Wednesday, 16 January 2013

பூனைகுட்டிஎங்கள் வீட்டு பூனை இரண்டு குட்டிகள் போட்டிருந்ததை எல்லோரும் அறிவீர்கள். அது இரண்டுமே பெண் பூனைகள். ஆக மொத்தமாக 3 பெண் பூனைகள், எங்கள் வீட்டிலேயே கொஞ்ச நாளாக இருந்து வந்தது. இப்படி 3 பெண் பூனைகளை பராமரித்து வந்தால், இன்னும் ஒரு வருடம் கழித்து மூன்றும் இரண்டு இரண்டு குட்டிகள் போடும் என்று வைத்து கொண்டால் கூட, வீட்டில் 9 பூனைகள் ஆகி விடும் என்பதால் புதிதாய் பிறந்த இரண்டு குட்டிகளையும், தெரிந்தவர்களிடம் கொடுத்து விட்டோம். அதில் ஒரு பூனைகுட்டி எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த வீட்டோடு ஒட்டி கொண்டது. ஆனால் இன்னொரு பூனை நாள் பூராவும் அம்மா அம்மா என்று அழைத்து ஆர்பாட்டம் செய்து, சாப்பிடாமல் கொள்ளாமல் சோக மையமாக  இருப்பதாய் சொன்னார்கள். அதனால் அந்த பூனையை மட்டும் வீட்டோடு கூட்டி வந்து வைத்து கொண்டோம். அதை கூட்டி வந்து விட்டதும், மனிதர்களுக்கு இணையாக தாயும் மகளும் கட்டி பிணைந்து ம்யாவ் ம்யாவ் என்று அதன் செல்ல குரலில் ஆனந்ததில் கட்டி புரண்டது, இதை பார்த்த வீட்டாருக்கு கண் ஓரத்தில் கண்ணீரையே கசிய வைத்து விட்டது.

ஏற்கனவே இருந்த பூனை பெரிதாகி விட்டதால், அது அதிகம் குறும்பு பண்ணாமல் மிகவும் professional ஆக நடந்து கொண்டது. இப்படி இருப்பதால், வீட்டில் இன்னொரு பூனை குட்டி இருப்பதையே வீட்டில் இருப்பவர்களும் விரும்பினர். அம்மா பூனை எப்படி இருந்ததோ, குட்டியும் அச்சு அசல் அதே போல் இருக்கும். உடம்பு பூராவும் மின்னும் வெள்ளை நிறத்திலும், வால் பூராவும் கருப்பு சாம்பல் நிறமாகவும், தலையில் நெத்தி பகுதிக்கு மேல் கறுத்தும் அத்தனை அழகாக இருக்கும். அம்மாவையும் குட்டியையும் பக்கம் பக்கம் நிற்க வைத்து பார்த்தால், அப்படியே குட்டி பூனை அதன் அம்மாவின் மினியேச்சர் போல இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம், அம்மாவிற்கு இடது வயிற்று புறத்தில் ஒரு சிறிய கறுப்பு புள்ளி இருக்கும், குட்டிக்கு மூன்று சிறிய கறுப்பு புள்ளிகள் இருக்கும். அம்மா பூனை அதன் சிறுவயதில், அதாவது எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன்பு என்ன என்ன சேட்டைகள் செய்ததோ சொல்லி வைத்தாற் போல் இதுவும் அதே சேட்டைகளையே செய்தன. இதோடு பிறந்த இன்னொரு பூனை அப்படி இருக்கவில்லை. அது வேறு மாதிரி சேட்டைகள் செய்தன. அது பெரும்பாலும் தூங்கி இருக்கவே பெரும் ஆர்வம் காட்டியது, அதை இன்னொரு வீட்டில் கொடுத்ததில் இருந்து, அதன் சேட்டை விவரங்களை விசாரிப்பதில்லை. எப்போதாவது போய் பார்த்து விட்டு வருவதோடு சரி. மூன்று நாள் முன்பு கூட தற்செயலாய் அந்த வழியாய் வீதியில் நடந்து போன போது, எங்கயோ பார்த்த திசையில் திமிறி கொண்டு நின்றிருந்தது. சற்று கொஞ்சி விட்டு வந்தேன். அந்த பூனைக்கு அவ்வளவாக உடம்பு பிடிக்கவில்லை. நோஞ்சான் பூனையாக இருந்தது. பார்த்தால் ஒரு கவர்ச்சியே இல்லை. எங்களுடனே வளர்ந்து இருந்தால், இது நடந்திருக்காது தான், என்ன செய்ய என்று, அடுத்த வேலையை பார்க்க போய் விட்டேன்.

எங்கள் வீட்டில் குட்டி வளர வளர அது எங்களை வேலையாட்கள் போல் உபயோகிக்க ஆரம்பித்து கொண்டது, அதன் அம்மா பூனை போலவே… நாங்களும் சேவை செய்து கொண்டு வந்தோம். சற்று நாட்களிலே அம்மா பூனை பால் கொடுப்பதை நிறுத்தி விட்டது. பால் கிடைக்காததால் குட்டி பூனையும் அம்மாவோடு சேர்ந்து, நன்றாக பால் சோறும், கருவாடுமாக சாப்பிட்டு வளர ஆரம்பித்தது. குட்டி பூனை மட்டும் கொஞ்ச நாட்கள் வீட்டுக்குள்ளேயே ‘உச்சா’ போய் கொண்டு இருந்தது. அதற்காக ஒரு அட்டை பெட்டியில் மண் கொண்டு வந்தெல்லாம் வைத்து கொண்டிருப்போம். 15 நாட்கள் கூட இல்லை, அதுவே வெளியே போய் உச்சா உட்கார தெரிந்து கொண்டது. அதற்கு எப்போதெல்லாம் பால் சாதம் வேண்டுமோ, அப்போதெல்லாம் மெலிதாய் மியாவ் மியாவ் சொல்லி, அதன் வாலை நன்றாக விறைப்பாக்கி எங்கள் கால்களில் படும் வண்ணம் சுத்தி சுத்தி பால் சாதம் தட்டை பார்த்து பார்த்து கத்தும்.

கருவாடு வேண்டுமென்றால் கூட அப்படி தான். கருவாடு டப்பாவை, சற்று உயரமான இடத்தில் தான் வைத்து இருக்கிறோம், அது சரியாக வாஷிங் மெஷினுக்கு வெகு அருகில் இருக்கும். கருவாடு வேண்டுமென்றால் வாஷிங் மெஷின் மேல் ஏறி கொண்டு மியாவ் மியாவ் கொடுக்கும். அப்போதே எடுத்து போட்டு விட்டால் தப்பித்தோம், இல்லையெனில் யாரையும் ஒரு வேலை செய்ய விடாது. வாலை விறைப்பாய் வைத்து கொண்டு, குழந்தை குரலில் மியாவ் சொல்லி காலை காலை சுற்றி வரும், நடக்கவே விடாது. இந்த கூத்து அனைத்தும் சரியாக எங்கள் வீட்டு நபர்கள் காலையில் பணிக்கு செல்லும் போது தான் நடக்கும்.

இதற்கிடையில் அம்மா பூனை, வீட்டில் தங்குவதே அரிதாகி போனது. எப்போதாவது வரும், குட்டி பூனைக்கு வைத்திருக்கும் பால் சாதத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டி, வெளியே கிளம்பி விடும். கருவாடு கூட கேட்பதில்லை.

எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு வேளைக்கும், ஒரு தெரு நாய் வரும். அந்த நாயை பார்த்தால் எங்களுக்கே சமயத்தில் பயமாய் இருக்கும், எனெனில் அது அவ்வளவு பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். ஆனால், எங்கள் எல்லோரிடமும் மிகவும் விசுவாசமானதாகவும், பாசமாகவும் இருக்கும். இந்த நாய், எங்கே பூனை தெருவில் சுத்தி கொண்டு இருக்கும் போது, அடித்து சாப்பிட்டு விடுமோ, என்று நாங்கள் கலக்கமுற்று இருந்த போது, என் அப்பா தான் பூனையை தைரியமாக கையில் வைத்து கொண்டு நாய்க்கு அருகில் எடுத்து சென்று அறிமுகம் செய்து, அதனுடன் பழக வைத்தார். அம்மா பூனையை கூட அவர் அப்படி தான் செய்தார். நாளடைவில், பூனையும் நாயும் சகஜமாக உலாவ ஆரம்பித்து விட்டன. முதலில் எல்லாம், பூனைகுட்டி ஓடி ஓடி போய் நாயை அடித்து விட்டு, அடித்து விட்டு வீட்டிற்குள் ஓடி வரும், அது ஏதாவது எதிர்வினை ஆற்றுகிறாதா என்று ஆர்வமுடன் பார்க்கும். அது சிரித்த முகமாகவே நிற்கும். ஒன்றும் செய்யாது. பின்பு பூனைகுட்டிக்கே அலுத்து போய் விட்டது போலும், அடித்து விளையாடுவதை நிறுத்தி விட்டது.

ஒரு நாள், எனக்கு சின்ன சந்தேகம் வந்தது. நம் பூனைகுட்டி எதிரிகளை சமாளிக்கும் வகையில் ஆற்றல் இருக்கிறதா, அல்லது ஓடி விடவாவது தயராய் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள தேடல் தாகம் எடுத்தது. அதை சோதிக்கும் வகையில், அது எதிர்பார்க்காத போது, அதன் பின்னால் போய் தட்டென்று செருப்பு காலில் சத்தம் ஏற்படுத்தி குதித்து நின்றேன். அது பயத்தில், என் முட்டி உயரம் வரை ஒரு குதி குதித்து, ஹஸ்ஸ் என்று என் காலில் தும்மியது, அந்த நேரம் பார்த்து பர்மடாஸ் வேறு போட்டு இருந்தேன், கால் எல்லாம் குட்டி குட்டி சாரல்.

சில நாட்களில், அம்மா பூனை வீட்டிற்கு வருவதையே விரும்பாமல், அது சாப்பிட வந்தால் குட்டி பூனை விரட்டி விட்டது. பிறந்து 2 மாசத்திலே தனது ஏரியாவை நிர்வாகம் செய்ய தொடங்கி விட்டது போலும், என்று அதை செல்லமாய் திட்டி, அறையினுள் விட்டு தாளிட்ட பின்பு தான் அம்மாவிற்கு சாப்பாடு போட வேண்டியதாய் இருக்கும். அம்மா பூனையின் வயிறு மறுபடியும் வளர ஆரம்பித்தது. எப்போது வேண்டுமானாலும் குட்டி போடும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். அது தீவரமாய் குட்டி போட இடம் தேடி கொண்டிருந்தது. சமயத்தில், உயரமான இடங்களில் போய் உட்கார்ந்து கொண்டு, யார் கூப்பிட்டாலும் வராமல் இருக்கும்.

அப்போதெல்லாம் செந்தில் முருகன் போட்ட பதிவு தான் நினைவில் வரும். நாய் நமக்கு அடிமை போல் நடந்து கொள்ளும், பூனை நமக்கு எஜமானன் போல் நடந்து கொள்ளும் என்று அந்த பதிவின் ஒரு இடத்தில் வரும். ரொம்ப ரசித்து படித்ததால், அப்படியே நினைவில் தங்கி விட்டது.

பூனைகுட்டிகளுக்கு நாங்கள் பெயர் சூட்டுவதில் எல்லாம் ஆர்வமே காட்டவில்லை. ஆளாளுக்கு வாயில் என்ன பெயர் வருகிறதோ, அதை கூப்பிட்டு கொள்வார்கள். அப்பா சுந்தரி என்று கூப்பிடுவார், பாட்டி சில்லி என்று கூப்பிடுவார். இதில் வேடிக்கை என்னவென்றால், தாய்க்கு ஒரு பெயர், குட்டிக்கு ஒரு பெயர் என்ற பேதமே கிடையாது. இரண்டுக்கும் ஒரு பேர் தான். நாங்கள் அனைவரும் அம்மா பூனை, பூனைக்குட்டிபூனை எங்கள் வாழ்விற்குள் வந்ததன் பிறகு, எங்கள் வீடே பெரிதும் மாறி இருக்கிறது. முன்பெல்லாம் பாட்டி, எல்லா சமயமும் ஒரு வித தனிமையிலே இருப்பது போல உணர்வார். வீடு பூராவும் ஆட்கள் இருந்தாலும், எங்களில் யாராலும் அவரது தனிமைக்கு மருந்து தேட முடியவில்லை. ஆனால், அந்த மருந்தை இந்த பூனைகள் தான் எத்தனை அழகாய் தேடி கொடுத்து விட்டன. நினைத்து பார்க்கும் போதே சில சமயம் ஆச்சர்யமாய் இருக்கும். ஒரு காலத்தில் மொனமொனவென்று வாயிற்குள்ளேயே புலம்பி கொண்டு கடுகடுவென இருந்த பாட்டி, இப்போதெல்லாம், பூனைகளோட இருக்கும் தருணத்தில் குழந்தையாகவே மாறி விடுகிறார். மாயஜாலம் போல உணர்வோம். எங்களுக்கும் நாங்கள் எங்கு இருந்தாலும், நாங்கள் வீடு திரும்ப ஒரு கூடுதலான காரணம் இருந்தது. அது பூனை தான், வீட்டிற்கு சென்று பூனையை கொஞ்ச போகிறோம் என்ற உணர்வே அத்தனை ஆனந்தமாக இருக்கும்.

ஒரு நாள் அம்மா பூனை, எப்போதும் போல் சாப்பிட உள்ளே வரும் போது கவனித்தால், உப்பியிருந்த அம்மா பூனையின் வயிறு தட்டையாய் கிடந்தது. குட்டி ஏதேனும் போட்டு விட்டதா என்று எங்கள் வீடு முழுவதும் தேடினால் எங்கேயும் காணோம். இந்த பூனை முதல் முறை குட்டி போடும் போதே அதை ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸாக வெளியிட்டு என் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்ட போது, இதே செந்தில் முருகன் கமெண்ட்டில் வந்து வாழ்த்துக்களை சொல்லி கூடுதலாய் ஒரு தகவலையும் சொன்னார். தாய் பூனை, குட்டிகளை தின்று விடும், ஜாக்கிரதை என எச்சரித்தார். அது இப்போது தான் ஞாபகத்தில் வந்து தொலைத்தது. நெஞ்சே கனத்து போனது.

எதற்கும் எதிர்த்த வீட்டிலும் தேடலாமே, என்று எம் வீட்டு மக்கள் தேடியிருக்கிறார்கள். நல்ல வேளை, நான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை.

அழகழகாய் 4 குட்டிகள்.No comments:

Post a Comment