Thursday, 3 October 2013

பட்டத்து யானை



ஒருவன் சென்னை செல்வதற்காக என்று ஓர் பேருந்தில் ஏறி அமர்கிறான், அது நேரே எகிப்து ப்ரமிட் முன் போய் நிற்கிறது, அவனும் சக பயணிகளும் எந்த வித அதிர்ச்சியும் அடையாமல், பஸ்ஸை விட்டு கீழே இறங்கி பிரமிடுகளின் மீது சரசரவென ஏறுகிறார்கள், திடீரென்று பிரமிடுக்கு நடுவில் இருக்கும் ஓர் ஓட்டையை பார்க்காமல் ஏறுகையில் தொப்பென்று அவன் மட்டும் விழுகிறான், அங்கே ஓர் காரின் இருக்கையில் அலேக்காக விழுந்தபடியே போய் அமர்கிறான், அவனுக்கு பக்கத்தில் கூலாக ஜூலியா ராபர்ட்ஸ் சிரித்த படி வரவேற்கிறாள், காரை ஸ்டார்ட் செய்து ஸ்வீடன் நகரில் ஒய்யாரமாக ஓட்டி செல்கிறார்கள். ஓர் இடத்திற்கு போனதும், அங்கே ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் வந்து இருவரையும் காரோடு சேர்த்து தூக்கி சென்று மேகத்தின் மீது அமர்த்துகிறது

இப்படி ஓர் கதையை இந்த காலக்கட்டத்தில் ஓர் குழந்தைக்கு சொன்னால் கூட, அது நம்மை மேலும் கீழும் பார்த்து, லாஜிக் இடிக்கிதே என தலையை சொறியும். ஆனால் இது போன்று ஓர் லாஜிக் இல்லாத கதை தான் பட்டத்துயானை படத்தில் இருக்கிறது. ஆனாலும் இந்த படம் நம்மை ரசிக்க வைக்கிறது, அது தான் பூபதி பாண்டியனின் மேஜிக்!

வழக்கமான தமிழ் சினிமாவில் வருவது போன்று இந்த படத்திலும் சந்தானம் தான் ஹீரோ, நடுநடுவே விஷால் டூயட் ஆடி, சண்டையெல்லாம் போடுவதால் ஆடியன்ஸ் குழம்புகிறார்கள். அதை மட்டும் அடுத்த படத்தில் தகுந்த படி தவிர்த்தால் நலம். காரைக்குடியில் சமையல் காண்ட்ராக்டராக இருக்கும் சந்தானம், ஒரு சமயம் போலிஸ் கல்யாணமும், ரௌடி கல்யாணமும் ஒரே தேதியில் வர, ரௌடி கல்யாணத்தை தவிர்ப்பதற்காக, ரௌடியை ப்ளான்(!) பண்ணி பொய் கேஸ் கொடுத்து உள்ளே தள்ளி விடுகிறார், ஆனாலும் அந்த கேஸில் இருந்து வெளியே வரும் ரௌடி, சந்தானத்தை துரத்த, சந்தானம் திருச்சிக்கு ஓடி ஹோட்டல் ஆரம்பித்து தொழில் செய்யலாம் செல்ல, சந்தானம் திருச்சி போய் ஹோட்டல் ஆரம்பித்தாரா இல்லையா என்பது தான் கதை. இதற்கு நடுவில் நடப்பதெல்லாம் தான் காமெடி திருவிழா

இந்த எளிய கதைக்கு நடுவே, ஏகப்பட்ட காமெடிகள், ஏகப்பட்ட சிரிப்புகள்ஆனால் கதையில் எந்த லாஜிக்கும் இருக்காது, ஓர் காமெடி சீன் வர வேண்டும் என்பதற்காக சிச்சுவேஷன் மேக்கிங்க்குக்காக தான் அதிகம் மெனக்கெட்டு இருபார்கள். அது சில இடங்களில் லாஜிக்குகளை இடிஇடியென இடித்து தள்ளி குடைசாய்த்து விடுகிறது, ஆனாலும் இந்த லாஜிக் சொதப்பல்கள் எல்லாம் நம்மை பெரிய அளவு உறுத்தவில்லை. டூயட் பாட்டு வருவதற்காக வேண்டி வீணாக ஹீரோவையும், ஹீரோயினையும் தேவையில்லாமல் லிப் லாக் செய்ய விடும் கொடூரத்தை விட இந்த சிச்சுவேஷன் ப்ரிப்பெரஷன் ஒன்றும் அவ்வளவு கொடூரமாய் இருந்து விடவில்லை. நெடுநாட்கள் கழித்து, சந்தானத்தின் அபரித உழைப்பும், அவரின் க்ரியேட்டிவிட்டியும் இந்த படத்தின் மூலம் தெரிகிறது. லொள்ளு சபா ரசிகர்கள் சந்தானத்தை நினைத்து பெருமை கொள்ளலாம்

விஷால் அவர் பாட்டுக்கு வருகிறார், சந்தானத்துடன் தொத்தி கொண்டு சில சீன்களில் வலம் வருகிறார், பாடல்களுக்கு உடற்பயிற்சி செய்கிறார், சண்டை காட்சிகளில் பல கார் கண்ணாடிகளை சுக்கு நூறாக்குகிறார்…. மற்றபடி அவருக்கான ஸ்கோப் அவ்ளோ தான். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விலை மலிவான, பேப்பர் போன்றிருக்கும் கண்ணாடிகளை உடைத்து சண்டை காட்சிகளை ஒப்பேத்துவார்களோ தெரியவில்லை. ஒரு சண்டை காட்சியிலாவது, ஸ்டீயரிங்கை பிடுங்கி அடிப்பார்களா என்று பார்த்தால், சும்மா காரின் மீது போய் தொப் தொபென்று விழுவதோடு சரி…. எல்லா இயக்குனர்களை போலவும், பூபதி பாண்டியனும், ஓர் வீடியோ கேம் விரும்பி போல் இருக்கிறது. Mario bros, Vcop2 போன்ற எண்ணற்ற கேம்களில் வருவது போல், வில்லனின் அடியாட்கள் எல்லாம் ஒரே அடியில் சாகிறார்கள், வில்லன் மட்டும் 10 அடியில் சாகிறான். இப்போதெல்லாம் சண்டை காட்சிகள் குழந்தைகளுக்கான செக்ஷன் ஆகி விட்டது போல் இருக்கிறது

ஒரு சிலருக்கு Star value இருப்பதாலே, அவருக்கு கதையில் எந்த வேலையும் இல்லையென்றாலும் கூட அவரை சும்மாவாச்சும் படத்தில் காட்டி, அவருக்கு கும்மாங்குத்து குத்திவிடுவார்கள். இந்த வகையில் நிறைய முறை சுத்தலில் விடப்பட்டது கோவை சரளா, நாசர், சுஹாசினி போன்றோர்கள் தான். நாசர், சுஹாசினிக்கெலாம் டெம்ப்ளேட்டாக டாக்டர் வேஷத்தை கொடுத்தே அவர்களை கரை ஒதுக்கி விட்டார்கள். இதில் மயில்சாமியும் விதிவிலக்கல்லஅவருக்கென்று ஓர் குடிகாரன் வேஷத்தை தான் எல்லா இயக்குனர்களும் ஃப்ரேம் செய்வார்கள். ஆனால் இந்த படத்தில் மயில்சாமி உட்பட பலரிடம் பிரமாதமான அவுட்புட் வாங்கப்பட்டிருக்கின்றன, ஒரு காமெடி கூட புஸ்ஸாகவில்லை, எல்லா காமெடிக்கும் வெடியாய் தியேட்டர் சிரித்து வெடிக்கிறது. அதே போல் தான் ஜான் விஜய்.. ஜான் விஜய்யை சரியாக புரிந்து கொண்டு தட்டி விடும் காமெடிகள் ஒவ்வொன்றும் unexpected…

ஐஸ்வர்யா அர்ஜூன் மக்களிடையே ரீச்சாக வேண்டும் என்று படத்திலும் ஐஸ்வர்யா எனும் பெயர் கொண்டே வருகிறார். ஆனால் பரிதாபத்திற்கு வந்து போகிறார், எல்லோரையும் பார்த்து பேந்த பேந்த முழிக்கிறார். ஓவர் மேக்கப் போட்டு நமக்கு சில இடங்களில் பேய் பயத்தை காட்டுகிறார். மேக்கப் இல்லாமல் அழகாய் இருப்பாரோ என்னவோகடல் படத்தில் இருந்து ஏன் தூக்கியடிக்க பட்டார் என புரிகிறது, ஏதேனும் பேய் படங்களில் நடிப்பது அவருக்கு ஓர் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்

நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், நம் கிராமங்களில் பஸ் போவதை வைத்தே சிலர் மணி சொல்வதை பார்த்திருக்கிறோம்எனக்கு பின்னால் இருந்தவர், படத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அவருடைய குழந்தை தியேட்டர் சூழல் பிடிக்காமல் சதா அழுது கொண்டே இருந்தது, அவரின் மனைவி, எப்போங்க இன்டர்வெல் வரும், எப்போங்க பாட்டு வரும், எப்போங்க படம் முடியும் என்று கேட்கஅவர் எல்லா கேள்விகளுக்கும் கரெக்டாக பதில் சொன்னார். இரும்மா, இந்த சண்டை முடிஞ்சதுக்கப்பறம் இன்டர்வெல் போட்டுடுவாங்கன்னு சொன்னார், அதே போல் இன்டர்வெல்நில்லுப்பா விஷாலும் ஐஸ்வர்யாவும் பேசிட்டு இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டு வரும் என்று சொன்னாரோ இல்லையோ பாட்டு வந்து விட்டது. குழந்தையை வராண்டாவில் ஒரு ரவுண்டு கூட்டி சென்று வருவதற்கும் பாட்டு முடிவதற்கும் சரியாக இருந்தது, அதே போல் இரும்மா இந்த காமெடி முடிஞ்சதும் படம் முடிஞ்சிரும்னு சொன்னார், அதே போல் முடிஞ்சிடுச்ச்ச் மை காட், வாட் மேன் ஹீ இஸ்….!

ஷங்கர் மகாதேவன், கானா பாலா போன்ற பெரிய பெரிய தலைகள் எல்லாம் பாடியும், எந்த பருப்பும் போனியாகவில்லை. ஆனாலும் பாடல்களை உட்கார்ந்து கேட்க முடிகிறது, யாரும் தெறித்து ஓடவில்லை, ஆனால் அதே சமயம் பாடல்கள் ஹிட்டும் ஆகாது. இப்போதெல்லாம் பாடல்கள் எல்லாம் ஒரு சம்பிரதாய time extender என்று கடைக்கோடி தமிழனுக்கும் தெரிந்து விட்டதால், அவன் பெரிதாய் எதிர்பார்ப்பதும் இல்லைஎப்போதேனும் ரொம்ப நல்ல பாடல்கள் வந்தால், pirated websitesல் இருந்து பாடல்களை சுட்டு, காரில் செல்லும் போது கேட்டு கொள்கிறான்அதுவே அவன் திரைப்பாடல்களுக்கு செய்யும் மரியாதை…. “ஒரே நாளில் 1 லட்சம் ஆடியோ கேசட்கள் விற்று சாதனைஎன்பதெல்லாம் அந்த காலம்….

மொத்தத்தில் பட்டத்துயானை பார்த்தது, ஓர் நிறைவான அனுபவமாக இருந்தது. ஆனால் சில இடங்களை கண்டு கொள்ளாமல், விட்டு கொடுத்து போக வேண்டும். அது இப்போதெல்லாம் நமக்கு வாழ்க்கை முறை ஆகி விட்டப்படியால், இத்திரைப்படம் தமிழர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இந்த படத்தில் ஹீரோயினுடைய அப்பா, ஓர் கோவில் அறநிலைய துறை அதிகாரி, அவர் அதிகாரியாக இருப்பதால் அவர் குடும்பத்துக்கு நிறைய சிக்கல்கள் வருகிறது, அதை ஹீரோ எப்படி முறியடித்து காப்பாற்றுகிறார் என்று ஓர் கிளைக்கதை ஓடுகிறது. இந்த கதையில் ஒன்றும் அவ்வளவு விஷேஷங்கள் இருப்பதில்லை, மொக்கையாக போகிறது. இயக்குனர்களும் இந்த மாதிரியான கதையை தான் தேடி பிடிக்கிறார்கள். திரைப்படத்திற்கு வரும் ஆடியன்ஸை ரெண்டரை மணி நேரம் உட்கார வைப்பதே பெரும் task ஆக மாறிவிட்டதால், இந்த மாதிரியான கதைகளை தான் காமெடி கலந்து அவர்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நிஜத்தில், ஹீரோயினுடைய அப்பாவை அறநிலைய துறை அதிகாரியாக போட்டதிற்கு பதிலாக, ஹீரோவையே அறநிலைய துறை அதிகாரியாக போட்டு, இங்கே 1000 கதைகள் பண்ணலாம். இங்கே அவ்வளவு கதைகள் இருக்கிறது. ஒவ்வொரு கவர்ன்மென்ட் ஆபிஸில் உள்ள பேப்பரும், ஒவ்வொரு கதைகளை தாங்கியிருக்கிறது. ஆனால் அதை எடுக்கும் துணிச்சலோ, தைரியமோ, புத்திசாலித்தனமோ இங்கு யாருக்கும் இல்லை

பழகிய பாதையிலேயே இயக்குனர்கள் ரிஸ்கில்லாமல் நடந்து செல்கிறார்கள். அற்புதமான, சுவாரஸ்யமான கதைகளை உள்ளடக்கிய கவர்ன்மென்ட் ஆபிஸ் கதைகள் எல்லாம் road not taken ஆகவே இருக்கிறது




No comments:

Post a Comment