Saturday, 2 March 2013

ஆன்மீகமா ஐயையோ...



முதலில் எல்லம் ஆன்மீகமும் பக்தியும் வேறு வேறு என்ற அடிப்படையான விஷயம் கூட யாருக்கும் தெரியாத அளவு ஆன்மீகம் சாமன்யர்களிடம் அந்நியப்பட்டு இருந்தது. ஆனால் இப்போதோ ஆட்டோக்காரர், வங்கி அலுவலர், பள்ளி ஆசிரியர், பேக்கரி கடைக்காரர், பஸ் கண்டக்டர், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் ஆன்மீகத்தை விரல் நுனியில் வைத்துள்ளனர். பஸ்ஸிலோ, இரயிலிலோ தனியாக மாட்டினால் 3 மணி நேரம் வரை கூட ஓயாத சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதற்காகவே பயணங்களின் போது ஹெட் ஃபோனை பாட்டு கேட்க வில்லை என்றாலும் கூட சும்மானாலும் போட்டு வைத்து கொள்ள வேண்டியது. எல்லோருக்கும் இல்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் 30% மக்களுக்காவது ஆன்மீகத்தை பற்றி ஒரு மணி நேரம் வகுப்பு எடுக்கும் அளவிற்கு விஷயங்கள் தெரிந்திருக்கிறது. கோவிலில் தான் ஆன்மீகம் என்ற நிலை போய், அவரவர் வீடுகளில் டி.வி.டி, டி.வி.டிக்களாக கார்ப்பரேட் குருமார்களின் ஆன்மீக சொற்பொழிவை அடுக்கி வைத்துள்ளனர். நினைத்த நேரத்தில், எத்தனை முறையாயினும் யாராலும் ஆன்மீகத்தை அணுக முடிகிறது. ஆனால் இருந்தும் நாடும், மாநிலமும் அப்படியே இருக்கிறதே, அது மட்டும் எப்படி? மாநிலம் அளவிற்கு இல்லை என்றாலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரம், மேல்மருவத்தூர், பிடதி ஆழியார், பாண்டிச்சேரி, பெங்களூர் மக்கள் பகுதி மக்களாவது இந்நேரம் அமைதியின் திருவுருவமாக அரும்பியிருக்க வேண்டுமே… ஒன்றும் மாறாமல் அப்படியே இருப்பதற்கு என்ன காரணம்…!

நான் முதன்முதலில் ஆன்மீகத்தை கைகுலுக்கி கொண்டது முதல் எனக்கும் ஆன்மீகத்திற்கும் ஏக பொருத்தம். நான் ஆறாவது முடித்து, ஏழாவது தொடங்கிய சமயம் ஒரு circular வந்தது. அதாவது பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவருக்கும் தியான வகுப்பு எடுக்கப்படும், மாலை 03.45ல் இருந்து 04.00 மணி வரை தியான வகுப்புக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்கள். எங்கள் வாழ்விலே இது போல் தியான வாய்ப்பு எல்லாம் கதவை தட்டியது, அது தான் முதல் முறை. அப்போதெல்லாம் தியானம் கற்று கொள்ள வேண்டும் என்றால், இமய மலையில் சாமியாருக்கு கூஜா தூக்கி கற்று கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தேன். இதையே தான் பராமார்த்த குரு போல், பல கதைகளில் படித்திருந்ததாலும், எனக்கு அது நம்ப எளிதாக இருந்தது. இப்போது, கூஜா ஏதும் தூக்காமல், சாமியாரிடமே ஓராண்டு காலம் தங்கி இருந்து பணிவடைகள் எல்லாம் செய்யாமல் தியானம் கற்று கொள்ள போகிறோம் என்ற பரவசம் இருந்தாலும், மிகவும் கூச்சமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் வருடத்திற்கு 50 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றதால் அசாதரணமாய் இருந்தது. என் உடன் படிக்கும் மாணவர்களுக்கும் அப்படி தான் இருக்க வேண்டும். என்றாலும், ஒரு சிலருக்கு தியானம் யோகா போன்றதெல்லாம் வேடிக்கையான விஷயமாக இருந்ததால், தியான வகுப்புக்கு பெயர் கொடுப்போர் எல்லாத்தையும் அநியாயத்திற்கு கலாய்த்து கொண்டிருந்தனர். அதன் காரணமாக நானும் பெயர் கொடுக்க தயங்கினேன். அவர்களுடன் சேர்ந்து நானும் என் சக மாணவர்களை, தியானம் கத்துக்கறவங்கல்லாம் சாமியாராய் போய்ட போறீஙக என்று நக்கலடித்து கொண்டிருந்தேன். பெயர் கொடுக்க கடைசி தேதி வரை விளையாட்டாகவே இருந்தேன். பார்த்தால், என்னுடன் சேர்ந்து நக்கல் அடித்து கொண்டிருந்தவன் எல்லாம் பெயர் கொடுத்து விட்டு இருந்தான்.

என்ன விஷயம் என்று விசாரித்தால், க்ளாஸ்ல உட்கார்றதுக்கு அங்கயாவது போய் என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம் என்று ஒரு பலே தகவலை சொன்னார்கள். அதனால் நானும் 50 ரு செலுத்தி தியானவாதி ஆக தயாரானேன். பள்ளியில் இருந்த 10th standard class room ஷிப்ட் பண்ணி அதை meditation hall ஆக்கினார்கள். ஆனால், வழக்கம் போல் 4 மணி வரை வகுப்புகள் நடந்து கொண்டே தான் இருந்தன, எங்களை யாரும் காப்பாற்றி தியான வகுப்புக்கு அழைத்து போகவில்லை. அதனாலே எப்போது டா தியானம் கற்று கொள்ள போகிறோம் என்று ஒரே ஒரே ஏக்கம் ஏக்கமாக இருந்தது. அரையாண்டு பரீட்சையே முடிந்த பின்னாலும் கூட யாரும் தியான வகுப்பு பற்றி மறு பேச்சு எடுக்கவில்லை. காசு வாங்கி கொண்டு போனதோடு சரி. இதை பற்றி எங்களது பெற்றோர்கள் parents meetingல் சில குமுறு குமுறியதும், அடுத்த சில நாட்களிலே விடையும் கிடைத்தது. ஆனால் நாங்கள் யாரும் அதை ரசிக்கவில்லை. சொன்னபடி 03.45 முதல் 04.00 மணி வரை இல்லாமல், 04.00 மணிக்கு பிறகு ஒவ்வொரு வகுப்பு வாரியாக attendance வரிசைப்படி மாணவர்களை கூப்பிட்டு சொல்லி கொடுத்தனர். அதை அவர்கள் கற்று 04.00 மணிக்கு பிறகு வீட்டிற்கு போய் தவறாமல் செய்ய சொல்லி வலியுறுத்தினர். என் பெயர் S வரிசையில் வேறு வருகிறதா முழு ஆண்டு தேர்விற்கு ஒரு வாரம் முன் தான் என் முறை வந்தது. எங்கள் வகுப்பிலிருந்து 5 பேர் போனோம். முதலில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லி கொடுப்பதாய் இருந்தது, பின் vice principal தனி கவனம் எடுத்து சொல்லி கொடுப்பதாய் மாறி போனது. ஏனெனில் தியான வகுப்பு யோசனையே அவர் தான் கொடுத்தது. அதனால் அவரே தியான ஆசிரியர் ஆக வேண்டிய நிர்பந்தம். அதனால் அவரது ஆபீஸுக்கு சென்றோம். ஒவ்வொருவராய் உள்ளே கூப்பிட்டு எப்படி தியானம் செய்வது என்று சொல்லி கொடுத்தார். எனக்கு முன்னாடி போய் வந்தவன் எல்லாம். வெளியே வந்து எங்கள் யார் கூடவும் பேசாமல், கண்ணை மூடி யோகி போல் உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பித்து விட்டான். உள்ளே என்னா டா சொன்னாங்க என்று கேட்டாலும் கூட பதிலே இல்லை.

என் முறை வந்தது. என் சுய தகவல்களை கேட்டார். சொன்னேன். பின் எனக்கு பிடித்த கடவுள் பெயரை கேட்டார். எனது vice principal வேறு கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு இந்து கடவுள்களின் பேர் சொல்வதா, இல்லை ஜீசஸ் பேர் சொல்வதா என்று குழப்பம் ஏற்பட்டு போனது. கடவுள்களிலே பிடித்த கடவுள் என்று எல்லோரும் ஒவ்வொன்றை வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது வரைதெரியாமல் போயிற்று. இந்து கடவுள்களின் பேரே சொல்ல வேண்டும் என்றாலும் கூட யார் பெயரை சொல்ல வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டது. இந்து கடவுள்களின் பெயரை சொல்லி என்ன ஆக போகிறது, ஜீசஸ் பெயரை சொன்னாலாவது, அவரை ஐஸ் வைத்த மாதிரி இருக்குமே என்று ஜீசஸ் என்றே சொன்னேன். கேட்ட மாத்திரத்தில் ஏன் ஜீசஸ் பிடிக்கும் என்று ஆச்சர்யமாய் கேட்டார், சும்மா தான் சார் என்று தலையை சொறிந்தேன். சரி கண்ணை மூடு என்றார். ஒரு பெரிதான அதிசயத்தை என்னுள் ஏற்று கொள்ள நான் முழுதாய் தயாரானேன்.

நான் சொல்வதை அப்படியே திரும்ப சொல்லுமாறு ஜீசஸ் ஜீசஸ் ஜீசஸ் என்று ராகமாய் நிறுத்தி நிறுத்தி சொன்னார். நானும் பின்னாடியே ராகமாய் பாடி கொண்டு வந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் சொல்வதை நிறுத்தி விட்டார், அது தெரியாமல் நான் ஒரு ஜீசஸ் எக்ஸ்ட்ரா சொல்லி விட்டேன். வெடுக்கென்று கண்ணை திறந்து பார்த்தேன். அப்படியே சொல்லிட்டே இருப்பா என்றார். நான் கொஞ்ச நேரம் ஜீசஸ் சொல்லி கொண்டே இருந்தேன். கொஞ்ச நேரத்தில் என்னை இடைமறித்து, இப்போ மனசுக்குள்ளே சொல்லு பார்ப்போம் என்றார். இரண்டு நிமிடம் அப்படி கழிந்தது. நான் எனக்குள் மிக தீவிரமாய் ஜீசஸை கூப்பிட்டு கொண்டிருந்தேன். நெற்றி, புருவம், முக தசைகளையெல்லாம் இறுக்கி, முக்கி, கதறி ஜீசஸை சொல்லி கொண்டிருந்தேன். பிறகு, என் தோளை தொட்டு கண்ணை திறக்க சொன்னார். மிளிரும் கண்களோடு அவர் என்னை பார்த்து அந்த கேள்வியினை கேட்டார்.
தியானம் எப்படி இருந்தது?”
எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னது இது தான் தியானமா, இதை கத்து கொடுக்கவா ஒரு வருஷமா இழுத்தடிச்சுகிட்டு இருந்தீங்க... இதை கத்துக்கவா நான் ஒரு வருஷமா காத்துகிட்டு இருந்தேன். இருந்தாலும் அவர் அந்த கேள்வியை கேட்டு விட்டாரே, என்று நான் பதிலுக்கு, சூப்பராய் இருந்தது சார் என்று சொன்னேன்.
இப்ப மைண்ட்டும் பாடியும் நல்லா ஃப்ரீயா இருக்கா?”
”அப்படியே தான் சார் இருக்கு” என்றேன். குழப்பமான ஒரு பார்வை பார்த்து விட்டு, சரி, வெளியே போய் யாரிடமும் பேசாமல் தியானம் செய், போ போய் அடுத்த ஆளை வர சொல்லு என்றார்.

நானும் வெளியே போய் யோகியாய் மாறி முக்கி முக்கி ஜீசஸை கூப்பிட்டு பார்த்தேன். ம்ஹூம்

எல்லோருக்கும் கற்று கொடுத்த முடிந்தவுடன் எல்லோரையும் உள்ளே கூப்பிட்டார்.
-    இந்த தியானத்தை தினமும் வீட்டில் படிப்பதற்கு முன் செய்ய வேண்டும்.
-    குளித்தால் மட்டுமே அன்றைய தியானத்தை செய்ய வேண்டும்
-    எக்காரணத்தை கொண்டும் உங்களுக்கு சொல்லி கொடுத்த மந்திர சொல்லை யாருக்கும் சொல்லி விட கூடாது.
-    அப்படி சொல்லி விட்டால் தியானத்தின்பவர்போய் விடும்.
-    இவ்வளவு தான் தியானம்.

அவர் சொன்ன கடைசி விஷயம் மட்டும், 50 ரூபாய் அநியாயமாய் பறிபோனதை வலியுறுத்தியது.

எல்லாமும் சொல்லி முடித்தவுடன், ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று சொன்ன மாத்திரத்தில் பிரகாசமாகி ஒரு சந்தேகம் கேட்டேன்.
“10 நாள் கழிச்சு ஜீசஸ்ங்கறது மறந்து போய்டுச்சுனா முருகர் பேரை மாத்திக்கலாமா?” என்று வரலாற்று சிறப்பு மிக்க அந்த சந்தேகத்தை கேட்டு, அவரை அசரடித்து, மந்திர சொல்லை பிறர் முன் சொன்னதற்காக தலையில் இரண்டு கொட்டு வாங்கி, நான் ஒரு இடியட் என்று அவர் வாயிலாக தெரிந்து கொண்டேன். ஆனால் பதிலை மட்டும் அவர்  சொல்லவேயில்லை.

ஏழாவது வரை முதல் ராங்க் வாங்கி கொண்டிருந்த நான், அதன் பின் 8-வது ராங்கிற்கு, துக்கியடிக்க பட்டு, பின் பாஸ் மார்கிற்கே முக்குமளவிற்கு, படிப்பில் நொண்டியடித்தேன். ஒரே குற்றவுணர்வாக இருக்கும். ஒரு வேளை தியானம் ஒழுங்காக செய்யாமல் கடவுளை ஏமாத்துவதால் தான், இப்படி நடக்கிறதோ என்று பயந்து போய் சமயத்தில் 2 மணி நேரம் எல்லாம் தியானம் செய்வேன். ஒண்ணும் நடக்காது. நேரம் இன்னும் விரயம் ஆகி, மேலும் மார்க் கம்மி ஆகும். 30க்கு மேல் மார்க் வாங்கினாலாவது, “சார் சார் 35 வாங்கினா பாஸ் சார்” என்று கெஞ்சி சொச்ச மார்க்கை வாங்கிடலாம். நாளுக்கு இரண்டு மணி நேர தியானத்திற்கு பிறகு 22 மார்க்குக்கெல்லாம் தூக்கியடிக்க பட்டேன்.   அப்போதெல்லாம், சே, என்ன டா இது, இந்த தியானத்தை கத்துக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும். தியானத்தை மேற்கொண்டு செய்வதா, இல்லை தலை முழுகுவதா என்று தெரியாமல் குழப்பத்தில் சென்ற நாட்கள் அவை. தலை முழுகியிருந்தால் எவ்வளவோ தேவலாம்..

                                           (தொடரும்…..)

Friday, 1 March 2013

ஸ்வாதி ராகவ் -7



Appointment order ல சொன்ன தேதியில போய் அந்த ISCOPE Tech கம்பெனியில போய் வேலைக்கு சேர்ந்தோம். என்னோடு சேர்த்து 11 பேர் வேலைக்கு சேர்ந்திருந்தாங்க. எங்க எல்லாரையும், அந்த Officeலேயே சின்னதா இருக்கிற ரூம்ல காத்திருக்க வைச்சாங்க. அன்னைக்கு மதியம் வரைக்கும் அங்கே தான் காத்து கிடந்தோம். 12.30 மணிக்கு தான் ஒருத்தன் உள்ளே வந்து, எங்களை எல்லாம் Welcome பண்ணான். அதுக்கப்புறமா 11 பேர்ல 6 பேருக்கு மட்டும் Cabin கொடுத்து உட்கார வைச்சாங்க. எங்க 5 பேரை, அடுத்த ரெண்டு நாளும்கூட அதே ரூம்ல தான் உட்கார வைச்சாங்க. ஒரு வேலையும் இல்லாம, போவோம், உட்காருவோம், வருவோம்னு இருந்தது. வேலை இல்லாம் கிடக்கிறோமேன்னு, பணத்தை புரட்டி இங்க வந்தா இங்கயும் வேலை இல்லாம சும்மா இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்தது. யார் யாருக்கு எந்த ‘டிவிஷன்’னு கூட சொல்லாம எங்களை வைச்சிருந்தாங்க.

ஒரு வேலையும் இல்லைன்னாலும் நாங்க கரெக்ட் டைம்க்கு வர்றோமா, போறோமான்னு பார்த்து, லேட்டா வர்றவங்களை காச் மூச்னு கத்தனாங்க. நாங்க 5 பேரு பேசறது, கொஞ்சம் சத்தம் வெளியே போய்ட்டாலும் சரி, உள்ளே வந்து நின்னுருவான் அந்த எம்.டி. 5 நிமிஷத்துக்கு தாளிச்சு தள்ளிட்டு போவான். தூங்கினாலும் போச்சு, அதுவும் மதியம் சாப்பிட்டு வந்துட்டு, அந்த ஏ.சி ல தூங்காம இருக்கிறத்துக்கு ரொம்ப கஷ்டப்படுவோம். அந்த மாதிரியான சமயத்துல எங்களுடைய ஒரே ஆறுதல் ’காபி மெஷின்’. ரொம்ப மட்டமான காபியா தான் இருக்கும். குடிக்கும் போதே சுடு தண்ணி எது, பால் பவுடர் எது, சர்க்கரை எதுன்னு தொண்டையை கடந்து போற வரைக்கும் தனித்தனியா தெரியும். இருந்தாலும் அந்த காபியையும் ஒரு நாளைக்கு அரை டஜனை உள்ளே தள்ளுவோம். காபி சீக்கரம் சீக்கரம் தீர்றதை பார்த்துட்டு, காபி கம்மியா குடிக்க சொல்லி Circularஏ போட்டுட்டாங்க. சரின்னு வெளியே போய் குடிக்கலாம்னா, வெளியேவும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க. காலைல உள்ளே வந்துட்டா, ஆபீஸ் முடிஞ்சதுக்கப்பறம் தான் வெளியே போணும்னு இங்க மட்டும் தான் கேள்வி படறேன்.

வேலைக்கு சேர்ந்த 3-வது நாள் தான் எங்களுக்குன்னு cabin கொடுத்தாங்க. அதுலயும் ஒரு 2 பேரை, ஒரே cabinல அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்னாங்க. நல்லவேளையா எனக்கு ஒரு தனி cabinஅ, பில்டிங்கோட கார்னரா பார்த்து கிடைச்சது. இந்த 2 நாள், உட்கார இடம் இல்லாம் இப்ப மட்டும் எப்படி டா இடம் கிடைச்சதுன்னு விசாரிச்சா, கொஞ்சம் பேரு வேலையை விட்டுட்டு போய்ட்டதால தான் இந்த இடமே கிடைச்சதாம், இல்லைனா அன்னைக்கும் அந்த குட்டி ஹால்ல தான் உட்கார்ந்து இருந்திருப்போம்.  

போய் ஒரு 6 நாள் கழிச்சு தான், ஒரு மிட்டிங் போட்டு கம்பெனி நிலைமைய சொன்னாங்க. என்ன விஷயம்னா அவங்களுக்கு தற்சமயம் Project எதுவும் இல்லைன்னும், project-க்காக முயற்சி பண்ணிட்டு இருக்கிறதாகவும் சொல்லி, அது வரைக்கும் எங்க எல்லாரையும் படிச்சு வைச்சிக்க சொன்னாங்க. TCS கம்பெனியே ப்ராஜக்ட் இல்லாம பல பேரை இப்படி தான் ‘பெஞ்ச்’ல உட்கார வைச்சிருக்கறதாகவும், அதனால ஒண்ணும் வருத்தப்பட வேண்டாம்னும் தைரியம் சொன்னாங்க. இந்த கம்பெனிக்கு வேணும் வேணும்னு ஏன்டா வந்து சேர்ந்தோம்னு ஆய்டுச்சு, சரி, என்ன பண்றது, பணத்தை கட்டியாச்சு, இனி எல்லாம் தலையெழுத்துன்னு வேலைக்கு போய்ட்டு இருந்தோம்.

காலையில போவோம், attendance கையெழுத்து போடுவோம், எல்லோருக்கும் ஒரு “Hi..” சொல்லிப்போம், Internet open பண்ணி படிக்க உட்காருவோம், காபி குடிக்க போவோம், Facebook போவோம், சாபிட போவோம், மறுபடியும் பழைய மாதிரி வந்து கம்ப்யூட்டரை நோண்டிகிட்டு இருப்போம், 6 மணி ஆயிடும் வீட்டுக்கு வந்துருவோம்.

இதுக்கு நடுவுல அந்த எம்.டி ஒரு நாளைக்கு 5 முறையாவது, பொண்ணுங்களை உள்ளே கூப்பிட்டு பேசி அனுப்புவான். அப்படி என்ன பேசினாங்கன்னு விசாரிச்சா, வெட்டி கடலையா இருக்கும். Sunday எல்லோரும் வாங்க, treat வைக்கிறேன்லாம் கூப்பிட்டு அந்த பிள்ளைங்களை கலவரப்படுத்தினான். நடுவுல M.E படிக்க சொல்லி கேன்வாசிங் வேற பண்ணுவான். அவன் லண்டன், துபாய், அமெரிக்காலாம் போய்ட்டு வந்ததாகவும் வார்த்தைக்கு மூணு முறை பீத்திகிட்டதாகவும், ஏதாவது டவுட்னா போன் பண்ண சொன்னதகவும் தினமும் ஏதாவது வழிஞ்சுகிட்டு இருப்பான். கரிச்சு கொட்டுவாங்க.

இதுக்கு நடுவுல, எங்களுக்கு சேர்ந்த Employees ஓட நல்லா பேசி பழக ஆரம்பிச்சோம். அவங்க சொல்லி தான் அந்த கம்பெனியை பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டோம். இந்த கம்பெனி ஆரம்பிச்சே 8 மாசம் தான் ஆகுது. ஆரம்பத்துல என்னமோ, 3 project பிடிச்சி செஞ்சது என்னமோ உண்மை தான், ஆனா அதுக்குப்பறம் 6 மாசத்துக்கு மேல ஆகியும் எந்த project-ம் வந்த பாடில்லை. அது மட்டுமில்லாம, இந்த கம்பெனியில சேர்ந்த ஒவ்வொரு Fresher-ம் பைசா கொடுத்து தான் வந்திருக்காங்க. வெளியில நீங்க எவ்வளவு கொடுத்தீங்களோ தெரியாது, ஆனா கம்பெனிக்கு வர்றது 1 லட்சம் மட்டும் தான். அப்படி சொன்னதை கேட்டவுடனே, எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. 50000 ரூபாயை வெறும் கன்சல்டன்சிக்கு மட்டுமே நாமே தண்டம் அழுந்துருக்கோம்னு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். என் கூட சேர்ந்திருந்த நிறைய பேரு, என்னை மாதிரியே தான் வருத்தப்பட்டாங்க. அதுலயும் என் கூட சேர்ந்திருந்த ஒரு பொண்ணு, 2 லட்சம் கொடுத்து உள்ளே வந்திருந்துச்சு, அதெல்லாம் வாழ்க்கையையே வெறுத்துடுச்சு. இங்க இருக்கிற Experienced candidates ஒரு 10-15 பேரு மட்டும் தான் காசு கொடுக்காம உள்ளே வந்தவங்க. சம்பளம் ஏதோ சுமாரா வாங்கறாங்கன்னாலும், அவங்களுக்கும் இங்க ஏண்டா வந்தோம்னு தான் இருந்தாங்க. அவங்க ரொம்ப தீவரமா அடுத்த கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. அப்படி தாவி போறவங்க ஸீட்ல தான் நாங்க ஒவ்வொருத்தரா உட்கார்ந்துட்டு இருந்தோம்.

என்ன தான் கம்பெனி நஷ்டத்துல போனாலும், அந்த மாச சம்பளத்தை கரெக்டா கொடுத்தாங்க. 12500/-. இந்த மாதிரி 12 சம்பளம் வாங்கினா தான் நான் போட்ட காச எடுக்க முடியும். ஆனா அதுவரைக்கும் கம்பெனி இருக்குமா அப்படிங்கறது தான் எங்க எல்லோருடைய கேள்விக்க்குறியாய் இருந்தது. இப்ப கொடுக்கிற சம்பளம் எல்லாம் நாங்க கொடுத்த பணத்துல இருந்து தான் கொடுத்துட்டு இருக்காங்கன்னு யாரும் சொல்லாமலே எங்களாலே தெரிஞ்சிக்க முடிஞ்சது. நாளைக்கே இந்த பணமெல்லாம் தீர்ந்துடுச்சுன்னா, என்ன பண்ண போறான், ஒரு வேளை கம்பெனி இழுத்து மூட போறங்கன்னு முடிவு பண்ணா, எங்க பணத்தையெல்லாம் கொடுத்துட்டு மூடுவானா, இல்லை சுருட்டிட்டு ஓடிடுவானா… எதுவுமே புரியாம கிடந்தோம்.

Google போய் Iscope technology ன்னு கொடுத்தாலே, அது ஃப்ராடு கம்பெனி, ஏமாந்துராதீங்கன்னு வரிசையா லிங்க்கா கிடந்தது. அதை பத்தி என்னன்னு எம்.டி கிட்ட விசாரிச்சி இருக்காங்க, அது வேற , இது வேறன்னு ஜென்மம் மழுப்பிச்சு. கொஞ்ச நாள்லயே கம்பெனிக்கு பேர் மாத்த போறோம், நல்ல பேரா இருந்தா சொல்லுங்கன்னு எம்.டி வந்து நின்னான். இது மாதிரியெல்லாம் ஒரு கம்பெனி இருக்குமான்னு, ரொம்ப நொந்துட்டேன். ஆளாளுக்கு ஒரு பேரை சொன்னாங்க. கடைசியில அதுவா I-S infotech நல்லாயிருக்கான்னு கேட்டு, அது தான் வைக்க போறேன்னு ரூமுக்குள்ள போயிடுச்சு. இந்த கருமத்துக்கு எங்க கிட்ட எதுக்கு கேட்கணும் கேட்காமலேயே இருந்து தொலைய வேண்டியது தானே…

எங்களை சேர்த்து விட்ட கன்சல்டன்சிக்காரனுக்கு ஃபோன் அடிச்சு, கம்பெனியை பத்தி சொல்லி, சுத்தமா சரியில்லைன்னு பணத்தை திருப்பி கேட்டேன். அதெல்லாம் தரமுடியாது, கம்பெனி நல்லா தானே போய்ட்டு இருக்குன்னு திமிரான பதில் வந்தது.

எங்க கம்பெனியோட websiteஐ பார்த்தாலே, கேவலத்துக்கு இருக்கும். ஏதோ மார்க்கெட்டிங் கம்பெனியோட website page மாதிரி இருக்கும். ஒரு software கம்பெனி website மாதிரியே இருக்காது. இப்ப புதுசா கம்பெனி பேரை வேற மாத்திட்டாங்களா, வெப்ஸைட்டையும் மாத்துங்கடான்னு எம்.டி சொல்லிட்டாரு. HCL websiteஐ reference வைச்சு, அதே மாதிரி ஒரு புது வெப்ஸைட்டை உருவாக்க சொன்னாங்க.

கம்பெனி வந்து அது தான் முதல் வேலை வேறயா… ஆளாளுக்கு எடுத்து செஞ்சாங்க. ஒவ்வொரு வேலையையும் டீம், டீம்மா பிரிச்சு உட்கார்ந்து ராப்பகலா ப்ரோக்ராம் அடிக்க ஆரம்பிச்சோம்.

அப்ப Contact us பகுதியில போடறதுக்காக எங்க சென்னை அட்ரஸ் மட்டுமில்லாம, ஒரு அமெரிக்க அட்ரஸ்ஸையும் கொடுத்தாங்க. ஒரு பையனோட மாமா, அமெரிக்காவுல அந்த அட்ரஸை தேடி பார்த்துட்டு, அப்படி ஒரு அட்ரஸ்ஸே இல்லைன்னு அடிச்சு சொல்லிட்டாரு. அமெரிக்காவுலயும் ஒரு கம்பெனி இருக்கிறதா போட்டுகிட்டு MNC கம்பெனின்னு சொல்லி எங்களை மாதிரியே பத்து பேரை ஏமாத்தலாம்னு திட்டம். அந்த வெப்ஸைட் பில்டிங்கை, கொடுத்த ஒரு வாரத்துலயே, கில்லியா முடிச்சுட்டாங்க.. நாங்க உருவாக்கன website பார்த்து தான் நாளைக்கு ஒரு கூட்டம் ஏமாற போகுதுன்னு யோசிச்சாலே, ஏன்டா அப்படி ஒரு வேலையை செஞ்சி கொடுத்தோம்னு இருக்கும்.

ஒரு நாள் திடீர்னு, websiteல vacancy இருக்குனு, carrers columnல போட சொன்னாங்க. நிறைய கன்சல்ட்டன்சிக்காரங்க வர்றதும் போறதுமா இருந்தாங்க. இந்த முறை ரேட்டு 1.25 லட்சம்னு, காத்து வாக்குல எல்லாரும் பேசிகிட்டாங்க. நமக்கே இங்க வேலை இல்லையே, இன்னும் அவங்க வந்து என்ன பண்ண போறாங்க, முதல்ல உட்கார இடம் ஏதுன்னு எங்க எல்லாருக்கும் குழப்பம்.

Interview அன்னைக்கு வசவசன்னு பயங்கர கூட்டம். 3 நாளா interview நடந்து முடிஞ்சது. மொத்தம் 40 பேரை எடுத்திருக்காங்கன்னு சொன்னாங்க. காசு கொடுத்தவங்களை மட்டும் தான் எடுத்து இருக்காணுங்க. அப்படி இருக்கறவங்க, எதுக்கு மத்தவங்களை interviewக்கு கூப்படணும். கேட்டா கம்பெனி ஃபேமஸ் ஆகனுமாம். தலையெழுத்துன்னு நினைச்சிகிட்டோம். அவங்க எல்லாரையும் 15-வது நாள் வந்து சேர்ந்துக்க சொல்லி ஆர்டர் டைப் பண்ணி கொடுத்திருந்தாங்க, இதுக்கு நடுவுல ஏதோ professional-ஆ போய்க்கிட்டு இருக்கிற கம்பெனி மாதிரி எங்களுக்கு Salary account, CUG Sim எல்லாம் ஏற்பாடு பண்ணி கொடுத்தாங்க.

எப்பவும் போல ஒரு திங்கட்கிழமை, வேலைக்கு போனா ஆபீஸ் பூட்டி கிடந்தது. யார்யாருக்கோ போன் பண்ணாங்க, எல்லோருடைய போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது, ஒவ்வொண்ணு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்னு வந்தது. யாருக்கும் என்ன பண்றதுன்னே தெரியலை. பொண்ணுங்க எல்லாரும் அழ ஆரம்பிச்சுட்டாங்க, பசங்கள்ள கொஞ்ச பேரு கூட கண்ல தண்ணிய விட்டுட்டு மூலைல உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் எங்கள்ல ஒரு பையன் எப்படியோ யார் யாருக்கோ போன் போட்டு எம்.டியோட பொண்டாட்டி நம்பர் வாங்கி, எம்.டி கிட்ட கொடுக்க சொல்லி பேசினான். எம்.டி , ஜஸ்ட் லைக் தட், இன்னைக்கு லீவுப்பா, போய்ட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்லிட்டான். எங்களுக்கு அதை நம்பறதை தவிர வேற வழியில்லை. அந்த நாள் வீட்டுக்கு போய்ட்டு, அடுத்த நாள் வந்தா, அடுத்த நாளும் ஆபீஸ் பூட்டியே கிடந்தது. அடுத்த நாளும் எல்லா நம்பரும் நாட் ரீச்சபள். நேத்து போன் பண்ண நம்பரும் சேர்த்து நாட் ரீச்சபள். போலிஸுக்கு போறது பத்தி யோசிச்சோம், இன்னும் ஒரு நாள் பார்க்கலாம்னு பொண்ணுங்க சொன்னதால, அன்னைக்கும் திரும்ப வீட்டுக்கு போய்ட்டோம். அடுத்த நாளும் பூட்டி தான் இருக்கும்னும் தெரிஞ்சும், போய் பார்த்தோம். பூட்டியே கிடந்தது. ஆனா, நேத்து கம்பெனிக்குள்ள இருந்த நிறைய கம்ப்யூட்டர்கள், டேபிள், சேர்கள் இன்னைக்கு இல்லை, ஆபிஸ்ல கண்ணாடி கதவுங்கறதால தான் அதையும் பார்க்க முடிஞ்சது. அப்புறம் தான் போய் செக்யூரிட்டியை விசாரிக்கணும்ங்கற எண்ணமே வந்துச்சு.

அவனை போய் விசாரிச்சதுல, ஞாயிற்றுகிழமையே பாதி சாமானங்களை வந்து எடுத்துட்டு போய்ட்டதாவும், நேத்து ராத்திரி 8 மணி போல இன்னும் கொஞ்சம் சாமானங்களை எடுத்துட்டு போனதாகவும் சொன்னார். ஞாயிற்றுகிழமை எடுத்துட்டு போனது, வெளியே இருந்து பார்த்தா தெரியாத மாதிரி இடங்கள்ள இருந்து எடுத்துட்டு போனதால, எங்களால கண்டுபிடிக்க முடியாம போய்டுச்சு. ஆனா நேத்து எடுத்த போது, கண்ணுக்கு தெரியற இடத்துல இருந்து பொருலை எடுத்ததால தான் கண்டுபிடிக்க முடிஞ்சது. இந்த விஷயத்தை தெரிஞ்ச அடுத்த நிமிஷமே, போலீஸுக்கு போறதுன்னு ஒட்டு மொத்தமா முடிவு பண்ணோம். அதுவும் கமிஷ்னர் ஆபிஸுக்கே போய் நேரடியா புகார் கொடுத்தா தான் மனசு ஆறும்னு, ஆளாளுக்கு பஸ், ஆட்டோன்னு பிடிச்சு, 90 பேரும் போய் கமிஷ்னர் ஆபிஸ் முன்னாடி போய் நின்னோம். எல்லோரையும் உள்ளே வர விடலை. எங்க புகாரை ஒரு பேப்பர்ல எழுதி அத்தனை பேரும் கையெழுத்து போட்டு 2 பேரை மட்டும் உள்ளே வர சொன்னாங்க. எங்க சைட்ல இருந்து, ஒரு பொண்ணும் ஒரு பையனும் போய் கமிஷ்னரை நேரா பார்த்து விஷயத்தை சொல்லிட்டு வந்தாங்க. மீடியா ஆட்களும் என்ன விஷயம்னு கேட்டு, போட்டோ எடுத்துட்டு போனாங்க. அடுத்த நாள் பேப்பர்ல கூட இரண்டாவது பக்கமே விஷயம் வந்தது, ஆனா இன்னமும் நல்ல செய்தி தான் எதுவும் வராம கிடக்கு  

மொத்தமா 70 லட்சத்துக்கு மேல சுருட்டிட்டு ஓடுனதா பேப்பர்ல செய்தி போட்டுருந்தாங்க. அந்த ஒரு நாள் அந்த நியூஸ் வந்ததோட சரி, அதுக்கப்புறம் எந்த ஒரு follow up நியூஸும், மீடியா கொடுக்கலை.

நான் என்னோட கன்சல்டன்சிக்கு போன் பண்ணேன். நான் சொல்றதுக்கு முன்னாடியே அவனுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு. அவன் கம்பெனிக்கு கொடுத்த 1 லட்சம் போக, மீதி 50000 ரூபாயை தந்திடறதா சொன்னான். அதெல்லாம் முடியாது, எனக்கு முழு பணமும் வேணும்னு சண்டை போட்டேன். அவன் அதுக்கெல்லாம் அசர்ற ஆளா இல்லை. சரி, முதல்ல 50000 பணத்தை தரட்டும், மித்ததை அப்புறம் வாங்கிக்கலாம்னு பொறுமையா இருக்கேன். இன்னமும் ஒரு ரூபா அவன் தரலை. போன் பண்ணும் போதெல்லாம், ரொம்ப பணக்கஷ்டம், 1 வாரம் அவகாசம் வேணும்னே சொல்றான்.

எதுக்கும் கம்பெனி போய் பார்க்கலாம்னு, நாங்க ஒரு 4 பேரு மட்டும் ஒரு நாள் போனோம். கம்பெனியோட கண்னாடி கதவுல பெருசா ஒரு கீறல் இருந்தது. யாரோ, அடிச்சு உடைக்க முயற்சி பண்ண கீறல்னு நல்லாவே தெரிஞ்சது. கம்பெனியோட கண்ணாடி Name boardஐயும் சல்லி சல்லியா நொறுக்கி இருந்துருக்காங்க. நாங்க 4 பேரும், கம்பெனி முன்னாடி போய் நின்ன கொஞ்ச நேரத்துலேயே, அந்த காம்ப்ளெக்ஸ் செக்யூரிட்டிகள் 3-4 பேரு ஓடி வந்து, எங்களை அங்கிருந்து துரத்த ஆரம்பிச்சாங்க. ஆபிஸை இதுக்கு முன்னாடி நிறைய பேரு கூட்டமா வந்து அடிச்சதாகவும், பெரிய பிரச்சனை ஆகிட்டதால இனிமே இங்க யாரையும் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க, அது மட்டுமில்லாம ஆபிஸையும், வேற ஒருத்தருக்கு வாடகைக்கு விடறதுக்காக அட்வான்ஸ் வாங்கிட்டதாகவும் சொன்னாங்க.

பணத்துக்கு பணம், வேலை, நேரம், நாள், அலைச்சல், சந்தோஷம் எல்லாமும் என் பேராசையால வீணா போய்டுச்சு. ஆனா இவ்வளவு ஆனதுக்கு அப்புறமும், என் வீட்டுல உள்ளவங்க என்னை ஒரு வார்த்தை கூட சொல்லை, வருத்தப்பட்டாங்களே தவிர ஏன்டா இப்படி அறிவில்லாம் பண்ணேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லை. நான் ஒழுங்கா படிச்சிருந்தா இதுல எந்த பிரச்சனையும் நான் பார்த்திருக்க தேவையில்லை. ஆனா என் வீட்டுல உள்ளவங்க என்னை திட்டாம, என்னோட விதியை தான் திட்டுனாங்க. அவங்க அப்படி என்னை திட்டாம போனது தான், எனக்கு நெஞ்சு அடைக்க வைக்குது…..”

அதற்கு மேல் வார்த்தைகள் வலுவிழந்து கண்ணீர் அதன் மொழிகளை பேச எத்தனித்த போதே, அன்பு அதை கை கொண்டு தடுத்துவிட்டான். உணர்ச்சிகள் மொத்தமும் அவன் கட்டுக்குள் இருந்தாலும், கண்கள் மட்டும் எப்படியோ கட்டுபாடு இழந்ததை, அன்பு அவனது கையை, அவன் விழியருகே எடுத்து சென்ற போது தான் மற்றவர்கள் பார்த்தனர்.

”ரோஹித்தும், நிர்மலாவுக்கும் இப்போதைக்கு வேலை இல்லாம இருக்கு, என்னை மாதிரி எந்த அவசரத்துலயும் யாரும் ஆழம் தெரியாம காலை விட்டுட கூடாதுங்கறதுக்காக தான் இதெல்லாம் சொல்றேன். நிர்ம்லா என் கிட்ட பல முறை என்னோட கன்சல்டென்சில சொல்லி வேலை வாங்கி தர சொன்ன போது வேண்டாம்னு சொன்னதுக்கு இது தான் காரணம்”.

ராஜீவ் தன் ஆழமான பார்வையால், அன்பை பார்த்தான். வார்த்தைகள் உதவ முன் வராத காரணத்தால் அவனது இரு கையையும் பற்றினான். அன்பு அவனது மெல்லிய புன்னகையை வரவழைத்து, கையை விடுவித்து கொண்டான்.

அந்த தருணத்தில் தான் ஸ்வாதி, “நாமெல்லாம் சேர்ந்து ஏன் ஓர் பிஸனஸ் பண்ண கூடாது…. ” என கேட்டாள். நிர்மலாவும் அவள் பங்குக்கு ஹோட்டல் வைப்பதை பற்றி யோசனை சொன்னாள். அது வேலையாட்களை எதிர்பார்த்து இருக்க வேண்டியதன் அவசியம் சொல்லி, “ஒய் நாட் புக் ஷாப்….?” என்றாள். யாருக்கும் அதில் ஆட்சேபணை இருக்கவில்லை. எல்லோரது சம்மதங்களும் தன்னிச்சையாய், தெரிவித்தது போல் இருந்தன. சூழ்நிலையின் மாற்றம் விரும்பியோ என்னவோ, ரோஹித் “Lets celebrate” என்று சொல்ல, ஸ்வாதி சற்று தொலைவில் இருந்த ஐஸ்கிரீம் பார்லரை காட்ட, எல்லோரும் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.


                                           (தொடரும்…..)

Monday, 18 February 2013

என்ன நடக்கிறது நம் ஆன்மீக மண்ணில்...



இதை எழுதி கொண்டிருக்கும் இந்த நாள் வரை என்னென்னமோ நடந்து விட்டது நம் அமைதி பூங்காவில். விஸ்வரூபம் திரைப்படம் அளவிற்கு சமீபத்தில் எந்த திரைப்படமும் வெளியிடுவதற்காக சர்ச்சைகள் ஏற்படவில்லை. விஸ்வரூபம் படம் ஜனவரி 12ந் தேதி திரையரங்குகளிலும், ஜனவரி 11ந் தேதி DTHலும் வெளியாகும் என்று டிசம்பர் மாதத்தில் ஒரு நாளில் அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்தே ஆரம்பித்த பிரச்சனை இது, அடங்க அடங்க எரிந்து கொண்டிருக்கிறது.

DTH என்றால் ஏர்டெல் நிறுவனம் தான் பிரதானமாய் முன்நின்று கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளித்தது,. அதன் படி, விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளிவருவதற்கு முன்னே, ஏர்டெல் டி.வி.யில் பார்க்க வேண்டுமானால் 1000 ரூ கட்டி, 11ந் தேதி அன்று இரவு 09.30 மணிக்கு குறிப்பிட்ட சேனலில் பார்த்து கொள்லலாம் என அனைத்து முண்ணனி நாளிதழ்களிலும் விளம்பரப் படுத்தி இருந்தனர். இதை திரைத்துறையினரும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகிஸ்தர்களும் கடுமையாக எதிர்த்தனர். DTH-ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிட முடியாது என முரண்டு பிடித்தனர். கமலும் தன் பங்குக்கு இது ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி, காலத்திற்கேற்ற மாற்றம் என்றெல்லாம் சொல்லி பார்த்தார், பொருள் என்னுடையது என்று திமிர் காட்டினார், பிரசாத் கலர் லேப்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஓரங்கட்டியதை உவமை காட்டி நியாயம் கேட்டார்… ம்ஹூம்… ஒன்றும் மசியவில்லை. கமல் தான் இறங்கி வந்தார். திரையரங்கிலே முதலில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வேறு வழியின்றி வந்தது. ஜன.25 தியேட்டரிலும், பிப்.2 DTH-ல்லும் திரையிடப்படும் என்று முடிவு ஆனது.

இதெல்லாம் கொஞ்சம் மண்ணை கவ்வி, சுமூகமாக முடிந்தாலும், முஸ்லீம் அமைப்புகளிடமிருந்து வந்த பிரச்சனையை தான் சமாளிப்பதற்குள் கமலுக்கு போதும் போதும் என்றாகி விட்டிருந்தது.

பிரச்சனை என்னவோ இது தான், முஸ்லீம் மக்களை தவறாக சித்தரிப்பதாய் அனுமானித்து கமல்ஹாஸனிடம் தம் கண்டனங்களை தெரிவித்தனர். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்து, வேண்டுமானால் படம் வெளியிடும் முன் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காட்டுகிறேன் என வாக்களித்தார். அது குறித்து முஸ்லீம் மக்களும் சமாதனம் அடைந்து, அவ்வாறாக தவறாக சித்தரிக்க படவில்லையென்றால், அனைத்து முஸ்லீம் மக்களுக்கும் இனிப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.

திரையிடும் தேதி அறிவித்த மாத்திரத்தில், அவர்களும் சொல்லி வைத்தாற் போல் வந்து திரையிட்டு  காட்ட சொல்லி வந்து நின்றனர். கமலும் அவரது வீட்டில் திரையிட்டு காட்டினார். படத்தின் இடைவெளியின் போதே upset ரியாக்‌ஷன் கொடுத்தனர். மீதி பாதி படத்தையும் பார்த்து விட்டு, அதிருப்தியை காரணமாய் கொண்டு எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்றனர். என்ன ஏது என்று கமல் தடுத்து பிடித்து விசாரித்ததில், உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி விட்டு கிளம்பி சென்று விட்டனர்.

அடுத்த நாள் கமிஷ்னர் அலுவலகத்தில் அனைத்து 24 முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போய் கமல்ஹாஸனுக்கு எதிராக புகார் கொடுத்தனர். அதனை தொடர்ந்து நீதிமன்றத்திலும் திரைப்படத்தை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்தனர். நடுரோட்டில் ஆர்பாட்டங்களும், கோஷங்களையும் எழுப்பி மீடியா கேமாராக்கள் பதிவு செய்து கொள்ளும் வண்ணம் அரங்கேற்றினர். பெட்ரோல் குண்டுகள் வெடித்தன. கல் எறிந்து கண்ணாடிகள் நொறுங்கின. வெகு சீக்கரத்தில் ஒரு சினிமா பிரச்சனை, சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் காரணமாக தமிழக அரசும், விஸ்வரூபம் வெளியாவதை விரும்பவில்லை.

நீதிமன்றம் தரப்பில் இருந்து, நீதிபதி படத்தை தனிப்பட்ட முறையில் பார்த்து விட்டு தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார்கள். நீதிபதியும் படத்தை பார்த்து விட்டு, படத்தை வெளியிட அனுமதி அளித்தார். மணி அப்போது இரவு 09.40. அந்த நேரத்திலும் அரசு தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் அறிவுறுத்தலால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டை இரத்து செய்து, விஸ்வரூபம் படம் வெளியாகுவதற்கு பூரண அனுமதி அளித்தார்.

இதனால் திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அடுத்த நாள் திரைப்படமும் வெளியானது. ஆனால் அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு நீதிமன்றம் தரப்பில் இருந்து மீண்டும் தடை உத்தரவு வரவே, பெரும்பாலான திரையரங்குகளில் பாதி படத்தை மட்டும் திரையிட்டு, டிக்கெட்டிற்கு உரிய பணத்தை திருப்பி கொடுத்து, ரசிகர்களை திருப்பி அனுப்பினர். இது போல் ஓர் சூழலை தான் வன்முறையாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர் போலும்… விளைவு, தமிழகத்தில் மட்டும் 7 திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. வில்லிவாக்கம் AGS தியேட்டரை கொழுத்தப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லீம்கள் யாரும் பெரிதாக தியேட்டர் வன்முறையில் ஈடுப்பட்ட மாதிரி தெரியவில்லை. பிறகு யார் இதை செய்திருக்க கூடும் என்ற போது தான், இது ஒர் அரசியல் பிரச்சனை என்று பாதை வேறு ஒரு பக்கம் திருப்பம் எடுத்தது.

முதலில் விஸ்வரூபம் படம் ஜெயா டி.விக்கு தான் பெரும் பணத்தில் கொடுக்கப்பட இருந்தது. ஆனால், கமல் படத்தை DTH-லும் ஒளிபரப்புவதை காரணமாய் சொல்லி, கமலிடம் விலையை குறைக்க சொல்லி பேரம் பேசினர். அதற்கு உடன்படாத கமல், இருக்கவே இருக்கு விஜய் டிவி என்று விஜய் டி.விக்கு படத்தை விற்று விட்டார். அந்த கடுப்பிலோ என்னவோ, எதற்கோ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு போனவர், நமக்கு வரவிருக்கும் பிரதமர் நிச்சயம் ஒரு வேட்டி கட்டியவராய் தான் இருப்பார் என அங்கே கொழுத்திப் போட்டது விஸ்வரூபத்தில் வந்து வெடித்தது. இப்படியாக பிரச்சனைக்கு சுவாரஸ்யங்கள் சேர்ந்து கொண்டே போக, புதிய தலைமுறையும், சன் நியூஸும், ஜீ டி.வி என எல்லா செய்தி தொலைக்காட்சிகளும் எந்நேரமும் விஸ்வரூபம் பிரச்சனையை கவர் ஸ்டோரி ஆக்கினர்.

அப்போதைய நிலையில் தமிழகம் தவிர்த்து, கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் தமிழிலும், பிற மொழிகளிலுமாக படம் வெளியிடப்பட்டது. இதில் கேரளத்தில் மட்டும் வித்தியாசமாக முஸ்லீம்கள் படத்தை தடை செய்ய கோரி ஆர்பாட்டம் செய்த கொஞ்ச நேரத்திலே, இந்துக்களும் ஆர்பாட்டம் செய்து படத்தை வெளியிட கோரி, படத்தை வெளியிட்டு கொண்டனர்.

அந்த மாதிரியான ஒரு நேரத்தில் தான் கமல்ஹாஸன் ஒரு ப்ரஸ் மீட்டை ஏற்பாடு செய்து, இந்திய மக்களின் உணர்ச்சிகளை ஒரு பொறட்டு பொறட்டி எடுத்தார். இன்று வரை அந்த குறிப்பிட்ட Youtube video 608479 பேருக்கும் அதிகமாக பார்க்கபட்டு இருக்கிறது. 9 நிமிட வீடியோவில், முதல் 2 நிமிட வீடியோ, கமல் மீடியா ஆட்களின் சலசலப்பு அடங்கும் வரை பொறுமை காத்து, இப்ப பேசலாமா, என்று மிகவும் மென்மையாக  பேச்சை ஆரம்பிக்கிறார். தான் இந்த படத்திற்காக பெரும் செலவு செய்திருப்பதாகவும், அவருடைய சொத்துக்களும், வீடுகலும் அடகில் இருப்பதாகவும், படம் வெளியாகும் தேதி தள்ளிப்போக தள்ளிப்போக நஷ்டத்தின் மேல் நஷ்டமாய் வந்து விழும் என்றும், இந்த வீட்டில் நடக்கும் கடைசி ப்ரஸ் மீட் இதுவாக கூட இருக்கலாம். இந்த படம் வெளியிடப்படாமல் போகும் பொருட்டு, தான் ஒரு மதசார்பற்ற மாநிலம் தேடி போவேன் என்றும், அல்லது மதசார்பற்ற மாநிலம் இல்லையென்றால் மதசார்பற்ற தேசம் நோக்கி செல்வேன் என்றும் நெஞ்சை பிசைந்தார். தாமதமாக வரும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாக கருதப்படுவதால், தமக்கு நீதி மறுக்கப்பட்டுவதாகவே உணர்கிறேன் என்று கூறி வெளுத்து விளாசினார்.

இதற்கு பதில் அளிக்கவே, நம் முதல்வர் அடுத்த நாள் பகல் 1 மணிக்கு, ஓர் நீண்ட அறிக்கையை விடுத்தார். வார்த்தைக்கு வார்த்தை உடன் படும் வண்ணமும், முதல்வரின் புத்திசாலித்தனத்தை மெச்சும் வகையிலும் இருந்ததாக தமிழ்நாடே சில்லாகித்தது. அந்த நீண்ட பேட்டி, ஜெயா டி.வி.யில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வந்தது, அதுவும் தமிழக அரசின் வெளியீட்டின் பேரில்…

கமல்ஹாசனின் மேல் எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட வன்மம் கிடையாது என்றும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு தான் படத்தை தடை செய்த்தாக சொன்னார். தமிழ்நாடு திரைப்பட சட்டப்படி, அரசுக்கு ஒரு திரைப்படத்தை நிரந்தரமாக தடை செய்ய சட்ட வசதி இருந்தும், அதனை செய்யாமல் 144 தடை உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளதாக சொல்லி நம் எல்லோரையும் சந்தோஷ பட்டு கொள்ள சொன்னார். முஸ்லீம் அமைப்புகளும், கம்ல்ஹாசனும் உட்கார்ந்து பேசி முடிவு எடுப்பது மட்டுமே சுமூக தீர்விற்கு வழி வகுக்கும் என தெரிவித்தார்.

மேலும் ஜெயா டி.வி.க்கு படத்தை விற்காத்தால் தான் இப்படி கமலுக்கு நெருக்கடி கொடுக்கிறேன் என்று சில தனியார் தொலைக்காட்சிகள் கூறியதை மறுத்து, முதலில் ஜெயா டி.வி.க்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, தான் ஓர் பங்குதாரர் கூட கிடையாது, அது ஒரு அ.தி.மு.கவிற்கு ஆதரவாய் செயல்படும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமே என கூறி எதையோ நமக்கெல்லாம் தெளிவுப்படுத்த விரும்பினார். தேவையில்லாமல் அவதூறு பரப்பிய அனைவரது மீதும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அரேபிய நாடுகள், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் சில பகுதிகள் என உலகம் பூராவும் ஆங்காங்கே தடை செய்யப்பட்டு இருக்கும் போது தமிழக அரசு தடை செய்த்து மட்டும் எப்படி விமர்சனத்துக்குரியதாகும் என கேட்டு, நெத்தியடி அடித்து, ஒரே நாள் திரையிடப்பட்டதற்காக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்திருக்கிறது, அதனால் தான் முன்னெச்சரிக்கையாக படத்தை தடை செய்தோம் என வாதிட்டு மலைக்க வைத்தார்.

முதல்வரின் இந்த பேட்டி, செம ஹிட் அடித்து பத்திரிக்கைள் எல்லாம் இதே பேச்சாக கிடந்தன.

மற்ற மாநிலத்தில் தான் படம் வெளியாகி விட்டதே, திருட்டு வி.சி.டி.யிலாவது படத்தை பார்க்கலாம் என்று சி.டி கடைக்கு ஒதுங்கினால், தமிழகத்தில் ஒரே சி.டி. கடை கூட திறந்த பாடில்லை. என்னே, ஒரு prevention is better than cure என்று தமிழகம் ஸ்தம்பித்தது.

முதல்வரின் சட்ட ஒழுங்கு அக்கறை கண்டு, உண்மையில் தமிழக மக்கள் அனைவரும் நெஞ்சம் நிமிர்த்தி, இதே போல் எல்லா துறையிலும் ‘அம்மா’ செயல்பட்டால் எப்படி இருக்கும், என ஒவ்வொரு தமிழனையும் பொறாமை கனவு காண செய்தார்.

இப்படி கமலின் பேட்டியினை தொடர்ந்து, அம்மாவின் பேட்டியும் அடுத்தடுத்து வரவே, தமிழகம் குழம்ப ஆரம்பித்தது. இவ்வளவு நாளும் கமல்ஹாசனை குருட்டுத்தனமாய் ஆதரித்த மக்களுக்கு ஜெ.வின் பேச்சு கொஞ்சம் யோசிக்க வைத்தது. நம்ம கமல் தான் தேவையில்லாமல் தீவிரவாதிங்களை மையமா வைச்சு வணிக படம் எடுத்து, இங்க இந்தியாவுல இருக்கறவங்களையெல்லாம் குழப்புறாரோன்னு குமுறல் விடுத்துனர். ஒருவேளை இரு பக்கமும் நியாயம் இருக்க கூட வாய்ப்பு உண்டு என நினைத்தோ என்னவோ, கமலின் ஆதரவு கோஷங்கள் கொஞ்சம் சத்தம் குறைந்தன.

இந்த படம் வெளியானால் ஒரே வெட்டு குத்து களேபரமாய் நடக்குமா என்றால் அப்படியும் கிடையாது. விஸ்வரூபம் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அவ்வளவே…. வில்லன் கதாபாத்திரங்களில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் அவ்வளவே!

இன்னொரு பக்கம், நிஜத்தில் நடக்காத ஒன்றை அவர் படமாக எடுத்து விட்டாரா என்றால், அப்படியும் இல்லை. தாலிபான்கள் இடையே வாழ்க்கை முறை எப்படி இருக்கிறதோ, அவர்கள் ஒருவரை கொலை செய்யும் போது எப்படி மதத்தை துணைக்கு அழைத்து புனித குர் ஆனை ஓதி கொடூர கொலையை, புனித போராக மாற்றுவார்களோ அதையே தான் படம் தாங்கி வந்துள்ளது.

அங்கே இங்கே என சுற்றி, கடைசியாக பிப்.3-ந் தேதி தான் பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்தது. முஸ்லீம் அமைப்புகளும், கமல் தரப்பினரும் சந்தித்து, படத்திலிருந்து சில காட்சிகளை நீக்குவதாக கமல் சம்மதம் தெரிவிக்க, படம் வெளியானது.

இன்னொரு புறம், DTH பக்கம் கமல் பெரும் சரிவை சந்தித்தார். தமிழில் 1000 ரூபாயாகவும், பிர மொழியில் 500 ரூபாயாகவும் பணம் வசூலித்து காண்பிக்க இருந்த விஸ்வரூபம், பின் 600, 300 என விலை குறைந்தது. 30 முதல் 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு போனது என அதிகார பூர்வமாய் அறிவித்தனர். DTH சந்தாதாரர்களை பொறுத்த வரை, அவர்களும் கட்டிய பணத்திற்கு பல தேதி மாற்றங்களை சந்திக்க நேர்ந்து, கொத்து கொத்தாக கட்டிய பணத்தை திரும்ப பெற்று கொண்டனர்.

இதற்கிடையில், வரியை ரத்து செய்யவே படை திரண்டு போராடும் திரை உலகினர், கமல் விஷயத்தில் மட்டும் நீண்ட மௌனம் சாதித்த வேளையில், அர்ஜீன் தான் முன் வந்து, “கமலுக்கே இந்த கதியென்றால் சினிமா செய்யவே பயமாக இருக்கிறது” என்று மீடியா முன் தோன்றி கமலுக்கான தன் ஆதரவு கரங்களை நீட்டினார். அவரை தொடர்ந்து ஆளாளுக்கு யோசித்து யோசித்தே கமலுக்கு ஆதரவு குரல் எழுப்பினர். அதில் ராதிகா ஒரு பக்கம்  கமலுக்கு ஆதரவு தெரிவிக்க, சரத்குமார் அதற்கு நேர் எதிராக ”ஒரு படம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு விஸ்வரூபம் ஒரு உதாரணம்” என்று எதிர்ப்பு தெரிவித்து வேடிக்கை காட்டினார்.

இப்போது இறுதியாக பிப்.8ந் தேதி, விஸ்வரூபம் பல சுமூகங்களுக்கும் சமரசங்களுக்க்கும் இடையில் வந்தே விட்டது. இஸ்லாம் மதத்தை அப்படி எங்கு தான் கொச்சை படுத்த பட்டிருக்கிறது என்று தேடி பார்த்தாலும் காணோம். வில்லன் கதாபாத்திரமாக எத்தனையோ இந்துக்கள் கதாபாத்திரங்களும், சேட்டு கதாபாத்திரங்களும், கிறிஸ்டியன் கதாபாத்திரங்களும் இதற்கு முன் காண்பிக்க பட்டிருக்க, இஸ்லாத்தை தழுவியுள்ள ஒரு கதாபாத்திரத்தை காட்டுவதை மட்டும் எப்படி வன்மம் ஆகி போனது என்று தெரியவில்லை. குற்றமுள்ளவன் நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று இஸ்லாமியர்களை பற்றி மற்றவர்கள் எளிதில் யூகித்து கொள்ளும் வகையில், முஸ்லீம்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியதாய் உள்ளது.

’அயன்’ என்று ஒரு படம் வந்தது, அதில் வரும் ஒரு சேட்டு இளைஞன், கள்ள கடத்தல் செய்பவனாகவும், கொலை செய்பவனாகவும் காட்ட படுவான். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள மொத்த சேட்டு அமைப்பினரும், ஒன்று திரண்டு ஆர்பாட்டம் நடத்தினால், நாம் மேற்கொண்டு சேட்டுக்களிடம் பழகுவதை பற்றி யோசிப்போமா, மாட்டோமா?

மொத்த முஸ்லீம் மக்களுக்கும் நல்லது செய்வதாய் நினைத்து கொண்டு, முஸ்லீம் பிரதிநிதிகள் செய்த கோமாளித்தனங்கள், முஸ்லீம் மக்களுக்கே எதிராய் போய் முடிய இருப்பது தான் துயரம்.

 இனி ஒரு படம் வெளிவர தணிக்கை துறையினை மட்டும் கடந்து வராமல், மதத் தலைவர், லெட்டர் பேட் குழுக்கள், ஜாதி சங்கங்கள் என எல்லோரையும் கடந்து, அவர்கள் சம்மதம் வாங்கி, அவர்கள் கேட்கும் பணத்தை பைசல் செய்து, அவர்களை மீடியாக்களுக்கு பிரபலமாக்கி விட்டு, மாநில அரசின் ஒப்புதல் வாங்கி, இதற்கிடையில் நீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடுத்து விட்டால், நீதிபதி ஐயாவை படத்தை போட்டு காட்டி, தீர்ப்பு வாங்கி, மேல் முறையீடுகளை தகர்த்து எறிந்து வெளி வர வேண்டும். கமல் பெரும் முதலாளி என்பதால் சமாளித்து கொண்டார், மற்றவர்கள் கதி?

இந்தியாவில் வாழும் சில முஸ்லீமகளுக்கு, பிறந்தது முதல் இந்தியாவிலே இருந்தாலும், இந்தியாவை அவர்களது தாய்நாட்டாக பாவிக்க மாட்டார்கள். காரணம் பாகிஸ்தானும், ஆப்காணிஸ்தானும், அரபி நாடுகளும் தான் எப்பொழுதும் விருப்பமான நாடாக இருக்கிறது. பிறந்தது, படித்தது, வாழ்ந்தது, இறந்தது என அத்தனையும் தலைமுறை தலைமுறையாக இந்தியாவிலே கழித்தாலும், இந்தியா எப்படி அவர்களுக்கு இரண்டாம் பட்சமான நாடாகி போனது என்பது கேள்விக்குறி. அங்கே உருது பேசுகிறார்கள், என்ற காரணமே மற்ற நாடுகளை அவன் தாய்நாடாக பாவிக்க போதுமானதாக இருக்கிறது.

முஸ்லீம் மக்களே, முஸ்லீம் லீக் அமைப்புகளை ஆதரிக்க தயாராய் இல்லை. மூஸ்லீம் மக்களை கேட்டால், முஸ்லீம் சங்கங்கள் இஸ்லாத்தை போதிப்பதற்காக தான் உருவாக்கப் பட்டது, அப்போதெல்லாம் அவர்களின் பால் எங்களுக்கு பிடிப்பு இருந்தது, ஆனால் எப்போது அவர்கள் அரசியல் ஆதாயத்திற்க்காக வழி மாறி சென்றார்களோ, அப்போதே அவர்களின் மேல் பிடிப்பு தளர்ந்து விட்டது என்கின்றனர்.

எந்த ஒரு சிறுபான்மை மதத்தில் இருக்கும் ஒருவனும் 20 ஆட்களை திரட்டி, நல்ல ஒரு பெயரை சூட்டி, அமைப்பு ஆரம்பித்து கொள்ளலாம், அதனை உரிய அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம், 10x10 அலுவலகத்தின் முன் போர்டு மாட்டி கொள்ளலாம், பிரச்சனைகளை தேடி சென்று கட்ட பஞ்சாயத்து நடத்தலாம், இல்லாத ஒரு பிரச்சனையை பூதாகரமாக சித்தரித்து ஆர்பாட்டம் நடத்தலாம், அடுத்தவரை கலங்கடிக்கலாம், பிரச்சனை பண்ணாமல் இருக்க பணம் கேட்கலாம், கிடைக்கும் பணத்தில் லாபம் பார்க்கலாம், கேட்டால் மதத்தை காப்பாற்றுகிறேன் என்று பீத்தி கொள்ளலாம், அங்காங்கே பெட்ரோல் குண்டுகளை வீசலாம், வன்முறை செய்யலாம், போலீஸ் கைது செய்தால் சிறுபான்மை பெயரை சொல்லி மதக்கலவரத்தை உண்டு செய்யலாம். இது தான் நாட்டின் நிலைமை.

இங்கு இருக்கும் முஸ்லீம் அமைப்புகள் எல்லாம் இதற்கு முன் சொல்லி கொள்ளும் வகையில் என்ன தான் செய்து உள்ளனர் என்று திரும்பி பார்த்தால் ஒஸாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் இறந்து போனதற்கு, சென்னை இராயப்பேட்டையில் உள்ள மசூதியில் ஈமகாரியம் செய்தனர். தீவிரவாதி இறந்ததற்கு ஏன் ஈமகாரியம் செகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, ஆயிரம் தான் இருந்தாலும் அவர் ஒரு முஸ்லீம் என பதில் கொடுக்கின்றனர்.

ஒருவன் தீவிரவாதியாக இருந்தாலும் அவன் முஸ்லீமாக இருக்கும் பட்சத்தில் அவனை ஆதரிக்க ஒரு சாரர் முஸ்லீமகள் தயாராய் இருக்கின்றனர். அவர்களை பிற சாரர் முஸ்லீம்கள் கேள்வியும் எழுப்புவதில்லை, தவிர்க்கவும் தயாராய் இல்லை.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள அப்பாவி முஸ்லீமகள் தீவிரவாதிகளின் இருப்பால் நசுக்கப்படுவதை போல, இந்திய முஸ்லீம்கள் இங்கு இருக்கும் முஸ்லீம் அமைப்புகளின் இருப்பால் புறக்கணிக்கப்பட ஆவனவற்றை முஸ்லீம் அமைப்புகள் செய்து வருகின்றன.

அதே சமயம் ஒரு திரைப்படம், இவ்வளவு பெரிய சர்ச்சையை உண்டு பண்ணுகிறது என்றால், திரப்படத்திற்கு எவ்வகையான முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்பதை காட்டுகிறது.

நியாயமாக இந்து மக்கள் தான் இந்த படத்தை தடை செய்ததற்காக போராடி இருக்க வேண்டும். கேரளாவில் செய்தது போல், படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் இல்லை. படம் பார்த்து வசியப்பட்டும் அளவிற்கு நாங்கள் மடையர்கள் இல்லை என்று, ஆனால் எந்த இந்து கட்சியினரும் அதை செய்யவில்லை. தமிழக மக்கள் சினிமா பைத்தியம் எனவும், சினிமாவில் வருவனவற்றையே மக்கள் நிஜவாழ்வில் அர்த்தப்படுத்தி கொள்வார்கள் என்று முஸ்லீம் மக்கள் உள்நோக்கோடு போராடுவது பற்றி யாருக்கும் அபத்தமாகவோ, சொரணை அற்றதாகவோ படவேயில்லை. இன்னும் எம்.ஜி.ஆர் காலத்திலே மக்கள் இருப்பதாகவும், கதாநாயகனை நல்லவனாகவும், வில்லனை கெட்டவனாகவும் மக்கள் அர்த்தப்படுத்தி கொள்வார்கள் என்று அஞ்சி படத்தை தடை செய்வது, தடை செய்பவர்களின் முதிர்ச்சி அறிவை பற்றி சந்தேகங் கொள்ள செய்கிறது.

மதம் சார்பான விமர்சனம் என்றால் இஸ்லாமிய சமூகம் தான் அதிகம் அடிவாங்குவது தான் முஸ்லீம் மக்களுக்கு அயர்ச்சி தரும் விஷயமாக இருப்பதும் ஒரு புறம் துயரம் தான். ஓரளவிற்காவது modernize ஆகி வரும் இந்து மதத்திலும், கிறுத்துவ மதத்திலும் ஆயிரம் அபத்தங்கள் உள்ளடங்கி கிடக்க,  இஸ்லாமிய மதத் தலைவர்களின் முழு ஆதிக்கத்தில் இருக்கும் modernize ஆக வாய்ப்பு அவ்வளவாக இல்லாத இஸ்லாம் மதத்தை மட்டும் விமர்சித்து விமர்சித்து தோரணம் கட்டுவது இஸ்லாமியர்களை மேலும் அந்நியப் படுத்தும் என்பதாலே, பல இஸ்லாம் உள் அமைப்புகளை இச்சமயத்தில் தவிர்க்கிறேன். ஆனால் மெல்ல மெல்லவாவது ‘தலாக் தலாக் தலாக்’ முறை, மகளிர் பர்தா அணிவது, போன்ற இன்னபிற விஷயங்களை கடந்து வராமல், அவர்களுக்குள் இருக்கும் அந்நியத்தன்மைக்கு விடுதலை கிடைப்பது என்பது கனவு தான்.

அதிக மனைவிகள் வைத்து கொள்ளவும், அதிக பிள்ளைகள் பெற்று கொள்ளவும், முஸ்லீம்களின் ஜனத்தொகையை பெருக்குவதை நோக்கமாக போதிக்கவும், தலாக் தலாக் தலாக்கை வழிநடத்தவும் நேரடி மதத் தலைமையே ஈடுபாடு காட்டுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இது அப்படி இல்லை, அது ஒரு வதந்தி என எந்த பக்கத்தில் இருந்தும் மறுப்பு வரவும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் பிற மதத்தினர் இஸ்லாமியர்களை பார்த்து குழம்ப தான் செய்வார்கள் என்று முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே, மாலை 6 மணிக்கு மேல், யாரும் முஸ்லீம் ஆட்டோக்களில் ஏற மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்பி பயன் இல்லை.

தீவரவாதத்தை எதிர்க்கிறேன் என்ற பேர்வழியில் இங்குள்ள அநேகம் பேர், முஸ்லீம் மக்கள் எதில் நிறுத்துவது என்று தெரியாமல் குழம்பி மிரட்சியில் இருக்கின்றனர். இப்போது முஸ்லீம் அமைப்புகளும் கட்ட பஞ்சாயத்துகளில் இறங்கி பிறரை அச்சுறுத்துவது, எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. முஸ்லீம் மக்களின் நிஜ அக்கறையை கருத்தில் கொள்ளாமல், வெறும் வியாபாரத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ஆர்பாட்டம் செய்து வரும் அமைப்புகள், அவர்களது மக்களுக்கு செய்வது துரோகம் என சொல்லாமல், வேறு எந்த விதத்திலும் வகைப்படுத்த முடிவதில்லை.

படத்தை தடை செய்யும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் எந்த இடத்திலும் உணர்வுப்பூர்வமாகவோ, மனித உரிமைக்கோரலாகவோ பதிவு செய்யப்படவில்லை. ’எங்களை தொட்டால் என்ன ஆகும் தெரியுமா’ என்று காட்ட படுவதாகவே இருந்தது.

இந்த நேரத்தில் மதம் என்பது ஒருங்கினைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று நினைவு கொள்கையில் அயர்ச்சியே மிஞ்சுகிறது.