Friday 16 January 2015

புத்தகத் திருவிழா 2015









வருடம் முழுவதும் ஆங்காங்கே புத்தகத் திருவிழாக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு மட்டும் ஓவர் ஹைக் கொடுத்து, இந்த புத்தகத் திருவிழாவிற்கு போகாவிட்டால் தெய்வக்குத்தம் ஆகிவிடும் போல் ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றனர்.

உண்மையில், புத்தகத் திருவிழாக்களுக்கு இப்படி கனஜோராக பிச்சி அடிச்சி கொண்டு கூட்டம் வருவதற்கு காரணம், இங்கு தமிழ்நாட்டில் புத்தகத்திற்கென்று சரியான மார்க்கெட்டிங்கும், Availability-ம் இல்லை. வேண்டிய புத்தகங்கள் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை, அது ஒன்றே புத்தகத் திருவிழாவிற்கு இவ்வளவு கூட்டம் வருவதற்கான காரணம். தர்மபுரியில் இருந்து 7 மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து, நான் வாங்கி வந்த புத்தகங்கள் என்னென்ன என்று பட்டியலிடவே வெட்கமடைகிறேன்.

ஏனென்றால் நான் வாங்கிய வந்த புத்தகங்கள் எல்லாமே ஸ்டார் வேல்யூ புத்தகங்கள், அதை வாங்கவே 200 கிமீ பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவிற்கு சபரிதாஸும் என்னுடன் பயணமானான்.

எக்ஸைல்,
திரைக்கதை எழுதலாம் வாங்க,,
நிலவில் மனிதன்,
இறந்த பின்னும் இருக்கிறோமா,
தாந்தேயின் சிறுத்தை.

இதுவே நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்… ஒரு புத்தகத் திருவிழாவிற்கு சென்று பிரபலமான புத்தகங்களை வாங்குவதில் என்ன சிறப்பு இருந்து விடப்போகிறது?

புத்தகத் திருவிழா போனாலாவது தேடிய புத்தகம் கிடைக்கக்கூடும் என்பது மட்டுமே புத்தகத் திருவிழாவின் ப்ளஸ் பாய்ண்ட். கோடிக்கணக்கில் புத்தகம் இருப்பதற்காகவெல்லாம் யாரும் அங்கு போவதாற்போல் தெரியவில்லை. உண்மையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அளவிற்கானும் புத்தகக் கடைக்கள் இருந்தது என்றால் புத்தகத்திருவிழாவிற்கு இவ்வளவு கூட்டம் வருமா என்பது சந்தேகமே…?

அதனால், புத்தகத்திருவிழாவிற்கு கூட்டம் வருவதை பார்த்து மக்களுக்கு நிறைய படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்று கணக்கு போடுவது தவறான கணிப்பாக படுகிறது. வாங்கும் பெரும்பாலானோரும் சமையல் குறிப்பு, வீட்டு அலங்காரம் புத்தகங்களே வாங்குகின்றனர் என்று நிறைய பேர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதை வாங்கவே அவர்களுக்கான தளம், புத்தகத் திருவிழாவாக மட்டும் இருக்கிறது. அதுவே உண்மை.

போன புத்தகத் திருவிழாவிற்கு இந்த வருடம் பரவாயில்லை என்றாலும், கேண்டினின் தரமில்லா மும்மடங்கு விலையேற்றப்பட்ட உணவு, தண்ணீருக்காக இந்த மூலையில் இருந்து அந்த மூலைக்கு நடக்கும் வேதனை, கால் வலி எல்லாம் கணக்கில் வைத்து பார்க்கும் போது BAPASI இப்போதைக்கு திருந்துவதாக தெரியவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

நீதிபதி சந்துரு, தூர்தர்ஷன் சுமந்த் சி ராமன், மனுஷ்யப்புத்திரன், இயக்குனர் ராம் எல்லோரையும் ஆங்காங்கே தென்பட்டார்கள். மக்கள் யாரும் அடித்து கொண்டு ஓடி ஆட்டோகிராப் போட்டோகிராப் என இம்சை செய்யாமல் இருந்ததே ஆச்சர்யமாக இருந்தது.

குறிப்பாக காலச்சுவடு பதிப்பகத்தில் நீதிபதி சந்துரு வரும் போதும் சரி, அவருக்கான இருக்கையில் அவர் போய் அமர்ந்த போதும் சரி எந்த ஆராவாரமும் இல்லை. எனக்கும் சபரிக்கும் ஆச்சர்யம்னா ஆச்சர்யம் அப்படி ஓர் ஆச்சர்யம். பிறகு, காலச்சுவட்டின் ஸ்டால் ஊழியர் ஒருவரே, நீதிபதி சந்துரு வந்திருப்பதை மைக்கில் அறிவித்து, அவரிடம் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்றும், ஆட்டோகிராப் வாங்கி கொள்பவர்கள் வாங்கி கொள்ளலாம் என்றும், அவர் எழுதிய கணம் கோர்ட்டார் அவர்களே புத்தகம் எங்கள் ஸ்டால்களில் விற்பனைக்குள்ளது என்றும் அறிவித்தார். அப்போதும் கூட்டம் எந்த ஆராவாரமும் இல்லமலே இருந்தது. அப்பறம் தான் தெரிந்தது, அங்கிருந்தவர்களுக்கு நீதிபதி சந்துரு என்றால் யாரென்றே தெரியவில்லை! வெட்கக்கேடு!

நாங்களாவது போய் பேசியிருக்கலாம் தான்… ஆனால் என்ன பேசுவது? ஈஈன்னு இளித்து கொண்டு பேசுவதற்கு பதிலாக பேசாமலே இருந்து கண்ணியம் காத்து கொள்வது எவ்வள்வோ பரவாயில்லை என்று இருந்து விட்டோம். யாருக்கு தெரியும், எங்களை போலவே எல்லோரும் நினைத்திருக்கலாம்? அதற்காக ஒருவர் கூட அவர் மேல் விழுந்து பாயாமல் இருப்பது பிரபலங்களுக்கு செய்யும் அநீதியாகவே படுகிறது. அடுத்த முறையேனும், ஒரு பிரபலத்தை சந்தித்தால் என்ன பேச வேண்டும் என்று தயார்படுத்தி கொண்டு செல்லவேண்டும்…

ராஜராஜேந்திரனை சந்தித்தேன். அவருடன் பேசுவதே மிகவும் ஃப்ரெண்ட்லியாகவும், ஜீனியஸ்டிக்காகவும் இருக்கும். அவர் என்னென்ன புத்தகங்கள் வாங்கினார் என்று புத்தக பையை வாங்கி (பிடுங்கி) பார்த்தேன். ஜெயமோகன் புத்தகங்கள் மெஜாரிட்டி கண்டன. தஞ்சை பிரகாஷ் நாவலான கள்ளம் இருந்தது. அதை பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பின், சென்றைய ஆண்டின் சிறந்த திரை விமர்சகர்க்கான பரிசு 500 ரூபாயை அளித்தார். கொஞ்சம் தர்மசங்கடமாக தான் இருந்தது. என்னை விட நிறைய பேர் விமர்சனங்களை ஆழமாகவும், ஹ்யூமராகவும் எழுத இணையம் முழுக்க ஆட்கள் இருக்கின்றார்கள்.

அதன்பின், செல்வக்குமார் கணேசனையும், வெற்றிச்செல்வனையும் சந்தித்தோம். மாதொருபாகன் பற்றி பேசி கொண்டிருந்தோம். செல்வக்குமார் கணேசன் தான் உரையாடலின் போது ஒரு விஷயத்தை சொன்னார். ஒவ்வொரு ஆயுத பூஜையின் போதும் காரைக்கால் பேருந்து நிலையத்திலோ எங்கேயோ “ஆயுதபூஜை கொண்டாடும் மடையர்களே, ஆயுதபூஜையின் போது வேசி எதையடா பூஜை போடுவாள்?” என்று பேனர் அடிக்கிறார்கள், அதையெல்லாம் விட்டு விடுகிறார்கள், மாதொருபாகனை மட்டும் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் என்று பெருமாள் முருகனுக்காக வருத்தப்பட்டார்.

சாரு வந்திருந்தார். சாருவிடம் ஹாய் சொல்வதற்காக நெருங்கினோம். யாரைப் பற்றியோ யாரிடமோ தீவிரமாக திட்டிக் கொண்டிருந்தார். திட்டும் போது ’அவன்லாம் தெருநாய், useless’ என்று திட்டி விட்டு “நான்லாம் தெரு நாயை கூட லவ் பண்றவன், என்ன பண்றது அவனுங்களை அப்படி தான் திட்ட வேண்டியதா இருக்கு” என்று திரும்ப ஜாலியானார். எனக்கு அதையெல்லாம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. சாருவை 3 வருடமாகவே பார்த்து கொண்டிருக்கிறேன். இன்னும் போரடிக்காமலே இருக்கிறார்.

பார்ப்போம், எப்போது எனக்கு போரடிக்க போகிறார் என்று?

போய் எக்ஸைல் புத்தகத்தில் கையெழுத்து கேட்டேன், புன்னகையுடன் கையெழுத்திட்டு கொடுத்தார். சபரியும் சாருவிடம் கையெழுத்து வாங்குவதற்கென்றே ஒரு புத்தகம் வாங்கி கையெழுத்து கொண்டான். இருவரும், சாருவுக்கு பாய் சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.

அவ்வளவு தான் எங்களுடைய புத்தகத்திருவிழா…

இதை விடவா ஒரு Happy ending அமைய முடியும்???








Wednesday 14 January 2015

I – Movie Review





’ஐ’ மிகவும் சிம்பிளான ஸ்டோரி தான் என்றாலும், அதை காட்சிப்படுத்திய விதமும், வழங்கிய விதமும் திரும்பி பார்க்க வைக்கிறது. சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லி விட்டதில் ‘ஐ’ குழு வெற்றியடைகிறது என்றே நினைக்கிறேன். இந்த படத்தை நிச்சயமாக ஓர் சினிமா என்றும் கமர்ஷியல் சினிமா என்றும் ஒத்துக் கொள்ளலாம்.

First look, Trailer தேர்வு எல்லாம் இவ்வளவு சிம்பிளான கதையை யூகிக்க முடியாத வண்ணமே இருந்தது என்றே சொல்ல வேண்டும். எதையோ எதிர்பார்த்து போய் உட்கார்ந்தால் வேறு என்னத்தையோ காட்டுகிறார்கள், ஆனால் அவ்வளவு ஒன்றும் கடுப்பாக இல்லை. ஒரு முறை பார்க்கலாம்.

விக்ரம் ஓர் பாடி பில்டர். மிஸ்டர்.இந்தியா கனவோட வாழ்ந்து கொண்டிருக்க, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மாடலிங் துறையில் அடியெடுத்து வைக்க நேரிடுகிறது. ஒரே பாய்ச்சலில் ஓஹோவென வளர, பல எதிரிகள் முளைக்கின்றனர். எதிரிகள் அனைவரும் கூட்டு சேர்ந்து சதி செய்து நாயகனை உருக்குலைத்து விடுகின்றனர். நாயகனும் எதிரிகளை பதிலுக்கு உருக்குலைத்து பழித்தீர்த்துக் கொள்கிறார். அவ்வளவு தான் கதை. கதையை சொல்லி விட்டேன் என்று ஃபீல் செய்ய வேண்டாம், இது ஐ படத்தின் கதை அல்ல, தமிழ் சினிமா என்ற பெயரில் வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் எல்லா படத்திற்கும் இது தான் கதை. ஆனால் கதையை Present செய்த விதம் தான் கவனித்தலுக்குரியது, அதுவுமில்லாமல் படம் பார்க்க பார்க்க அடுத்த சீன் இது தான் என திரையரங்கில் வரிசைக்கு ஒருவர், கமெண்ட் செய்து கொண்டு இருப்பார்கள். அது நீங்களாகவும் கூட இருக்கலாம். அதனால் கதை தெரிஞ்சு போச்சேன்னு ஷாக் ஆகவேண்டாம்.

ஒரு க்ளீஷே இருக்கிறது...
அதை எப்போது நிறுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை, அது மக்களுக்கு போரடிக்கிறது என்ற விஷயத்தை யாராவது திரையுலகத்திற்கு சொல்லியாக வேண்டும். அது வேறு ஒன்றும் இல்லை, காதலில் விழும் நாயகனுக்கு எங்கு திரும்பினாலும் நாயகியாகவே தெரியும். நாயகனுக்கு மட்டும் பல்லு போன பாட்டி பாரின் ஃபிகர் மாதிரி தெரியும், டிச்சி தண்ணியில் ஹீரோயினின் கன்னக்குழி தெரியும், ஓர் முழு பாட்டிற்கு டூயட் ஆடினதன் பின்பு தான் டூயட் ஆடியது காதலியுடன் அல்ல ஓர் லேடி கான்ஸ்டபிளோடு என்று தெரியும், இது பரவாயில்லை… லவ் ஃபீலிங் பாடுகிறேன் என்று, கழண்டு விட்ட மாதிரி தனியாக ஆடிக்கொண்டு போன பல ஹீரோக்களை சென்னை மவுண்ட் ரோடு கண்டிருக்கிறது.

இன்னொரு க்ளீஷே இருக்கிறது…

  •  ஹீரோ லவ் செய்வார். ஹீரோயின் மறுப்பார்  
  •  ஹீரோ ஃபீல் செய்வார். ஹீரோயின் ஃபீல் செய்வார்.
  •  ஹீரோ டிஸ்டன்ஸ் கீப் அப் செய்வார். ஹீரோயின் லவ் செய்ய ஆரம்பித்து விடுவார்.
என்னங்கடா டேய்… நானும் இது போல பல ஃபிகர்களை டிஸ்டன்ஸ் கீப் அப் செய்திருக்கிறேன். மேலயும் கீழயும் பார்த்துட்டு, அவர்களும் டபுள் டிஸ்டன்ஸ் தான் கீப் செய்கிறார்கள். மாறாக, ’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா’ டெக்னிக் செய்கிறவர்களுக்கெல்லாம் அசால்ட்டில் ஃபிகர் மடிகிறது.

ஏன் வரலாற்றை தொடர்ந்து இருட்டடிப்பு செய்கின்றனர்? நமது வரலாற்று ஆசிரியர்களும் இது குறித்து வாய் திறவாமல் இருப்பது பற்றி ஆச்சர்யம் அடைகிறேன் !

ஐ போன்று 100 படம் வந்தால் மனிதனுக்குள் இருக்கிற கருணை, அறம் குறித்த பார்வையெல்லாம் ஒட்டுமொத்தமாக காலியாகி விடும். ஒரு கமர்ஷியல் சினிமாவில் கருணை, அறம், பேரிச்சம் பழம், கோதுமை உப்புமா எல்லாம் எதிர்ப்பார்ப்பது அநியாயம் தான் என்றாலும்… இந்த படம் ரொம்பவும் சித்ரவதை செய்வதை ஊக்குவிப்பதாக படுகிறது.

அடிதடி எல்லாம் மிகவும் போரடித்து போய், புதிது புதிதாக அழிவுமூலங்களை தேடி தேடி திரைக்கதையில் புகுத்துகின்றனர். அவர்களுடைய கடின உழைப்பை நான் மதிக்கிறேன், ஆனால் இந்த உழைப்பை வேறு திசையில் எதிர்பார்க்கிறேன். அவ்வளவே! சமரசம் சமாதானத்திற்கென்றெல்லாம் ஓர் சக்தி இருக்கிறது. அதை பற்றியும் பல படங்கள் வரத்தான் செய்கிறது. முன்னா பாய் MBBSஐ மறு உருவாக்கம் செய்தவர்கள், ஏன் லஜே ரஹோ முன்னா பாயை மறு உருவாக்கம் செய்யவில்லை? வருமானம் வராது அவ்வளவு தானே... கப்பல், மீகாமன், வெள்ளக்கார துரை, வலியவன் போன்ற படங்களெல்லாம் எடுக்கும்போதே சுமாராக தான் ஓடும் என்றே தெரிந்தே தான் எடுக்கிறார்கள். போட்ட காசு வந்தா போதும் என்று ஓப்பனாகவே சொல்கின்றனர். ஏன் இதையும் அதே ஆட்டிடுயூடில் எடுக்க கூடாது?

’அன்பே சிவம்’ படத்தின் இறுதியில் ஜஸ்ட் லைக் தட் எல்லோரையும் மன்னித்து விட்டு பொடிநடையாக ஓர் நாய்க்குட்டியோடு நடந்து போகும் கமல் என் நினைவில் வருகிறார். Saw, Wrong turn, Resident evil, Hostel, Final destination போன்ற படங்களால் ஈர்க்கப்பட்டு இது போன்ற படங்களை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறார்கள் என்று யூகிக்கிறேன். ஏன் திரும்ப திரும்ப எல்லோரும் ஹாலிவுட்டையே குறிவைத்து நகல்/ இன்ஸ்பிரேஷன் / போட்டி என சுற்றி வருகிறார்கள் என தெரியவில்லை. ஹாலிவுட்டை விட்டால் கொரியன், அதையும் விட்டால் ஈரானிய படம். ஏன் இப்படி?

இந்தியா சினிமாவிற்கென்றும், குறிப்பாக தமிழ் சினிமாவிற்குன்றும் ஒரு ட்ரெண்ட் & டிமாண்ட் இருக்கிறது. அதை தக்கவைத்து கொண்டாலே போதுமானது.

நமக்கு January February நன்றாக தெரியும் என்றாலும், 1 2 3 சொல்லி கொண்டிருந்த குழந்தை திடீரென்று January February சொல்ல ஆரம்பித்தால், குழந்தை சொல்லி முடிக்கும் வரை நாம் பொறுமையாக காத்திருப்போம் இல்லையா? அது போல் தான் ஷங்கர் படங்களும்… 1 2 3 சொல்லி கொண்டிருக்கும் தமிழ் படங்களில், ஷங்கர் படம் January February சொல்கிறது. அதில் ‘ஐ’ படமும் ஒன்று…



Monday 12 January 2015

A Death which is long waited

அவர் பெயர் குபேந்திரன். பார்க்க 40 வயது ஆள் போல் இருப்பார். அவருக்கு வயது 29. கருப்பாக இருப்பார், உடல் பருமனாக இருப்பார், சில நேரம் அவரது சிவந்த கண்கள் முந்தைய நாளின் நிலவரத்தை விளம்பரப்படுத்தும்.

குபேந்திரன் எங்கள் காலேஜில் தான் பணி புரிகிறார், Lab technician. சம்பளம் 8000 இருக்கலாம். எங்களிடம் சொன்னதில்லை. ஆனால் அவர் சம்பளத்தை மட்டுமே நம்பி வேலை செய்யவில்லை என்றும் அவ்வப்போது குறும்பாக கண்ணடிப்பார். polytechnic படிப்பை முடித்து விட்டு, கொஞ்ச நாள் கம்பெனியில் வேலை பார்த்தார். என்ன காரணத்திற்காகவோ lab technician ஆக இங்கு வந்து வேலைக்கு சேர்ந்துக் கொண்டார். வேலைக்கு வந்து சேர்ந்து இதோடு மூன்று ஆண்டு முடிவடைந்தது என்றே நினைக்கிறேன். இது நாலாம் ஆண்டு. Mechanical lab மொத்தத்துக்கும் அவர் ஒருவரே கண்காணிப்பாளர் / லேப் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் / இன்னபிற எடுபிடியாளர். வேலைப்பளு அதிகம். பலசமயம் அசால்டாக வேலையை தட்டி கழித்து விடுவார். சிலசமயம், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் பேய் போல் வேலை செய்து எல்லோரையும் அசரடித்து விடுவார்.

இவரை பற்றி அவரிடம் போட்டு கொடுப்பது, அவரை பற்றி இவரிடம் ஏற்றி விடுவது போன்ற பற்ற வைக்கும் வேலைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவார். ஆர்வம் காட்டுவாரே தவிர, அப்படி ஒன்று பற்ற வைக்கும் விஷயத்தில் ஸ்பெஷலிஸ்ட் கிடையாது. பொய் பேசி, பின் அறியப்பட்டு அசடு வழிந்த தருணங்கள் சிலது இருக்கின்றன.

குபேந்திரன் குடிப்பார். விளையாட்டாக குடிக்க ஆரம்பித்ததாய் சொல்வார். எவ்ளோ தான் குடித்தாலும், தன்னோடைய லிமிட்டை தாண்டி போக மாட்டேன் என பெருமை கொள்வார். போதைக்கு அடிமை கிடையாது என தற்புகழ்ச்சி கொள்வார். ஆனாலும், தினம் சாயங்காலம் டாஸ்மாக் போகாமல் அவரால் இருக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். எங்களுக்கும் தெரியும்.

வாழ வழி தெரியாமல், அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின் தான் பாலிடெக்னிக் பக்கம் ஒதுங்குவான். அந்த வகையில் மக்கு பயல்கள், படிக்கும் போது ரவுடித்தனம் செய்தவர்கள் கூட்டமெல்லாம் பாலிடெக்னிக்கில் கூடும். பாலிடெக்னிக் வாத்தியாரை டாஸ்மாக் வாசலில் பார்ப்பதும், தினத்தந்தி கள்ளக்காதல் செய்திகளில் பார்ப்பதும் சர்வசாதாரணம். இவர்களுக்கு பாலிடெக்னிக் காலேஜ் தேவை, இதையும் விட்டால் கூலி வேலைக்கெல்லாம் போக வாங்கிய பட்டம் அனுமதிக்காது. பாலிடெக்னிக் காலேஜுக்கும் ஆட்கள் தேவை, ஆனால் இவர்கள் தான் சிக்குகிறார்கள்.

சம்பள நாள், பிறந்த நாள், பண்டிகை நாள், திருமண நிகழ்ச்சி சில சமயம் சாவு நிகழ்ச்சிகளில் கூட ஆட்கள் ஒன்னு கூடினால் கடைக்கு போவதெல்லாம் டீஃபால்ட்டிலும் டீஃபால்ட்.
குபேந்திரனின் குடும்பத்திற்கு டவுனிலே சொந்தமாய் வீடு இருக்கிறது. ஓட்டு வீடு தான். ஒரு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு பின்புறத்தில், ஒரு சின்ன சந்தில் அவரது வீடு இருக்கிறது. உடன் பணிபுரிபவர் யாரையும் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றதில்லை. ஏனென்றால் வீட்டிற்குள் மரியாதை இல்லை.

வெறும் lab technician தான் என்றாலும், கல்லூரி மாணவர்களுக்கு குபேந்திரனை மிகவும் பிடிக்கும். Lab examination லும் சரி, Theory examination லும் சரி குபேந்திரனால் என்னென்னவெல்லாம் மாணவர்களுக்கு சாதகமாக செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வார். IV ல் பசங்களோடு பசங்களாக கலந்து ஜாலியாக ஆட்டம் போடுவார். கட்டிங்கும் ஏத்துவார். எவ்வளவு தான் ஜாலியாக இருந்தாலும் பையன்களை கண்ட்ரோலிலும் வைத்திருப்பார்.

அடிக்கடி கடன் கேட்பார். சில சமயம் சர்ப்ரைஸாக கடனை திருப்பி கொடுப்பார். பல சமயம் இழுத்தடிப்பு தான். கடனை திருப்பி கேட்பவர்களுக்கே போர் அடித்து விடும். அதனால், பெரும்பாலும் யாருமே அவருக்கு பணம் தருவதில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் உட்பட... அதனால் பணம் தேவைப்பட்டால் வட்டிக்கு தான் வாங்குவார்.

வாழ்க்கையில் ஜாமீன் கையெழுத்தே போட கூடாது என்று நாங்கள் தெரிந்து கொண்டது, குபேந்திரன் மூலம் தான். ஒரு க்வார்ட்டருக்கு ஆசைப்பட்டு ஜாமீன் கையெழுத்து போட்ட குற்றத்திற்கு, ஒவ்வொரு மாசமும் இவர் தான் அந்த பணத்திற்கு வட்டி கட்டி கொண்டிருக்கிறார்.

எப்போதுமே சட்டையை டக் இன் செய்திருப்பார். அவர் டக் இன் எடுத்து விட்டு நாங்கள் யாருமே பார்த்ததில்லை. அவர் தொப்பையை மறைக்க தான் சட்டையை டக் இன் செய்கிறார் என எப்போதும் கிண்டலடிப்போம். அவரும் சளைக்காமல் எங்களுக்கு கவுண்ட்டர் கொடுப்பார்.

மாசக் கடைசியில் தண்ணியடிக்க காசில்லை என்றால் லேப்பில் இருக்கும் work piece களை யாருக்கும் தெரியாமல், வெளியே எடுத்து போய் எடைக்கு போட்டு பணம் தேத்துவார். மாணவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் குபேந்திரனை தான் தேடுவார்கள். தண்ணி வாங்கி கொடுத்தும் தாஜா செய்வான், சில சமயம் பணமாவும் கை மாறும்.

ஏதோ கன்சல்டன்சி லிங்க் பிடித்து வைத்திருக்கிறார். அதை வைத்து, படித்து முடித்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவார். அதற்கு கமிஷனும் வாங்கி கொள்வார். இதில் பிரச்சினை ஏதும் வராது. பிரச்சினை ஏதும் ஏற்பட்டாலும் கொடுத்த பணம் திரும்ப வரவே வராது.

எல்லா இந்திய ஆண்களை போல, பணியிடத்தில் மலர்ந்த முகத்துடன் வேலை பார்ப்பார். கோபத்தை எவ்வளவு கஷ்டப்பட்டேனும் அடக்கி கொள்வார். வீட்டில் அப்படியே தலைகீழ். தொட்டதுக்கெல்லாம் கத்துவார்.

வட்டிக்கு வட்டி, அதுக்கும் வட்டி என எந்த பணத்தை எங்கே கட்டுவது என தெரியாமல் தவிப்பதெல்லாம் அனுதின வாடிக்கை. சீட்டு எடுப்பார். எடுக்கும் சீட்டு பெரும்பாலும் முதல் சீட்டாக தான் இருக்கும். எவ்வளவு தள்ளியும் எடுத்து கொள்வார். எப்போதும் பணம் அவருக்கு அவசரமாக மட்டுமே இருக்கும். எப்போதுமே அவர் உயிர் அச்சுறுத்தலில் தான் இருக்கும். அந்தளவு கடன் கொடுத்தவர்களை நடையாய் நடக்க விட்டிருக்கிறார்.

அவரது அப்பா ரிட்டையர்டு அரசு ஊழியர். ரிட்டையர் ஆனபோது கொடுத்த பணத்தையும், பென்ஷன் பணத்தையும் எதற்கும் செலவு செய்யாமல் என்ன காரணத்திற்கோ சேர்த்து சேர்த்து வைக்கிறார். 30 லட்சத்திற்கும் மேல் வைத்திருக்கிறார், எங்களுக்கென்று சல்லி பைசா கண்ணில் காட்ட மாட்டேங்கிறார் என்பது குபேந்திரன் மற்றும் அவரது தம்பியின் வாதம். காட்டினால் தான் கால் வயிறு கஞ்சி கூட ஊற்றாமல் நடுத்தெருவுக்கு அனுப்பி விடுவீர்களே என்பது நாங்கள் அடிக்கும் கவுண்ட்டர். பதிலுக்கு முறைப்பார். நாங்கள் சிரிப்போம். அவரும் சிரித்து விடுவார்.

ஒழுங்கான வேலை இல்லை என்பதால் சரியான வரன் அமையவில்லை. பெண் பார்க்க போகும் வைபவங்களில் முற்றிலும் நம்பிக்கையே இழந்தவரானார். பிஸினஸ் பண்ண வீட்டில் பணம் கேட்பார். குடிச்சே அழிச்சிருவியே என சொல்லி தர மறுத்து விடுவார்கள். அந்த சோகத்தில் குடிப்பார். நிறைய குடிப்பார்.

காலேஜுக்கு மெஷின்ஸ் வாங்கி கொடுத்து கமிஷன் பார்க்க முயற்சி செய்வார். ஆனால் , அந்த வேலைக்கு அதிக போட்டி இருப்பதால் , ஒவ்வொரு முறையும் தோற்பார். இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் காத்திருப்பார்.

ஒரு முறை manufacturing technology லேப் நடந்து கொண்டிருக்கும் போது, மாணவர்கள் gas welding செய்து கொண்டிருந்தனர். சம்பந்தப்பட்ட gas cylinderல் இருந்து, ஏதோ ஒரு வால்வ் திடிரென்று தானாகவே ஓப்பன் ஆகிவிட்டது. வீல் என்று அதிக சத்தத்தில் gas பீச்சியடிச்சு கொண்டு வெளியேறியது. வெடிக்கவே தேவையில்லை என்னும் அளவிற்கு அந்த சத்தமே மரண பயத்தை வரவழைக்க கூடியதாக இருந்தது.

சுத்தி இருந்தவர்கள் எல்லோரும் ஓட்டம் எடுக்கின்றனர். staffs, hod கூட பொறுப்பின்றி தங்களை காப்பாற்றி கொள்ள ஓட்டம் எடுத்ததை மாணவர்கள் கூட்டம் திகிலாக பார்த்தது. அப்போது ஒரு கை துணிவோடு, அந்த வால்வை மூட எத்தனித்து வெற்றி கண்டது. அது நம் குபேந்திரனின் கை. தப்பி ஓடிய ஸ்டாஃப்ஸ்களிடம், ஏன் சார் எங்களையெல்லாம் விட்டு ஓட பார்த்தீங்க என்று மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். காலேஜ் கொடுக்கிற சம்பளத்துக்கு உயிரை வேற விட சொல்றீங்களா டா என்று நக்கலாக பதலளித்தவர்கள் எல்லோருமே குபேந்திரனை விட அதிக சம்பளம் வாங்குபவர்கள்.

நேற்று நள்ளிரவு குபேந்திரன் அகால மரணமடைந்து விட்டார்.

12 மணியளவில் உயிர் பிரிந்து இருக்கலாம் என சொன்னார்கள். 4.30 மணிக்கு செய்தி வந்தது. தற்கொலை. குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டார். தன்னை காப்பாற்றும் படி தன் தம்பியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், மருத்துவமனை போகும் வழியிலே உயிர் பிரிந்து விட்டதாகவும் செய்தி சொன்னார்கள். அவரின் வயது எத்தனை என்று மட்டும் கேட்டேன், 30 கூட முழுமையடையவில்லை என்று மட்டும் சொன்னார்கள். வழக்கமாக இது போல் பயம் காட்டுவாராம், இந்த முறை முடிவெடுத்து விட்டார் என்றனர். 3 மணி நேரம் போராடி உயிர் இழந்திருக்கிறார் என்றனர்.

காலை 6.30 மணிக்கே லோக்கலில் இருப்பவர்கள், அவர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். சாவு வீடு மாதிரியே இல்லை என்றும், ஆளாளுக்கு அவரவர் வேலையை பார்த்து கொண்டிருப்பதாகவும், பாடி ஜி.எச்.சில் இருப்பதாக தகவல் மட்டும் சொன்னார்கள் என்பதை நண்பர்கள் போனில் தெரிவித்தார்கள். ஜி.எச். போனால் அங்கே குபேந்திரம் அநாதை பிணம் போல் கிடக்கிறார். பாடி எப்போ கிடைக்கும் என்று கேட்டதற்கு போஸ்ட் மார்டம் எல்லாம் முடித்து 11 மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஏன் பாடி தனியா கிடக்கு என்று கேட்டதற்கு, அவங்க வீட்டாளுங்க தான் விட்டுட்டு போய்ட்டாங்க என்று சொல்லி, என்ன பிரச்சினை என்று விசாரித்தார்கள். எங்களுக்கும் தெரியவில்லை என்று சொல்லி விட்டோம்.

10 மணி வரைக்கும் கூட யாரும் வரவில்லை. 11 மணிக்கும் மேல் போன் மேல் போன் போட்டதற்கு பின்பு, குபேந்திரனின் தம்பி வந்தார். FIR பதிவு செய்தார். அதன்பின் போஸ்ட் மார்டம் ஆனது. 2 மணிக்கு பாடி கையில் கிடைத்தது. அமரர் ஊர்தி வைத்து பாடியை வீட்டிற்கு எடுத்து வந்தனர்.

பாடி வரும்வரை , குபேந்திரன் வீடு அமைதி காத்தே கிடந்தது. பாடி வந்தது. 20 பேர் இருக்கலாம். சொந்தக்காரர்கள் என்று வந்து நின்றார்கள். அதில் 3 பேர் மட்டும், எதற்கோ அழுது கொண்டிருந்தார்கள். அந்த 20 பேர் தவிர மொத்த காலேஜும் அங்கே கூடியிருந்தது. கூட்டம் குபேந்திரன் முகம் பார்க்க முண்டியடித்தது.

அந்த சின்ன சந்தில் நிற்க இடமில்லாமல் நின்று கொண்டிருந்தோம். போன வழியில் திரும்ப வரமுடியாத காரணத்தால், ஒரு வழியாக வந்து கடைசியாக முகம் பார்த்து விட்டு தெருவை சுத்தி கொண்டு வெளியே போக சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

குபேந்திரனின் பெற்றோர் கண்ணில் பெயருக்கு கூட கண்ணீர் இல்லாதது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குபேந்திரன் மருந்து குடித்தது தெரிந்தும், 3 மணி நேரமும் கண்டும் காணாமல் இருந்து விட்டதாக கூட்டம் சலசலத்தது.

முகம் பார்த்து விட்டு வெளியே வந்து, நின்று பேசி கொண்டிருக்கையிலே, சுடுகாட்டுக்கு போகும் வண்டி வந்தது. வண்டி வந்து திரும்பி நின்ற ஐந்தாவது நிமிடத்தில், பாடியை வண்டி ஏற்றி கிளம்பி விட்டார்கள். கிளம்பியதும் ஏதோ ஊர்வலம் போல் அல்லாமல், லக்கேஜ் ஏற்றி கிளப்பி செல்வது போல் கிளம்பி விட்டார்கள். எதற்காக இவ்வளவு அவசரம், ஏன் இந்த பரபரப்பு என்று யாருக்கும் புரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு துக்க நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை. எங்கள் ஊரில் எவ்வளவு கொடூரமானவன் இறந்தாலும் , இறப்பிற்கு உரிய மரியாதையை அளித்தே அடக்கம் செய்வர். இங்கோ எப்ப டா அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்கு வரலாம் என பரபரக்கின்றனர். அடக்கம் செய்ய போனவர்கள், 15 நிமிடம் கூட ஆகவில்லை , வீடு திரும்பி விட்டனர்.

குபேந்திரன் அப்படி என்ன தவறு செய்து விட்டார் என புரியவில்லை. பெற்றோர்கள் கண்ணீர் சிந்த மறுக்கும் அளவிற்கு, இறுக்கமான இறப்பை நாங்கள் யாருமே கேள்வி கூட பட்டதில்லை.

குபேந்திரனின் ஏரியா நண்பர்கள் சிலரிடம் என்ன தான் ஆனது என்று எங்கள் ஸ்டாஃப்ஸ்கள் விசாரிக்க முற்பட்டிருக்கின்றனர். உன் ஃப்ரெண்டையே எழுப்பி கேட்க வேண்டியது தானே என்று போதையில் சிரிக்கின்றனர்.

சாராயம் வாங்கி தருவான் என்று சேர்ந்த, அதே சமயம், சாராயம் கிடைக்குமே என்று சேர்த்து கொள்ளப்பட்ட குபேந்திரனின் நண்பர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

எனக்கு நிறைய குபேந்திரன்களை தெரியும். அதில் ஒருவர் இறந்து விட்டார்.