Wednesday 25 January 2012

atom ஆட்டம்

        கூடங்குளம் பிரச்சனை, தமிழக மக்கள் முதன் முறையாக கையாளும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடையே போராட்ட குணமும், விழிப்புணர்வும் இருப்பது மக்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தையே உருவாக்குகிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு பிறகான நல்ல பாடத்தை நம் மக்கள் கற்று கொண்டு உள்ளனர். அதுவே ஒற்றுமை.

கூடங்குளத்தில் என்ன பிரச்சனை???
     
      "கூடங்குளம்" என்பது நெல்லை என கூறப்படும் திருநெல்வேலியின் ஒரு கிராமம். இங்கே முதன் முதலில் 2002 ம் ஆண்டு அன்று அணு உலை கட்டு மானப்பணி  துவங்கப்பட்டது. அப்போதே அணு மின் நிலையத்தை பற்றிய பாதுகாப்பு அம்சங்கள் கேள்வியாக்க்கப்பட்டது. ஆகவே விஞ்ஞானிகள் பொது மக்களை, பொது இடங்களில் கூட்டி விளக்கம் அளித்து, பதில் கொடுத்த  பின்பு தான் கட்டடங்களை கட்டவே அனுமதித்தனர்.


      'கூடங்குளம் திட்டம் நிறைவேறினால் தமிழகத்தின் மின் தட்டுபாடு உடனடியாக குறையும் என்றும் , முதல் உலையை கட்டி முடித்து அதில் இருந்து 1000 MW மின்சாரத்தை எடுத்து விநியோகித்து , அடுத்த உலையை அடுத்த 6  மாத காலத்தில் கட்டி முடித்து அதில் இருந்து 1000MW மின்சாரத்தை  விநியோகித்து , அடுத்த 6 வருட காலத்திற்குள் அனைத்து கட்டட வேலைகளும் முடித்து மொத்தமாக 4000MW மின்சாரத்தை விநியோகிக்கலாம்' என்ற திட்டத்துடன் கடந்த 8 ஆண்டுகளாக தங்கு தடையன்றி அணு மின் நிலையத்தை உருவாக்கி கொண்டு இருந்தனர். இந்த 8 வருடங்களில் அவ்வப்போது உபகரணங்களின் சோதனை ஓட்டம் நடக்கும், சிறிது பெரிதாக சத்தங்கள் கேட்கும் . அம்மக்கள் அந்த சத்தங்களுக்கெல்லாம்  பழக்கப்படுத்தி கொண்டார்கள்.

      ஒரு நாள் தெரு நாய்கள் எல்லாம் தெறித்து ஒடுமளவிற்கும், வீட்டில் serial பார்த்து கொண்டு இருந்த பெண்களெல்லாம் அலறி தெருவிற்கு  ஓடிவருமளவிற்கும், டீ கடையில் ஆண்கள் எல்லாம் மாநாடு போடும் அளவிற்கும் , ஒரு கூட்டம் MLA, Councillor வீடுகளுக்கு படை எடுக்கும் அளவிற்கும் வந்தது ஒரு சத்தம் அணு மின் நிலையத்தில் இருந்து .... அந்த சத்தம் காதை கிழிக்கும் அளவிற்கு இருந்ததாகவும் , மிக நீண்டதாகவும், 10 கி.மீ வரை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்த சத்தம் தான் இன்று நிலவும் அனைத்து ப்ரிச்சனைக்கும் தொடக்க புள்ளியாய் அமைந்தது . தன் வாழ்நாளிலே கேட்டிராத ஒரு அகோரமான சத்தத்தை ஒரு சர்ச்சைக்குரிய அணு மின் நிலையத்தில் இருந்து வந்தால் எந்த சாமானியனும் கலங்க தான் செய்வான். அந்த கலக்கத்தை எழுச்சியாய் பயன்படுத்திகொண்டனர் சிலர் ,அரசியிலாய் பயன் படுத்திகொண்டனர் சிலர் . அந்த ஒரு நாளில் பல்வேறு பயத்திற்கும் பீதிக்கும் தம்மை ஆட்படுத்திகொண்டனர்  அந்த மக்கள் .


கூடங்குளத்தின் பயங்கள் :


  • அணு உலை செயல் பட ஆரம்பித்தால் கசியும் கதிர்வீச்சின் மூலம் கேன்சர் போன்ற நோய்கள் வருமா?
  • கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்குமா?
  • மின் நிலையத்திற்காக கையகபடுத்திய நிலம் போக மேலும் நிலம் கையகபடுத்தப்படுமா?
  • ரஷ்யா சொன்ன இடத்தில் மின் நிலையம்  எழுப்பாமல் வேறு இடம் ஏன் தேர்வு செய்தனர்? 
  • அணு உலை கழிவுகளை ஏன் ரஷ்யா வாங்கி கொள்ளமறுக்கிறது?
  • பிரதமர் ஏன் ரஷ்யாவில் இருந்தபடி அணு உலை பற்றி அறிவித்தார்?
  • அணு உலை குளிர்ச்சிக்காக பயன் படுத்தப்படும் நீர் மறுபடியும் கடலில் கலந்தால் மீன் வளம் பாதிக்குமா?
  • மக்களுக்கு பாதுகாப்பு விளக்கங்களை சொல்லி குடுக்காமல் ஏன் மின் நிலையத்தை திறக்கிறார்கள்? இது சர்வதேச விதிமுறையை மீறும் செயல் இல்லையா?
  • சுற்றுசூழல்அறிக்கை, 16.11.11 அன்றுதான் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது , அது ஏன் ? (2002 முதலே கட்டடம் கட்ட தொடங்கி ஆயிற்று)
  • 6.5 ரிக்டர் பூகம்பம் வரை அணு மின் நிலையம் தாங்கும், 6.6 ரிக்டர் பூகம்பகம் வந்தால் என்ன ஆகும்?
இவையே கூடங்குளத்தை ஆட்டுவிக்கும் மெகா கேள்விகள்... சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது, சில கேள்விகளுக்கு விடைகள் ரகசியமானது, சில கேள்விகளின் விடைகளுக்கு பதிலே இல்லை, சில கேள்விகளின் விடைகள் மழுப்பும் வகையில் இருந்தது.

இதற்கிடையில் அணு உலை பாதிக்கபட்டால் வாய், மூக்கு போன்றவற்றை துணி கொண்டு பொத்திக்கொள்ள வேண்டும், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளிய வராமல் இருக்க வேண்டும், உணவிலும் கதிர்வீச்சு கலந்திருப்பதால் அதிகாரிகள் சொல்லும்வரை யாரும் உணவை உண்ணக்கூடாது, தண்ணீரும் குடிக்ககூடாது, அணு உலைக்கு பாதிப்பு என்று முன்கூட்டியே தெரிந்தால் அணு உலையை விட்டு 30 கி.மீ. தள்ளி செல்லவேண்டும் போன்ற ஆபத்துகால முன்னெச்சரிக்கைகளை போட்டு  குழப்பிகொள்கின்றனர். இதன் எல்லாமும் பொருட்டு திரண்டது மக்கள் சக்தி.


மக்கள் சக்தி 

         'மக்கள் சக்தி, மகத்தான சக்தி" என்பதில் தான் அழிவும், ஆரம்பமும்! நான் பார்த்தவரை மக்கள் சக்தி பெரும்பாலும் ஒரு கட்டமைப்பை உடைக்கிறதே தவிர, ஒரு கட்டமைப்பை உருவாக்குவதில்லை. நம் மக்கள் எங்கேயாவது ஒரு தொழிற்சலையை உருவாக்கவோ, SIPCOT  உருவாக்கவோ, புதிய அணைகளை உருவாக்கவோ  தன்னெழுச்சியாக போராடியுள்ளனரா?

        எல்லா உலக நாட்டு மக்களும் மக்கள் சக்தி என்ற அம்சத்தில் ஒரே சாயல் தான். ஒரு பிரச்சனையால், எங்கு இரு வேறு பட்ட பிரிவு பிரிகறதோ, அப்போது   மக்கள் எங்கு பெரும்பான்மையான கூட்டம் இருக்கிறதோ , அந்த திசை நோக்கி அவர்கள், அவர்களை நகர்த்திகொள்கின்றனர். அது என்ன பிரச்சனை , இரு தரப்பு நியாயங்கள் என்ன என்று ஆராய்ந்து பார்க்க யாரும் தயாராய் இல்லை, அவர்கள் தன்னை உடனடியாக எதாவது ஒரு பக்கம் சேர்த்திகொள்ள வேண்டும் என்ற முனைப்புடனே இருக்கின்றனர். தவறான பக்கம் சேர்ந்துவிட்டோம் என்று உணர்ந்த பின்னும் மாறாமல் தன்மானம் கருதி தொடர்ந்து வாதிடவே செய்கின்றனர். சிறுபான்மையின் பக்கம் இருந்தோ, நடுநயமாக இருந்தோ,  பெரும்பான்மையினரை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என்ற கவலை வேறு! கூடங்குளத்தில் நடப்பதும் இது போன்று ஓர் பிரச்சனை தான். 

      
     Fidel Castro வை எடுத்து கொள்ளுங்கள், அவர் அவரது போராட்டம் பற்றி ஒவ்வொருவருக்கும் விளக்கி விட்டு தான் Batista விற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார்.இதானாலே  போராட்டத்தை வீரியத்திற்கு கொண்டு வர அவருக்கு 5 வருடங்களுக்கும் மேல் ஆனது. போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேத படுத்தவோ, மக்களை தொந்தரவு செய்யவோ, யாரையும் கட்டாயபடுத்தி குழுவில் சேரவோ அவர் அனுமதிக்கவில்லை. இருந்தும் போராடினார், ஜெயித்தார். பின்னாளில் cuba வின் முதல்வராகி இன்று வரை சிறப்பான ஆட்சி அமைத்துக்கொண்டு வருகிறார். ஒரு போராட்டம் இதுபோல் ஒரு ஆக்கபூர்வமான கட்டமைப்பைநோக்கி நகரவேண்டும்.

      உம்மன்சாண்டியை எடுத்துகொள்ளுங்கள், கேரளர்கள் தமிழ் மக்களை தரக்குறைவாய் நடத்துகின்றனர், அடிக்கின்றனர். இதுவரை கேரளா மக்களிடம் வன்முறையை கையில் எடுக்கவேண்டாம் என்ற ஒரு அறிக்கை கூட விடவில்லை உம்மன்சாண்டி . பச்சிளம் குழந்தைகள் கைகளில் கூட மெழுகுவர்த்தி கொடுத்து போராட சொல்கின்றனர். அவர்கள் போராட்டம் வென்றாலும் கூட, கடைசியில் அவர்கள் அடைந்தது, என்ன என்று பார்த்தால் நம் வெறுப்பு   மட்டுமாக தான் இருக்கும். இதில் யாருக்கு என்ன பயன்?

     போராட்டத்திற்கும் வன்முறைக்குமான வித்தியாசத்தை உணரமாலே பலரும் மக்கள் சக்தி என்ற மகத்தான ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். Fidel castro முதலில் போராட்ட குழுவிற்கு  கொள்கைகளை கற்றுகொடத்த பின் தான் ஆயுதங்களை கையில் கொடுத்தார். என்றும், கொள்கைகள் உள்ள போராட்டம் தான் வெற்றி பெரும். கொள்கைகள் அற்ற போராட்டம் வெறும் வன்முறையே! 

    வன்முறைகள், வானை நோக்கிச்சுடும் ஒரு துப்பாக்கி குண்டில் அடங்கிவிடும். ஆனால் ஒரு போராட்டம், பீரங்கிகளையே பிடுங்கி எறிந்துவிடும்.

    அடுத்த நாட்டை விடுங்கள், நம் தமிழகம், மக்கள் சக்தியால் எப்படி வீழ்ந்தது என்று தெரியுமா? 1967 க்கு முன்வரை  ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நம் தமிழ் மக்கள். வேலையின்மை காரணமாகவும், நிதிபற்றாக்குறை காரணமாகவும், ஜாதிகள் ஒழிய வேண்டியும் போராட்டம் செய்து பழக்கப்பட்ட மக்கள் ஊழலிற்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தது தி.மு.க ஆட்சிற்கு வந்த 1967 க்கு பிறகே...

   காமராஜர்  ஒரு பெருந்ததலைவர். மக்கள் சேவகன். கிண்டி தொழிற்பேட்டை முதல் சத்துணவு திட்டம் வந்தது வரை காமராஜரின் ஆட்சித்திரனாலும்   சேவை மனப்பான்மையலுமே ! தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கிராமத்திற்கும், 2 முறை சுற்றுபயணம் சென்று, மலை எங்கு இருக்கிறது, குளம் எங்கு இருக்கிறது, குறவன் எங்கு இருக்கிறான், நெசவாளி எங்கு இருக்கிறான் என்று அனைத்தையும் அத்துபடியாய் வைத்துகொண்டார் காமராஜர் .

   மாநில தேர்தல் வந்தது.  இந்நிலையில், அண்ணா, கலைஞர், MGR அனைவரும் மேடை பேச்சாலும், சினிமா மோகத்தாலும் மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தனர். மக்கள் சக்தி காமராஜருக்கு எதிராக திரும்பியது. விளைவு, காமராஜரும் தன் சொந்த தொகுதியில் தோற்றார் , காங்கிரசும் மாநில தேர்தலில் தோற்றது. அண்ணாவே அவரின்  வெற்றியை எதிர்பார்கவில்லை, முதன் முறையாக ஜெயித்த அந்த புதிய கட்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பல பெருச்சாளிகள் இருந்த அந்த கட்சியில் ஊழல் ஒரு பிரதான செயலானது. அண்ணா மாநில முதல்வாராக இருந்தும், கட்சியின் பாசமிகு தலைவானாக இருந்தும், அவரால் ஊழலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசின் செயல்பாட்டிற்கு கூட அண்ணா காமராஜரையே நாட வேண்டியதாய் இருந்தது.
   
        இந்தியாவின் King maker ஆக வலம் வந்த  காமராஜர் சென்ற பிறகு, நம் மாநில  அரசிற்கும் மத்திய அரசிற்கும் நல்ல ஓர் உறவு, இன்று வரை உருவாகவேயில்லை. தமிழ்நாட்டு காங்கிரசும் பெயரளவு இயங்கும் ஓர் இயக்கமாகவும், அந்த இயக்கத்திற்கே சத்தியமூர்த்தி பவனில் தலைமை பொறுப்பிற்கு அடித்துகொள்ளும் நிலைக்கு மாறிவிட்டது.

      அண்ணா, MGR சிறந்த மனிதர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இங்கில்லை. ஆனால், தேர்தல் என்பது ஓர் நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் களமே தவிர,  அவரவர்க்கு பிடித்த மனிதர்களை தேர்ந்தெடுக்கும் களம் அல்ல. காமராஜரை தோற்கடித்த அந்த மக்கள் சக்தி இன்று வரை ஒரு மோசமான மக்கள் சக்தியாகவும், ஓர் சோக வரலாறாகவும் பார்க்கபடுகிறது.





             கூடங்குளத்தின் போராட்டவகைகள் அனைத்தும் மெய் சிலிர்க்கும் வகை தான், குறிப்பாக சுப.உதயக்குமார் விகடனின் 2011's Top 10 மனிதர்களில் முதல் ஆளாக பாராட்டுபடும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள்  இருந்தன .  150 நாட்களை தாண்டியும், போராட்டத்தின் வீரியம் சற்றும் குறைவில்லை. இவர்களுக்கு பயந்து மன் மோகன் சிங்கே ரஷ்யாவில் இருந்தபடி அணு மின் நிலையத்தை பற்றிய அறிவிப்பை அறிவிக்கிறார். எழும்பூர் ரயில் நிலையத்தை யாரும் எதிர்பாராவண்ணம் நெல்லை பெண்கள் அணு மின்  நிலையத்தை எதிர்த்து ரயில் மறியல் செய்ய, வேலைக்கு செல்வதை மறந்து கூட்டம் போட்டனர் சென்னை மக்கள்.

      மறுபுறம், மக்களின் சிறு பகுதி மட்டுமே  போராட்டத்தில் தீவரமாய் இருப்பதும், மற்றவர்கள் ஒத்துழைக்கமால் இருப்பது பெரும் பின்னடைவே! இதன் பொருட்டு அவர்களை கவர பணமும் பிரியாணியும் குடுக்கும் அளவிற்கு தள்ள படுகின்றனர், தப்பான முடிவுதான் என்றாலும்  அது அவர்களின் களநிலை. இதனால் கூலிகள் வேலைக்கு போவதில்லை. இதனால் பண்ணையம் செய்பவர்கள் அதிக கூலிகளை கொடுத்தும், வெளியூர் கூலிகளை வைத்து பண்ணையம்  செய்ய வேண்டிய நிலை. தொழிற்சாலைகளுக்கும் அதே நிலை என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.

விஞ்ஞானிகளின் விளக்கம் 

          கூடங்குளம் பிர்ச்சனை முழுவீச்சில் இருக்கும் போது, அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று பலவகையில் மத்திய அரசு சமதானபடுத்தியது . ஒரு கட்டத்தில் அணு மின் நிலையம் மேல் இருக்கும் அதீத நம்பிக்கையில், வேண்டுமென்றால் அப்துல் கலாமையே கேட்டு கொள்ளுங்கள் என்று ஒரு ட்விஸ்ட் வைத்தது மத்திய அரசு . கலாமும் மின் நிலையத்தை ஆராய்ந்துவிட்டு, நல்லா தானே இருக்கு, என்று சான்றிதழ் தர, அப்துல் கலாம் தூதுவர் போல செயல் படுகின்றார் என்று ஒரே போடாய் போட்டது போராட்ட குழு . அதன் பிறகு, எந்த விஞ்ஞானி எந்த தொழில்நுட்ப விளக்கத்தை சொன்னாலும் யாரும் கேட்க தயாராய் இல்லை. "நீங்கள் அறிவாளிகள் அல்ல!" என்று முகத்திற்கு நேராய் சொன்னதும், "ஆனானப்பட்ட அப்துல் கலாமே விலை போயிட்டாரு, இவன்லாம் ஒரு ஆளா?" என்று முகத்திற்கு பின் சொன்னதும் மெத்த படித்த விஞ்ஞானிகளை மிகுந்த வருத்ததுக்குள்ளக்கியது.

        மறுபுறம் விஞ்ஞானிகளிடம் சில கேள்விகளுக்கு விடையே இல்லை. சில கேள்விகளுக்கான விடைகள் பதிலளிக்க முடியாதென்றும் அது ரகசியமென்றும் சொல்கின்றனர். இது போராட்ட குழுவிற்கு சற்று சாதகமாய் போயிற்று என்று தான் சொல்ல வேண்டும், ஏனென்றால் இது மட்டும் தான் விஞ்ஞானிகளுக்கு  பின்னடைவாய் இருப்பது . இவர்கள் ரகசியம் என சொல்லப்படும் அனைத்தும், அணு உலை கழிவுகள் சம்பந்தப்பட்டதே,  இவர்கள் பதில் அளிக்கமால் இருக்கும் கேள்விகள், என்று பார்த்தால் ,அது  மன் மோகன் சிங்க் சம்பந்த பட்டதே. 

         இப்போதைக்கு அணு உலை கழிவு பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்துவிட்டால் எல்லா பிரச்சனைக்கும் முடிவுக்கு  வந்துவிடும், ஆனால் அதை தான் செய்ய மாட்டேன் என்கிறார்கள்  . இந்தியாவும் ரஷ்யாவும் அணு உலை கழிவுகளை தட்டிக்களிப்பதை பார்த்தால்  ஒரு புறம் அச்சமாக இருந்தாலும், இது உண்மையிலே ரகசியமானதாக  இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றமால் இல்லை. 

       அடுத்து, மன்மோகன் சம்பந்தபட்ட கேள்விகள், மன் மோகன் ஏன் ரஷ்யாவில் இருந்தபடி அறிவிப்பை வெளியிட்டார் என்று விஞ்ஞானிகளிடம் கேட்பது என்ன நியாயம் என்றே  தெரியவில்லை. மன் மோகனையும் மின் நிலையத்தையும் பிணைத்து போடுவதே தவறு. அது என்ன அவருடைய திட்டமா? நம் விஞ்ஞானிகளின் திட்டம். மின் நிலையத்தையும் மன் மோகனின் திறனற்ற ஆட்சியையும் வீண் முடிச்சு போட்டு அரசியலாக்கி ஆதாயம் தேடுகின்றனர் எதிர்க்கட்சிகள். இயக்கும் சக்தி ஒன்றாகவும், இயங்கும் சக்தி ஒன்றாகவும் இருக்கும் இடத்தில் இது தான் சிக்கல். அரசிடத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்காது . என்ன  கேள்விகளை கேட்டாலும் பதில்கள் இயக்குபவரிடத்தில் இருந்தும் வராது, இயங்கும்பவரடத்தில் இருந்து வராது. 

       அதற்காக, காங்கிரஸ் ஆட்சியில் எது வந்தாலும் கண்மூடித்தனமாய் சாடுவது சரியா என்பதையும் யோசித்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

      
  • இந்தியாவில் பல்வேறு இடங்களில் 20 அணு மின் நிலையங்கள் உள்ளன. அனைத்தும் பாதுகாப்பான நிலையிலே உள்ளன. 
  • இந்த நிலையங்களை பாதுகாப்பாக செயல்படுத்த ஏராளமான விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்க பட்டிருக்கிறது. 
  • ஜப்பான் புகிஷிமா அணு மின் நிலையத்தை இதனோடு ஒப்பிட வேண்டாம். புகிஷிமா அணு மின் நிலையம் முதல் தலைமுறை (first generation) மின் நிலையம். 
  • ஆனால் நம் மின் நிலையம் மூன்றாம் தலைமுறை வடிவமைப்பை சேர்ந்தது.
  • கூடங்குளத்தின் அணு உலைகள் மூடப்படும்போது, அணு எரிபொருளைக் குளிர்விப்பதற்காக தலா ஒரு டீசல் ஜெனரேட்டர் கொண்ட நான்கு தனித்தனி அமைப்புகள் இருக்கிறன. ஒவ்வோர் அமைப்பிலும் பம்ப் வசதியும், வெப்பத்தை பரிமாற்றிக்கொள்ளும் வசதிகளும் உள்ளன*. 
  • பொதுவாக இது போன்ற அணு உலைகளுக்கு ஒரே ஓர் அமைப்பே போதுமானது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இது போன்ற நான்கு அமைப்பு உள்ளன*. 
  • ஒட்டுமொத்த அணு உலைகளுக்கும் தானியங்கி மூலம் குளிர்விக்கும் வசதி உள்ளது*.
  • அடுத்த சிறப்பு அம்சமான core catcher பற்றியும் சொல்லி விடுகிறேன். அதவாது எதிர்பாராத விபத்துகள் வந்தால், அணு எரிபொருள்கள் அணு உலையின் அழுத்த கருவியை மீறி செல்லும்போது, நியுட்ட்ரான்களை கவர்ந்து இழுக்கும் அமைப்பை நோக்கி இந்த core catcher சென்றுவிடும். உடனே, அணு எரி பொருள்கள், அணு தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையை இழந்து விடும்*. 
           (* - LATEST TECHNOLOGIES) 

கல்பாக்கம், ஒரு பார்வை

         உலகமெல்லாம், அணு மின் நிலையம் இருப்பது இருக்கட்டும், நம் தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறுவப்பட்ட கல்பாக்கத்தின் குறைகள் என்ன ஆராய்ந்தால் ரொம்ப சிரமப்பட்டு தான் குற்றம் கண்டு பிடிக்க முடிகிறது.


  • கல்பாக்கம் பூகம்பகம் வரக்கூடிய நிலப்பகுதி - 3 என்பதால் நாளொருமுறை செயற்கை பூகம்பகம் வரவைத்து சோதித்து பார்கின்றனர். உலைகள் அதுவாக நின்று விடுகிறது.
  • சுனாமி வந்தும் மின் நிலையம் பாதிக்காமல் பாதுகாப்பாகவே இருந்ததும் இல்லாமல் , சுனாமி வந்த மூன்றாம் நாளே மின் நிலையம் செயல் பட ஆரம்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
  •  24 மணிநேரமும் பேரிடர்களை கண்காணிக்கும் அமைப்பும் உள்ளது.
  •  மனித உடலில் 250 சீவர்ட் வரை அணு கதிர் வீச்சு ஏற்பட்டால் ஒன்றும் ஆகாது. ஆனால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர், ஓர் ஆண்டுக்கு 1.87 மில்லி சீவர்ட் மட்டுமே உள்வாங்குகிறார்.
  • 2010 ஆய்வின் படி 1.6 km தொலைவில் எடுத்த சோதனையில் 0.026 மில்லி சீவர்டே இருந்தது. ஒருவரின் மொத்த வாழும் ஆண்டுகளையும் 0.026 மில்லி சீவர்டுடன் பெருக்கினால், 250 சீவர்ட் பக்கம் கூட வருவதில்லை.
  • Aspire ஆய்வு நிறுவனம் மூலம் எடுத்த ஆய்வின் படி, 22 கிராமத்தில் கேன்சர் உட்பட பல நோய்களுக்கான ஆய்வுகளை எடுத்தன. 25,146  பேரில் 48 நபர்களுக்கு  மட்டுமே கேன்சர் இருப்பது தெரிய வந்தது . அதாவது 0.22%, ஆனால் இது கேன்சரின் தேசிய சதவீதமான 4-12% க்கும் குறைவே.
  • Cooling tower இல் இருந்து வெளிவரும் தண்ணீரில் ஆயிரகணக்கான மீன்கள் குஞ்சு பொரித்து வாழ்கின்றன. ஆகா மீன் வளம் பற்றிய சந்தேகமும் தீர்ந்தபடி தான். அதுமட்டுமில்லாமல் அந்த தண்ணீரும் 8 km சுற்ற வைத்து அதன் பின் தான் கடலில் கலக்க விடுகின்றனர்.

கரும் புள்ளி என்று பார்த்தால் 2010 இல் ஒரு ஆபத்து கால பரிசோதனை நடத்தி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக உள்ளே இருக்கும் 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை விரைவில் அணு மீன் நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டும். ஆனால் 1000 பேர்களை மட்டுமே வெளி கொண்டு வரவைக்க முடிந்தது. அதிலும் ஒரு பேருந்து பங்ச்சர் ஆனது, 3 பேருந்து ப்ரேக் டௌன் ஆனது. மீடியாக்கள் கேள்வி எழுப்பியதற்கு அசடு வழிந்தது கல்பாக்கம்.

மின்சாரத்தின் பிடியில் மக்கள் 

           ஏன் அணு மின் நிலையமே வேண்டும்? என்ற கேள்விகளும் எழாமல்  இல்லை. பிற மின் நிலையங்கள் சந்திக்கும் சவால்களை காண்போம் ஒரு அலசலில்.

அனல் மின் நிலையம்:  இது காற்றை கெடுக்கிறது.  இது மின் நிலையத்தை சுற்றியுள்ள மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை குறைக்கிறது. நம் நாட்டில் புதைந்து கிடக்கும் நிலக்கரியின் அளவும் குறைகிறது. இந்தோனேசியாவில் கை ஏந்தி கொண்டிருக்கிறோம், நிலக்கரிக்கு. 5000 கிலோ நிலக்கரியை எரித்து வரும் மின்சாரத்தை யுரேனியம் ஒரு கிலோவில் தருகிறது.

நீர் மின் நிலையம்: 3 மடங்கு செலவு வைக்கும் திட்டம் இது. பருவ மழையை எதிர்  நோக்கும் நிலையம் இது. மனிதர்களையும் மரங்களையும் துரத்தி பெருமளவு இடத்தில் ஆக்கரமிக்கும் நிலையம் இது. புதிய நீர் மின் நிலையம் என்றால் எந்த வகையிலும் ஒத்து வராத திட்டமிது.

சூரிய சக்தி மின் நிலையம்: ஒரு solar deviceஐ உருவாக்க தேவையான மின்சாரம் மிக மிக அதிகமாக இருப்பதே இதன் பெரிய குறைபாடு. அந்த மின்சாரத்தை அந்த solar device மீட்டு கொடுப்பது மிக சொற்ப மின்சாரமே. 1MW மின்சாரத்திற்கு 5 ஏக்கர் நிலம் தேவை. கோடை காலத்தில் மட்டுமே உதவும். புழுதி மற்றும் மண் அடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பராமரிப்பு செலவும் அதிகம்.

காற்றாலை: பரந்த வெளி தேவை. தொடர்ச்சியான மின்சாரம் எதிர்நோக்க முடியாது. 

வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த விருப்பமான  மாமல்லபுரத்திற்கு, இப்போது  மின்சார வெட்டுக்களுக்கு பயந்தே, வர மறுக்கின்றனர். "தொழிற்ச்சாலை அமைக்க இந்தியா சிறந்த இடம் இல்லை" என்று சமீபமாக ஜப்பான் அரசாங்கம் அறிவுத்துள்ளது. தென் கொரியாவும் இந்தியாவில் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கிறது. மின்சாரம் என்பது சௌகரியம் என்ற நிலை போய் அத்தியாவசியம் என்ற நிலை ஆகிவிட்டது. வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி, மக்கள் தரம் ஆகிய பல மின்சாரத்தை நோக்கியே இருக்கிறது. போராட்ட குழு, விஞ்ஞானிகள் குழு இரண்டிலுமே சிறு சிறு ஓட்டைகள் இருக்க தான் செய்கின்றன. அதை நிவர்த்தி செய்து, கூடங்குளம்  மக்கள் ஒரு குழுவாக அமைந்து  அணு மின் நிலையத்தை செயல் பட விட்டு, அதை அந்த குழு, வாரம் இரு முறை என  கண்காணிப்பில் வைத்து கொள்ளலே என் அறிவிற்கு எட்டிய தீர்வாக நான் கருதுகிறேன்.

இதை, மின்சாரத்தின் போராட்டமாய் பார்க்காமல், வாழ்வாதாரத்தின் போராட்டமாய் பார்த்து,  மின்சாரத்தை மிச்ச படுத்த நீங்கள் ஒரு சிறிய படி எடுத்து வைத்தால் அதுவே இந்த கட்டுரையின் வெற்றி.

4 comments:

  1. good work boss! continue the same same effort!

    ReplyDelete
    Replies
    1. thank you ganesan... usually my blog will not be read by even 10 members. this time newly outside of my circle too reading and commenting.. thanx

      Delete
    2. Its very informative...excellent work..thank you for your
      informative publish...

      Delete
  2. Superb blog.....Hats off for your work

    ReplyDelete