Saturday, 30 November 2013

நவீன சரஸ்வதி சபதம்







இந்த படத்தை பற்றியெல்லாம், ஒரு பதிவு எழுதுவதையே கேவலமாக நினைக்கிறேன். இரண்டாம் உலகம், ராஜா ராணி போன்ற அரைவேக்காட்டு தனமான படங்களை க்ளாஸிக் என நினைப்போருக்கு, இந்த படம் பிடிக்கலாம்

இந்திய தேசம் முழுவதும் தேடியதில் நாலே நாலு மொடா குடிகாரர்கள், சிவனுக்கு கிடைக்கிறார்கள். அவர்களிடம் திருவிளையாடல் செய்து, அவர்களின் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க செய்வது தான், நவீன சரஸ்வதி சபதம். காமெடி படம் என்ற பேனரை தாங்கி வந்த இந்த படம், திரையரங்கில் ஒருவரை கூட சிரிக்க வைக்காதது கேவலத்திலும் கேவலம். கதை, திரைக்கதை, இசை, பிண்ணனி இசை, நடிப்பு என்று எங்கு புகுந்தாலும் நொட்டை சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, என்னை கேட்டால் 2013-ல் வெளி வந்த படங்களில் விமர்சனம் எழுத கூட தகுதியில்லாத படம் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

படத்தை தவிர்த்து வேறு சில விஷயங்களை பேசலாம் என நினைக்கிறேன். குடிப்பழக்கத்தை திருத்துகிறேன் என்ற பேர்வழியில் ஆளாளுக்கு எடுக்கும் டாக்குமென்ட்ரி படங்கள், சீரியஸ் படங்கள், காமெடி படங்கள், குறும்படங்கள் என எல்லாமும் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்து கொண்டிருக்கிறன. இப்படி தொடர்ந்து தோல்விகளையே தழுவி கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்தை எதிர்க்கும் தகுதியான திரைப்படங்கள் கூட கேலிக்கூத்தாக்கப் படலாம் அல்லது மொண்ணையாக்க படலாம். இவர்களின் அடிப்படை நோக்கம் வணிகம் தான் என்றாலும், ஆர்வக்கோளாறு காரணமாக தகுதிக்கு மீறி மெஸெஜ் எல்லாம் சொல்கிறார்கள்.

கொஞ்ச வருடங்கள் முன்பு, ஏதோ ஒரு நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை மக்கள் விட்டொழிப்பதற்காக, அந்நாட்டு அரசு சார்பாக ஒரு பயங்கரமான விளம்பர பலகை வைக்கப்பட்டது, அதில் ஓர் தூண்டில் முள், புகை பிடிப்பவரின் வாயை மாட்டி இழுப்பது போல் பார்த்தாலே அருவருப்பும், அதிர்ச்சியும் உண்டாகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து பெருமளவு மக்கள் தங்களது சிகரெட் பழக்கத்தை விட்டொழித்தனர் என்று, அதன் அருகாமை நாடுகளும் கூட அதனை பின்பற்றினர். இது எப்போவோ படித்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில் வெளி வரும் குடிக்கெதிரான படங்களை எல்லாம் நான் எவ்வள்வு நாட்கள் நினைவில் வைத்திருப்பேன் என எனக்கே தெரியவில்லை.

மதுபான கடை படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதே ஒழிய வெகுஜன மக்களின் கவனிப்பை பெறவில்லை, அங்கேயே படம் தோற்றுவிட்டது. இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் கதையம்சமும், நகைச்சுவையும் பேசப்பட்டளவு கூட அதன் குடிக்கெதிரான சங்கதிகள் பேசப்படவில்லை. திரையரங்குகளில் திரையடப்பட்டும் கேன்சர் தொடர்பான காட்சிகள் எல்லாம் எப்போதோ கேலிக்குரிய ஒன்றாக மாறி போய் விட்டது. புகையிலை பழக்கத்தால் வரும் பாதிப்புகளை நேரடியாக மக்களிடம் எடுத்து சொல்லி, அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாலும், அதில் காட்டப்படும் நோயாளிகளோடு மக்களால் ஒன்ற முடியவில்லை. பெயருக்கு என ஒரு வீடியோவை, மத்திய அரசு தயாரித்து வெளியிட்டால், அது இப்படி தான் இருக்கும்

குடி மட்டுமே நம் தேசத்தின் பிரதான பிரச்சனை போலவும், குடிப்பழக்கம் மக்களை விட்டு ஒழிந்தால் தேசமே சொர்க்க பூமி ஆகிவிடும் என்பது போல் இங்கு ஒரு போலி பிம்பம் ஒழுக்கச்சீலர்களாலும், அரசியல் கட்சிகளாலும் ஏற்படுத்தப்படுகிறது. கல்விமுறை, சாயப்பட்டறைகள், மலினமான அரசியல் கொள்கைகள், மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு, விவசாயம் ஊக்குவிப்பு இன்மை, வேலையில்லா திண்டாட்டம், தப்பும் தவறுமான சிஸ்டங்களுடன் செயல்புரியும் அரசு அலுவலகங்கள், அடிப்படை ஆரோக்யம் குறித்த அக்கறையின்மை என எல்லா பக்கமும் நோய் வாய்ப்பட்டிருக்கும் சமூகம், குடிப்பழக்கத்தில் மட்டுமே நோய் வாய்ப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்ட ஒழுக்கச்சீலர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த தகுதியும் இல்லை. குடிப்பழக்கத்தை திருத்துவதை விட இங்கு பற்றி எறியும் பிரச்சனை எத்தனையோ இருக்கின்றது.

சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் 100 வயது வரை கூட மக்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி குடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க்கையிலும் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கு தரமான மதுவும், புகையிலையும் கிடைக்கும் வகையிலாவது அந்நாட்டு அரசு அவர்களுக்கு வழி வகுத்திருக்கிறது. இங்கு அதற்கான கட்டமைப்புகளும் இல்லை, எதிர்த்து கேட்க யாருக்கும் துப்பும் இல்லை.

சொல்ல மறந்து விட்டேனே, படம் ஆரம்பிப்பதற்கு முன், தமிழக அரசின் சாதனைகளை விவரித்து 15 நிமிடம் வீடியோ ஒன்று ஓடியதுஅந்த கொடுமையையும் பொறுமையாக உட்கார்ந்து பார்த்தேன்.

இரண்டாம் உலகம் – An Exhibition









சமீபத்தில் வந்த திரைப்படங்களில், இவ்வளவு அபார உழைப்பை தாங்கி வந்த திரைப்படம் இதுவாக தான் இருக்கும், படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல் அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால், வெறும் அழகு மட்டும் நம்மை திருப்திப்படுத்தாது என்பதற்கு, இரண்டாம் உலகம் ஓர் உதாரணம்.

செல்வ ராகவனை டைரக்ஷனில் தான் ஆள் கெட்டியே தவிர, ஸ்க்ரிப்ட்டில் ரொம்பவே தள்ளாடுகிறார், இருந்தாலும் அவரை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்தவன் லவ்வரை உஷார் செய்வதையே கதைக்களமாக வைத்து, தான் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும், ஒவ்வொரு வெரைட்டி காட்டுகிறார். படத்தில் ஸ்க்ரிப்ட் தரம் என்ன என்பதனை ஆராய்ந்தால், எந்த அளவும் இறங்கி அடிக்கலாம்

படத்தில் இரண்டு ஆர்யா, இரண்டு அனுஷ்கா

ஆர்யா சில காட்சிகளில் ரவிகிருஷ்ணாவை ஞாபகப்படுத்துகிறார், ஆர்யா அழகாக இருக்கிறார் என்பதை தவிர, அவரிடம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்னவென்றே தெளிவாக சொல்லப்படவில்லை என நினைக்கிறேன். முதல் உலகத்தில் வரும் ஆர்யா, ஒரு தீவிர சமூக சேவகனாக காண்பிக்கப்படுகிறார், ஆனால் எல்லாம் ஒரு 5 நிமிடத்திற்கே, அதன் பிறகு சமூக சேவை எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. காதல் வந்ததும் காணாமல் போய் விடுகிறது. அப்படியென்றால் இந்த படத்தின் வில்லன் யார் என்று பார்த்து கொள்ளுங்கள். இரண்டாம் உலகத்தில் வரும் ஆர்யா, வேலைவெட்டி இல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி கொண்டும், அனுஷ்காவும் ரூட் விட்டு கொண்டும் திரிகிறார், கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, திடீரென்று ஒரு மாபெரும் வீரனாக உருவெடுத்து விடுகிறார். அது எப்படி என தெரியவில்லைஅவ்வப்போது, சில பல காமெடி காட்சிகளை கூட முயற்சி செய்து பார்த்திருக்கின்றனர், ம்ஹூம்ம்ம்…. 

முதல் பாதியில், மருத்துவர் அனுஷ்கா இறந்த பின்பு, நாய் ஒன்று மதுபாலக்கிருஷ்ணனை அதாவது ஆர்யாவை அனுஷ்கா இறந்த இடத்திற்கு அழைத்து செல்கிறது, அங்கே சொட்டி கிடக்கும் ரத்தத்தில் இருந்து செடி ஒன்று முளைக்கிறது. அது எதற்கான குறியீடு என்று இப்போது வரைக்கும் எனக்கு விளங்கவில்லை. அதன்பின் மதுவின் அப்பா இறந்து விட்டதாக செய்தி வருகிறது, ஆனால் அவரின் ஈமச்சடங்கிற்கு போனாரா என்று தெரியவில்லை, இறந்து போன அனுஷ்காவை, சுடுகாட்டை விட்டுவிட்டு கோவா முழுதும் தேடி அலைகிறார்.

படத்தில் வரும் இரண்டாம் உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை தவிர எல்லாரும் வெளிநாட்டவர்களாக இருக்கின்றனர், அதுவும் மொத்த உலகமும் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்புலமாக கொண்டுள்ளது போல் தெரிகின்றது. ஆனால் அவர்கள் தமிழ் பேசுகிறார்கள்.
  
இப்படி ஸ்க்ரிப்ட்டில் எந்த குறுக்கு சந்தில் புகுந்தாலும், நமக்கு அங்கு ஒரு காமெடியான லாஜிக் ஓட்டை காத்து கொண்டிருக்கிறது. படம் மொத்தமும் மொக்கையாக போகிறதா, சாஃப்ட்டாக போகிறதா என்று கண்டுபிடிக்கவே தனியாக மூளையை போட்டு கசக்க வேண்டியதாய் இருக்கிறது. ஆர்யாவின் சமூக சேவை என்னவானது, இரண்டாம் உலகத்தின் ஆணாதிக்கம் முடிவிற்கு வந்ததா, அரசன் தூக்கியெறியப்பட்டானா, இரண்டாம் உலகத்தின் எதிரிகள் அழிக்கப்பட்டனராஎதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை. கதாநாயகனும், கதாநாயகியும் கல்யாணம் செய்து கொண்டு கஜாகஜா  செய்தார்தார்களா, இல்லையா என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். அது தான் கதை,,,

பல பரிமாணங்களை பார்த்து விட்ட தமிழ் சினிமா, இந்த படத்தை பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு நமக்கு தந்திருப்பது ஏமாற்றமே என்றாலும்படத்தின் சி.ஜி காட்சிகள், படத்தின் செட், கேமரா, காட்சி நேர்த்தி என நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை, அதிலு,ம் சில பாடல்கள் நம் பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படத்தின் பிண்ணனி இசை மிகவும் ரம்மியமாக இருந்தது. படம் முடித்து வெளியே வந்ததன் பின்னரும், அதன் பிண்ணனி இசை வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இவ்வளவு கடின உழைப்பை டெக்னிக்கல் டீம் கொடுத்தும், ஸ்க்ரிப்ட் தள்ளாடுவதால் படம்பல்ப்வாங்குவது, சோகத்திலும் சோகம்!

இந்த பதிவை அனுஷ்காவை வைத்து முடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்

இப்போதிருக்கும் கதாநாயகிகளில் அனுஷ்காவே முன்னிலை வகிக்கிறார் என்றாலும், தமிழில் இது வரை அவருக்கு ஏற்ற பாத்திரத்தை எந்த தமிழ் சினிமாவும் தராமல் இருந்தது. ஆனால், இரண்டாம் உலகம் நிச்சயம் அவருக்கு ஏற்ற மாஸான ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது. வெகு நிச்சயமாக, அனுஷ்கா மட்டுமே, இத்தனை நீளமான தள்ளாட்டமான படத்தை பார்க்க வைக்கிறார். அவ்வளவு அழகாக இருக்கிறார், படத்தின் காஸ்ட்யூம், லொக்கேஷன், கேமரா, ஸ்டன்ட் என ஒவ்வொருவரும் மாய்ந்து மாய்ந்து அனுஷ்காவிற்காகவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அத்தனைக்கும் அவர் தகுதியானவர் என்பதனைஇரண்டாம் உலகம்மூலம் நிரூபித்தியிருக்கிறார்.

லவ் யூ அனுஷ்கா….!

Sunday, 10 November 2013

Pandiya Nadu - Movie review






பாண்டிய நாடு படம் பார்த்தேன், படத்தில் சொல்லி கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லையென்றாலும், ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியாவது கிடைத்தது என்றால் அதற்கு காரணமாக மூன்று பேரை சொல்லலாம் சுசீந்திரன், பாரதிராஜா, D. இமான்.

மொத்த படத்திற்கும் ஓர் அசத்தலான கலர் கொடுத்ததே பிண்ணனி இசையாக தான் இருக்க கூடும். சமீபமாக வந்த படங்களில் எதிர்நீச்சல், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு அடுத்ததாக இந்த படம் பிண்ணனி இசையில் ஓரளவு கோலிவுட் மானத்தை காப்பாற்றுகிறது என்றே சொல்லலாம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஓர் காட்சி வரும், சிவகார்த்திகேயன் நீளமாக ஒரு வசனத்தை பேசி விட்டு பரோட்டா சூரியை பார்த்து “என்ன டா பார்க்குற நீயும் சொல் டா” என சொல்வார், “இதையெல்லாம் நான் சொன்னா சிரிச்சிருவாங்க”ன்னு அப்பாவியாக பம்மி விடுவார். ஆனால் இந்த படத்தில் அது போல் பம்மாமல், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்து பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார்.

இப்போது வரும் படங்களில் கலை இயக்குநர்களின் பணி தான் என்ன என்பதனை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன், படத்திற்கு இரண்டு பாடல்களுக்கு மட்டுமே செட்டு போடுகின்றனர் என நினைக்கிறேன், அதிலும் எந்த ஒரு இன்னோவோஷ்னையும் காணோம். ப்ரோட்யூசர்கள் தான் பேருக்கு செட்டு போட்டா போதும் தம்பி, என்று சொல்வார்கள் என யூகிக்கிறேன்.

லக்‌ஷ்மி மேனன், ஸ்கூல் படிக்கும் பெண் என்று சொன்னால் உண்மையிலே நம்ப முடியவில்லை, இப்போதே ஆன்ட்டி லுக் வந்து விட்டது. இன்னும் மூன்று வருடங்களில், விஷாலுக்கு அண்ணியாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தொடர்ந்து வரும் தமிழ் படங்கள் மக்களை பயமுறுத்தும் வகையிலும், ரௌடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூஜா தூக்கும் வகையிலே வெளி வருவது தமிழகத்தின் சாபக்கேடு என்றே நினைக்கிறேன். நம் கண் முன் நிகழும் அநியாயங்களையும், தொழில் ரீதியில் நிகழும் அநியாயங்களும் கண்டு கொள்ளாமல் போனால் நாம் பிழைத்தோம், இல்லையென்றால் வீட்டில் ஒரு உயிர் அல்ப்பாயுசில் போகும் என்றே தொடர்ந்து பயமுறுத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டிய பெரிய பெரிய கட்டிடங்களை டிராஃபிக் ராமசாமி இழுத்து மூடி காலி செய்யவில்லையா? இப்போது மீண்டும் அது திறக்கப்பட்டு விட்டது என்பது வேறு விஷயம், ஒரு சாதாரண குடிமகனால் கூட பெரிய விஷயங்கள் சாத்தியப்படும் என்பதற்கு நம் நிகழ் காலத்திலே பல உதாரணங்கள் இருக்கின்றன. என்ன.. எல்லாமே இழுத்தடிக்கும், அவ்வளவு தானே தவிர, அடுத்த நிமிஷமே வீட்டின் முன் ஸ்கார்ப்பியோ கார் நிற்கும் என்பதெல்லாம் அதீதம்.

என்னுடைய அம்மா அறநிலைய துறையில் சேர்ந்த நாளில் இருந்து, அரசியல் செல்வாக்குள்ள, பணபலம் உள்ள பலரிடமிருந்து அரசாங்கத்திற்குரிய நிலங்களை மீட்டு எடுத்து இருக்கின்றார், தோராயமாக இது வரை 20-30 கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை மீட்டு எடுத்து இருக்கின்றார். இதற்கு காரணம் அம்மா மட்டுமே என்று சொல்லி விட முடியாது, ஆரம்ப புள்ளியாக அமைந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அறநிலைய துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகிய மூன்று துறைகளுமே அவரவர் கடமைகளை சரிவர செய்து, என் அம்மாவிற்கு ஆதரவாக செயல்பட்டன. கலெக்டரும், மினிஸ்டர்களும் கொடுக்கும் குறுக்கீடுகளை கூட தூக்கி அடித்து இருக்கின்றார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்…

இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், எப்போதுமே நல்லது செய்ய இறங்குவோருக்கு ஆதரவாக பல கரங்கள் உதவுகின்றன, அதிலும் முக்கியமாக அரசாங்க அலுவலகங்களில்… இப்போதிருக்கும் ஓட்டை ஒடைசலான சட்ட அமைப்புகளிலே கூட பலர், தீமைக்கு எதிராக சாதித்து கொண்டு தான் இருக்கின்றனர், தவிர, அவர்கள் இப்போதும் ஓர் எடுத்துக்காட்டாக நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர், மாறாக செத்து விடவில்லை.