Sunday, 10 November 2013

ஸ்பீடான கதையின் ஸ்லோ வெர்ஷன்

ஸ்பீடான கதை என்று கொஞ்ச நாள் முன் ஒரு சிறுகதை எழுதினேன், அது பலருக்கு புரியவில்லை என்பதால், அந்த கதையின் ஸ்லோ வெர்ஷனை இங்கு வெளியிடுகிறேன்...



அடிப்படையில் இது ஓர் Puzzle போல இருக்க வேண்டும் என்ற அமைப்பில் எழுதப்பட்டது, கதைக்குள்ளாகவே பல விஷயங்களும், நம் நடைமுறை வாழ்க்கையின் பதிவுகளும் எழுதப்பட்டிருக்கிறது.

மொத்த கதையுமே Puzzle தான் என்றாலும், Puzzle க்குள்ளான Puzzle களும் கூட ஆங்காங்கே இருக்கிறது. உதாரணமாக கதையில் வரும் கதாபாத்திரம் தன் கள்ள காதலியோடு பேருந்து ஏறுகிறான். கோயம்புத்தூரிற்கு டிக்கெட் எடுக்கிறான். ஆனால் கதைப்படி, பேருந்து கோயம்புத்தூர் நகரை விட்டு வெளியே வருவதாற்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த Puzzle ஐ வைத்து பல தர்க்க ரீதியான தத்துவங்களை சொல்ல முடியும். நம்மை சுற்றியிருக்கும் சந்தோஷங்களை விட்டுவிட்டு, சந்தோஷத்தை தேடி தேடி நம் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருப்பதே இதன் தத்துவ பிண்ணனி. இதை தத்துவங்களாக சொல்வதை விட, இதை மறை பொருளாக வைத்து, வாசகனை கண்டுபிடிக்க வைப்பது தான், இவ்வகை எழுத்தின் மேஜிக்

ஒருவேளை கண்டுபிடிக்காமல் போய்விட்டால்….? இது ஒரு நல்ல கேள்வி தான். ஆனால் அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை, யாராவது 2 பேர் கண்டுபிடிப்பார்கள், அவர்களுக்காகவது இது போல் கட்டமைத்து தான் ஆக வேண்டும்.

இன்னொன்று, துரை தனது மொபைலில் மணி பார்க்கும் போது 10.23 என காட்டுகிறது. அதன் பின் கதையின் இறுதியிலும் ஒரு முறை மணி பார்க்கிறான், 10.24 என காட்டுகிறதுஇதன் தத்துவ பிண்ணனி என்னவாக இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்கடைசியில் சொல்கிறேன்    

முடிந்த வரை இந்த விளக்கத்தை சுருங்க சொல்ல நினைக்கிறேன். பொதுவாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கதைக்கும், யாரும் விளக்கம் கொடுப்பதில்லை. நம் எதிராளிக்கு கண்ணை கட்டாமலே கண்ணாமூச்சி ஆடவைப்பதை போன்றது இது. ஆனாலும், மிகவும் நெருங்கியவர்களுக்காக இதை எழுத விளைகிறேன்

இந்த இடத்தில் நான்-லீனியர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள், ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்என ஆரம்பித்து கடைசியில ராஜாவும் ராணியும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்தாங்களாம் என கோர்வையாக ஒரு கதையை முடிப்பது என்பது லீனியர் (Linear) வகை எழுத்தாகும். இந்த முறையை உடைத்தெறியும் எல்லா வகை எழுத்துமே, நான்லீனியர் வகை எழுத்துக்களேஎவ்வளவு நாட்கள் தான் சின்ன பிள்ளை தனமாகவே கதைகள் கேட்டு கொண்டிருப்பது, என்று போரடித்து போனவர்களுக்கு, நான் லீனியர் எழுத்துவகை பரிசாக வந்த ரோலர் கோஸ்ட்டர்.

இதன் பின்னர் வருவது ஸ்பீடான கதையின் ஸ்லோ வெர்ஷன்

நம் ஊர் சாலைகளும், பேருந்துகளும் கள்ள காதலர்களுக்கானதே அல்லஒரு முறை துரையும் அவனது கள்ள காதலியும் எங்காவது வெளியூர் போய் குஜலாக இருக்கலாம் என ஏற்பாடு செய்து கிளம்பினர். முன்னதாகவே பேருந்து நிலையம் சென்று, அரசு பேருந்து பிடித்து, நல்ல சீட்டுகள் பிடித்து உட்கார்ந்தனர். பஸ் 50 கிமீ கூட போயிருக்காது. நடு வழியில் நின்று  விட்டது. நின்ற இடம் துரையின் காதலிக்கு தெரிந்தவர்கள் இருக்கும் ஊர். பஸ் இறங்கி, பஸ் மாறும் போது பார்த்து விட்டு அவளது கணவனிடம் போட்டு கொடுத்து விட்டனர்.

ஆம்னி பஸ்கள், நான்கு வழிச்சாலை எல்லாமும் சிறந்த கண்டுபிடிப்பு என்றாலும் கள்ள காதலர்களுக்கு உகந்ததா என தெரியாமல் விழித்தான் துரை. 120 கிமீ வேகத்தில் பறக்கும் பேருந்து, எங்கேயாவது கவுந்து, அடிப்பட்டாலோ, செத்து விட்டாலோ, அடுத்த நாள் காலை செய்தித்தாளில் வந்து விடுமே என்ற கவலை ஒரு பக்கம் பீடித்தாலும், நடு வழியில் நின்று தொலைக்கும் அரசு பேருந்துக்கு, செய்தித்தாள் அச்சிடுபவன் எவ்வளவோ பரவாயில்லை என ஆம்னி பேருந்தையே புக் செய்தான். என்ன தான் ஃபாரின் காரன், சொகுசான பஸ்ஸை கண்டுபிடித்தாலும், ரோட்டை நாம் தானே போட்டு கொள்ள வேண்டும், அதையுமா வாங்கி வர முடியும். சாலை அமைக்கும் பணி காரணமாக, பேருந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து……

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லபுழுங்கி தள்ளியது.

ஊட்டியில் பேருந்தை விட்டு இறங்கிய பின், அந்த கவிதையான காலையை இருவரும் இரசிக்கும் நிலையில் இல்லை. அவள் முகத்தை துப்பட்டாவில் மூடி கொண்டாள். துரைக்கு அந்த அதிகாலையில் ஆட்டோ பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. ஆட்டோவை லாட்ஜிற்கு போக சொன்னான்.

லாட்ஜ் ரிசப்ஷினில், துரை ரூம் புக் செய்து கொண்டிருக்கும் போது அவளுக்கு அவள் கணவரிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது. போனை எடுத்து கொண்டு தனித்து சென்று விட்டாள். ஆனாலும் அவள் வார்த்தைக்கு வார்த்தைசொல்லுங்க’ ‘சொல்லுங்கஎன்பதையும், ‘மதுரைக்கு வந்து சேர்ந்துட்டேன்என்பதையும் தூரத்தில் இருந்த படியே ரிசப்ஷனிஸ்ட்  கவனித்து விட்டான். அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் தாலி, துரையின் பர்ஸை காப்பாற்றும் என நினைத்திருந்தான். ஆனால், ரிசப்ஷனிஸ்ட் நீர்யானை கணக்காக பர்ஸை கவ்வி விட்டார். ரூமிற்கு சென்று 1 மணி நேரம் கூட ஆகியிருக்க வில்லை. போலிஸ்காரர் ஒருவர் வந்து கதவை தட்டி, ரேஷன் கார்டு காட்ட சொன்னார். பணத்தை காட்டினான்.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லபயங்கர காஸ்ட்லி.

அன்று இரவு துரை தன் மனைவிக்காக எழுதிய கவிதைகளை எல்லாம் லூஸு போல் அவளிடம் ஒப்பித்தான். அவள் தன் கணவனுக்கு கவிதைகள் பிடிக்குமே என்று துரையை வைத்து கவிதைகள் யோசித்து கொண்டிருந்தாள்.

காதல், கள்ள காதல், தாய்மைபெண்களின் சின்ஸியாரிட்டியை அடித்து கொள்ள ஆளே கிடையாது.

துரை தனக்கென ஓர் கள்ள காதலி வேண்டும் என்று முடிவெடுத்து தேடிய போது, ஓர் டாக்டர் தான் தனக்கென கள்ள காதலியாக அமைய வேண்டும் என்று ஓர் குறிக்கோளோடு இருந்தான். க்ளினிக் க்ளினிக்காக ஏறி இறங்கி பார்த்தான். ஒன்று கல்யாணம் ஆகாத டாக்டர்கள் இருந்தார்கள், இல்லையென்றால் கல்யாணம் ஆன கிழவிகள் இருந்தார்கள். இதை பற்றி ஆராய்ச்சியில் இறங்கிய போது, சில டாக்டர்கள் கல்யாணம் செய்து கொள்வதே 30 வயதுக்கு மேல் தான் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் அவனுக்கு தெரிய வந்தது. கல்வி முறையையெல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், MBBS படிப்பே 5 வருஷம் எனவும், அது கிடைக்கவே இம்ப்ரூவ்மென்ட் பரிட்சை எல்லாம் எழுதி வருடத்தை வீணடிக்கிறார்கள் எனவும், வெறும் MBBS ஐ யாரும் மதிப்பதில்லை எனவும், அதனால் மேற் படிப்புக்கு ஓடுகிறார்கள் எனவும், அதற்கு ஓர் என்ட்ரான்ஸ் எக்ஸாம், அதில் 30000 சீட்களுக்கு 10 லட்சம் பேர் அடித்து கொள்கிறார்கள் எனவும், படித்து, படித்து ஒரு நாள் டாக்டர் ஆன பின் கல்யாணத்திற்கு பணம் சம்பாதித்து, வட்டிக்கு பணமெல்லாம் வாங்கி கல்யாணம் ஏற்பாடு செய்வதற்குள் 30 வயதுக்கு மேல் ஆகி விடுகிறது என்றும் அறிந்தான். இதையெல்லாம் அறிந்து அறச்சீற்றம் அடைந்த போராளியாக உருவெடுத்தான். நெதர்லாந்து கலாச்சாரத்தை ஒப்பிட்டு கட்டுரை எழுதி எழுதி கிழி கிழியென கிழித்தான். ஒரு நாய் சீண்டவில்லை…. பழைய படி சினிமா விமர்சனம் எழுதலானான்.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்லஇது ஓர் சினிமா நிறைந்த தேசம்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கேற்ப, துரை தன் மனைவி இன்னொருவனுக்கு கள்ள காதலி ஆகி விட கூடாது என்பதில் அனைத்து வகையிலும் உஷாராக இருந்தான். இதனால் பலர் மத்தியில் நல்ல அந்தஸ்து இருந்தது. தம்பி…. வாழ்க்கையில ஒழுக்கங்கறது…. என பலருக்கும் அட்வைஸ் கொடுப்பதில் துரையே முன்னிலை வகித்தான். ஒரு வழியாக தனக்கு டாக்டர் கள்ள காதலி கிடைக்காது, வேறு தான் தேட வேண்டும் என முடிவிற்கு வந்தான். இந்த இந்திய திருதேசத்தில் பல குடிகார, ஃபாஸிஸ, ஆணாதிக்க, மென்ட்டல் கணவன்மார்கள் ஒயின் ஷாப்பே கதி என்று கிடப்பதால் துரைக்கு சீக்கரத்திலே ஓர் அழகிய கள்ள காதலி கிடைத்தது என்பது ஒன்றும் ஆச்சர்யத்திற்குரிய விஷயம் அல்ல

துரைக்கு தன் மனைவியை பிடிக்கவே பிடிக்காது. தன் மனைவியை காட்டிலும் துரைக்கு பிடிக்காத ஓர் விஷயம் டிவி தான். சொல்ல போனால் தன் மனைவியை பிடிக்காமல் போனதற்கான காரணமே டிவி தான். வாயை திறந்து எதை பேசினாலும் டிவி சம்பந்தமாகவே பேசினாள். விளம்பரங்களை கூட கண் கொட்டாமல் பார்த்தாள். தானும் ஆணாதிக்கவாதியாக மாறி, கள்ள காதலர்களுக்கு அழைப்பு விடுக்க கூடாது என்பதற்காக பல்லை கடித்து கொண்டான். அப்போது பார்த்து வரமாய் அமைந்தது தான் தொடர் மின்சார துண்டிப்பு. ஒரு மணி நேரம் இருக்கும், ஒரு மணி நேரம் இருக்காது என மின்சாரம் உள்ளே வெளியே விளையாட்டு விளையாட ஆரம்பித்தது. அப்படி ஓர் கற்காலம், அவனுக்கு பொற்காலமாய் வாய்த்தது. அந்த பொற்க்காலத்தில் தான் அவனுக்கு முதல் குழந்தை பிறந்தது. இனிப்பு எடுத்து கொண்டு மின்சார வாரியத்தினுள் நுழைந்தாள் இருக்கைகள் காலியாக இருந்தன….

இன்னும் இதே போல் தொடர்ச்சியாக குழந்தைகள் பெற்று கொண்டிருக்கலாம் என்று எந்த ராகு காலத்தில் கனவு கண்டானோ, காற்றாலைகள் செயலாற்ற ஆரம்பித்து துரையின் வாழ்க்கையில் பழைய படி சூறாவளியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தது. இதற்கு தீர்வே இல்லையா என்று நெதர்லாந்து ஆசாமியிடம் ஃபேஸ்புக்கில் ஓசியாக குமுறி எழுந்தான். உங்க ஊரில் டிவிக்களும், தியேட்டர்களும் இருக்கும் வரை சாத்தியமே இல்லை என ஒரே போடாக போட்டான். துரையின் தேசப்பற்று கண்கள் துடிக்க வைத்தன. ‘என் நாட்டையா டா கேவலாமா பேசின, எங்க நாடு எப்பேற்ப்பட்ட நாடு தெரியுமா….’ என்று வேகமாக டைப் அடித்து விட்டு, அடுத்து என்ன எழுதுவது என தெரியாமல் விழித்து கொண்டிருந்தான். எல்லாத்தையும் Backspace துணை கொண்டு அழித்து, விக்கிப்பீடியாவில் நெதர்லாந்து பற்றி ஆராய்ந்து, அந்நாட்டை பற்றி கஷ்டப்பட்டு ஒரு குறையை மேய்ந்து கண்டெடுத்து சொல்லி காட்டி, துரை தன் தேசப்பற்றை காட்டினான்.

கப்பல் ஏறி ரஷ்யா போனால், அங்கு போலி டாக்டர்களே இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு தேசமே இல்லை.

கம்யூனி…..

ஐயையோமன்னித்து விடுங்கள்கம்யூனிசம் பற்றி ஏதும் சொல்ல வரவில்லை. கம்யூனிட்டி பற்றி தான் சொல்ல வந்தேன்அடிவாங்க தெம்பு இல்லை.

தினத்தந்தி மட்டும் எப்படி அதிகம் விற்கிறது என்று எப்போதுமே துரைக்கு ஓர் சந்தேகம் உண்டு. எப்போதுமே அதை பற்றி யோசித்த வண்ணம் இருப்பான். ஒரு நாள் அதற்கான தீர்வு கிடைத்தது...

தினகரன்ஐபில்லில் சூதாட்டம், கிரிக்கெட் வீர்ர்கள் கைது.
தினமலர்கிரிக்கெட் வீர்ர்கள் புக்கிகள் தொடர்பு அம்பலம்.
தினத்தந்திகிரிக்கெட் வீரர்கள் கைது; அழகிகளுடன் தொடர்பு;

இதை தெரிந்து கொண்ட நாளில் இருந்து துரை இன்னொன்றையும் தெரிந்து கொண்டான். அவனது கல்லறைக்கும், தினத்தந்திக்கும் மறைமுகமாக ஓர் போட்டி ஓடிக்கொண்டிருக்கிறது என.. ஒரு நாள் நம்முடைய போட்டோ தினத்தந்தியில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என லேசாக ஒரு பயம் அவனது வயிற்றில் நெளிந்தது. நல்லவேளையாக, அந்த போட்டியில் இறுதியாக துரையின் கல்லறையே ஜெயித்தது.

இந்த தேசம் கள்ள காதலர்களுக்கானதே அல்ல, என்ற வாசகத்தை யாருமற்ற ஓர் ICU ward-ல் உதிர்த்து விட்டு கண் மூடினான்.

தேவர்களுக்கான ஒரு நிமிஷம் முடிந்திருந்தது.

No comments:

Post a Comment