Monday, 12 January 2015

A Death which is long waited

அவர் பெயர் குபேந்திரன். பார்க்க 40 வயது ஆள் போல் இருப்பார். அவருக்கு வயது 29. கருப்பாக இருப்பார், உடல் பருமனாக இருப்பார், சில நேரம் அவரது சிவந்த கண்கள் முந்தைய நாளின் நிலவரத்தை விளம்பரப்படுத்தும்.

குபேந்திரன் எங்கள் காலேஜில் தான் பணி புரிகிறார், Lab technician. சம்பளம் 8000 இருக்கலாம். எங்களிடம் சொன்னதில்லை. ஆனால் அவர் சம்பளத்தை மட்டுமே நம்பி வேலை செய்யவில்லை என்றும் அவ்வப்போது குறும்பாக கண்ணடிப்பார். polytechnic படிப்பை முடித்து விட்டு, கொஞ்ச நாள் கம்பெனியில் வேலை பார்த்தார். என்ன காரணத்திற்காகவோ lab technician ஆக இங்கு வந்து வேலைக்கு சேர்ந்துக் கொண்டார். வேலைக்கு வந்து சேர்ந்து இதோடு மூன்று ஆண்டு முடிவடைந்தது என்றே நினைக்கிறேன். இது நாலாம் ஆண்டு. Mechanical lab மொத்தத்துக்கும் அவர் ஒருவரே கண்காணிப்பாளர் / லேப் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் / இன்னபிற எடுபிடியாளர். வேலைப்பளு அதிகம். பலசமயம் அசால்டாக வேலையை தட்டி கழித்து விடுவார். சிலசமயம், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் பேய் போல் வேலை செய்து எல்லோரையும் அசரடித்து விடுவார்.

இவரை பற்றி அவரிடம் போட்டு கொடுப்பது, அவரை பற்றி இவரிடம் ஏற்றி விடுவது போன்ற பற்ற வைக்கும் வேலைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவார். ஆர்வம் காட்டுவாரே தவிர, அப்படி ஒன்று பற்ற வைக்கும் விஷயத்தில் ஸ்பெஷலிஸ்ட் கிடையாது. பொய் பேசி, பின் அறியப்பட்டு அசடு வழிந்த தருணங்கள் சிலது இருக்கின்றன.

குபேந்திரன் குடிப்பார். விளையாட்டாக குடிக்க ஆரம்பித்ததாய் சொல்வார். எவ்ளோ தான் குடித்தாலும், தன்னோடைய லிமிட்டை தாண்டி போக மாட்டேன் என பெருமை கொள்வார். போதைக்கு அடிமை கிடையாது என தற்புகழ்ச்சி கொள்வார். ஆனாலும், தினம் சாயங்காலம் டாஸ்மாக் போகாமல் அவரால் இருக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். எங்களுக்கும் தெரியும்.

வாழ வழி தெரியாமல், அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின் தான் பாலிடெக்னிக் பக்கம் ஒதுங்குவான். அந்த வகையில் மக்கு பயல்கள், படிக்கும் போது ரவுடித்தனம் செய்தவர்கள் கூட்டமெல்லாம் பாலிடெக்னிக்கில் கூடும். பாலிடெக்னிக் வாத்தியாரை டாஸ்மாக் வாசலில் பார்ப்பதும், தினத்தந்தி கள்ளக்காதல் செய்திகளில் பார்ப்பதும் சர்வசாதாரணம். இவர்களுக்கு பாலிடெக்னிக் காலேஜ் தேவை, இதையும் விட்டால் கூலி வேலைக்கெல்லாம் போக வாங்கிய பட்டம் அனுமதிக்காது. பாலிடெக்னிக் காலேஜுக்கும் ஆட்கள் தேவை, ஆனால் இவர்கள் தான் சிக்குகிறார்கள்.

சம்பள நாள், பிறந்த நாள், பண்டிகை நாள், திருமண நிகழ்ச்சி சில சமயம் சாவு நிகழ்ச்சிகளில் கூட ஆட்கள் ஒன்னு கூடினால் கடைக்கு போவதெல்லாம் டீஃபால்ட்டிலும் டீஃபால்ட்.
குபேந்திரனின் குடும்பத்திற்கு டவுனிலே சொந்தமாய் வீடு இருக்கிறது. ஓட்டு வீடு தான். ஒரு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு பின்புறத்தில், ஒரு சின்ன சந்தில் அவரது வீடு இருக்கிறது. உடன் பணிபுரிபவர் யாரையும் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றதில்லை. ஏனென்றால் வீட்டிற்குள் மரியாதை இல்லை.

வெறும் lab technician தான் என்றாலும், கல்லூரி மாணவர்களுக்கு குபேந்திரனை மிகவும் பிடிக்கும். Lab examination லும் சரி, Theory examination லும் சரி குபேந்திரனால் என்னென்னவெல்லாம் மாணவர்களுக்கு சாதகமாக செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வார். IV ல் பசங்களோடு பசங்களாக கலந்து ஜாலியாக ஆட்டம் போடுவார். கட்டிங்கும் ஏத்துவார். எவ்வளவு தான் ஜாலியாக இருந்தாலும் பையன்களை கண்ட்ரோலிலும் வைத்திருப்பார்.

அடிக்கடி கடன் கேட்பார். சில சமயம் சர்ப்ரைஸாக கடனை திருப்பி கொடுப்பார். பல சமயம் இழுத்தடிப்பு தான். கடனை திருப்பி கேட்பவர்களுக்கே போர் அடித்து விடும். அதனால், பெரும்பாலும் யாருமே அவருக்கு பணம் தருவதில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் உட்பட... அதனால் பணம் தேவைப்பட்டால் வட்டிக்கு தான் வாங்குவார்.

வாழ்க்கையில் ஜாமீன் கையெழுத்தே போட கூடாது என்று நாங்கள் தெரிந்து கொண்டது, குபேந்திரன் மூலம் தான். ஒரு க்வார்ட்டருக்கு ஆசைப்பட்டு ஜாமீன் கையெழுத்து போட்ட குற்றத்திற்கு, ஒவ்வொரு மாசமும் இவர் தான் அந்த பணத்திற்கு வட்டி கட்டி கொண்டிருக்கிறார்.

எப்போதுமே சட்டையை டக் இன் செய்திருப்பார். அவர் டக் இன் எடுத்து விட்டு நாங்கள் யாருமே பார்த்ததில்லை. அவர் தொப்பையை மறைக்க தான் சட்டையை டக் இன் செய்கிறார் என எப்போதும் கிண்டலடிப்போம். அவரும் சளைக்காமல் எங்களுக்கு கவுண்ட்டர் கொடுப்பார்.

மாசக் கடைசியில் தண்ணியடிக்க காசில்லை என்றால் லேப்பில் இருக்கும் work piece களை யாருக்கும் தெரியாமல், வெளியே எடுத்து போய் எடைக்கு போட்டு பணம் தேத்துவார். மாணவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் குபேந்திரனை தான் தேடுவார்கள். தண்ணி வாங்கி கொடுத்தும் தாஜா செய்வான், சில சமயம் பணமாவும் கை மாறும்.

ஏதோ கன்சல்டன்சி லிங்க் பிடித்து வைத்திருக்கிறார். அதை வைத்து, படித்து முடித்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவார். அதற்கு கமிஷனும் வாங்கி கொள்வார். இதில் பிரச்சினை ஏதும் வராது. பிரச்சினை ஏதும் ஏற்பட்டாலும் கொடுத்த பணம் திரும்ப வரவே வராது.

எல்லா இந்திய ஆண்களை போல, பணியிடத்தில் மலர்ந்த முகத்துடன் வேலை பார்ப்பார். கோபத்தை எவ்வளவு கஷ்டப்பட்டேனும் அடக்கி கொள்வார். வீட்டில் அப்படியே தலைகீழ். தொட்டதுக்கெல்லாம் கத்துவார்.

வட்டிக்கு வட்டி, அதுக்கும் வட்டி என எந்த பணத்தை எங்கே கட்டுவது என தெரியாமல் தவிப்பதெல்லாம் அனுதின வாடிக்கை. சீட்டு எடுப்பார். எடுக்கும் சீட்டு பெரும்பாலும் முதல் சீட்டாக தான் இருக்கும். எவ்வளவு தள்ளியும் எடுத்து கொள்வார். எப்போதும் பணம் அவருக்கு அவசரமாக மட்டுமே இருக்கும். எப்போதுமே அவர் உயிர் அச்சுறுத்தலில் தான் இருக்கும். அந்தளவு கடன் கொடுத்தவர்களை நடையாய் நடக்க விட்டிருக்கிறார்.

அவரது அப்பா ரிட்டையர்டு அரசு ஊழியர். ரிட்டையர் ஆனபோது கொடுத்த பணத்தையும், பென்ஷன் பணத்தையும் எதற்கும் செலவு செய்யாமல் என்ன காரணத்திற்கோ சேர்த்து சேர்த்து வைக்கிறார். 30 லட்சத்திற்கும் மேல் வைத்திருக்கிறார், எங்களுக்கென்று சல்லி பைசா கண்ணில் காட்ட மாட்டேங்கிறார் என்பது குபேந்திரன் மற்றும் அவரது தம்பியின் வாதம். காட்டினால் தான் கால் வயிறு கஞ்சி கூட ஊற்றாமல் நடுத்தெருவுக்கு அனுப்பி விடுவீர்களே என்பது நாங்கள் அடிக்கும் கவுண்ட்டர். பதிலுக்கு முறைப்பார். நாங்கள் சிரிப்போம். அவரும் சிரித்து விடுவார்.

ஒழுங்கான வேலை இல்லை என்பதால் சரியான வரன் அமையவில்லை. பெண் பார்க்க போகும் வைபவங்களில் முற்றிலும் நம்பிக்கையே இழந்தவரானார். பிஸினஸ் பண்ண வீட்டில் பணம் கேட்பார். குடிச்சே அழிச்சிருவியே என சொல்லி தர மறுத்து விடுவார்கள். அந்த சோகத்தில் குடிப்பார். நிறைய குடிப்பார்.

காலேஜுக்கு மெஷின்ஸ் வாங்கி கொடுத்து கமிஷன் பார்க்க முயற்சி செய்வார். ஆனால் , அந்த வேலைக்கு அதிக போட்டி இருப்பதால் , ஒவ்வொரு முறையும் தோற்பார். இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் காத்திருப்பார்.

ஒரு முறை manufacturing technology லேப் நடந்து கொண்டிருக்கும் போது, மாணவர்கள் gas welding செய்து கொண்டிருந்தனர். சம்பந்தப்பட்ட gas cylinderல் இருந்து, ஏதோ ஒரு வால்வ் திடிரென்று தானாகவே ஓப்பன் ஆகிவிட்டது. வீல் என்று அதிக சத்தத்தில் gas பீச்சியடிச்சு கொண்டு வெளியேறியது. வெடிக்கவே தேவையில்லை என்னும் அளவிற்கு அந்த சத்தமே மரண பயத்தை வரவழைக்க கூடியதாக இருந்தது.

சுத்தி இருந்தவர்கள் எல்லோரும் ஓட்டம் எடுக்கின்றனர். staffs, hod கூட பொறுப்பின்றி தங்களை காப்பாற்றி கொள்ள ஓட்டம் எடுத்ததை மாணவர்கள் கூட்டம் திகிலாக பார்த்தது. அப்போது ஒரு கை துணிவோடு, அந்த வால்வை மூட எத்தனித்து வெற்றி கண்டது. அது நம் குபேந்திரனின் கை. தப்பி ஓடிய ஸ்டாஃப்ஸ்களிடம், ஏன் சார் எங்களையெல்லாம் விட்டு ஓட பார்த்தீங்க என்று மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். காலேஜ் கொடுக்கிற சம்பளத்துக்கு உயிரை வேற விட சொல்றீங்களா டா என்று நக்கலாக பதலளித்தவர்கள் எல்லோருமே குபேந்திரனை விட அதிக சம்பளம் வாங்குபவர்கள்.

நேற்று நள்ளிரவு குபேந்திரன் அகால மரணமடைந்து விட்டார்.

12 மணியளவில் உயிர் பிரிந்து இருக்கலாம் என சொன்னார்கள். 4.30 மணிக்கு செய்தி வந்தது. தற்கொலை. குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டார். தன்னை காப்பாற்றும் படி தன் தம்பியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், மருத்துவமனை போகும் வழியிலே உயிர் பிரிந்து விட்டதாகவும் செய்தி சொன்னார்கள். அவரின் வயது எத்தனை என்று மட்டும் கேட்டேன், 30 கூட முழுமையடையவில்லை என்று மட்டும் சொன்னார்கள். வழக்கமாக இது போல் பயம் காட்டுவாராம், இந்த முறை முடிவெடுத்து விட்டார் என்றனர். 3 மணி நேரம் போராடி உயிர் இழந்திருக்கிறார் என்றனர்.

காலை 6.30 மணிக்கே லோக்கலில் இருப்பவர்கள், அவர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். சாவு வீடு மாதிரியே இல்லை என்றும், ஆளாளுக்கு அவரவர் வேலையை பார்த்து கொண்டிருப்பதாகவும், பாடி ஜி.எச்.சில் இருப்பதாக தகவல் மட்டும் சொன்னார்கள் என்பதை நண்பர்கள் போனில் தெரிவித்தார்கள். ஜி.எச். போனால் அங்கே குபேந்திரம் அநாதை பிணம் போல் கிடக்கிறார். பாடி எப்போ கிடைக்கும் என்று கேட்டதற்கு போஸ்ட் மார்டம் எல்லாம் முடித்து 11 மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஏன் பாடி தனியா கிடக்கு என்று கேட்டதற்கு, அவங்க வீட்டாளுங்க தான் விட்டுட்டு போய்ட்டாங்க என்று சொல்லி, என்ன பிரச்சினை என்று விசாரித்தார்கள். எங்களுக்கும் தெரியவில்லை என்று சொல்லி விட்டோம்.

10 மணி வரைக்கும் கூட யாரும் வரவில்லை. 11 மணிக்கும் மேல் போன் மேல் போன் போட்டதற்கு பின்பு, குபேந்திரனின் தம்பி வந்தார். FIR பதிவு செய்தார். அதன்பின் போஸ்ட் மார்டம் ஆனது. 2 மணிக்கு பாடி கையில் கிடைத்தது. அமரர் ஊர்தி வைத்து பாடியை வீட்டிற்கு எடுத்து வந்தனர்.

பாடி வரும்வரை , குபேந்திரன் வீடு அமைதி காத்தே கிடந்தது. பாடி வந்தது. 20 பேர் இருக்கலாம். சொந்தக்காரர்கள் என்று வந்து நின்றார்கள். அதில் 3 பேர் மட்டும், எதற்கோ அழுது கொண்டிருந்தார்கள். அந்த 20 பேர் தவிர மொத்த காலேஜும் அங்கே கூடியிருந்தது. கூட்டம் குபேந்திரன் முகம் பார்க்க முண்டியடித்தது.

அந்த சின்ன சந்தில் நிற்க இடமில்லாமல் நின்று கொண்டிருந்தோம். போன வழியில் திரும்ப வரமுடியாத காரணத்தால், ஒரு வழியாக வந்து கடைசியாக முகம் பார்த்து விட்டு தெருவை சுத்தி கொண்டு வெளியே போக சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

குபேந்திரனின் பெற்றோர் கண்ணில் பெயருக்கு கூட கண்ணீர் இல்லாதது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குபேந்திரன் மருந்து குடித்தது தெரிந்தும், 3 மணி நேரமும் கண்டும் காணாமல் இருந்து விட்டதாக கூட்டம் சலசலத்தது.

முகம் பார்த்து விட்டு வெளியே வந்து, நின்று பேசி கொண்டிருக்கையிலே, சுடுகாட்டுக்கு போகும் வண்டி வந்தது. வண்டி வந்து திரும்பி நின்ற ஐந்தாவது நிமிடத்தில், பாடியை வண்டி ஏற்றி கிளம்பி விட்டார்கள். கிளம்பியதும் ஏதோ ஊர்வலம் போல் அல்லாமல், லக்கேஜ் ஏற்றி கிளப்பி செல்வது போல் கிளம்பி விட்டார்கள். எதற்காக இவ்வளவு அவசரம், ஏன் இந்த பரபரப்பு என்று யாருக்கும் புரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு துக்க நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை. எங்கள் ஊரில் எவ்வளவு கொடூரமானவன் இறந்தாலும் , இறப்பிற்கு உரிய மரியாதையை அளித்தே அடக்கம் செய்வர். இங்கோ எப்ப டா அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்கு வரலாம் என பரபரக்கின்றனர். அடக்கம் செய்ய போனவர்கள், 15 நிமிடம் கூட ஆகவில்லை , வீடு திரும்பி விட்டனர்.

குபேந்திரன் அப்படி என்ன தவறு செய்து விட்டார் என புரியவில்லை. பெற்றோர்கள் கண்ணீர் சிந்த மறுக்கும் அளவிற்கு, இறுக்கமான இறப்பை நாங்கள் யாருமே கேள்வி கூட பட்டதில்லை.

குபேந்திரனின் ஏரியா நண்பர்கள் சிலரிடம் என்ன தான் ஆனது என்று எங்கள் ஸ்டாஃப்ஸ்கள் விசாரிக்க முற்பட்டிருக்கின்றனர். உன் ஃப்ரெண்டையே எழுப்பி கேட்க வேண்டியது தானே என்று போதையில் சிரிக்கின்றனர்.

சாராயம் வாங்கி தருவான் என்று சேர்ந்த, அதே சமயம், சாராயம் கிடைக்குமே என்று சேர்த்து கொள்ளப்பட்ட குபேந்திரனின் நண்பர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

எனக்கு நிறைய குபேந்திரன்களை தெரியும். அதில் ஒருவர் இறந்து விட்டார்.


1 comment: