Sunday 27 May 2012

சேப்பாக்கம் - ஒரு விசிட்


பெங்களூரில் நடந்த QUALIFIER 1 மேட்சிற்கு என் அப்பாவிடம் எதிர்பாராதவிதமாய் டிக்கெட் கிடைக்க, பெங்களூர் போய் கலக்கி விட்டு வந்தார். அவர் போய் வந்த அனுபவத்தையே 35 நிமிடம் விலாவரியாய் விளக்கினார். விளக்கத்தின் முடிவில் “சாமி, இப்போ என் மைண்ட் எப்படி தெரியுமா இருக்குது…. அப்டியே ப்ரீயா இருக்கு… ஒண்ணுமே இல்லை, வெறும் ஜீரோ, அவ்ளோ சந்தோஷமாய் இருக்கேன்” என்று சில்லாகித்து பேசி என் பொறாமையில் கரி அள்ளி போட்டார். அதுக்கெல்லாம் அமையணும், என்று என்னை நானே சாந்த படுத்தி கொண்டேன்.

QUALIFIER 2 மேட்ச் நடக்கவிருக்கும் நாள் அன்று தான் என் அப்பா இதையெல்லாம் அலைபேசியில் விளக்கினார். விளக்கி முடித்து அடுத்த ஐந்தாவது நிமிடம்  மறுபடியும் அழைத்தார். சென்னை மாநாகராட்சி இது நாள் வரை அனுமதித்திராத 3 புதிய கேலரிக்கள் இன்றைய மேட்சிற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, முடிந்தால் போய் டிக்கெட் கிடைக்குதா என்று பார் என்று செய்திதாளில் சற்று முன் பார்த்த செய்தியை பரிமாறினார்.. அப்போது மணி 9:30. அன்று எனக்கு 2nd shift தான். ஆபீஸ் போற வழியில் தான் சேப்பாக்கம், டிக்கெட் கிடைத்தால் பார்ப்போம், இல்லையேல் ஆபீஸ் கிளம்புவோம் என்று தீர்மானித்து கிளம்பினேன்.

சேப்பாக்கம் போய் இறங்கினால், அந்த இடமே கோலகலமாய் இருந்தது. 750 ரூபாய் கவுண்ட்டர், 500 ரூபாய் கவுண்ட்டர் என இரண்டு கவுண்ட்டர்கள்ளாக இருந்தது. 750 ரூ கவுண்ட்டரில் நிற்கலாம் என முடிவெடுத்து வரிசையில் போய் நின்றால் அது வெறு கால் கிலோ மீட்டர் நீளத்திற்கே இருந்தது. இது நான் எதிர்பார்த்ததை விட கம்மி வரிசை நீளம் தான். எப்படியும் டிக்கெட் கிடைத்துவிடும் என நம்பிக்கை பிறந்தது. மொத்தமாக 4 டிக்கெட் வாங்குவதாய் உத்தேசம், நான் அம்மா அப்பா அண்ணா. அம்மா ஏற்கனவே சென்னையில் தான் இருந்தார்கள், அவருடைய அலுவல் வேலையாய் வந்திருந்தார். அண்ணன் குடியிருப்பதே சென்னை ஆதம்பாக்கத்தில் தான். ஆனால் அப்பா தர்மபுரியில் இருந்தார். டிக்கெட் கிடைத்தால் சொல்லு நான் பஸ் ஏறி வரேன் என்று சொன்னார், அப்பா எப்படியும் டிக்கெட் வாங்கிடலாம், வாங்க பா, என்று சொல்லி பார்த்தேன்,, ம்ஹூம், அதெல்லாம் முடியாது, டிக்கெட் கையில் வாங்கிட்டு கூப்பிடு என்று பிடிவாதம் பிடித்தார், சரி அவர் சொல்வது நியாயம் தான் என்று, வரிசையில் நின்றேன். வரிசை ஆமைகுட்டி வேகத்திற்கு நகர்ந்தது. வரிசையில் நிற்கும் போது மணி 10.45. எனக்கு முன்னாடி ஒரு ரீபோக் வயசாளியும், பின்னாடி ஒரு சித்தப்பா மற்றும் குட்டி பையன் கூட்டணியும் நின்றார்கள்.



ஒரு 15 நிமிடம் தான் நின்றிருப்போம், எனக்கு முன்னால் நின்றிருந்த ரீபோக் வயசாளி, தம்பி எனக்கு B.P இருக்கு, நான் அப்படி போய் நிழல்ல நின்னுக்குறேன், க்யூ கிட்ட வந்ததக்கப்பறம் வந்து சேர்ந்துக்குட்டமா என கேட்டார், நான் தான் நல்லவனாயிற்றே, ஓ யெஸ், பேஷா வந்து அப்புறமாய் ஜாயின் பண்ணிக்கோங்க என்று சொன்னேன். இப்போது அவர் போனதால் எனக்கு முன்னாடி இரண்டு நண்பர்கள் கூட்டணி வாய்த்தது. அவர்கள் வழியாக தான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது, ஒருத்தருக்கு 2 டிக்கெட் தானாம், வேண்டுமென்றால் இன்றைய மேட்சிற்கு 2 டிக்கெட்டும், நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்திற்கு 2 டிக்கெட் என தனிதனியாய் வாங்கிகொள்ள முடியுமே தவிர, ஒரே ஆள் ஒரு மேட்சிற்கு இரண்டிற்கும் மேற்பட்ட டிக்கேட் வாங்க முடியாதென்று சொன்னார்கள். எனக்கு 4 டிக்கெட் அந்த நேரத்தில் வேண்டியதாய் இருந்தது, என்ன செய்வதென்று கையை பிசைந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு முன்பு நின்றிருந்த இரு நண்பர்களின் நண்பன் இன்னொருவன் வரிசைக்கு வெளியில் நின்று கொண்டு இவர்களுக்காக காத்திருந்தான், பாஸ் சும்மா வெளிய நிக்கறத்துக்கு, உள்ள வந்து எனக்கு 2 டிக்கெட்டாவது எடுத்து தாங்களேன், என ஜாலியாக கேட்க அவரும் ஓ.கே பாஸ் என களத்தில் குதித்தார். முழுதாக 5 மணி நேரம் ஆனது டிக்கெட் கவுண்ட்டர் கிட்டே நெருங்க, இப்போ என் அப்பாவிற்கு போன் செய்து வர சொன்னால், இனிமே எங்க டா வர்றது, நீங்க மட்டும் போங்க என காலை வாரி விட்டார். என் அண்ணணுக்கு போன் அடித்தால், எனக்கு வாங்காத, நான் இன்னைக்கு ஊருக்கு போறேன், நீங்க மட்டும் போய்ட்டு வாங்க என அவனும் காலை வாரி விட்டான். இப்போது எனக்காக அவரும் 5 மணி நேரம் பக்கம் வரிசையில் நின்றாகி விட்டது, அவர் உழைப்பை நான் வீண் செய்ய விரும்பவில்லை. மொத்தமாக 4 செமிபைனல் டிக்கெட் வாங்குவதற்கு பதிலாக 2 செமிபைனல், 2 பைனல் என எடுத்து கொள்ளலாம் என சமயோகிதமாய் யோசித்து, அவரை செமிபைனல் டிக்கெட் வாங்க வைத்து, நான் பைனல் டிக்கெட் வாங்கினேன். செமிபைனல் அம்மாவோடு, பைனல் அப்பாவோடு….

5 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக டிக்கெட் கிடைத்தது. நிழலுக்கு ஒதுங்கிய ரீபோக் வயசாளியும் சரியான நேரத்தில் எங்களுடன் இணைந்து அவரும் டிக்கெட் வாங்கி கொண்டார், நன்றியை கூட ரொம்ப நெகிழ்ச்சியாய் சொன்னார்.


அம்மாவை சேப்பாக்கம் வர சொல்லி, நானும் அம்மாவும் சேப்பாக்கத்திலே சந்தித்து மைதானத்திற்கு கிளம்பினோம். எங்களின் நுழைவு கேட் 14-ல், பெல்ஸ் ரோட்டில் இருக்கும் நுழைவு வாயில் அது. அங்கே செல்ல மைதானத்தையே அரை வட்டம் அடித்து கொண்டு போனோம். போகும் வழியில் ஆசையாக ஒரு பீப்பி வாங்கினோம், 10 ரூபாய் தான். ஒவ்வொரு 4 மற்றும் 6 ற்கும் ஜாலியாக ஊதி ஊதி கொண்டாடலாம் என சந்தோஷத்தில் ஊதி கொண்டே நடந்து சென்றோம். வழியில் ஒரு CSK கொடி ஒன்றை ஒரு பையன் கையின் விற்று கொண்டு வந்தான். 50 ரூபாய் சொன்னான். 30 ரூபாய் விலை என பேரம் பேசி வாங்கி கொண்டு நடந்தோம். 14-ம் கேட்டிற்கு போனால், அனுமார் வால் போல மிக நீண்ட வரிசையையாய் மக்கள் நின்று கொண்டிருந்தினர். அதனால் பெல்ஸ் ரோட்டின் போக்குவரத்தும்  கணிசமாக பாதிக்கப்பட்டது. அதனால் தான் என்னமோ, இந்த மூன்று கேலரிக்களையும் சென்னை மாநகராட்சி தடை பண்ணியதோ என்னமோ. ஆனால் என்ன இருந்தாலும் இது ஒரு அரை மணி நேர சிக்கல் தான். அதற்கெல்லாம் போய் 18000 கொள்ளளவு கேலரியை முடக்குவதா… என்று வரிசையில் நின்று என் அம்மாவிடம் நியாயம் பேசி கொண்டிருக்கும் போதே 15-ம் கேட்டையும் எங்களுக்கான நுழைவு வாயிலாய் அறிவித்தனார். அது எங்களுக்கு வெகு பக்கத்தில் தான் இருந்தது. உடனடியாக உள்ளே நுழைந்து விட்டோம், நுழையும் போதே என் அம்மா கையில் இருந்த பீப்பியை செக்யூரிட்டி புடிங்கி கொண்டான். இன்னொரு செக்யூரிட்டி என் கையில் இருந்த கொடியை புடிங்கி அதில் இருந்த குச்சியை உருவி வெறு துணியை மட்டும் கொடுத்தான். அதை வைத்து எப்படி கொடி அசைப்பது, சும்மா கையில் பிடித்து கொண்டு சுற்ற தான் முடியும். என்ன பண்ண முடியும் என நொந்து கொண்டு, மேற்கொண்டு உள்ளே நுழைந்தோம். இன்னொரு பெண் செக்யூரிட்டி, என் அம்மாவை சோதித்து அவர்களின் கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலையும் எடுத்து கொண்டார்கள். மேற்கொண்டு நகர்ந்தோம், ஒரு இடத்தில் ஒருவர் எங்கள் கையில் இருந்த டிக்கெட்டை வாங்கி அதில் இருக்கும் பார் கோட்டை ஸ்கேன் செய்து அது கொடுக்கும் அனுமதியின் பேரில் ஆட்களை உள்ளே அனுப்பினார். அவ்வளவு தான் எல்லா செக்கிங்கும் அத்தோடு முடிந்தது.

எங்களுடையது G Upper Tier AA50, AA51. அது மேலே கடைசியாக இருந்தது. கடைசியாக இருந்தாலும் மொத்த ஸ்டேடியமும் பார்வையில் இருந்தது. மைதானத்தை பார்க்கவே பிரம்மாண்டமாய் இருந்தது. அது வெறு தரையாகவே தெரியவில்லை. பச்சை பசேலென பச்சை சொர்க்கமாய் காட்சி அளித்தது. அப்போது மணி 7.30 தான். அந்த நேரத்தில் பிட்சில் ரோலரை உருட்டி ஒரு குழு சமம் செய்து கொண்டிருந்தது. இன்னொரு குழு ஒரு நீள கயிறு கொண்டு குப்பை எல்லாம் வாரி கொண்டு இருந்தது. மற்றொரு பக்கம் நம் கேப்டன்கள் டாஸ் போட எத்தனித்து கொண்டு இருந்தார்கள். சென்னை டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுப்பார்கள் என்று மனதுக்குள் ஓர் எதிர்பார்ப்பு வைத்து கொண்டிருந்தேன். ஆனால் டெல்லி தான் டாஸ் ஜெயித்தது. ஆனால் என் எதிர்பார்ப்பின் அதிர்ஷ்டவசமாக அவர்கள் தேர்ந்தெடுத்தது பந்து வீச்சை.




மற்றொரு பக்கம் வீரர்கள் பயிற்சியில் இருந்தனர். ஒற்றை ஸ்டெம்ப் இருக்கும் திசை நோக்கி ஒருவர் பந்து வீசுவதும், அதை இன்னொருவர் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுப்பதும், இன்னொரு பக்கம் ஒருவர் ஒரு சிறிய பேட்டை வைத்து கொண்டு பந்தை மேலே எழும்ப செய்ய அதை கேட்ச் செய்ய இன்னொரு குழு பயிற்சி எடுத்து கொண்டு இருந்தது. சிறு சிறு விஷயங்களை பார்த்த போதும் அனிச்சையாய் பிரமிப்படைந்தேன். எங்கே திரும்பினாலும் கண்ணிற்கு இனிமையான சித்திரங்களும், கட்டடங்களும், ஒளி விளக்கும் அலங்கரித்தன. நான் பார்க்கும் அனுபவிக்கும் Facebook மூலம் நண்பர்களுக்கு நொடிக்கு நொடி பகிரலாம் என நினைத்து இருந்தேன். ஆனால் மேட்ச் ஆரம்பிப்பதற்கு முன்னரே என் போன், Low battery  காட்டி தொலைத்து விட்டது. அதனால் அந்த கடமையை செவ்வென செய்ய இயலாமல் போயிற்று. அதனால் என் facebook நண்பர்கள் என் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பார்கள் என இந்த இடத்தில் சொல்லி தெரிய வேண்டியதில்லை.





சரியாக 8 மணிக்கு 2 அம்ப்யர்களும் முதலில் நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து பொறி பறக்கும் புஸ்வான கூட்டத்துக்கு இடையில் Daredevils அணியினர் நுழைந்தனர். அவர்களை தொடர்ந்து மற்றுமொரு பொறி பறக்கும் புஸ்வான கூட்டத்திற்கு இடையில் ஹஸ்ஸியும், விஜய்யும் ஓடி வந்தனர். அவர்கள் உள்ளே நுழையும் போதே இவனுங்க எப்ப அவுட் ஆகி போறது, தோனி எப்ப வந்து ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது என எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். எல்லோரும் பொசிஷனில் நின்று கொண்டு இருந்தனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிச்சுடுவாங்க என சிறிதாய் ஓர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் போதே, என்னை சுற்றியுள்ள ஜனங்கள் அனைவரும் எழுந்து நின்று கத்தினார்கள். என்ன ஏது என விசாரித்தால், விஜய் முதல் பாலிலே 4 ரன்கள் அடித்து விட்டாராம். அடப்பாவிங்களா, மொத பாலை போட ஆரம்பிச்சிட்டிங்களா, என அடுத்தடுத்த பாலை சின்சியராக கவனிக்க ஆரம்பித்தேன்.


ஒரு ஓவர் முடிந்தவுடன் விக்கெட் கீப்பரும், அம்ப்யர்களும், பீல்ட் மேன்களும் இடம் மாறுவதையெல்லாம் அன்று தான் நான் முதன்முறையாக பார்த்தேன். டிவி,யில் இந்த நேரத்தில் விளம்பரம் போட்டு விடுவதால் இதை பார்க்கும் வாய்ப்பு என்றும் எனக்கு கிடைத்ததில்லை. இப்படி இடம் மாறும் விஷயமே என் அம்மாவிற்கு அன்று தான் தெரியும் என ஆச்சர்ய பட்டார்கள். மேட்சை பற்றிய முழு விவரமெல்லாம் நம்மால் அங்கிருந்த படி தெரிந்து கொள்ள முடியாது. ஸ்கோர், பேட்ஸ்மேன் ஸ்கோர், பௌலர் விவரம் ஆகியன மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. மேட்சை நேரில் பார்க்கும் போது இன்னொரு பிரச்சனை என்னவென்றால் பந்து போடுவது, பந்தை அடிப்பது, பந்தை பீல்ட் மேன் பிடிப்பது என எல்லாமும் விசுக் விசுக்கென்று நடக்கும். பந்தையே கூர்ந்து கவனித்து கொண்டிந்தால் மட்டும் மேட்சை அனுபவிக்க முடியும். இல்லையேல் எல்லோரும் கத்துவதை மட்டுமே, பந்து பவுண்டரி தொட்டிருக்கிறது என தெரிய வரும். கொஞ்ச நேரத்தில் ஹஸ்ஸீயும் ரெய்னாவும் அவுட்டாக, தோனி ஆரவாரமான வரவேற்பில் மைதானம் உள்ளே வந்தார். எல்லோரையும் ரொம்ப ஏமாற்றாமல், அடித்தது 10 பால்கள் என்றாலும் வெறித்தனமான ஷாட்டுகளை அடித்து கூட்டத்தை உற்சாக படுத்தினார்.

5, 6 ஓவர்கள் போன பிறகு, மேட்சில் என்னமோ குறையதே என மண்டையை பிய்த்து கொண்டு, கடைசியாக பார்த்தால் அது கமெண்ட்ரி. ஓவர் இல்லாத டைமில் இந்தி பாட்டுகளையும் தமிழ் பாட்டுகளையும் மாறி மாறி ஒலிக்க விட்டு ஜனங்களை எழுந்து ஆட வைக்க எல்லா விதமான முயற்சிகளையும் கையாளுகின்றனர். ஓவர் ஆரம்பித்து விட்டால், மொத்த பாட்டும் அணைக்க படுகிறது, கூட்டமும் அமைதியாக ஆட்டத்தை பார்க்க உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு பால் முடியும் போதும் அங்கிருக்கும் டி.வியில் உடனடியாக ரீப்ளே காட்டபடுகிறது.அடுத்த பால் போட ஆரம்பிக்கும் வரை ரீப்ளே ஓடி கொண்டே இருக்கும், சரியாக போட ஆரம்பிப்பதற்கு 10 நொடிகள் முன்பு ரீப்ளே கட் ஆகி karbonn, volkswagon, Vodafone, citi bank, hero என திரையில் ஏதாவது ஒன்று தோன்றும். அப்படி தோன்ற செய்வது, பவுலிங் போடறாங்க பார் என சைகை செய்யும் யுக்தியாகும். எங்கெங்கோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலும், அந்த டி.வி.யின் மேல் ஒரு கண் வைத்து கொண்டால் எல்லா பாலையும் தவறாமல் பார்க்கலாம்.

ஒவ்வொரு சிக்ஸிற்கும், போரிற்கும் கையிலிருந்த CSK கொடியினை ஆட்டி, நானும் ஆடி உற்சாகமடைந்தேன். இந்த விதத்தில் மட்டும் என் அம்மா இதற்கு நல்ல கம்பெனியாக அமையவில்லை. மற்றபடி நான் கவனிக்க மறந்த நிறைய விஷயங்களை காட்டி, பழைய கிரிக்கெட் ப்ளாஷ்பேக்குகளையெல்லாம் பேசி என நல்ல பேச்சு துணையாக இருந்தார். என் அம்மா எந்த மேட்ச்சையும் டி.வி.யில் கூட இது நாள் வரை சேர்ந்தாப்படி பார்த்ததில்லையாம், அந்த வகையில் இது தான் என் அம்மா பார்க்கும் முழு மேட்ச்சாம். நிறைய போர்களும், சிக்ஸ்களும், கேட்ச்களும் எங்கள் கேலரியை நோக்கி வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.


Strategic time out அறிவித்து விட்டால், மைதானம் முழுக்க ஆட்கள் திரண்டு விடுகிறார்கள். பிட்ச் சமப்படுத்துதல், ஸ்டெம்ப் சரி செய்தல், ப்ளேயர்களுக்கு குளிர்பானம் கொடுக்க என வசவசவென கூட்டம் கூடி விடுகிறது. அந்த நேரத்தில் போடும் பாட்டுகள் அனைத்தும் கெட்ட ஆட்டம் ரகம் தான். கலாசலா பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து திரும்ப திரும்ப ஒலிக்க செய்தார்கள் என்பதனை இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன். நாக்க மூக்கா பாட்டை எதிர்பார்த்தேன், ஆனால் அது கடைசி வரை ஒலிபரப்பவில்லை. நேரம் குறைய குறைய மைதானத்தில் இருந்த ஆட்களெல்லாம் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர். கடைசியாக 10 விநாடி கவுண்ட் டவுன் வரும் போது மைதானத்தில் ப்ளேயர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடைசி 10 விநாடிகளை ஒட்டு மொத்த கூட்டமும் சேர்ந்து கவுண்ட் டவுன் செய்தோம். அது ஒரு உற்சாக ஆராவரமாக இருந்தது.

மைதானம் முழுக்க செல்ல நாய் குட்டி போல் நினைத்த இடத்திற்கெல்லாம் ரவுண்டு அடித்து கொண்டிருந்த Spider web camera ஆச்சர்ய படுத்தாத கண்களே இல்லை. அது எங்கே போனாலும் அதை நோக்கி கூட்டம் கையசைத்து உற்சாகமாக கத்தியது. ஒவ்வொரு முறை பவுலர் பந்து போட ஓடி வரும் போதும், பவுலரின் கூடவே அதுவும் நகர்ந்து வந்து பவுலரின் பக்க பிம்பத்தை பதிவு செய்தது. பந்து போட்டு முடித்தவுடன், கேமரா மேல் பந்து பட்டு விடாமல் இருக்க கேமரா ‘சொய்ங்ங்ங்’ என்று மேலே பறந்து விடும். 


கூட்டத்தில் தோனிக்கும், ப்ரேவோக்கும் மட்டும் தான் வெகுவான உற்சாகம் தரப்பட்டன. இவர்கள் இருவரும் ஸ்ட்ரைக்கிங்கில் இருக்கும் போது, கூட்டம் தோனி தோனி தோனி என்று கத்துவது செம கிக்காக இருந்தது. ப்ரேவோக்கு பேட்டிங் பிடிக்கும் போது மட்டுமல்லாமல் பந்து போடும் போதும் இந்த உற்சாகம் தரப்பட்டது.

எப்போதாவது கூட்டம் டல்லடித்து சொங்கி போய் உட்காரும் போது IPL HORNஐ ஒலிக்க செய்கின்றனர். உடனே கூட்டம் உற்சாகமாகி, “ஹேய்…” என ஆர்ப்பரிக்கிறது.

டி.வி.யில் பார்ப்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது பெரும் பின்னடைவாகவும் பிரச்சனையாகவும் இருப்பது என்னவென்றால் யார் ஸ்ட்ரைக்கராக நிற்கின்றார், யார் எங்கே பீல்டிங் நிற்கிறான் என்பதே கடைசி வரை குழப்பத்திலே போகும். கடைசி வரை அனுமானத்தை விடாமல் பிடித்து தொங்கி கொண்டிருப்போம்.

என்ன தான் கடற்கரை பக்கத்தில் இருந்தாலும், புழுக்கம் தாங்க முடியவில்லை.

முரளி விஜய் 100 ரன் அடித்த போது ஒட்டு மொத்த ஸ்டேடியமும் எழுந்து நின்று கை தட்டி சந்தோஷம் கொண்டது. 222 ரன் ஏறினதே தெரியவில்லை. எல்லாம் வேகமாக நடந்து முடிந்தாற்போல் இருந்தது.

ஒரு இன்னிங்ஸ் முடிந்த பின் தியேட்டரில் இடைவேளை விட்டாற்போல் ஜனம் Food stallஐ படை எடுத்தது. விலையெல்லாம் அதிகமோ அதிகம். வாழைப்பழம் 10 ரூபாய், காபி 40 ரூபாய் ஆகியவனவற்றது சாம்பிள் விலைகள்.

Cheer girls-ஐ பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் பெரிதாய் ஸ்டேடியத்தில் கவனிக்கப்படுவதில்லை. 4 அடிக்கும் போதோ 6 அடிக்கும் போதோ மட்டும் தான் அவர்கள் வந்து பெர்பாமென்ஸ் காட்டுகிறார்கள். அந்த நேரத்தில் கூட்டம் ஒன்று ரீப்ளே பார்க்கிறது, இல்லையெனில் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடுகிறது இதனால் சீயர் கேர்ள்ஸ் முக்கியத்துவம் காணாமல் போகிறது. இன்னிங்ஸ் பிரேக்கில் மட்டும் தான் இவர்களுக்கு கவனிக்கப்படுத்த வாய்ப்பு, அந்த நேரத்திலும் கூட்டம் food stall-ற்கு போய் விடுகிறது. உண்மையில் Cheer girlsஐ பார்த்து பரிதாபம் தான் பட்டேன்.

அந்த ஒரு இன்னிங்ஸ் முடிவிலே நான் நிறைவு அடைந்து விட்டேன். இனி மாட்ச் தோற்றாலும் கவலையில்லை என்ற அளவிற்கு மனநிறைவு ஆகிவிட்டது. டெல்லி ஜெயித்தாலும் அது சேவாக்கின் தாண்டவத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என உள்ளூர ஓர் ஆசை இருந்தது.

இரண்டாவது இன்னிங்க்ஸில் சேவாக் தொடக்க ஆட்டக்காரராய் இறங்காததே மிகவும் வருத்தமளித்தது, 3-வதாக இறங்கி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது என்னை மிகவும் ஏமாற்றிவிட்டது. பிறகு 10 விக்கெட்களையும் வீழ்த்தியதையும் ஆசை தீர கொண்டாடி மகிழ்ந்தோம். பின்பு ஆசை தீர ஸ்டேடியத்தை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்து வெளியே வந்தோம்.







வெளியே வந்து சாப்பிட்டு, என் அம்மாவை கோயம்பேட்டிற்கு ஷேர் ஆட்டோ ஏற்றி அனுப்பி விட்டு வேளச்சேரி செல்வதற்கு ரயில் நிலையம் சென்றால் எல்லா ரயிலும் போய் விட்டிருந்தது. பஸ்ஸும் எதுவும் கிடைக்கவில்லை. ஆட்டோக்காரன் 300 ரூபாய் டிமாண்டினான். அதனால் ஆட்டோ வேண்டாமென்று முடிவெடுத்து நான் ஹீரோயிட்டிக்காக நடந்தே வேளச்சேரி செல்லலாம் என நடையை ஆரம்பித்தேன். கண்ணகி சிலை வரை நடந்து வருவதற்குள்ளே களைப்படைந்து விட்டேன். படுக்க வேண்டும் போல இருந்தது. இருக்கவே இருக்கு மெரினா பீச் என்று ஒரு பளபள தரையில் CSK கொடியை நீட்டி படுத்தேன். அங்கிருந்த பெரிய லேம்ப் போஸ்ட் கண்கள் கூச செய்தது. அப்போதைக்கு என்னிடம் 1045 ரூபாய் பணமும், 8000 மதிப்புள்ள செல் போனும் இருப்பதால் வெளிச்சத்தில் படுப்பது தான் புத்திசாலித்தனம் என்று அங்கே புரண்டு புரண்டு படுத்தேன். தூக்கமே வரவில்லை. நல்ல கடற்கரை காற்று இருந்தும் தூக்கமே வரவில்லை, வெற்றியின் உற்சாகம் இன்னமும் குறையாமல் இருந்தது. 45 நிமிடம் கடந்திருக்கும் ஆழ்ந்த ஓய்வினை முழு விழிப்பில் எடுத்து கொண்டிருந்தேன், கொஞ்ச நேரத்தில் தலைக்கு பக்கத்தில் வண்டு ஒன்று தலையை சொறிந்தது, அதை விரட்டி விட்டு திரும்பி பார்த்தால் என்னை சுற்றியும் நான் பெயர் அறியாத பல பூச்சிகள், என்ன பண்ண முடியும் அப்படியே தூங்க வேண்டியது தான் என்று ஓய்விற்கு திரும்பினேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு போலீஸ்காரர் வந்து, இங்கெல்லாம் தூங்க கூடாது, என சொல்லி என்னை யார் என்னவென்று விசாரித்து, இங்கெல்லாம் படுக்காதீங்க ரொம்ப ஆபத்தான இடம் இது, யார் வேண்டும்னாலும் கத்தியை காட்டி பணம் பறிச்சிட்டு போய்டுவாங்க,  போலீஸ் ஸ்டேசன் வந்து அட்ரஸ் கொடுத்துட்டு அங்கேயே படுத்துகிட்டு காலைல போய்க்கோங்க என்று சொன்னார், இந்த டீல் நல்லா இருக்கே என்று நானும் அவருடனே கிளம்பினேன். என்னுடன் சேர்த்து 7 பேரை ஜீப்பில் ஏற்றினார். எனக்கு ஜன்னல் ஸீட் கிடைத்தது. ஜாம் பஜார் போலீஸ் ஸ்டேசனிற்கு வண்டியை விட்டார். எங்க எல்லாரையும் இறக்கி பேர், விலாசம் எல்லாத்தையும் வாங்கி கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஹாலிலே படுத்து தூங்க சொன்னார். என்னை தவிர எல்லோரும் யார் முதலில் படுப்பது என சற்று தயங்கிய படி இருக்க, நான் தான் முதலில் நீட்டி படுத்தேன். நல்ல பேன் காற்றாய் இருந்தது. CSK கொடியை தலைக்கு வைத்து கொண்டு தூங்க ஆரம்பித்தேன். அந்த நிமிடம் இந்திய கொடியை வாங்காமல் CSK கொடியை வாங்கியதற்கு சந்தோஷம் கொண்டேன். சீக்கரமாகவே தூங்கிவிட்டேன். காலை 4.30 மணிக்கு முழிப்பு வந்தது.  என்னை கூட்டி வந்தவர் சின்சியராக எதையோ எழுதி கொண்டு இருந்தார். அவரிடம் சொல்லி கொண்டு ஸ்டேசனை விட்டு புறப்பட்டு வெளியே வந்து, வேளச்சேரி ரயில் பிடித்து இருப்பிடம் வந்து சேர்ந்தேன்.

என்னை அத்தனை அக்கறையாக பார்த்து கொண்ட அந்த காவலருக்கு இந்த கட்டுரையையும், என் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

2 comments:

  1. என்னுடன் சேர்த்து 7 பேரை ஜீப்பில் ஏற்றினார். எனக்கு ஜன்னல் ஸீட் கிடைத்தது.// இந்த வரி படிக்கிற வரைக்கும் செம ஸ்பீட்! இதுக்கப்புறம் நான் எதிர்பார்த்தது ஒரு நல்ல சிறுகதைக்கான எண்டிங்! அது அப்படியே இருந்தது! குட்! கீப் இட் அப்

    ReplyDelete