வீட்டில் கதவு
தாழ்ப்பாள் உடைந்து விட்டது, ஆசாரியை 4 வாரங்களாக கூப்பிட்டு கொண்டிருக்கிறேன்... எந்நேரமும்
கடையில் சும்மா தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான், ஆனால் வந்து என்னவென்று பார்க்க
மாட்டேன் என்கிறான். பால் விலை 15 ரூபாய் என்று போட்டிருக்கிறது, 16 ரூபாய்க்கு விற்கிறார்கள்,
ஏன் என்று கேள்வி கேட்க முடியவில்லை. பஸ் ஸ்டேன்டிற்குள் 10 ரூபாய் ரீசார்ஜ் கார்டை
12 ரூபாய்க்கு விற்கிறார்கள். கண்டக்டரிடம் 14 ரூபாய் டிக்கெட்டிற்கு 20 ரூபாயை நீட்டினால்,
என்னை அறிவு கெட்டவன் என பலர் முன்னிலையில் திட்டிவிட்டு, வெறும் 5 ரூபாயை மீதம் சில்லறையாக
தருகிறான். மளிகை கடையில் 5 ரூபாய் சில்லறை இல்லை என சொல்லி, ஒரு Munch chocolateஐ
கூடையில் தினித்து அனுப்புகின்றனர். ஒழுங்கான திரைப்படத்தையோ, மெகா சீரியலையோ, ரியாலிட்டி
ஷோவையோ கொடுக்க வக்கில்லாத கலைஞர்கள், தமிழர்கள் மக்கு சாம்பிரானிகள், இவர்களுக்கு
இப்படியான படைப்பு தான் உகந்தது என சமாதானம் சொல்கிறார்கள். தமிழர்களும் அதையே தான்
விழுந்தடித்து பார்க்கிறார்கள். மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் போட்டி போட்டு
கொண்டு விளம்பரம் செய்கின்றனர். மீடியா ஆட்கள் கிட்டதட்ட ரௌடிகளையே மிஞ்சி விடுவார்கள்
போல் இருக்கிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களை பற்றிய ஒரு அவதூறான செய்தி ஒன்று
எங்கள் பத்திரிக்கைக்கு கிடைத்திருக்கிறது, அதை வெளியிட வேண்டாமென்றால், உடனடியாக நான்
சொல்லும் இடத்திற்கு 5000 ரூபாயை எடுத்து வாருங்கள் என்கிறான்.
ஏரியா கவுன்சிலரில்
இருந்து, பிரதமர் வரை ஊழல்வாதிகள் என்று தெரிகிறது, ஆனால் யாராலும் யாரையும் உள்ளே
தள்ள முடியவில்லை. அதாவது பரவாயில்லை, ஊழல்வாதி என்று தெரிந்த பின்பும் மக்கள் அவர்களுக்கே
மறுபடியும் வாக்களிக்கின்றார்கள், அது எந்த அடிப்படையில் என்றே யாருக்கும் பிடிபட மாட்டேன்
என்கிறது. வர வர யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பமே ஆளை அரை பைத்தியம் ஆக்குகிறது.
ஒருவன் எல்லாத்தையும் சுரண்டிய ஆளும் கட்சிக்காரன், இன்னொருவன் சுரண்ட தயராக காத்து
கொண்டிருக்கும் எதிர்கட்சிக்காரன், இன்னொருவன் விலை போக தயாராக காத்து கொண்டிருக்கும்
அல்லக்கை, இன்னொருவன் ஜாதி பேரை சொல்லி உண்டியல் குலுக்கும் ஆசாமி, இன்னொருவன் ஒடுக்கப்பட்டவர்களை
மேலும் ஒடுக்கப்பட்டவர்களாக ஆக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கொண்டிருப்பவன்,
இன்னொருவன் ரெண்டு கொலை செய்தவன், இன்னொருவன் ஆர்வக்கோளாறில் அரசியலில் குதித்தவன்,
இன்னொருவன் நாமும் அரசியல்வாதி ஆகி சொத்து சுகம் சேர்க்க மாட்டோமா என்று பேராசையில்
வேட்பாளர் ஆனவன். இவர்கள் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்று 49 O ஃபாரத்தை
கேட்டால், இம்சை பண்ணாம ஏதோ ஒரு பட்டனை அமுக்கிட்டு போயேன் யா என அதிகாரிகள் பதில்
அளிக்கின்றனர்.
கிராமத்தில் பேன்சி
கடையே இல்லையே, நாம் ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்தால், நம்மை பார்த்து பின்னாலயே 4 பேர்
பேன்சி ஆரம்பிக்கின்றனர். மாவு மில்லே இல்லையே நாம் ஆரம்பிக்கலாம் என ஆரம்பித்தால்
அடுத்த வாரத்திலே 6 மாவு மில் உதயமாகி விடுகிறது. நன்றாக சம்பாதித்தால் பொறாமையில்
வெந்து சூன்யம் வைக்கும் அளவிற்கு போகின்றார்கள், சம்பாதிக்காமல் சும்மா இருந்தால்
மதிக்கவே மாட்டேன் என்கின்றார்கள், ஒரளவு சம்பாதித்து எல்லார் காலையும் நக்கி கொடுத்து
கொண்டிருந்தால் தான் அவன் நல்லவன். முக்கியமாக கொடுத்த கடனை திருப்பி கேட்டு விட கூடாது.
வெறும் 5 படத்தில்
நடித்த ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் தெருவில் நடப்பதற்கு இல்லை, சுற்றி கூட்டம் கூடி
விடுகிறது. ஆதித்யா சேனல் தொகுப்பாளர்களும், சன் ம்யூசிக் சேனல் தொகுப்பாளர்களும் தங்களுக்கு
தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நேயர்களுக்கு டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க என்று சொல்லி
சொல்லியே சலிக்கின்றனர்.
12 வயதில் சிகரெட்
அடிக்கின்றார்கள், 15 வயதில் பீர் அடிக்கிறார்கள், 16 வயதில் ஹான்ஸ் போடுகிறார்கள்,
20 வயதில் கஞ்சா இழுக்கிறார்கள், ஒரு கூட்டமாக சேர்ந்து தனியாக போகும் பெண்களை வன்புணர்ச்சி
செய்கிறார்கள். 2 பேராய் இருந்தால் வீதியில் போய் வந்து கொண்டிருக்கும் பாதசாரிகளை
கெட்ட வார்த்தை பேசி விசனப்பட வைக்கிறார்கள். உங்கம்மால ஓக்க என பலர் முன்னிலையில்
திட்டி விட்டதால் பொறுக்க மாட்டாமால் சண்டைக்கு சென்றால், தடுத்து விடுவதற்கு ஒரு கூட்டமே
தயராக இருக்கிறது. மீறி சண்டைக்கு சென்று ஒரு கட்டையை எடுத்து அவன் மண்டையை பிளந்தால்
போலீஸ் நமக்கு எதிராக கேஸ் போட்டு நம்மிடம் காசு பார்க்கிறது, ஒருவேளை சண்டை இழுத்ததில்
நமக்கு ஏதும் அடி பலமாக பட்டு விட்டால் நகைப்பதற்கு என்று ஒரு பட்டாளமே தயராக இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்க
பட்டவர்களுக்கு 5 வருஷம் சுரண்டவதற்கே போத மாட்டேன் என்கிறது, இதில் எங்கிருந்து மக்களுக்கு
வளர்ச்சி பணிகள் செய்வது, மிஞ்சி போனால் தேர்தல் நேரத்தில் சலுகைகள் எதிபார்க்கலாம்.
சரி இராணுவ ஆட்சி தான் தேவை போல என்று வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால், இராணுவ
ஆட்சிகள் கிலியை கிளப்புகிறது. கவுன்சிலர் ஆக வேண்டுமென்றால் நல்லவனாக இருக்க அவசியம்
இல்லை, பண்பாளனாக இருக்க அவசியமில்லை போட்டு கொடுக்க தெரிந்திருக்க வேண்டும், எதிராளியை
விலை பேச தெரிந்திருக்க வேண்டும், அச்சுறுத்த தெரிந்திருக்க வேண்டும், பேசி மழுப்ப
தெரிந்திருக்க வேண்டும், நிறைய பேரை ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும், மாற்றி மாற்றி
பேச தெரிந்திருக்க வேண்டும், இதெல்லாம் மீறி நல்லவன் போல் நடிக்க தெரிந்திருந்தால்
அது கூடுதல் தகுதி.
ஏதாவது வேலை இருந்தால்
போட்டு கொடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடி வேலைக்கு சேர்கிறார்கள், எங்கெல்லாம் ஏமாற்ற
முடியும் என்று நுணுக்கமாக ஆராய்ச்சி செய்கின்றார்கள், கூட்டம் கூடுகின்றார்கள், சங்கம்
ஆரம்பித்து கொள்கிறார்கள், பேசிய சம்பளம் போதாது என்கிறார்கள், சம்பளத்தை உயர்த்துவதை
தவிர வேறு வழி ஏது என்னும் அளவிற்கு நிறுவனத்திற்கு நெருக்கடி தருகின்றார்கள், கஷ்டமான
வேலைகளை எல்லாம் செய்ய முடியாது வேண்டுமானால் கான்ட்ராக்ட்டுக்கு விட்டு கொள்ளுங்கள்
என்று முரண்டு பிடிக்கிறார்கள், கம்பெனி நஷ்டத்தில் இயங்கினாலும் கருத்தில் கொள்ள மாட்டேன்
என்கிறார்கள், கடைசியில் கம்பெனியை மூடிவிட்டால் சோத்துக்கு சிங்கி அடிக்கிறார்கள்,
மருந்தகத்தில்
20 ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஒரு கீத்து மாங்காயை 5 ரூபாய்க்கு விற்கின்றார்கள்,
ஒரு முழம் பூவை 20 ரூபாய்க்கு விற்கின்றார்கள், கேட்கின்ற மதுவை டாஸ்மாக்கில் கொடுக்க
மாட்டேன் என்கிறார்கள், திருட்டு விசிடியை ஒழிக்க முடியாத அளவிற்கு குடும்பங்கள் திருட்டு
விசிடியை நம்பி தொழில் செய்கின்றார்கள். பஸ் ஸ்டேன்டில் சிகரெட் ஊதுபவர்கள் சுற்றி
இருப்பவர்களை பற்றி கவலை கொள்வதில்லை. குறைந்தபட்சம் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பாவது சிகரெட்டை
தூக்கி எறிந்து விட்டு வருகிறார்களே என்று சந்தோஷம் கொள்ள வேண்டியிருக்கிறது. பொருளை
வாங்குபவனும் சாகிறான், பொருளை விற்பவனும் சாகிறான் ஆனால் தரகர்கள் வாழ்கிறார்கள்.
நேரடி கொள்முதல் பற்றி பேச்சு வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஆவன்
செய்கின்றார்கள். உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு பொருட்களை விற்க முன் வர மாட்டேன்
என்கிறார்கள், எங்கோ இருப்பவனுக்கு பொருளை விற்க தான் குறியாக இருக்கிறார்கள். ஒரு
கிராமத்தில் ஆளாளுக்கு ஒவ்வொர் பயிர் பயிரடலாம், நமக்குள் பிரித்து கொள்ளலாம் என்ற
வரைமுறையை ஒரு ஆராய்ச்சிக்கு கூட நடத்த முடியாது, எல்லோருமே பணப்பயிரையே நடுவார்கள்,
தரகனை கூப்பிடுவார்கள், அவனும் போட்டி காரணமாக கம்மி விலைக்கு வாங்கி செல்வான். எந்த
வழிமுறையை பின்பற்றினால் பஞ்சம் போகும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற யுக்தியை
யாரும் யோசிக்கமாட்டேன் என்கிறார்கள், யோசனை கூறுபவனின் யோசனையை குறை சொல்வதோடு கடமை
முடிந்தது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்
ரஜினிகாந்தை கொண்டாட வேண்டியதாய் இருக்கிறது. கலைஞருக்கு ஓட்டு போட வேண்டியதாய் இருக்கிறது.
தினத்தந்தியில் வரும் கற்பழிப்பு செய்திகளை படிக்க வேண்டியதாய் இருக்கிறது, நோக்கியா
போன் வாங்க வேண்டியதாய் இருக்கிறது, ஏர்டெல் ரீ சார்ஜ் கார்டு வாங்க வேண்டியதாய் இருக்கிறது,
45 ரூபாய் கொடுத்து அரிசி வாங்க வேண்டியதாய் இருக்கிறது, வாரம் ஒரு முறை ஏறும் பெட்ரோல்
விலையை வேடிக்கை பார்க்க வேண்டியதாய் இருக்கிறது, சிங்கப்பூரை அண்ணாந்து பார்க்க வேண்டியதாய்
இருக்கிறது, போலீஸ்க்காரனை கண்டால் நடுங்க வேண்டியதாய் இருக்கிறது, உயர் அதிகாரிகளை
கண்டால் சலாம் போட வேண்டியதாய் இருக்கிறது, கௌரவ கொலைகள் செய்யும் கூட்டம் யார் என
தெரிந்தும் பொத்தி கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது...
இப்படி பல விஷயத்தில்
மூடி கொண்டிருக்கும் என்னிடம் வந்து, இலங்கையில் தமிழர்களை கொல்கிறார்கள் அதனால் ஐபில்
பார்க்காதே என்கிறார்கள்...