Sunday, 22 April 2012

Autofiction

ன்னவோ தெரியவில்லை, திடீரென்று சுகுமாருக்கு “கலாசலா கலசலா” பாட்டு மிகவும் பிடித்து விட்டது. அதிலும் L.R.ஈஸ்வரி வடக்க கேட்டு பாரு என்னை பத்தி சொல்லுவான், ஜர்தா பீடா போல என் பேரைத்தான் மெல்லுவான் என்று ஆரம்பிக்கும் பாணியே சுகுமாருக்கு தனி போதையாய் இருக்கிறது. இந்த பாட்டு ஒன்றும் புதிதாய் வந்த பாடல் அல்ல, 6 மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டது, அப்போதே ராஜேந்திரன் இந்த பாடல் நல்லா இருப்பதாகவும், இதை கேட்டு பார்க்க சொல்லி அவனுக்கு பரிந்துரைத்தான். என்னமோ இப்போது புதிதாக வரும் குத்து பாட்டில் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லாததால் அப்போதைக்கு அந்த பாட்டு அவனை ஈர்க்கவில்லை, ஆனால் சாரு நிவேதிதாவின் ஓர் வாசகர் வட்ட சந்திப்பில் Camp fire போது இந்த பாடல் ஒலிக்கப்பட, திடீரென்று இந்த பாட்டு அவனுக்கு பிடித்த போனது. அன்றிலிருந்து அந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டான், சமயங்களில் ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேல் கேட்கும் அளவிற்கு ஆனான். ராஜியிடம் சுகுமார் இதை பகிர்ந்த போது அவன் இவனை மேலும் கீழும் பார்த்தான், “இதை தான்டா நான் 6 மாசத்துக்கு முன்னாடியே சொன்னேன்” என்று டெரர் ஆனான் ராஜி.
எப்போதும் இதே கதை தான், முன்பு ஒரு முறை கைலாஷ் கேரின் “Teri deewani” பாடலை ராஜி சுகுமாருக்கு பரிந்துரைத்தான். அப்போதைக்கு ரசிக்காமல், அதையும் 6 மாதம் கழித்து தான் நன்றாக இருக்கிறது எனவும், அந்த பாடலில் இருக்கும்  அற்புதமான உயிர், உணர்ச்சிபூர்வமாய் இருக்கிறது என்று கொண்டாடினான். அப்பவும் அதே டெரர் லுக் தான். இந்த டெரர் லுக்குகள் ஓர் தொடர்கதையாகவே தொடர்கிறது சுகுமாருக்கு…

எந்த காலக்கட்டத்திலும் சுகுமாருக்கு நட்பு பற்றி ஓர் உயர்ந்த அபிப்ராயம் இருப்பதில்லை. அதனாலோ என்னமோ சுகுமாருக்கு அதிக நண்பர்கள் இருப்பதில்லை. நண்பர்கள் தினத்தையும் அவன் பெரிதாய் மதிப்பதில்லை. அந்த தினத்தன்று அவனுக்கு யார்யாரோ நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சொல்வதை அவனால் பொறுத்து கொள்ளவே முடிவதில்லை. எதையாவது எடுத்து அடிக்கலாம் போல் மனதுக்குள் புழுங்கி கொள்வான். நட்பு என்பதே தனிமையை விரட்டவும், உதவிகளை எதிர்பார்த்தும் மலர்வது என்று புரிந்து வைத்துள்ளவன் சுகுமார். அதிலும் தனிமை விரும்பியான சுகுமாருக்கு நட்பு ஒன்றும் பெரிதாய் தேவைப் படுவதில்லை. ஆனாலும், சுகுமாரை சுற்றி ஓர் பெரிய வட்டமே இருப்பது சுகுமாருக்கே சில சமயம் ஆச்சர்யமாய் தான் இருக்கும். இதில் 4 நபர்கள் சுகுமாருக்கு 7 வருடங்களாகவே தொடர்ந்து நெருக்கமாகவே இருக்கின்றனர், இதற்காக சுகுமார் பெரிதாய் என்றும் மெனக்கெட்டதில்லை, சமயங்களில் சண்டை வரும் போது செமத்தியாக மற்றவர்களை கடுப்பேற்றியிருக்கிறான். இருந்தும் இவ்வளவு பிணைப்பான நண்பர்கள் நமக்கு எப்படி சாத்தியம் என்று சுகுமார் சில சமயம் யோசிப்பது உண்டு, அப்படி யோசிக்கையில் அவன் எல்லா மனிதர்களிடமும் அன்பு பாராட்டுவதும், ஓர் சிறிய பைத்தியக்காரன் போல் நடந்து கொள்வதும், அற்புத ரசனை திறன் கொண்டவனாக இருப்பதும், சண்டை வந்தால் இத்தனை நாள் காட்டி வந்த அன்பை திடீரென நிறுத்தி அவர்களை நிலைகுலைய செய்வதும், வெளிப்படையாய் இருப்பதும் தான் இத்தனை நாளாக இவர்களை பிணைத்து வைத்துள்ளது என்று நினைத்துக் கொள்வான். நானும் கூட நல்லவன் தான் போல என்று சுகுமார் பல முறை சந்தோஷ பட்டு கொள்வான்.
சுகுமாரை சுயநலவாதி என்று சொன்னவர்களும் உண்டு. சுகுமார் அப்போது அவன் ஓசூரில் என்ஜினியரிங் படித்து கொண்டிருந்த காலம் அது, அப்போது அவனின் ரூம் மேட் ஜோஸப், ஆர்குட்டில் ’பாவனா’ என்ற போலியான ஓர் பெண் பெயர் கொண்ட ID  ஒன்று வைத்து அவனுக்கு தெரிந்த நண்பர்களை எல்லாம் வளைத்து போட்டு, அவர்களின் பெண் சகவாசம் எப்பேற்பட்டது என்று CID வேலை பார்த்து கொண்டு பொழுது போக்கி கொண்டிருந்தான். சில சமயம் சுகுமாரும் இதில் ஐக்கியமாவது உண்டு. எதிர் முனையில் எவனாவது சிக்கி விட்டால் அவன் முடிந்தான், அவனிடம் இருந்து I love you வரும் வரை விடமாட்டான். இந்த விளையாட்டில் பல சுவாரஸ்யங்கள் இருந்தாலும் சில சிக்கல்களும் இருக்கிறது. When shall we meet, I want to meet you, shall I come to your hometown, give treat to your birthday  என்று சந்திப்புகளுக்குகாக ஏற்பாடு செய்து தாலி அறுப்பவர்கள் தான் பெரிய பிரச்சனை, Hey, are you joking, I’m in thirussur என்று சொன்னாலும், I’m ready to come, wherever u r என்று  சுகுமாரை கதறடிப்பார்கள், இவனுங்களை எப்படி டா சமாளிக்கறது என்று  யோசிக்கும் கனத்திற்குள்ளேயே பின்னாடியே சில பல பஞ்ச் டயலாக்குகளை வேறு அனுப்பி சாகடிப்பார்கள் , if I decide onething, I don’t even to listen to my  words…. ’போக்கிரி’ பஞ்ச் டயலாக்காம்… திரிச்சூர் பெண் போக்கிரி படத்தை பார்த்திருக்கவா போகிறது? என்று நினைப்பில் அடிக்கும் ரொமன்ஸ்களுக்கெல்லாம் சுகுமாரும் அவன் நண்பர்களும் நடுஇரவில் கூட விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

இது போல் போலி பெண் ID வைப்பதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் அவனுங்களும் தூங்க போக மாட்டார்கள், இவர்களையும் தூங்க விட மாட்டார்கள், ஒவ்வொருத்தனையும் தூங்க வைப்பதுற்குள் விடிந்து விடும். இன்னொரு சுகுமாரின் சொந்த பிரச்சனை என்னவென்றால் அடுத்த முறை சுகுமார் ஓர் புதிய பெண்ணிடம் சாட் செய்யும் போது “இது உண்மையில் பெண் தானா?” என்று அவனுக்கு நெருடிக் கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கையில், ஒரு முறை சுகுமாரின் சக வகுப்பு மாணவன் ஷ்யாம் சிக்கினான், அவனிடமும் சுகுமாரின் நண்பர்கள் வட்டம் அவர்களின் கை வரிசையை காட்டியது, அவனும் விழுந்து விட்டான். ஷ்யாமுக்கு பாவனா என்பவள் தெரியாத பெண் என்பதால், ஷ்யாம் கடலை போடுகிறேன் என்று சுகுமார் வட்டத்தை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான், ஷ்யாமுக்கு தெரிந்த நபர்கள் யார் பெயரையாவது சொல்லி விட்டால் ஷ்யாம் அடங்கிவிடுவான் என்று Hey I’m already in love with ur classmate Sugumaar, pls don’t disturb me further, if u disturb further I’m gonna complain him என்று சொல்லவே அவன் நச்சரிப்பு அடங்கி விட்டது ஒரு பக்கம் ஆறுதல் அளித்தாலும், இன்னொரு பக்கம் சுகுமாரை வேறு மாதிரி மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டான். சுகுமாரை பற்றி சுகுமாரிடமே தப்பாக சொல்ல ஆரம்பித்துவிட்டான், அதாவது பாவனாவை சுகுமாரிடம் இருந்து காப்பாற்ற ஏதேதோ சொன்னான்.

Sugumaar is a good guy only, but selfish guy, be aware with him, reconsider your decision about him, you’ll be unlucky என்று அவன் சொன்னது 3 வருடங்களுக்கு முன்பு, ஆனால் இன்று வரை சுகுமாருக்கு என்ன புரியவில்லை என்றால், அதை சொன்ன ஷ்யாம் என்ன பெரிதாக சமூக சேவை செய்தானோ,. இது வரை சுகுமாருக்கு வாய்த்த 4 காதலிகளும் “I’m lucky to have you” என்று வெவ்வேறு தருனத்தில் வெவ்வேறு பாணியில் கூறியுள்ளனர், ஷ்யாம் சொன்னதும், இவனின் 4 காதலிகள் சொன்னதும் முற்றிலும் முரணாக உள்ளது, இதில் எது உண்மையோ? இது நடந்த அடுத்த நாளும் ஷ்யாமிடம் இருந்து பாவனாவிற்கு வந்த ஓர் “hi” சுகுமாரை ஆச்சர்யபட வைத்தது , சுகுமார் தேர்ந்தெடுத்த ஃப்ரொபைல் பிக்சரின் மாயம் அது, ஓர் அழகான ஹோம்லி பெண்ணின் ப்ரொபைல் பிக்சர் அது. பதிலுக்கு சுகுமாரும் ஓர் “hi” சொன்னோம், அதற்கு அவன் “wat you decided?” என்றான், “thinking of dropping him” என்றோம், அதற்கு அவன் தடாலடியாக well wisher அவதாரம் எடுத்து சொன்னது தான் அன்றும் சுகுமாரை விடிய விடிய சிரிக்க வைத்தது, அவன் சொன்னது இது தான் “really u taken a right decision, I’m thinking about u all nit yesterday, how paavam you’re… you shud chose a rit guy like me ma… “. அடுத்த நாள் வகுப்பில் சுகுமார் ஷ்யாமை பார்த்து “உனக்கு பாவனாவை தெரியுமா?” என்று தான் கேட்டான், “சும்மா ஆர்குட்டில் தெரியும், அவ்ளோ தான், மத்தபடி ஒண்ணுமில்லை” என்று விழுந்தடித்து ஓடியே விட்டான். இன்று வரை அந்த பாவனா சுகுமார் தான் என்று அந்த ஷ்யாமிற்கு தெரியாது.

சுகுமாருக்கு கலாசலா பாட்டு மிகவும் பிடித்ததற்கு காரணம் என்னவென்று ப்ரீத்தி கேட்டாள். இந்த ‘கடினமான’ கேள்வியை ப்ரீத்தி சட்டென்று கேட்டு விடவே, சுகுமார் சற்று நிதானித்து, வெறும் என் செவிகளை நிரப்பி விட்டு செல்லும் இசையை நான் என்றுமே விரும்புவதில்லை, அது நிச்சயம் என் இதயம் வரை ஊடுரவ வேண்டும். கேட்கும் போது நிச்சயம் என் உடம்பு அனிச்சையாக நடனமாக அசைந்து கொடுக்க வேண்டும். கேட்கும் போது என்னுள் இருக்கும் குதூகலம் கொண்டாட்டமாக வெளிப்பட வேண்டும். அன்று முழுதும் அந்த பாடலை மனதுக்குள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்க  வேண்டும். அது போன்ற ஓர் சமயத்தில் நான் நிச்சயம் ஓர் கோமாளியாக மக்கள் கண்ணிற்கு தெரிய வேண்டும், நான் அப்படி தெரிந்தால் தான் நான் சரியான பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம், என் மனமும் உடலும் ஆரோக்யமாய் இருக்கிறது என்று அர்த்தம், என் ரசனை உயிர்ப்பாய் இருக்கிறது என்று அர்த்தம். என்னை கோமாளியாக மாற்றிய பெருமை கலாசலாவிற்கு இருப்பதால் தான் கலாசலா பிடித்திருக்கிறது என்றான் சுகுமார். இதை உணர்வு பூர்வமாய் சுகுமார் சொல்லி முடித்தவுடன், ப்ரீத்தி கேட்ட ‘எளிதான’ கேள்விக்கு தான் சுகுமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ப்ரீத்தி கேட்டது இது தான், “சரி அதை வுடு, அப்பறம், என்ன சாப்பிட்ட?” என்று கேட்டாள், ஆக இவ்வளவு உணர்ச்சிபூர்வமாய் சொன்னது எதையும் அவள் காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை.

ஷ்யாமை பார்த்து “நீ chat பண்ண பாவனா யார் தெரியுமா? அது நான் தான் டா, நல்லா ஏமாந்தியா?” என்று கடுப்பேற்ற வேண்டும் என்று சுகுமாரும் முயற்சித்த வண்ணமே இருக்கிறான், ஆனால், சூழ்நிலை தான் சிக்க மாட்டேங்கிறது. என்று தான் அந்த பொன்னான நாள் வருமோ என்று காத்திருந்தான் சுகுமார்.

சுகுமார் யாரிடமாவாது அன்று சண்டை போடுகிறான் என்றால் நிச்சயமாக, “நீ ஒண்ணும் எனக்கு தேவையில்லை” என்று இணைப்பை துண்டித்து விடுவான். அவனுக்கு தெரிந்து சண்டை போடுவதென்றால், அவனை விட்டு எதிராளி விலகி செல்ல வேண்டும். இதில் அதிகமாக மாட்டுவது அவனது அம்மாவும், ராஜியும் தான். அந்த சமயத்தில் சுகுமார் குழந்தை போல் நடந்து கொள்கிறானா, அல்லது சைக்கோ போல் நடந்து கொள்கிறானா என்பது சுகுமாருக்கே சந்தேகமாய் இருக்கும். அது போன்ற ஓர் சமயத்தில் தான் அப்துல், நான் உங்களை சைக்கோவா இல்லையா என்று டெஸ்ட் செய்யட்டுமா என்று முன்வந்தான். அதாவது அப்துல் கேட்கும் கேள்விக்கு சுகுமார் என்ன பதில் சொல்கிறானோ அதை பொறுத்தே சுகுமார் சைக்கோவா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும்.

கேள்வி இது தான் :-

ஒரு வீட்டில் தன் இரு மகள்களுடன் ஒரு பெண் வாழ்ந்து வருகிறாள். அந்த பெண்ணின் கணவன் தற்போது உயிருடன் இல்லை, 5 வருடங்களுக்கு முன்பே இறந்துவிடுகிறான். இது போன்ற ஒர் சமயத்தில் அந்த பெண் நோய்வாய் பட்டு இறந்துவிடுகிறாள். அந்த பெண்ணின் இறுதி சடங்கை அவளின் உறவினர்களே கவனித்து கொள்கிறனர். 2 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் இளைய மகள் மர்மமான முறையில் இறந்து விடுகிறாள். இளைய மகளின் சாவிற்கு யார் காரணம்?
பதிலை யோசித்து நாளை சொல்வதாக சொல்லி ஒரு நாள் அவகாசம் கேட்டான் சுகுமார்.

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ற பாடல் சுகுமாருக்கு மிகவும் பிடித்தமான பாடல், கானா பாடல் என்பதையும் தாண்டி அந்த பாடலில் ஓர் அழகான மெலடி ரம்மியமாய் இருக்கும். தாளமும் அவசர கதியில் ஓடாமல் பொறுமையாய், நின்று நிதானமாய் போகும். பாடலின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நம்மால் கேட்க முடியும். அவசர ஆம்புலன்ஸ் போல அலறாது. இந்த பாடலை இசையமைக்கும் காலக்கட்டங்களில் தேவா, இளையராஜாவிற்கும் ரகுமானுக்கும் போட்டியாகவும் மாற்றாகவும் போற்றப்பட்டவர். சில சமயம் மெல்லிசை மன்னர் என்று கூட போற்றபட்டார். அடுக்கடுக்காய் தொடர்ந்து நிறைய பாடல்கள் கொடுத்தார். ஆனால் ஓர் கட்டத்துக்கு மேல் அவரால் அத்தனை தரமான பாடல்களை கொடுக்க முடியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை, இளைய ராஜாவே நல்ல பாடல்களை கொடுக்க சிரமப்பட்டு கொண்டு இருக்கும் போது தேவா சொதப்புவது ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றாலும் தேவாவை இழந்ததற்காக சுகுமார் பெரிதும் வருத்தபடுவான்.

”ஏய் குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால…
ஏதோ என் மனசு தான் படபடங்குது உன்னால…”

இந்த பாடலை சுகுமார் எத்தனை முறை கேட்டிருப்பான் என்று நினைக்கிறீர்கள், உங்களின் எண்ணிக்கை எத்தனையாய் இருந்தாலும் அதோடு ஓர் 350ஐ சேர்த்து கொள்ளுங்கள். தேவாவின் இடம் காலியாகவே இருக்கிறது. இருந்தாலும் ‘கலாசலா’ போன்ற பாடல்கள் சுகுமாருக்கு ஆறுதலிக்க செய்கிறது.

சென்னையில் ஒரு கல்லூரி மாணவன், தன் நண்பனிடம் தனக்கு ஏதேனும் பெண்களை அறிமுகம் செய்து வைக்குமாறு சதா நச்சரித்து கொண்டே இருந்திருக்கிறான், அவன் நண்பனும் விளையாட்டிற்காக தன்னுடைய மற்றொரு, யாரும் அறியாத நம்பரை, இது தனது பள்ளி தோழி ஜூலியின் நம்பர் என கொடுத்துள்ளான். இவனும் நம்பி அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான். எதிர் புறம் இவன் நண்பனும் அசல் ஓர் பெண்ணை போல் இவனுக்கு பதில் அளித்தான். பதில் வந்த சந்தோஷத்தில் இவனும் தொடர்ந்து பல குறுஞ்செய்திகளை அனுப்பி தகவல் பரிமாறிகொண்டான். இது ஒரு வேடிக்கையான விஷயமாக போகவே, இவன் நண்பனும் பதிலுக்கு தொடர்ந்து எல்லாவற்றிர்க்கும் பதில் அளித்த வண்ணமே இருந்தான். இது அன்றோடு முடிந்திருந்தாலும் பரவாயில்லை, இது பல மாதங்களாக ஓர் தொடர்கதையாக ஓடி கொண்டு இருந்தது. இவனது நண்பன், அச்சு அசல் பெண் குரலிலே வேறு பேசி அவனது சந்தேகத்துக்கு, சிறிதும் இடமளிக்கா வண்ணம் இவனை ஏமாற்றி வந்தான். கொஞ்ச நாள் கழித்து, இவன் காதலில் விழுந்து விடவே, அந்த காதலை வெளிபடுத்தியிருக்கிறான். அப்போதாவது அந்த நண்பன் உண்மையை சொல்லி இருக்கலாம். மாறாக அப்போதும் விளையாட்டு தனமாய் காதலை ஏற்று கொண்டான். இதனால், இவன் தீவிர காதலில் ஈடுபட தொடங்கினான்., இவனது நண்பன் வெகு புத்திசாலித்தனமாய் ஒவ்வொரு முறையும் இவனை சந்திப்பதையே முழுதுமாய் தவிர்த்தான். முழுதாக ஒரு வருடத்திற்கு மேல் இந்த நாடகம் நடந்தேறியது, இவன் தான் உண்மையிலே ஒரு பெண்ணை நிஜமாக காதலித்து கொண்டிருப்பதாய் நினைத்து உருகி உருகி காதலித்தான்.

ஒரு வருடத்திற்கு பிறகு சிறிதளவு மனசாட்சி உறுத்தவே இவனது நண்பன், இவனை நேரில் சந்தித்து எல்லா உண்மையும் சொன்னான். இவன் எதையும் நம்பவில்லை, மாறாக சிரித்துக் கொண்டே, “ என்ன காமெடியா? என் ஜூலியை பத்தி எனக்கு தெரியும், ஒரு வருஷ லவ் டா…”. இதை இவனது நண்பன் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இவனால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. சூழ்நிலையின் தீவிரம் அறிந்து தன்னுடைய இரு நம்பர்களும் ஒரே செல்போனில் தான் இருந்தது என்று ஆதாரத்துடன் நிரூபித்தான். அப்போதும் இவன், தன்னுடைய காதல் மேல் உள்ள பற்றுதலை துறக்கவில்லை, கடைசி வரை நம்ப மறுத்தான்.

தினம் இரவு இல்லாத ஜூலிக்கு, ஜூலி ஜூலி என்று குறுஞ்செய்தி அனுப்பி, பதிலுக்காக தவம் கிடந்தான். நண்பர்கள் அனைவரும் வந்து ஜூலி என்று யாருமே இல்லை என்று விளக்கினர். தொடர்ந்து நம்ப மறுத்தான். அவர்கள் போன பிறகும்,  அன்று இரவு முழுதும் பால் மாறா புன்னகையுடன் சுவற்றை பார்த்து “நீங்க பொய் சொல்றீங்க…. நீங்க பொய் சொல்றீங்க..” என்று சொல்லிய வண்ணம் இருந்தான். இவனது ஆசிரியர்களும் கூட இவனுக்கு சொல்லி புரிய வைக்க பார்த்தனர். எதுவும் கை கூடவில்லை, முழுதாய் மூன்று வாரம் ஆகியும் இவனது பால் மாறா புன்னகையுடன், “நீங்க பொய் சொல்றீங்க” என்று சுவற்றை பார்த்து பினாத்தி கொண்டிருப்பது மாறாமல் இருக்கவே, இதற்கு காரணமான இவனது நண்பன், தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு இவனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாய் போயிற்று.

இந்த விஷயத்தை கேள்வி பட்ட பிறகு சுகுமார் இனி தான் பெண் பெயரில் முகமூடி அணிய போவதில்லை என்று முடிவு செய்தவனாய், அன்று பொங்கி வந்த அவனது கண்ணீரின் மேல் சத்தியம் செய்தான். அதோடு இல்லாமல், ஷ்யாமிடம் அவன் தான் பாவனா என்று சொல்லும் படி இருந்த யோசனையை கை விட்டவனாயிருந்தான் சுகுமார்.

ப்துல் கேட்ட கேள்விக்கு சுகுமாருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சொல்ல போனால் கேள்வியே முழுமையாய் இல்லை. அந்த பெண்ணின் அப்பாவும் எப்பவோ இறந்து விட்டார், அவளின் அம்மாவும் சமீபத்தில் இறந்து விட்டார், அவளின் அக்கா அவளை கொல்லவும் வாய்ப்பில்லை. இம்மூன்று பெயர் தவிர்த்து வெளியாள் யாரும் கொல்லவும் இல்லை என அனுமானிக்க வேண்டியுள்ளது, ஒரு வேளை சமீபத்தில் இறந்த அவளின் அம்மா சின்ன பெண்ணை பிரிந்திருக்க முடியாமல், தன்னுடன் அழைத்து கொண்டாரோ என ஒரு முடிவிற்கு வந்தவனாய், ”கொன்னது அவங்க அம்மா தான்” என்று அவனின் விடையை சொன்னான் சுகுமார்.
அந்த விடை தப்பு என்றான் அப்துல். சுகுமார் சைக்கோ இல்லை என அறிவித்து, கேள்விக்கான விடையை அவிழ்த்தான்.
கொலை செய்தது, வேறு யாருமில்லை, அக்கா தான். இவளுடைய அம்மாவின் ஈம சடங்குக்காக வந்திருந்த ஓர் பையனை அக்காவிற்கு பிடித்து போயிருந்திருக்கிறது. ஆனால் அவன் யார், என்ன பெயர் என எந்த தகவல்களையும் வாங்காமல் விட்டிருக்கிறாள். இப்போது அவனை மறு முறை பார்க்க அவனை எங்கு தேடுவது என தெரியாமல், அவனை இவள் வீட்டிற்கே வர வைக்க, தங்கையை கொலை செய்திருக்கிறாள். இவளின் அம்மா ஈம சடங்கிற்காக வந்தவன், தங்கையின் ஈம சடங்கிற்கு வர மாட்டானா?, அப்போது அவன் யார் என கேட்டு விடலாம் என்பதற்காக தான் அக்கா கொலை செய்திருக்கிறாள்.
எப்படியோ, சுகுமார் சைக்கோ இல்லை.


சுகுமார் கடைசியாக செருப்பு வாங்கி முழுதாய் ஒன்றரை வருடங்கள் கடந்திருந்தின. செருப்பு பழசாகி, தேய்ந்து, பொலிவு இழந்து, அறுந்த பின்னரும் கூட அந்த செருப்பை அவன் மாற்ற நினைத்ததில்லை, காரணம், சுகுமார் அப்போதைய தேதிகளில் சம்பாத்தியம் இல்லாமல் இருந்தான். அடுத்த எடுக்கவிருக்கும் செருப்பு கண்டிப்பாக அவனது பணத்தில் தான் எடுக்க வேண்டும் என்ற சிறிய வீராப்பு அவனிடம் பிடிவாதமாக இருந்தது. ஒன்றரை வருடம், முழுதாய் ஒன்றரை வருடத்திற்கு பிறகு, தண்டையார்பேட்டையில் அவனுக்கு ஓர் சொல்லி கொள்ளும் படியான ஓர் வேலை கிடைத்தது. அவனது முதல் மாத சம்பளத்தில், அவன் முதலில் எடுத்ததே செருப்பு தான். தி.நகரில் உள்ள காதிம்ஸ் செருப்பு கடையில் தான், அவன், அவனுக்கான செருப்பை தேர்ந்தெடுத்து கொண்டான். வீட்டிற்கு வந்ததும் அவனது பழைய செருப்பை அத்தனை கோபத்தோடு குப்பையில் எறிந்தான். அந்த கோபம் சுகுமாருக்கு பெருமிதமாய் இருந்தது.

L.R.ஈஸ்வரி பாடிய பல பாடல்கள் ஹை பிட்ச்சில் பாடியவை தான். L.R.ஈஸ்வரிக்கு லோ பிட்ச்சும் பாட தெரியும் என்று நிரூபித்த காட்ட இவர் பாடியது தான்

  “காதோடு தான் நான் பாடுவேன்
  மனதோடு தான் நான் பேசுவேன்”

இதை பாடியது L.R.ஈஸ்வரியா என்னுமளவிற்கு குரல் அத்தனை மென்மையாய், ரம்மியமாய் இருக்கும். என்ன இருந்தாலும், L.R.ஈஸ்வரி என்றாலே

”செல்லாத்தா…. செல்ல மாரியாத்தா….
எங்கள் சிந்தையில் வந்து அரை விநாடி நில்லாத்தா”

இந்த பாட்டு தான் ஞாபகம் வந்து கொண்டு இருந்தது, இப்போது ’கலாசலா கலசலா’ தான்.

சுகுமாரின் உறவுக்கார பையன் கிஷோர், சுகுமாருக்கு ரொம்ப நெருக்கம். கிஷோருக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு கொஞ்சம் கடுப்பு தான். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடுத்த வகுப்பிற்கு போவானா, மாட்டானா என்ற அளவிற்கு படிப்புக்கும் இவனுக்கும் தூரம். பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரை தாக்கு பிடித்தான், அதற்கு மேல் அவனால் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை, TC வாங்கி கொண்டு வெளியே வந்துவிட்டான்.
’அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இவனின் பெற்றோர் மண்டைய பிய்த்து கொண்டிருந்த வேளையில், தன்னால் மேற்கொண்டு படிக்க முடியாது எனவும், அவனுக்கு ஓர் ஆட்டோ கேரேஜ் வைத்து தருமாறும் கேட்டான். அது தான் அவனது லட்சியக் கனவு என்றெல்லாம் சொல்லி பில்டப் ஏற்றினான். இவனது பெற்றோரோ இவனை மேற்கொண்டு ஏதாவது பாலிடெக்னிக் கல்லூரியிலாவது சேர்த்து விட பிராயத்தன பட்டு கொண்டிருந்தனர். இவனோ என்ன சொல்லியும் கேட்பதாய் இல்லை. ஆட்டோ கேரஜ் என்றால் சாதரண விஷயமும் அல்ல, குறைந்தது 10 லட்சமாவது பணம் விதைத்தாக வேண்டும். கிஷோருக்கு லட்சியமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை என்பது சுகுமாருக்கு நன்றாக தெரியும், இதனால் கிஷோரை குறைந்தது ஒரு வருடமாவது ஓர் ஆட்டோ கேரஜில் வேலை செய்து, வேலை கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்டோ கேரஜ் வைப்பது பற்றி கேள் என்று கிஷோருக்கு யோசனை சொன்னான்.

அதன் படி கிஷோரும் பனகல் பார்க் அருகில் ஓர் ஆட்டோ கேரஜில் சேர்ந்தான், ஆனால் வேலைக்கு சேர்ந்த வேகத்தில் வேலையை கைவிட்டான், ஏனென்று கேட்டதற்கு அந்த வேலை தமக்கு சரி பட்டு வராது என அத்தனை சாதரணமாக சொன்னான். இதை தான் சுகுமாரும் எதிர் பார்த்தான், ஆக படிக்கவும் மாட்டானாம், வேலைக்கு செல்லவும் மாட்டானாம், வேலையை தெரிந்து கொள்ளவும் மாட்டானாம் ஆனால் எடுத்த எடுப்பில் முதலாளியாக கல்லாவில் உட்கார வேண்டுமாம், அதுவும் அவனது பெற்றோரின் மூலதனத்தில்… என்ன நியாயமோ, என்ன கருமாந்திரமோ…

சுகுமார் ஓசூரில் இருக்கும் ராஜேந்திரன் வீட்டிற்கு ஓர் முறை யுகாதி விழாவிற்கு அழைக்கபட்டு இருந்தான். சுகுமார் வசிப்பதோ சென்னையில், அந்த நேரம் பார்த்து சுகுமாரிடம் 10 ரூபாய் கூட முழுதாய் இல்லை, தெரிந்தவர்களிடம் கைமாத்து வாங்கி கோயம்பேடு சென்று ஓசூர் பஸ் ஏறி, ஜன்னல் ஸீட்டெல்லாம் பிடித்து 170 ரூபாயை கொடுத்து டிக்கெட் கேட்டால், டிக்கெட் விலை 182 ரூபாய் ஆகி விட்டது என்று சுகுமார் தலையில் குண்டை தூக்கி போட்டு விட்டார்கள், அந்த நேரம், சுகுமாரிடம் இன்னும் 12 ரூபாய் இருப்பில் இருக்குமா என்பதே பலத்த சந்தேகமாய் இருந்தது, கையில் உள்ள சில்லரையெல்லாம் எண்ணினால் 11 ரூபாய் தான் இருந்தது. எத்தனை முறை கூட்டினாலும் அதே ’தொகை’ தான் வந்தது, இன்னும் ஒரு ரூபாய் இடித்தது. அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர் தூங்கி கொண்டிருந்தார், அவரிடம் காசு கேட்க வேண்டுமென்றாலும் அவரை எழுப்பி தான் கேட்க வேண்டும். கண்டக்டரிடமே தலையை சொரியலாமா, அல்லது யாரிடமாவது கேட்டு விடலாமா என்ற கேள்வி அவனை அந்த நேரத்தில் குத்தி கிழித்து கொண்டிருந்தது. கண்டக்டரை கண் நிமிர்ந்து பார்த்தான், சீக்கரம் காசை கொடுக்குமாறு மிரட்டலாய் அவசரப்படுத்தினார், மேற்கொண்டு அவரிடம் கேட்க சுகுமாருக்கு துணிச்சல் வரவில்லை. எதற்கும் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு துளாவிய போது, நாணயம் ஒன்று அகப்பட்டது, எடுத்து பார்த்தால், 2 ரூபாய் நாணயம். கண்டக்டரிடம் பெருமையாய் நீட்டினான். 182 ரூபாய்க்கு, 183 ரூபாய் கொடுத்த கணக்கு ஆனது. ஆனால் காசை வாங்கி கொண்டு, டிக்கெட்டை மட்டும் கொடுத்து விட்டு மீதி ஒரு ரூபாயை தராமலே நகர்ந்துவிட்டார் கண்டக்டர். ஒரு ரூபாய் அவருக்கு ஒரு ரூபாயாக இருந்தது, ஆனால்  சுகுமாருக்கு அந்த ஒரு ரூபாய் ஒரு ரூபாயாக இருந்தது.


கிஷோரிடம் பேச வேண்டுமென்று தோணவே, கிஷோருக்கு அலைபேச நம்பரை தட்டினான் சுகுமார்.
சுகுமார்: என்ன மாப்பு எப்படி இருக்க….
கிஷோர்: நல்லா இருக்கேன் டா…
சுகுமார்: அடுத்து என்ன பண்றதா இருக்க…
கிஷோர்: ஆட்டோ கேரஜ் வேண்டாம்னு முடிவு பண்ணீட்டேன். சேலத்துல kfc restaurant ஆரம்பிக்கலாமானு வீட்ல பேசிட்டு இருக்கேன்.
சுகுமார்: ????????????????????!!!


ப்போது வரும் குத்து பாட்டுகளில் ஓர் அழகியலே இருப்பதில்லை. பாட்டு முழுக்க தாரை தப்பட்டைகளை தட்டி விட்டால் அது குத்து பாட்டு ஆகிவிடுமா, என்று சுகுமார் அடிக்கடி கோபப்படுவது உண்டு. கலாசலா பாடலில் அப்படி இருப்பதில்லை. எங்கு தேவையோ அங்கு தான் தாளம் பிரவேசிக்கும், மற்ற இடங்களில் தாளம் அமுங்கியே வாசிக்கும்.

“நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா”

என்னும் பாடல் எடுத்த எடுப்பிலே தாளங்களுடன் துவங்குவதில்லை. முதலில் ஓர் புல்லாங்குழல் இசை வரும், அதை தொடர்ந்து, நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என்று குரல் மட்டும் ஒலிக்கும், அதுவரை தாளம் இருக்காது.
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா என்று ஆரம்பிக்கும் இடத்தில் தான் தாளமே துவங்கும். அதாவது பாட்டின் தாளமே பாடலை பின் தொடர்ந்து தான் வருகிறது.

இந்த யுக்தி கலாசலா பாட்டிலும் அழகாக கையாள பட்டிருக்கிறது.

கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாசா கலசலா
கலாசலா கலசலா எனும் முதல் சுற்றில் தாளமே இருக்காது.
அடுத்த சுற்று கலாசலா கலசலா கலாசலா கலசலா கல்லாசா கலசலா கலாசலா கலசலா வரும் போது தான் தாளம் ஆரம்பிக்கும்.

தாளமும் ரசித்து எழுந்து ஓர் கெட்ட ஆட்டம் ஆடும் வகையில் இருக்கும்.

1 2  1 2 3 4
1 2  1 2 3 4
1 2  1 2 3 4
1 2  1 2 3 4

என்ற ரீதியில் தாளம், ஆளை மயக்கும். இப்படியொரு பாட்டை சுகுமார் எப்படி ரசிக்காமல் இருப்பான்?

     ரு முறை சுகுமார் மின்சார ரயிலில் வேளச்சேரியிலிருந்து பூங்கா நகர் சென்று கொண்டிருந்தான். திருவான்மியூர் அருகே ரயில் சென்று கொண்டிருக்கும் போது அவனுக்கு வெகு அருகில் ‘கலாசலா’ பாட்டு ஒலித்து கொண்டிருந்தது. எதேச்சையாக திரும்பி பார்த்தால் அங்கே ஷ்யாம். ஷ்யாமும் அந்த பாட்டை விரும்பி கேட்பது சுகுமாருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஷ்யாமை கூப்பிட்டு அருகே அமர வைத்து பூங்கா நகர் வரை பேசி கொண்டு வந்தான். சுமார் 30 நிமிடம் சிரிக்க சிரிக்க பேசினார்கள். பேச்சின் ஊடே சுகுமார் பாவனாவை பற்றி பேச்சை மறந்தும் கூட எடுத்து விட வில்லை.

     சுகுமார் காதிம்ஸில் வாங்கிய செருப்பு நாளாக அதன் பொலிவை இழந்து கொண்டே வந்தது. செருப்பில் பாதங்கள் அழுந்தபட்டு, பாதத்தின் அச்சு விழுந்தது. முதன் மாத சம்பளத்தில் வாங்கிய முதல் பொருள் என்பதால் சுகுமாருக்கு இது ஓர் உறுத்தலாகவே இருந்தது. நல்ல வேளையாக செருப்புக்கு  90 நாட்கள் வாரண்ட்டி இருக்கவே சுகுமார் செருப்பை மாற்றிக் கொள்ள எத்தனித்தான்.
      அன்று ஓர் புதன் கிழமை, சுகுமாருக்கு 2nd shift என்பதால் அவன் 1 மணிக்குள் கம்பெனி சென்றாக வேண்டும், 1 மணிக்கு சென்றால் மறுபடியும் 9 மணிக்கு தான் வெளியே வர முடியும். எனவே வேலை முடித்த அந்த நாள் மாலை செருப்பை மாற்றி கொள்வது என்பது இயலாத காரியம். வேலைக்கு செல்லும் முன்பே காதிம்ஸ் சென்று வாரண்ட்டி க்ளைம் செய்தால் தான் உண்டு. ஆனால் கடை திறப்பதோ 10 மணிக்கு மேல் தான், அதனால் ரொம்ப நேரத்தில் போயும் பிரயோஜனம் இல்லை. சுகுமார் தங்கி இருக்கும் வேளச்சேரியில் இருந்து தி.நகர் சென்று செருப்பை மாற்ற வேண்டுமே என்பது தான் சுகுமாருக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது. இருந்தாலும் விட முடியுமா செண்டிமெண்ட் சமாச்சாரம், அது மட்டுமில்லாமல் 400 ரூபாய் கொடுத்தெல்லாம் சுகுமார் அடுத்தவர்கள் காசில் கூட செருப்பு வாங்கியதில்லை. அதனால் வாங்கியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து கிளம்பினான்.

09:45 மணியளவில் இருப்பிடத்தை விட்டு கிளம்பினான் சுகுமார். வேளச்சேரியிலிருந்து கிண்டி சென்று, அங்கிருந்து மின்சார ரயிலில் செல்ல சென்ட்ரல் டிக்கெட் வாங்கி மாம்பலம் இறங்கி, மாம்பலத்திலிருந்து பனகல் பார்க் வரை நடந்து, செருப்பு வாங்கி, திரும்ப மாம்பலம் சென்று அங்கிருந்து சென்ட்ரல் சென்று, அங்கிருந்து கும்மிடிப்பூண்டி ரயில் பிடித்து தண்டையார் பேட்டை இறங்கி 1 மணிக்குள் கம்பெனி செல்வது தான் திட்டம் என்று மனதுக்குள் தீர்மானித்து கொண்டான். தற்சமயம் அவனின் பணம் இருப்பு 118 ரூபாய்.

10:00 மணியளவில் சுகுமார் வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.

10:07 வரை பஸ் ஏதும் வரவில்லை, அதனால் காதில் ஹெட் போன் சொருகி பாட்டு கேட்க ஆயுத்தமானான் சுகுமார். இருக்கும் 492 பாடலில் “சாலையோரம் பூக்கள் வந்து பூக்குதே” என்ற பாடலை தேடி பிடித்து கேட்க தொடங்கினான்.

10.14 மணிக்கு கிண்டி செல்லும் ஓர் பேருந்து நிரம்பி வழிந்து வந்தது. நேரம் தான் நிறைய இருக்கிறதே என்று அந்த பேருந்தை தவிர்த்து விட்டான்…. “ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா, டூ விட்டு மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா”

10.18 மணிக்கு கிண்டி செல்லும் மற்றுமொரு பேருந்து பின்னாடியே வந்தது. டிக்கெட் எடுத்தான். டிக்கெட் விலை 9 ரூபாய், பணம் இருப்பு 109 ரூபாய்“எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா… குடிக்க நான் தரவா சோ சோ சோடா….”

10.42 மணிக்கு அவன் கிண்டி இறங்கினான், “கரிகாலன் காலை போல கறுத்திருக்குது குழலு”

10.44 மணிக்கு அவன் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றான், “கரிகாலன் காலை போல கறுத்திருக்குது குழலு”

10.58 மணிக்கு அவனுக்கு டிக்கெட் கிடைத்தது, டிக்கெட் விலை 6 ரூபாய், பணம் இருப்பு 103 ரூபாய், “கை தட்டி தட்டி அழைத்தாலே, என் மனதை தொட்டு தொட்டு உடைத்தாலே”

11.06 மணிக்கு அவனுக்கு கடற்கரை செல்லும் ரயில் வந்தது, “அன்று வந்ததும் அதே நிலா, ஜ ஜ ஜா, இன்று வந்ததும் இதே நிலா ஜ ஜ ஜா”.

11.17 மணிக்கு அவன் மாம்பலம் இறங்கினான், ”குலுவாலிலே முத்து வந்தல்லோ”

11.36 மணிக்கு போத்தீஸுக்கு எதிரில் இருக்கும் காதிம்ஸுக்கு வந்து சேர்ந்தான். உள்ளே நுழையும் முன்னே பாட்டை நிறுத்திவிட்டு அதன் பின் உள்ளே நுழைந்தான். இந்த முறை காதிம்ஸ் உள்ளே நுழையும் போது போன முறை பிறந்த உற்சாகம் பிறக்கவே இல்லை. சுகுமார் அவன் போட்டிருந்த செருப்பை கழட்டி காட்டி இதை வாங்கி 10 நாள் கூட முழுதாய் ஆகவில்லை, என பில்லை எடுத்து காண்பித்தான். எதாவது காரணம் சொல்லி மாற்றி தராவிட்டால் கத்தி பிரச்சனை செய்துவிடலாம் என்று தயாராய் இருந்தான், ஆனால் பில்லையும் செருப்பையும் ஒரு முறை பார்த்து விட்டு, வேற எடுத்துக்கோங்க என்று சர்வ சாதரணமாய், செருப்புகள் இருக்கும் இடத்தை நோக்கி கை நீட்டினார். இது போல் ஒரு நாளைக்கு 5 வாடிக்கையாளர்களை பார்ப்பார்கள் போலும் என்று மனதுக்குள்ளே நினைத்து கொண்டான் சுகுமார்.
    
இப்போது செருப்பின் விலை 400 ரூபாய், இதற்கு அதிகமாக தான் வேறு ஒரு செருப்பை எடுக்க வேண்டும், அல்லது அதற்கு நிகரான விலையிலாவது எடுக்க வேண்டும், இது இரண்டுமில்லாது 400 ரூபாய்க்கு கம்மியாய் எடுப்பது சாத்தியமில்லாதது. கடைக்குள் ஒரு தமிழ் ஆள் கூட இருக்கவில்லை, இருந்தது அனைத்தும் இந்திக்காரர்களாகவே இருந்தனர். அவர்களிடம் 400 முதல் 450 ரூபாய்க்கு உள்ளாக செருப்பு ஒன்றை தாருங்கள் என்று சொல்லி புரிய வைக்கவே  அவனுக்கு 3 நிமிடத்திற்கும் மேலாக கடந்தது. அடுக்கி வைத்திருக்கும் செருப்புகள் பலவற்றது நன்றாய் இருந்தது, ஆனால் விலையோ ஒவ்வொன்றும் 1200க்கும் மேல். ஒன்றிரண்டு செருப்புகள் வெகு எளிமையாய் இருந்தது, விலை 300 ரூபாய்க்குள் இருந்தது, ஆனால் அதை எடுக்க முடியாத சூழ்நிலை. இப்படியாக நன்றாய் இருக்கும் செருப்புகள் தொட முடியாத விலையில் இருக்க, சுகுமாருக்கு எதை எடுப்பதென்றே தெரியவில்லை. ஒரு பக்கம் நேரம் அநாயசமாக கடந்துக் கொண்டு இருந்தது. இப்போது நேரம் என்ன என்று பார்க்கவே சுகுமாருக்கு பயமாய் இருந்தது, குறைவான நேரம் தான் கடந்திருக்கும் என்று தன்னை தானே தைரியப்படுத்தி கொண்டான். 500 ரூபாய்க்கு ஒரு செருப்பு இருந்தது, அதை பார்க்க ஒன்று அத்தனை அருமையாய் இருந்திடவில்லை, ஆனால் அதை தான் எடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலை, வேறு எந்த செருப்பும் அந்த விலை வட்டத்தில் இல்லை. எவ்வளவு நேரம் தான் தேடி கொண்டிருப்பது என்றும் தெரியவில்லை. பணம் இருப்பை ஒரு முறை பார்த்தான், 103 ரூபாய், நேரத்தை ஒரு முறை பார்த்தான், 12.03. செருப்பின் தரத்தை அவனுக்கு தெரிந்த அளவில் நோட்டமிட்டான்…. இறுதியாய் அதையே பில் போட சொன்னான், வேறு வழி இல்லை, இங்கேயே 12.03, ஆனால் 12.40க்குள் சுகுமார் சென்ட்ரலில் இருந்தாக வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அவனால் கும்மிடிப்பூண்டி ரயிலை பிடிக்க முடியும், ஒரு வேளை அதை தவற விட்டால் 01.15க்கு தான் அடுத்த வண்டி, அதில் சென்றால் 01.40க்கு தான் கம்பெனிக்கு செல்ல முடியும். நேற்று தான் வேளைக்கு தாமதமாய் சென்றான், இன்றும்  தாமதமாய் செல்ல முடியாது. அதனால் அந்த செருப்பை கூடுமான வரையில் விரைவாய் பில் போட்டு கடையை காலி செய்யும் அவசரத்தில் துடித்து கொண்டிருந்தான்.

     பில் போடும் இடத்தில் பேரம் வேறு பேசியாக வேண்டும், இல்லாவிட்டால் இருக்கும் 103 ரூபாயில் 100 ரூபாயை கொடுத்து விட்டு மிச்சம் 3 ரூபாயில் மதிய சாப்பாட்டை பற்றி யோசிக்க முடியாது. ஒரு 20 ரூபாயையாவது பேரம் பேசிவிட்டால் தேவலாம் என்று பில் போடும் நபரிடம் பேசி பார்த்தான். பில் போடுபவன் இந்தி கலந்த தமிழில் கறராய் முடியாது என்று மறுத்துவிட்டான், கொஞ்ச நேரம் பேசி பார்த்தான், நாம் எதற்கு இந்திகாரன் காலை பிடிக்க வேண்டும் என்று நூறு ரூபாயை கிட்டதிட்ட கிடாசி விட்டு பழைய செருப்பை ஒப்படைத்து விட்டு. புதிய செருப்பை அணிந்து கொண்டு கடையில் இருந்து வெளியேறினான். புது செருப்பு வலது காலை கடிக்க செய்த்து.

     சுகுமார் வெளியே வந்தவுடன் ஒரு முறை மணி பார்த்தான், 12.07. இப்போது ஓடியே ஆக வேண்டும், ஓடினால் தான் வேலைக்கு நேரத்திற்கு செல்ல ஓரளவாவது வாய்ப்புள்ளது. ஆனால் உஸ்மான் சாலையில் ஓடுவது என்பது சாதரண விஷயமல்ல… வழி நெடுகிலும் இரு புறமும் கடைகள், மக்கள் ஊர்ந்த வண்ணம் தான் நடப்பார்கள், நடந்து கொண்டே இருப்பார்கள் ஏதாவது கடையை பார்த்தால் அப்படியே நின்று விடுவார்கள், வழியிலே விற்பன்னர்களும் ஆட்டோகாரர்களும் நின்று இடைமறிப்பார்கள், இவ்வளவும் மீறி எப்படி ஓடுவது, ஓடினாலும் ரயிலை பிடிக்க முடியுமா என்பதை சுகுமாரால் நிச்சயம் கணிக்க முடியவில்லை. ஆனால் ஓடி தான் ஆக வேண்டும்…

12.07 மனதில் நம்பிக்கையை வர வைத்துகொண்டு சுகுமார் ஓட துவங்கினான். கூட்டத்தில் ஓடுவது மிக அபாயமானது, யார் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம், அதனால் கண்களை கூர்மையாக வைத்து , எதிர்படும் அனைத்து நபர்களின் அடுத்த 6 விநாடி நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கணக்கிட்டு கொண்டு அவன் ஓடி கொண்டிருந்தான். எதிர்படுன் நபர்கள் தன் பாதையில் குறுக்கிடுபவர்களாக இருப்பின் அதற்கு மாற்று பாதை தேட வேண்டும், தேடியே ஆக வேண்டும், அப்போது தான் ரயிலை பிடிக்க முடியும். அவனுக்கு வேகமாய் ஓட அப்போதிருந்த வாய்ப்புகள் இரண்டு தான், ஒன்று கூட்டத்தில் காலி இடங்களை கண்டு பிடித்து அதை அவனது பாதையாக தேர்ந்தெடுக்க வேண்டும், மற்றொன்று கூட்டத்தை ஊடுருவ வேண்டும். சுகுமார் இரண்டையும் நேரம் அறிந்து செய்தான். அது மதிய நேரமாய் இருந்ததால் சுகுமாருக்கு ஓடுவது என்பது சிறிதளவு சாத்தியப்பட்டது. கூட்டத்தை ஊடுருவி ஊடுருவி விரைந்தான், ஓட முடியாத கட்டத்தில் வேகமாய் நடக்க செய்தான். அப்போது பார்த்து அந்த கூட்டமான பாதையில் ஓர் ஆட்டோ எதிர்புறம் வந்து கொண்டிருந்தது. ஜனங்கள் அந்த ஆட்டோக்கு வழி விடும் பொருட்டு ஒதுங்கியதில் சுகுமாரின் ஓட்டம் தடை பட்டது, அதிர்ஷ்டவசமாக ஆட்டோ எதிர் வருவதிலும் ஓர் சாதகத்தை கண்டு கொண்டான். ஆட்டோ கடந்து போகும் வரை ஒதுங்கி இருந்து விட்டு, ஆட்டோ கடந்தவுடன் ஆட்டோவிற்காக ஒதுங்கிய பாதையை ஓட்டத்திற்காக உபயோக படுத்திகொண்டான், ஆனால் 3 மீட்டர் வரை தான் அவனுக்கு அந்த ஓட்டம் சாத்தியபட்டது. மறுபடியும் வேக நடை போட ஆரம்பித்தான், கூட்டத்தை ஊடுருவி ஊடுருவி செல்வதில் நேரம் இழுத்து கொண்டிருப்பதை உணர்ந்தான். ஆனால் வேறு வழியில்லை. இன்னும் முக்கால் கி.மீ. இப்படிதான் செல்ல வேண்டும், அதன் பின் வலது புறம் திரும்பி ரங்கநாதன் தெருவில் ஒரு கால் கி.மீ கடக்க வேண்டும். ஓடினான், நடந்தான், ஒதுங்கினான், தாண்டினான், மூச்சிறைத்தான், வழி விட சொல்லி கத்தினான், அவ்வப்போது நேரம் பார்த்து கொண்டான்….. ஆனால் நிற்க மட்டும் அவன் கடிகாரம் அவனை அனுமதிக்கவில்லை. ரயில் நிலையம் நெருங்க நெருங்க அடிக்கடி நேரம் பார்த்தான்.

12.09

12.11

12.12.45

12.14.11

12.14.51 ரயில் நிலையத்தில் நுழைந்துவிட்டான், தண்டவாளத்தில் இவனுக்கான ரயில் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் ஓடியதை விட இப்போது ஓடுவது மிக முக்கியமானது என்று உணர்ந்தவனாய் பேய் போல் ஓடினான்.

12.15.06 ரயில் நகர ஆரம்பித்தது.

12.15.12 ரயில் சற்று வேகம் பிடிப்பதற்கு முன் சுகுமார் அதில் ஓட ஓட ஏறி விட்டான்.

நல்ல வேளையாக இந்த ரயிலை சரியான நேரத்தில் பிடித்தோம், இல்லையென்றால் 12.40 ரயிலை பிடிப்பது மிகவும் சிரமமாய் போயிருக்கும் என்று மூச்சிறைத்தவாறே மனதில் நினைத்து கொண்டான். ஆனால், இப்போதும் 12.40 ரயிலை உறுதியாய் பிடித்து விட முடியாது என்பது சுகுமாருக்கு தெரியும், ஏனெனில் சுகுமார் இந்த ரயில் சென்ட்ரல் போகவே 25 நிமிடம் எடுக்கும், அதற்குள் 12.40 ஆகி விடும், அதன் பின் இன்னொரு ஓட்டம் ஓட வேண்டும், அப்போதும் ரயில் உறுதியாய் கிடைக்கும் என்று உத்தரவாதம் இருக்காது.

ரயில் நல்ல வேகத்தில் போனது, எதிர்பார்த்த நேரத்தை விட ரயில் முன்பாகவே போய் விடும் என்று சுகுமார் சந்தோஷ பட்டு கொண்டான்.

12.38.54 ரயில் பார்க் ஷ்டேசன் வந்து விட்டது. இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரயிலை பிடித்தாக வேண்டும், அதனால் ஓடுவது என்று எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை சுகுமாருக்கு. உஸ்மான் சாலையில் ஓடுவதை விட பார்க்கில் ஓடுவது சுகுமாருக்கு அத்தனை சிரமமாய் இல்லை. ஆனால் இடையில் ஒரு சப் வே ஒன்றில் ஏறி இறங்க வேண்டும், ஆனால் அன்று பார்த்து கூட்டம் சற்று குறைவாகவே இருக்க சுகுமார் சடசடவென கூட்டத்தினுள் புகுந்து புகுந்து சப் வேயில் இருந்து வெளியே வந்து விட்டான்.

12.39.33 எப்படியும் ரயிலை பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு பிறந்தது. கூட்டமான இடங்களை எல்லாம் கடந்தாகி விட்டது, கண்ணிற்கு எட்டும் தூரத்தில் தான் ஷ்டேஷன் இருக்கிறது, 30 விநாடி ஓட்டத்தில் எப்படியும் ஓடி விடலாம் என்று ஓட்ட வேகத்தை அதிகரித்தான். மெலிதாய் ஒரு வெற்றி புன்னகை அந்த களைப்பிலும் அவன் முகத்தில் பூத்தது. அந்த நேரத்தில் ஓர் ஆட்டோ திடீரென்று அவன் பாதையில் வலதுபுறமிருந்து குறுக்கே வந்து கொண்டிருந்தது, இதை அவன் அறியும் போது அவனை அவனே வேகத்தை கட்டுபடுத்தி நிறுத்தமளவிற்கு அவனுக்கும் அவகாசம் இருக்கவில்லை. அதற்குள் ஆட்டோவின் முன்பாகம் அவனுக்கு குறுக்கே வந்திருந்தது, இன்னமும் சுகுமார் வேகத்தை குறைத்திருக்கவில்லை, ஒரு சூழ்நிலையில் ஆட்டோவை பிடித்து தான் தன்னை தானே நிறுத்தி கொள்ள வேண்டுமென அனிச்சையாய், ஓடி கொண்டிருக்கும் ஆட்டோவின் நடுபாகம் மேலே கை வைத்து அவனை நிறுத்த பார்த்தான். அந்த முட்டாள் தனத்தில் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டது, ஆட்டோவின் பின் சக்கரம் இவனது வலது காலின் மீது ஏறி இறங்கி கடந்தது. சற்று தூரம் கடந்து ஆட்டோ நின்று சுகுமாருக்கு என்ன ஆனதென்று திரும்பி பார்த்தது. சுகுமாரும் சற்று நிதானித்து எப்படி இது நடந்தது என்று அவன் வந்த வழியை திரும்ப பார்த்தான். குறுகலான சந்தில் இருந்து வேகமாய் ஓடி வர, அதன் வழியே வேகமாய் வந்த ஆட்டோவின் மேல் மோதிவிட்டிருந்தான். இது அவனுக்கு புரிந்த போது, கூட்டம் மெல்ல மெல்ல கூடி கொண்டிருந்தது. கடிகாரம் பார்த்தான், 12.39.47. மறுபடியும் ஓட ஆரம்பித்தான்.

12.40.54 கும்மிடிபூண்டி செல்லும் ரயில் புறப்பட தயராய் நின்று கொண்டிருந்தது. ஓடி போய் ஏறி கொண்டான்.

12.42 ரயில் நகர ஆரம்பித்தது. ஓர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு, கையில் இருந்த காயங்களை பார்த்தான். ஒன்றும் பெரிய அடி இல்லை என ஹெட்போன் போட்டு பாட்டு கேட்க ஆயுத்தமானான். தேடி பிடித்து ’கலாசலா’ பாட்டை தேர்ந்தெடுத்து கேட்டான். அவனையும் அறியாமல் சற்று நேரத்திற்கு முன் ஆட்டோ ஏறி இறங்கிய, அவனது காலை இறுக்க கடித்து கொண்டிருக்கும் அவனது வலது செருப்பு தாளத்திற்கு ஏற்றவாறு ஆடி கொண்டிருந்தது.

ன்புள்ள ராஜிக்கு,
       யுகாதிக்கு என்னை வீட்டிற்கு அழைத்து சிறப்பு விருந்தினை அளித்ததற்கு மிக்க நன்றி. நன்றி பரிமாறி கொள்ளும் அளவிற்கெல்லாம் நம்மின் உறவு தூரத்தில் இல்லை என தெரிந்திருந்தாலும் ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் என்னுடைய மீனா அக்காவிற்கு அடுத்து என்னை வீட்டிற்கு அழைத்து சிறப்பாக கவனித்து கொண்டது நீ தான். நீ எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆச்சர்யம் தான். உனக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை, உன்னை எனக்கு ஆரம்பத்தில் பிடிக்காது. அதனால் நீ என்னிடம் வந்து பேசினாலும் நிறைய முறை பெரிதாய் மரியாதை கொடுத்த பேசி இருக்க மாட்டேன். அதற்கு குறிப்பிட்ட காரணமெல்லாம் என்ன என்று நான் அறிய கூட முற்பட்டதில்லை, எனக்கு நட்பு என்றாலே பிடிப்பதில்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் நான் என்னை நல்லவனாய் அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவதேயில்லை. நான் நானாக இருக்கவே விரும்புவேன். இதனால் யார் காயபட்டாலும் நான் என்றுமே பொருட்படுத்துவதில்லை. இதனால் நான் பலருக்கு சைக்கோவாகவும், சுயநலவாதியாகவும், கோமாளியாகவும், சுதந்திரனனாகவும் அடையாள பட்டிருக்கிறேன். உன்னிடமும் என் போக்கை நான் மாற்றி கொண்டதில்லை. ஆனால் நீயோ என்னிடம் தொடர்ந்து அன்பை வெளிகாட்டி கொண்டே இருந்தாய், இதற்கிடையில் நான் உன்னை எப்போது நேசிக்க ஆரம்பித்தேன் என்று எனக்கு தெரியவில்லை. உன்னிடம் நாள் முழுதும் பேசி கொண்டே இருக்க வேண்டும், பேக்கரிக்கு உன்னை அழைத்து சென்று மணிகணக்கில் ஒரு முட்டை பப்ஸை சாப்பிட வேண்டும், மணி கணக்கில் கிரிக்கெட் பேச வேண்டும், சினிமா பேச வேண்டும், அரசியல் பேச வேண்டும், கை பிடித்து நடக்க வேண்டும், உன் வீட்டில் உட்கார்ந்து பாடல்கள் கேட்க வேண்டும், உன்னை என் வீட்டிற்கு அழைத்து சாப்பிட கொடுக்க வேண்டும், லொள்ளு சபா பார்க்க வேண்டும், கைலாஷ் கேர் கேட்க வேண்டும், அம்மாஞ்சிகளை ஓட்ட வேண்டும், உன் முதுகில் சாத்தி கொண்டே இருக்க வேண்டும், கிறுக்கு தனமாய் கேள்விகள் பல கேட்க வேண்டும், நீ சொல்வது அனைத்தும் ஆட்சேபிக்காமல் ஏற்று கொள்ள வேண்டும், உன்னை ஆட்சேபிக்கும் ஒருவனை காலி செய்ய வேண்டும், திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது தோள் மேல் கை போட்டு கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எனக்கு தோன்றி கொண்டே இருக்கும். இப்படியெல்லாம் எனக்கு தோன்றுவதால் நமக்குள் இருப்பது நட்பு என்று நீ பெயர் வைத்து விட்டாய். ஆனால் உண்மையில் உன்னை நான் அப்போது காதலிக்க ஆரம்பித்து இருந்தேன். நீ என் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆனாய். நான் என் படிப்பை முடிப்பதற்கு நீ பெரிதும்  பக்க பலமாய் இருந்தாய், அதற்கெல்லாம் நான் என்றுமே பிராயிச்சத்தமாய் இருந்ததில்லை. நான் இருக்கவும் மாட்டேன் என்று உனக்கே தெரியவும் கூடும், ஆனால் இருந்தும் நீ என்னுடன் நெருக்கமாகவே இருக்கிறாய், நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

உன்னை நான் காதலிக்கிறேன் என்பதால் உன்னை எல்லா நாளும் கவனித்து கொண்டிருக்கவில்லை. ஒரு முறை தீபாவளி பர்சேஸ்க்காக நீ சென்னை வந்திருந்த போது உன்னை நான் துளியும் கவனித்து கொள்ளவில்லை, நீயாக வந்தாய், நீயாக துணி எடுத்தாய், நீயாக போனாய்…. நான் அருகில் மட்டுமே இருந்தேன். உன்னை நான் கவனித்து கொள்ளவே இல்லை என்று எனக்கு தெரியும். அந்த நாள் நான் வேறு பல கடுப்புகளில் இருந்தேன் என்பதை நீ புரிந்து கொண்டாய், உன்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

ஆனால் அடுத்த முறை நீ ஓசூரில் இருந்து சென்னை வந்த போது உன்னை என்னால் முடிந்தவரை பார்த்து கொண்டேன். அதுவும் ஒன்றும் அத்தனை சிறப்பான கவனிப்பு என்று சொல்லிவிட முடியாது, ஆனால் இருந்தாலும் நீ சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றவுடன் நீ சென்னை வந்து போனதை ஓர் பயண கட்டுரைகயாக எழுதி அதில் என்னை சிறப்பித்து எழுதி என்னை தூக்கி வைத்து கொண்டாடினாய். அதை எல்லாம் என்றுமே என்னால் மறக்க முடியாது.

நீ ஒரு முறை கைகள் இருக்கும் பண கஷ்டத்தில் இருக்கும் போது யுகாதி வந்து தொலைத்தது. ஆனால் இருந்தும் என்னை நீ யுகாதிக்கு அழைத்திருந்தாய், அழைத்தது மட்டுமில்லாமல் திரும்ப சென்னை வருவதற்கு பேருந்தையும் ரிசர்வ் செய்து கொடுத்தாய். இதை எழுதும் போது தான் அதற்குரிய பணத்தை நான் உன்னிடம் தராமலே வந்து விட்டது எனக்கு ஞாபகம் வருகிறது, பண கஷ்டத்தில் இருந்த போதிலும் உங்கள் வீட்டிற்கு என்னை ஆட்டோ வைத்து கூட்டி சென்றாய், வகைவகையாய் அசைவம் சமைத்து பரிமாற சொன்னாய், நான் கேட்டேன் என்பதற்காக ஒரு பெட்டி நிறைய இனிப்புகளை வாங்கி வந்து கொடுத்தாய், எனக்காக ஒரு சட்டை வாங்கி அன்பளிப்பளித்தாய்…. நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

ஓசூருக்கு வருவதற்கு 2 நாட்கள் முன்பு தான் உன்னிடம் சண்டை பிடித்திருந்தேன். நீ என்னை வேலை நேரத்தில் தொடர்பு கொண்ட ஒரு சிறு பிரச்சனைக்காக, அதன்பின் உன் அழைப்புகளை புறக்கணிக்க தொடங்கினேன். நீ என் அலைபேசிக்கு கூப்பிட்டு கொண்டே இருந்தாய், நான் துண்டித்து கொண்டே இருந்தேன். 15 முறைக்கும் மேலாக நான் துண்டிக்க துண்டிக்க நீ என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தாய், நீ அழைப்பதை நிறுத்துவாய் என்று எதிர்பார்த்தேன், ஆனால் நீ நிறுத்தவில்லை, நீ கூப்பிட்டு கொண்டே இருந்தாய், ஒரு கட்டத்தில் துண்டிக்க கை வராமல் உன் அழைப்பை ஏற்று உன்னிடம் பேசினேன், அந்த நாள் நான் உனக்கு எவ்வளவு முக்கியம் என்று ரொம்ப நேரம் விளக்கி சொன்னாய், நீ செய்த தவறிற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டாய். உன்னுடைய அந்த 35 நிமிட பேச்சு என் கண்களில் கண்ணீரை முட்ட செய்தது, நீ பேசி கொண்டிருக்கும் போதே என் கண்களில் நீர் வழிந்தது உனக்கு தெரியாது,… எந்த ஆணும் என்னை இவ்வாறு அழ வைத்ததில்லை…. நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்..


அன்று முழுதும் நான் உன் வீட்டை என் வீடு போல் உணர்ந்தேன். இருக்கையில் திமிராய் அமர்ந்திருந்தேன், யார் உபசரிப்புக்கும் காத்திருக்காமல் வாங்கி வந்த இனிப்புகளை நானே காலி செய்தேன், உன் கணினியில் 40 முறைக்கும் மேலாக ‘கலாசலா’ பாட்டை கேட்டேன்….ஆனந்தமான நாள் அது. பொதுவாக நான் ஒரே பாட்டை திரும்ப திரும்ப கேட்டாள் என் பக்கத்தில் இருப்பவர்கள் கடுப்பு ஆகிவிடுவது வாடிக்கை. ஆனால் நான் அன்று அந்த பாட்டை ரசித்து கேட்டதையே நீ ரசித்து கொண்டிருந்தாய்… நீ என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.

                                                       --சுகுமார்—


     The Shawshank Redemption என்கிற படத்தில் Andy Dufrense என்னும் கதாபாத்திரம் செய்யாத ஒரு தப்பிற்காக ஆயுள் தண்டனை அளித்து இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய சிறையில் அடைக்கபடுவார். ஒரு முறை சிறை அதிகாரியின் அறையில் இவர் மட்டும் தனியாக இருக்கும் போது இவர் கண்களில் ஓர் இத்தாலி இசைதட்டு கண்களில் படும், பக்கத்திலே ரெக்கார்ட் ப்ளேயரும் இருக்கவே, இந்த இசைதட்டினை கேட்க வேண்டும் என்கிற ஆசை அவருள் மலரும். உடனே அந்த அறையின் கதவுகளை உள்ளிருந்தபடியே பூட்டி கொண்டு, அந்த பாடலை ஒலிக்க விடுவார். பக்கத்திலே சிறையின் எல்லா ஸ்பீக்கர்களுக்கும் இணைக்க பட்டுள்ள மைக்கும் இவர் கண்களில் படவே உடனே மைக்கையும் ஆன் செய்து சிறை முழுதும் அந்த இத்தாலி பாட்டினை ஒலிக்க விடுவார். பல ஆண்டுகளாக எந்த வகை இசையினையும் கேட்டிராத அந்த சிறை கைதிகள் அந்த இத்தாலி பாட்டினை ஒலிக்க செய்யும் அந்த ஸ்பீக்கர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ப்பார்கள். ஆயிர கணக்கான கைதிகளுக்கும் ஆயிர கணக்கான ரசனைகள் இருக்க கூடும், ஆனால் அந்த பாடலை கேட்டு கொண்டிருந்த தருணம், அந்த ஆயிரகணக்கான ரசனைகளும் ஒரே கடலில் கலக்கும் ஆயிரகணக்கான நதிகளை நினைவுபடுத்தும்.

     ”அந்த இரண்டு இத்தாலி பெண்களும் என்ன பாடி கொண்டிருந்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. உண்மை என்னவென்றால் எங்களுக்கு அதை தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. மிஞ்சி போனால் ஏதோ ஒன்றின் அழகை வர்ணிக்கும் வகையில் உருகி உருகி அவர்கள் பாடியிருக்க கூடும். ஆனால் அந்த பாடலை கேட்டு கொண்டிருந்த அந்த நிமிடம் கூண்டுக்குள் இருக்கும் பறவை தன் சிறகை அடித்து அடித்து கூண்டையே உடைத்து வெளியே பறக்கும் தவிப்பை எங்களுக்கு நினைவூட்டியது. எங்கள் அனைவருக்கும் இந்த சிறை கதவுகள் என்றாவது திறந்து எங்களை வெளியே விடும் என்ற நம்பிக்கை ஆழமாய் பிறந்தது.” – என்று Andy Dufrenseன் சக கைதி அந்த பாடலை வர்ணிப்பார்.

     சுகுமார் ‘கலாசலா’ பாட்டை தன் அம்மாவிற்கு அறிமுக படுத்தினான். அவனது அம்மா அந்த பாட்டை கேட்டு விட்டு “இதெல்லாம் ஒரு பாட்டா டா? என்னவோ போ” என்று தன் அபிப்ராயத்தை சொன்னார்கள். அப்போது அவன் இந்த இத்தாலி பாட்டினை தான் நினைவு கூர்ந்து கொண்டான். இசை எத்தனை வகையோ ரசனையும் அத்தனை வகை தான் போலும்.


3 comments:

  1. Hae surya , yaaru da sugumar, avaruku sema publicity thann po. but quite interesting. chinna visayathayum super ah solli iruka. oru velai un peruku bathila sugumar nu potu irukia. but anyway interesting and nice. Sorry un sms pathathum than padika armbichan. antha fake profile information gud. ipo neraya peru apadi pandranga. after reading this i also became a fan of kalasala song. tell to sugumar. ena thaan sugumar character ah negative first solli irunthalu, last raji ku feel panninathu super. Raji char also super da. realy gud and i like this.

    ReplyDelete
  2. சூர்யா! இதை எப்போது எழுதினீர்கள்?எக்சைல் நாவல் படித்த பின்னரா? கதையின் பெயரே ஆட்டோ பிக்ஷன் என்று வைத்ததில் இருந்தே தொடங்குகிறது உங்கள் கைவண்ணம். எளிமையான நடையில் இவ்வளவு சம்பவங்களை கோர்த்து தந்திருக்கும் உங்கள் கற்பனை வியக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த செருப்பு மாற்றும் சம்பவம். இருக்கையின் நுனியில் அமர வைத்துவிட்டீர்கள்.அதிலும் அந்த சமயத்தில் சுகுமார் கேட்கும் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். அந்த அவ்வகையில் சுகுமார் என் மனதுக்கு மிகவும் நெருங்கியவனாகிவிட்டான். அந்த இன்டர்நெட் சாட் விஷயங்கள் என்ன ஆட்டோ பிக்ஷனின் விதியா? இருந்தாலும் அந்த இடங்கள் நன்றாகவே கதையில் விவரிக்கப் பட்டிருந்தன.

    கதை முழுக்க நம்மோடு பயணம் செய்யும் கலாசலா பாடல் பற்றிய வரிகள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை சோதிக்கிறது. அதிலும் ஒரு பத்திக்கு பிறகு அடுத்த பத்தி கலாசலா பற்றி வருவது நான் லீனியரை வலுக்கட்டாயமாக திணிப்பது போல் உள்ளது. சம்பவங்களின் கோர்வை உங்கள் கதையை காப்பாற்றி விடுகிறது. சுகுமார் பற்றிய ஒரு முழுச் சித்திரம் இப்போது என் மனதில் ஆளப் பதிந்து விட்டது.

    பின்னர் ஒரு முக்கியமான விஷயம் : நீங்கள் ஆட்டோ பிக்ஷன் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ கதை படிக்கும்போது சாரு தொடர்ந்து ஞாபகத்தில் வந்து கொண்டே இருந்தார். அதைத் தவிர்க்கவே முடியவில்லை. அதிலும் இன்டர்நெட் சாட், நண்பனுக்கு உருக்கமான கடிதம்,கையில் காசில்லாமல் அலைவது, பாடல்களை பற்றிய விவரணை இதெல்லாம் ஏற்கனவே படித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இதில் என் தவறுதான் அதிகம். மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைப்பது தவறுதானே! மற்றபடி, வாழ்த்துக்கள்...

    ReplyDelete