Wednesday 3 April 2013

ஆன்மீகமா ஐயையோ - 2



2005 காலகட்டத்தில், எல்லோரும் போகிறார்களே, அப்படி என்ன தான் அங்கு இருக்கிறது, என்று ஓர் ஆர்வக்கோளாறில் நான் எட்டி பார்த்தது தான் “ஈஷா யோக மையம்”.

பிராணயாமம் என்கிற அற்புதமான மூச்சு பயிற்சியையும், சூன்ய தியானம் என்கிற அற்புதமான தியானத்தையும் வகுப்பில் எனக்கு கற்பித்தார்கள். இந்த சூன்ய தியானத்தை பற்றி நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த சூன்ய தியானத்தை எங்களுக்கு சொல்லி கொடுக்க கிட்டதிட்ட ஒரு வார வகுப்பு, அதாவது 10 மணி நேரம் எங்களை மனதளவில் எங்களை பக்குவப்படுத்தப்பட்ட பிறகே எங்களுக்கு அது கற்பிக்க பட்டது. இந்த இடத்தில் என் பள்ளி முதல்வர் எனக்கு பதினைந்தே நிமிடத்தில், வெறும் 50 ரூபாய் காசுக்காக போதித்த தியானத்தை நினைவு கொள்ளவும்...

ஆக, ஈஷா யோக மையத்தில் கற்று கொண்ட அந்த யோக பயிற்சிகளும், தியானத்தையும் கற்று கொண்டது, மனதளவில் இன்று வரை திருப்தி தரும் ஒன்றாக இருக்கிறது. அதற்காக நான் செலவளித்த பணம் வெறும் 500 ரூபாய் என்பது, மிக சொற்ப பணமாகவே எங்கள் அனைவருக்கும் தோன்றியது. இந்த யோக பயிற்சிகள் அளவில் எந்த விமர்சனமும் யாரும் முன் வைக்க முடியாத அளவிற்கு, மிக சிறப்பான ஒரு யோக பயிற்சியினை ஊரெங்கும் சொற்ப பணத்திற்கே சொல்லி கொடுத்து வந்தனர். தத்துவ அடிப்படையில் அவர்கள் அனைத்து மதத்தினவரையும் தழுவவது போல் காட்டி கொண்டனர். ஆனால் பிரசாதம் என்று எள்ளு உருண்டையினை விநியோகிப்பார்கள், திருநீறு பூசி கொள்தல் பற்றிய மகத்தான பயன்களை பற்றி பாடம் போதிப்பார்கள். ஈஷா யோகா ஆரம்ப கட்டத்தில், அதாவது நான் அங்கு 8 வருடத்திற்கு முன்பு தொடர்பில் இருந்த போதெல்லாம், இந்துத்துவ வழிப்பாட்டு முறையினை போட்டு விளாசு விளாசு என்று விளாசுவார்கள். நீங்கள் கடவுளிடம் போனால், அதை கொடு இதை கொடு என லிஸ்ட்டு போட்டு கொண்டிருப்பதற்கான இடம் கோவில் அல்ல, கோவில் என்பது நம் சக்தி நிலையினை சமப்படுத்தி வருவதற்கான ஓர் தலம், நீங்கள் அங்கு சென்று சற்று நேரம் உட்கார்ந்து வந்தாலே, உங்களில் ஓர் மாற்றம் வந்து விடும். அவ்வாறாக தான் கோவில்களே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று விளக்கம் எல்லாம் சொல்லி நம்மை வாய் பிளக்க வைப்பார்கள். கடவுளை நாம் எவ்வாறாக உணர்ந்து வைத்திருக்கிறோமோ, அதை தகர்த்து எறிவார்கள். மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, கையில் கயிறு கட்டுவது என்று எல்லா நம்பிக்கைகளையும் கட்டம் கட்டி அடிப்பார்கள்.  

சத்து மாவு மற்றும் சுக்கு காபி விற்பனை செய்வார்கள், வெளியே எங்கும் அது போன்ற ஒரு தரத்தில் கொடுக்கவே முடியாது, வாங்க கூடிய விலையில் இருந்ததால், அப்போதெல்லாம் அடிக்கடி சுக்கு காபி, சத்து மாவு கஞ்சி சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஆக, ஈஷா யோக வகுப்பு முடித்ததும் நம்முள் ஒரு புது வாசலை திறந்தது போல் இருக்கும்.

ஆனால், யோகாவை கற்று தேர்ந்து வெளி வருவதோடு, முடிந்து விடாது நமக்கும் ஈஷா யோக மையத்திற்கும் உள்ள பந்தம். அதற்கு இன்னும் பல முகங்கள் இருக்கிறது.

அது சமூக சேவை, மேல்நிலை யோக வகுப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு.

முதலில், ஒரு யோக பயிற்சி மையத்திற்கு சமூக சேவை செய்யும் வேலை எதற்கு, இந்த கேள்விக்கு மனிதாபிமானம் பற்றிய சொற்பொழிவுகள் தான் சொல்ல படுகின்றனவே தவிர, நியாயமான காரணம் என்று எதுவும் அவர்களால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் யோக வகுப்பு நடத்துவதில் பெரும்பான்மை லாபம் சேர்ந்தால், அவர்களாக சமூக சேவை செய்து கொள்ளலாம், ஆனால் யோக வகுப்பினை கற்று கொள்ள வருபவனிடம் அவன் மனம் தொடும் பல சொற்பொழிவுகளை ஆற்றி, அவனிடம் நன்கொடை கேட்பது என்ன மாதிரியான அணுகுமுறை என்பது எனக்கு புரிபடவில்லை. மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு ஊர் முழுவதும் வசூல் செய்து, இளைஞர் கூட்டம் அவர்கள் பெயர் போட்டு பேனர் அடித்து பண்டிகை நடத்துவதோடு இதை எளிதில் பொருத்தி பார்க்க முடிகிறது, என்ன... இவர்கள் நமக்கு சிறப்பான யோகா பயிற்சிகளை நமக்கு கற்று கொடுத்து நம்மை நன்றிக்கடன் பட்டவர்கள் ஆக்கி விடுகிறார்கள். அதுவுமில்லாமல், ஏதோ ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் அல்லது கல்வி நிறுவனம் தொடங்க வேண்டும் என்று 500 பேர் இருக்கும் கூட்டத்தில் நன்கொடை கேட்டு சொற்பொழிவு ஆற்றுகிறார்கள் என்று வைத்து கொள்வோம், அப்போது அவர்களின் சொற்பொழிவிற்கு மதிப்பளித்து உங்கள் சகாக்கள் எல்லாம் 500, 1000 என பையில் இருந்து எடுத்து கொடுக்கிறார்கள், கொடுத்து முடித்து நம்மிடத்து வந்து, “நீங்க எவ்ளோ சார் கொடுக்கறீங்க?” என்று கேட்பார்கள், அப்போது நம்மிடம் இருந்து எப்படியான எதிர்வினை வரும்.... பாஸ், நானும் 500 ரூபாய் கொடுக்கலாம்னு தான் இருக்கேன் என்று தான் சொல்லியாக வேண்டும், அப்படியில்லாமல், இல்லை பாஸ், இதெலல்லாம் ஈடுபாடு இல்லை என்று நாம் சொன்னால், நம்மை கேவலமாக எடை போட்டு, அவர்களின் அறிவுரை படலத்தினை தொடங்கி விடுவார்கள், பாஸ் நல்ல காரியத்துக்கு தான கொடுக்குறோம், எவ்வளவோ விஷயத்துக்கு பணம் செலவு பண்றோம்,..... என என்னன்னமோ பேசி நமக்கு காம்ப்ளக்ஸ் வர வைத்து விடுவார்கள். அவர்களை எல்லாம் தவிர்த்து வந்தோமா, போனோமா என்று இருக்க தான் நமக்கு தெரியாதே,.. எங்கு சென்றாலும் நாம் நண்பர்கள் பிடிப்பதிலே தான் நாம் குறியாக இருக்கிறோம், நண்பர்கள் மத்தியில் ஓரங்கட்ட பட்ட விட கூடாது என்பதற்காகவே கர்ண பிரபுவாக உருவெடுத்து விடுவோம். இந்த இடத்தில் வேதாத்திரி மகரிஷி பாராட்டுதலக்குரிய ஓர் யோக பயிற்சி நிறுவனமாக பார்க்கலாம்.

மேல்நிலை யோக வகுப்புகள் பற்றியும் எந்த விமர்சனமோ, கருத்து வேறுபாடோ கிடையாது. ஆனால் ஆதங்கம் ஒன்று உண்டு, அதாவது ஈஷாவின் மொத்த யோக வகுப்புகளையும் முடித்து வெளியே வந்தால் ஒருவன் இரண்டு மணி நேரங்கள், தின வாழ்வில் யோகா செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மதியம் ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் 15 நிமிடம் செய்தல் வேண்டும். இதை தவிர்த்து ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடம் கண் மூடி அமர்தல் வேண்டும். இதெல்லாம் செய்து கொண்டிருந்தால், ஒருவனுக்கு வாழும் வாழ்க்கையில் எண்ணம் லயிக்குமா, இல்லை சாமியாராக போய் விடுவதில் எண்ணம் லயிக்குமா? நல்ல வேளையாக, எல்லா வகுப்புகளையும் முடித்து வரும் மக்கள் எதை செய்வது என்று தெரியாமல், எதையும் செய்யாமல் விட்டு, முன்பு இருந்த எடை அளவிற்கே எடையை ஏற்றி கொள்கின்றனர். ஆனால், முதல் கட்ட யோகாவை மட்டும், கற்று கொண்டவர்கள் சிலர், எந்த தடையும் இன்றி, தன் பாட்டிற்கு தங்கு தடையின்றி, தன் யோகாவை செய்து வருகிறனர். எல்லாம் முடித்து சிலரோ, யோகா பண்ணுவதற்கே நேரம் கூடி வர மாட்டேங்குது என்று, முழு நேர தன்னார்வ தொண்டாளராக ஆசிரமத்தில் வந்து புகுந்து விடுகின்றனர். குடும்பமாவது, குட்டியாவது !

அடுத்து தன்னார்வ தொண்டு... இதை பற்றி சொல்ல வண்டி வண்டியாக இருக்கிறது. அடுத்த பாகத்தில் விரிவாக சொல்கிறேன். இருந்தாலும் இப்போதைக்கு இரண்டு வரிகள். சில தீவிரவாதிகள் தன் உயிரையும் கொடுத்து, அவர்கள் இயக்கத்திற்கான வேலையினை செய்து முடிப்பர். எப்படி அவர்களால் அந்த அளவிற்கு இயக்கத்தோடு ஒன்ற முடிகிறது என்று நமக்கு சந்தேகங்கள் இருக்கலாம், அதெல்லாம் ஈஷா யோகா தன்னார்வ தொண்டர்களை பார்த்தாலே, அவர்களை பற்றியும் ஒரு அனுமானத்திற்கு வந்து விடலாம்.... 

                                          (தொடரும்....)








No comments:

Post a Comment