Sunday, 12 January 2014

Veeram - Movie Review



முன்குறிப்பு – இது ஒரு நடுநிலையான க்ளாஸிக் விமர்சனம்


இந்த படத்திலும் டைட்டில் கார்டு போடுவதில், ஓர் கற்பனை வறட்சி. பொதுவாக, இது போன்ற கமர்ஷியல் படங்கள் எல்லாம், டைட்டில் கார்டு போடுவதில் குறிப்பிட்ட ரெண்டு மூன்று ஃபார்மட்டுகளையே, பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.
·         அருவா, கத்தி, கம்பு இவற்றில் ஏதாவது ஒன்று, எதாவது ஒரு மலையை போட்டு பொளந்து, படத்தின் தலைப்பை செதுக்கும்.  
·         இடி இடிக்கும், மழை பெய்யும். படத்தின் தலைப்பு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும்.
·         படத்தின் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட், ஒன்று கூடி படத்தின் தலைப்பை உருவாக்கும். உதாரணமாக, விதவிதமான பட்டாசு சேர்ந்து சிவகாசி என உருவாகுவதை போல
சென்ட்டிமென்ட்டோ என்ன எழவோ, இப்பொதெல்லாம் இடி இடிக்கும் டைட்டில் கார்டுகளே, இயக்குனர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, டைட்டில் எழுத்துக்களுக்கு சிகப்பு கலர் ஃபாண்ட் கொடுக்கவில்லையென்றால், இயக்குனர்களுக்கு ஃபினிஷிங் டச் கொடுத்த திருப்தியே வராது என நினைக்கிறேன். வீரம் படத்திற்கும் அப்படி ஒரு கற்பனை வறட்சியான டைட்டில் கார்டே நம்மை அன்புடன் வரவேற்கிறது.

படம் ஆரம்பத்தில் நன்றி சொல்லி ஓடும் ஸ்லைடில், ஜெ.மோ பெயரும் வரவே, அநிச்சையாக எதற்கும் வெளியே போகும் வழி எது என்று ஒரு முறை பார்த்து வைத்து கொண்டேன்.

ஹீரோ என்ட்ரி எல்லாம் முடிந்து கொஞ்ச நேரத்திலே, படம் கொஞ்சம் நம்மை மெல்ல வெலவெலக்க செய்கிறது. ஏனென்றால், அஜீத்திற்கு 4 தம்பிகள். ஹீரோவிற்கு ஒரு தம்பி இருந்தாலே, ஒண்ணுக்கு போகும் வரை அடிப்பார்களே என்ற பயம், நம்மை நைஸாக டாய்லட்டிற்கு போகும் கதவையும் அநிச்சையாக பார்க்க வைக்கிறது.

அதாகப்பட்டது, அஜீத்திற்கு இருக்கும் 20136 நல்ல பழக்கங்களில், ஒருவரை அடிப்பதற்கு முன்பு, அவருக்கு கறியும் சோறும் பரிமாறி, தெம்பேற்றி, அதன் பிறகு சம்பந்தப்பட்டவரை அடிப்பதும் ஒன்று. இந்த சமயத்தில், படம் பார்க்கும் ஆர்வத்தில் நாம் சாப்பிடாமல் வந்து விட்டது, அநிச்சையாக ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. (இன்னும் எத்தனை அநிச்சை, அநிச்சையாக நுழைய இருக்கிறதோ என நீங்கள் அநிச்சையாக பதைபதைக்கிறீர்கள் என்பது புரிகிறது. என்ன செய்வதுஇது ஒரு க்ளாஸிக் விமர்சனம் என்பதால் இதையெல்லாம் பொறுத்து தான் ஆக வேண்டும்).

அஜித் முரட்டுக்காளை படத்தை முரட்டுத்தனமாய் ஏழெட்டு முறை பார்த்து, தீர்க்கமாக ஒரு முடிவிற்கு வருகிறார். கல்யாணம் செய்துகொண்டால், வீட்டிற்கு வரும் மணப்பெண், அண்ணன் தம்பிகளை பிரித்து விடுக்கூடும் என்பதால், கல்யாணம் என்றாலே காத தூரம் ஓடுகிறார். தம்பிகள் கல்யாணம் செய்வதையும், இலக்கியவாதி கணக்காக பொங்கியெழுந்து வன்மையாக கண்டிக்கிறார்.

ஆனால், அஜித்தின் தம்பிகள் தமிழர்களாக பிறந்து தொலைத்து விட்ட காரணத்தால், இங்கு வெளிவரும் தமிழ் திரைப்படங்களாலும், பாடல்களாலும் உந்தப்பட்டு, தேவையோ இல்லையோ ஒரு ஃபிகரை உஷார் செய்கின்றனர். அண்ணனுக்கு திருமணம் ஆனால் தான் தமக்கு திருமணம் ஆகும் என்பதை ஆகும் என்பதை ஏதோ ஒரு ஆயா சொல்ல கேட்டு, அதன் படியே சந்தானத்தின் உதவியுடன் அஜித்திற்கு வரன் தேடுகின்றனர். அங்கு தான் தமன்னா அறிமுகம் ஆகிறார். அவனவன் 6 வருடங்கள் ஆகியும் வரன் செட்டாகாத காரணத்தால், அங்கிள் என கூப்பிடும் வயசு பெண்களை ஏற இறங்க பார்க்கும் காலக்கட்டத்தில், அஜித்திற்கு மட்டும் 2 ரீல் முடிவதற்குள் வரன் கிடைத்து, 2 பாட்டு ஓடி, அஜித் ஒரு சூப்பர் ஹீரோவாக கன்னி கழியாத தமிழர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இத்தனைக்கும் அஜித் பார்க்க தமன்னாவின் மாமானார் போல் தோற்றமளிக்கிறார். மற்றப்படி அஜித்தின் சண்டைக்காட்சிகளுக்கெல்லாம் யாரும் அசந்த மாதிரி தெரியவில்லை.

அடசொல்ல மறந்து விட்டேனே, எல்லா கமர்ஷியல் படங்களை போலவும், இந்த படத்திலும் அஜித் ஒரு அடிதடி ஆள். எல்லா கமர்ஷியல் பட நாயகிகள் போலவும் இதிலும் தமன்னாவிற்கு அடிதடி என்றாலே பிடிக்காதுஉவ்வே

படத்திற்கு இசை தேவிஶ்ரீபிரசாத். இவரின் முந்தைய பாடல்களையே, திரும்ப திரும்பபீட்மாற்றி போட்டு, நான்கைந்து பேரை லபோ லபோ என கத்தவைக்கும் பழக்கத்தை இவர் விட்டால் தான், நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறையும். இவரை பற்றி போதுமானளவு, முந்தைய விமர்சங்களிலே துவைத்து தொங்க போட்டும் திருந்தாத காரணத்தால், அடுத்த்தாக சில நடன இயக்குநர்களை பார்க்கலாம்.

அஜித்திற்கு நடனம் வராது தான், ஒத்து கொள்கிறோம். கிழக்கிந்திய கம்பெனிகள் இந்திய திருநாட்டில் அடியெடுத்த வைத்த நாளன்று, அஜித்திற்கு ஆன ஒரு ஆக்ஸிடன்ட்டை காரணமாக வைத்து இன்று வரை அவர் டான்ஸ் மாஸ்டர்களை டபாய்க்கிறார் என்பதையும் ஒத்து கொள்கிறோம். அதற்காக மெக்கானிக் ஸ்பேனர் திருகவது, பிசியோதிரபி எக்சர்சைஸ்கள் போன்று  எல்லாம் ஸ்டெப் வைத்தால் என்னாகும் என்று யோசிக்க வேண்டாமா? பாடல் காட்சிக்கு தம்மடிக்க வெளியே போனவர்கள் எல்லாம் தியேட்டரினுள் எழும் சிரிப்பு சத்தத்தை கேட்டு, சிகரெட்டும் கையுமாக திரையரங்கினுள் நுழைந்து விட்டனர். அரங்கு முழுவதும் சிகரெட் நாற்றம். அவர்களிடம் போய்இது மிகவும் கொடிய நோய்என்றா சொல்லி கொண்டிருக்க முடியும். காது மேலயே போட மாட்டார்களா?

வில்லன் வசம் இருக்கும் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகளுக்கு நல்லது செய்வதற்காகவே, அஜித் காய்கறி மார்க்கெட்டை குத்தகைக்கு எடுக்கிறார், ரேஸ் கார் ஓட்டி திரிந்து கொண்டிருந்தவர் தமன்னாவிற்காக மாடு ஓட்டுகிறார், தனக்கு கீழ் வேலை செய்த வேலைக்காரனுக்கு கல்யாண பரிசாக அவனுக்கு காய்கறி மார்க்கெட்டில் ஒரு போர்ஷனை ஒதுக்கி கொடுத்து அவனை முதலாளி ஆக்குகிறார்இப்படியே அவர் நல்லவர் என நிரூபிப்பதற்காக அதையும், இதையும் செய்து கொண்டே இருக்கிறார். நமக்கோ இன்டர்வெல் எப்ப டா விடுவீங்க என தவியாய் தவிக்கிறது. எவ்வளவு நேரம் தான் சாப்பிடாமல் அடி தாங்குவது

பொண்ணுக்கு அப்பாவாகவே நடித்து நடித்து அலுத்து போய், கிட்டத்தட்ட வி.ஆர்.எஸ் வாங்கி சென்று, சமீபகால படங்களில் வெரைட்டி வெரைட்டியாக வலம் வந்த நாசரை, மயக்க மருந்து போட்டு கடத்தி வந்து தமன்னாவிற்கு அப்பாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அஜித்தை பற்றி தமன்னா, தன் அப்பாவிடம் தொலைபேசியில் எடுத்து சொல்லி, அஜித்தை காதலிச்சிக்கிட்டுமா என பெர்மிஷன் கேட்க, ஆளு எப்படிம்மா என நாசர் கேட்க, செம்ம வொய்ட் ப்பா என தமன்னா சொல்ல, அஜித்தின் தலை முதற்கொண்டு வொய்ட்டாக தான் இருக்கும் என்ற விஷயம் தெரியாமல், நாசர் செம்ம குஷியாகி அவரை ஊருக்கு கூட்டிட்டு வாம்மா என சந்தோஷமாக அழைப்பு விடுக்கிறார்.

ஊருக்கு வரும் வழியில், ரயிலில் வைத்து ஒரு சண்டை காட்சி வருகிறது. கிட்டத்தட்ட சண்டை முடிந்து விட்டது என்ற நினைப்பில், அஜித் ஹீரோயிட்டிக்காக தமன்னாவை பார்த்து, மாமாவை என்னான்னு நினைச்ச, உன்மேல ஒரு துரும்பு கூட பட விடமாட்டேன் டா செல்லம் என சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த வழியாக பறந்து வந்த ஒரு கோடாரி லைட்டாக தமன்னாவை ஸ்க்ராட்ச் செய்து விட்டு, மலேசியா நோக்கி போகிறது. அஜித் தமன்னாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி ஓடுகிறார்.

வந்தது இன்டர்வெல்கோட்டான கோட்டி நன்றிகள் யேசப்பா…. கோட்டான கோட்டி நன்றிகள்

முக்கால்வாசிக்கும் மேலான தமிழ் திரைக்காவியங்களின் இடைவேளைகள் சண்டை காட்சிகளோடு முடிவதால், இடைவேளை முடிந்து வரும் சீன் ஹாஸ்பிட்டல் சீனாக தான் இருக்கும் என்ற அளவிற்கு தமிழன் லாஜிக்கில் கில்லியாக இருப்பதால், கேண்டீன் போன மொத்த ஜனமும், 5 நிமிஷம் தாமதமாகவே வந்தனர். ஆனால் அவர்கள் எல்லாம் சிரிப்புமிக்க சில வடிவேல் காமெடிகளை மிஸ் செய்த துரதிர்ஷ்டசாலி ஆகிவிட்டார்கள் என்று நினைக்கையில், கொஞ்சம் ஜாலியாக இருந்தது. “இருப்பா ஒரு பொசிஷனுக்கு வந்துக்குறேன்என்ற மருதமலை காமெடியை, அஜித்தே நம்மை மகிழ்விக்க நமக்கு பெர்ஃபார்ம் பண்ணுகிறார். அநேகமாக அது அஜித் வடிவேலுவிற்கு கொடுக்கும் ட்ரிபூட்டாக தான் இருக்கக்கூடும். அது போக மற்றுமொரு க்ளாஸான வடிவேல் காமெடியையும், அஜித் நமக்காக ட்ரிபூட் செய்கிறார்மனுஷன்னா, நீ தான் யா மனுஷன்

என்னா டா இவன், கதையையே சரிவர சொல்ல மாட்டேங்கிறானே என நீங்கள் அலுத்து கொள்வது புரிகிறது. முன்பே சொல்லியிருக்கேன் அல்லவாக்ளாஸிக்க்ளாஸிக்விமர்சனம்விமர்சனம்….

ஆர்ட டைரக்ஷன் நேர்த்தியாக இருந்தது. சினிமெட்டோகிராபி ஃப்ரெஷாக இருந்தது. படத்தொகுப்பு பக்காவாக இருந்தது. (என்னதுஅப்படின்னா என்னாவா….? எல்லாரும் சொல்றதை தானே நானும் சொல்றேன், இவங்களோட மல்லுக்கட்டாத டா சூனாபானா, அடுத்த பத்திக்கு ஓடிடு…)

தமன்னாவிற்கும், நாசருக்கும் அடிதடி என்றாலே ஆகாது. ஆனாலும் தமன்னாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் அஜித், தமன்னாவிற்காக அடிதடிகளை கைவிடுகிறார். ஆனாலும், நாசர் மீது இருக்கும் பகையால், வில்லன் கும்பல் நாசரை அழிக்க நினைக்கிறது. அவர்கள் அத்தனை பேரையும் அஜித் சமயோகிதமாக (சமயோஜிதமாசமயோகிதமாஐயையோ தெர்லயே…) சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில், அஜித் ஒரு ஃபைட்டு பார்ட்டி என நாசரின் குடும்பத்திற்கு தெரிய வரவே, எல்லோரும் ஒட்டு மொத்தமாக அஜித்தை அன்ஃப்ரெண்டு செய்து விடுகிறார்கள். அதன்பின், படத்தின் பிரதான வில்லனே அஜித்தை பற்றி நல்லவிதமாக நாசரிடம் எடுத்து சொல்லவே, நாசர் அஜித்தை ஃப்ரெண்டு லிஸ்ட்டில் இணைத்து கொள்கிறார். இதான் யா படம், கதையை சொல்லிட்டேன் போதுமா

இப்ப புடி டா இலக்கிய தரத்தைஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியையும், பெருவாரியான மக்களுக்குள் ஆழமாக வேரூன்றி படர்ந்திருக்கும் வன்முறையையும், வீரம் படம் கேள்விக்குள்ளாக்கி, அதன் வீரியத்தை ஆழ பதிவு செய்தாலும், இதன் தீர்வாக எந்த ஒரு கருத்தையும் முன்வைத்து சொல்லப்படாதது படத்தின் பலவீனம்சாவு டா
    
அஜித் அழகாக ஜொலிக்கிறார், சண்டைக்காட்சிகளில் தெறிக்க விடுகிறார் ஆனாலும் படம் முழுக்க நரைத்த முடியோடு தோன்றுவது, அஜித்தும் நாசரும் க்ளாஸ்மேட் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. (இதாமுல்ல நடுநிலை, இரண்டு குட்டி ப்ளஸ், ஒரே ஒரு பெரிய நெகட்டிவ்முடிஞ்சது மேட்டர்நடுநிலை ரெடி)

இப்போதெல்லாம் 10வது படிக்கும் இளசுகளே, வீணா காதல் வசனங்களை பேசி, ஒருவருக்கு ஒருவர் டார்ச்சர் கொடுத்து கொள்ளாமல், ECR பக்கம் ஒதுங்கும் இந்த காலக்கட்டத்தில், அஜித்தும், தமன்னாவும் பேசும் காதல் கத்திரிக்கா வசன்ங்கள் எல்லாம் இடைவேளையின் போது சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தி வர வைக்கிறது.

தமன்னா அஜித்தை காதலோடு திரும்பி பார்த்தாலே, “பாட்டை கீட்டை போட்ராதீங்கஎன்று மனம் அடித்து கொள்கிறது. இறைவன் எப்போது நம் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்திருக்கிறான்…! படம் போகப்போக, தமன்னா அஜித்தை சும்மா பார்த்தாலே, பாட்டு தானேபாடிக்கோ போ மா, என்று அனுமதி கொடுக்கும் ஜென் நிலைக்கு வந்து விடுகிறோம்.

படம் பொங்கலுக்கு வெளிவருவதாலோ என்ன எழவோ, ஒரு பாடலுக்கு அஜித், கோட்டுக்கு வேஷ்டி கட்டி வருகிறார்…. கருமம் டா…

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த்து நாசர் தான். மாறி மாறி அடிவாங்கி, படாத அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கும் நம்மிடையே, ஆறுதலாக பேசுவது அவர் ஒருவர் தான்

படம் சூரமொக்கையாக போய்கொண்டிருக்கும் ஒரு காட்சியில், “போய்டுங்கய்யா…. தயவு செய்து இங்கிருந்து போய்டுங்கய்யாஎன நம்மை கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறார்.

இன்னொரு சீனில்சக்தி இல்லைப்பாஎனக்கு இன்னொரு சாவை தாங்கற சக்தி இல்லைப்பா, தயவு செய்து இங்கிருந்து போய்டுஎன்கிறார்.

வேறு ஒரு சீனில்என் குடும்பத்துக்காக தனியா நின்னு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கியே…” என நம்மை பார்த்து நெகிழ்ந்து, “நீ நல்லாயிருக்கனும் பாநல்லாயிருப்பீங்க” என வாழ்க வளமுடன் மகரிஷியின் உள் அன்போடு நம்மை வாழ்த்துகிறார்.

இதை விட, ஒரு சிறப்பான நன்றியுரையை எந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள்…! அப்போது, அதுவரை வலி தாங்காமல் கலங்கிய நமது கண்கள், நெகிழ்ச்சியால் கலங்க ஆரம்பிக்கிறது

மொத்தத்தில் வீரம்கர்ச்சீப் ஆச்சு ஈரம்




Saturday, 30 November 2013

நவீன சரஸ்வதி சபதம்







இந்த படத்தை பற்றியெல்லாம், ஒரு பதிவு எழுதுவதையே கேவலமாக நினைக்கிறேன். இரண்டாம் உலகம், ராஜா ராணி போன்ற அரைவேக்காட்டு தனமான படங்களை க்ளாஸிக் என நினைப்போருக்கு, இந்த படம் பிடிக்கலாம்

இந்திய தேசம் முழுவதும் தேடியதில் நாலே நாலு மொடா குடிகாரர்கள், சிவனுக்கு கிடைக்கிறார்கள். அவர்களிடம் திருவிளையாடல் செய்து, அவர்களின் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க செய்வது தான், நவீன சரஸ்வதி சபதம். காமெடி படம் என்ற பேனரை தாங்கி வந்த இந்த படம், திரையரங்கில் ஒருவரை கூட சிரிக்க வைக்காதது கேவலத்திலும் கேவலம். கதை, திரைக்கதை, இசை, பிண்ணனி இசை, நடிப்பு என்று எங்கு புகுந்தாலும் நொட்டை சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது, என்னை கேட்டால் 2013-ல் வெளி வந்த படங்களில் விமர்சனம் எழுத கூட தகுதியில்லாத படம் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

படத்தை தவிர்த்து வேறு சில விஷயங்களை பேசலாம் என நினைக்கிறேன். குடிப்பழக்கத்தை திருத்துகிறேன் என்ற பேர்வழியில் ஆளாளுக்கு எடுக்கும் டாக்குமென்ட்ரி படங்கள், சீரியஸ் படங்கள், காமெடி படங்கள், குறும்படங்கள் என எல்லாமும் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்து கொண்டிருக்கிறன. இப்படி தொடர்ந்து தோல்விகளையே தழுவி கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்தை எதிர்க்கும் தகுதியான திரைப்படங்கள் கூட கேலிக்கூத்தாக்கப் படலாம் அல்லது மொண்ணையாக்க படலாம். இவர்களின் அடிப்படை நோக்கம் வணிகம் தான் என்றாலும், ஆர்வக்கோளாறு காரணமாக தகுதிக்கு மீறி மெஸெஜ் எல்லாம் சொல்கிறார்கள்.

கொஞ்ச வருடங்கள் முன்பு, ஏதோ ஒரு நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை மக்கள் விட்டொழிப்பதற்காக, அந்நாட்டு அரசு சார்பாக ஒரு பயங்கரமான விளம்பர பலகை வைக்கப்பட்டது, அதில் ஓர் தூண்டில் முள், புகை பிடிப்பவரின் வாயை மாட்டி இழுப்பது போல் பார்த்தாலே அருவருப்பும், அதிர்ச்சியும் உண்டாகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து பெருமளவு மக்கள் தங்களது சிகரெட் பழக்கத்தை விட்டொழித்தனர் என்று, அதன் அருகாமை நாடுகளும் கூட அதனை பின்பற்றினர். இது எப்போவோ படித்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில் வெளி வரும் குடிக்கெதிரான படங்களை எல்லாம் நான் எவ்வள்வு நாட்கள் நினைவில் வைத்திருப்பேன் என எனக்கே தெரியவில்லை.

மதுபான கடை படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதே ஒழிய வெகுஜன மக்களின் கவனிப்பை பெறவில்லை, அங்கேயே படம் தோற்றுவிட்டது. இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் கதையம்சமும், நகைச்சுவையும் பேசப்பட்டளவு கூட அதன் குடிக்கெதிரான சங்கதிகள் பேசப்படவில்லை. திரையரங்குகளில் திரையடப்பட்டும் கேன்சர் தொடர்பான காட்சிகள் எல்லாம் எப்போதோ கேலிக்குரிய ஒன்றாக மாறி போய் விட்டது. புகையிலை பழக்கத்தால் வரும் பாதிப்புகளை நேரடியாக மக்களிடம் எடுத்து சொல்லி, அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாலும், அதில் காட்டப்படும் நோயாளிகளோடு மக்களால் ஒன்ற முடியவில்லை. பெயருக்கு என ஒரு வீடியோவை, மத்திய அரசு தயாரித்து வெளியிட்டால், அது இப்படி தான் இருக்கும்

குடி மட்டுமே நம் தேசத்தின் பிரதான பிரச்சனை போலவும், குடிப்பழக்கம் மக்களை விட்டு ஒழிந்தால் தேசமே சொர்க்க பூமி ஆகிவிடும் என்பது போல் இங்கு ஒரு போலி பிம்பம் ஒழுக்கச்சீலர்களாலும், அரசியல் கட்சிகளாலும் ஏற்படுத்தப்படுகிறது. கல்விமுறை, சாயப்பட்டறைகள், மலினமான அரசியல் கொள்கைகள், மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு, விவசாயம் ஊக்குவிப்பு இன்மை, வேலையில்லா திண்டாட்டம், தப்பும் தவறுமான சிஸ்டங்களுடன் செயல்புரியும் அரசு அலுவலகங்கள், அடிப்படை ஆரோக்யம் குறித்த அக்கறையின்மை என எல்லா பக்கமும் நோய் வாய்ப்பட்டிருக்கும் சமூகம், குடிப்பழக்கத்தில் மட்டுமே நோய் வாய்ப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்ட ஒழுக்கச்சீலர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த தகுதியும் இல்லை. குடிப்பழக்கத்தை திருத்துவதை விட இங்கு பற்றி எறியும் பிரச்சனை எத்தனையோ இருக்கின்றது.

சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் 100 வயது வரை கூட மக்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி குடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க்கையிலும் முன்னேறி கொண்டு தான் இருக்கிறார்கள். அங்கு தரமான மதுவும், புகையிலையும் கிடைக்கும் வகையிலாவது அந்நாட்டு அரசு அவர்களுக்கு வழி வகுத்திருக்கிறது. இங்கு அதற்கான கட்டமைப்புகளும் இல்லை, எதிர்த்து கேட்க யாருக்கும் துப்பும் இல்லை.

சொல்ல மறந்து விட்டேனே, படம் ஆரம்பிப்பதற்கு முன், தமிழக அரசின் சாதனைகளை விவரித்து 15 நிமிடம் வீடியோ ஒன்று ஓடியதுஅந்த கொடுமையையும் பொறுமையாக உட்கார்ந்து பார்த்தேன்.

இரண்டாம் உலகம் – An Exhibition









சமீபத்தில் வந்த திரைப்படங்களில், இவ்வளவு அபார உழைப்பை தாங்கி வந்த திரைப்படம் இதுவாக தான் இருக்கும், படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல் அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால், வெறும் அழகு மட்டும் நம்மை திருப்திப்படுத்தாது என்பதற்கு, இரண்டாம் உலகம் ஓர் உதாரணம்.

செல்வ ராகவனை டைரக்ஷனில் தான் ஆள் கெட்டியே தவிர, ஸ்க்ரிப்ட்டில் ரொம்பவே தள்ளாடுகிறார், இருந்தாலும் அவரை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்தவன் லவ்வரை உஷார் செய்வதையே கதைக்களமாக வைத்து, தான் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும், ஒவ்வொரு வெரைட்டி காட்டுகிறார். படத்தில் ஸ்க்ரிப்ட் தரம் என்ன என்பதனை ஆராய்ந்தால், எந்த அளவும் இறங்கி அடிக்கலாம்

படத்தில் இரண்டு ஆர்யா, இரண்டு அனுஷ்கா

ஆர்யா சில காட்சிகளில் ரவிகிருஷ்ணாவை ஞாபகப்படுத்துகிறார், ஆர்யா அழகாக இருக்கிறார் என்பதை தவிர, அவரிடம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்னவென்றே தெளிவாக சொல்லப்படவில்லை என நினைக்கிறேன். முதல் உலகத்தில் வரும் ஆர்யா, ஒரு தீவிர சமூக சேவகனாக காண்பிக்கப்படுகிறார், ஆனால் எல்லாம் ஒரு 5 நிமிடத்திற்கே, அதன் பிறகு சமூக சேவை எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. காதல் வந்ததும் காணாமல் போய் விடுகிறது. அப்படியென்றால் இந்த படத்தின் வில்லன் யார் என்று பார்த்து கொள்ளுங்கள். இரண்டாம் உலகத்தில் வரும் ஆர்யா, வேலைவெட்டி இல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி கொண்டும், அனுஷ்காவும் ரூட் விட்டு கொண்டும் திரிகிறார், கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, திடீரென்று ஒரு மாபெரும் வீரனாக உருவெடுத்து விடுகிறார். அது எப்படி என தெரியவில்லைஅவ்வப்போது, சில பல காமெடி காட்சிகளை கூட முயற்சி செய்து பார்த்திருக்கின்றனர், ம்ஹூம்ம்ம்…. 

முதல் பாதியில், மருத்துவர் அனுஷ்கா இறந்த பின்பு, நாய் ஒன்று மதுபாலக்கிருஷ்ணனை அதாவது ஆர்யாவை அனுஷ்கா இறந்த இடத்திற்கு அழைத்து செல்கிறது, அங்கே சொட்டி கிடக்கும் ரத்தத்தில் இருந்து செடி ஒன்று முளைக்கிறது. அது எதற்கான குறியீடு என்று இப்போது வரைக்கும் எனக்கு விளங்கவில்லை. அதன்பின் மதுவின் அப்பா இறந்து விட்டதாக செய்தி வருகிறது, ஆனால் அவரின் ஈமச்சடங்கிற்கு போனாரா என்று தெரியவில்லை, இறந்து போன அனுஷ்காவை, சுடுகாட்டை விட்டுவிட்டு கோவா முழுதும் தேடி அலைகிறார்.

படத்தில் வரும் இரண்டாம் உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை தவிர எல்லாரும் வெளிநாட்டவர்களாக இருக்கின்றனர், அதுவும் மொத்த உலகமும் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்புலமாக கொண்டுள்ளது போல் தெரிகின்றது. ஆனால் அவர்கள் தமிழ் பேசுகிறார்கள்.
  
இப்படி ஸ்க்ரிப்ட்டில் எந்த குறுக்கு சந்தில் புகுந்தாலும், நமக்கு அங்கு ஒரு காமெடியான லாஜிக் ஓட்டை காத்து கொண்டிருக்கிறது. படம் மொத்தமும் மொக்கையாக போகிறதா, சாஃப்ட்டாக போகிறதா என்று கண்டுபிடிக்கவே தனியாக மூளையை போட்டு கசக்க வேண்டியதாய் இருக்கிறது. ஆர்யாவின் சமூக சேவை என்னவானது, இரண்டாம் உலகத்தின் ஆணாதிக்கம் முடிவிற்கு வந்ததா, அரசன் தூக்கியெறியப்பட்டானா, இரண்டாம் உலகத்தின் எதிரிகள் அழிக்கப்பட்டனராஎதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை. கதாநாயகனும், கதாநாயகியும் கல்யாணம் செய்து கொண்டு கஜாகஜா  செய்தார்தார்களா, இல்லையா என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். அது தான் கதை,,,

பல பரிமாணங்களை பார்த்து விட்ட தமிழ் சினிமா, இந்த படத்தை பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு நமக்கு தந்திருப்பது ஏமாற்றமே என்றாலும்படத்தின் சி.ஜி காட்சிகள், படத்தின் செட், கேமரா, காட்சி நேர்த்தி என நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை, அதிலு,ம் சில பாடல்கள் நம் பொறுமையை சோதிக்கிறது. ஆனால் படத்தின் பிண்ணனி இசை மிகவும் ரம்மியமாக இருந்தது. படம் முடித்து வெளியே வந்ததன் பின்னரும், அதன் பிண்ணனி இசை வெகு நேரம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இவ்வளவு கடின உழைப்பை டெக்னிக்கல் டீம் கொடுத்தும், ஸ்க்ரிப்ட் தள்ளாடுவதால் படம்பல்ப்வாங்குவது, சோகத்திலும் சோகம்!

இந்த பதிவை அனுஷ்காவை வைத்து முடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்

இப்போதிருக்கும் கதாநாயகிகளில் அனுஷ்காவே முன்னிலை வகிக்கிறார் என்றாலும், தமிழில் இது வரை அவருக்கு ஏற்ற பாத்திரத்தை எந்த தமிழ் சினிமாவும் தராமல் இருந்தது. ஆனால், இரண்டாம் உலகம் நிச்சயம் அவருக்கு ஏற்ற மாஸான ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது. வெகு நிச்சயமாக, அனுஷ்கா மட்டுமே, இத்தனை நீளமான தள்ளாட்டமான படத்தை பார்க்க வைக்கிறார். அவ்வளவு அழகாக இருக்கிறார், படத்தின் காஸ்ட்யூம், லொக்கேஷன், கேமரா, ஸ்டன்ட் என ஒவ்வொருவரும் மாய்ந்து மாய்ந்து அனுஷ்காவிற்காகவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அத்தனைக்கும் அவர் தகுதியானவர் என்பதனைஇரண்டாம் உலகம்மூலம் நிரூபித்தியிருக்கிறார்.

லவ் யூ அனுஷ்கா….!