Thursday 3 October 2013

Flipped



சமீபமாக Flipped என்கிற ஆங்கில திரைப்படம் பார்த்தேன். என் வாழ்க்கையிலே இது போன்று ஓர் மென்மையான கதையை பார்த்ததே இல்லை. பெரும்பான்மையான ஆங்கில திரைப்படங்கள் போல, இதுவும் கூட நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் என்றாலும், எங்கேயும் அலுப்போ, தொய்வோ இல்லை. அதுவே பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.

மேலும், அமெரிக்க திரைப்படங்களில் வரும் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் நம்மை பயமுறுத்தும் வகையில் இருக்கும். சொல்லிவைத்தாற் போல் எல்லா மாணவர்களும் ஜோடியாக சுற்றுவார்கள், டேட்டிங் போவார்கள், Basket ball அல்லது Base ball விளையாடுவார்கள், கெட்ட வார்த்தைகளாலே திட்டி கொள்வார்கள், இப்படி பலபார்க்கும் நமக்கே, இது தான் அமெரிக்காவின் மொத்த ரூபமா என்று சந்தேகம் வலுத்து விடும், அது எப்படி, அமெரிக்காவில் நம்மை போல் ஒருவர் கூடவா இல்லாமல் போய் விடுவார்கள் என்றே தோன்றும். ஆனால் Flipped திரைப்படம் இந்த இடத்தில் முற்றிலுமாக வேறுபடுகிறது, இதுவும் ஓர் பள்ளிப்பருவ மாணவர்கள் கதை என்றாலும் திரைப்படத்தின் எல்லா கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் யதார்த்தத்துடன் இருக்கின்றன.

கதை என்று பார்த்தால் மிகவும் எளிய கதை தான். ஆனால் திரைக்கதை உருவாக்கங்கள் தான் நம்மை லயிக்க வைக்கிறது. நம்மில் எத்தனை பேர் நம் பக்கத்து வீட்டினருடன் சகஜமாக பேசுகிறோம், எத்தனை பேர் வீட்டிற்கு கூப்பிட்டு டின்னரின் போது பேசுகிறோம், எத்தனை பேர் ஓர் உயரமான மரத்தின் மீது ஏறி பரந்து விரிந்த உலகத்தை தரிசிக்கிறோம், முட்டையில் இருந்து வெளிவரும் கோழி குஞ்சை கண்கள் விரிய பரவசத்துடன் வரவேற்கிறோம்சொல்ல போனால் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று நமக்குள் ஆசைகள் இருக்கவே செய்கின்றது, ஆனால் தயக்கம் காரணமாக கிடப்பிலே போட்டு விடுகிறோம், இந்த படத்தை பார்க்கும் போது நம் தயக்கங்கள் தகர்த்தெறிய ஓர் வாய்ப்பு இருக்கிறது.
                    
திரைப்படங்கள் ஆகட்டும், நாவல் ஆகட்டும், சீரியல் ஆகட்டும், கட்டுரை ஆகட்டும்அதனை பார்க்கும் போதோ, படிக்கும் போதோ, நமக்குள் சிறிதளவேனும் ஓர் மாற்றம் வர வேண்டும். நம் வாழ்க்கை முறை அடுத்த படியை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். அதுவே அந்த கலை படைப்பின் வெற்றி. அந்த வகையில் இது உங்களவேனும் சிறிதளவேனும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும்.

படத்தின் பெரிய அட்ராக்ஷன், படத்தின் கதாநாயகி. ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி போல் இருக்கிறாள்முக்கியமாக அவள் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே, அன்பாக இருக்கிறாள். ஆனால் அதை மிகைப்படுத்தாமல், மிக இயல்பாக காட்டியிருப்பது தான் இத்திரைப்படத்தின் விஷேஷமாக பார்க்கிறேன்.

அதே சமயம் பெண்களின் மென்மையான உணர்வு ஆங்காங்கே தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் ஜுலியா, அவ்வப்போது sycamore என்ற மரத்தின் உச்சிக்கு ஏறி உட்கார்ந்து மொத்த கிராமத்தையும் ரசிப்பாள். அந்த மரம் இருப்பது அவள் ஸ்கூல் பஸ் வந்து நிற்கும் இடத்தில்ஒவ்வொரு நாள் காலையிலும் மேலே ஏறி, ஸ்கூல் பஸ் எங்கே வருகிறது என்பதை பார்ப்பாள், பக்கம் வந்த பின்பு தான் மரத்தை விட்டு கீழ் இறங்கி வருவாள். ஒரு நாள் அவள் மேல் அமர்ந்து இருக்கும் போதே, அந்த மரத்தை வெட்ட ஆட்கள் வந்து வெட்ட ஆரம்பிக்கும் போது, அவள் மேலிருந்து குரல் கொடுப்பாள். அவளை இறங்கி வர சொல்வார்கள். ஆனால் மறுத்து விடுவாள். வெட்டுவதாக இருந்தால், வெட்டி கொள்ளுங்கள் என்று மேலயே உட்கார்ந்து கொள்வாள். உடன் படிக்கும் நண்பர்களை உதவிக்கு அழைப்பாள், ஆனால் ஸ்கூலிற்கு நேரம் ஆகி விட்ட படியால் யாரும் அவளுக்கு உதவ முன்வராமல் போய் விடுவார்கள். அவளின் சிறு வயது தோழனான Bryce-ம் கூட கண்டு கொள்ளாமல் கிளம்பி விடுவான். பிறகு அவளது தந்தை வந்து அவளை சமாதானம் செய்து இறக்கி செல்வார்.

இன்னொரு சமயம், ஜூலியா கோழிப்பண்ணையில் கோழிகள் நிறைய முட்டைகள் போட ஆரம்பிக்கும், அன்று முதல் தினமும் Bryce வீட்டிற்கு ஒரு டஜன் முட்டைகளை கொடுப்பாள். ஜுலியா குடும்பம் நடுத்தரமான குடும்பம் என்பதாலும், ஜுலியா குடும்பத்தின் மேல் இருக்கும் காரணமற்ற வெறுப்பினாலும், ப்ரைஸின் அப்பா, அந்த முட்டைகள் சுதாகாரமற்றவையாக இருக்கக் கூடும், அதனால் அதனை திருப்பி கொடுத்து விடு என்று சொல்லி விடுவார். ஆனால் ப்ரைஸிற்கு ஜுலியாவின் உணர்வுகளை புண் படுத்த மனம் வருவதில்லை. அதனால் பெற்றொர்களுக்கு தெரியாமல்,  ஒவ்வொரு நாளும் முட்டைகளை வாங்கி கொள்வானே தவிர, அவளுக்கு தெரியாமல் அதனை குப்பையில் வீசி விடுவான். இதனை ஒரு நாள் ஜுலியா கண்டு பிடித்து மிகவும் நொந்து போவாள்.

இப்படி படம் நெடுகினும், பெண்ணின் மனதை ஆண், தெரிந்தோ தெரியாமலோ துன்புறுத்திய வண்ணமே தான் இருப்பான். அவள் ஒவ்வொரு முறை ஒடிந்து போனாலும், அதனை வெளிக்காட்டாமல் தொடர்ந்து அன்பு செலுத்துவாள். அளவுக்கடந்த பாசம் வைத்த ஒரே காரணத்தால், ப்ரைஸ் மீது பகைமை பாராட்டாமல், தூய அன்புடன் இருப்பாள். இப்படியே போய் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில், ஜுலியா அவனிடம் பேசுவதை மொத்தமாக தவிர்த்து விடுவாள். அவன் எவ்வளவு இறைந்தும் அவள் செவி சாய்க்காமல் இருந்து விடுவாள், அவளின் காயங்கள் அவளை பெரிதும் கலங்கடித்தப்படியே இருந்தாலும், அவளின் பாசம் அவளை அவனிடம் பேச சொல்லி கொண்டபடியே தான் இருக்கும்.

இறுதியாக ப்ரைஸ், அவளிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக, அவள் வீட்டு தோட்டத்தில் வந்து ஓர் sycamore மரக்கன்றை நடுவான். சொல்லப்போனால், மொத்தமாகவே அவன் அவளுக்காக செய்தது அது ஒன்று தான். அதுவே அவளின் ஒட்டு மொத்த கோபங்களையும் மறக்கடித்து விடும். மீண்டும் பழைய படி பேச ஆரம்பித்து விடுவாள். இது தான் பெண்களின் யதார்த்த குணம், இங்கு படம் நிறைவடைகிறது.

மேலோட்டமாக மென்மையான படமாக இருந்தாலும், மிக ஆழமாக ஆண்களின் மனப்போக்கையும், பெண்களின் மனப்போக்கையும் படம் நெடுகிலும் சுவாரஸ்யமான திரைக்கதைகளுடன் சொல்லப்படுகிறது.

இவ்வளவு மென்மையான, அழகான கதையை பார்ப்பது இதுவே முதல் முறைஇது வரை மூன்று முறை பார்த்து விட்டேன்.. நீங்களும் பார்த்து விடுங்கள்


No comments:

Post a Comment