்கள் பற்றியோ, தொலைந்தவர்கள் பற்றியோ, மக்களின் பசியை பற்றியோ, அவர்களுக்கு அதுநாள் வரை உதவியர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றியோ, அந்த பேரழிவினை காரணமாக கொண்டு தனிமனிதர்கள் செய்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை பற்றியோ, சிதைந்த வீடுகள், மசூதிகள், கோவில்கள் பற்றியோ நினைத்து கூட பார்க்கவில்லை. அத்தனை இடையூறுகளுக்கிடையிலும் சேர்ந்தார்கள், கட்டி அணைத்து புன்னகைத்தார்கள், படம் முடிந்தது.

மரியா பென்னட்டின் கால் மிகக்கொடூரமாக அடிப்பட்டு, மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் போது அவளது 12 வயது மகனும், அவள் அருகிலேயே துயரத்துடன் அமர்ந்திருப்பான். அவர்களை சுற்றி மருத்துவமனை முழுதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பார்கள். கண் விழித்த மரியா, தனது மகனிடம் உன்னால் முடிந்த உதவி ஏதேனும் அடுத்தவருக்கு செய்ய முயற்சி செய் என்று அனுப்பி விடுவாள். குடும்பத்தினரை தொலைத்து விட்டு தேடும் நபர்களை சந்தித்து, தொலைந்து போனவர்களின் விவரம் கேட்டு, அவனும் அவர்கள் தேடும் நபர்களை தேடி கண்டுபிடித்து தருவான்.

இந்த ஒரு காட்சியை, எழுதும் போதே அப்படி ஓர் நம்பிக்கை மனதில் பூக்கிறது. கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் கிடக்கும் போது கூட, தன் மகனை சுற்றியிருப்பவர்களுக்கு உதவி செய்ய அனுப்பி விடும் தாய் எல்லாம் பிரபு சாலமனுடைய கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகிறார். சுனாமியும், அதன் சி.ஜி. தொழில்நுட்பங்களும் தான் கண்ணிற்கு பளிச்சென்று தெரிகிறது. இப்படி எத்தனை நாளைக்கு தான் பிரம்மாண்டத்தின் வசீகரத்தை நம்பி குழந்தைகள் படத்தை எடுத்து கொண்டிருக்க போகிறோம்?

நான் மேலே சொன்ன காட்சியை ஒத்ததொரு காட்சி, கயல் படத்தில் வரும். ஒரு அம்மா தன் குழந்தையை தேடி திரியும். ஹீரோவும் நான் பார்த்திருக்கிறேன் என கூட்டி சென்று குழந்தையிடம் சேர்ப்பார். இதை தனியாக பார்க்கும் போது, நல்லதொரு காட்சி போல தோன்றாலும், ஆனால் இந்த காட்சி எங்கிருந்து Inspire ஆக பட்டிருக்கிறது என தெரிந்தவர்களுக்கும், அதன் மூலப்பிரதியினை மதிப்பவர்களுக்கும், தமிழ் சினிமாவின் படைப்பாற்றாலை எண்ணும் போது இரத்தக் கண்ணீர் வடிக்கும்.

தமிழ் இயக்குனர்கள் காப்பி அடிக்கவாவது சரி வர கற்று கொள்ளுங்கள், ரெண்டரை மணி நேரத்தில் நாங்களும் எத்தனை தான் டீ குடித்து, சிகரெட் புகைத்து வாசக்கதவில் காவல் காப்பது…?

No comments:

Post a Comment