Sunday, 10 November 2013

Pandiya Nadu - Movie review






பாண்டிய நாடு படம் பார்த்தேன், படத்தில் சொல்லி கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லையென்றாலும், ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியாவது கிடைத்தது என்றால் அதற்கு காரணமாக மூன்று பேரை சொல்லலாம் சுசீந்திரன், பாரதிராஜா, D. இமான்.

மொத்த படத்திற்கும் ஓர் அசத்தலான கலர் கொடுத்ததே பிண்ணனி இசையாக தான் இருக்க கூடும். சமீபமாக வந்த படங்களில் எதிர்நீச்சல், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு அடுத்ததாக இந்த படம் பிண்ணனி இசையில் ஓரளவு கோலிவுட் மானத்தை காப்பாற்றுகிறது என்றே சொல்லலாம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஓர் காட்சி வரும், சிவகார்த்திகேயன் நீளமாக ஒரு வசனத்தை பேசி விட்டு பரோட்டா சூரியை பார்த்து “என்ன டா பார்க்குற நீயும் சொல் டா” என சொல்வார், “இதையெல்லாம் நான் சொன்னா சிரிச்சிருவாங்க”ன்னு அப்பாவியாக பம்மி விடுவார். ஆனால் இந்த படத்தில் அது போல் பம்மாமல், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்து பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார்.

இப்போது வரும் படங்களில் கலை இயக்குநர்களின் பணி தான் என்ன என்பதனை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன், படத்திற்கு இரண்டு பாடல்களுக்கு மட்டுமே செட்டு போடுகின்றனர் என நினைக்கிறேன், அதிலும் எந்த ஒரு இன்னோவோஷ்னையும் காணோம். ப்ரோட்யூசர்கள் தான் பேருக்கு செட்டு போட்டா போதும் தம்பி, என்று சொல்வார்கள் என யூகிக்கிறேன்.

லக்‌ஷ்மி மேனன், ஸ்கூல் படிக்கும் பெண் என்று சொன்னால் உண்மையிலே நம்ப முடியவில்லை, இப்போதே ஆன்ட்டி லுக் வந்து விட்டது. இன்னும் மூன்று வருடங்களில், விஷாலுக்கு அண்ணியாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தொடர்ந்து வரும் தமிழ் படங்கள் மக்களை பயமுறுத்தும் வகையிலும், ரௌடிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூஜா தூக்கும் வகையிலே வெளி வருவது தமிழகத்தின் சாபக்கேடு என்றே நினைக்கிறேன். நம் கண் முன் நிகழும் அநியாயங்களையும், தொழில் ரீதியில் நிகழும் அநியாயங்களும் கண்டு கொள்ளாமல் போனால் நாம் பிழைத்தோம், இல்லையென்றால் வீட்டில் ஒரு உயிர் அல்ப்பாயுசில் போகும் என்றே தொடர்ந்து பயமுறுத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டிய பெரிய பெரிய கட்டிடங்களை டிராஃபிக் ராமசாமி இழுத்து மூடி காலி செய்யவில்லையா? இப்போது மீண்டும் அது திறக்கப்பட்டு விட்டது என்பது வேறு விஷயம், ஒரு சாதாரண குடிமகனால் கூட பெரிய விஷயங்கள் சாத்தியப்படும் என்பதற்கு நம் நிகழ் காலத்திலே பல உதாரணங்கள் இருக்கின்றன. என்ன.. எல்லாமே இழுத்தடிக்கும், அவ்வளவு தானே தவிர, அடுத்த நிமிஷமே வீட்டின் முன் ஸ்கார்ப்பியோ கார் நிற்கும் என்பதெல்லாம் அதீதம்.

என்னுடைய அம்மா அறநிலைய துறையில் சேர்ந்த நாளில் இருந்து, அரசியல் செல்வாக்குள்ள, பணபலம் உள்ள பலரிடமிருந்து அரசாங்கத்திற்குரிய நிலங்களை மீட்டு எடுத்து இருக்கின்றார், தோராயமாக இது வரை 20-30 கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை மீட்டு எடுத்து இருக்கின்றார். இதற்கு காரணம் அம்மா மட்டுமே என்று சொல்லி விட முடியாது, ஆரம்ப புள்ளியாக அமைந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அறநிலைய துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகிய மூன்று துறைகளுமே அவரவர் கடமைகளை சரிவர செய்து, என் அம்மாவிற்கு ஆதரவாக செயல்பட்டன. கலெக்டரும், மினிஸ்டர்களும் கொடுக்கும் குறுக்கீடுகளை கூட தூக்கி அடித்து இருக்கின்றார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்…

இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், எப்போதுமே நல்லது செய்ய இறங்குவோருக்கு ஆதரவாக பல கரங்கள் உதவுகின்றன, அதிலும் முக்கியமாக அரசாங்க அலுவலகங்களில்… இப்போதிருக்கும் ஓட்டை ஒடைசலான சட்ட அமைப்புகளிலே கூட பலர், தீமைக்கு எதிராக சாதித்து கொண்டு தான் இருக்கின்றனர், தவிர, அவர்கள் இப்போதும் ஓர் எடுத்துக்காட்டாக நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர், மாறாக செத்து விடவில்லை.


No comments:

Post a Comment