Wednesday, 3 April 2013

ஸ்பீடான கதை



இது ஒரு ஸ்பீடான கதை என்பதால் தவிர்க்க முடியாமல் துரை தவிர்க்க முடியாமல் 120 கி.மீ வேகத்தில் போக கூடிய, ஆம்னி பஸ்ஸில் ஏறி கோயம்புத்தூர்க்கு 2 டிக்கெட் எடுக்கிறான். அவன் கூட வருவதும் டிக்கெட் என்பது வேறு விஷயம். ஆனால் கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் தற்சமயம் வேலை நடந்து கொண்டிருப்பதால், பஸ் 50 கிமீ தாண்டுவதற்கு கூட முக்கி கொண்டிருந்தது. விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போது பார்த்து துரை எப்போது டா போய் சேர்வோம் என்று கடிகாரத்தை பார்க்க அது இருளடைந்து கிடக்கிறது. மணி 10.23 என்று மொபைலில் பார்க்க வேண்டியதாய் போயிற்று. மொபைலை பாக்கெட்டில் போட்டுவிட்டு திரும்பி பார்த்தால் 4 அடி உயரத்திற்கு ஒரு நீர்யானை அவனை முறைத்து கொண்டு நின்றது. இது ஏதுடா வம்பாப் போச்சு, என்று அவன் ஓட ஆரம்பிக்க, அது துரத்தி கொண்டு வர, வழியில் கிடக்கும் பச்சிலையை புடுங்கி அதன் மேல் அடிக்க, அது சற்று அடியை பொறுத்து கொண்டு மேலும் சீற்றமுடன் துரத்த, வேறு வழியில்லாமல் ஷூவை கழட்டி அதன் மேல் எறிய, அது ஷூவினை கவ்வி கொண்டு ஓடி விட்டது. மூர்ச்சையாய் விழுந்து விடலாம் போல் இருந்தாலும், வழியில் கிடந்த 2 ரூபாய் நாணயம் அவன் மனதை சபலப்படுத்தியது. குனிந்து எடுத்து நிமிர்ந்து பார்த்தால், மறுபடியும் நீர் யானை. இன்னொரு ஷூவையும் கழட்டி கொடுத்து அதை விட்டு தூரம் நகர்ந்தான். கண்ணாடியில் அவன் முகம் பார்த்தால் அவன் மனைவியின் முகம் தெரிந்தது. அதிலும் ஸ்டிக்கர் பொட்டை நட்ட நடுவில் வைக்காமல், கொஞ்சம் தள்ளி வைத்திருந்தான். மனைவிக்கு ஜாங்கிரி என்றால் பிடிக்கும், என்பது தெரிந்தே, ஒவ்வொரு முறை டிக்கெட்டை பார்க்கும் போதும், ஜாங்கிரி வாங்கி கொண்டு போவான். அப்படி வாங்கி போவதால், இவன் தான் வீணாக திரும்ப வரும் போதும் குளிக்க வேண்டியதாய் போய் விடுகிறது. இப்போதெல்லாம் ரௌடிகள் தொல்லை அதிகம் என்பதால் இப்பொதெல்லாம் துரை சவரம் பண்ணுவதையே தவிர்த்தான். அதற்கு பதிலாக பல் விளக்கி கொள்வான். இப்போது என்ன பிரச்சனை என்றால், சரி வர கண் தெரிவதில்லை. எதை பார்த்தாலும் புரியவே மாட்டேங்குது என்று யாரை பார்த்தாலும் சொல்வான். பேசாமல் நல்ல ஒரு டாக்டரை பார்க்கலாம் என்று போனால், கல்யாணம் ஆகாத டாக்டர் என்று யாருமே இல்லை. 9 வருடம் டாக்டர் படிப்பே படித்தால், எப்படி கன்னி டாக்டர்கள் கிடைப்பார்கள் என்று அறசீற்றாளர் சொல்லவே, பேசாமல் நெதர்லாந்து சென்றான். அங்கு போனால் ஒரே கறுப்பு, வெள்ளை கூட கறுப்பாய் தான் தெரிந்தது. இதற்கு எதுக்கு வெளிச்சம் என்று கண்ணை மூடி கொண்டே நடக்க ஆரம்பித்தான். என்ன ஆச்சர்யம், மக்கள் அனைவரும் அவனை பாராட்டி, அவனை பின்தொடர்ந்தனர். அவன் வீட்டுக்குள் போகும் போது மட்டும் கண்களை திறந்து கொள்வான். அவன் வீடு முழுதும் கொக்குகளாய் நிறைந்து கிடக்கும். ஆனால் எங்கேயும் அசிங்கம் செய்யாது. அதுவும் அவனுக்கு வசதியாய் தான் இருந்தது. எப்போது வேண்டுமோ அப்போது உறவினர்களை வீட்டிற்கு அழைத்து கடுப்பேற்ற முடிந்தது. துரை எப்போதும் டி.வி பார்ப்பவனில்லை, பார்த்தாலும் கரண்ட் இல்லாத போது தான் பார்ப்பான். அப்போதும் அவன் ரசனை தரை மட்டத்தில் இருப்பதை தான் அவன் அவ்வப்போது ஆச்சர்யப்பட்டு கொள்வான். பேசாமல் விமர்சகன் ஆகி விட்டால் என்ன, ஆசிரம வாசி ஆகி விட்டால் என்ன, கேரம் ப்ளேயர் ஆகி விட்டால் என்ன என்பன போன்ற சிந்தனைகள் எல்லாம் அவனுள் உதிக்க அவன் மனைவி மிகவும் உதவியாக இருந்தாள். உடல்நலம் என்பது கடவுள் மாதிரி என்று சும்மாவா சொன்னார்கள். சொன்னவர்கள் வாயை தேடி சர்க்கரை போடுவதற்குள், சொன்னவன் சர்க்கரை வியாதி வந்து இறந்து விட்டிருந்தான். பேசாமல், அவன் கல்லறையை தோண்டி சர்க்கரை கொடுத்து விடலாமா என்று அவன் கல்லறைக்கு போனால், அவனை காணோம். பக்கத்து கல்லறையில் கேட்டால், லஞ்சுக்கு போயிருக்கான், 2 மணி நேரத்தில வந்துடுவான் என்று பதில் வந்தது. லஞ்ச் சாப்பிட 2 மணி நேரமா ஆகும் என்று அறிவாளித்தனமாக கேள்வி எழுப்பினான். அதற்குள் பக்கத்து கல்லறைக்காரன் தூங்கி போயிருந்தான். கோவத்தில் காறி முழுங்கி விட்டு வந்தான். தொடர்ச்சியான இயக்கம் என்று ஏதேனும் உள்ளதா என்று ஒரு காட்டுவாசியிடம் கேட்டான், அதற்கு காட்டுவாசி, ஸாரி, நாண் நெதர்லாந்த் காட்டுவாசி, எனக்கு தமிழ் தெரியாது என்று தமிழிலே சொன்னான். துரை வெறுப்படைந்தான், அவனை தலைகுனிய வைக்க வேண்டுமே என்று, நான்க்கு ரெண்டு சுழி ‘ன்’ தான் வரும், மூன்று சுழி ‘ண்’ வராது என்று திருத்தம் சொன்னான். அவனுக்கு 29 பல் தான் இருந்தது என்று துரை எளிதில் எண்ணி விட்டான். கப்பல் ஏறி ரஷ்யா வந்தால் அங்கு போலி டாக்டர்களே இல்லை. இந்தியாவில் இருக்கும் பல டாக்டர்களின் விசிட்டிங் கார்டுகளை ரிசப்ஷனிலே கொடுத்து அனுப்பினர். ஒரு மொட்டை தலையன் திடீரென்று துரத்தினான். வேகமாக துரத்துவதால் துரத்தினார் என்று மாற்றி எழுதினான். அவனின் திருத்தம் வேலை செய்யவில்லை. துரத்தினார் என்று மாற்றி எழுதினான் ஒரு பன்றி என்று போட்ட பின்னே தான், அந்த சிகையில்லா சிங்கம் துரத்துவதை நிறுத்தி, ஒரு பான் பராக் கடையில் நின்று கொண்டான். அவசர அவசரமாக அவன் பார்க்கும் முன் கொண்டார் என்று மாற்றி சொன்னான். ஆனால் யாருக்கு என்று தான் தெரியவில்லை. வேண்டா வெறுப்பாக ஒரு தேநீர் சாப்பிட கடைக்கு சென்றான். தேநீர் கடை ஏதுமில்லாததால் டீ கடைக்கு போக வேண்டியதாய் போயிற்று. ஏன் எல்லா கடையிலும் தினத் தந்தியே வாங்குகிறார்கள் என்று யோசித்தான். மீண்டும் யோசித்தான். மீண்டும் மீண்டும் யோசித்தான். யோசிப்பதற்குள் கன்னி தீவு காமிக்ஸ் தொடர் முடிந்து விட்டிருந்தது. நேரம் பார்க்கலாமே என்று கடிகாரம் பார்த்தான், 10.24 என்று கருப்பு நிறத்தில் காட்டியது.

No comments:

Post a Comment