Wednesday, 3 April 2013

வல்கரான கதை
விஜய்க்கு எப்போதுமே கொண்டாட்டம் தான் வாழ்க்கை. இதை நிரூபிப்பதற்காகவோ என்னவோ, வாரா வாரம் நீச்சல் குளத்திற்கு செல்வான். அவனுக்கு பிடித்த இடம் கல்லூரியாகவும், பிடிக்காத இடம் வகுப்பறையாகவும் இருந்தது. எப்போதும் எங்கும் அவனை பார்க்க முடியும். உதவி என்று கேட்டு விட்டால், தமிழ் சினிமா கதாநாயகனாக மாறி விடுவான். அவனிடம் உதவி வாங்குபவர்கள் அனைவரும், எல்லோருக்கும் உதவி கொண்டு இருக்காதே, கேனையன் என்று சொல்லி விடுவார்கள் என்று தவறாமல் அறிவுரை வழங்குவார்கள். படிப்பு விஷயத்தில் மட்டும் எப்போதும் மந்தமாகவே இருந்தான். படிப்பதற்காக புத்தகத்தை எடுத்தாலே தாபாக்களும், நீச்சல் குளமும், பேக்கரிக்களுமே அவன் கண் முன் விரிந்தது. ஊரே உட்கார்ந்து பரீட்சைக்கு படித்து கொண்டிருக்கும் போது, என்றோ நடந்த கிரிக்கெட் மேட்சை தொலைக்காட்சியில் பார்ப்பதில் அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏன் என்று தெரியாமலே பரிட்சை காலங்களில், அவனுக்கு San Andreas கேமில் ஆர்வம் மேலிடும். அதில் வரும் பொதுஜனத்தை எப்போதும் அவன் துப்பாக்கி கொண்டு சுடுவதில்லை, கைகள் தான். 2 அடி அடித்தாலே, அந்த அடி வாங்கவே பிறந்த ஜென்மம் படுத்து விடும். அதன் பின் எல்லாமே மிதி தான். 6 மிதி சராசரியாக மிதித்தாலே அந்த Virtual ஜென்மத்தின் உடம்பை சுற்றிலும் சிகப்பு வண்ணம் பரவி விடும். பிறகு இறந்து விடும். அந்த மிதி அனைத்தும் நாகரிக சமூகத்தை மிதிப்பதாய், ஒவ்வொரு முறையும் கற்பனை செய்து கொள்வான்.

80 கிமீ வேகத்தில் எதிர் வரும் வண்டியை, சின்னதாய் ஒரு மிரட்டு மிரட்டுவதில் அவன் எப்போதும் கண்டிப்பாய் இருந்தான். எதிர் வரும் வண்டியை வேகம் குறைத்து நிறுத்தும் அளவிற்கு, அவனுக்கு வழி விடாமல் வண்டியை குறுக்கடித்து நிறுத்துவான். சில சமயம் எதிராளி கோவம் கொண்டு, கெட்ட வார்த்தை பேசி அடிக்க வருவான். உடனே வண்டியை விரட்டி கிளம்பி விடுவான், அவன் வண்டியில் துரத்தி வந்தாலும் பிடிக்க முடியாத வகையில் பேய் வேகத்தில் வண்டியை ஓட்டுவான். இது வரை அவனை யாரும் பிடித்ததில்லை. மொத்தியதும் இல்லை. இவ்வாறு செய்வது எங்கோ யாருக்கோ நல்லது விளைவிக்கும் என்று அவனாய் கற்பனை செய்து கொண்டான்.

எல்லாருக்கும் உதவினாலும், மகிழ்ச்சியாக காலம் தள்ளினாலும் அவன் வாழ்க்கையில் ஒரு இருண்மை இருந்ததை அவனால் கண் கூடாக காண முடிந்தது. அவனை போல் நல்லவன் யாரும் இல்லை என்றாலும், உதவிக்கு மட்டும் அவன் கூட நிற்கும் கும்பலை கண்டு அவன் எரிச்சல் அடைந்தான். ஆனால் அந்த எரிச்சல் எக்காலத்திலும் அவன் கொடைக்கு தடையாய் இருந்ததில்லை. படிப்பை பொறுத்த வரையில் அறிவுரைகள் சகல திசைகளில் இருந்தும் படையெடுத்து வந்தது. பரிட்சைக்கு பரிட்சை ‘அரியர்ஸ்’களின் எண்ணிக்கை ஏறி கொண்டே போனது. அவனுள் எப்போதும் ஒரு சேடிஸ்ட் கள்ள சிரிப்பினை கொண்டு இருந்தான். எப்போதேனும் அறிவுரைகள் அளவிற்கு அதிகமான மன உளைச்சலை தரும் போது, ஒரு கறுப்பு ஸ்ப்ரே பாட்டிலை வாங்கி மோசமான பொருட்களை தயாரித்து விநியோகிக்கும் விளம்பர பலகைகளின் மீது ‘I hate’ என்று எழுதி விட்டு வந்தான். ஒரு தரமற்ற ஹோட்டல் போர்டு மீது அப்படி தான் ஒரு நடு ராத்திரியில் எழுதி விட்டு, காலை வந்து பார்த்தான். அந்த ஹோட்டலின் போர்டையே காணோம். அகற்றி விட்டு இருந்தார்கள். போர்டே இல்லாமல் 3 நாள் ஹோட்டல் ஓடியது. நான்காவது நாள் புதிய ஒரு போர்டு வைத்தார்கள். அடுத்த நாளும் அதை அகற்ற வேண்டிய அவசியத்தை அந்த ஹோட்டல் நிறுவனத்திற்கு ஏற்படுத்தி விட்டு வந்தான். இந்த முறை புதிய ஒரு போர்டு வைத்து, ஒரு செக்யூரிட்டியை நியமித்து காவலுக்கு வைத்தார்கள். அந்த நாள் இரவு செக்யூரிட்டி தூங்கும் வரை பொறுமையாய், தெரு முக்கில் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று. அதற்கடுத்த நாள் ஓர் நல்ல சமையல் மாஸ்டரை அதிக சம்பளம் கொடுத்து ஹோட்டல் நிறுவனம் வேலைக்கு கூட்டி வந்ததை அறிந்து அகமகிழ்ச்சி அடைந்து அன்றைக்கு டிப்ஸாக 100 ரூபாய் தாளை சர்வருக்கு அளித்தான். முதலாளியை பார்த்து “சில்லி பரோட்டா உண்மையிலே நல்லா இருந்தது சார்” என்று சந்தோஷமாக கூறினான்.

பெற்றோருக்கு பொறுப்பாக நடந்து கொள்ளாதது, படிக்காமல் சுற்றுவது, பெற்றோர் பணத்தில் கொடை வள்ளலாக இருப்பது, அவ்வப்போது desiwap பார்ப்பது, அவனின் HOD ஐ மனசுக்குள் வசை வார்த்தைகளில் திட்டுவது, 2 பெண்களை காதலிப்பது போன்ற மன உறுத்தல்களில் இருந்து தப்ப இது போன்ற மக்கள் சேவைகள் அவனுக்கு உதவியாய் இருந்தது. அப்படி தான் ஒரு முறை நீச்சல் குளத்தில் ஒரு வாரமாக மாற்றாமல் வைத்திருந்த தண்ணீரில் யாருக்கும் தெரியாமல் Nail polish ஐ கலந்து விட்டு வந்தான்.

ஒரு முறை அவன் சகமாணவன் ஒருவனுக்கு கடைசி பரிட்சை அன்று அம்மை போட்டு விட்டது, யாரும் எதிர்ப்பார்க்கா வண்ணம் அவனுடைய நம்பருக்கு பதிலாக அவனது சகமாணவனின் நம்பரை பரிட்சை பேப்பரில் எழுதி விட்டு வந்தான். அதன் மூலம் அந்த செமஸ்டரில் எல்லா பாடங்களிலும் அவன் நண்பன் பாஸ் செய்ய முடிந்தது. நன்றி நன்றி நன்றி என கைகளில் கன்னங்களில் எல்லாம் முத்தம் கொடுத்தான். ஒரு முறை வாங்கிய 500 ரூபாயை திரும்ப கொடுக்க முடியுமா என்று விஜய் கேட்டதற்காக, விஜய்யிடம் பேசுவதை குறைத்து கொண்டான். எப்போது கேட்டாலும் ஒரு சோக கதை பாடினான். அவன் பிறந்த நாளிற்கு Treat கொடுப்பதற்காக அவன் நண்பர்கள் அனைவரையும் ஒரு Bar attached Restuarant அழைத்து சென்று 2500 ரூபாய்க்கு Treat வைத்தான் என்று கேள்விப்பட்டதிலிருந்து கொடுத்த 500 ரூபாயை கேட்பதையே விஜய் நிறுத்தி விட்டான்.

அவனுடைய தொடர் அரியர்களால் அருவருப்பு அடைந்த கல்வி நிறுவனம் அவனது பெற்றோர்களை அழைத்து T.C கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். பெற்றோர் யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்லாதது மிகவும் காயப்படுத்தியது. அவன் அப்பா மட்டும் ஒரு முறை, சொல்லும் போது அறிவுரை எல்லாம் கசந்துச்சு இல்ல, இப்ப நல்லா சந்தோஷமா ஊர் சுத்து என்று ஆற்றாமையில் வாயெடுத்தார், அவனின் அம்மா உடனடியாக குறுக்கிட்டு அவனின் அப்பா பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார். அப்பா பேசியதற்காக அவனின் அம்மா அவனிடம் மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் அப்பா அலுவலகம் கிளம்பும் போது, அவனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு, வீட்டிலேயே இருக்க வேண்டாம், எங்கேயாவது வெளியே போய் வா, தனிமை உன்னை கண்டதையும் யோசிக்க வைக்கும் என்று சட்டை பையில் நூறு ரூபாயை சொறுகி சென்றார்.

நண்பர்கள் அனுதாபம் சொல்வது போல் அவனை நக்கலாக அணுகுவது அறிந்து அவர்களை புறக்கணித்தான். உறவினர்களுக்கு எல்லாம் பதில் சொல்வதும், அவர்களின் அறிவுரை கேட்பதுமே அவனுக்கு தனிமையில் கண்ணீரை வரவழைத்தது. வீட்டில் அப்பாவும், அம்மாவும் எப்போதும் இருப்பதை விடவும் அதிகமாக கரிசனம் காட்டினர். அவனுடைய அப்பா வாரம் இரு முறையாவது, சில்லி சிக்கன் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டார். அம்மாவிடம் ஒரு நாய்க்குட்டி வளர்த்து கொள்ளட்டுமா என்று கேட்ட அடுத்த நாளே, எங்கிருந்தோ ‘லேப்’ ஆண்குட்டியை வரவழைத்தார். அதற்கு ஜார்ஜ் என்று பெயரிட்டான். அது அவனது Hod பெயர் என்று தெரிந்தும் அவனது பெற்றோர்கள் அவனை தடை செய்ய வில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்பாவுடன் பணி புரியும், சாமிநாதன் அங்கிள் அவன் வீட்டிற்கு மதிய சாப்பாட்டிற்கு வந்தார். எப்போதானும் இது போல் அவர் வருவது வழக்கம் தான். வந்து அவனுடைய அப்பா, அம்மாவிடம் ஊர் கதை உலக கதை பேசி விட்டு, மறக்காமல் அவருடைய பிள்ளைகள எவ்வளவு அருமையாக படிக்கிறார்கள் என்று பெருமை பேசி விஜய்யின் பெற்றோர்களை கலங்க வைத்து விட்டு தான் செல்வார். பெரும்பாலும், விஜய் சாமிநாதன் அங்கிளை தவிர்த்து விடுவான். சில சமயம் தவிர்க்க மறந்து விட்டால், அறிவுரைகள் மணிக்கணக்கு பாராமல் கொன்று எடுப்பதால், அவரை தவிர்க்க மறக்கவே மாட்டான்.

ஆனால் இப்போதெல்லாம் நண்பர்களையும் தவிர்ப்பதால், போக இடம் இன்றி வீட்டிலே இருந்தான். கொஞ்சம் ஜுரம் அடிப்பது போல் இருந்ததாலும் வெளியே செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. வசமாக மாட்டி கொண்டான்

“என்ன விஜய், காலேஜ் எல்லாம் எப்படி போகுது?” என்று ஆரம்பித்தார். அப்பா அவரிடம் சொல்லி இருப்பாரா மாட்டாரா என்று உடனடி குழப்பம் ஏற்பட்டது. “சாமிநாதன் ஒரு அறுப்பு கேஸு” என்று அப்பா ஒரு முறை அம்மாவிடம் சொல்லியிருந்தது ஞாபகம் வரவே, அப்பா நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார் என்று பலமாக நம்பினான். அப்பாவும் அம்மாவும் அவன் என்ன சொல்ல போகிறான் என்று அவனையே பார்த்து கொண்டு இருந்தனர். தேவையில்லாமல் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டதை சொன்னால், சாயங்காலம் ஆனாலும் கிளம்பாமல் அறிவுரை சொல்லி கழுத்தறுப்பார் என்று “நல்லா போகுது அங்கிள்” என்று சுதாரித்து பதில் சொன்னான்.

“இப்ப எத்தனாவது வருஷம்...”
“3வது வருஷம் அங்கிள்”
“ஓ... இன்னும் ஒரு வருஷம் இருக்கா...”
“ஆமாங்க அங்கிள்”
“அப்புறம், பாடம் எல்லாம் ஒழுங்கா நடத்துறாங்களா...”
“ம்ம்ம்... நல்லா நடத்துறாங்க அங்கிள்...”
“என் பொண்ணோட காலேஜ்ல எல்லாம் ஒண்ணுமே நடத்துறது இல்லையாம் பா, அவளே தான் படிக்கணுமாம்... அப்படியும் 85% வாங்கிடறா”
“ஓ.கே அங்கிள்...”
“அருண்னு ஒரு பையன் ECE dept முதல் வருஷம் உங்க காலேஜ்ல சேர்ந்துருக்கான், தெரியுமா...”
“எந்த செக்‌ஷன் அங்கிள்...”
“அது தெரியலையே பா”
“சரி விடுங்க அங்கிள், நான் விசாரிச்சுக்கிறேன்...”
“அது எங்க பேங்க் மானேஜர் பையன், அவனும் உன்னை மாதிரி சுமாரா தான் படிப்பான், முடிஞ்சா விசாரிச்சு பாரு... என் பேர் சொல்லி தெரியுதான்னு கேட்டு பாரு”
“சரிங்க அங்கிள்”
“நாளைக்கு காலேஜ் போணுமா....?”
“ஆமாங்க அங்கிள்...”
“எத்தனை மணிக்கு...”
“8.30 மணிக்கு வீட்டில இருந்து கிளம்பிடனும்...”
“அப்பா ஏதோ நீ காலேஜுக்கே போறது இல்லை, காலேஜை விட்டு துரத்திட்டாங்கன்னு சொன்னாரே....”

விஜய்க்கு மூஞ்சில் அடித்தாற் போல் இருந்தது. என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் தவித்தான். சாமிநாதன் அங்கிளை திட்ட கெட்ட வார்த்தைகளை மனதினுள் தேடி கொண்டிருந்தான், எந்த கெட்ட வார்த்தையும் அவன் எதிர்ப்பார்க்கும் வண்ணம் வல்கராக இல்லாததால், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment