Monday, 8 April 2013

ஹேப்பியான கதை



ஒரு மத்திம வயதுக்காரர் முன்னே போகும் டேங்க்கர் லாரியினை முந்தி செல்ல எத்தனித்து கொண்டிருக்க, எதிரே மிக அதிகமான வேகத்தில் போதையில் வண்டி ஓட்டி வந்தவனே அனீஷ். அனீஷின் பின்னாடி உட்கார்ந்திருந்த மருது, பார்த்து சொன்ன பின்பு தான், அனீஷ் வேகம் குறைக்கவே ஆரம்பித்தான். என்ன குறைத்தும் வேலைக்காகவில்லை. அனீஷும் எதிரே வந்தவரும் எதிர் எதிரே மோதி கொண்டனர். நல்ல வேளையாக இருவரும், லாரிக்கு வெளிப்புறமாக விழுந்தனர். இல்லையென்றால் ஒரு தலையாவது சூரத்தேங்காய் ஆகியிருக்கும்.

எதிர் வந்தவர் லாரி சக்கரத்தில் மாட்டாதது குறித்து, இருவரும் விழுந்து எழும் போது வருத்தம் கொண்டனர். அதிலும் அனீஷின் கவலை அதீதமாக இருந்தது. இருவரும் வேண்டுமென்று மோதிக்கொள்ளவில்லை, மோதியது நன்றாக மோதியிருக்கலாம் என்று மோதியதன் பின்பு ஏக்கம் கொண்டனர். இருவரில் யார் வாய் வார்த்தையை ஆரம்பிப்பது என்பது குழப்பம் கொண்டனர், அனீஷிடம் இருந்து வந்த சாராய வாடை, எதிர் வந்தவரை திமிராய் பேச எத்தனித்தது. திமிராக பேசினாலும் கூட பெரிதாக ஒன்றுமே சொல்லவேயில்லை. திமிராக தொடங்கி, இப்படி குடித்து விட்டு வண்டி ஓட்டுவது நியாயமா என்ற ரீதியில், திட்டும் படலத்தை திசை திருப்பி கொண்டார்.

அனீஷின் வண்டி நல்ல அடிவாங்கியதாலும், எதிர் வந்தவரின் முகம் சொங்கி போல் இருப்பதாலும், அவரின் வாயும் நீளமாக இருப்பதாலும் அனீஷிற்கு கோபம் வந்தாயிற்று, அதன் தொடர் செயலாக மருதுவுக்கும் கோபம் வந்தாயிற்று. எதிர் வந்தவர் ரொம்பவும் சாதாரணமாக TVS 50ல் வந்ததால் அனீஷிற்கும், மருதுவிற்கும் அவரின் அந்தஸ்த்தை அளக்க ரொம்ப நேரம் எடுக்கவில்லை. அனீஷ் அடிக்கும் முன், எதிராளி கையை முறுக்கி பிடித்து வைத்து அடிப்பது தான் வழக்கம், ஆனால் போதையின் தடுமாற்றமோ என்னவோ எதி வந்தவரின் கையை சிறை பிடிக்காமலே, அறைய ஆரம்பித்தான். மருது அடிவாங்குபவனின் எதிர்வினையை ஆராய்ந்து பார்த்து, ஒன்றும் பலசாலி இல்லை என நிரூபணம் ஆன பின்பு அவனும் அடிக்க ஆரம்பித்தான். அனீஷ் அவரை அறைவதற்காக கையை விசிறி விசிறி அடிப்பது மருதுவிற்கு சற்று இடைஞ்சலாக இருந்தது. அப்படி அடிக்காதே என்று சொல்லி பார்த்தான், அனீஷ் கேட்கின்ற நிலைமையில் இல்லை என தெரிந்தது. ஒருவாறாக சமாளித்து முதுகு புறம் போய் அடிக்க ஆரம்பித்தான்.

மருதுவும் போதை என்றாலும் கூட கீழே விழுந்து எழுந்ததில் போதை எல்லாம் காணாமல் போயிருந்தது. ஆனால் அனீஷிற்கு தலையை ஏதோ கவ்வி பிடித்தாற் போல் தான் போதை இருந்தது. டிவிஸ் வண்டிக்காரர் அடி வாங்குவதை தடுக்கும் பொருட்டு, கை வைத்து தடுப்பது அனீஷிற்கு இடைஞ்சலாக இருந்தது. மருதுவை கையை பிடித்து கொள்ள சொல்லி, வயிற்றிலே குத்தினான். அடிக்கடி கீழே குனிந்து ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி பார்த்தான், ஒன்றும் கிடைக்காத கோபத்தில் கன்னத்திலே பளீர் பளீர் என்று இழுத்தான்.

அவரால் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை, கொஞ்ச நேரத்திலே கதற ஆரம்பித்து விட்டார், அது கெஞ்சலாக மாறியது கூட தெரியாத அளவிற்கு அனீஷ் அடிப்பதிலே குறியாக இருந்தான். கன்னத்தில் விழும் அறை கூட ஓரளவு தாங்கி கொள்ளும் வகையில் தான் இருந்தது, நெஞ்சிலும் வயிற்றிலும் வ்ழும் குத்துக்கள் தான் பொருக்க மாட்டா வலியை கொடுத்தது, ஒவ்வொரு குத்திற்கும் மூச்சு நின்று நின்று வாங்கியது. ஒவ்வொரு அடியிற்கும் கொடுக்கும் இடைவெளி, மூச்சு இழுத்து கொள்ள போதாமல் இருந்தது.

யாராவது வர மாட்டார்களா என்று சாலையை சாலையை பார்த்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மூர்ச்சையாகி கொஞ்ச நேரத்திலே கீழே விழும் நிலையில் இருந்த போது தான், தன்னருகில் ஒரு வண்டி வந்து நின்று கொண்டிருந்ததை கவனித்தார் அவர். அனீஷையும் மருதுவையும் எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டு கொண்டிருந்தார், புதிதாய் வந்தவர். கொஞ்சம் உத்து பார்த்ததில் அது ஊர் பிரிசிடென்ட் என்று தெரிந்தது. என்ன விஷயம் என்று கேட்டு விட்டு, காசு பிடுங்கி கொண்டு அனுப்பி விடுங்கள் என்று சொல்லி கிளம்பி விட்டார்.

அடிப்பது வெளியூர் பொறுக்கி பயல்கள் என்று தெரிந்தும், அடிவாங்குவது உள்ளூர்வாசி என்று தெரிந்தும் ஊர் பிரிசிடென்ட் கிளம்பி விட்டது ஏதேதோ எண்ண அலைகளை எழுப்பிய வண்ணம் இருந்தது அவருக்கு, கிறுத்துவ மதத்திற்கு மாறியது முதல், ஊராரால் எவ்வளவோ சங்கடங்களை சந்தித்து இருந்தாலும், இதுவே அதிக வேதனை தரும் ஒன்றாய் இருந்தது அவருக்கு.... மனதளவில் இயேசுவை அழைப்பதை தவிர அவருக்கு வழி ஏதும் இருக்கவில்லை.

சட்டை பையிலும், ட்ரவுசர் பையிலும் கை விட்டு பார்த்தனர், வண்டி முன்னம் பையிலும் கை விட்டு துளாவி பார்த்தனர். ஒரு ஹான்ஸ் பாக்கெட்டை தவிர ஒன்றும் சிக்கவில்லை... அந்த கடுப்பிலே, அனீஷ் சற்று தூரம் நடந்து போய் ஒரு மரக்கிளையை ஒடித்து வந்து அவரை பின்பக்கமாய் திருப்பி பிடிக்க சொல்லி சுளீர் சுளீர் என்று அடிக்க ஆரம்பித்தான். அவரால் இந்த முறை சுத்தமாக தாக்குபிடிக்க முடியவில்லை. காட்டு கத்தல் கத்த ஆரம்பித்தார். சற்று தூரத்தில் இருந்த டீக்கடையில் இருந்து ரெண்டு ஆட்கள் எட்டி பார்த்தார்களே தவிர, அருகில் வரவில்லை. கையை வைத்து தடுத்து பிடிக்க பார்த்தார். கைக்கு தாறுமாறாக அடி விழுந்தது. என்னை விட்ருங்க என்ற வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப உச்சரித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அது தன்னையும் அறியாமல் அவர் வாயில் இருந்து தன்னிச்சையாக வந்து கொண்டிருந்தது.

சற்று முன்பு சென்ற பிரிசிடென்ட்டே திரும்ப வந்தார். இம்முறை வண்டியை நிறுத்தி விட்டு, பெல்ட்டை கழட்டி, ரெண்டு பயல்களையும் 4 சுழட்டு சுழட்டி விட்டு, காசை வாங்கி கொண்டு அனுப்பி விடும்படி சொல்லியும் கேட்காததற்கு, காட்டு அடி அடிக்க ஆரம்பித்தார். அனீஷ், காசு இல்லாத்தால் தான் மேற்கொண்டு அடித்தோம் என்ற பதிலை சொல்லி பார்த்தான். அது பிரிசிடென்ட்டை இன்னும் கோபப்படுத்தியது, காசு இல்லையென்றால் அடிப்பீர்களா என்று காலாலே இருவரையும் எத்தி கீழே விழ வைத்தார். ஒரு கட்டத்தில் அனீஷ் பிரிசிடென்ட்டை அடிக்க வரவே, பிரிசிடென்ட் சுதாரித்து கொண்டு, பெல்ட்டை கொண்டு விளாச ஆரம்பித்தார். அனீஷும், மருதுவும் அடி வாங்குவது ஒரு புறம் ஆறுதலாக இருந்தாலும், பிரிசிடன்ட் தமக்காக கோபப்படுவது அவருக்கு பெருமையாக இருந்தது. அதற்க்காகவே அவரை தடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்தார்.

போலீஸை போன் போட்டு வரவைத்தார். எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அனீஷையும், மருதுவையும் எந்த ஊர் என்று விசாரித்தனர், வெளியூர் என்று தெரிந்ததும் போலீஸ்க்காரர் லத்தி எடுத்து பொளந்து கட்டினார். உள்ளூருக்கு வந்து உள்ளூர்வாசிகளையே அடிப்பியா என்று பிரிசிடென்ட்டும் சேர்ந்து ஒரு பக்கமாய் நின்று எத்த ஆரம்பித்தார். அனீஷும் மருதுவும் கொஞ்ச நேரம் கூட அடி தாங்க வில்லை, கொஞ்ச நேரத்திலே காட்டு கூச்சல் போட்டனர். போலீஸ் ஸ்டேசன் அலறியது இல்லாமல், அந்த தெரு முழுக்கவும் கூச்சல் கேட்டது. அவர்கள் வாலிப பயல்களாக இருந்தாலும், அவர்களது அலறல்கள் குழந்தை அலறுவது போல் இருந்தது. கொஞ்ச நேரத்திலே டிவிஸ்க்காரருக்கு மனசு பொறுக்கவில்லை. அவர்களை விட்டு விட சொல்லி, பிரிசிடென்ட் காலையும், போலீஸார் காலையும் பிடித்து கேட்டு கொண்டார் அந்த டிவிஸ்க்காரர்.

பிற்பாடு போகும் போது அனீஷும், மருதுவும் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர். நான் உங்களுக்காக கர்த்தரிடம் வேண்டி கொள்கிறேன், போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தார் அவர்... பிரிசிடென்ட்டும், போலீஸும் அவரை ஆச்சர்யமாக பார்த்தனர். இருவரது நெற்றிகளிலும் சிலுவை போட்டு, முத்தமிட்டு அனுப்பி வைத்தார். ஊரே சுற்றி நின்று அவரை விநோதமாக பார்த்தது.

அவர் தான் முன்பு சண்முகமாக இருந்து அந்தோணியாக மாறியவர். அன்று இரவு மனைவியிடம் போய் வேறு ஊர் எல்லாம் போக தேவையில்லை, இனி இங்கே இருந்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு காயங்களுக்கு மருந்து போட்டு கொண்டார்.       

No comments:

Post a Comment