Thursday 16 August 2012

ஸ்வாதி ராஜீவ் (1)


ராஜீவ் எப்படியும் இந்த முறை ஸ்வாதியிடம் தன் காதலை சொல்லி விடலாம் என்று புறப்பட்ட போது, அவன் இரு விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும் என்றே புறப்பட்டான். அவள் நிராகரிக்கும் பட்சத்தில் ஒன்று அவளை வற்புறுத்த கூடாது, இரண்டாவது தான் அழக்கூடாது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றே பேசி விட வேண்டும். ஆனால் அவளை பார்த்து பேசி முடித்திருக்கையில், ராஜீவ் அவன் எதை செய்ய கூடாது என்ற உறுதியுடன் சென்றிருந்தானோ, அந்த இரண்டையுமே செய்திருந்தான், ஏனெனில் அவனது காதலை அவன் பயந்தது போலவே ஸ்வாதி நிராகரித்திருந்தாள்.     

இரவு வீட்டிற்கு வந்த பின்பும் கூட அவளுடைய நிராகரிப்பின் தகிப்பு மனதினுள் அடங்காமலே இருந்தது. அவளுக்கு என்ன காரணம் இருந்து விட முடியும் இவனை நிராகரிப்பதற்கு என்று இரவு முழுதும் தகித்து கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கென உடனடியாக ஒரு காரணம் தேவைப்பட்டது. அழகு, நிச்சயம் கிடையாது, சரீர அழகு பார்க்கும் பெண்ணே இல்லை அவள். பாசமின்மையும் நிச்சயம் கிடையாது, அப்படி அவளுக்கு பாசம்  இல்லாமல் போனால் எதற்காக 6 வருடங்களுக்கு மேலாகவும் நட்பு பாராட்ட வேண்டும்… என்று அதுவா, இதுவா என்று அவனை அவனே கேட்டு கொண்டு, அவனுக்கே அவன் பதில் அளித்து கொண்டிருந்தான். இறுதியில் தான் ஒரு பணக்காரனே இருப்பதே அவளுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்க கூடும் என்று அவனே ஒரு முடிவிற்கு வந்தான். ஏனெனில் பேச்சின் ஊடே அவள் பலமுறை அவள் பணக்காரர்கள் மேல் உள்ள அவநம்பிக்கையை பகிர்ந்திருக்கிறாள். அதுமட்டுமில்லாமல் ராஜீவ் பணக்காரனாய் இருப்பதாலும், அவனது வீடு பங்களாவிற்கு நிகரான வீடு என்பதாலும், இதுநாள் வரை இவனது வீட்டிற்கு அவள் வருகை தருவிக்கவில்லை. அவள் அவனை நிராகரித்ததற்கு என்ன காரணம் இருக்க கூடும் என்று படுக்கையில் கிடந்து யோசித்து கொண்டே இருந்தான், அவனுக்கு அதை விட்டால் வேறு வழியும் தெரியவில்லை.

’ஏன் இந்த சமூகம் பணக்காரர்களை வெறுக்கிறது. ஏன் பணக்காரர்களை அறிவு கம்மியானவர்களாகவும், அதிர்ஷ்டமிக்கவர்களாகவும், சோம்பேறிகளாகவும், திமிர் பிடித்தவர்களாகவுமே பார்க்கிறது. பணக்காரர்களை கணவான்களாகவும், வள்ளல்களாகவும் பார்த்த காலமெல்லாம் போய் விட்டது. பணக்காரர்களை அட்டை பூச்சிகளை போல் சமூகம் ஆரம்பித்துவிட்டது. இது ஒன்றும் திடீரென்று சமூகத்திடையே ஏற்பட்ட அபிப்ராயம் அல்ல. காலம் காலமாக மக்களின் மீது விதைக்க பட்ட நச்சு விதை. அந்த விதையை விதைக்க சினமா பெரும் சிரத்தை ஏதும் எடுக்காமல், ரொம்பவும் சாதரணமாக பெரும் பங்கு ஆற்றி விட்டது. அதன் விளைவே இன்றளவும், பணக்காரர்களுக்கு பெண் கொடுக்க இன்றளவும் பெண் வீட்டார் யோசிக்கின்றனர். ரோட்டில் குறுக்கே வந்தவன் மேல் கார் ஏற்றி விட்டால், விசாரணை ஏதும் இன்றி கார் உள்ளே இருந்தவனை மக்கள் அடிக்க கிளம்புகின்றனர். என்ன சமூகமோ இது?

படிக்காத மேதை, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் பணக்காரர்களை காட்டிய விதத்தையும் அங்காடி தெரு, வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் பணக்காரர்களை காட்டிய விதத்தையும் எளிதில் ஒப்பிட்டு பார்த்து, சினிமாவின் விஷத்தன்மையை தெரிந்து கொள்ளலாம்.

படங்களில் பணக்காரர்களே பிரதான வில்லன்கள். அவனே அவன் பெண்ணின் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பான், கள்ள கடத்தல் செய்வான், தொழிலாளிகளுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பவனாய் இருப்பான், இன்ன பிற… பெற்றெடுத்த பெண்ணை ஒருவன் காதலிப்பதற்காக துரத்தினால் எவனாக இருந்தாலும் கண்டிக்க தான் செய்வார்கள், இது எல்லார் வீட்டிலும் சமயம் வந்தால் செய்யும் தவறாத ஒன்று, ஆனால் இதையே பணக்காரர்களும் கையாளும் போது அவனுக்கு மக்கள் வைக்கும் பெயர், பணத்திமிர் பிடித்தவன். காதலிக்கும் நாயகன் மட்டும் நல்லவனாம், அவன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் அவன் ஏன் அடுத்த வீட்டு பெண்ணை காதலிக்கிறான், நல்லத்தனமாய் வீட்டில் சொல்லி வீட்டில் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே, அதை இந்த மக்கள் உணர மாட்டார்கள், பணக்காரர்களையே குற்றம் சொல்வார்கள். இப்படி படம் எடுப்பதால், பொட்டு பொடுசுகள் எல்லாம் காதலிப்பதே ஹீரோயிசம் என்று வீதியில் போகும் பெண்களையெல்லாம் துரத்தி கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்களா?

கள்ளக்கடத்தல் செய்பவர்களே பணம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த சினமாக்கள் எப்படி காட்டுகின்றது என்றால் பணக்காரர்கள் ஏதோ கள்ளக்கடத்தல் செய்வது போல் காட்டுகின்றனர். கள்ள கடத்தல்காரர்களும், போலி அரசியல்வாதிகளும் எங்களின் பணக்கார வாழ்க்கை பிடித்திருக்கிறது. பணக்கார வாழ்க்கையை விரும்பி அவர்கள்  பணக்காரர்கள் ஆனால் அதற்கு நாங்கள் என்ன செய்வது, நாங்கள் ஏன் புறக்கணிக்க படுகிறோம், நாங்கள் ஏன் அந்நியமாக பார்க்க படுகிறோம்?

தொழிலாளிகளை நாங்கள் சுரண்டுகிறோமா? இதோ என் அப்பாவின் தொழிற்சாலையையே எடுத்து கொள்வோம்.. அசோக் லேலாண்ட் மற்றும் கேட்டர்பில்லர் வாகனங்களுக்கு என் அப்பா தான் பல்சக்கரங்கள் (Gear manufacturing) செய்து தருகிறார். தொழிற்சாலைக்கு என் பெயர் தான் வைத்துள்ளார். எந்த தொழிலாளிக்கும் 12000த்திற்கும் குறைவான சம்பளம் என் அப்பா கொடுப்பதில்லை. எல்லோருக்கும் 12000 அல்லது அதற்கு அதிகமான சம்பளம் தான். வருடா வருடம் 750 ரூ ஊதியத்தை உயர்த்தி கொடுக்கிறார். ஆனாலும் எங்கள் ஆலை தொழிலாளர்கள் வருடம் ஒரு முறையாவது செங்கொடிகளை பிடித்து கொண்டு போரட்டம் செய்து என் அப்பாவிற்கு தலைவலியை கொடுக்கின்றனர். இதனால் வருடத்திற்கு குறைந்தது 2 நாட்களாவது எங்கள் கம்பெனியின் Production பாதிக்கப்படும். இத்தனைக்கும் தீபாவளி அன்று எல்லோருக்கும் இரட்டை சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்களுக்கு திருப்தியில்லை.

என் அப்பா ஒன்றும் எனது தாத்தாவின் பணத்தில் இந்த Industryனை ஆரம்பித்துவிடவில்லை. என் அப்பா அவர் வங்கி வேலைக்கு சென்றிருந்த போது, காசு சேமித்து, கடன் வாங்கி, லோன் போட்டு என பெரும் பணத்தை திரட்டி இதில் முதலீடு செய்திருக்கிறார். ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதெல்லாம் நான் ட்ரவுசர் போட்ட சிறுவனாய் தொழிற்சாலையை சுற்றி வந்தது ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு தொழிலாளியை சேர்க்கும் போதும் இவ்வளவு தொகையை தான் எங்களால் சம்பளமாய் தர முடியும், வேலைக்கு சேர சம்மதமா என்று கேட்டுவிட்டு தான் ஆட்களை வேலைக்காக எடுக்கிறோம். சம்மதமில்லை என்றால் போக வேண்டியது தானே, சம்மதம் என்று சொல்லி 6 மாதம் வேலைக்கு வந்து தொழிலை கற்று கொண்ட பின்னர் ஏன் செங்கொடியை பிடிக்க வேண்டும்? அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இருக்கிறதே, அவர்களது உழைப்பால் தான் லாபம் வருகிறதாம், எங்கள் கம்பெனியில் அவர்களது உழைப்பே பெரும் பங்கு வகிக்கிறதாம். அது உண்மையாகவே இருந்து விட்டு போகட்டும், எந்த முதலீடும் இல்லாமல் வெறும் உழைப்பு மட்டுமே லாபத்தை கொண்டு வந்து விடுமா, அந்த முதலீட்டை என் அப்பா தானே போட்டுள்ளார், அதனால் என் அப்பா இல்லாமல் அவர்கள் ஏது, அவர்களின் உழைப்பிற்கு பலன் ஏது. இது அவர்களுக்கு புரியவில்லை, இதை சொல்லவும் ஆளில்லை, சொன்னால் அவன் திமிர் பிடித்தவன். சரி, முதலீடு லாபத்தில் ஓடி கொண்டு இருக்கும் போதும் அவ்வப்போது நஷ்டம் அடையும் போதும், மாதம் மாதம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் எப்போதும் கை வைத்ததில்லையே, இது ஏன் அவர்களுக்கு புரியவில்லை, என்று தெரியவில்லை. முழுதாக தொழிற்சாலையை கட்டி 12 வருடம் ஆன பின்பும் என் அப்பா கடன்களுக்கான வட்டியை கட்டிய படியே தான் இருக்கிறார். ஒரு வேளை எங்களின் முதலீடு மொத்தமாக நஷ்டம் அடைந்திருந்தால், எங்கள் குடும்பமே ஒன்று தற்கொலை செய்து கொண்டிருக்கும் அல்லது ஊர் ஊராய் கடன்காரர்களுக்கு பயந்து ஓடி கொண்டு இருந்திருக்கும். இதை பற்றியெல்லாம் எந்த சினிமாக்காரர்களுக்கும், செங்கொடிகாரர்களுக்கும் கவலையில்லை. அவர்களுக்கு தேவை அதிக சம்பளம், மிக அதிக சம்பளம்.

சினிமாக்காரர்களுக்கு நிஜத்தில் கதைகள் கிடைப்பதில்லை. கதை வேண்டுமென்றால் செய்தித்தாள்களை புரட்ட ஆரம்பித்து விடுகின்றனர். எங்கோ ஒருவன் தொழிலாளிக்கு 1500 ரூபாய் சம்பளம் கொடுத்து சுரண்டி வாழ்ந்தால், அதுவே பிரதானமாய் இருப்பதாய் சினிமாக்களில் காட்டுகின்றனர். அதை பார்த்து இன்னொரு முதலாளி நாமும் ஏன் தொழிலாளிகளுக்கு 1500 ரூபாய் சம்பளம் தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டால் என்ன ஆவது, இதையெல்லாம் யோசிக்காத அளவிற்கு இந்த சினிமாக்காரர்கள் மடையன்களாக இருக்கின்றனர். ஏதோ ஒரு இந்தி படத்தை பார்த்து வந்து பாரிஸ் கார்னரில் ஒரு சிறுவன் அவனது ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான், இதற்கு என்ன சொல்கிறார்கள், இப்படி தான் மக்கள் மனதில் நஞ்சை கலக்கிறார்கள் இந்த சினிமாக்காரர்கள். இப்படி தான் பணக்காரர்களை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தியிருக்கிறார்கள்.

பணக்காரர்கள் என்றாலே ஓடி விடுங்கள் என்று மனதளவில் இங்கு எல்லருக்கும் பதிவாகி விட்டது போலும். இதனால் தான் என் காதலும் நாசமாய் போய் இருக்கிறது, பேசாமல் திரையரங்குகளே இல்லாத நேபாளத்திலே பிறந்திருக்கலாம்….’

      என்று என்னவெல்லாமோ யோசித்து யோசித்து குழம்பி கடைசியில் தூங்கி போனான் ராஜீவ். ஆனால் உண்மையில் இவன் பணக்காரன் என்பதால் ஸ்வாதி இவனை நிராகரிக்கவில்லை, அதற்கு காரணம் இருக்கிறது என்பதை ராஜீவ் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை….


                                                (தொடரும்…..)





No comments:

Post a Comment