Sunday, 10 November 2013

ஆரம்பம்





ஆரம்பம்ஒரு தியேட்டர் ரெஸ்பான்ஸ் விமர்சனம் ;-

ஒரு சந்தோஷமான செய்தி என்னான்னா, இந்த படத்துல முகேஷ் இல்லை. மத்தப்படி எல்லா டார்ச்சர்களும் அம்சமா இருக்கு

படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இருந்தே, அஜித்தின் ரசிக சிகாமணிக்கள், ஓவர் ஆர்வமா இருந்தாங்கஎல்லா க்ரூப்பும் சும்மா சும்மா கத்திக்கிட்டு இருந்துச்சு, எனக்கு முன்னாடி இருந்த க்ரூப்ல ஒரு பையன் பொறுப்பா பழைய பேப்பரையெல்லாம் எங்கிருந்தோ பிடிச்சிட்டு வந்து சின்ன சின்ன துண்டா கிழிச்சு, அவன் க்ரூப் ஆளுங்களுக்கெல்லாம் சப்ளை பண்ணிட்டு இருந்தான். ஏதோ கோயில் பிரசாதம் தர மாதிரி எனக்கும் கூட கொஞ்சம் கொடுத்தான், நானும் ஏதோ மரியாதைக்காக வாங்கி வெச்சிக்கிட்டேன்.

ஆரம்பம்னு சென்சார்டு சர்ட்டிபிக்கேட்டு தான் காட்டினாங்க, அதுக்கே முன்னாடி இருந்த ரசிக மணிகள், ஆர்வக்கோளாறுல இருக்கிற பேப்பரையெல்லாம் பறக்க விட்டுட்டானுங்க, அப்பறம் அஜித் வர்றதுக்குள்ள கீழே இருக்கிற பேப்பரையெல்லாம் பொறுக்கி எடுத்து, மறுபடியும் பறக்க விட்டுட்டாங்கஅடுத்து பொசுக்குன்னு அஜித்துக்கு ஒரு பாட்டு வேற வந்துட்டது, பாவம் அந்த சிறிய அவகாசத்துக்குள்ள பயபுள்ளைகளால முன்னாடி இருக்கிற பேப்பரையெல்லாம் பொறுக்கி எடுக்க முடியலை போலபின்னாடி திரும்பி என்கிட்ட இருந்த பேப்பரையெல்லாம் வாங்கி கிட்டானுங்க, நானும் கொடுத்துட்டேன்.. அதையும் ஜோரா வாங்கி பறக்க விட்டுட்டாங்க

அதுக்கப்பறம் அவங்களுக்கு பேப்பர்  தேவைப்படவேயில்லை


ஆரம்பம்ஒரு இறங்கி அடி விமர்சனம் ;-

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் அறிவிச்ச போதே, ‘ரம்பம்னு கமெண்ட்டை போட்டு, நம்ம ஃபேஸ்புக் நண்பர்கள் களத்துல குதிச்சிட்டாங்க. அதை பார்த்துட்டாவது, படத்தை கொஞ்சம் நல்லா எடுத்து இருக்கலாம்.

ஒரு காலத்துல தமிழ் சினிமா எடுக்கணும்னா, நேரா பர்மா பஜார் போய் சல்லிசா இருக்கிற ஹாலிவுட் படங்களையெல்லாம் அள்ளி போட்டுட்டு வந்து கதை எழுதுவாங்க, இப்ப கொஞ்சம் ட்ரெண்டை மாத்தி மூர் மார்க்கெட் போய், காமிக்ஸ் புக்ஸையெல்லாம் அள்ளி போட்டுட்டு வந்து கதை எழுதறாங்க போல இருக்கு..
          
எடுத்தவுடனே நம்ம தல அஜித், மூனு பில்டிங்குக்கு டைம் பாம் வெச்சிட்டு, அதை நல்ல பிள்ளையா போலிஸ்க்கும் சொல்லிடறாருபோலிஸ், பாம் ஸ்க்வார்டுலாம் வந்தும் கூட ஒன்னும் பருப்பு வேகலைதல வெச்ச டைம் பாம் ஆச்சேவெடிக்காம இருக்குமாமிஸ் ஆகாம வெடிக்குதுஅங்க ஆரம்பிக்குது தீபாவளி

இந்த படத்துல ஆர்யா ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் கம் ப்ரோக்கமர் , அவரோட படிச்சவர் தான் நம்ம நயன்தாராஅஜித்தும், நயன்தாராவும் ஒரு ஆபரேஷனுக்காக ப்ளான் பண்ணி, நம்ம ஆர்யாவை கடத்திட்டு வந்துடறாங்க.. இந்த இடத்துல ஆர்யாவுக்கு ஒரு முன்கதை, நம்ம ஆர்யா காலேஜ் படிக்கும் போது ரொம்ப குண்டா இருந்தவரு, அவரு டாப்ஸியை லவ்வாங்கீஸ் பண்றாரு, ஆர்யா பார்க்கறதுக்கு நல்லா, அழகா, பப்ளியா இருக்கிறதால டாப்ஸி, கண்டுக்காம கண்டுக்காம போய்டுது, அவளுக்காக கஷ்டப்பட்டு உடம்பை குறைச்சிட்டு வந்து டாப்ஸி லவ்வை ஓகே பண்றாரு…. நிற்க! படத்தில் இந்த முன்கதை ஓர் காமெடி போர்ஷன்.. மறக்காம சிரிச்சிடுங்கநாங்கெல்லாம் சிரிக்க மறந்தட்டோம்அப்பறம் கடத்திட்டு வந்த ஆர்யாவை சில சேனல்ஸை ஹேக் பண்ண சொல்றாரு.. அவரும் அந்த ஹேக்கிங்கை சர்வ சாதாரணமா பண்ணிட்டு, வீட்டுக்கு போகனும், ஆத்தா வையும்ங்கறாரு… ‘எங்க போற, இப்ப தானே கதையே ஆரம்பம்னு சொல்லி நம்மளை டெரரா பார்க்குறாருஇந்த இடத்துல எல்லாரும் உச்சஸ்துதியில கத்திடுங்கஏன்னா நாங்க மறந்துட்டோம்

இதுக்கு நடுவுல நம்ம டாப்ஸி, மீடியா தான் டா என் ஏம்பிஷன்னு, மீடியால குதிச்சிடறாங்கசமையல் ப்ரோக்ராம், நியூஸ் ரிப்போர்ட்டிங், நியூஸ் ரீடிங், பாட்டு போடற நிகழ்ச்சின்னு எல்லா நிகழ்ச்சியையும், பாவம் நம்ம டாப்ஸியே ஒரே ஆளா பார்த்துக்குதுஅந்த சேனலையும் டாப்ஸி மட்டுமே பார்க்குதுன்னு, தனியா நான் சொல்ல தேவையில்லை

மும்பை ஜாயின்ட் கமிஷ்னரும், ஹோம் மினிஸ்டரும் மீடியா முன்னாடி நல்லவன் மாதிரி காட்டிட்டு, அரெஸ்ட் பண்ண தீவிரவாதியை ரிலீஸ் பண்ண விலை பேசறாங்கபட்டத்துயானை படத்துல, சந்தானம் ஒருத்தனை பார்த்து, “”யார் றா இவன், காட்ஸில்லாவை கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கான்?”னு சொல்லி ஒருத்தரை கலாய்ப்பாரே, அவர் தான் இந்த படத்துல வர்ற அந்த தீவிரவாதி

நம்ம தல, ஹோம் மினிஸ்டரோட ஆடிட்டரை டார்கெட் வெச்சு, ஆர்யாவை கூட கூட்டிட்டு போய், அவர் கிட்ட இருக்கிற ஹார்ட் டிஸ்க்லாம் எடுத்துக்கிட்டு அவரை அங்கயேடுமீல்பண்ணிடறாங்கஅவரை கொன்னுட்டதால ஆர்யாவுக்கு பயங்கர கோபம்அவரே போலிஸ்க்கு இன்பரமேஷன் கொடுத்து, அவங்க இடத்துக்கு வர வெச்சி, தலையை சிக்க வெச்சுடறாருபில்டிங்கை சுத்தி போலிஸ் வந்துடுது, அஜித்தை அங்கயே அரெஸ்ட் பண்ணாம, கொஞ்ச நேரம் கார் ஸ்டன்ட் காட்சியெல்லாம் காட்டி, அப்பறம் பொறுமையா அரஸ்ட் பண்றாங்கநம்ம நயன்தாரா எப்படியோ, ஷேர் ஆட்டோ பிடிச்சு எங்கயோ எஸ்கேப் ஆகிடறாங்க… (இந்த இடத்தை கொஞ்சம் நோட் பண்ணிக்கோங்க, பின்னால தேவைப்படும்) அஜித்தை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் போது, ஆர்யா அஜித்தை பார்த்துஉன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் இது தான் டா முடிவுன்னு பஞ்ச் அடிக்கிறாரு.. அதுக்கு நம்ம தல, ‘இது முடிவில்லஇனிமே தான் ஆரம்பம்னு ரிட்டர்ன் பஞ்ச் அடிக்கிறாருவிசில் அடிக்கலாமா, வேணாமான்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே, இன்டர்வெல் விட்டுடறாங்கநீங்க யோசிக்காம விசில் அடிச்சிடுங்க

அதுக்கப்பறம், எங்கிருந்தோ நயன்தாரா ஆர்யாவை கண்டுபிடிச்சு வந்து, “இப்படி அநியாயமா அவரை மாட்ட விட்டுட்டியேஅவரை பத்தி உனக்கு என்ன டா தெரியும், அவருக்கு நடந்த கொடுமை என்ன, அநியாயம் என்ன, துரோகம் என்னன்னுலாம் உங்களுக்கு தெரியாது…” என சொல்லி ஒரு ஃப்ளாஷ் பேக்கை ஓப்பன் செய்கிறார்

இந்த இடத்துல நாம ஃப்ளாஷ் பேக்கை உத்து கவனிக்கனும், மறுபடியும் படத்தோட ஃபர்ஸ்ட் ஹாஃப்ல வந்த அஜித்துக்கான பில்ட் அப்லாம் வருது, அவரோட ஃப்ரெண்டு ஒருத்தரு பேரு சஞ்சய், ரெண்டு பேரும் சேர்ந்து அந்த காட்ஸில்லா கலர் ஜெராக்ஸ் தீவிரவாதியை பிடிச்சி ஜெயில்ல போடறாங்க.. அப்பறம் கொஞ்சம் காமெடி சீன், அதுல பாருங்க, அந்த சஞ்சய்யோட தங்கச்சி பாப்பா தான் நம்ம நயன்தாரா, அதனால தான் அவங்களுக்கு முழு கதையும் தெரிஞ்சிருக்கு, அப்பறம் மறுபடியும் தலைக்கு ஒரு இன்ட்ரோ சாங்கை போட்டு, அவங்க ரசிக சிகாக்களையெல்லாம் கவனிச்சிட்டு, திரும்ப கதைக்கு வர்றாங்கஅஜித்தும் அவரோட ஃப்ரெண்டுலாம் வேலை செய்யற டிபார்ட்மென்ட்ல, ஹோம் மினிஸ்டர் தலைமைல எல்லார்க்கும், ஒரு ஹெல்மெட்டும், ஒரு புல்லர் ப்ரூஃப் ஜாக்கெட்டும் தர்றாங்க.. அதை 2 செகன்ட் கட்டம் கட்டி காட்டும் போதே, நமக்கு அதுல ஏதோ வில்லங்கம் இருக்கிறது புரிஞ்சிடுது

அப்பனு பார்த்து, அஜித் அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கிற தீவிரவாதியை ரிலீஸ் பண்ண சொல்லி, அவங்களோட கொல்லீக்ஸ்லாம், சில வெளிநாட்டுக்காரங்களை பிடிச்சி வெச்சிக்கிட்டு கொன்னுருவேன்னு ப்ளாக்மெயில் பண்றாங்க.. அந்த ஆபரேசன்ல இறங்கற நம்ம பசங்கள்ல, சஞ்சய் மட்டும் புல்லட் ப்ரூஃப் இருக்கிற தைரியத்துல, சண்டையில ஓவர் பெர்மான்ஸ் காட்டிடறாரு, குண்டு அடி பட்டு செத்துடறாரு, என்ன டான்னு பார்த்தா, கொடுத்த புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் ஓர் டம்மி ஜாக்கெட்., நம்ம அரசியல்வாதிங்க பழக்கதோஷத்துல அதுலயும் ஊழல் பண்ணி தொலைச்சிருக்காங்கஇது தெரிஞ்சு நம்ம அஜித், ஃபேஸ்புக் போராளி கணக்கா பொங்குறாருஜாயின்ட் கமிஷ்னர் கிட்ட போறாரு, அவரு டபாய்க்க பார்க்கறாரு, இவரு கிட்ட பேசினா வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு, நேரா மினிஸ்டர் கிட்ட போறாரு, அவரும்அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு அஜித்தை டபாய்க்கவே, நம்ம அஜித் எல்லாரையும் பழிவாங்க முடிவு பண்றாரு…,

அவரை அங்கயே ஆஃப் பண்ணனும்ங்கறதுக்காக ஒரு இத்து போன கேஸ்ல அவரை உள்ள தள்ளி, சாவடி அடிக்கிறாங்க, அடிச்சிட்டு அங்கன வெச்சே தலையை கொன்னு தொலைப்பாங்கன்னு பார்த்தா, வழக்கம் போல நம்மளை ஏமாத்திடறாங்கஎங்கயோ ஒரு பெரிய பள்ளத்தாக்கா பார்த்து, நிற்க வெச்சு டுமீல்னு ஒரே ஒரு சுடு மட்டும் சுடறாரு, நம்ம வில்லன் சார். கொல்றது தான் கொல்றாரு, சும்மா தீபாவளி துப்பாக்கி கணக்கா சராமரியா போட்டு தள்ள வேண்டியது தானே, பாவம் வீட்ல ரொம்ப கஷ்டம் போல இருக்குன்னு நாம திங்கிங்க்ல இருக்கும் போது, தலை தண்ணில விழுந்ததுக்கு அப்பறமா தண்ணியை பார்த்து டுமீல் டுமீல்னு சுட்டுனு கிடக்குது அந்த அறியா பிள்ளை, அட விளங்காம போனவனே, இதை முதல்ல செஞ்சு தொலைக்கிறதுக்கு என்னா டான்னு, நம்ம மனசுல ஒரு கேள்வி வருது, இருந்தாலும் ஃப்ளாஷ்பேக்னாலே இந்த கொடுமையெல்லாம் கேட்டு தான் தொலைய வேண்டியிருக்குன்னு நாம மூடிட்டு இருக்குற கேப்ல நம்ம வில்லனுங்க சஞ்சய் குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தரையும் விஷம் கொடுத்து கொன்னுடறாங்க, அடிப்படையில இது ரொம்ப சோகமான காட்சி தான்னாலும், நம்ம கை பாப்கார்ன் பேக்கட்டுக்கு போறதை தவிர்க்க முடியலை, அதுல பாருங்க நம்ம நயன்தாரா மட்டும் எஸ் ஆகிடறாங்க (நோட் பண்ணதை ரெஃபர் பண்ணிக்கோங்க பாஸ்…) ,  இப்ப பழிவாங்க போதுமான ஸ்டோரி கிடைச்சிடுச்சுங்கறதுக்காக தான் ஆர்யாவை கடத்துனதுன்னு ஒரு லாங் ஸ்டோரியை, நம்ம நயன் சொல்லி முடிக்கிறாங்கநமக்கெல்லாம் ஒரு யுகமே போன மாதிரி இருக்கு

இருந்தாலும், சொந்த அண்ணன் செத்த சோக கதையை சொல்லும் போது, காமெடி சீன், பாட்டு சீன், பில்ட் அப் சீன் முதற்கொண்டு விளக்கி சொல்றதுலாம் ஓவர்நம்ம மிஷ்கின் பாலிஸியை ஃபாலோ பண்ணி ஒரு காக்கா நரி கதை சொல்லியிருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்படம் பூரா சாப்பிட வெச்சிருந்த பாப்கார்ன் பேக்கட் ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்கறதுக்கள்ளயே முட்ஞ்சி போச்சுஇப்படியா போர் அடிப்பானுங்க

இந்த கதையை ஆரம்பத்துலயே ஆர்யாவுக்கு சொல்லி கூட்டிட்டு வந்திருந்தா, இந்தா பிரச்சனை வந்திருக்குமா? ஏன் தான் இந்த விஷயத்துல நம்ம ஹீரோக்கள்லாம் மாக்கானுங்களா இருக்கானுங்களோன்னு ஆர்யா லைட்டா அப்செட் ஆனாலும்,  கதையை கேட்டதுக்கு அப்பறம், நம்ம ஆர்யாவும் ப்ராஜக்ட்ல ஃபுல் இன்வால்வ்மென்ட் காட்டறதுக்காக, அஜித்தை போய் ஸ்டென்ட்டெல்லாம் காட்டி போலிஸ் கிட்டயிருந்து காப்பாத்தி கூட்டிட்டு வர்றாருவந்ததுக்கு அப்பறம் நம்ம தல,  சுவிஸ் பேங்க்ல இருக்கிற ஹோம் மினிஸ்டரோட பணத்தையெல்லாம் ஆர்யாவை ஹேக் பண்ணி எடுக்க சொல்றாரு, நம்ம ஆர்யாவும் நோண்டு நோண்டுன்னுலாம் நோண்டாம ஜஸ்ட் ஏதோ கூகிள் செக் பண்ற மாதிரி பார்த்துட்டு, அங்க சல்லி காசு இல்லைன்னு ரெஸ்பான்ஸ் கொடுக்கிறாருஅது எங்க டா போச்சுனு தேடி பார்த்தா, அதெல்லாம் துபாய்ல இருக்கிற ஹோம் மினிஸ்டரோட பொண்ணுக்கு வந்திருக்குதுஇப்ப எதுக்கு டா இப்படி கதையை சுத்தல்ல விடறாங்கன்னு யோசிக்கும் போதே, அந்த ஹோம் மினிஸ்டரோட பொண்ணு, ஒரு பாட்டுக்கு வந்து ஐட்டம் டேன்ஸ் போட்டுட்டு போகுது…. கருமமே, எல்லாம் ஒரு பாட்டுக்கு தானான்னு தலைல அடிச்சிக்கிட்டே படத்தை பார்த்தா, அப்பறம்  அந்த பணத்தையெல்லாம் நம்ம மங்காத்தா ப்ரேம்ஜி ஸ்டைல்ல நம்ம ஆர்யா அடுத்த சீன்ல எடுக்கறாரு….
           
இந்த ரணகளத்துல, கொடுத்த பணத்துக்கு காட்ஸில்லா தீவிரவாதி இன்னும் வந்து சேரலைங்கற கடுப்புல, தீவிரவாத கும்பல் ஹோம் மினிஸ்டர் பொண்ணை கடத்திடறாங்கநம்ம ஹோம் மினிஸ்டர் ஆர்யாவோட பொண்ணை கடத்திடறாருநம்ம அஜித் காட்ஸில்லாவை கடத்திடறாருமூனு பேருக்குமே அவங்க அவங்க தேவைங்கறதுல, எல்லாருமே எக்ஸ்சேஞ்ச் மேளா பண்ணலாம்னு, இந்தியா பார்டர்ல ஆஜராகுறாங்கஅங்க அஜித் சின்னதா ஒரு ஹீரோயிசம் பண்ணி, டாப்ஸியை காப்பாத்தி, மத்த எல்லாத்தையும் கொன்னுட்டு, ஹோம் மினிஸ்டரை கடத்திட்டு வந்து அவரை மூனு பக்கத்துக்கு நம்ம நாட்டு சிஸ்ட்த்தை பத்தியும், அரசியல்வாதிங்க எப்படி இருக்கனுங்கறதுயும் 4 பக்கத்துக்கு அந்நியன் ஸ்டைல்ல டயலாக் பேசி சாவடிச்சாரா, இல்லை டைம் பாம்ப் வெச்சி சாவடிச்சாராங்கறது தான் கதைஎல்லாம் முடிஞ்சு எழுத்து ஓடும், அப்ப வெளியே வந்துடுங்க, இனிமேலாவது ஏதாவது உருப்புடியா காட்டுவானுங்களான்னு நாங்க அங்கனயே உட்கார்ந்திருந்து ஏமாந்தோம்

 அப்பறம் படத்தை ஆரம்பிச்சதுல இருந்து ஒரே விஷயத்துல தான் குறியா இருந்தானுவ, அது என்னான்னாஆரம்பம்ங்கற வார்த்தையை அங்கங்க வர்ற மாதிரி பார்த்துக்கிட்டானுங்கபடத்தை முடிச்சனுப்பும் போது கூட அதை விடலை, நம்மளை பார்த்து நக்கலா சிரிச்சிக்கிட்டேமறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமான்னு ஒரு டயலாக்கை பேசறாரு, வேண்டாம் டா யப்பா, இதே போதும்னு எழுந்து வர வேண்டியதாய் இருக்கு

ஆரம்பம்ஒரு விஞ்ஞான விமர்சனம்

ஆரம்பம்படம் ஆரம்பிச்சிதல இருந்து முடியற வரைக்கும், என்னை ஒரு சீன் கூட அசைச்சு பார்க்கலை, என்னால படத்தோட ஒன்றவும் முடியலை, ஏதோ பண்றதை பண்ணுங்க டான்னு பார்த்துட்டு இருந்தேன்

தமிழ் சினிமாவுல Casting னு ஒரு டிபார்ட்மென்ட் தேவைங்கறது மட்டும் புரியுது. மிஷ்கின் படத்துல எப்படி எல்லாரும் மிஷ்கினாவே இருப்பாங்களோ, மணிரத்னம் படத்துல எப்படி எல்லாரும் மணிரத்னமாவே இருப்பாங்களோ, அப்படியே தான் இந்த படத்துலயும் எல்லாருமே விஷ்ணுவர்தனாவே இருக்காங்கஅஜித்துக்கு கம்மியா பேசற கேரக்டர், நயன்தாராவுக்கும் அதே எழவு கேரக்டர், ஆர்யாவுக்கு லொடலொடன்னு பேசற கேரக்டர் ஆனாலும் அவரே கம்மியா தான் பேசறாரு, டாப்ஸிக்குஹௌ ஸ்வீட்னுவந்து ஹக் பண்ற கேரக்டர், வில்லனுங்களுக்கு சிரிக்கிற / கத்தற / கெஞ்சற கேரக்டர்அம்முட்டு தான். இதை வெச்சே மொத்த படத்தையும் ஓட்டிட்டானுங்கஇந்த இடத்துல இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தை இவனுங்களே என்னை கம்பேர் பண்ண வெக்கிரானுங்கபல சமயங்கள்ல அஜித்துக்கு என்ன பேசறதுன்னே தெரியாம, கம்மியா பேசறாரோன்னுலாம் சந்தேகம் வருது….

இந்தளவு டல்லான கேமராவை, ஏன் தான் முயற்சி பண்ணாங்களோன்னு தெரியலை, திருட்டு விசிடில படம் பார்க்கறவனுக்கு மங்கலா தெரிஞ்சு தொலையனும் தான் இப்படிலாம் பண்றாங்களான்னும் தெரியலை, ரெகுலரான கேமராவா இல்லாம ஓம் பிரகாஷ் வித்தியாசமா முயற்சி பண்ணியிருக்கார்னு மட்டும் புர்யுது, ஆனா அது எடுபடலைன்னுமா எங்களுக்கு புர்யாம போய்ரும், அதுவும் புரிஞ்சிடுச்சு

யுவன் சங்கர் ராஜா பிண்ணனி இசைல ஏதோ ஸ்கோர் பண்ணினாலும், பாட்டுலாம் எப்ப டா முடியும்னு ஆகிடுது, “முடியாதுன்னு சொல்ல முடியாதுபாட்டு ஓகேன்னாலும், ஆனா ஒரு மாசம் கூட ஹிட் லிஸ்ட்ல இருக்காதுஇளையராஜா ஃபார்ம் அவுட் ஆகிட்டாரோன்னு யோசிச்சிட்டு இருக்கிற நிலைமைல, யுவன் சங்கர் ராஜா அவருக்கு முன்னால ஃபார்ம் அவுட் ஆகி, இளையராஜா எவ்ளோ பெரிய லெஜன்ட்டுனு நம்ம எல்லார்க்கும் காட்றாரு போலபேர் சொல்லும் பிள்ளை

படத்தோட ஸ்க்ரிப்ட் வெளிதோற்றம் ஏதோ ஸ்டைலிஷா இருந்தாலும், புது முயற்சி, இன்னோவோஷன்ங்கற பேச்சுக்கே இந்த ஸ்க்ரிப்ட்ல இடமே இல்லை. அதுவுமில்லாம இது மாதிரி கதைகள்லாம், காமிக்ஸ் புக்லயும், பாக்கெட் நாவல்கள்லயும் சல்லீசா கிடைக்குது, அதை ஏன் கஷ்டப்பட்டு எடுத்து இருக்கானுங்கன்னு தான் புரியலை, சில படம் பார்க்கும் போது ஏதோ டிராமா பார்க்கிற மாதிரி இருக்கும், ஆனா இந்த படம் பார்க்கும் போது, உண்மையாவே ஏதோ காமிக்ஸ் படிக்கிற மாதிரி தான் இருக்குஅதுலயும் குறிப்பா நயன்தாரா ஒரு பொண்ணை துபாய்ல பில்டிங் மேல இருந்து தள்ளி விடற சீன், எக்ஸ்சேஞ்ச் மேளா சீன், கம்ப்யூட்டர் ஹேக்கிங் ஸீன்…. இப்படி பலது சொல்லிட்டே போகலாம். படத்துல எங்கயுமே ஒரு க்ளாரிட்டி புண்ணாக்கே இல்லைலவ், சென்ட்டிமென்ட், சண்டைன்னு எல்லாமே மேலோட்டமா இருக்கு


சில சமயம் ஃபுல் மீல்ஸ் சாப்பிட ஹோட்டல்க்கு போய் உட்காருவோம், சாதம் சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் வடை தயிர் அப்பளம் மோர்மிளகாய் பாயாசம் ஸ்வீட் பீடானு எல்லாமும் சாப்பிட்டிருப்போம், ஆனா சாப்பிட்ட திருப்தியே வராது. பசி மட்டும் தான் தீர்ந்திருக்கும். அதே மாதிரி தான், இங்கனயும் பாட்டு, சண்டை, சென்ட்டிமென்ட், துரோகம்னு எல்லா கருமமும் கிடக்கு, ஆனா ஒன்னும் பிடிக்க மாட்டேங்குது, ரெண்டரை மணி நேரம் மட்டும் எப்படியோ டைம் பாஸ் ஆகிடுது. இதுக்கு கம்னு ஃபேக் ஐடி கிட்டயே சேட்டிங்கை போட்டிருக்கலாமோன்னுலாம், வீட்டுக்கு வரும் போது வண்டியை மெதுவா உருட்டிட்டே யோசிச்சிட்டே வந்தேன், அவ்ளோ மெதுவா போயும், எனக்கு முன்னாடி ஒரு வண்டி என்னை விட மெதுவா போய்ட்டு இருந்தது, யார்ரான்னு பார்த்தா நம்ம அஜித் ரசிக சிகாக்கள்







ஸ்பீடான கதையின் ஸ்லோ வெர்ஷன்

ஸ்பீடான கதை என்று கொஞ்ச நாள் முன் ஒரு சிறுகதை எழுதினேன், அது பலருக்கு புரியவில்லை என்பதால், அந்த கதையின் ஸ்லோ வெர்ஷனை இங்கு வெளியிடுகிறேன்...



அடிப்படையில் இது ஓர் Puzzle போல இருக்க வேண்டும் என்ற அமைப்பில் எழுதப்பட்டது, கதைக்குள்ளாகவே பல விஷயங்களும், நம் நடைமுறை வாழ்க்கையின் பதிவுகளும் எழுதப்பட்டிருக்கிறது.

மொத்த கதையுமே Puzzle தான் என்றாலும், Puzzle க்குள்ளான Puzzle களும் கூட ஆங்காங்கே இருக்கிறது. உதாரணமாக கதையில் வரும் கதாபாத்திரம் தன் கள்ள காதலியோடு பேருந்து ஏறுகிறான். கோயம்புத்தூரிற்கு டிக்கெட் எடுக்கிறான். ஆனால் கதைப்படி, பேருந்து கோயம்புத்தூர் நகரை விட்டு வெளியே வருவதாற்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த Puzzle ஐ வைத்து பல தர்க்க ரீதியான தத்துவங்களை சொல்ல முடியும். நம்மை சுற்றியிருக்கும் சந்தோஷங்களை விட்டுவிட்டு, சந்தோஷத்தை தேடி தேடி நம் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருப்பதே இதன் தத்துவ பிண்ணனி. இதை தத்துவங்களாக சொல்வதை விட, இதை மறை பொருளாக வைத்து, வாசகனை கண்டுபிடிக்க வைப்பது தான், இவ்வகை எழுத்தின் மேஜிக்

ஒருவேளை கண்டுபிடிக்காமல் போய்விட்டால்….? இது ஒரு நல்ல கேள்வி தான். ஆனால் அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை, யாராவது 2 பேர் கண்டுபிடிப்பார்கள், அவர்களுக்காகவது இது போல் கட்டமைத்து தான் ஆக வேண்டும்.

இன்னொன்று, துரை தனது மொபைலில் மணி பார்க்கும் போது 10.23 என காட்டுகிறது. அதன் பின் கதையின் இறுதியிலும் ஒரு முறை மணி பார்க்கிறான், 10.24 என காட்டுகிறதுஇதன் தத்துவ பிண்ணனி என்னவாக இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்கடைசியில் சொல்கிறேன்    

முடிந்த வரை இந்த விளக்கத்தை சுருங்க சொல்ல நினைக்கிறேன். பொதுவாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கதைக்கும், யாரும் விளக்கம் கொடுப்பதில்லை. நம் எதிராளிக்கு கண்ணை கட்டாமலே கண்ணாமூச்சி ஆடவைப்பதை போன்றது இது. ஆனாலும், மிகவும் நெருங்கியவர்களுக்காக இதை எழுத விளைகிறேன்

இந்த இடத்தில் நான்-லீனியர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்என ஆரம்பித்து கடைசியில ராஜாவும் ராணியும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்தாங்களாம் என கோர்வையாக ஒரு கதையை முடிப்பது என்பது லீனியர் (Linear) வகை எழுத்தாகும். இந்த முறையை உடைத்தெறியும் எல்லா வகை எழுத்துமே, நான்லீனியர் வகை எழுத்துக்களேஎவ்வளவு நாட்கள் தான் சின்ன பிள்ளை தனமாகவே கதைகள் கேட்டு கொண்டிருப்பது, என்று போரடித்து போனவர்களுக்கு, நான் லீனியர் எழுத்துவகை பரிசாக வந்த ரோலர் கோஸ்ட்டர்.

இதன் பின்னர் வருவது ஸ்பீடான கதையின் ஸ்லோ வெர்ஷன்

நம் ஊர் சாலைகளும், பேருந்துகளும் கள்ள காதலர்களுக்கானதே அல்லஒரு முறை துரையும் அவனது கள்ள காதலியும் எங்காவது வெளியூர் போய் குஜலாக இருக்கலாம் என ஏற்பாடு செய்து கிளம்பினர். முன்னதாகவே பேருந்து நிலையம் சென்று, அரசு பேருந்து பிடித்து, நல்ல சீட்டுகள் பிடித்து உட்கார்ந்தனர். பஸ் 50 கிமீ கூட போயிருக்காது. நடு வழியில் நின்று  விட்டது. நின்ற இடம் துரையின் காதலிக்கு தெரிந்தவர்கள் இருக்கும் ஊர். பஸ் இறங்கி, பஸ் மாறும் போது பார்த்து விட்டு அவளது கணவனிடம் போட்டு கொடுத்து விட்டனர்.

ஆம்னி பஸ்கள், நான்கு வழிச்சாலை எல்லாமும் சிறந்த கண்டுபிடிப்பு என்றாலும் கள்ள காதலர்களுக்கு உகந்ததா என தெரியாமல் விழித்தான் துரை. 120 கிமீ வேகத்தில் பறக்கும் பேருந்து, எங்கேயாவது கவுந்து, அடிப்பட்டாலோ, செத்து விட்டாலோ, அடுத்த நாள் காலை செய்தித்தாளில் வந்து விடுமே என்ற கவலை ஒரு பக்கம் பீடித்தாலும், நடு வழியில் நின்று தொலைக்கும் அரசு பேருந்துக்கு, செய்தித்தாள் அச்சிடுபவன் எவ்வளவோ பரவாயில்லை என ஆம்னி பேருந்தையே புக் செய்தான். என்ன தான் ஃபாரின் காரன், சொகுசான பஸ்ஸை கண்டுபிடித்தாலும், ரோட்டை நாம் தானே போட்டு கொள்ள வேண்டும், அதையுமா வாங்கி வர முடியும். சாலை அமைக்கும் பணி காரணமாக, பேருந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து……

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லபுழுங்கி தள்ளியது.

ஊட்டியில் பேருந்தை விட்டு இறங்கிய பின், அந்த கவிதையான காலையை இருவரும் இரசிக்கும் நிலையில் இல்லை. அவள் முகத்தை துப்பட்டாவில் மூடி கொண்டாள். துரைக்கு அந்த அதிகாலையில் ஆட்டோ பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. ஆட்டோவை லாட்ஜிற்கு போக சொன்னான்.

லாட்ஜ் ரிசப்ஷினில், துரை ரூம் புக் செய்து கொண்டிருக்கும் போது அவளுக்கு அவள் கணவரிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது. போனை எடுத்து கொண்டு தனித்து சென்று விட்டாள். ஆனாலும் அவள் வார்த்தைக்கு வார்த்தைசொல்லுங்க’ ‘சொல்லுங்கஎன்பதையும், ‘மதுரைக்கு வந்து சேர்ந்துட்டேன்என்பதையும் தூரத்தில் இருந்த படியே ரிசப்ஷனிஸ்ட்  கவனித்து விட்டான். அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் தாலி, துரையின் பர்ஸை காப்பாற்றும் என நினைத்திருந்தான். ஆனால், ரிசப்ஷனிஸ்ட் நீர்யானை கணக்காக பர்ஸை கவ்வி விட்டார். ரூமிற்கு சென்று 1 மணி நேரம் கூட ஆகியிருக்க வில்லை. போலிஸ்காரர் ஒருவர் வந்து கதவை தட்டி, ரேஷன் கார்டு காட்ட சொன்னார். பணத்தை காட்டினான்.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லபயங்கர காஸ்ட்லி.

அன்று இரவு துரை தன் மனைவிக்காக எழுதிய கவிதைகளை எல்லாம் லூஸு போல் அவளிடம் ஒப்பித்தான். அவள் தன் கணவனுக்கு கவிதைகள் பிடிக்குமே என்று துரையை வைத்து கவிதைகள் யோசித்து கொண்டிருந்தாள்.

காதல், கள்ள காதல், தாய்மைபெண்களின் சின்ஸியாரிட்டியை அடித்து கொள்ள ஆளே கிடையாது.

துரை தனக்கென ஓர் கள்ள காதலி வேண்டும் என்று முடிவெடுத்து தேடிய போது, ஓர் டாக்டர் தான் தனக்கென கள்ள காதலியாக அமைய வேண்டும் என்று ஓர் குறிக்கோளோடு இருந்தான். க்ளினிக் க்ளினிக்காக ஏறி இறங்கி பார்த்தான். ஒன்று கல்யாணம் ஆகாத டாக்டர்கள் இருந்தார்கள், இல்லையென்றால் கல்யாணம் ஆன கிழவிகள் இருந்தார்கள். இதை பற்றி ஆராய்ச்சியில் இறங்கிய போது, சில டாக்டர்கள் கல்யாணம் செய்து கொள்வதே 30 வயதுக்கு மேல் தான் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் அவனுக்கு தெரிய வந்தது. கல்வி முறையையெல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், MBBS படிப்பே 5 வருஷம் எனவும், அது கிடைக்கவே இம்ப்ரூவ்மென்ட் பரிட்சை எல்லாம் எழுதி வருடத்தை வீணடிக்கிறார்கள் எனவும், வெறும் MBBS ஐ யாரும் மதிப்பதில்லை எனவும், அதனால் மேற் படிப்புக்கு ஓடுகிறார்கள் எனவும், அதற்கு ஓர் என்ட்ரான்ஸ் எக்ஸாம், அதில் 30000 சீட்களுக்கு 10 லட்சம் பேர் அடித்து கொள்கிறார்கள் எனவும், படித்து, படித்து ஒரு நாள் டாக்டர் ஆன பின் கல்யாணத்திற்கு பணம் சம்பாதித்து, வட்டிக்கு பணமெல்லாம் வாங்கி கல்யாணம் ஏற்பாடு செய்வதற்குள் 30 வயதுக்கு மேல் ஆகி விடுகிறது என்றும் அறிந்தான். இதையெல்லாம் அறிந்து அறச்சீற்றம் அடைந்த போராளியாக உருவெடுத்தான். நெதர்லாந்து கலாச்சாரத்தை ஒப்பிட்டு கட்டுரை எழுதி எழுதி கிழி கிழியென கிழித்தான். ஒரு நாய் சீண்டவில்லை…. பழைய படி சினிமா விமர்சனம் எழுதலானான்.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லஇது ஓர் சினிமா நிறைந்த தேசம்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கேற்ப, துரை தன் மனைவி இன்னொருவனுக்கு கள்ள காதலி ஆகி விட கூடாது என்பதில் அனைத்து வகையிலும் உஷாராக இருந்தான். இதனால் பலர் மத்தியில் நல்ல அந்தஸ்து இருந்தது. தம்பி…. வாழ்க்கையில ஒழுக்கங்கறது…. என பலருக்கும் அட்வைஸ் கொடுப்பதில் துரையே முன்னிலை வகித்தான். ஒரு வழியாக தனக்கு டாக்டர் கள்ள காதலி கிடைக்காது, வேறு தான் தேட வேண்டும் என முடிவிற்கு வந்தான். இந்த இந்திய திருதேசத்தில் பல குடிகார, ஃபாஸிஸ, ஆணாதிக்க, மென்ட்டல் கணவன்மார்கள் ஒயின் ஷாப்பே கதி என்று கிடப்பதால் துரைக்கு சீக்கரத்திலே ஓர் அழகிய கள்ள காதலி கிடைத்தது என்பது ஒன்றும் ஆச்சர்யத்திற்குரிய விஷயம் அல்ல

துரைக்கு தன் மனைவியை பிடிக்கவே பிடிக்காது. தன் மனைவியை காட்டிலும் துரைக்கு பிடிக்காத ஓர் விஷயம் டிவி தான். சொல்ல போனால் தன் மனைவியை பிடிக்காமல் போனதற்கான காரணமே டிவி தான். வாயை திறந்து எதை பேசினாலும் டிவி சம்பந்தமாகவே பேசினாள். விளம்பரங்களை கூட கண் கொட்டாமல் பார்த்தாள். தானும் ஆணாதிக்கவாதியாக மாறி, கள்ள காதலர்களுக்கு அழைப்பு விடுக்க கூடாது என்பதற்காக பல்லை கடித்து கொண்டான். அப்போது பார்த்து வரமாய் அமைந்தது தான் தொடர் மின்சார துண்டிப்பு. ஒரு மணி நேரம் இருக்கும், ஒரு மணி நேரம் இருக்காது என மின்சாரம் உள்ளே வெளியே விளையாட்டு விளையாட ஆரம்பித்தது. அப்படி ஓர் கற்காலம், அவனுக்கு பொற்காலமாய் வாய்த்தது. அந்த பொற்க்காலத்தில் தான் அவனுக்கு முதல் குழந்தை பிறந்தது. இனிப்பு எடுத்து கொண்டு மின்சார வாரியத்தினுள் நுழைந்தாள் இருக்கைகள் காலியாக இருந்தன….

இன்னும் இதே போல் தொடர்ச்சியாக குழந்தைகள் பெற்று கொண்டிருக்கலாம் என்று எந்த ராகு காலத்தில் கனவு கண்டானோ, காற்றாலைகள் செயலாற்ற ஆரம்பித்து துரையின் வாழ்க்கையில் பழைய படி சூறாவளியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தது. இதற்கு தீர்வே இல்லையா என்று நெதர்லாந்து ஆசாமியிடம் ஃபேஸ்புக்கில் ஓசியாக குமுறி எழுந்தான். உங்க ஊரில் டிவிக்களும், தியேட்டர்களும் இருக்கும் வரை சாத்தியமே இல்லை என ஒரே போடாக போட்டான். துரையின் தேசப்பற்று கண்கள் துடிக்க வைத்தன. ‘என் நாட்டையா டா கேவலாமா பேசின, எங்க நாடு எப்பேற்ப்பட்ட நாடு தெரியுமா….’ என்று வேகமாக டைப் அடித்து விட்டு, அடுத்து என்ன எழுதுவது என தெரியாமல் விழித்து கொண்டிருந்தான். எல்லாத்தையும் Backspace துணை கொண்டு அழித்து, விக்கிப்பீடியாவில் நெதர்லாந்து பற்றி ஆராய்ந்து, அந்நாட்டை பற்றி கஷ்டப்பட்டு ஒரு குறையை மேய்ந்து கண்டெடுத்து சொல்லி காட்டி, துரை தன் தேசப்பற்றை காட்டினான்.

கப்பல் ஏறி ரஷ்யா போனால், அங்கு போலி டாக்டர்களே இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு தேசமே இல்லை.

கம்யூனி…..

ஐயையோமன்னித்து விடுங்கள்கம்யூனிசம் பற்றி ஏதும் சொல்ல வரவில்லை. கம்யூனிட்டி பற்றி தான் சொல்ல வந்தேன்அடிவாங்க தெம்பு இல்லை.

தினத்தந்தி மட்டும் எப்படி அதிகம் விற்கிறது என்று எப்போதுமே துரைக்கு ஓர் சந்தேகம் உண்டு. எப்போதுமே அதை பற்றி யோசித்த வண்ணம் இருப்பான். ஒரு நாள் அதற்கான தீர்வு கிடைத்தது...

தினகரன்ஐபில்லில் சூதாட்டம், கிரிக்கெட் வீர்ர்கள் கைது.
தினமலர்கிரிக்கெட் வீர்ர்கள் புக்கிகள் தொடர்பு அம்பலம்.
தினத்தந்திகிரிக்கெட் வீரர்கள் கைது; அழகிகளுடன் தொடர்பு;

இதை தெரிந்து கொண்ட நாளில் இருந்து துரை இன்னொன்றையும் தெரிந்து கொண்டான். அவனது கல்லறைக்கும், தினத்தந்திக்கும் மறைமுகமாக ஓர் போட்டி ஓடிக்கொண்டிருக்கிறது என.. ஒரு நாள் நம்முடைய போட்டோ தினத்தந்தியில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என லேசாக ஒரு பயம் அவனது வயிற்றில் நெளிந்தது. நல்லவேளையாக, அந்த போட்டியில் இறுதியாக துரையின் கல்லறையே ஜெயித்தது.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்ல, என்ற வாசகத்தை யாருமற்ற ஓர் ICU ward-ல் உதிர்த்து விட்டு கண் மூடினான்.

தேவர்களுக்கான ஒரு நிமிஷம் முடிந்திருந்தது.

Saturday, 9 November 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு இது நாள் வரை ஃபேஸ்புக்கிலும், மீடியாவிலும் போதும் போதும் என்னும் அளவிற்கு விமர்சனங்கள் கொடுத்து மாய்ந்து விட்டனர். ஆனால் வந்த விமர்சனங்கள் அனைத்தும் இரண்டு எக்ஸ்ட்ரீம்களில் இருக்கிறது. ஒன்று, தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுகின்றனர், இல்லையேல் சகிக்கவே முடியாத அளவிற்கு வக்கிரமாய் கரித்து கொட்டுகின்றனர்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சுத்தமான அக்மார்க் கமர்ஷியல் திரைப்படம். ஓர் அவெரெஜ் தமிழ் சினிமாவில் என்னென்ன ஓட்டைகள் இருக்குமோ இதிலும் எல்லாம் இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை லாஜிக் பற்றி எந்த கவலையும் இல்லாமல், ஓர் கலை திரைப்படம் சாயலில் ஓர் கமர்ஷியல் திரைப்படத்தை மிஷ்கின் கொடுத்திருக்கிறார். கலை திரைப்படத்தை பாராட்டும் ரசிகர்களை, சமுதாயம் இன்ட்டிலிஜென்ட் என நினைத்து கொள்வதால், இது பல ரசிக சிகாக்களுக்கு தோதாக போய்விட்டது. பார்த்தது கமர்ஷியல் படம், ஆனால் வெளியில் வந்து கலை திரைப்படம் பார்த்த லெவலுக்கு பீத்தி கொள்ளலாம் என்பதால், பல கலா பூர்வ ரசிகர்கள் உதயமாகி விட்டார்கள். அந்த சந்தோஷம் அவர்களுக்கு….இப்படி கமர்ஷியல் திரைப்படங்களுக்கு ஓர் புது சாயல் கொடுத்ததற்கு மிஷ்கினை பாராட்டியே ஆக வேண்டும் என்றாலும், பாலாஜி சக்திவேல், ராம், ராஜு முருகன் போன்றோர் இருக்கும் எதிர்கால தமிழ்சினிமாவை நினைத்தால் கொஞ்சம் பீதியாவதை தவிர்க்க முடியவில்லை.

ஓர் குடும்பத்தில் 3 பேருமே கண் தெரியாதவர்களாக இருக்கின்றனர், லட்சத்தில் ஓர் குடும்பம் தான் இப்படி இருக்கும் என்றாலும், இந்த அமைப்பில் உள்ள குடும்பத்தை கதைக்களனில் உள்ளே இழுத்ததிற்கான காரணம், ஆடியன்ஸ் மத்தியில் அனுதாபத்தை உருவாக்குவதுகதையின் ஓர் கட்டத்தில் குண்டு அடிப்பட்டு வீழும் மிஷ்கினை காப்பாற்றும் ஶ்ரீ , படம் நெடுக தேவையே இல்லாமல் தொத்தி கொண்டு வருகிறார் போல் இருக்கிறது.

மிஷ்கினை காப்பாற்றியதற்காக போலிஸால் சிக்கலுக்குள்ளாகும் ஶ்ரீ, அவராகவே வெளியே வந்திருப்பார். கமிஷ்னர் முதல் அவரது கல்லூரி HOD வரை அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஶ்ரீயை போலிஸடம் இருந்து காப்பாற்றுகிறேன் என்ற பேர்வழியில், எதற்காக மிஷ்கின் ஶ்ரீயை கடத்தி, உயிருக்கு ஆபத்தான பல இடங்களுக்கு அழைத்து சென்று சிக்கலக்குள்ளாக்கி, கடைசியில் ஓர் குழந்தையை கையில் கொடுத்து அவரை guardian ஆக்குகிறார் என புரியவில்லை. கிட்டத்தட்ட ஶ்ரீ, மிஷ்கினின் கூட்டாளி போல் செயல்பட்டதாக கதை முடிகிறது. எப்படி ஶ்ரீயை போலிஸ் கைது செய்யாமல் விட்டது என தெரியாமல் நாம் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்க, படம் முடிகிறது.

மிஷ்கினை காப்பாற்றிய மறுகணமே ஶ்ரீக்கும், மிஷ்கினுக்குமான பிணைப்பு முடிந்திருக்க வேண்டும். ஏனென்றால் மிஷ்கின் ஶ்ரீக்கு நன்றி சொல்வதை காட்டிலும், ஶ்ரீக்கு தன் முன் கதை, பின் கதை, சைட் கதைலாம் சொல்வதை காட்டிலும் மிஷ்கினுக்கு பல வேலைகளும், அபாயங்களும் இருந்தனசரி, ஶ்ரீயை படம் முழுக்க கூட்டி கொண்டு திரிவது தான் கதைக்களம் என்று எடுத்து கொண்டாலும், இருவரும் சேர்ந்து அன்று இரவு எதற்காக பாடுபடுகிறார்கள் என்றால், இறந்த போன ஒருவனுக்கு அஞ்சலி செலுத்த அவனது குடும்பத்தை கல்லறைக்கு கூட்டி செல்வதற்காக தான் இத்தனை பாடுஇதையெல்லாம் என்னவென்று சொல்லசென்ட்டிமென்ட் சமாச்சாரத்தை உள்ளே இழுத்து விட்டால், பார்ப்பவர்கள் வாயை பொத்தி கொண்டு பார்ப்பார்கள் என்பது தான் மிஷ்கின், ராம் போன்றோர்களின் கண்டுபிடிப்பு. அப்படி ஓர் அச்சுறுத்தலான சூழ்நிலையில் இப்படி பட்ட ஓர் அஞ்சலி இரங்கல் தேவை தானா? அதுவும் ஓர் குழந்தையை கூட்டி கொண்டு….? இந்த கேள்வியை யாரும் கேட்க துணிய மாட்டார்கள் என்ற தைரியத்தில் கண்ட படி காட்சிகளை வைத்து, இளையராஜாவின் பிண்ணனி இசைக்கு செம்ம ஸ்கோப் கொடுத்து இருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு போய் அஞ்சலி செலுத்தியதில், மேலும் 3 உயிர்கள் பலியானது தான் மிச்சம்.

கதையை அமைக்கும் முன்னரே திரைக்கதையை அமைத்து விடுவது தான், இது போல் ஸ்கிரிப்ட்டுகளில் உள்ள பிரச்சனை. ஶ்ரீயும், மிஷ்கினும் படம் முழுக்க ஓட வேண்டும். ஒரு பக்கம் போலிஸ் துரத்த வேண்டும், இன்னொரு பக்கம் ரௌடிக்கள் துரத்த வேண்டும். ஒரு இரவு முழுக்க சென்னையை சுத்தி சுத்தி காட்ட வேண்டும். இதை முதலில் தீர்மானித்து விட்டார்கள், கதை எழுதுவது தான் பாக்கி என்று கதை வேட்டை நடத்தியிருக்கிறார்கள். வில்லனை பழிவாங்குதல், வில்லனுக்கு பயந்து ஓடுதல், பணத்தை கொள்ளையடித்து ஓடுதல் என்பன பல யுக்திகளை தமிழ் சினிமா பார்த்து விட்ட படியால், ஓர் குடும்பத்தை கல்லறைக்கு அழைத்து சென்று அஞ்சலி செய்ய வைத்தல் என்ற கதையை ஸ்க்ரிப்ட்டாக்கி இருக்கிறார்கள். சென்ட்டிமென்ட் சமாச்சாரத்தை உள்ளிழுத்து போட்டப்படியால், ஒரு பயல் வாயை திறந்து பேச முடியாதபடி செய்தது தான், மிஷ்கினின் மேஜிக்

கதையில் வரும் கண் தெரியாத குடும்பத்தை காப்பாற்றுவது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியமாக எனக்கு தெரியவில்லை. வில்லன் கூட்டம் அந்த கண் தெரியாத குடும்பத்தை சீர்குலைக்க நினைப்பதற்கு, ஒரே காரணம் மிஷ்கின் வேலைக்கு வராமல், அவர்களுடனே இருப்பதுஆக அந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மிஷ்கினிற்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கிறது. உதாரணமாக
1) குடும்பத்திற்கு தகுந்த பண ஏற்பாடுகளை செய்து விட்டு, மொத்த வில்லன் கும்பலையும் கொன்று விட்டு, போலிஸில் சரண்டர் ஆகியிருக்கலாம்.
2) வில்லனை கொலை செய்ய முடியாதபட்சத்தில், அவனுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கலாம்.
3) தற்கொலை செய்து கொள்ளலாம், இல்லையென்றால் தற்கொலை செய்யப்பட்டதாகவோ, கொலை செய்யப்பட்டதாகவோ செட் அப் செய்து, தூர தேசத்திற்கு தப்பி ஓடி, தொலைவில் இருந்து குடும்பத்திற்கு ஆதரவும், பாதுகாப்பும் கொடுத்து இருக்கலாம்.
4) மொத்தமாக குடும்பத்துடன் தூர தேசம் தப்பி ஓடியிருக்கலாம்.
ஆனால், சினிமா என்பதற்காக நாமும் சில சமரசங்களை செய்தாக வேண்டிய கட்டாயங்கள் நம்மை அழுத்துகிறது.

இப்போது இருப்பது Fast food உலகம் என்பதை மிஷ்கின் தெரிந்து வைத்திருக்கிறார். யாருக்கும் இங்கு நேரமில்லை. சாவு வீடுகளிலே கூட, எடுத்து கொண்டு போய் புதைத்து விட்டு ஆகிற வேலையை பார்க்கலாம் என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டனர். இதையெல்லாம் சரியாக புரிந்து வைத்திருந்ததால் தான் 30 நிமிடத்திற்கு ப்ளாஷ்பேக்காக இழுக்க வேண்டிய கதையை, 5 நிமிட கதை சொல்லலில் முடித்து விட்டார். அதிலும் ஓர் சிறப்பு என்னவென்றால் ஓநாய் ஆட்டுக்குட்டி கதையாக சொல்லி முடித்து விட்டார். அது ஓர் Poetic ஆன தன்மையை வேறு கொடுத்து விட்டது. அவருக்கு காசு மிச்சம், நமக்கு நேரம் மிச்சம்நானும் கூட திரையரங்கில் யாராவதுஇதெல்லாம் யாருக்கு புரியாதோ இல்லையோ திவ்யா உனக்குமா புரியலைஎன்று தலைநகரம் வடிவேலு டயலாக்கை கமென்ட்டாக அடிப்பார்கள் என்று நினைத்தேன்ம்ஹூம்இன்னும் 10 வருடங்களாவது தேவைப்படும்

படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன, லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன, கதாப்பாத்திரங்களில் வெரைட்டி இல்லாமல் ஒன்றை போலவே இருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் சாகும் போது கூட தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் தேமே என்று நின்று கொண்டிருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் வலிந்து திணிக்கப்பட்டு இருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் தன் பாத்திரத்திற்கான ஜஸ்டிஃபிகேஷனை கொடுக்காமல் இருக்கின்றன…. எல்லாமும் இருந்தும் கூட, இந்த திரைப்படம் எல்லா வயது ரசிகர்களையும் கவர்ந்து இருக்கின்றன. காரணம் படத்தின் திரைக்கதை.

படத்தின் திரைக்கதை முற்றிலும் புதுமையானது, அதே சமயம் புத்திசாலித்தனமானது. அது எங்கேயுமே சுவாரஸ்யத்தை சமரசம் செய்து கொள்ளாமல் படைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் மொத்த குறைகளையும் அது Dominate செய்யும் அளவிற்கு, அது வசீகரமாக இருப்பது தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

படத்தில் உட்கார்ந்திருப்பதே ஓர் பரவசமான அனுபவமாக இருந்தது. காரணம் இளையராஜாவின் பிண்ணனி இசைஇளையராஜாவின் இசையில் பாடல்கள் ஏதும் இல்லை என்பது கூடுதல் நிம்மதி.

மொத்தமாகவே படம் வெற்றி தான்ஆனாலும் மிஷ்கினை பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக போற்றி கொண்டும், பிடிக்காதவர்கள் மகிழ்ச்சியாக தூற்றி கொண்டும் இருக்கின்றனர். இரண்டு தரப்பினருக்குமே ஓர் திருப்தி இல்லாமல் அதனை செய்து கொண்டிருப்பது தான் இங்கு வேடிக்கை. பிடித்தவர்களுக்கு என்ன பிரச்சனையென்றால், ஒண்ணு ரெண்டு இடங்களில் மட்டும் கதை இடிக்கிறது, பிடிக்காதவர்களுக்கு என்ன பிரச்சனையென்றால் எதிர்ப்பார்த்ததை விட படம் பிரமாதமாக வந்து விட்டப்படியால், என்ன தூற்றியும் பருப்பு வேகாமல் போகிறது.