Thursday, 3 October 2013

மாதேஸ்வரன் மலைநேற்று மாதேஸ்வரன் மலை சென்று வந்தோம். டூ வீலரிலே செல்லலாம் என திடுமென புறப்பட்டு செல்லலானோம். மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டது, மாலை 03.30 மணி சுமாருக்கு தான் மலைக்கு சென்று சேர்ந்தோம். இத்தனைக்கும் மேட்டூரில் இருந்து வெறும் 45 கி.மீ மட்டுமே

45 கி.மீ தொலைவை, இரண்டு மணி நேரம் உருட்ட நேரிட்டதற்கு இரண்டு காரணங்கள்.. முதலில் என் வண்டி செய்த சதி, கொஞ்ச நேர மலையேற்றத்திற்குள்ளாகவே என்னுடைய Honda Shine வண்டி மூச்சிறைத்து அழ ஆரம்பித்து விடுகிறது. ஆகையால் ஓய்வு.. பயணம்.. ஓய்வு.. பயணம் என்று செல்ல வேண்டிய சூழ்நிலை. மைலேஜுக்கு மட்டுமே லாயக்கு

இரண்டாவதாக சாலைகள்மாதேஸ்வரன் மலை கர்நாடாகா பகுதிக்கு உட்பட்டுள்ளது. போகும் வழியில், கர்நாடகா பார்டர் ஆரம்பிக்கும் வரையில், சாலைகள் தகுந்த பராமரிப்புடன் இருக்கிறது. ஆனால் கர்நாடகா பார்டர் ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலே, எப்போதோ ராஜீவ் காந்தி காலத்தில் போட்ட ரோடு நம்மளை நக்கலுடன் வரவேற்கிறது. அதில் உருட்டி, புரட்டி செல்லவே இரண்டு மணி நேரம் பிடித்தது.

தமிழ்நாட்டில் இருந்து மாதேஸ்வரன் மலை செல்லும் கூட்டம் தான் அதிகம், அதன் பொருட்டே பார்டர் வரையில் சாலைகளை கனக்கச்சிதமாக பராமரிக்கிறது தமிழக அரசு, ஆனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூரிற்கு வரும் கூட்டம் வெகு குறைவு, அதனாலே அவர்கள் தரப்பு சாலைகளை கண்டு கொள்ளாமல் விட்டு தமிழகத்தினரை கழுத்தறுக்கிறது.

இறங்கும் போது சீக்கரத்திலே வந்து விட்டோம். 01.15 மணி நேரத்திற்குள்ளாகவே திரும்ப வந்து விட்டோம். அதோடு, இறங்கும் போது கிட்ட தட்ட 14 கிமீ, இஞ்சினை அணைத்து விட்டு, பள்ளத்திலே ஓட்டி வந்தோம். மேலே சொல்லி கொள்ளுமாறு பெரிதாய் ஒன்றுமில்லைபிரசத்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் இருக்கிறது, அது தவிர ஒரு மடம் இருக்கிறதுஇது தவிர காடும், காட்டு விலங்கும் தான் இந்த மலையில் சிறப்பு..

போகும் வழியில் ஒரு சிறப்பு என்னவென்றால், அதிகமான வாகன நேரிசலோ, ஜன நெரிசலோ இருக்கவே இருக்காது. ஆபத்தான விஷயமும் அதுவே தான்ஆள் அரவமற்ற மலை அது. எப்போதாவது தமிழ்நாட்டு போக்குவரத்து பஸ்களோ, கர்நாடகா பஸ்களோ கடந்து செல்லும், ஞாயிற்று கிழமையாக இருந்தால் சில கார்களும் கடந்து செல்லும், மற்றப்படி  லோக்கல் ஆட்கள் எப்போதாவது தான் அவ்வழியே வருவார்கள்வனவிலங்குகள் எப்போதேனும் குறுக்கிடும் பகுதி அது

இதையெல்லாம் எதுவுமே தெரியாமல், இருட்டும் போது மட்டுமே விலங்குகள் வரும் என்ற குருட்டு தைரியத்தில் மலை ஏறி இறங்கி வந்தே விட்டோம். இன்று ஆபிஸில் வந்து மாதேஸ்வரன் மலை சென்று வந்ததை பற்றி, தமிழ்ச்செல்வன் என்று உடன் பணி புரியும் அலுவலரிடம் பகிர்ந்தேன்.

என்னது மாதேஸ்வரன் மலையா?

ஆமா சார்

எதுல போனீங்க..

பைக்ல

எத்தனை பைக்…?

ஒண்ணு தான் சார்

எத்தனை பேர்..

ரெண்டு பேர்..

எத்தனை மணிக்கு

மதியம் கிளம்பினது, ஈவ்னிங்க்குள்ள வந்துட்டோம்

ஏதும் பிரச்சனையில்லையே

ஒண்ணும் இல்லை சார்சில குரங்குங்க தான் இருந்ததுங்கஅதுவும் கூட சாதுவா தான் இருந்துச்சுங்க

ஓகே ஓகேஇனிமேல் இப்படியெல்லாம் விசாரிக்காம போகாதீங்க சூர்யாரொம்ப ரிஸ்கான மலை அதுநீங்க உயிரோட வந்ததே பெரிய விஷயம்… - என சொல்லி நெருப்பள்ளி போட்டார். என்ன விஷயம் என கேட்ட்தற்கு, அவர் அவரது அனுபவங்களை பகிர்ந்தார்….


என் உடன் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவர், மாதேஸ்வரன் மலை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார். அவர் 10 வருடங்களாக மாதேஸ்வரன் மலை தொடர்ச்சியாக சென்று வந்திருக்கிறார். நண்பர்களுடன் சென்று அடிக்கடி சரக்கடித்து விட்டு வருவார், ஆனால் அதை எங்களிடம் சொல்லும் போது கூல் ட்ரிங்க்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் என்று குறிப்பிட்டு சொல்வார். கொஞ்சம் நடுவயது ஆள் என்பதால் அது பற்றி மேற்படி விசாரணைகள் செய்ய மாட்டோம். இடையில் எப்போதோ ஒரு முறை ரோட் ஆக்ஸிடன்ட் ஆனதில் இருந்து, மாதேஸ்வரன் மலை செல்வதை நிறுத்தி விட்டார். அதை அவர் சொல்லும் போதே, அவர் மாதேஸ்வரன் மலையை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ரோட் ஆக்ஸிடன்ட் ஆனதில் இருந்து அவர் எந்நேரமும் தலைவலியுடனே தான் உட்கார்ந்து இருப்பார், எல்லாத்தையும் மறந்து விடுவார். அவர் உடன் வைத்திருக்கும் touchscreen phone—ல் எல்லாத்தையும் பதிந்து வைத்து கொள்வார். எதை கேட்டாலும் போனை பார்த்தே பதில் சொல்வார். நாளை ஞாயிற்று கிழமை என்பதை கூட சில சமயம் மறந்து விடுவார். ஆனால் இது போன்ற குறிப்புகளை தான் மறந்து விடுவாரே தவிர, சம்பவங்கள், அனுபவ அறீவு எல்லாத்திலும் ஆள் கெட்டி

மாதேஸ்வரன் மலைக்கு சென்று முக்கால் மலையில் அமர்ந்து ஆர ஆமர நண்பர்களுடன் பேசி கொண்டே சரக்கடிப்பதும், மலையை ரசிப்பதும் தான் தமிழ்ச்செல்வனின் மாதமொறு முறை வாடிக்கை.

பல இடங்களில், sine wave வடிவத்தை ஒத்த ரோடுகள் உண்டு, நீங்கள் ஒரு பள்ளத்தில் இருக்கும் போது, அடுத்த பள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. அப்படி, ஒரு முறை ஒரு மேடு ஏறி, அதன் முகட்டிற்கு வரும் போது பார்த்தால்…. மூன்று யானைகள்முழுவதுமாக சாலையை கடந்து புதரிற்குள் செல்லும் குட்டியானை, குட்டியானைக்கு ஒட்டினாற்போல் நடந்து செல்லும் ஒரு மீடியம் சைஸ் யானை, பாதி சாலையை அடைத்து நிற்கும் கம்பீரமான உயரமான ஆண் யானை

இதையெல்லாம் பார்த்து கிரகித்து முடிப்பதற்குள்ளாகவே வண்டி பள்ளத்தில் இறங்க ஆரம்பித்து விட்டது. இனி ப்ரேக் அடித்தாலும் யானைக்கு அருகில் போய் நின்று ஹலோ சொல்லி கை குலுக்க வேண்டியது தான் பாக்கியானை சொல்லும் ஹலோ தனி ரகமாய் இருக்குமென்பதால், ஓடி விடுவது ஒன்று தான் வழி என்று ஆக்ஸிலரேட்டரை முறுக்கி, அடுத்த மேட்டில் கஷ்டப்பட்டு ஏற்றி தப்பி வந்திருக்கிறார்கள். இது அத்தனையும் யானை சுதாரிப்பதற்குள் நடந்தது. இதை அறிந்த யானை துரத்த ஆரம்பித்தது. அது இருக்கும் சைஸிற்கு 4 எட்டு எடுத்து வைத்தாலே பிடித்து விடும் தூரத்தில் தான் இருந்தார்கள். யானை சுதாரிப்பதற்குள் அடுத்த மேட்டின் முகட்டிற்கு வந்து வண்டியை பள்ளத்தில் செலுத்த ஆரம்பித்ததால், வண்டி வேகம் பிடித்து வந்து விட்டது. எதேச்சையாக திரும்பி பார்த்ததில் யானை துரத்தி கொண்டு வருகிறது. பின்னால் இருப்பவர்அது வருதுடா, சீக்கரம் போடாஎன்ற போட்ட கூச்சலும், தமிழ்ச்செல்வனின் உயிர் பயமும் வண்டியை 60 கிமீ வேகத்தில் 6 கிமீக்கு பறக்க செய்தது. யானை கிட்டத்தட்ட அரை கி.மீக்கும் அதிகமாக துரத்தி வந்ததாக பின்னால் இருப்பவர் சொன்னாராம்.

இன்னொரு முறை செல்கையில், நூற்றுக்கணக்கான காட்டெருமைகளும், மான்களும் எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து சென்று கொண்டிருந்த்து. சமதளமான ரோடு என்பதால், இந்த முறை 5-6 மீட்டர் முன்பே நிறுத்தி விட்டார். அமைதியாக கடந்து சென்று விடும் என்று எதிர்பார்த்தப்படி காத்து இருந்த கும்பலுக்கு காத்திருந்தது ட்விஸ்ட்மொத்த கூட்டமும் கடந்து முடித்து. கடைசியாக சென்ற மான் மட்டும், இந்த இரண்டு பேரையும் பார்த்து திடுக்கிற்றது. அது என்ன நினைத்ததோ தெரியவில்லை, திடீரென பதறி அடித்து கொண்டு ஓட, எல்லா மானுக்கும், எல்லா காட்டெறுமைகளுக்கும் பதற்றம் தொற்றி கொண்டு எல்லாமும், அதன் திசையில் ஓடியது. இவர்கள் வண்டியை எடுத்து கொண்டு வந்து விட்டனர். நல்லவேளையாக கடைசியாக கடந்த மான் தான் திடுக்கிட்டு, மொத்த கூட்டத்தையும் ரகளை செய்தது. ஒருவேளை கூட்டத்தின் இடையே கடந்து சென்று கொண்டிருக்கும் மானோ, காட்டெருமையோ பதறி இருந்தால், கூட்டம் சிதறி இவர்கள் இருக்கும் திசை பார்த்து கூட வந்திருக்க கூடும். வந்து ஒட்டு மொத்த கூட்டமும் ஆட்களை மிதித்துவாறே தலைதெறிக்க ஓடியிருக்கும். பாதி மிருகங்கள் எதற்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் தான் ஓடியதாக சொன்னார். அப்படி இருக்கையில், தங்களை நோக்கி, எந்த காட்டெருமையும் மானும் தலைதெறிக்க ஓடி வராமல் போனது, அதிர்ஷ்டம் தான் என்றார்.

ஒரு முறை வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது, வண்டியில் பின்னால் அமர்ந்து இருந்தவர், “காட்டு பன்றி நிக்குது டா, வண்டியை நிறுத்திக்கோ…” என்று சொல்ல, இவரும் வண்டியை நிறுத்தி விட்டு தேடுகிறார். எங்கேயும் காணோம், அங்க நிக்குது பாரு.. அங்க நிக்குது பாருஎன திரும்ப திரும்ப சொல்லியும், காட்டு பன்றியை கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லா மிருகங்களை விடவும் காட்டு பன்றி, மிகவும் அபாயகரமானது, கொடூரமாக தாக்க கூடியது. யாராக இருந்தாலும் அது முதலில் தாக்குவது, அடிவயிற்றை தான். அதோடு அதன் பற்களும், தந்தங்களும் மனித உடலை நார் நாராக கிழித்து விடும். அதற்கு பயந்து இவரும் 5-6 நிமிடங்கள் அப்படியே தேடி இருக்கிறார், ஒன்றும் கண்ணில் படக்காணோம். அந்த தைரியத்தில் லேசாக ஆக்சேலரேட்டரை முறுக்க, அது பயந்து புதரிற்குள் ஓடி சென்று விட்டது. அது எழுந்து ஓடும் போது தான், அது இவ்வளவு நேரமும் எங்கே இருந்தது என்பதையே பார்க்க முடிகிறது. அதுவரை அது ஓர் பாறை போல் தான் காட்சியளித்திருக்கிறது. கவனிக்காமல் செல்லும் பொருட்டு, பாய்ந்து இருந்தாலோ, குறுக்கே வந்து வண்டி மேல் விழுந்து இருந்தாலோ ஒன்றும் செய்திருக்க முடியாது. கொஞ்ச நேரம் காப்பாற்ற சொல்லி கத்தியிருந்திருக்கலாம்.
                            
இன்னொரு முறை குடும்பத்துடன் செல்கையில், மயில் ஒன்றை கண்டு அதனை மகளுக்கு காட்டலாம் என வண்டியை, சாலை ஓரமாக நிறுத்தி இருக்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, பெருத்த சத்தத்துடன், பஸ்ஸை ப்ரேக் பிடித்து நிறுத்தியே விட்டது. கண்டக்டர் உள்ளிருந்தப்படியே எட்டி பார்த்து, என்னாச்சு என பீதியுடன் கேட்க, மயில் பார்க்க தான் நிறுத்தினோம் என சொல்லநல்லதாய் நாலு வார்த்தை திட்டி, நாங்க கூட யானைன்னு நினைச்சு பயந்துட்டோம் என்று சொல்லி பேருந்தை கிளப்பி சென்று இருக்கிறார்கள்.

மாதேஸ்வரன் மலை சுற்றி 150 ஏக்கரக்கும் மேலாக காடு மட்டுமேஒரு முறை காட்டு வழியாக ஒகேனக்கல் செல்லலாம் என முயற்சித்து வண்டியில் சென்றிருக்கிறார்கள். அதெல்லாம் வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப்பகுதிகள். கொஞ்ச தூரத்திலே ஒரு செக் போஸ்ட் வர, அதற்கு மேல் செல்ல அனுமதி இல்லை என தடை செய்து விட்டது. யார் யாருக்கோ போன் செய்து சிபாரிசு கேட்டும் ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. ஆனால், ஒரு டிராக்டரில் உள்ளூர் ஆட்கள் எதிரில் இருந்து வந்து இருக்கிறார்கள். அவர்களை மட்டும் விடுகிறீர்களேஏன்.. என்று கேட்க, அவர்கள் எல்லாம் யானை வந்தாலும், பாம்பு வந்தாலும் மோப்பம் பிடித்தே உஷாராகி விடுவார்கள், உங்களால் அது போல் முடியாதுவீணாக உங்கள் பாடியை தேடி எங்களால், நடுக்காட்டில் அலைய முடியாது, தயவு செய்து சென்று விடுங்கள் என்று துரத்தியே விட்டனர். 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தும் கூட வாங்கவில்லை.

இன்னொரு முறை செல்லும் போது ஓர் வெள்ளை கலர் Hyundai accent கார், நடுரோட்டில் நின்று கொண்டு இருந்திருக்கின்றது. அதற்கும் முன்னால் சாலையோரமாக ஓர் யானைக்கூட்டம் மேய்ந்து கொண்டு இருக்கிறது. போனால் சர்ரென்று உடனடியாக போய் விடலாம், ஆனால் ஏன் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று புரியாமல், அவர்களுக்கு ஆன வரைக்கும் சிக்னல் கொடுத்து பார்த்துள்ளார்கள், நின்று சொல்லும் அளவிற்கு அங்கே அவகாசம் இல்லை. 15-20 யானைகளுக்கும் மேலாக ரொம்ப பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த்து. அவர்கள் சிக்னலையும் பார்த்த மாதிரி தெரியவில்லை, யானைகளையும் பார்த்த மாதிரி தெரியவில்லை. ஓர் 30 வயது மதிக்கத்தக்க ஆளும், பக்கத்தில் ஓர் வயசான அம்மாவும் மட்டுமே உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

இவர்கள் மேலே வந்து செக் போஸ்ட்டில், ஓர் வெள்ளை கார் யானை கூட்டத்திற்கு அருகே நின்று கொண்டிருக்கிறது. பெட்ரோல் தீர்ந்து விட்டதா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்று தெரியவில்லை, போய் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால், அங்கு இருக்கும் போலிஸ்காரர்களே வர மறுத்து விட்டனர். பேசி கொண்டு இருக்கும் போதே, ஓர் Tata ace வண்டி, செக் போஸ்ட்டை கடந்து சென்று விட்டது. இது ஏதுடா வம்பா போச்சு என்று டூ வீலரை எடுத்து கொண்டு, அந்த வண்டியை விரட்டி பிடித்து யானை கூட்டம் இருக்கும் விஷயத்தை சொல்லப்பட்டது. சொன்னவுடனே, அவன் வண்டியை திருப்பி கொண்டு செக் போஸ்டிற்கே வந்து விட்டான். இத்தனைக்கும் அவன் லோக்கல் ஆள் தானாம்.

கொஞ்சம் நேரத்தில், அந்த வெள்ளை கார் செக் போஸ்ட் வந்து சேர்ந்தது. எதற்காக நிறுத்தி இருந்தீர்கள் என்று விசாரித்ததில், அவர் டிஸ்கவரி சேனல்காரர் என்றும், போட்டோ எடுக்க நின்று கொண்டிருந்ததாகவும் சொல்லி சென்றார். “போங்க டா நொன்னைகளா, உங்களை காப்பாத்தறதுக்கு நாங்க நிக்க இருந்தோம டாஎன்று திட்டி தீர்த்து விட்டனர்.

ஆனால் நாங்கள் சென்றிருந்த போது குரங்கை தவிர ஒன்றையும் பார்க்கவில்லை, அது எப்படி என்று கேட்டதற்கு, அதற்கும் அவரே பதில் சொன்னார். பெரும்பாலும் கோடை காலத்தில் மட்டுமே, விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து திரியும், இப்போது மழை பொழிந்து கொண்டிருப்பதால், அதனின் இடங்களிற்கே தண்ணீர் வந்து விட்டிருக்கும், அதனால் தான் அதை பார்த்து இருந்திருக்க முடியாது என்று சொன்னார். அதற்காக நாளைகே வீரவேசமாக கிளம்பி விட வேண்டாம், இணை தேடவும், மதம் பிடித்தும் கூட யானைகளோ, பிற காட்டு விலங்குகளோ உங்களை வரவேற்கலாம் என்று சிரித்த படியே சொன்னார்


No comments:

Post a Comment