Thursday, 30 August 2012

ஸ்வாதி ராஜீவ் (3)


அவனுக்கு வந்த கனவு போலவே அவளுக்கும் ஒரு கனவு வந்தது குறித்து ராஜீவ்க்கு ஆச்சர்யம் பீறிட்டது. இதை பற்றி அப்போதே கேட்டு விடலாமா என்று யோசித்து, ஹாஸ்பிட்டலில் வைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டான். சற்று நேரத்திலே நிர்மலாவும், ஸ்வாதியும் விடைபெற்று ஹாஸ்டல் கிளம்பினர். அன்பு தான் ஹாஸ்பிட்டல் வாசல் வரை சென்று ஆட்டோ ஏற்றி அனுப்பினான். ரோஹித் அவர்களுடன் போவதை தவிர்த்து என்னுடனே இருந்து கொண்டான். சற்றும் எதிர் பார்க்காத போது, “நீங்க அவங்களை லவ் பண்றீங்களா ராஜீவ்” என்று கேட்டு விட்டான், ராஜீவிற்கு என்ன சொல்வது என்று ஒரு கணம் குழப்பம் வந்து விட்டது, உண்மையை சொன்னால் எப்படி எடுத்து கொள்வானோ என்று சற்று தயக்கத்துடனே ஆமாம் என்று ஒத்து கொண்டான். அவன் முகம் மலர்ந்து சந்தோஷத்துடன் ”அப்பிடினா சீக்கீரம் சொல்லிடுங்க ராஜீ, அவங்க உங்களுக்கு ஏத்த Pair தான், அதில சந்தேகமே இல்லை” என்று சொன்ன போது தான் ராஜீவ்க்கு அப்பாடா என்றது. உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே என்று சொல்ல வாயெடுத்து கேட்காமல் விட்டு விட்டான், அதை எப்படி கேட்பது என்று வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான், அவன் மலர்ந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது வேறு திசை பார்த்தான். அவனின் முக மாற்றத்தை கவனித்த ரோஹித் என்ன ஆச்சு என பதற்றமாய் விசாரித்தான், ஒன்னுமில்லை என்று ராஜீவ் மழுப்ப பார்த்தான். பிறகு அவனாக புரிந்து கொண்டு “ பாஸ், நான் 1st yearல ஸ்வாதியை பண்ணதெல்லாம் லவ்வே இல்லை பாஸ், 7 வருஷம் boyses schoolல படிச்சிட்டு இங்க வந்து பார்த்தா, பொண்ணுங்களா இருக்கவே, ஆவேசப்பட்டுட்டேன், இப்ப அதையெல்லாம் நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்கு, அதையெல்லாம் இன்னுமா நினைச்சுட்டிருக்கீங்க , விடுங்க பாஸ், ரொம்ப பீல் பண்றவங்களா பார்த்தா எனக்கு சிரிப்பு வந்துரும்” என்று சொல்லி முடிக்க ராஜீவ் சிரித்து விட்டான். ராஜீவ் சிரிக்க , ரோஹித்தும் சிரித்து விட்டான். அந்நேரம் பார்த்து அன்பு உள்ளே நுழைய, அவன் எதுக்கு டா சிரிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க அவர்கள் அவனுக்கு கதையை முதலில் சொல்ல வேண்டியதாய் போயிற்று. முழுதும் கேட்டு விட்டு ”இதுக்கு தான் புரண்டு புரண்டு சிரிச்சீங்களா, எனக்கு சிரிப்பே வரலையே” என்று சொல்லி அவர்களை வெறுப்பேற்றி ஹாஸ்பிட்டலை விட்டு எல்லோருமாக ராஜீவ் வீட்டிற்கு கிளம்பினர். ராஜீவ்வை தானே போய் கொள்வதாக சொல்லியும் அவர்கள் வலுகட்டயமாக அவனை வீட்டில் விடுவதற்காக கிளம்பினர்.

வீட்டிற்குள் ராஜீவ்வும் அவன் சகாக்களும் சரியாக உள்ளே நுழையும் போது, ராஜீவ்வின் அம்மா கமலாவும், அப்பா பாலசுந்தரமும் இவனை பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டல் கிளம்பி கொண்டிருந்தனர். கொஞ்சம் இல்லையேல் காரில் கிளம்பி இருந்திருப்பார்கள். இவர்களை பார்த்ததும், ராஜீவ்வின் அம்மா கண்களில் நீரை வைத்து கொண்டு ராஜீவ்வை கட்டி அணைத்து உள்ளே கூட்டி சென்றார்கள். நிர்மலா தான் இவர்களுக்கு விஷயத்தை சொல்லி விட்டு இருந்தாள், ராஜீவ்வின் அம்மா அரை நாள் லீவ் விடுத்து வந்திருந்தார்கள். ராஜீவ்வின் அம்மா ஹாஸ்பிட்டலில் என்ன மருத்துவம் செய்தார்கள் என்று அன்புவிடமும் ரோஹித்திடமும் விசாரித்து தெரிந்து கொண்டார்கள். மனது கேட்காமல் ராஜீவ்வின் அம்மா அவர்களது குடும்ப மருத்துவரை தொடர்பு கொண்டு வந்து பார்த்து விட்டு செல்லுமாறு கேட்டு கொண்டார். ராஜீவ்வும், அவரது அப்பாவும் அதெல்லாம் தேவையில்லை என்று எவ்வளவோ தடுத்தும் கூட ராஜீவ்வின் அம்மா கேட்பதாய் இல்லை. ராஜீவ், அவர்கள் நண்பர்கள் இருவரையும் வீட்டிற்கு போக சொல்லி அவனது அறையில் வந்து படுத்து கொண்டான். அவனுடைய கைகள் அவனது செல்போனை எடுத்து ஸ்வாதியிடம் பேசலாம் என்று பரபரத்து கொண்டிருந்தது. ஒரு மணி நேர தனிமை அவனுக்கு அப்போது மிக தேவையாக இருந்தது. ஆனால், அவனது அப்பாவும், அம்மாவும் இவனை கவனித்து கொள்வதற்காக இவனை கொஞ்சமும் விலகாது இருந்தார்கள். ராஜீவ்வின் அம்மா சட்டு சட்டென்று அழ தொடங்குபவராய் இருந்தார். “நான் வேணும்னா வேலையை விட்டு உன்னை பத்திரமாய் பாத்துகிட்டுமா கண்ணு” என்று கேட்டு ராஜீவ்வை கலவரபடுத்தினார்கள். ராஜீவ் அதெல்லாம் வேண்டாம் என்று தான் சின்ன குழந்தை இல்லை என்றும் தான் எருமை மாடு கணக்காக வளர்ந்தாயிற்று என்றும் சொல்லி சமாதான படுத்த வேண்டியதாயிற்று. இவன் தன்னை எருமை மாடு என்று பேச்சு வழக்கில் சொல்லி கொண்டிருக்கும் போது, பாலந்தரத்திடம் ஒரு நகைப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்திருக்கவில்லை. சற்று நேரத்திலே ராஜீவ்வின் குடும்ப மருத்துவர் வந்து இவனை சரிபார்த்து, ஒன்றும் பயப்படுவதிற்கில்லை என்று ஆறுதலை மட்டும் சொல்லி, Consulting fees ஆக 2000 ரூபாயை பாலசுந்தரத்திடம் வாங்கி சென்றார்.

அவர் சென்ற பிறகு தான் ராஜீவ்வை அவனது அறையில் படுக்க சொல்லி கதவை சாத்தி சென்றார்கள். அவனது அம்மா சென்ற சற்று நேரத்திலே சித்ரா உள்ளே நுழைந்து ராஜீவ்வை நலம் விசாரித்து, அனுமார் கோவிலில் பெற்ற செந்தூரத்தை ராஜீவ் நெற்றியில் பூசி, ஒரு அனுமார் அட்டை படத்தை தலையணை அடியில் வைத்து சென்றாள். அப்பாடா என்று நிம்மதியாக அவள் சென்ற பிறகு கதவை தாளிட்டு கொண்டான்.

ராஜீவ் ஸ்வாதிக்கு போன் செய்யலாம் என்று போனை கையில் எடுத்த போதே அவளிடம் இருந்து “hw u feel nw?”  என்று sms வந்தது. அதை பார்த்து ரொம்பவும் உற்சாகமாகி அவளுக்கு போன் செய்தான். இவ்வளவும் நாளும் பேசிய பெண் தான் என்றாலும், இன்று அவளிடம் பேசுவது வித்தியாசமான ஒன்றாய் இருந்தது, அவன் காதலை சொல்லியதற்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாலும், இப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவன் கைவெட்டு வலியினை எல்லாம் மறக்க செய்திருந்தது. ராஜீவ் காலேஜ் போகவில்லை என்பதற்காக அவளும் ஏன் போகாமல் விட வேண்டும், ராஜீவ்விற்கு வந்த கனவு அவளுக்கும் ஏன் வர வேண்டும் என்பன போன்ற இயல்பான கேள்விகளுக்கு பின்னே காதலே இருக்க கூடும் என்று நினைக்கும் போதே ராஜீவ்விற்கு மனதிற்குள் குளிர்ச்சியான உணர்ச்சி ஏற்பட்டது.

”ஹலோ”

“சொல்லு ராஜீ… எங்க இருக்க “

“நீங்க கிளம்பன கொஞ்ச நேரத்திலே நாங்களும் கிளம்பிட்டோம், இப்ப வீட்ல இருக்கேன்… என்ன பண்ற…”

“சும்மா ரூம்ல பேசிகிட்டு இருக்கோம்… நீ என்ன பண்ற..”

”ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்,  நேத்து சொன்னது பத்தி யோசிச்சியா?”

“எது?”

“உன்னை பிடிச்சிருக்குனு சொன்னேனே…. ஏன், மறந்துட்டியா?”

“அது தான், அப்பவே சொல்லிட்டேனே, என்னால இது பத்தி யோசிக்க முடியாதுனு”

“So…”

” So னா என்னா சொல்றது….”

“என்ன காரணம்…”

”கண்டிப்பா தெரிஞ்சாகனுமா”

“நாங்க பணக்காரங்க, அது தானே… பணக்காரங்கனா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒருத்தன் ஏழையா பொறக்கறது தப்பில்லை, ஏழையா சாகறது தான் தப்பு, ஒருத்தன் பணம் சம்பாரிக்கிறது, அவ்ளோ பெரிய தப்பா… ஒண்ணு புரிஞ்சிக்கோ…”

“ஹேய் நிறுத்து நிறுத்து… நீ சொல்றதெல்லாம் யாரு கேக்கறது, அதெல்லாம் ஒன்னும் இல்லை… எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு, அதை நான் என் பணத்துல படிக்க வைக்கனும்னு ஆசை படறேன், அடுத்த வருஷம் அவ +2 முடிச்சு வெளிய வர்றா… அதுக்குள்ள நான் வேலை தேடி செட்டில் ஆகனும்.. அதுவுமில்லாம எங்க அப்பா அம்மா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க, அழுது கெஞ்சி கூட சம்மதம் வாங்க எனக்கு விருப்பமில்ல..  என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது சிக்கலாகிடும், அதுவுமில்லாம எங்க கிராமத்துல எங்க வீட்டை பத்தி எப்படி ஊருக்குள்ள பேசிப்பாங்கனு சொன்னா, நீயே உன் லவ்வை தூக்கி எறிஞ்சிறிவ… அவ்வளவு மட்டமா பேசிப்பாங்க… ”

“இத்தனை negatives யோசிக்கிற நீ ஏன் ஒரே ஒரு positive கூட யோசிக்க மாட்டிங்கிற”

“ஏன்னா அப்படி ஒண்ணு இல்லை…”

“நிஜமாலுமே நீ என்னை லவ் பண்லையா…”

“என்னை மாதிரி ஒரு பொண்ணால அதை பத்தி நினைச்சு கூட பார்க்க முடியாது ராஜீவ்… உனக்கோ எனக்கோ அதுக்கு கொடுத்து வைக்கல ”

”கொடுத்து வைக்கலன்னுலாம் சொல்லாத, அப்பறம் ஏன் உனக்கும் எனக்கும் ஒரே கனவு வரணும்”

”என்ன கனவு…”
”இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னேனே…”

“ஹய்யோ ராஜீவ், உனக்கு வந்த அதே கனவு எனக்கு வரல, என் கனவுல நீ நான் ரோஹித் அன்பு நிர்மலா எல்லோரும் ஒரு ஜீப்ல ஒரு forest area போற மாதிரி தான் வந்தது… “

“இதை ஏன் அப்பவே சொல்லல”

“அப்பறமா சொல்லிக்கலாம்னு தான் விட்டுட்டேன், ஆனா அதுக்குள்ள நீ இப்பிடி எடுத்துருக்க …. “

”நீ பொய் சொல்ற…”

“நான் ஏன் பொய் சொல்னும்…”

“தெரியல… ஆனா நீ பொய் சொல்ற… அதை விடு, நான் காலேஜ் போலங்கறதுக்காக நீயும் ஏன் போகாம விட்ட…”

“ஹய்யோ… இதையும் நீ..”

“சரி விடு ஸ்வாதி, இதுக்கும் ஏதாவது சொல்ல தான் போற… சரி இனிமேல் என்ன..”

“இனிமேல் இது பத்தி பேச்சு எடுக்க வேண்டாமே ராஜீ… நாமே நண்பர்களாகவே இருந்திடலாமே..”

”சரி, நானும் கூட இனிமேல் இதை பத்தி பேச பிரிய படல, ஆனா இனி நண்பர்களாக இருக்கிறதெல்லாம் சாத்தியமில்ல.. அதனால உங்கிட்ட இனிமேல் பேச வேண்டாம்னு பார்க்கிறேன்….”

“என்ன இது, இத்தனை நாள் பிரண்டா இருந்த உன்னால இனிமே இருக்க முடியாதா என்ன…”

”நான் பர்ஸ்ட் இயர்லயே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டனு உனக்கு தெரியாது, அதனால இனிமே பிரண்டா பழகுறதுலாம் சான்ஸே இல்லை…”

”பொய் சொல்லாத…”

“நான் ஏன் பொய் சொல்னும்”

”எனக்கு எவ்ளோ guilty ஆ இருக்கு தெரியுமா…”

”அதுக்கு என்னால என்ன பண்ண முடியும், ஒரு ஸாரி தான் கேக்க முடியும் ”

“இப்படி பேசாத ராஜீ, ரொம்ப வலிக்குது…”

“ ஹேய், எனக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா… உனக்கு தான் என்னை பார்த்தா விளையாட்டா இருக்கு ”

” உனக்கு வலிக்குதுங்கறதுக்காக என்னை எங்க வீட்டை மறந்து உன்னோட வர சொல்றியா ராஜீ “

” நான் அப்படிலாம் சொல்லல ஸ்வாதி, சரி அதெல்லாம் விடு, நீ என்னை லவ் பண்ணலைன்னா மட்டும் மேற்கொண்டு நாம பேசிக்கலாம், இல்லைன்னா வேண்டாம்…”

“பிளாக்மெய்லா ராஜீவ்?”

”என்னை கோவப்படுத்துறதுக்காகனே கேள்வி கேக்காத, 3 வருஷத்துக்கும் மேல உன்னை மனசுக்குள்ளேயே லவ் பண்ணியிருக்கேன், நீ எனக்கில்லைனு தெரிஞ்சதுக்குப்பறமும் உன் கூட நான் எப்படி பேசி பழக முடியும்… எனக்கு கஷ்டமா இருக்காதா…”

”ஏன் அதே மாதிரி என்னை யோசிச்சு பார்க்க மாட்டிங்கற… 3 வருஷத்துக்கும் மேல உன் கூட நான் பிரண்டா இருந்திருக்கேன், உன் கூட என்னால எப்படி பேசாம இருக்க முடியும்…”

”ஏன், அன்பு, ரோஹித்லாம் இருக்காங்கல்ல…”

”செருப்பால அடிப்பேன். என்னை என்னான்னு நினைச்சிட்டு இருக்க… உன்னை பார்க்கற மாதிரி தான் அவங்களையும் பார்க்கிறனா… அவங்களையெல்லாம் எனக்கு உன் மூலமா தான் தெரியும்… ரோஹித்தை பத்தி எப்படி உன்னல பேச முடியுது, அவன் இது வரைக்கும் என் கிட்ட பேசி நீ பார்த்து இருக்கியா…. .“

“என்னை விட்டுருனு தான் சொல்றேன், நான் வேற எதையும் mean பண்ணல…”

“அது எப்படி டா முடியும்…”

“அதை பத்தி வருத்தப்படற நிலைமைல நான் இல்லை”

என்று சொல்லி இணைப்பை எதிர்பார்க்காத போது துண்டித்து விட்டான். துண்டித்த பிறகு தான், தான் எவ்வளவு ஆணாதிக்கமாகவும், கீழ்த்தனமாகவும் நடந்து இருக்கிறோம் என்றே அவனுக்கு புரிந்தது. எது நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கட்டும், இது ஒரு முடிவிற்கு வருவது எவ்வளவோ பரவாயில்லை, எதற்காக மனதினுள் வீண் ஆசையை வளர்க்க வேண்டும் என்று மனதை சமாதான படுத்த முயன்றான். அடுத்த 2 விநாடிகளிலே ஸ்வாதியிடமிருந்து அழைப்பு வந்தது. ராஜீவ் எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து ஸ்வாதி பல முறை தொடர்ந்து கால் செய்தும் ராஜீவ் ஏற்க மறுத்தான்.

அழைப்பை ஏற்காததால், போனை எடுக்க சொல்லி sms அனுப்பினாள். எதற்கும் பதலளிக்காமல் வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அவன் அடைந்திருக்கும் வெறுப்பு எதன் மேல், யார் மேல் என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒரு குருட்டு தனமான ஒரு வெறுப்பில் இருந்தான். அவன் செயல்கள் எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒன்று என்று தெரிந்தாலும், அவனுக்கு என்ன மாதிரியான ஆற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் அவள் வரிசையாக அனுப்பி கொண்டிருந்த குறுஞ்செய்திகளை மட்டும் திரையில் பார்த்து கொண்டிருந்தான்.


                                           (தொடரும்…..)



 

Monday, 27 August 2012

ஸ்வாதி ராஜீவ் (2)


அன்று காலை 08.45 மணி ஆகியும் ராஜீவ் எழாததால் அவள் வீட்டில் வேலை செய்யும் சித்ராவே அவனை எழுப்பி விட வேண்டியதாய் போயிற்று, ’அண்ணா, அண்ணா’ என்று இரண்டு முறை கூப்பிட்டு பார்த்தாள். அப்படியும் எழாததால், கவிழ்ந்த படி படுத்திருந்த அவனது  தோள்களை மெலிதாக குலுக்கினாள், இவளது கை பட்ட உடனே, என்ன கெட்ட கனவோ ராஜீவ் இழுத்து இழுத்து மூச்சு விட்டான், இதை பார்த்து, சித்ரா, அண்ணா அண்ணா என்று பெரிதாக கத்த ஆரம்பித்தாள், ராஜீவ் ரொம்ப நேரமாக எதையோ சொல்ல  வாயெடுத்தான், ஆனால் வார்த்தை வரவில்லை, 4-5 முயற்சிகளுக்கு பின், ரொம்பவும் முனகிய குரலில், தண்ணீ என்றான். இதை கேட்டதும், அவசரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வீடு துடைத்து கொண்டிருந்த தண்ணீரை கொஞ்சம் கையில் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள், அப்போதும் அவனிடம் எந்த முன்னேற்றமும் இல்லை, அவனை எழுப்ப ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற பதற்றத்தில் அவனை புரட்டினாள், புரட்டியதில் அவனாக மற்றொரு முறை புரண்டு முதுகு கீழே படும் படி விழுந்தான். விழும் போது தண்ணீர் துடைத்து கொண்டிருந்த வாளி மீது விழுந்ததில் வாளியில் இருக்கும் மொத்த தண்ணீரும் இவனது முகத்திலும் உடம்பிலும் கவிழ விழித்து கொண்டான். விழித்து பார்த்தால், அந்த ப்ளாஸ்டிக் வாளி உடைந்து போயும், உடைந்த ஒரு கூரான பகுதியின் வாளி ராஜீவ்வின் இடது முழங்கையில் கிழித்து ரத்தம் வர ஆரம்பித்தது. ராஜீவ்விற்கு சற்று நேரம் தாம் எங்கு இருக்கிறோம் என்று நினைப்பே வரவில்லை, சுற்றி முற்றி திரும்பி பார்த்தான். அவனுடைய அறையில் சித்ரா நின்று கொண்டிருந்ததை பார்த்தான், இவன் பார்த்ததும் சித்ரா ஓவென்று அழத் தொடங்கினாள். ராஜீவ் எழுந்து நின்று அவளை சமாதான படுத்துவதற்குள் அவள் அறையை விட்டு ஓடி விட்டாள். உடம்பெல்லாமும் ஒரே துர்நாற்றமாக இருந்தது. மணியை பார்த்தான் 08.47, இனி காலேஜ்ஜிற்கு போக முடியாது என்று முடிவெடுத்தவனாய் அன்புவிற்கு போனில் தொடர்பு கொண்டு, தான் வர முடியாது என்பதை ப்ரொபசரிடம் சொல்லி விடுமாறு சொல்லி வைத்தான். சித்ரா பயந்து போய், ட்ரைவர் குமாரை கூப்பிட்டு வந்திருந்தாள். குமார் வந்ததும் ராஜீவ்வின் கையை பார்த்தார், ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. எங்கோ ஓடியவர், சற்று நேரத்தில் நிறைய மருந்தகளுடனும், ப்ளாஸ்த்திரிகளுடனும் வந்தார். சித்ரா அழுந்து கொண்டே, இப்போது கட்ட முடியாது எனவும், ராஜீவ் உடல் முழுவதும் அழுக்கு தண்ணீரால் நனைந்து இருக்கிறது, செப்டிக் ஆகி விடும் என்று அழுது கொண்டே தெளிவாக சொன்னாள். பிறகு குமாரும், சித்ராவும் ராஜீவ் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேட்காமல் அவனை குளிக்க வைத்து, கையில் ப்ளாஸ்த்திரி போட்டு விட்டார்கள். சித்ரா அவ்வளவு கண்ணீரை எங்கு தான் வைத்திருந்தாளோ, கட்டு போடும் வரை அழுந்து கொண்டே இருந்தாள். கட்டு போட்ட பிறகு தான் அவள் அழுவதை நிறுத்தி அவள் வேலையை பார்க்க சமயலறைக்குள் நுழைந்தாள்.

அம்மாவும், அப்பாவும் எங்கே போனார்கள் என்று ராஜீவ் கேட்ட போது, ’அம்மா ஆபீஸ் போய்ட்டாங்க… அப்பா கம்பெனியில இருந்தே இன்னைக்கு விடியக்காலைல தான் வந்தாரு, தூங்கிட்டு இருக்காரு’ என்று சமையல் அறையில் இருந்து வெறும் சத்தம் மட்டுமே பதிலாக வந்தது.  

டி.வி. பார்க்கலாம் என்று ஸ்விட்சை போட்டு, சோபாவில் உட்கார்ந்த வேகத்தில் கரண்ட் போனது. எதுவும் கேட்காமலே ‘சனிக்கிழமை ஷட் டௌன்’ என்று சமையலறையில் இருந்து பதில் வந்தது. ராஜீவ் திரும்பி மணியை பார்த்தால் மணி 09.30, இனி 04.30 மணிக்கு தான் கரண்ட் வரும் என்பதால் ராஜீவ், காலேஜ் செல்லலாம் என யோசித்து, மறுபடியும் அன்புவிற்கு போன் அடித்து, லீவ் சொல்ல வேண்டாம் என்றான். அதற்கு மறுமுனையில் அன்பு சொன்னது கேட்டு தலையே சுற்றி விட்டது. ‘டேய், அயோக்ய பயலே, நீ லீவ் போட்டுட்டனு சொல்லி நானும் போக வேண்டாம்னு முடிவு பண்ணி, ரோஹித்தையும் போக விடாம பண்ணி இப்ப அவனோட மார்னிங் ஷோ கிளம்பிட்டு இருக்கேன், நீ வரலன்னு சொன்னதுக்கு அப்பறம் ஸ்வாதியும், அவளுக்கு உடம்புக்கு ஏதோ பண்ணுதுனு சொல்லி அவளும் கிளம்பறன்னு சொல்லி கிளம்பிட்டா, அவ கிளம்பிட்டான்னு நிர்மலாவும் கிளம்பிட்டா. இப்படி எல்லாத்தையும் கிளப்பி விட்டுட்டு நீ மட்டும் கிளாஸ்க்கு போக போறீயா, செருப்பால அடிப்பேன், ஒழுங்கா தியேட்டர்க்கு 10.30 மணிக்குள்ள வந்து சேரு டா’ என்றான். ராஜீவ்க்கு சிரிப்பு தான் வந்தது. நேற்று ராத்திரி தான், சினிமாவை அந்த திட்டு திட்டியிருந்தான், இப்படி திட்டி அடுத்த நாளேவா சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்று அவனது டூ வீலரை எடுத்து கொண்டு தியேட்டருக்கு கிளம்பினான்.

ராஜீவ் இப்போது சென்று கொண்டிருக்கும் தியேட்டர் அவனுக்கு  ரொம்ப பிடித்தமான தியேட்டர், அதனால் தான் என்ன படம் பார்க்க போகிறோம் என்று கூட கேட்காமல் கிளம்பி விட்டான். அவன் நண்பர்களுடனான பல சந்தோஷ தருணங்கள் இந்த தியேட்டரில் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அந்த தியேட்ட்ரின் பெயர் R.K.தியேட்டர், ரொம்பவும் பிரமாதமான தியேட்டர் என்று சொல்லி விட முடியாது, நடுத்தரமான தியேட்டர் தான், கல்லூரிக்கு வெகு அருகில் இருப்பதாலும், நண்பர்கள் எளிதில் கூட வசதியான இடமாகவும் இருப்பதால், இது அவனுக்கு ஒரு பிடித்தமான இடமாக மாறி போனது.

கல்லூரி சேர்ந்து 4 வருடங்கள் ஆனதே கூட்டி பார்த்தால் தான் தெரிகிறது, என்று அடிக்கடி அன்பு ராஜீவ்விடம் சொல்லி கொண்டிருப்பான். அன்புவை பற்றி யோசிக்கும் போது, ராஜீவ்விற்கு நிச்சயம் இந்த தியேட்டர் ஞாபகத்தில் வராமல் இருக்கவே முடியாது. கல்லூரி சேர்ந்த முதல் வாரம் வரைக்குமே ராஜீவ்வால் யாரிடமும் நெருங்கி பழக முடியாமல் இருந்தது. எல்லோரும் சடங்குக்காக பேசுவது போலவே இருந்தது. கல்லூரி பாடங்களும் அநியாயத்திற்கு அறுத்து தள்ளியது. அந்த மாதிரியான ஒரு சாதாரண நாள் காலையில், அன்பு ராஜீவ் தோள் மேல் கையை போட்டு, ’பாஸ் க்ளாஸ் ரொம்ப போர் அடிக்குது படத்துக்கு போலாமா?’ என்று கேட்ட நிமிடம் முதலே ராஜீவ் தன்னை அன்புவிற்கு நண்பனாக்கி கொண்டான். அப்போதிருந்து ராஜீவ்வை கல்லூரியில் எங்குமே அன்பு இல்லாமல் பார்க்க முடியாது, அந்தளவு இணை பிரியாமல் ஒன்றாகவே வலம் வந்தனர்.

நிர்மலா கிராமத்து பள்ளியில், தமிழ் மீடியம் படித்ததால் கல்லூரி துவங்கிய நாட்களில் ரொம்பவும் தடுமாறினாள், அந்த ஆரம்ப கட்டத்தில் அவளுக்கு நட்பு வட்டமும் பெரிதாய் அமையாமல் கஷ்டப்பட்டு இருப்பதை அறிந்து ராஜீவ் அவளுக்கு உதவியாய் இருந்தான். அவள் எந்த மாதிரியான ஜடை போட வேண்டும், என்ன மாதிரியான ஆடை அணிய வேண்டும், ஆங்கில உச்சரிப்புகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது அவளை கவனித்து வந்தான். ஆரம்பத்தில் அவன் அதையொரு உதவியாய் தான் நினைத்து செய்து கொண்டு வந்தான். ஆனால் ரொம்ப சீக்கரத்திலே அவள் ராஜீவ்க்கு தோழியாய் மாறியது இந்த தியேட்டரில் வைத்து தான். ஒரு நாள் ராஜீவ்வும், அன்புவும் மார்னிங் ஷோ முடித்து கல்லூரியில் வந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, நிர்மலா வந்து காலையில் எங்கு காணாமல் போனீர்கள் என்று கேட்க, அவர்கள் தியேட்டரிற்கு சென்று படம் பார்த்தோம் என்று சொல்ல அவள், ‘தியேட்டருக்கா…’ என்று ஆச்சர்யத்தில் விரிந்தது இன்னமும் ராஜீவ்விற்கு ஞாபகம் இருக்கிறது. எதற்காக அவ்வளவு ஆச்சர்யம் காட்டுகிறாய் என்று கேட்டதற்கு, தான் இன்னமும் தியேட்டருக்கே போனதில்லை எனவும், தன்னுடைய கிராமத்தில் அந்த வசதியில்லை எனவும், பக்கத்து வீட்டு டி.வி.யில் தான் சில படங்கள் பார்த்திருப்பதாய் சொல்லி, தன்னையும் ஒரே ஒரு முறை தியேட்டருக்கு அழைத்து செல்லுமாறு கேட்டாள். ராஜீவ் இந்தளவு வெள்ளிந்தியை தன் வாழ்நாளிலே பார்த்திராததால், அந்த நிமிடமே அவளை படத்திற்கு கூட்டி செல்ல முடிவு எடுத்தான். அந்த நாள் மேட்னி ஷோவிற்கு 10 நிமிடம் இருந்தது. உடனே ராஜீவ் அன்புவிடம் சாப்பிட்டது போதும் கை கழுவி விட்டு வா, என்று சொல்லி நிர்மலாவையும் கூட்டி கொண்டு தியேட்டருக்கு சென்றான். அவளது முதல் நாள் தியேட்டர் அனுபவங்களை பல மாதங்களாக பார்ப்பவரிடத்திலெல்லாம் அலுக்காமல் சொல்லி திரிந்து கொண்டிருந்தாள்.

நிர்மலா தங்கியிருக்கும் ஹாஸ்டல் ரூமில் ஸ்வாதி தங்கி இருப்பதால் தான், ராஜீவ்விற்கு ஸ்வாதியின் அறிமுகம் கிடைத்தது. கல்லூரி துவங்கிய 3வது மாதத்திலே ஸ்வாதி ராஜீவ்விற்கு அறிமுகம் ஆகி விட்டாள். அது ஒரு 3 மாதம் வரை பார்த்தால் புன்னகைக்கும் ஒரு நட்பாகவே இருந்தது. அப்போதே ராஜீவ்விற்கு அவளை பிடித்து விட்டிருந்தது. ஒரு நாள் ஸ்வாதி ராஜீவ்விடம் வந்து, ரோஹித்னு ஒருத்தன் என்னை லவ் பண்றேன்னு சொல்லி டார்ச்சர் பண்றான், கொஞ்சம் என்னன்னு கேக்கறீங்களா என்று தூரத்தில் இருந்தே ராஜீவ்க்கு ஆளை காட்டினாள். ராஜீவ்க்கு இந்த மாதிரி மிரட்டி வைப்பதில் எல்லாம் முன்பின் பரிச்சயம் இல்லை, ஆனாலும் முடியாது என்று சொல்ல முடியாததால் துணிந்து இறங்கினான். அந்த நாளை நினைத்தால் இப்போதும் ராஜீவ்விற்கு பிரமிப்பே மேலிடுகிறது. அவள் காட்டிய ஆள் நல்ல வாட்ட சாட்டமான ஆளாகவும், ஸ்மார்ட்டான ஆளாகவும் இருந்தான். அவன் ஸ்வாதியின் க்ளாஸ் மேட்டாக இருந்தான். அவனை மிரட்டுவதும், பணிய வைப்பதும் அந்த நிமிடத்தில் முடியாது என்று தெரிந்து இருந்தாலும் ராஜீவ் அவனை நோக்கி சென்று, அவன் முன் நின்றான். அவன் கேண்டினின் முன் நின்று கொண்டு போகும் வருபவர்களிடத்திலெல்லாம் எதையோ கேட்டு கொண்டிருந்தான். ராஜீவ் போய் நின்றதும் ரோஹித், ‘பாஸ், 100 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?’ என்று கேட்டான். ராஜீவ்வால் அப்போது தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியவில்லை, எதுவும் சொல்லாமல், ‘இந்தாங்க பாஸ்” என்று இரண்டு 50 ரூபாய் தாள்களை நீட்டினான். ’தேங்க் யூ’ என்று புன் சிரிப்போடு வாங்கி, கேண்ட்டின் கவுண்ட்டரில் கொடுத்து சாப்பாடு வாங்கி, ஒரு காலியான மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். ராஜீவ் அவன் அருகே உட்கார்ந்து, ‘பாஸ், நான் ஸ்வாதியோட friend, நீங்க லவ் சொன்னதால ஸ்வாதி ரொம்ப அப்ஸெட் ஆகி காலேஜ் மாத்தறது பத்தி யோசிக்கிறாங்க, எங்க friend எங்களை விட்டு பிரியறது ரொம்ப கஷ்டமா இருக்கு, உங்களால அவங்களை லவ் பண்ணாம இருக்க முடியுமா பாஸ்?’ என்று கேட்டான். அதை கேட்டு ரோஹித் ரொம்பவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்திருக்க கூடும், இல்லாமல் போனால் ராஜீவ் அப்படி சொன்னவுடனே ரோஹித் மன்னிப்பு கேட்டு, இனிமேல் இது போல் நடக்காது என்று சொல்லி அனுப்பியிருக்க மாட்டான். அதன் பிறகு ரோஹித் ஸ்வாதி இருக்கும் புறமே திரும்பாதவனாய் இருந்தான். பின்னாளில் ராஜீவ் அன்பு கூட ஒரு முறை ஐஸ் க்ரீம் கடையில் இருக்கும் போது, உள்ளே நுழைந்த  ரோஹித் ராஜீவ்வை பார்த்த பின் வெளியே போய் விட்டான். இது போல் 2-3 முறைக்கு மேல் ராஜீவ்வை கண்டவுடன் ரோஹித் ஒதுங்கி விடவே, ராஜீவ் ஒரு நாள் ரோஹித்திடம் சென்று ‘பாஸ், ஏதாவது படத்துக்கு போலாமா’ என்று கேட்டு அவனை நண்பனாக்கி தியேட்டருக்கு சென்றான். அதன் பின் தியேட்டர் போகும் போதெல்லாம் ரோஹித்தை கூட்டி செல்வது வாடிக்கை ஆகி விட்டது.

ஒவ்வொரு முறை யாருடனாவது தியேட்டருக்கு செல்லும் போதும், ராஜீவ் தவறாமல் ஸ்வாதியை வர சொல்லி கேட்பான். ஆனால் இன்று வரை பசங்களுடன் படத்திற்கு செல்ல கூடாது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருப்பதால் அவள் ஒவ்வொரு முறையும் மறுத்து விடுவாள். அவளை தியேட்டருக்கு கூட்டி சென்று அவளுடன் படம் பார்ப்பதற்காகவாவது அவளை மணக்க வேண்டும் என்று ராஜீவ் ஒரு செல்ல ஆசையை யாருக்கும் தெரியாமல் மனதினுள் வளர்த்து வந்தான்.

தியேட்டர் வாசலிலே ரோஹித்தும், அன்புவும் நின்று கொண்டிருந்தார்கள். வண்டியை பார்க் செய்து விட்டு டிக்கெட் கவுண்ட்டரில் நிற்கும் போது, அன்பு தான் ராஜீவ் கையில் இருக்கும் கட்டை முதலில் பார்த்தான். என்ன ஏது என்று ராஜீவ் சொல்லி கொண்டிருக்கும் போதே ரோஹித், ‘பாஸ் ரத்தம் நிக்காம வந்துட்டு இருக்குது, வாங்க ஹாஸ்ப்பிட்டல் போகலாம் என்று ராஜீவ்வை இழுத்து சென்று வண்டியில் உட்கார வைத்து விரைந்தான். இதற்குள் அன்பு ஸ்வாதிக்கும், நிர்மலாவிற்கும் சொல்லி விட்டிருக்க வேண்டும். அவர்களும் ராஜீவ் சென்ற 30 நிமிடத்திற்குள்ளாகவே ஹாஸ்ப்பிட்டலிற்கு வந்து சேர்ந்தனர்.

ரத்தம் உறைய வைப்பதற்காக ராஜீவ்விற்கு ஒரு ஊசி போட்டு அவனை 1 மணி நேரம் ஓய்வு எடுத்து செல்லுமாறு சொன்னார்கள்.

ஸ்வாதி அவனுக்கு என்ன ஆனது என்று அவன் சொல்ல ஒரு முறை கேட்டு விட்டு, அவன் அருகே நெருங்கி அப்படி என்ன கனவு அவன் கண்டான் என்று கேட்டாள். மற்றவர்கள் அனைவரும் ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் செய்வதற்காக அலைந்து கொண்டிருப்பதை உறுதி படுத்தி கொண்டு, அவன் கனவை சொல்ல ஆரம்பித்தான்.

‘நானும் நீயும் யாருமில்லாத ஒரு ரோட்ல கார்ல போய்க்கிட்டு இருக்கோம், நான் வண்டி ஓட்ட நீ எனக்கு பக்கத்துல உட்காந்துட்டு இருக்க , உடனே நீ என்னை அண்ணா அண்ணானு ரெண்டு முறை கூப்பிடற, நான் ஷாக்காகி உன்னை திரும்பி பார்க்கறான், நீ என்னை பார்த்து சிரிச்சிட்டு இருக்க, அப்புறம் என்னை பின்னாடி யாரோ தட்டற மாதிரி இருக்கேன்னு திரும்பி பார்த்தா, நமக்கு 4 குழந்தைங்க பிறந்திருக்கு, நான் அப்பிடியே ஷாக்காகி வண்டிய பாலத்து மேல இருந்து கீழ தள்ளி கடல்ல விழுந்தடறேன், அப்பறம் எழுந்து பார்த்தா நான் கட்டில் மேல இருந்து கீழ விழுந்திருக்கேன், என்னை அண்ணானு கூப்பிட்டது  யார்னு திரும்பி பார்த்தா வீட்டு வேலைக்காரி’ என்று ராஜீவ்.சொல்லி முடித்தவுடன் ஸ்வாதி குலுங்கி குலுங்கி சிரித்தாள். சிரித்து விட்டு ’எனக்கும் இதே போல ஒரு கனவு வந்துச்சு, ஆனா நான் ஒண்ணும் உன்னை மாதிரி காரை போய் கடல்ல தள்ளல’ என்று ராஜீவ்வை பார்த்து மறுபடியும் சிரித்தாள்.

                                                                                                            (தொடரும்...)

Thursday, 16 August 2012

ஸ்வாதி ராஜீவ் (1)


ராஜீவ் எப்படியும் இந்த முறை ஸ்வாதியிடம் தன் காதலை சொல்லி விடலாம் என்று புறப்பட்ட போது, அவன் இரு விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும் என்றே புறப்பட்டான். அவள் நிராகரிக்கும் பட்சத்தில் ஒன்று அவளை வற்புறுத்த கூடாது, இரண்டாவது தான் அழக்கூடாது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றே பேசி விட வேண்டும். ஆனால் அவளை பார்த்து பேசி முடித்திருக்கையில், ராஜீவ் அவன் எதை செய்ய கூடாது என்ற உறுதியுடன் சென்றிருந்தானோ, அந்த இரண்டையுமே செய்திருந்தான், ஏனெனில் அவனது காதலை அவன் பயந்தது போலவே ஸ்வாதி நிராகரித்திருந்தாள்.     

இரவு வீட்டிற்கு வந்த பின்பும் கூட அவளுடைய நிராகரிப்பின் தகிப்பு மனதினுள் அடங்காமலே இருந்தது. அவளுக்கு என்ன காரணம் இருந்து விட முடியும் இவனை நிராகரிப்பதற்கு என்று இரவு முழுதும் தகித்து கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கென உடனடியாக ஒரு காரணம் தேவைப்பட்டது. அழகு, நிச்சயம் கிடையாது, சரீர அழகு பார்க்கும் பெண்ணே இல்லை அவள். பாசமின்மையும் நிச்சயம் கிடையாது, அப்படி அவளுக்கு பாசம்  இல்லாமல் போனால் எதற்காக 6 வருடங்களுக்கு மேலாகவும் நட்பு பாராட்ட வேண்டும்… என்று அதுவா, இதுவா என்று அவனை அவனே கேட்டு கொண்டு, அவனுக்கே அவன் பதில் அளித்து கொண்டிருந்தான். இறுதியில் தான் ஒரு பணக்காரனே இருப்பதே அவளுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்க கூடும் என்று அவனே ஒரு முடிவிற்கு வந்தான். ஏனெனில் பேச்சின் ஊடே அவள் பலமுறை அவள் பணக்காரர்கள் மேல் உள்ள அவநம்பிக்கையை பகிர்ந்திருக்கிறாள். அதுமட்டுமில்லாமல் ராஜீவ் பணக்காரனாய் இருப்பதாலும், அவனது வீடு பங்களாவிற்கு நிகரான வீடு என்பதாலும், இதுநாள் வரை இவனது வீட்டிற்கு அவள் வருகை தருவிக்கவில்லை. அவள் அவனை நிராகரித்ததற்கு என்ன காரணம் இருக்க கூடும் என்று படுக்கையில் கிடந்து யோசித்து கொண்டே இருந்தான், அவனுக்கு அதை விட்டால் வேறு வழியும் தெரியவில்லை.

’ஏன் இந்த சமூகம் பணக்காரர்களை வெறுக்கிறது. ஏன் பணக்காரர்களை அறிவு கம்மியானவர்களாகவும், அதிர்ஷ்டமிக்கவர்களாகவும், சோம்பேறிகளாகவும், திமிர் பிடித்தவர்களாகவுமே பார்க்கிறது. பணக்காரர்களை கணவான்களாகவும், வள்ளல்களாகவும் பார்த்த காலமெல்லாம் போய் விட்டது. பணக்காரர்களை அட்டை பூச்சிகளை போல் சமூகம் ஆரம்பித்துவிட்டது. இது ஒன்றும் திடீரென்று சமூகத்திடையே ஏற்பட்ட அபிப்ராயம் அல்ல. காலம் காலமாக மக்களின் மீது விதைக்க பட்ட நச்சு விதை. அந்த விதையை விதைக்க சினமா பெரும் சிரத்தை ஏதும் எடுக்காமல், ரொம்பவும் சாதரணமாக பெரும் பங்கு ஆற்றி விட்டது. அதன் விளைவே இன்றளவும், பணக்காரர்களுக்கு பெண் கொடுக்க இன்றளவும் பெண் வீட்டார் யோசிக்கின்றனர். ரோட்டில் குறுக்கே வந்தவன் மேல் கார் ஏற்றி விட்டால், விசாரணை ஏதும் இன்றி கார் உள்ளே இருந்தவனை மக்கள் அடிக்க கிளம்புகின்றனர். என்ன சமூகமோ இது?

படிக்காத மேதை, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் பணக்காரர்களை காட்டிய விதத்தையும் அங்காடி தெரு, வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் பணக்காரர்களை காட்டிய விதத்தையும் எளிதில் ஒப்பிட்டு பார்த்து, சினிமாவின் விஷத்தன்மையை தெரிந்து கொள்ளலாம்.

படங்களில் பணக்காரர்களே பிரதான வில்லன்கள். அவனே அவன் பெண்ணின் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பான், கள்ள கடத்தல் செய்வான், தொழிலாளிகளுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பவனாய் இருப்பான், இன்ன பிற… பெற்றெடுத்த பெண்ணை ஒருவன் காதலிப்பதற்காக துரத்தினால் எவனாக இருந்தாலும் கண்டிக்க தான் செய்வார்கள், இது எல்லார் வீட்டிலும் சமயம் வந்தால் செய்யும் தவறாத ஒன்று, ஆனால் இதையே பணக்காரர்களும் கையாளும் போது அவனுக்கு மக்கள் வைக்கும் பெயர், பணத்திமிர் பிடித்தவன். காதலிக்கும் நாயகன் மட்டும் நல்லவனாம், அவன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் அவன் ஏன் அடுத்த வீட்டு பெண்ணை காதலிக்கிறான், நல்லத்தனமாய் வீட்டில் சொல்லி வீட்டில் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே, அதை இந்த மக்கள் உணர மாட்டார்கள், பணக்காரர்களையே குற்றம் சொல்வார்கள். இப்படி படம் எடுப்பதால், பொட்டு பொடுசுகள் எல்லாம் காதலிப்பதே ஹீரோயிசம் என்று வீதியில் போகும் பெண்களையெல்லாம் துரத்தி கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்களா?

கள்ளக்கடத்தல் செய்பவர்களே பணம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த சினமாக்கள் எப்படி காட்டுகின்றது என்றால் பணக்காரர்கள் ஏதோ கள்ளக்கடத்தல் செய்வது போல் காட்டுகின்றனர். கள்ள கடத்தல்காரர்களும், போலி அரசியல்வாதிகளும் எங்களின் பணக்கார வாழ்க்கை பிடித்திருக்கிறது. பணக்கார வாழ்க்கையை விரும்பி அவர்கள்  பணக்காரர்கள் ஆனால் அதற்கு நாங்கள் என்ன செய்வது, நாங்கள் ஏன் புறக்கணிக்க படுகிறோம், நாங்கள் ஏன் அந்நியமாக பார்க்க படுகிறோம்?

தொழிலாளிகளை நாங்கள் சுரண்டுகிறோமா? இதோ என் அப்பாவின் தொழிற்சாலையையே எடுத்து கொள்வோம்.. அசோக் லேலாண்ட் மற்றும் கேட்டர்பில்லர் வாகனங்களுக்கு என் அப்பா தான் பல்சக்கரங்கள் (Gear manufacturing) செய்து தருகிறார். தொழிற்சாலைக்கு என் பெயர் தான் வைத்துள்ளார். எந்த தொழிலாளிக்கும் 12000த்திற்கும் குறைவான சம்பளம் என் அப்பா கொடுப்பதில்லை. எல்லோருக்கும் 12000 அல்லது அதற்கு அதிகமான சம்பளம் தான். வருடா வருடம் 750 ரூ ஊதியத்தை உயர்த்தி கொடுக்கிறார். ஆனாலும் எங்கள் ஆலை தொழிலாளர்கள் வருடம் ஒரு முறையாவது செங்கொடிகளை பிடித்து கொண்டு போரட்டம் செய்து என் அப்பாவிற்கு தலைவலியை கொடுக்கின்றனர். இதனால் வருடத்திற்கு குறைந்தது 2 நாட்களாவது எங்கள் கம்பெனியின் Production பாதிக்கப்படும். இத்தனைக்கும் தீபாவளி அன்று எல்லோருக்கும் இரட்டை சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்களுக்கு திருப்தியில்லை.

என் அப்பா ஒன்றும் எனது தாத்தாவின் பணத்தில் இந்த Industryனை ஆரம்பித்துவிடவில்லை. என் அப்பா அவர் வங்கி வேலைக்கு சென்றிருந்த போது, காசு சேமித்து, கடன் வாங்கி, லோன் போட்டு என பெரும் பணத்தை திரட்டி இதில் முதலீடு செய்திருக்கிறார். ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதெல்லாம் நான் ட்ரவுசர் போட்ட சிறுவனாய் தொழிற்சாலையை சுற்றி வந்தது ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலாளியை சேர்க்கும் போதும் இவ்வளவு தொகையை தான் எங்களால் சம்பளமாய் தர முடியும், வேலைக்கு சேர சம்மதமா என்று கேட்டுவிட்டு தான் ஆட்களை வேலைக்காக எடுக்கிறோம். சம்மதமில்லை என்றால் போக வேண்டியது தானே, சம்மதம் என்று சொல்லி 6 மாதம் வேலைக்கு வந்து தொழிலை கற்று கொண்ட பின்னர் ஏன் செங்கொடியை பிடிக்க வேண்டும்? அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இருக்கிறதே, அவர்களது உழைப்பால் தான் லாபம் வருகிறதாம், எங்கள் கம்பெனியில் அவர்களது உழைப்பே பெரும் பங்கு வகிக்கிறதாம். அது உண்மையாகவே இருந்து விட்டு போகட்டும், எந்த முதலீடும் இல்லாமல் வெறும் உழைப்பு மட்டுமே லாபத்தை கொண்டு வந்து விடுமா, அந்த முதலீட்டை என் அப்பா தானே போட்டுள்ளார், அதனால் என் அப்பா இல்லாமல் அவர்கள் ஏது, அவர்களின் உழைப்பிற்கு பலன் ஏது. இது அவர்களுக்கு புரியவில்லை, இதை சொல்லவும் ஆளில்லை, சொன்னால் அவன் திமிர் பிடித்தவன். சரி, முதலீடு லாபத்தில் ஓடி கொண்டு இருக்கும் போதும் அவ்வப்போது நஷ்டம் அடையும் போதும், மாதம் மாதம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் எப்போதும் கை வைத்ததில்லையே, இது ஏன் அவர்களுக்கு புரியவில்லை, என்று தெரியவில்லை. முழுதாக தொழிற்சாலையை கட்டி 12 வருடம் ஆன பின்பும் என் அப்பா கடன்களுக்கான வட்டியை கட்டிய படியே தான் இருக்கிறார். ஒரு வேளை எங்களின் முதலீடு மொத்தமாக நஷ்டம் அடைந்திருந்தால், எங்கள் குடும்பமே ஒன்று தற்கொலை செய்து கொண்டிருக்கும் அல்லது ஊர் ஊராய் கடன்காரர்களுக்கு பயந்து ஓடி கொண்டு இருந்திருக்கும். இதை பற்றியெல்லாம் எந்த சினிமாக்காரர்களுக்கும், செங்கொடிகாரர்களுக்கும் கவலையில்லை. அவர்களுக்கு தேவை அதிக சம்பளம், மிக அதிக சம்பளம்.

சினிமாக்காரர்களுக்கு நிஜத்தில் கதைகள் கிடைப்பதில்லை. கதை வேண்டுமென்றால் செய்தித்தாள்களை புரட்ட ஆரம்பித்து விடுகின்றனர். எங்கோ ஒருவன் தொழிலாளிக்கு 1500 ரூபாய் சம்பளம் கொடுத்து சுரண்டி வாழ்ந்தால், அதுவே பிரதானமாய் இருப்பதாய் சினிமாக்களில் காட்டுகின்றனர். அதை பார்த்து இன்னொரு முதலாளி நாமும் ஏன் தொழிலாளிகளுக்கு 1500 ரூபாய் சம்பளம் தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டால் என்ன ஆவது, இதையெல்லாம் யோசிக்காத அளவிற்கு இந்த சினிமாக்காரர்கள் மடையன்களாக இருக்கின்றனர். ஏதோ ஒரு இந்தி படத்தை பார்த்து வந்து பாரிஸ் கார்னரில் ஒரு சிறுவன் அவனது ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான், இதற்கு என்ன சொல்கிறார்கள், இப்படி தான் மக்கள் மனதில் நஞ்சை கலக்கிறார்கள் இந்த சினிமாக்காரர்கள். இப்படி தான் பணக்காரர்களை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தியிருக்கிறார்கள்.

பணக்காரர்கள் என்றாலே ஓடி விடுங்கள் என்று மனதளவில் இங்கு எல்லருக்கும் பதிவாகி விட்டது போலும். இதனால் தான் என் காதலும் நாசமாய் போய் இருக்கிறது, பேசாமல் திரையரங்குகளே இல்லாத நேபாளத்திலே பிறந்திருக்கலாம்….’

      என்று என்னவெல்லாமோ யோசித்து யோசித்து குழம்பி கடைசியில் தூங்கி போனான் ராஜீவ். ஆனால் உண்மையில் இவன் பணக்காரன் என்பதால் ஸ்வாதி இவனை நிராகரிக்கவில்லை, அதற்கு காரணம் இருக்கிறது என்பதை ராஜீவ் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை….


                                                (தொடரும்…..)