Thursday, 3 October 2013

மேன்ஷன் வாழ்க்கைஜான் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவன். நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் என்னுடைய ஒரே ஆதரவு, ஒரே அரவணைப்பு, ஒரே பிடித்தம் யாரென்றால் அது ஜான் மட்டுமே. நான் இருக்கும் மேன்ஷன் பளிங்கு தரைகள் ஜொலிக்க, புதிதாக ரோஸ் வர்ணம் பூசிய சுவர்கள் இருக்கும் மேன்ஷன் என்றாலும், எலி பொந்து போல் சிறிதாக இருக்கும். ஆபிஸ் பக்கமாக இருக்கிறதே என்று இந்த மேன்ஷனிற்கு வர வேண்டியதாய் போயிற்று. அதுவுமில்லாமல் இந்த மேன்ஷன் கிடைக்கவே, உன் பாடு என் பாடு என்றாகி போனது. இதையே ப்ரோக்கர் வைத்து தான் தேடினேன். தண்ணீர் மஞ்சளாக வரும், சாப்பாடு வெளியில் தான் சாப்பிட்டு கொள்ள வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், காதலியிடம் போன் பேச இடம் இருக்காது, மொட்டைமாடி, படிகள், வராண்டா என எல்லா இடத்தையும் ஏற்கனவே பிடித்து வைத்திருப்பார்கள், சிகரெட் தண்ணி என எந்த பழக்கத்திற்கும் தடை இல்லை, வண்டி வைத்து கொள்ளலாம் ஆனால் பார்க்கிங் இல்லை, கேட் வெளியே தெருவில் தான் நிறுத்து கொள்ள வேண்டும், வண்டி திருடு போனால் மேன்ஷன் நிர்வாகம் பொறுப்பேற்காது, இது தவிர அறைகளிலும் பர்ஸ் செல்போன் போன்றவைகள் திருடு போகும், ஒரே சிறிய அறையில் குறுக்க நெடுக்க 5 கட்டில்கள் போடப்பட்டிருக்கும், பொருட்களை வைத்து கொள்ள அலமாரியும் கிடையாது, சுவற்றில் ஆணியும் அடிக்க கூடாது, ஆனாலும் எங்களுக்கு முன்பிருந்தவர்கள் ஆணி அடித்து ஹேங்கர் வைத்திருந்தனர், எல்லார் ஹேங்கரிலும் கிட்டத்தட்ட 40 கிலோ எடைக்கு சர்ட் பேன்ட்கள் தொங்கி கொண்டிருக்கும்இது தவிர அவ்வப்போது கரண்ட் கட் வேறு, யூதர்கள் 5 அடுக்கு அலமாரி போன்றிருக்கும் இடங்களில் எப்படி அடைந்து கிடந்து தங்கியிருப்பார்கள் என்றும், எப்படி வெக்கையில் வெந்திருப்பார்கள் என்பது கைகளில் அகப்படாமல் கொசுக்கள் ரீங்கரித்து சொல்லி கொண்டே இருக்கும்

என்னுடைய ஆபிஸ் மாற்றலாகியும் கூட இதே மேன்ஷனில் இருந்தே போய் வந்து கொண்டிருக்கிறேன். தினமும் போக முக்கால் மணி நேரம், வர முக்கால் மணி நேரம் ஆனாலும் கூட எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. அது போக பெட்ரோல் செலவு வேறுஆனாலும் இங்கேயே குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்ஒரே காரணம் ஜான்

எனக்கும் பலரை போல, சிலரை பார்த்த மாத்திரத்திலே பிடித்து விடும். அது போல பிடித்து போனவன் தான் ஜான், காரணமே இல்லாமல் பிடித்து போனாலும், இப்போது அவனுக்காகவே இந்த குப்பை மேன்ஷனில் இருக்குமளவிற்கு பிடித்து போனதற்கு ஓர் தீர்க்கமான காரணம் இருக்கிறது.

இப்போது நான் உயிருடன் இருக்கிறான் என்றால் அதற்கு ஜான் தான் காரணம். அப்போது திவ்யா என்னை வேண்டாம் என்று உதறி விட்டு சென்றிருந்த காலம் அது. அப்போது எனக்கு வேலையிலும் சிலபல சிக்கல்கள் இருந்தன. ரொம்பவும் மன அழுத்தத்தில் ஒரு நாள் விஷம் குடிக்க முடிவு செய்து விட்டேன். கடைக்கு போய் வாங்கி வந்து என் பையில் தான் வைத்திருந்தேன். ஆனாலும் ஜான் அதை கண்டு பிடித்துவிட்டான். அதை எப்படி கண்டுபிடித்தான் எனக்கு இன்று வரை தெரியவில்லை, ஆனாலும் எப்படியோ கண்டுபிடித்து விட்டான். அதை எல்லாரும் தூங்கியதற்கு பிறகு இரவு குடிக்கலாம் என்று தான் வைத்திருந்தேன், ஆனாலும் அதில் எதிர்பாராத தடை ஏற்பட்டு விட்டப்படியால் அது ரத்தாகி போனது. இப்போது அதை பற்றி நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வரும்.

அந்த நாள் உண்மையிலே எனக்கு மறக்க முடியாத நாள். ஜான் அன்று இரவு இரண்டு மணி நேரம் என்னிடம் பேசினான். நிறைய தைரியம் சொன்னான், நிறைய கதைகள் சொன்னான், நிறைய நம்பிக்கை வார்த்தைகள் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் இப்போது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை, ஆனாலும் அவன் என்னிடம் பேசிய போது, நான் என்னை எவ்வளவு கம்பீரமாக உணர்ந்தேன் என்பது மட்டும் எனக்கு மறக்கவேயில்லை. அந்த நாள் உண்மையிலே என் வாழ்வில் ஓர் திருப்புமுனை, அதன்பின் ஒரே வாரத்தில் என் வேலை சம்பந்தமான சிக்கல் மறைந்து போனது. திவ்யா இல்லாத சோகமும் ஓரளவு பழக்கத்திற்கு வந்தது. ஒரு மாதம் கழித்து, திவ்யா போனது எல்லாம் எனக்கு ஒரு விஷயமாகவே தெரியவில்லை. கொஞ்ச நாட்களிலே அபர்ணா என் வாழ்வில் வந்து விட்டாள். வாழ்க்கை திரும்பவும் அழகாகிவிட்டது.

ஜான் வேலை செய்வது ஓர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில், டைல்ஸ், க்ரானைட் சம்பந்தமான பொருட்களையெல்லாம் மார்க்கெட்டிங் செய்வான். அறையில் இருக்கும் முக்கால்வாசி நேரம் யாரிடமாவது போனில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருப்பான். அவன் போனில் தான் ஆங்கிலத்தில் பிச்சு உதறவானே தவிர, எங்களிடம் பேசுவது அக்மார்க சென்னை தமிழில். எப்போது வேலைக்கு போவான், வருவான் என்றே தெரியாது. சில நேரம் ஜாமத்திற்கு வருவான், விடியற்காலையே கிளம்புவான். சில நேரம் மூன்று நாட்கள் வரையிலும் கூட எங்கயும் போகாமல் அறையிலே இருப்பான்.

இதற்கிடையில் மேன்ஷனில் திருட்டு பிரச்சனை அதிகமாகி கொண்டு வந்தது. சமயத்தில் என் பர்ஸில் இருந்து கூட பைசாக்கள் நழுவின. அன்றிலிருந்து பர்ஸில் அதிகமாக பணம் வைத்து கொள்வதில்லை. அப்படியே வைத்து கொண்டாலும், ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையெழுத்திற்கு சற்று கீழே, கண்ணிற்கே தெரியாத வகையில் பென்சிலில் மூன்று ஸ்டார்கள் வரைந்து கொள்வேன். அது அவ்வளவு எளிதில் யார் கண்ணிற்கும் தெரியாது, நானே உற்று பார்த்து தேடினால் தான் கிடைக்கும்.

மேன்ஷனில் திருட்டு பிரச்சனை அதிகமானதில் எனக்கு ஓர் தனிப்பட்ட உபாயம் ஏற்பட்டது. பொதுவாக நான் அறை நண்பர்களுக்கு மட்டும் என் போனை கொடுப்பேன், ஏதேனும் அவசர கால் பேச வேண்டுமென்றாலோ, மொபைலில்கேம்ஸ்விளையாட கேட்டாலோ கொடுத்து விடுவேன். நான் மட்டுமில்லாமல் மற்ற அறை நண்பர்களும் கூட அப்படி தான் இருப்பார்கள். அப்படி ஒரு நாள் கொடுத்ததில், தான் சிக்கலாகி போயிற்று. ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து அபர்ணாவிற்கு, ஓர் தெரியாத நம்பரில் இருந்து தேவையில்லாத கால்களும், மெஸெஜ்களும் வந்து கொண்டே இருந்தன. வரும் மெஸெஜ்களில் முக்கால்வாசி ஆபாச மெஸெஜ்கள், மீதி ஐ லவ் யூ மெஸெஜ்கள். இதை யாரோ வெளியாள் தான் செய்து கொண்டிருப்பதாய் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் என் அறை நண்பன் தினேஷின் மொபைல் திருடு போயிற்று, அன்று இரவு யதேச்சையாக அபர்ணாவிடம் விசாரித்தேன், இன்று ஏதேனும் அந்த நம்பரில் கால் வந்ததா என்று கேட்டேன், இல்லை என்று சொன்னாள். அப்போது தான் எனக்கு தினேஷ் மீது மெலிதாக சந்தேகம் வந்தது. ஒருவேளை இவன் தான் நம் மொபைலில் இருந்து அபர்ணா நம்பர் எடுத்து தொந்தரவு கொடுக்கிறானே என்று சந்தேகித்தேன். ஆனால் அவனிடம் அது பற்றி கேட்கவில்லை. ஆதாரம் இல்லாமல் என்னவென்று கேட்பது, ஒருவேளை அவனாக இல்லாமல் போனால் பெரும் சங்கடம் ஆகி போகும் என விட்டுவிட்டேன்.

இரண்டு நாட்கள் மொபைல் இல்லாமல் தான் இருந்தான். அந்த இரண்டு நாளும் அபர்ணாவிற்கு கால் ஏதும் வரவில்லை. மூன்றாம் நாள் புது மொபைல் வாங்கி வந்தான். அன்று இரவே வழக்கம் போல, அபர்ணாவிற்கு கால் வந்தது. ஆனால் அதே நம்பரில் இருந்து தான் வந்தது என்றாள். அப்படியென்றால் அவன் தொந்தரவு கொடுப்பதற்கென்றே தனியாக ஓர் சிம் வைத்திருக்கிறான் என்று ஊர்ஜிதமானேன். இது நாள் வரையிலும் அபர்ணாவிற்கு கால் வந்த நேரங்களில், தினேஷ் எப்போதும் அறையில் இருந்தது இல்லை. மொட்டை மாடியில் தான் இருப்பான். ஜானிடம் விஷயத்தை சொன்னேன். அவன் ஒரு மூன்று பேரை கூட்டி வந்தான், நேராக மொட்டை மாடிக்கு போனோம், யாரிடமோ பேசி கொண்டிருந்தான். தூரத்தில் நின்று கொண்டே அவன் நம்பருக்கு கால் செய்தோம், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என வந்தது, அப்ர்ணாவிற்கு வரும் ராங் கால் நம்பருக்கு போன் அடித்தோம், வெய்ட்டிங் வந்தது. அன்று இரவு அவனை காட்டு அடி அடித்து விட்டு, அடுத்த நாள் காலை போலிஸில் கம்ப்ளைன்ட் செய்தோம்.

எனக்கும் அபர்ணாவிற்கும் அப்படி ஒரு நிம்மதி, அபர்ணா ஜானை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னாள். ஜானிடம் விஷயத்தை சொன்னதற்கு, கூட வந்து அடிச்சதுக்கெல்லாம் நன்றியா என்று கேலி செய்தான். வரும் ஞாயிற்றுகிழமை ஜானிற்கு பிறந்த நாள் வருவதாகவும், அன்று மாலை Pelita-வில் சந்திக்கலாம் என்று சொன்னான்.

ஜானிற்கு ஏதேனும் வாங்கி கொடுக்க வேண்டும் போல் இருந்தது. என்ன வாங்குவதென்றே தெரியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தோம். ஜான் ஓர் பழைய ஓட்டை போன் வைத்திருப்பதால், அவனுக்கு ஒரு புதிய போன் வாங்கி கொடுக்கவே முடிவு செய்தோம். அன்று ஏதேனும் சினிமாவிற்கு போகலாம் என்று அபர்ணா சொன்னாள், அவளே மூன்று பேருக்கும் சேர்த்து இணையத்தில் டிக்கெட்களை பதிவு செய்தாள். சினிமாவிற்கு போவதற்கு முன்பே, ஒரு மொபைல் ஷாப் போய் வாங்கி கொடுக்கலாம் என முடிவானது.

ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலான ஏடிம்களில் பணம் இருப்பதில்லை என்பதால் சனிக்கிழமை இரவே 10000 பணத்தை எடுத்து வைத்து கொண்டேன். அதில் ஸ்டார்களை போடவும் மறக்கவில்லை. முந்தைய நாள் இரவு ஜான் எல்லார்க்கும் பார்ட்டி கொடுத்ததால், மட்டையாகி காலை 10 மணிக்கு தான் எழுந்தேன். எல்லோருமே தூங்கி கொண்டு தான் இருந்தார்கள். பணம் இருக்கிறதா என்று எதேச்சையாக பர்ஸை எடுத்து பார்த்தேன், இருந்தது.

அபர்ணாவை நேரடியாக மொபைல் ஷாப் வர சொல்லி விட்டு, நானும் ஜானும் குளித்து முடித்து கிளம்பினோம். ஜானிடம் தியேட்டரிற்கு போவதற்கு முன்னர் ஒரு சிறிய வேலை இருக்கிறது, ஒரு மொபைல் ஒன்று வாங்க வேண்டும் என்றேன். யாருக்கு என்று கேட்டான், அபர்ணாவின் தங்கைக்கு என்று சொல்லி சமாளித்து விட்டேன்.

மொபைல் ஷாப்பில் மூவரும் சேர்ந்து 9000 ரூபாய்க்கு ஒரு மொபைலை தேர்வு செய்தோம். ஜானிற்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டோம், மிகவும் பிடித்திருப்பிதற்காக சொன்னான். அவனுக்கு சந்தேகம் வர கூடாது என்று அபர்ணாவும் தன் தங்கையிடம் அடிக்கடி போன் குறித்து பேசுவதாய் பாவனை செய்தாள். இன்று அனைவரும் விடைபெறும் போது கொடுப்பதாய் தான் ஏற்பாடு.

அபர்ணாவும், ஜானும் பேசி கொண்டிருக்க நான் மட்டும் Billing Section சென்றேன். பில்லை வாங்கி, பணம் கொடுக்க எண்ணினால், எத்தனை முறை எண்ணினாலும் 8000 தான் வந்தது. ஒருவேளை பணம் திருடு போயிருக்குமோ என்று சந்தேகம் வந்தது. எது எப்படி இருந்தாலும் மேன்ஷன் போய் பேசி கொள்ளலாம், இப்போது இங்கிருந்து கிளம்பும் வழியை பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். மீதி 1000 மட்டுமே இடிக்கிறது. அபர்ணாவிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாமென்று, ஜானை கூப்பிட்டு 1000 ரூபாயை கடன் கேட்டேன்.

பர்ஸில் இருந்து எடுத்து, இரண்டு 500 ரூபாய்களை நீட்டினான். இரண்டிலுமே கவர்னர் கையெழுத்திற்கு கீழே மூன்று ஸ்டார்கள் இருந்தன.  
No comments:

Post a Comment