Saturday, 9 November 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்



ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு இது நாள் வரை ஃபேஸ்புக்கிலும், மீடியாவிலும் போதும் போதும் என்னும் அளவிற்கு விமர்சனங்கள் கொடுத்து மாய்ந்து விட்டனர். ஆனால் வந்த விமர்சனங்கள் அனைத்தும் இரண்டு எக்ஸ்ட்ரீம்களில் இருக்கிறது. ஒன்று, தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுகின்றனர், இல்லையேல் சகிக்கவே முடியாத அளவிற்கு வக்கிரமாய் கரித்து கொட்டுகின்றனர்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சுத்தமான அக்மார்க் கமர்ஷியல் திரைப்படம். ஓர் அவெரெஜ் தமிழ் சினிமாவில் என்னென்ன ஓட்டைகள் இருக்குமோ இதிலும் எல்லாம் இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை லாஜிக் பற்றி எந்த கவலையும் இல்லாமல், ஓர் கலை திரைப்படம் சாயலில் ஓர் கமர்ஷியல் திரைப்படத்தை மிஷ்கின் கொடுத்திருக்கிறார். கலை திரைப்படத்தை பாராட்டும் ரசிகர்களை, சமுதாயம் இன்ட்டிலிஜென்ட் என நினைத்து கொள்வதால், இது பல ரசிக சிகாக்களுக்கு தோதாக போய்விட்டது. பார்த்தது கமர்ஷியல் படம், ஆனால் வெளியில் வந்து கலை திரைப்படம் பார்த்த லெவலுக்கு பீத்தி கொள்ளலாம் என்பதால், பல கலா பூர்வ ரசிகர்கள் உதயமாகி விட்டார்கள். அந்த சந்தோஷம் அவர்களுக்கு….இப்படி கமர்ஷியல் திரைப்படங்களுக்கு ஓர் புது சாயல் கொடுத்ததற்கு மிஷ்கினை பாராட்டியே ஆக வேண்டும் என்றாலும், பாலாஜி சக்திவேல், ராம், ராஜு முருகன் போன்றோர் இருக்கும் எதிர்கால தமிழ்சினிமாவை நினைத்தால் கொஞ்சம் பீதியாவதை தவிர்க்க முடியவில்லை.

ஓர் குடும்பத்தில் 3 பேருமே கண் தெரியாதவர்களாக இருக்கின்றனர், லட்சத்தில் ஓர் குடும்பம் தான் இப்படி இருக்கும் என்றாலும், இந்த அமைப்பில் உள்ள குடும்பத்தை கதைக்களனில் உள்ளே இழுத்ததிற்கான காரணம், ஆடியன்ஸ் மத்தியில் அனுதாபத்தை உருவாக்குவதுகதையின் ஓர் கட்டத்தில் குண்டு அடிப்பட்டு வீழும் மிஷ்கினை காப்பாற்றும் ஶ்ரீ , படம் நெடுக தேவையே இல்லாமல் தொத்தி கொண்டு வருகிறார் போல் இருக்கிறது.

மிஷ்கினை காப்பாற்றியதற்காக போலிஸால் சிக்கலுக்குள்ளாகும் ஶ்ரீ, அவராகவே வெளியே வந்திருப்பார். கமிஷ்னர் முதல் அவரது கல்லூரி HOD வரை அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஶ்ரீயை போலிஸடம் இருந்து காப்பாற்றுகிறேன் என்ற பேர்வழியில், எதற்காக மிஷ்கின் ஶ்ரீயை கடத்தி, உயிருக்கு ஆபத்தான பல இடங்களுக்கு அழைத்து சென்று சிக்கலக்குள்ளாக்கி, கடைசியில் ஓர் குழந்தையை கையில் கொடுத்து அவரை guardian ஆக்குகிறார் என புரியவில்லை. கிட்டத்தட்ட ஶ்ரீ, மிஷ்கினின் கூட்டாளி போல் செயல்பட்டதாக கதை முடிகிறது. எப்படி ஶ்ரீயை போலிஸ் கைது செய்யாமல் விட்டது என தெரியாமல் நாம் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்க, படம் முடிகிறது.

மிஷ்கினை காப்பாற்றிய மறுகணமே ஶ்ரீக்கும், மிஷ்கினுக்குமான பிணைப்பு முடிந்திருக்க வேண்டும். ஏனென்றால் மிஷ்கின் ஶ்ரீக்கு நன்றி சொல்வதை காட்டிலும், ஶ்ரீக்கு தன் முன் கதை, பின் கதை, சைட் கதைலாம் சொல்வதை காட்டிலும் மிஷ்கினுக்கு பல வேலைகளும், அபாயங்களும் இருந்தனசரி, ஶ்ரீயை படம் முழுக்க கூட்டி கொண்டு திரிவது தான் கதைக்களம் என்று எடுத்து கொண்டாலும், இருவரும் சேர்ந்து அன்று இரவு எதற்காக பாடுபடுகிறார்கள் என்றால், இறந்த போன ஒருவனுக்கு அஞ்சலி செலுத்த அவனது குடும்பத்தை கல்லறைக்கு கூட்டி செல்வதற்காக தான் இத்தனை பாடுஇதையெல்லாம் என்னவென்று சொல்லசென்ட்டிமென்ட் சமாச்சாரத்தை உள்ளே இழுத்து விட்டால், பார்ப்பவர்கள் வாயை பொத்தி கொண்டு பார்ப்பார்கள் என்பது தான் மிஷ்கின், ராம் போன்றோர்களின் கண்டுபிடிப்பு. அப்படி ஓர் அச்சுறுத்தலான சூழ்நிலையில் இப்படி பட்ட ஓர் அஞ்சலி இரங்கல் தேவை தானா? அதுவும் ஓர் குழந்தையை கூட்டி கொண்டு….? இந்த கேள்வியை யாரும் கேட்க துணிய மாட்டார்கள் என்ற தைரியத்தில் கண்ட படி காட்சிகளை வைத்து, இளையராஜாவின் பிண்ணனி இசைக்கு செம்ம ஸ்கோப் கொடுத்து இருக்கிறார். அப்படி கஷ்டப்பட்டு போய் அஞ்சலி செலுத்தியதில், மேலும் 3 உயிர்கள் பலியானது தான் மிச்சம்.

கதையை அமைக்கும் முன்னரே திரைக்கதையை அமைத்து விடுவது தான், இது போல் ஸ்கிரிப்ட்டுகளில் உள்ள பிரச்சனை. ஶ்ரீயும், மிஷ்கினும் படம் முழுக்க ஓட வேண்டும். ஒரு பக்கம் போலிஸ் துரத்த வேண்டும், இன்னொரு பக்கம் ரௌடிக்கள் துரத்த வேண்டும். ஒரு இரவு முழுக்க சென்னையை சுத்தி சுத்தி காட்ட வேண்டும். இதை முதலில் தீர்மானித்து விட்டார்கள், கதை எழுதுவது தான் பாக்கி என்று கதை வேட்டை நடத்தியிருக்கிறார்கள். வில்லனை பழிவாங்குதல், வில்லனுக்கு பயந்து ஓடுதல், பணத்தை கொள்ளையடித்து ஓடுதல் என்பன பல யுக்திகளை தமிழ் சினிமா பார்த்து விட்ட படியால், ஓர் குடும்பத்தை கல்லறைக்கு அழைத்து சென்று அஞ்சலி செய்ய வைத்தல் என்ற கதையை ஸ்க்ரிப்ட்டாக்கி இருக்கிறார்கள். சென்ட்டிமென்ட் சமாச்சாரத்தை உள்ளிழுத்து போட்டப்படியால், ஒரு பயல் வாயை திறந்து பேச முடியாதபடி செய்தது தான், மிஷ்கினின் மேஜிக்

கதையில் வரும் கண் தெரியாத குடும்பத்தை காப்பாற்றுவது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியமாக எனக்கு தெரியவில்லை. வில்லன் கூட்டம் அந்த கண் தெரியாத குடும்பத்தை சீர்குலைக்க நினைப்பதற்கு, ஒரே காரணம் மிஷ்கின் வேலைக்கு வராமல், அவர்களுடனே இருப்பதுஆக அந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மிஷ்கினிற்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கிறது. உதாரணமாக
1) குடும்பத்திற்கு தகுந்த பண ஏற்பாடுகளை செய்து விட்டு, மொத்த வில்லன் கும்பலையும் கொன்று விட்டு, போலிஸில் சரண்டர் ஆகியிருக்கலாம்.
2) வில்லனை கொலை செய்ய முடியாதபட்சத்தில், அவனுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கலாம்.
3) தற்கொலை செய்து கொள்ளலாம், இல்லையென்றால் தற்கொலை செய்யப்பட்டதாகவோ, கொலை செய்யப்பட்டதாகவோ செட் அப் செய்து, தூர தேசத்திற்கு தப்பி ஓடி, தொலைவில் இருந்து குடும்பத்திற்கு ஆதரவும், பாதுகாப்பும் கொடுத்து இருக்கலாம்.
4) மொத்தமாக குடும்பத்துடன் தூர தேசம் தப்பி ஓடியிருக்கலாம்.
ஆனால், சினிமா என்பதற்காக நாமும் சில சமரசங்களை செய்தாக வேண்டிய கட்டாயங்கள் நம்மை அழுத்துகிறது.

இப்போது இருப்பது Fast food உலகம் என்பதை மிஷ்கின் தெரிந்து வைத்திருக்கிறார். யாருக்கும் இங்கு நேரமில்லை. சாவு வீடுகளிலே கூட, எடுத்து கொண்டு போய் புதைத்து விட்டு ஆகிற வேலையை பார்க்கலாம் என்ற மனப்பான்மைக்கு வந்து விட்டனர். இதையெல்லாம் சரியாக புரிந்து வைத்திருந்ததால் தான் 30 நிமிடத்திற்கு ப்ளாஷ்பேக்காக இழுக்க வேண்டிய கதையை, 5 நிமிட கதை சொல்லலில் முடித்து விட்டார். அதிலும் ஓர் சிறப்பு என்னவென்றால் ஓநாய் ஆட்டுக்குட்டி கதையாக சொல்லி முடித்து விட்டார். அது ஓர் Poetic ஆன தன்மையை வேறு கொடுத்து விட்டது. அவருக்கு காசு மிச்சம், நமக்கு நேரம் மிச்சம்நானும் கூட திரையரங்கில் யாராவதுஇதெல்லாம் யாருக்கு புரியாதோ இல்லையோ திவ்யா உனக்குமா புரியலைஎன்று தலைநகரம் வடிவேலு டயலாக்கை கமென்ட்டாக அடிப்பார்கள் என்று நினைத்தேன்ம்ஹூம்இன்னும் 10 வருடங்களாவது தேவைப்படும்

படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன, லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன, கதாப்பாத்திரங்களில் வெரைட்டி இல்லாமல் ஒன்றை போலவே இருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் சாகும் போது கூட தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் தேமே என்று நின்று கொண்டிருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் வலிந்து திணிக்கப்பட்டு இருக்கின்றன, சில கதாபாத்திரங்கள் தன் பாத்திரத்திற்கான ஜஸ்டிஃபிகேஷனை கொடுக்காமல் இருக்கின்றன…. எல்லாமும் இருந்தும் கூட, இந்த திரைப்படம் எல்லா வயது ரசிகர்களையும் கவர்ந்து இருக்கின்றன. காரணம் படத்தின் திரைக்கதை.

படத்தின் திரைக்கதை முற்றிலும் புதுமையானது, அதே சமயம் புத்திசாலித்தனமானது. அது எங்கேயுமே சுவாரஸ்யத்தை சமரசம் செய்து கொள்ளாமல் படைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் மொத்த குறைகளையும் அது Dominate செய்யும் அளவிற்கு, அது வசீகரமாக இருப்பது தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

படத்தில் உட்கார்ந்திருப்பதே ஓர் பரவசமான அனுபவமாக இருந்தது. காரணம் இளையராஜாவின் பிண்ணனி இசைஇளையராஜாவின் இசையில் பாடல்கள் ஏதும் இல்லை என்பது கூடுதல் நிம்மதி.

மொத்தமாகவே படம் வெற்றி தான்ஆனாலும் மிஷ்கினை பிடித்தவர்கள் மகிழ்ச்சியாக போற்றி கொண்டும், பிடிக்காதவர்கள் மகிழ்ச்சியாக தூற்றி கொண்டும் இருக்கின்றனர். இரண்டு தரப்பினருக்குமே ஓர் திருப்தி இல்லாமல் அதனை செய்து கொண்டிருப்பது தான் இங்கு வேடிக்கை. பிடித்தவர்களுக்கு என்ன பிரச்சனையென்றால், ஒண்ணு ரெண்டு இடங்களில் மட்டும் கதை இடிக்கிறது, பிடிக்காதவர்களுக்கு என்ன பிரச்சனையென்றால் எதிர்ப்பார்த்ததை விட படம் பிரமாதமாக வந்து விட்டப்படியால், என்ன தூற்றியும் பருப்பு வேகாமல் போகிறது.







No comments:

Post a Comment