Wednesday 14 March 2012

உணவு, உடை, உறையுள், காதல்.



            ‘வலி’.- நமக்கு இறைவன் கொடுத்த ஓர் அழகிய பாதுகாப்பு சாதனம். வலி என்ற ஒன்று இல்லையேல் நம்மை நாமே எப்போதோ மாய்த்திருப்போம். வலியின்மைக்கும், உயிர் இருத்தல்க்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தான் வாழ்க்கை சாத்தியமாகிறது. “Heart attack” ஆகிறது, அதன் விளைவாய் இதயம் வலிக்கிறது, அதன் பொருட்டு தான் நம்மால் மருத்துவம் செய்ய இயல்கிறது. ஒரு வகையில் பார்த்தால் நம் உடம்பு நம்மிடம் பேசும் ரகசிய பாஷை தான் வலி. நம் உடம்பு அதற்கான சௌகரியத்தை நம்மிடம் கேட்டு வாங்காமல் போனால் நம்மை நாமே சிதைத்து இருப்போம். இவ்வளவு நாளும் நாம் பாதுகாப்பாய் இருந்ததின் பிண்ணனி, வலியிடம் இருந்து நம்மை நாமே தப்பிவித்து கொண்ட முயற்சிகளே. வலி மட்டும் இல்லையேல் முள் மீது நடந்திருப்போம், குளிர் பொருட்படுத்த மாட்டோம், பாம்பு கடிக்கு அஞ்ச மாட்டோம்…. அவ்வளவு ஏன் பசிக்கும் நேரம் எது என தெரியாமல் ஒழுங்காய் உணவருந்த கூட மாட்டோம். பசி என்பதே ஒரு வலியாய் இருக்கும் பட்சத்தில் வயிற்று பசிக்கு தீர்வு தேடி, தீர்வு தேடி தான் நம் இத்தனை நாள் உயிர் வாழ்தல் சாத்தியமாயிருக்கிறது. வலி என்பது துன்பம் என்று  ஒரு புறம் இருந்தாலும், வலி தான் இத்தனை நாளும் நம்மை வழி நடத்தி வந்திருக்கிறது… ஓர் கண்டிப்பான ஆசிரியர் போல.
     வலியை பற்றிய இந்த உண்மை புரிந்துவிட்டால், காதலை பற்றி புரிந்துகொள்வதும் அத்தனை கடினமல்ல…

            *           *           *           *           *

எந்த வகையில் பார்த்தாலும் காமம், குடும்பம், பெற்றோரின் கனிவு, சகோதர சகோதரிகளின் நேசம், தொழிலாளியின் விசுவாசம், ஆசிரியரின் அக்கறை, கூட்டத்தில் தடுக்கி விழும் போது தூக்கி விடும் கைகள், உரிமையாய் தோள் மேல் கை போடும் நண்பன், போன்ற நிறைய நிறைய விஷயங்களுக்கு பின்னால் காதலே ஆழ்ந்த ஆதிக்கம் செலுத்திகிறது. பிறந்த கணம் முதல் இறக்கும் கணம் வரை காதல் நம் ஒவ்வொருவருக்கும் மிக தேவையாய் இருக்கிறது. அவன் துறவியே ஆனாலும், அவனுக்கு துறவின் மேல் ஓர் காதல் இருந்தால் தான், அவனின் துறவு சாத்தியம். பிச்சைகாரனாகவே இருந்தாலும் அவனுக்கு திருவோட்டின் மேல் ஓர் காதல் இருக்க தான் செய்கிறது.

            *           *           *           *           *

காதல் பற்றி சொல்லும் போது காமத்தை தவிர்த்து செல்ல முடியாது. ஆண் பெண் காதலின் பல நோக்கங்களில் காமமும் ஒன்று. காமம் இல்லையேல் இங்கு யாரும் இல்லை. ஆக, மனிதனின் ஆதியே காதல் தான். காதல் இல்லையேல் ஆதாம், ஏவாள் சேர்க்கை நடந்திருக்காது. குழந்தைகள் கண்டிருக்காது. மனித இனம் தழைத்தோங்கி இருக்காது. ஏன் எந்த உயிரும் தழைத்தோங்கி இருக்காது. பிற கோள்களை போல பூமியும் வெட்டவெளியாய் இருந்திருக்கும்.

அடிப்படையில் மோகத்திற்க்காகவும், மோகத்தின் விளைவாய் உருவாகும் கருவிற்காகவும், கருவினால் விழையும் குழந்தைக்காகவும் மனிதனின் ஆரோக்கியம் பெரிதாய் இழக்க நேரிடுறது. 70 துளி ரத்தம் சேர்ந்தால் தான் ஆணுக்கு ஒரு துளி விந்து சத்தியம். பெண்ணிற்கு பிரசவம் என்பதே மரணம் வரை எட்டி பார்க்கும் ஓர் வலி மிகுந்த பயணம். குழந்தை பிறந்த பின்னரும் எவ்வளவு போரட்டம்… கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாவது குழந்தையை பேணி பாதுகாத்தல் வேண்டும், உணவளிக்க வேண்டும், விளையாட்டு காட்ட வேண்டும் என எவ்வளவு கடமைகள். இருந்தும் உலகம் முழுதும் காமம் நடந்து கொண்டே இருக்கிறது? ஏன் மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் சேர்க்கைக்கு பின் நடக்கும் இவ்வளவு போரட்டங்களையும் சந்திக்க ஆயுத்தமாகின்றார்கள்?

மனிதனுக்கு காமம் தான் வேண்டுமென்றால் இந்நேரம் விபச்சாரி விடுதிகள் தெருவிற்கு தெரு இயங்கி வந்திருக்கும். குழந்தை தான் வேண்டும் என்றால் அனாதை ஆசிரமங்கள் அனைத்தும் எப்போதோ காலியாகி இருக்கும். ஆனால், உண்மையில் காமத்தை தேடியும், குழந்தையை தேடியும் நாம் இங்கு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கவில்லை. நம் தேடல் வேறு… அது ஆத்மார்த்தமான காதலை தேடி.

காம சுகமும், குழந்தை பேறும் காதல் நமக்கு அளித்த பரிசு. திருமணங்கள் காதலை நோக்கிய பார்வையாய் இல்லாமல் பரிசுகளை நோக்கிய பார்வையாய் இருக்கும் பட்சத்தில் தான் காதல் அவர்களிடம் இருந்து விலகி செல்கிறது.

            *           *           *           *           *

பிற உயிர் இனங்களை காட்டிலும் அதீத வளர்ச்சி மனிதனுக்கு மட்டும் எப்படி சாத்தியமாற்று என்பதை தேடி பயணித்தால் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, அபத்தமாகவும் இருக்கிறது.

மனிதன் உட்பட புறா, அன்னப் பறவை இவ்விரண்டை தவிர எந்த உயிர் இனமும் “ஒருத்தனுக்கு ஒருத்தி” என்ற குடும்ப கோட்பாட்டில் வாழ்வதில்லை. அதனால் ஒரு ஆண் இனத்திற்கு அதற்கான பெண் இனத்தை தேடுவதில் அதிக சிக்கல் இருப்பதில்லை. எப்போதாவது ஒன்றிற்கும் மேலான ரோமியோக்கள் ஒரு ஜுலியட்டிற்க்காக குழுமும் போது அங்கே சிறிதாய் ஒரு வன்முறை அவ்வளவு தான். அதில் எது ஜெயித்து வருகிறதோ அது தான் ஜுலியட்டின் அன்றைய ரோமியோ. அதன்பிறகு குட்டிகளை பார்த்துகொள்வதெல்லாம் ஜுலியட்டின் வேலை தான். குட்டிகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கண்டவுடன் ஜுலியட்டின் கடமை முடிந்தாயிற்று. அதன்பின் அவரவர் உணவுகளை அவரவரே தேடிகொள்ள வேண்டியது தான். இயற்கையின் வடிவமைப்பு அப்படி… எப்படியோ, ரோமியோவும் ஜுலியட்டும் சேர பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை. எப்போதவது அடித்த கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வளவு தான்.

ஆனால் மனிதனின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் சற்று பரிதாபம் தான். ஆதிவாசி காலத்தில் இருந்தே ஒரு ஆண் ஒரு பெண்ணை அடைய வேண்டுமென்றால், தன்னை தனித்திறமையாளனாகவோ, வீரமானவனாகவோ, பாதுகாப்பளிக்க உரியவனகவோ அந்த பெண்ணிற்கும், அவளை சார்ந்தவர்க்கும் நிரூபிக்க வேண்டும். வெகு குறைந்த பட்சமாய் வாழ்நாள் முழுக்க ஒரு பெண்ணை உணவளித்து பாதுகாப்பாக வைத்துகொள்ள முடியும் என்றாவது அவன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கும் ஓர் ஆணை அடைய வேண்டுமென்றால் தன்னை அழகாக காட்டிகொள்ளவோ, தனித்திறமை கொண்டவளாகவோ காட்டக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.  

இந்த நிர்பந்தங்களின் விளைவே ஆடல், பாடல், வேடிக்கை, விளையாட்டு, நகைச்சுவை, அலங்கார வீடு, வாகனம், நகை, அழகு நிலையம், அழகழகான உடைகள், என பல பல அம்சங்கள் தோன்றலாயிற்று. ’தன்னை தேர்வு செய்ய வேண்டும்’ என்று கையாண்ட உத்திகள் இன்றைய நாளில் பல அம்சங்களாக வடிவமாற்றம் பெற்று விட்டது. இப்போது இவையனைத்தின் மூலம் என்ன தேடினால் காதலும் காமமும் கைகோர்த்து புன்முறுவல் பூக்கின்றன.

சரியாக சொன்னால் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் செயற்கையான “ஒருவனுக்கு ஒருத்தி” கோட்பாட்டால் தான் நிறைய சிக்கல்களில் சிக்கிக் கொண்டோம். இதை ஒவ்வோர் தனிமனிதனின் விருப்பமாக விடாமல், நாகரிக அடையாளமாக திரித்து, காமத்தையும் நாகரிகத்தையும் குழப்பிகொள்கிறோம். இந்த கோட்பாட்டை எவன் மீறுகிறானோ, அவன் கேள்விக்குள்ளாகாமல் புறக்கணிக்க படுகிறான். இந்த “ஒருவனுக்கு ஒருத்தி” கோட்பாட்டை எளிதாகவோ, நிர்பந்த்தின் பேரிலோ ஒரு சிலரால் பின்பற்ற முடிகிறது. ஆனால் மனிதனுக்கு ஒத்து வராத, இந்த இயற்கைக்கு முரணான கோட்பாட்டை உலகமே பின்பற்ற வேண்டும் என கலாச்சாரமாய் திரித்ததில் தான் சிக்கல்கள்.

மனிதன் உட்பட, புறா, அன்னம் தவிர எந்த உயிரனமும் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கோட்பாட்டை முழுமையாய்  பின்பற்றுவதில்லை. இங்கே புறா என்றால் ஏதோ ஒரு புறா, இரண்டு புறா கணக்கில்லை இது. மொத்த புறா இனமும் ஒருமித்தமாய் பின்பற்றும் கோட்பாடு இது. இப்போது பிரச்சனை என்னவென்றால் கண்ணகி போன்ற பெண்கள் psycho போல் செயல்பட்டாலும் உலகம் கண்டுகொள்வதில்லை, ஆனால் ஷகிலா போன்ற பெண்கள் அவர்கள் ‘தேமே’ என்று அவர்கள் பாட்டுக்கு வேலையை பார்த்துகொண்டு சென்றாலும் “போறா பாரு, அடுத்தவனோட படுத்து வாழ்வதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று காது பட கமெண்ட் அடிப்பது தான் பிரச்சனை. இவளுக்கு மளிகை கொடுக்கும் அண்ணாச்சியில் இருந்து டிக்கெட் கொடுக்கும் கண்டக்டர் வரை அனைவரும் இவளை ஒதுக்கி பார்ப்பது எவ்வளவு மனிதம் கொள்ளும் செயல் என்று யாரும் யோசிப்பதில்லை. இப்போது, ஷகிலா என்ன புறா கூட்டத்தில் இருந்து கொண்டா விதிமுறை மீறிவிட்டாள்?. எதற்காக இவள் இப்படி புறக்கணிக்க படுகிறாள்.? எல்லா உயிர் இனமும் இப்படி தானே ஐயா இருக்கிறது,? நீ நல்லவன் என்று காட்ட அடுத்தவரை கெட்டவன் என்று வர்ணிக்க நீ யார்?

இப்போது இருக்கும் 90 சதவீத கெட்ட வார்த்தைகள் காமத்தை வைத்து தான் உருவாகி இருக்கிறது. நீங்கள் பஸ்ஸில் யார் மீதாவது தெரியாமல் இடித்து விடுகிறீர்கள்… அவன் உன்னுடைய அம்மாவை திட்டிவிடுகிறான், அன்று முழுதும் மன உளைச்சலாய் இருப்பாயா மாட்டாயா? ஒரே நிமிடத்தில் அவன் உன்னை வார்த்தையால் பலவீனப்படுத்தி விட்டான். உன்னால் என்ன செய்ய முடிந்தது. விலங்குகளில் கெட்ட வார்த்தை, மன உளைச்சல், யோகா எதுவுமே கிடையாது. விலங்குகளுக்கு காமம் என்பது குளிப்பது, டை கட்டி கொள்வது போல் ஓர் செயல். அவ்வளவு தான். முடித்து விட்டு அது அது அதன் வேலையை பார்க்க கிளம்பி விடும். நாம் தான் நயன்தாரா, படத்தில் ’லிப் லாக்’ செய்தால், “படத்துல எத்தனை டேக் எடுத்தீங்க” என்று வழிந்து கொண்டு பேட்டி எடுக்கிறோம். காமம் ஓர் செயலாய் இருக்கும் பட்சத்தில் இத்தனை முக்கியத்துவம் காமத்திற்கு இருக்குமா?

”ஒருத்தனுக்கு ஒருத்தி” என்ற மனிதனுக்கு ஒத்தே வராத கோட்பாட்டை பின்பற்றும் விளைவுகளை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? ”இந்த கோட்பாடு மனிதனுக்கு ஒத்து வராது என்று யார் உனக்கு சொன்னது… காலங்காலமாய் மனிதர்கள் இதை தானடா பின்பற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்….” என்று சண்டை கட்ட ஆயுத்தமாகும் கண்ணகி ரசிகர் நற்பணி மன்றத்தை நோக்கி நான் சில கேள்விகளை கேட்கிறேன்…

à அவ்வளவு அழகான உங்கள் கண்ணகியை விட்டுச்சென்ற  கோவலன் ஏன் மாதவியை நாடினான். கண்ணகி அவ்வளவு அழகாக இருந்தாலும் அவளின் காதலும், காமமும் கோவலனுக்கு பற்றவில்லை. மாதவி அவனுக்கு தேவைப்படுகிறது. இப்போது அவனை அடக்கி கொண்டு இருக்க சொல்ல உங்கள் கலாசரத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? ‘கலாசாரம்’ என்பதே காலத்திற்கு ஏற்றவாறு மாறி கொள்ளும் பச்சோந்தி தானே?

à ”கற்பு”, “கற்பு” என அடித்து கொள்கிறீர்களே…. எல்லா புறாக்களும் தன் வாழ்நாள் முழுதுற்குமே ஒரே இணையை தான் வைத்து கொள்ளும். வேறு இணை தேடவே தேடாது. நீ உன் முட்டாள்தனத்தால் புறாவை இணை மாற்றி கூண்டில் அடைத்து விட்டால், ஒன்று பெண் புறா தற்கொலை செய்து கொள்ளும், அல்லது ஆண் புறாவை கொத்தியே கொன்று விடும். உங்கள் எல்லா தமிழ்நாட்டு பெண்களும் இதே போல் செய்வார்களா?


à வருடம் முழுதுமாய் விவாகரத்திற்காக கோர்ட் வாசலில் நின்று கொண்டும், உரக்கடையில் தயங்கி தயங்கி பால்டாயில் வாங்கி கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்தால் உங்களுக்கு எப்படி தான் தெரிகிறது? அப்போதும் கலாசாரத்தில் எல்லாம் எந்த  குறையும் இல்லை, அது அவனது விதி என்று அறிவுஜீவி போல் வாதிடுவாயா? யோவ்… 30 நொடிக்கு ஓர் தற்கொலைகள் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. பிடித்தவர் நிராகரித்ததனாலும், கற்பை பற்றி தப்பாய் பேசி விட்டார் என்றும், சந்திகத்து விட்டார் என்றும், கள்ள தொடர்பு அம்பலப்பட்டு விட்டதே என்றும், பிடிக்காத கணவனுடன் இருக்க முடியவில்லை என்றும் பல பல காரணங்களால் இங்கு பல பல உயிர்கள் மாண்டுகொண்டு இருக்கிறது. எல்லாத்திற்கும் காரணம் உங்கள் கற்பு நெறி தானே?

à மேற்கத்திய நாட்டில் பின்பற்றும் “ஒருத்தனுக்கு ஒருத்தி கோட்பாடு” சற்று தேவலாம். அங்கு வாழ்நாள் முழுதும் ஒரே துணையை விருப்பம் இருந்தால் தான் வைத்து கொள்கின்றனர், பிடிக்கவில்லையென்றால், தன் ஒருத்தனுக்கான ஒருத்தியை மாற்றும் அளவிற்காவது அவன் சற்று தெளிவாக இருக்கிறான். அப்படி மாற்றிக்கொண்டாலும் முகம் சுளிக்காத அளவிற்கு அந்நாட்டு மக்களுக்கு பக்குவம் இருக்கிறது. அது சரி, அங்கு 35 வயது விதவை மறுமணம் பண்ணிகொண்டு தன் மீதமுள்ள வாழ்வை அர்த்தபடுத்தி கொள்ள முடிகிறது, இங்கு ஒரு விதவைக்கு அந்த சுதந்திரம் இருக்கிறதா? அவள் மளிகை சாமான் வாங்க சென்றால் கூட ”எவனோடோ படுக்க கிளம்பி போறாளோ…” என்று வீணாய் புரளியை கிளப்பி அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்களாமே? அப்படியா?


 ஒரு சமுதாயமே, ஒருவன்/ஒருத்தியின் படுக்கையறையை எட்டிப்பார்த்துவிட்டு தான், அவன்/அவள் எப்படிபட்டவன் என்பதை எடைப்போடுகிறது. தனிமனிதனின் படுக்கை சுதந்திரத்தில் சமுதயத்தின் விமர்சினத்திற்க்கு என்ன வேலை என்று தெரியவில்லை. இங்கே திருநங்கைகளிடமும், விபச்சாரிகளிடமும் முகம்சுளிக்காமல் பேசுபவர்கள் எத்தனை பேர்?

இந்த கோட்பாட்டால் எத்தனை புறக்கணிப்புகள்? எத்தனை தற்கொலைகள்? எத்தனை மன அழுத்தங்கள்? விலங்குகள் இந்த விஷயத்தில் எத்தனை புத்திசாலிகள் என்று பார்த்துகொள்ளுங்கள். பகவத்கீதையை முழுதாய் புரிந்துகொண்டது விலங்குகள் மட்டுமே…

உன்னுடையதை எதை நீ இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.

            *           *           *           *           *

இன்று 2012, இன்னமும் இந்தியாவில் காதல் திருமணத்திற்கு தடையாய் ஜாதியும், மதமும் இருக்கிறது. நியூ யார்க்கும் சரி, நைஜீரியாவும் சரி கைக்கொட்டி சிரிக்கும் விஷயமிது. அடிப்படையில் தொழில்தன்மையை வைத்து தோன்றிய ஜாதிகள் இன்னமும் இருமனம் இணைவதை தடுக்கிறது. அதுவும், ஜாதிக்கும், தனிமனிதனின் தொழிலுக்கும் தொடர்பற்று போய்விட்ட இன்றைய நிலையிலும் இந்தியர்கள் ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். இது பிற்போக்கானது என்ற தெரிந்த பின்னும் அதை மாற்றிக் கொள்ள முன் வர முடியாத நிலையில் சமுதாயம் நம்மை ஆட்கொள்கிறது. ஒருவனின் சுயமுடிவை ஒரு சமூகம் வெளியேயிருந்து ஒடுக்குகிறதென்றால் அந்த சமூகத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்? இந்த பூமியே ஓர் திறந்தவெளி சிறைச்சாலை தான். எதற்கு பிறந்தோம், எதற்கு இறக்கிறோம் என்று யாரும் இன்றுவரை உணராத பட்சத்தில், சக சிறைக் கைதியை “நீ இது தான் செய்ய வேண்டும்” என சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கிறது.

காதலர்களும் இந்த விஷயத்தில் ஒரு தலை பட்சம் தான், வெறும் திருமணத்திற்கு மட்டும் தான் அவர்களுக்கு ஜாதி தடையாய் இருப்பதில்லை. மற்றபடி குறைந்தபட்சமாக, அவனது சொந்த ஊரில் ஓர் கீழ்சாதி பையனின் தோள் மேல் கை போட்டு என்றும் சென்றிருக்க மாட்டான். பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஓர் பாதிப்பும் இருக்காது, அவன் மனதில். ஆறுதலாக, ஜாதிகளை  காதலாவது அவன் கண்ணை மறைக்கின்றதே… சந்தோஷம் தான்.

      *           *           *           *           *

”எனக்கு நீ தேவை… உனக்கு நான் இருப்பேன்” என்று சொல்லும் காதலே இறுதி வரை ஜெயிக்கிறது. இந்த இரண்டில் எதையாவது ஒன்றை உணர்த்த தவறும் பட்சத்தில் கூட காதல் முறிந்து தான் போகிறது. அன்பை வெளிகாட்ட பல வழிகள் இருக்கிறது, அதன் எந்த சாராம்சத்தை ஆராய்ந்தாலும், அது எதையாவது ’கொடுத்தால்’ தான் அன்பை வெளிகாட்டுதல் என்பது சாத்தியம். பரிசு, முத்தம், ஆச்சர்யங்கள், பூ, கடிதம், புடவை, மணிபர்ஸ், சிறிது நேரம், ஓர் செல்ல குட்டு, ஒன்று சேர்ந்து ஓர் நீண்ட பயணம், வெட்கப் படுத்தும் சிறிய கேலிக்கள், சின்ன சின்ன சேவைகள், மனம் திறந்த புலம்பல்கள், பகிர்தல்கள், முக்கியத்துவங்கள், ஒருவர் அழும் போது கொடுக்கும் சமாதானங்கள், விடை பெறும் போது வீசும் ஏக்க பார்வை, பாராட்டு, ஓர் அழைப்பு, புன்னகைக்க குட்டி குட்டி பொய்கள், உத்த்ரவாதம், நம்பிக்கை, தலையை கோதும் நுனி விரல்கள்  என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்… எதையாவாது கொடுக்கும் பொருட்டே அன்பை வெளிகாட்ட முடியும். இதுபோல், எளிய விஷயங்களை கொடுக்காமல் போவதன் பொருட்டே உறவுகள் கசக்கின்றன. காதல் கனக்கின்றன.

            *           *           *           *           *

உலகமே ’சௌகர்யத்தை’ (being comfortable) நோக்கி தான் நகர்கிறது. சௌகர்யமே உலகை இயக்குகிறது. பசித்தால் சாப்பிட சோறு, வானிலைக்கு ஏற்ற உடைகள், பாதுகாப்பான ஒரு வீடு, மன அமைதி தரும் கோவில், அலைபேசி, தண்ணீர் குழாய், தொப்பி, செருப்பு என எல்லாமும் நம்மை சௌகர்யப் படுத்துவதற்க்காகவே. அசௌகர்யகர்யத்தை யாரும் விரும்புவதில்லை. சாக்கடை அள்ளும் தொழிலாளியின் அசௌகர்யகர்யம் கூட 3 வேளையும் சாப்பிடும் சௌகர்யகர்யத்திற்காகவே. எல்லா உயிர்களுமே சௌகர்யத்தை வாங்கவே, அசௌகர்யத்தை விலையாய் கொடுக்கிறது, கொடுத்து தான் ஆக வேண்டும், அது தான் இயற்கை நியதி. இந்த வகையில் ஒவ்வொரு காதலர்களும் அவரவர் காதலர்களை சௌகர்யபடுத்தும் கருவிகள் தான். ஆனால், இங்கே காதலின் மாயம் என்றால் சௌகர்யப்படுத்துவதற்க்காக மேற்கொள்ள படும் அசௌகர்யகர்யங்கள் என்றுமே அசௌகர்யங்களாக கருதப்படுவதே இல்லை. எடுத்துகாட்டாக, முதல் மாத சம்பளத்தில் அம்மாவிற்கு எடுக்கப்பட்ட புடவைக்கான தொகை 500 ரூபாய், எந்த காலக்கட்டத்திலும் அசௌகர்யம் ஆகவே ஆகாது. காதலிக்கான 3 மணி நேர காத்திருப்பு, எந்த நாளிலும் கசப்பதேயில்லை. காதல் என்ற வணிக வங்கியில் எதை முதலீடு செய்தாலும் பன்மடங்கு லாபம் மட்டுமே சாத்தியம்.
.
     ஆக, காதல் என்பதே ஒரு மெனக்கெடல் என்று இருந்தாலும், காதல் கையில் நம்மை நாமே ஒப்புவித்ததன் பொருட்டு, காதல் நம்மை எத்தனை அழகாய் வழி நடத்தி வந்து இருக்கிறது, பாருங்கள் !!! இந்த நிலையில் தான் காதலும், வலியும் ஒன்று போல செயல்படுகிறது.

            *           *           *           *           *

மனிதனின் முக்கிய தேவைகளாக கருதப்படுவது உணவு, உடை, உறையுள் தான். காதல் ஏன் சொல்லப்படமால் போனதென்று தெரியவில்லை. எந்த நிலையிலும் உணவு, உடை, உறையுள் இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் காதல் இல்லாத வாழ்வு கடினம், அது தற்கொலை வரை ஒருவனை உந்தி விடும்.  உணவின்றி எத்தனையோ நாள் பசித்திருந்து இருக்கிறோம், குழந்தையில் உடையின்றி தான் பிறந்தோம், உறையுளின்றி பல மனிதர்கள் இன்றளவும் உலகம் முழுதும் நடைமேடையில் தூங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறந்த கணம் முதல் இறக்கும் கணம் வரை எல்லா உயிர்க்கும் காதலின் அரவணைப்பு அத்தனை அவசியாமாய் இருக்கிறது. காதலின் ஸ்பரிசம் உணராதவர் என யாரும் இங்கு இலர்.

            <3          <3          <3          <3          <3

கணினி, அலைபேசி, வாகனம் போன்ற பயன்பாட்டுக்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் காதலித்துக் கொண்டும், அம்மா, அப்பா, மனைவி, சகோதரர்கள் போன்ற காதலிக்கப்பட வேண்டியவர்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் உலகமாக இன்று ஜப்பான் இருக்கிறது. நாமும் ஜப்பான் ஆக வேண்டாம். 
அன்பிற்காக எதிர்பார்த்து கிடந்தது போதும். எதையாவாது கொடுக்கும் பொருட்டே அன்பை வெளிகாட்ட முடியும்…. நீங்கள் எதை கொடுக்க போகிறீர்கள்…?



1 comment:

  1. Surya , just got a chance to read ur post "உணவு, உடை, உறையுள், காதல் " , i am not able to believe that u wrote this in such a matured way even the older peoples cant analyze and explain this much. Lot of points which u explained i experienced in my real life. we cant change few things at a chance , but sure this blog will create a awareness to understand love in a better way. really a wonderful job. keep writing surya...With out love there is no life.

    ReplyDelete