Monday, 28 April 2014

Other face of Vel tech's


பெரும்பாலான கல்லூரி விடுதிகளில், செல்போன் உபயோகிக்க எந்த தடையும் இருப்பதில்லை. தடைகள் இருக்கும் கல்லூரிகளும், தடையை விலக்கி கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் செல்போன் இல்லாத வாழ்க்கை என்பது நம் நிகழ்கால வாழ்வில் சாத்தியமில்லாதது. இந்த கூற்று உண்மையோ இல்லையோ, அப்படி ஒரு நம்பிக்கை இருப்பதாக எல்லோராலும் நம்ப படுகிறது. அதனாலேயே செல்போனுக்கு எதிரான கெடுபிடிகள் கிட்டத்தட்ட அடங்கிவிட்டது.

ஆனால் இன்னமும் சில கல்லூரிகள், தங்களது செல்போன் தடைக்கு ஆதரவான நிலைப்பாட்டிலே இருக்கின்றன. நல்லது. அதை பற்றி பிரச்சினை இல்லை. தங்கள் கல்லூரியின் discipline விஷயத்தில் கறாராக இருக்கிறோம் என்று அவர்கள் சொல்லலாம். அவ்வாறு விதிமுறைகளுக்கு மீறி செல்போன் பயன்படுத்தினால் அதை கையகப்படுத்தலாம். கையகப்படுத்திய செல்போனை பின்னர் எச்சரிக்கை செய்து திரும்ப கொடுக்கலாம், அல்லது பெற்றோரை கூப்பிட்டு அவர்களிடமும் ஒப்படைக்கலாம். ஏன், மாணவர்கள் கண் முன்னாலே அதை சுக்கு நூறாக உடைத்தும் போடலாம். அது வரை அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் எந்த அடிப்படையில் மாணவர்களிடமிருந்து கையகப்படுத்திய செல்போன்களில் இருக்கும் தகவல்களை ஆசிரியர்கள் பார்க்க முடியும்? எந்த ஒரு விதியும் அதை அனுமதிப்பதில்லை. அப்படி செய்தால் அது ஒரு தனி மனித உரிமை மீறல். ஆனால் அதை தான் பெரும்பாலான ஆசிரிய பெருமக்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி செய்து வருகிறார்கள்.

பெண்களும் கூட இந்த விஷயத்தில் விதிவிலக்கில்லை.

கொஞ்ச நாள் முன்பு நடந்த சம்பவம் இது...

வேல் டெக் குழுமத்தின் கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஒரு மாணவியின் பெயர் திவ்யா. இவர் கல்லூரியின் விடுதியிலே தங்கி பயிலும் மாணவி ஆவார். study time ல் மொபைல் வைத்திருந்த காரணத்திற்காக கௌசிகா என்ற ஹாஸ்டல் வார்டன், திவ்யாவின் மொபைல் போனை பறிமுதல் செய்திருக்கிறார். பறிமுதல் செய்து அந்த மொபைலில் உள்ள மெசேஜ்களை படித்து திவ்யாவின் ஆண் நண்பரின் மெசேஜ்களை படித்து, திவ்யாவை தேவையே இல்லாமல் மிரட்டியுள்ளார். திவ்யாவின் பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று அச்சுறுத்தி இருக்கிறார். அப்போதே அவளின் பெற்றோரிடம் சொல்லியாவது தொலைத்திருக்கலாம். அங்கேயே விஷயம் முடிந்திருக்கும். இந்த விஷயத்தை சுஜாதா என்னும் தலைமை வார்டன் காதுகளுக்கு எடுத்து சென்று அச்சுறுத்த பட்டிருக்கிறார்.

அடுத்த நாள் காலை அந்த மாணவி கல்லூரி கிளம்பும் போதும் சுஜாதா அவரை வழிமறித்து, "நீயெல்லாம் காலேஜுக்கு போய் என்ன பண்ண போற?" என்ற ரீதியில் அம்மாணவி அவமானப்படும் வகையில் மாணவிகள் முன்னிலையில் திட்டி, திரும்ப ஹாஸ்டலுக்கு அனுப்பியுள்ளார். ஹாஸ்டலுக்கு திரும்பிய திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலில் திவ்யா தனது துப்பட்டாவை பயன்படுத்தி தான் தூக்கு போட முயற்சித்திருக்கிறார். ஆனால் அது அறுந்து விழுந்து இருக்கிறது. நியாயமாக, அப்போதே அந்த மாணவிக்கு உயிர் பயம் வந்து தற்கொலை எண்ணத்தை கைவிட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், திரும்பவும் எங்கயோ சேலையை தேடி பிடித்து தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இத்தனைக்கும் திவ்யா ஒரு முதலாம் ஆண்டு மாணவி, செத்து மடிந்து இவ்வுலகில் இருந்து தப்பிக்க அவ்வளவு தீவிரம் காட்டியிருக்கிறாள்.

அதன்பின் எல்லாமே வழக்கமான நாடகங்கள் தான்...

post-modem report ல் பெண்ணின் நடத்தை குறித்து மருத்துவர்கள், இழிவான ரிப்போர்ட் கொடுத்து அதன் காரணமான மன அழுத்தம் என்று எழுதி கொடுத்து விட்டனர்.

கோபம் கொண்ட மாணவர்களும் மாணவிகளும் அன்று மாலை 6 மணி  முதல் கல்லூரி விடுதிக்குள் நுழையாமல் ஸ்ட்ரைக் செய்தனர். 1200 பேருக்கு மேல் கூட்டம் கூடி விட்டது. போலிஸ் வரவழைக்க பட்டனர். பேச்சுவார்த்தையின் போது, யாரோ போலீசாரை தாக்க, எல்லோருக்கும் லத்தி சார்ஜ் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கும் கூட...

மாணவர்கள் 5 கிமீ வரை ஓடி வந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய நிலை. சிக்கியவர்களுக்கும், கெஞ்சியவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத வகையில் கிடைத்த அடிகள், மருத்துவமனையில் படுக்க வைத்தது.

அடுத்த நாள் தான் சுஜாதாவையும், கௌசிகாவையும் போலீஸ் கைது செய்தது.

அதற்கடுத்த நாளில் இருந்து கல்லூரி காலவரையின்றி விடுமுறை அளித்து மூடப்பட்டது. அடுத்த நாள் கல்லூரிக்கு வழக்கம் போல் சென்றவர்களை அங்கிருந்த பெரும் போலீஸ் கும்பல் விரட்டியடித்தது. ஆவடி முழுதும் போலீஸ் பரபரத்தது. விடுதியில் உள்ள மாணவ மாணவிகளையும் வீட்டிற்கு அனுப்பி விடப்பட்டனர்.

இன்னமும் காலேஜ் பலத்த பாதுகாப்புடன் மூடி தான் கிடக்கிறது.

மீடியாக்கள் வழக்கம்போல கண்மூடி கொண்டது. 30க்கும் மேற்பட்ட மீடியாக்கள் இயங்கும் இந்த பரபரப்பான தமிழகத்தில் வெறும் ஒன்றிரண்டு மீடியாக்கள் மட்டும்தான் இது பற்றி பேசியது. அவர்களும் பூசி மழுப்பி மாணவி தற்கொலை என்று மட்டுமே அறிவித்தார்கள்.

அநேகமாக இன்னும் கொஞ்ச நாட்களில் காலேஜ் திறக்கப்பட்டு எல்லோருக்கும் செமஸ்டர் எக்ஸாம் நடக்கலாம்.

செமஸ்டர் முடிந்து, எந்த பேப்பரை திருப்பினாலும், எல்லா சேனல்களிலும் வேல் டெக் விளம்பரங்கள் ஜொலிக்கலாம்...

No comments:

Post a Comment