Wednesday 17 October 2012

ஸ்வாதி ராஜீவ் (5)


நெடுநாட்கள் கழித்து சந்தித்த சந்தோஷத்தில் எல்லோரும் கலகலப்பாக பேசி கொண்டிருக்கையில் அன்பு மட்டும் அழுத்தமாய் இருப்பதை கண்டு என்ன விஷயம் என்று கேட்டனர்.

அன்பு பேச ஆரம்பித்தான்...

“நான் சென்னை வந்து கரெக்டா இன்னையோட ஒன்றரை வருஷம் ஆகுது, ஆனா இன்னைய வரைக்கும் நான் என்ன சென்னையில எதிர்பார்த்தேனோ, அது எனக்கு கிடைக்கல. நான் எதிர்பார்த்ததும் ஒன்னே ஒன்னு தான், ஒரே ஒரு கௌரவமான வேலை. ஆனா எனக்கு அது கடைசி வரைக்கும் கிடைக்கல. நான் வேலை தேடி சென்னை வந்ததோட சரி, இன்னைய வரைக்கும் ஊர் பக்கம் போகல, ஒரு நல்ல வேலை கிடைச்சு ஊர் பக்கம் போகலாம்னு பாக்கறேன், ஆனா வேலை கிடைக்கவும் இல்லை, ஊர் பக்கம் போகவும் இல்லை.. முந்தாநாள், எங்க ஊர்ல அழகர் ஆத்துல இறங்கியிருக்காரு, அதை பார்க்க மதுரக்காரய்ங்க எந்த நாட்டுல இருந்தாலும் ரயிலை பிடிச்சு, ப்ளைட்ட பிடிச்சுலாம் வந்து சேர்வாங்க, ஆனா அன்னைக்கு நான் இந்த பாழாய் போன ஊர்ல interview அட்டெண்ட் பண்ணிட்டு இருந்தேன். எங்க அப்பாவும் அம்மாவும் என்னை வர சொல்லி எவ்வளவோ கேட்டாங்க, கடைசி வரைக்கும் முடியாதுனு சொல்லி இங்கே தான் கிடந்தேன். வேலை கிடைச்சா தான் ஊர் பக்கம் போகணும்னு இருக்கேன்.

முதல்முதல்ல Interview தேடி சென்னைக்கு வந்த போது எவ்வளவு உற்சாகமா இருந்தது தெரியுமா… Internet போய் Chetanasforum websitesல வர்ற interview எல்லாத்தையும் பார்த்து பார்த்து எதையுமே மிஸ் பண்ணிடாம எல்லா interviewஐயும் போய் attend பண்ணுவேன். அப்பவெல்லாம் நமக்கான வேலை எங்கேயோ இருக்குனு குருட்டு தனமாய் ஓடிகிட்டே இருந்தேன், ஒரு நாளைக்கு 3 interviewலாம் கூட attend பண்ணியிருக்கேன். அதுவும் எப்படி, ஒரு interview spot தாம்பரம் மெப்ஸ்ல இருக்கும், இன்னொன்னு ஈக்காட்டுத்தாங்கல்ல இருக்கும், ரெண்டத்தையும் attend பண்ணுவேன். ஏன் இப்படி ரொம்ப மெனக்கெட்டு ஓடிகிட்டு இருக்கனு friends கூட கேட்பாங்க, இன்னும் எவ்ளோ நாளைக்கு ஓட போறேன், கொஞ்ச நாள் தானேன்னு நினைச்சுக்குவேன். எனக்கான வாய்ப்பு எங்க வேணும்னாலும் இருக்கலாம்னு நினைச்சுப்பேன். ஆனா எப்ப இந்த சென்னையை புரிஞ்சிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே நான் இனி ஓடனுமானு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். நான் கடைசியா interview போய் 4 மாசத்துக்கு மேல ஆகுது. எதுவுமே பண்ணாம, எங்கேயுமே போகாம ஒரு நாள் பூரா ரூமுக்குள்ளயே இருக்கேன். என்ன பண்றதுண்ணும் தெரியல.

ஒரு interview போறதுக்கு முன்னாடி எவ்ளோ கனவோட போவேன் தெரியுமா… அந்த வேலை கிடைச்சிடுச்சுனா எப்படி தங்கறது, எங்க தங்கறது, எப்படி வந்து போகறதுனு, முதல் சம்பளத்துல என்ன வாங்கறதுனு பல கனவுகளோட தான் போவேன். ஆனா, நான் போன interviewல பல interview நடக்கவே நடக்காது, ஏன்னா கூட்டம். interviewனு சொன்னவுடனே, என்னை மாதிரியே பல ஆசாமிகள் என்னை மாதிரியே வந்து சேர்ந்திடுறாங்க. எதிர்பார்த்ததை விட அதிகமாய் கூட்டம் வந்திடுச்சு, அதனால வேற ஒரு நாள் வேற ஒரு இடத்துல interview நடக்கும், Sorry for the inconvenienceனு  ஸ்டைலா  சொல்லி அனுப்பிடுவாங்க,

என்னோட first interview லேயே என்னை அப்படி தான் அனுப்பினாங்க. அன்னைக்கு மட்டும் நான் 3 மணி நேரம் வெயில்ல நின்னேன். அவங்க கம்பெனியோட future employee பல பேர் வெளியே நிக்கறதை பத்தியோ, அவங்கல்லாம் ஏமாற்றமா திரும்ப போறத பத்தியோ அவனுக்கு கொஞ்சமும் கவலையில்லை, ஏன்னா அவனுக்கு எங்களை விட்டா வேற ஆள் இருக்கான். நாளைக்கே interview னு internet ல announce பண்ணான்னா, நாளைக்கும் 750 பேர் வந்து வரிசையில நிப்பான்னு அவனுக்கு தெரியும்.

சரி, interview தான் இப்படி இருக்கேன்னு எங்கங்கெல்லாம் industries இருக்குனு விசாரிச்சு 30 resume-களை எடுத்து வச்சுகிட்டு அம்பத்தூர், கிண்டி, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர்னு கிளம்பியிருக்கேன். ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்கியிருக்கேன். அதுலயும் என்னான்னா முக்கால்வாசி செக்யூரிட்டிங்க கேட்டுக்குள்ள ஆளை விட மாட்டானுங்க. வெளியேவே நிக்க வைச்சு vacancy இல்லைப்பானு அனுப்பிருவாங்க. சரி, atleast resume ஆவது உள்ளே கொடுத்துடறேன்னு சொன்னா, நானே கொடுத்துக்குறேன்னு வாங்கி வச்சுக்குவாங்க. ஒரு சில கம்பெனிங்கல்ல மட்டும் தான் உள்ளே விடுவாங்க, அங்கேயும் reception லயே நம்மளை உட்கார வைச்சு, resume-அ வாங்கி ஆளை திருப்பி அனுப்பிடுவாங்க. அந்த மாதிரி மட்டும் ஒரு 40-50 resumes கொடுத்து இருக்கேன். அதுல ஒண்ணுத்துல இருந்து கூட reply வராதது தான் எனக்கு ஆச்சர்யம், ஒரு கம்பெனில கூடவா வேலைக்கு ஆள் தேவைப்படாம போயிடும்.

இந்த ஒன்றரை வருஷத்துல வெறும் எட்டே எட்டு interviewகளை தான் உருப்புடியா attend பண்ணியிருக்கேன். மத்ததெல்லாம் வெத்து வேட்டு. என்னா தான் interview மேல interview ஆ attend பண்ணாலும், எப்படி தான் இந்த interviewகள்ல கடைத்தேறி உள்ளே போறதுங்கற வித்தை மட்டும் இன்னமும் எனக்கு தெரியவேயில்லை. இந்த எட்டு interviewகள்ல, எட்டுத்திலுயுமே நான் written examல select ஆகிட்டேன், ஏன்னா பிறந்ததுல இருந்து எனக்கு அதுக்கு தான் ஸ்கூல்ல training கொடுத்து வச்சுருக்கானுங்க, அதனால written exam ஒன்னும் எனக்கு பெரிய பிரச்சனையா இருந்திடல. ஆனா இந்த group discussionலயும், HR interviewலையும் தான் எனக்கு ஆப்படிச்சு அனுப்பிடறாங்க, ஏன்னாக்க எனக்கு communication skill பத்தலையாம். Define elasticity அப்படினு கேட்டாக்க எனக்கு கோர்வையா சொல்ல தெரியலையாம். நான் எங்க போய் முட்டிக்கிறது,

எங்க கிராமத்துலயே நான் எடுத்த English markஐ இதுக்கு முன்னாடி எவனும் எடுத்தது கிடையாது, அதே மாதிரி அவன் கேள்வி கேட்ட elasticity definitionஐ பரீட்சையில எழுதினதால தான் எனக்கு strength of materialsல எனக்கு 82 மார்க் போட்டு, பாஸ் பண்ணி, degree certificate கொடுத்து அனுப்பியிருக்கான். அங்கேயே என் அறிவை நான் prove பண்ணிட்டு வந்ததுக்கு அப்பறமும், இங்கேயும் வந்து நான் prove பண்ணனும்னு அவன் எதிர்பார்க்கறான்னா, இதுக்கு பின்னாடி என்னா logic இருக்குனு எனக்கு புரியலை.

என்னை interview எடுத்தான் பார்த்தியா, அவன் ஆபீஸ்ல தினமும் English பேசி, English பேசறது அவனுக்கு தண்ணி குடிக்கற மாதிரி ரொம்ப ஈஸியான விஷயமா இருக்கும், ஆனா என் நிலைமை எப்படி இருக்குன்னா, வேற மாநிலத்துக்காரனை யாரையாவது பார்த்தா மட்டும் தான் நான் இங்கிலீஷையே பேசுவேன், மத்தப்படி எனக்கு எல்லா இங்கிலீஷும் ஏட்டுல தான். நான் வந்தது கிராமத்துல இருந்து,  கிராமத்துலையோ, காலேஜ்லையோ நான் யார்கிட்ட இங்கிலீஸ் பேசி பழக… நான் அங்க போய் திக்கி திணறாம இங்கிலீஷ் பேச… அவன் கம்பெனி வேலைக்கு வர்றவங்க அத்தனை பேரும் இங்கிலீஸ் பேசறவங்களா இருக்கணும்னா அவன் londonல போய் interview எடுத்துட்டு வர வேண்டியது தானே… ஏன் இங்க வந்து தமிழ்நாட்டுல எடுத்துட்டு இருக்கான். அவன் சொல்ற படி interview எடுத்தா, எந்த பிள்ளைகள்ளாம் கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்சிருக்கோ அவங்க மட்டும் தான் செலக்ட் ஆக முடியும். அப்படினா interviewங்கறதே elite people க்கு தானா?

அதே மாதிரி HR roundல கேக்கற கேள்விங்கல்லாம் முக்கால்வாசி, நம்ம எந்த எடத்துல weak-ஆ இருக்கோம்னு தெரிஞ்சிகிட்டு அந்த இடம் பார்த்து அடிக்கறதுக்காகவே கேக்கற மாதிரி இருக்கும். அவன் என்னா எதிர்பார்க்கறான்னா நான் காலேஜ்ல படிச்ச 30 பாடங்களையும் விரல்நுனியில வச்சருக்கனுமாம். இப்ப நான் காலேஜ் முடிச்சே 500 நாளைக்கு மேல ஆகுது, ஆனா நாளைக்கே நான் ஒரு interview போனாலும், நான் second yearல படிச்ச thermodynamics-ல இருந்து questions கேட்பான், அதுக்கு நான் பதில் சொல்லனும், நான் அப்போ பாஸ் பண்ணதெல்லாம் பத்தாது, கேட்கும் போது சொல்லனும், எழுதி காட்ட கூட கூடாது, கடகடன்னும் ஒப்பிச்சுடவும் கூடாது, casual-லா சொல்லனும். அப்ப தான் எனக்கு வேலை கொடுப்பான். இப்ப அவன் கேக்கற கேள்விக்கு நான் அவன் எதிர்பார்க்கற மாதிரியே நான் casual-லாவே பதில் சொல்றேன்னு வை, அவன் அடுத்த கேள்வி எங்க இருந்து தெரியுமா கேட்பான், சம்பந்தமே இல்லாம fluid mechanicsல இருந்து கேட்பான். அதையும் சொல்லனும், இல்லைன்னா வேலை கிடையாது. ஒரு வேளை, அவன் thermodynamics ல இருந்து கேக்கற கேள்விக்கு நான் பதில் தெரியாமா முழிக்குறேன்னு வை, அவன் கேக்கற அடுத்த கேள்வி அதே thermodynamics-ல இருந்தே தான் கேட்பான், fluid mechanicsக்கு வரவே மாட்டான். thermodynamicsலேயே சந்து பொந்துலாம் பூந்து, என்னை மண்ணை கவ்வ வைச்சு, all the best for your next interview-னு சொல்லி அனுப்பிடுவான். நாம மனம் தளராம வரனுமாம். நாம்ம கஷ்டப்பட்டு written clear பண்ணது, group discussion பாஸ் பண்ணியதெல்லாம், காந்தி கணக்கு தான்.

நான் பிறந்ததுல இருந்து, எனக்கு எங்க வாத்தியாருங்க என்ன Training கொடுத்து வச்சுருக்காங்கன்னா, ஒரு விஷயத்தை எப்படி ஒரு இடத்துல மக்கப் பண்ணி, இன்னொரு இடத்துல போய் பேப்பர்ல கொட்டனும்னு தான் train பண்ணியிருக்காங்க. இந்த trainingலாம் எதுக்குனு பார்த்தா, நான் ஒரு நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும்னு தான். ஆனா, இங்க வந்து interviewக்கு நின்னா, ஒரு இடத்துல கூட மக்கப் அடிச்சு பேப்பர்ல கொட்டற டெஸ்ட்டே வைக்க காணோம். முதல் ரவுண்டு apps, இரண்டாவது ரவுண்டு group discussion, மூனாவது ரவுண்டு hr interview. இப்படி இருக்கும் போது, எனக்கு மக்கப் அடிக்க ட்ரைனிங் கொடுத்தது எதுக்குங்கற கேள்வி, யார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி?  நான் கை நிறைய சம்பாதிக்க, நான் 19 வருஷமா எடுத்த training உதவி பண்ணலைனா, இனிமே அந்த trainingக்கு ஆன அவசியம் தான் என்ன? அத்தனையையும் கடாசிட்டு ஒரு interviewல select ஆக என்ன training கொடுக்கனமோ, அதை கொடுக்க ஆரம்பிக்க வேண்டியது தானே! இன்னமும் ஏன் எங்க ஊர் பிள்ளைங்கள பாபர் என்று பிறந்தார், என்று இறந்தார்னுலாம் ஞாபகம் வைச்சுக்க சொல்லிட்டுருக்கானுங்க… காமராஜர் காலத்துல எப்படி பாடத்தை சொல்லி கொடுத்தானோ, இப்பயும் அதே மாதிரி தான் சொல்லி கொடுக்காறான், அந்த காலத்துல தான் எல்லோரும் வாத்தியார் வேலைக்கு போறதுக்காக படிச்சாங்க, இப்பவும் வாத்தியார் வேலைக்கு போறதுக்கே சொல்லி கொடுத்தா அது என்ன அர்த்தம், வேற எந்த வேலைக்கும் யாரும் போக மாட்டாங்களா என்ன!

காலேஜ் முடிச்சு வெளியே வரும் போது, உண்மையா நான் என்னை ஒரு திறமைசாலியா உணர்ந்தேன், ஆனா நாளாக நாளாக இங்க நான் அலையறதை பார்த்தா எனக்கு என் மேலேயும், என் திறமை மேலயும் ஒரு சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு. அந்த சந்தேகம் வலுக்க வலுக்க எதுக்கு டா இந்த இன்ட்ரிவ்யுக்குலாம் போய்க்கிட்டுன்னு விட்டு தள்ளிடறேன்.

FISனு ஒரு கம்பெனி, தேனாம்பேட்டைல இருக்கு, அங்க நடந்த interviewல நான் writtenல நல்லா எழுதி அடுத்த round செலக்ட் ஆகிட்டேன். அடுத்த ரவுண்டு group discussion, ரொம்ப நல்லா பேசினேன்னு சொல்ல முடியாது, ஏதோ பேசினேன். அவனும் நீ எங்களுக்கு லாயக்கு இல்லை வெளியே போடான்னு சொல்லிட்டான், நானும் வந்திட்டேன். ஆனா அந்த group discussion ரவுண்ட்ல எங்களோட ஒன்னுமே பேசாம சும்மா இருந்தவனை selected listல announce பண்ணாங்க… அது எப்படினு, எனக்கு அப்போதைக்கு புரியாம இருந்தது, பின்னாடி தான் அவன் consultancy மூலமா வந்து இருப்பான்னு புரிஞ்சது.

Syntel company interview group discussionல, is hero-inn essential for a movie? னு ஒரு டாபிக் கொடுத்தாங்க. சுத்தியிருக்கற 10 பேர்ல என் கெட்ட நேரத்துக்கு, நான் மட்டும் தேவையில்லைனு சொல்ல, மீதி 9 பேரும் கண்டிப்பா தேவைனு சொன்னாங்க. அந்த 9 பேரும் என் கிட்ட சண்டைக்கே வந்துட்டாங்க, நானும் நான் சொன்னதுல நியாயம் இருக்குனு மாறி மாறி எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதாய் ஆயிடுச்சு, ஆனா அவங்க அத்தனை பேரும் டூமாங்கோழிங்க, அவங்க யாராலும் என் கிட்ட மல்லுகட்ட முடியலை, நான் சொல்ற பதில்ல அப்படியே off ஆகி தான் போனாங்க. நான் example சொன்ன ரொம்ப famous ஆன பல Hollywood படங்களை அவங்க யாரும் கேள்வி பட்டது கூட இல்லையாம், ஆனா நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுதுங்க. நானும் அவங்களுக்கு சளைக்காம இங்கிலீஷ் பேசி saw, bridge to the river kwai, departed, shutter island, kikijaro மாதிரியான படங்கள்ல கதை எப்படி ஆளுமை செலுத்துதுனு சொன்னேன். அவங்க அந்த படத்தையெல்லாம் பார்த்து இருக்காததால kikijaro படத்தோட கதையை மட்டும் சுருக்கமா இங்கிலீஷ்ல சொன்னேன். அதுக்கப்பறமா எவனாலும் பேச முடியல, ஒரே ஒரு north Indian பொண்ணு மட்டும், “இதெல்லாம் ஒரு கதையா? இத்தனை படத்தை பார்த்த நீங்க Kuch kuch hotha hai பார்த்து இருந்தீங்கனா, படத்துல hero-inn எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சியிருந்திருப்பீங்க” சொன்னா, அவ அப்படி சொன்ன உடனே சுத்தியிருந்த அத்தனை பேரும், yes, I agree with her…. Yes, I agree with her னு  சொல்லிட்டுனாங்க. நான் உடனே டென்ஷனாகி “ஆமா, நான் இன்னும் kuch kuch hotha hai பார்த்தது இல்லை தான், ஆனா டைட்டானிக் பார்த்து இருக்கேன், அதுலயும் hero-inn ரொம்ப முக்கியமானவங்க தான், ஆனா அந்த மொத்த படமும் இந்த உலகத்துக்கு சொல்ற விஷயம்னு பார்த்தா ஒண்ணுமேயில்லை, ஒரு கப்பல் மூழ்கிய வரலாறுனு வேணும்னா வெச்சுக்கலாம், ஆனா கிகிஜரோவை அப்படி சொல்ல முடியாது, பொறுப்பில்லாத ஒரு கலவி எப்படி ஒரு பிஞ்சு மனசை கசக்கி எறியுதுனு ரொம்ப முக்கியமான ஒரு subjectஐ சொல்றாங்க. அதுவுமில்லாம் இங்க வர்ற லவ் ஸ்டோரிஸ் தான் நம்மளோட கலாச்சார சீரழிவுக்கு காரணம்னு நான் சொல்வேன். லவ் ஸ்டோரிஸ்லாம் என்ன சொல்ல வருதுனு பார்த்தா, லவ் பண்ணாதவன்லாம் Heroவே இல்லை, அதனால எல்லோரும் லவ் பண்ணுங்கனு நம்ம கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு செய்தியை தான் லவ் ஸ்டோரிஸ் தொடர்ந்து மறைமுகமா சொல்லிகிட்டு இருக்கு…” அப்படினு சொன்னவுடனே, அந்த இந்திக்கார பொண்ணும் off ஆய்ட்டா. அப்பறம் கடைசியா யார்யார்லாம் next round செலக்ட் ஆகியிருக்காங்கனு பார்த்தா, என்னை தவிர என் கூட சண்டை போட்டவன்லாம் செலக்ட் ஆகிட்டான். நான் அந்த interviewerஐயே போய் நேர்ல பார்த்து, ஏன் என்னை செலக்ட் பண்ணலைனு கேட்டேன், அதுக்கு அவன் நீங்க teamworkல lag ஆகறீங்கனு சொல்லிட்டான். என்னால அதை ஜீரனிக்கவே முடியலை, அவ்வளவு திறமை காட்டியும் செலக்ட் ஆகாதது நினைச்சு நினைச்சு…. சரி அதை விடு….

சரி நம்மளுக்கு தான் இங்கிலீஷ் ஓரளவுக்கு வருதேன்னு நம்பி, HCL bpo கம்பெனிக்கு ஏறி இறங்கினேன், அங்க writtenலாம் ஒண்ணும் கிடையாது, straightஆ hr தான், அவன் எடுத்தவுடனே என் பேரை கூட கேட்காம ,Tell about your first day college experienceனு சொன்னான், நான் எண்ணி ஒரு 6 வார்த்தை தான் சொல்லியிருப்பேன். அவன் உடனே, See Mr.Anbu , as HCL is an international company, you need more fluency and flow in English, better luck next time னு சொல்லி அனுப்பிட்டான். அந்த பொன்னான வார்த்தைகளை அவன்கிட்ட இருந்து கேட்கறதுக்காக மட்டுமே ரிசப்ஷன்ல ரெண்டே கால் மணி நேரம் நின்னுகிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நான் எந்த bpo interview ஐயும் attend பண்ணலை.

இதெல்லாம் கூட பொறுத்துக்கலாம், ஆனா இந்த சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, பக்கத்து வீட்டுக்காரங்க அக்கப்போர் தான் தாங்க முடியாதது. பார்க்கறவன்லாம் எனக்கு mail அனுப்பு, உன் resume 5 copy எனக்கு கொடு, எனக்கு தெரிஞ்சவங்க TVSல இருக்காங்க, caterpillarல இருக்காங்க, சவுதி அரேபியாவுல இருக்காங்கனு ஒரே ராவடி. நானும் கழுதைங்க இந்தாடானு கொடுத்து தொலைச்சுருவேன்னு வை, எப்ப போன் பண்ணி சார், வேலை என்ன ஆச்சுனு கேட்டாலும், இந்தா 10 நாள்ல interview தேதி announce பண்ணிடுவாங்கப்பா, நீ போக வேண்டியது தான், இன்ட்ரிவியு அட்டெண்ட் பண்ண வேண்டியது தான், அன்னைக்கே offer letter கொடுத்துருவாங்க, வாங்கிட்டு வந்துட்டே இருக்கலாம். 5 மாசம் கழிச்சு போன் பண்ணாலும், அந்தாளு அதையே தான் சொல்லுவான். சரி, இனி இவன் வேலைக்காக மாட்டான்னு போன் பண்றதை நிறுத்திட்டோம்னு வை, உடனே திடீர்னு ஒரு 20 நாள் கழிச்சு போன் அடிச்சு, ஏம்பா, 2 நாள் முன்னாடி தான் interview announce பண்ணி ஆள் எடுத்தாங்களாம், நீ போன் பண்ணிட்டு தானே இருந்த, நடுவுல ஏன் போன் பண்றதை நிறுத்திட்ட, நீ போன் பண்ணியிருந்தன்னா எனக்கு ஞாபகம் வந்து அதை உனக்கு வாங்கி கொடுத்து இருப்பேன், அப்படி இப்பிடினு அரை மணி நேரத்துக்கு அறுவையை போட்டு தாளிச்சு எடுத்து, உனக்கு வேலை வேணும்னா நீ தான் அக்கறையா follow பண்ணிட்டு இருக்கனும், நான் work busyல மறக்க தான் செய்வேன்னு தலையில கொட்டாத குறையா சொல்லி முடிப்பான். இந்த இடத்துல work busyனு சொல்றான் பார்த்தியா, அதை கொஞ்சம் கவனிச்சா, அவனுக்கு வேலை இருக்காம், நமக்கு வேலை இல்லையாம், அதை தான் துரை குத்தி காட்டுது.

உங்க எல்லாருக்கும் ஒண்ணு தெரியுமா, நான் இது வரைக்கும் 82 பேருக்கு என் resumeஐ forward பண்ணி இருக்கேன். ஆனா இது வரைக்கும் 4 வேலைக்கு தான் போயிருக்கேன். அதுவும் எல்லாமே நானே interview attend பண்ணி போனது. எனக்கு மட்டும் வேலை கிடைச்சுடுச்சுனா அந்த 82 பேர்க்கும் போன் பண்ணி, எனக்கு உங்க தயவு இல்லாமலே வேலை கிடைச்சிடுச்சுனு சொல்லனும்னு ஆசை, ஆனா எங்க? வேலை கிடைச்சா தானே…

இந்த வியாபாரிங்கல்லாம் அரிசியை பதுக்கி கொஞ்ச நாள் கழிச்சு அதிக விலைக்கு விற்பாங்க, தெரியுமா , அந்த மாதிரி பண்றவங்க தான் இந்த consultancy காரங்க… அவனுங்க கிட்டயும் நான் மாறடிச்சு இருக்கேன்.

நியாயமா இவங்க வேலை என்னான்னா, கம்பெனியில வேலை செய்ய ஆளே கிடைக்காதப்போ, இவங்க ஆள் பிடிச்சு கொடுக்கறது தான், இவங்க வேலை, ஆனா இந்த பொறுக்கி பசங்க என்ன பண்றாங்கன்னா, எங்க வேலைக்குன்டான vacancy அதிகமா இருக்கோ, அந்த vacancyகளை பிடிச்சு வைச்சு வெளியாளுங்களுக்கு 2 லட்சம், 3 லட்சம்னு வித்துர்றது. கிட்டதட்ட தியேட்டர்ல ப்ளாக் டிக்கெட் விற்கறவங்களுக்கும் இவங்களுக்கும் ஒன்னும் அதிக வித்தியாசமில்லை.

இதுல சில கன்சல்டன்சி எப்படின்னா அவனுங்க ஒரு இடத்துல ஆபீஸ் போட்டு உட்கார்ந்து இருப்பாங்க, நாம போய் நான் இன்னது படிச்சு இருக்கேன், எங்க வேலை இருக்கு அப்படினு கேட்கனும். கேட்டோம்னா, அவன் ஒரு இடத்தை சொல்வான், நாம அங்க போய் அவன் கிட்ட இண்ட்ரிவ்யூ அட்டெண்ட் பண்ணி செலக்ட் ஆனோம்னா, அவன்கிட்ட நம்மளோட ஒரு மாச சம்பளத்தை கொடுத்துட்டு வேலைக்கு சேர்ந்துட வேண்டியது தான். வெறும் கை காட்டி விடறதுக்கு நாம அவங்களுக்கு 10000 ரூபாயை தண்டமா கொடுக்கணும். இது எவ்ளோவோ பரவாயில்லைனு தான் சொல்வேன்.

என்னை ஒருத்தன் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற செய்யாறு அப்படிங்கிற ஊர்ல LOTUS Industriesனு ஒரு ஷூ கம்பெனியில backdoorல வேலைக்கு சேர்த்தி விடறதாவும், அதுக்கு ஒரு லட்சம் ஆகும்னும் சொன்னான். நானும் தொலையுது சரின்னுட்டேன். அவன் ஆபீஸ் இருக்கறது க்ரோம்பேட்டைல, அங்க ஒரு நாள் 8.30 மணிக்கு வர சொன்னான். கொஞ்ச நேரம் receptionல உட்காருங்க நம்ம கார்லேயே போயிடலாம்னு சொன்னான். நானும் என்னோட வந்திருந்த இன்னோரு பையனும் காத்திருக்க ஆரம்பிச்சோம். மணி 10 ஆச்சு, 11 ஆச்சு, 12 ஆச்சு, 1 மணி ஆனதுக்கு அப்பறமும் எங்களை கூட்டிட்டு போகாம வெயிட்டிங்க்லேயே இருக்க வைச்சான். நடு நடுவுல என்ன சார் ஆச்சு, எப்ப சார் போவோம்னு கேட்கும் போதெல்லாம், இதோ போயிடலாம் பா, 5 நிமிஷம், ஒரு சின்ன வேலை இருக்குனு சொல்லி, அவன் computerயே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தான். நடு நடுவுல யார்கிட்டயோ போன்ல பேசிகிட்டு இருந்தான். கடைசியா 1 மணிக்கு, அந்த கம்பெனி HR லைன்ல கிடைக்கல, அதான் வெயிட் பண்ண வைக்க வேண்டியதாய் போயிடுச்சு, நீங்க இந்த address போய், இவரை பாருங்கனு, ஒரு address ஐ கைல கொடுத்தான். சார், நீங்க வரலையானு கேட்டா, வேலை இருக்குனு சொல்லிட்டான். மணி அப்பவே ஒன்றரை, நானும் அந்த இன்னோரு பையனும் சாப்பிட்டு முடிச்சு, காஞ்சிபுரம் பஸ் புடிச்சு போய், அங்க இருந்து செய்யாறு போனா மணி 05.30 ஆயிடுச்சு. போனா அவன் சொன்ன HR கிளம்பியே போயிட்டானாம். அவனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னா, அப்ப நாளைக்கு வந்திடுங்கனு கூலா சொல்லிட்டான். வீட்டுக்கு திரும்ப வர்ற 11.45 ஆயிடுச்சு, இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, அவன் அலட்சியத்தால நாங்க அலையறது எவ்ளோன்னு அவன் தெரிஞ்சிக்க கூட விரும்பறது இல்லை.

சரினு அடுத்த நாள் கிளம்பினோம். இந்த முறை எங்களை பணத்தோட வர சொன்னான், அதனாலயோ என்னமோ, அவன் அவனோட கார்லேயே எங்களை கூட்டிட்டு போனான். என் கூட வந்தவன் அவனோட அப்பாவை துணைக்கு கூட்டிட்டு வந்திருந்தான். அந்த கன்சல்டன்சிக்காரன் கம்பெனிக்கு ½ கிலோ மீட்ட்ர் முன்னாடியே காரை நிறுத்திட்டு, ஒரு ஆளை போன் போட்டு வர சொன்னான். அவனும் வந்தான். அவன் நல்லா வாட்ட சாட்டமா, கன்னங் கரேல்னு இருந்தான், வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையெல்லாம் போட்டு ஏதோ ஏரியா கவுன்சிலர் மாதிரி இருந்தான். பார்த்தா, அவன் உண்மையிலே ஏரியா கவுன்சிலர் தானாம். அவன் எங்களோட உள்ளே வந்து கார்லேயே உட்கார்ந்து, ஒரு துண்டு சீட்டு கையில எடுத்து வைச்சுகிட்டு, எங்க ரெண்டு பேர் பேரையும் கேட்டு அதில எழுதி வைச்சுகிட்டான். எழுதி முடிச்சதும், சரி பணத்தை கொடுங்க, நான் உள்ளே போய் offer letter வாங்கிட்டு வர்றேன்னு சொல்றான். எனக்கும் , என் கூட வந்த பையனுக்கும் திக்னு ஆயிடுச்சு. என்ன தான் backdoor interviewஆ இருந்தாலும் , இப்படி interview கூட வைக்காம யாரோ ஒரு ஆள் கிட்ட பணம் கொடுக்க முடியாதுனு மறுத்துட்டோம். அந்த கன்சல்டன்சிகாரனும், கவுன்சிலரும் எங்களை ரொம்ப நேரம் கன்வீன்ஸ் பண்ணாங்க. சரின்னு நாங்களும் ஒரு கட்டத்துல ஒத்துகிட்டு, பணத்தை கொடுத்தோம், அப்போதைக்கு வேலை கிடைச்சா போதும்னு தான் இருந்தது. அவன் போய்ட்டு, ஒரு மணி நேரம் கழிச்சு ஒருத்தரை கூட்டிட்டு வந்தான். கூட வந்தது HR னு அறிமுகப்படுத்தி வைச்சாங்க, அவரும் நல்லா பேசினாரு. அவரே அவர் கையால offer letterஅ கொடுத்தாரு, trainee ஆ appoint பண்ணி 8000 ரூபாய் சம்பளம்னு போட்டு இருந்தது.

ஒரு வாரத்துலேயே வேலைக்கு சேர்ந்துட்டோம், போனோம், வந்தோம், எல்லாத்தையும் சுத்தி பார்த்தோம், ஒரு மாசம் ஆயிடுச்சு. சம்பளமே கொடுக்காம வெச்சுருந்தாங்க, நாங்களும் எங்களை recruit பண்ண HR கிட்ட போய் சொன்னோம். ஒரு வாரம் எதுவுமே சொல்லாம இருந்தார். ஒரு வாரம் கழிச்சு, manager கூப்பிட்டு, எங்க கிட்ட போதுமான employees இருக்காங்க, அதுவுமில்லாம நீங்க அவ்ளோ skilled ஆவும் இல்லை, அதனால உங்களை terminate பண்றோம்னு கழட்டி விட்டுட்டாங்க. அப்ப எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்ததுங்கறதுல்லாம் இங்க தேவை இல்லாதது. விஷயம் என்னான்னா, அந்த ஒரு லட்சம் பணத்தை இன்னமும் என்னால திரும்ப வாங்க முடியலை, 3 பேரும் ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி கை காட்றாங்களே தவிர, எங்களுக்கு யாருமே உதவி செய்ய முன்னால வரலை…. கன்சல்டன்சிக்காரனை கேட்டா, Hr கிட்ட இருக்குன்னு சொல்றான், HRஅ கேட்டா கவுன்சிலர் கிட்ட திரும்ப கொடுத்துட்டேன்னு சொல்றான், கவுன்சிலரை கேட்டா எனக்கு எதுவுமே தெரியாதுங்கறான். சிந்துபாத் கதை கணக்கா நானும் 3 மாசமா அந்த ஒரு லட்சம் பணத்தை வாங்க ஓடிட்டு தான் இருக்கேன், ஒரு லட்சம் பணம் நம்ம கையை விட்டு போனது கூட பரவாயில்லை, நம்மளை ஒருத்தன் நல்லா ஏமாத்திட்டானேங்கறது தான் மனசுல நெருப்பா கொதிச்சுகிட்டு இருக்கு.

இதெல்லாம் கூட பரவாயில்லைனு சொல்ற மாதிரி இன்னொருத்தன் எங்களை ஏமாத்தினான் பாரு, என்னால அதை தான் தாங்க முடியலை……”



                                                (தொடரும்….)




1 comment:

  1. யோவ்! என்னது இது? பிரிச்சி மேஞ்சிட்டீறு! இதெல்லாம் உணமையில அனுபவம் இல்லாம எழுதவே முடியாது.இதோ ப்ளோல போனீங்கன்னா எங்கயோ போயிறலாம்.......வாழ்த்துக்கள்.

    ReplyDelete