Friday, 9 August 2013

கடன் கொடுத்தாற் நெஞ்சம் போல்...

கடன் கொடுத்தாற் நெஞ்சம் போல்….

சமீபமாக எங்கள் வீட்டு குழந்தைக்கு ஓர் அழகிய Microtip pencil வாங்கி கொடுத்தோம். அதை அவள் வழக்கம் போல் தொலைத்து விட்டாள், நாங்களும் பெரிதாய் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால், இவள் தன் உடன் படிக்கும் இன்னொரு குழந்தையிடம் அதனை கடன் கொடுத்திருக்கிறாள், வாங்கிய குழந்தை அதனை எங்கோ தொலைத்து விட்டது. இவள் விடவில்லை, ஒன்று வாங்கிய பென்சிலை கொடு, இல்லை அதற்கான பணத்தை கொடு என்று கறாராய் நின்று இருக்கிறாள். அப்படி கொடுக்காத பட்சத்தில் மிஸ் கிட்ட சொல்லிடுவேன் என்று வேறு மிரட்டி இருக்கிறாள். பென்சிலை தொலைத்த குழந்தை, மறுநாள் பணத்தை தருகிறேன் என்று சொல்லி வீட்டிற்கு போனவள், அம்மாவிடம் பணத்தை கேட்காமல் வீட்டில் இருந்து 25 ரூபாய் பணத்தை திருடி எடுத்து வந்து கொடுத்தாள்… இத்தனைக்கும் இவர்கள் படிப்பது மூன்றாம் வகுப்பு. மூன்றாம் வகுப்பு படிக்கும் பிஞ்சுகளுக்கே, கொடுத்த கடனை திருப்பி கேட்க வேண்டும் என்ற எண்ணமும், வாங்கிய கடனும் எப்பாடு பட்டாவது கொடுத்தல் வேண்டும் என்ற எண்ணமும் அநிச்சையாகவே இருக்கிறது. ஆனால் பெரியவர்களுக்கு தான் இருப்பதில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு, எங்கள் வீட்டு குழந்தை வாங்கிய 25 ரூபாயை எங்கள் வீட்டில் வந்து கொடுக்காமல், கடையில் ஆசைப்பட்டதை அவளது தோழிகள் கூட்டத்தோடு சென்று சாப்பிட்டு பணத்தை கரைத்து விட்டாள். அதற்கு மறுநாள், பென்சிலை தொலைத்த குழந்தையின் பையிலே பென்சில் இருந்திருக்கிறது. பென்சிலை திரும்ப வந்து கொடுத்து, என் பணத்தை கொடு என்று கேட்டிருக்கிறாள். அந்த குழந்தையிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கும் பொருட்டு, வீட்டிற்கு வந்து “25 ரூபாய் கொடுங்க” என்று கேட்டு அழுதாள், எதற்கு என்று கேட்க போய் தான் எங்களுக்கே விஷயமே தெரிந்தது. பணம் குழந்தைகளை எப்படியெல்லாம் Corrupt செய்ய வைக்கிறது, என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

ஒரு காலத்தில் கடன் வாங்குவதற்கே மக்கள் மிகுந்த கூச்சம் கொண்டனர். திருக்குறளில் பக்கம் பக்கமாய், கடன் வாங்குவது எவ்வளவு கேவலமானது என்று வரிந்து கட்டி பாடுகிறார் திருவள்ளுவர். கம்பன் கூட கலங்கி நிற்பதற்கு உவமையாய், “கடன்பட்டாற் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்” என்று ஒரு இடத்தில் பாடுகிறார். ஆனால் இப்போது கடன் வாங்குவது, கடனை தராமல் இழுத்தடிப்பதெல்லாம் ஃபேஷன் ஆகி விட்டது. எல்லோரும் கடன் வாங்குகிறார்கள், எல்லோருமே கடன் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள், இவ்வளவு ஏன் மாநிலங்களும் தேசங்களுமே கடன் வாங்குகிறது, நாமும் கடன் வாங்கி, கடன் கொடுத்தவனை கலங்கடித்தால் என்ன தவறு என்ற மனநிலைக்கு அனைவரும் வந்தாயிற்று, இப்போது கம்பன் இருந்திருந்தால், கடன் கொடுத்தாற் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று தான் எழுதுவார் என அவதானிக்கிறேன்.

சமீபமாக ‘நேரம்’ படம் பார்த்தேன், ஓரளவு விறுவிறுப்பான கதைக்களம் இருக்கிறதே தவிர படத்தில் ஒன்றும் இல்லை. வட்டி ராஜா என்பவனிடம், நிறைய பேர் கடன் வாங்கியிருப்பார்கள், கொடுக்க முடியாமல் எல்லோரும் திணறுவார்கள். வட்டி ராஜாவும் எல்லோருக்கும் நெருக்கடி கொடுத்து கொண்டே இருப்பான். பணம் இல்லாதவர்கள் வட்டி ராஜாவை கண்டு ஓடி ஒளிந்து கொண்டு இருப்பார்கள். ஒரு கட்டத்தில், வட்டி ராஜா ஒரு விபத்தில் இறந்து விடுவான், அதன் பொருட்டு கடன் வாங்கியவர்கள் எல்லாம், அவனது இறப்பை கொண்டாடுவதோடு பணம் நிறைவடைகிறது. இது ஒரு அயோக்கியத்தனமான கதையாய் இருந்தாலும், இன்னொரு கோணத்தில், இது தானே நிதர்ஸனம் என்று ஏற்று கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஒரு காலத்தில், கடன் கொடுத்தவர் இறந்து விட்டாலும் கூட, கடன் வாங்கியவர் அந்த பணத்தை அவரின் குடும்பத்திடமாவது ஒப்படைத்து விடுவார்கள். அதெல்லாம் எண்ணி, இப்போது பெருமூச்சு விட வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம்.

என்னுடைய தோழி அவரது பள்ளி வாழ்க்கையை பற்றி பேசும் போது ஒரு விஷயத்தை ரொம்பவும் காட்டமாக பகிர்ந்தார். அதாவது, அவர் கேரளாவில் படிக்கும் போது, காலை நேரம் இடைவேளையில் அவர் வகுப்பு பையன்கள் எல்லாம் உடன் படிக்கும் மாணவ மாணவியரின் சாப்பாட்டு பாக்ஸை பிடுங்கி சாப்பிடுவார்களாம். அவர்கள் யாரும் மதிய சாப்பாடு எடுத்து வரமாட்டார்கள். காலையில் சாப்பிடாமல் வந்து விட்டேன், கொஞ்சமாக சாப்பிட்டு கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி தான் டிபன் பாக்ஸை வாங்குவார்கள், ஆனாலும் முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு தான் கேரியரை தருவார்கள். சில சமயம், கொஞ்சமாக சாப்பிட்டு மிச்சத்தை கொடுத்தாலும், அதை சாப்பிடவே மனம் வராது. மதிய வேளையில், வேறு யாரிடமாவது பகிர்ந்து சாப்பிட வேண்டியதாய் போய் விடும், இல்லையேல் காசு கொடுத்து கேண்டீன் சாப்பாடு சாப்பிட வேண்டியதாய் போய்விடும் அது நல்லாவும் இருக்காது என்று தன் பழைய நினைவுகளை பகிர்ந்தார். நீங்கள் ஏன் கொடுக்கிறீர்கள், கொடுக்காமல் இருந்து விடலாமே என்று கேட்டேன், ஒருவன் பசிக்குது என்று வயிற்றை தடவி கேட்கும் போது என்ன தான் செய்ய முடியும், அப்படியே கொடுக்காமல் விட்டால் பசிக்கு சாப்பாடு கூட கொடுக்காத கல்நெஞ்சக்காரி என்று ஏளனம் செய்வார்கள், அதை தாங்கி கொள்வதற்கு பதிலாக, மாலை வீடு போகும் வரை பசியாகவே இருந்து கொள்ளலாம், அதுவே சற்று தேவலாம் என பெருமினார்.

“நல்ஆறும் எனினும் கொளல் தீது”, அதாவது ஒரு பொருளை வாங்கினால் வீட்டிற்கு நல்லது என்றாலும், ஒரு பொருளை ஒருவரிடமிருந்து வாங்குவது என்பது தீது. ஆனால் ஒருவரிடம் தன் வறுமையை, கையறு நிலையை காட்டி பணம் வாங்குவது வள்ளுவரின் கூற்று படி இழிவான ஒன்றாகும். முன்பு போல், இப்போது கொடையாளிகள் என்பதால், இன்றைய காலகட்டத்தில் கடன் என்பதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது. முண்ணனி வங்கிகளே “லோன் மேளா” என்று திருவிழா கொண்டாடி, கடன் கொடுக்கிறார்கள். கடன் வாங்குவது இழிவானது என்ற கூற்றையெல்லாம் மலையேற்றிய நம்மவர்கள் சீக்கரமே, வாங்கிய கடனை கொடுக்காமல் இருப்பதும் இழிதானது என்ற கூற்றியெல்லாம் மலையேற்றி விடுவார்கள் என நம்பலாம்.

நான் கல்லூரி படித்த சமயத்தில், என்னிடம் என் நண்பர் ஒருவர் கடனாக என் pen driveஐ வாங்கி சென்றிருந்தார். அப்போதெல்லாம், நான் என் வகுப்பு நபர்களுடன், வெளியில் வீடு எடுத்து தங்கி இருந்தேன். நான் இல்லாத நேரத்தில் வந்து, அவர் வாங்கிய pen driveஐ என் ரூம் மேட்களிடம் கொடுத்து விட்டு சென்று இருக்கிறார். அதன் பின், என் ரூமில் இருக்கும் ப்ரேம் என்றவன், அந்த pen driveஐ தன் சொந்த வேலைக்கு எடுத்து சென்று, தொலைத்து விட்டார். நான் வீட்டிற்கு திரும்பிய பின்னரும், இந்த விஷயத்தை யாரும் என்னிடம் சொல்லவில்லை. பென் ட்ரைவ் வாங்கிய நபர், எதற்கோ போன் செய்த போது, ரூம் மேட்களிடம் பென் ட்ரைவ் கொடுத்த விஷயத்தை என்னிடம் சொன்னார். அதன் பின் விசாரிக்கும் போது தான் விஷயத்தை ப்ரேம் ஒத்து கொண்டான். சீக்கரமே வேறு ஒரு பென் ட்ரைவ் அல்லது பணத்தை தந்து விடுவதாக வாக்குறுதி அளித்தான். ஊருக்கு போவான், வருவான், சினிமாவிற்கு போவான், ஹோட்டலில் சாப்பிடுவான் ஆனால் பென் ட்ரைவ் பற்றி கேட்டால் மட்டும், தன்னிடம் பணமே இல்லை, நானே பல இடங்களில் கடன் வாங்கியிருக்கிறேன், அதையெல்லாம் கொடுக்க முடியாமல் திணறி கொண்டிருப்பதாய் ஒவ்வொரு முறையும் கதை சொல்வான். காலேஜ் முடியும் தருவாயில் கூட அவன் பணம் கொடுப்பது குறித்து எந்த அடையாளமும் தெரியவில்லை. நான் ஒரு விஷயத்தில், மிக தெளிவாக இருந்தேன், பணம் போனால் பரவாயில்லை, ஏமாற கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். அதனால், ரூமை vacate செய்ய வரும் போது அவனது பெற்றோரிடம் இது குறித்து பேசி கொள்ளலாம் என விட்டுவிட்டேன். அப்படி, நான் அவனது பெற்றோரிடத்து பேச செல்கையில், பல கண்ணீர் கதைகளை பேசி, என் காலில் விழுந்து என்னை தடுத்தான். ஊருக்கு போனவுடன் போட்டு விடுவதாக மறுபடியும் தேய்ந்து போன அதே உப்பு சப்பில்லாத வாக்குறுதியினையே அளித்தான். இந்த சம்பவத்தின் போது, உடன் இருக்கும் நண்பர்கள் என்னை ஏதோ வில்லன் தோரணையில் பார்க்க ஆரம்பித்து விட்டனர். விடேன் டா, அவன் தான் பணத்தை கொடுத்திடறேன்னு சொல்றான் இல்லை, ஏன் இப்படி கறாரா இருக்க என்று அவனுக்கு சப்போர்ட் செய்தனர். இதே தான், இவன் ஆறு மாதங்களாக சொல்லி இழுத்தடித்து கொண்டிருக்கிறான் என்று எடுத்து சொல்லியும் பலனில்லை. அவன் அழுததும், என் காலை பிடித்ததும் அவனுக்கு சாதகமாய் வேலை செய்தது. இறுதியில் விட்டு கொடுக்க வேண்டியதாய் போயிற்று. ஊருக்கு போனவுடன் போன் செய்தேன். முதல் 3-4 முறை பேசினான். அதன்பின் நம்பர் மாற்றி விட்டான். ரொம்ப நாள் கழித்து, வேறு ஒருவரின் மூலம் ப்ரேமின் நம்பர் கிடைத்தது. போன் செய்து பேசினால், நான் தான் அந்த பணத்தை அப்பவே கொடுத்திட்டேனே என்று சாதித்தான். பணம் கொடுக்கப்படவில்லை என்று அவனிடம் சொல்லி புரிய வைப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது. எல்லாம் முடித்து அவன் சொன்னது இது தான், பணம் கொடுத்துடேன்னு தான் நினைக்கிறேன், அப்படியே இருந்தாலும் மீதி 100-200 தான் கொடுக்கணும்னு நினைக்கிறேன், உன் அக்கவுன்ட் நம்பர் அனுப்பி விடு போட்டுடறேன் என்று சொல்லி, தனக்கு வேலையிருப்பதாக போனை துண்டித்து விட்டான். தொகை என்னமோ சிறிது தான், ஆனால் இவ்வளவு சிறிய தொகைக்கே மனிதர்கள் காலையும் பிடிக்கிறார்கள், நிறமும் மாறுகிறார்கள் என்று தெரிந்த பின் யாருக்கும் பணம் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் 100 அல்லது 200 கொடுப்பதோடு சரி…

அலுவலகங்களில் உடன் பணி புரியும் நபர்கள், வேற வகையில் வில்லங்கம் பிடித்தவர்கள். 10 தேதிக்குள் வந்து கடன் கேட்பார்கள், இரண்டு நாளில் தந்துடுவேன் என்று சொல்லி தான் கடன் கேட்பார்கள். ஆனால் அவர் சொன்ன இரண்டு நாள் மட்டும் வரவே வராது, கேட்கும் போதெல்லாம் அங்க பணம் வரவேண்டி இருக்கு, இங்க பணம் வர வேண்டி இருக்கு என்று இழுத்தடிப்பார்கள். நாமும் ஏன் உடன் பணிபுரிபவர்களிடம், பணத்தை கேட்டு கெட்ட பெயரை வாங்க வேண்டும் என்று கேட்காமல் இருக்க பார்ப்போம். 20 தேதி வரைக்கும் தான் நம்மாலும், மீதி சம்பளத்தை வைத்து சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கும். 20 தேதிக்கு மேல் தைரியம் வந்தவாறு, பணத்தை கேட்டால் கூலாக சம்பளம் வந்தா தான் சார் பணம் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிடுவார்கள். கடன் கொடுத்த பாவத்துக்கு, மீதி 10 தேதியை சமாளிக்க நாம் கடன் வாங்கி ஓட்ட வேண்டி இருக்கும்… 20 தேதிக்கு மேல் யாரிடம் போய் கடன் கேட்க…

எல்லோரையும் விட, கடன்காரர்களால் மிகவும் பாதிக்கப்படுவது, மொத்த விற்பனையாளர்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களுக்கு முன் தினம் சில்லறை வியாபாரிகள் சரக்கு எல்லாம் போட்டு விட்டு, பில் கையில் கொடுத்ததற்கு பிறகு, குறிச்சி வெச்சிக்கோங்க எசமான், பண்டிகை முடிஞ்சா தான் காசு என்று பல்லை இளிப்பார்கள். வரும் சில்லறை வியாபாரிகளில் 20 பேராவது, பல் இளிப்பவர்களாவே இருப்பார்கள். சரக்கு இல்லை என்று சொன்னால், சரக்கு வேணாம் என்று போய் விடுவார்கள். பண்டிகை முடிந்தால் கடை பக்கமே வரமாட்டார்கள். சரக்கை கொடுத்தவன் அந்த பண்டிகைக்கு பாடம் கற்றாலும், அடுத்த பண்டிகையின் போது அதை மறந்து விடுவான், அதுவே வியாபாரத்தின் சாபக்கேடு…

ஒரு முறை என் உறவுக்கார பையன் ஒருவன், தன் ரூம் மேட் சங்கர் என்றவன் மிக அவசரமான ஓர் காரணத்திற்காக கேட்டானே என்று 8000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்தான். அப்போது அவன் படித்து கொண்டிருந்ததால், அந்த 8000 ரூபாய் பணம் என்பது, அவன் சக்திக்கு பெரிய பணம். வாங்கிய பணம் ஒரு வருடம் ஆகியும் திரும்ப வரவில்லை. கேட்கும் போதெல்லாம் வீட்டில் கஷ்டம் என்ற பதிலையே டெம்ப்ளேட்டாக சொன்னான். பொறுத்து பொறுத்து பார்த்து, அவனது லேப் டாப்பை அடமானமாக எடுத்து வைத்து கொண்டான். பணத்தை கொடுத்து விட்டு, லேப் டாப்பை வாங்கி கொள் என்று சொல்லி விட்டான். அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்து கொண்டான். லேப் டாப் அடமானத்தில் இருந்த போதும், அவ்வப்போது வாங்கி வாங்கி உபயோகித்து கொண்டிருந்தான். ஒரு நாள் இவன் இல்லாத நேரம் பார்த்து, ரூமில் இருந்த லேப் டாப்பை அவன் வீட்டிற்கு எடுத்து சென்று விட்டான். போன் செய்து கேட்டதற்கு, லேப் டாப்பில் கொஞ்சம் வேலை இருக்கிறது, அதான் எடுத்து வந்தேன், திரும்ப வரும் போது எடுத்து வந்து விடுவேன் என்று உறுதியளித்தான். ஆனால் திரும்ப வரும் போது, வெறும் கையோடு வந்தான், பணத்தையும் எடுத்து வரவில்லை, லேப்டாப்பையும் எடுத்து வரவில்லை. கேட்டதற்கு நண்பன் ஒருவன் கேட்டதாகவும், இவன் கொடுத்து விட்டதாகவும் சொன்னான்.

பொறுமையிழந்து என் உறவுக்கார பையன், அவனுக்கு தெரிந்த ஓர் சீனியரிடம் போன் பண்ணி விஷயத்தை சொன்னான். சங்கர் பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றுவதாகவும், அதற்காக தான் லேப் டாப்பை அடமானத்தில் எடுத்து கொண்டதாகவும், தான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவன் அதை ஊருக்கு எடுத்து சென்றதாகவும் முறையிட்டான். எல்லாவற்றையும் கேட்டு, சீனியர் நீங்கள் இருவரில் யார் பொய் சொல்கிறீர்கள், இருவரும் நேரில் வாருங்கள் என்று சொன்னார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, சங்கர் என்னிடம் சொல்லும் போது, நீ தான் பணம் வாங்கியதாகவும், அதற்காக உன் லேப் டாப்பை அவன் பறிமுதல் செய்துள்ளதாகவும், நான் சொல்லும் வரை அந்த லேப் டாப்பை, உங்கள் ரூமிலே வைத்து கொள்ளுங்கள் என்று எங்கள் ரூமில் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான் என்று சொன்னார். இவனுக்கே தலையே சுற்றி விட்டது, கொடுத்த கடனை கொடுக்காமல் இழுத்தடிப்பதும் இல்லாமல், தன்னையே கடன்காரன் என்று மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறான் என்று கேட்டு கோபம் தலைக்கேறி பொறுமையிழந்து அடிக்க வேண்டும் என முடிவு செய்தான். சீனியரே ஒரு யோசனை சொன்னார், இன்று சங்கரை கூப்பிட்டு என் ரூமில் வைத்திருக்கிறேன், நீ நான் சொல்லும் போது வா, என்ன ஏது என்று கேட்கலாம், அவன் சொல்லும் பதிலில் திருப்தி இல்லையென்றால் அடி பொளந்து விடலாம் என்று முடிவு செய்தனர். எதிர்பார்த்தது போலவே, திருப்தியான பதில் எதுவும் அவனிடத்து இருந்து வரவில்லை, கேபிள் ஒயரை வைத்து விளாசு விளாசு என்று விளாசியிருக்கிறார்கள். அவ்வளவு அடித்தும், அவன் செய்தது தப்பு தான் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இறுதியாக பணத்தை ஒரு வாரத்திற்குள் தர வேண்டும் என்றும், இல்லையேல் உன் வீட்டிற்கு வந்து உட்கார்ந்து விடுவோம், அதன்பிறகு நீ பணம் கொடுத்தால் தான் போவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவனும் பணத்தை ஒரு வாரத்தில் பணம் ஏற்பாடு செய்து விடுவதாக சொன்னான்.

சொன்னதோடு சரி, திரும்பவும் அது பற்றி பேச்சே காணோம். ஒரு நாள் திரும்பவும் அது பற்றி கேட்டதற்கு, இன்று மாலை கொடுத்து விடுவதாக சொன்னவன், அன்று மாலை அவனது ATM card கொடுத்து, பின் நம்பர் கொடுத்து எடுத்து கொள்ள சொன்னான். போய் கார்டை சொருகினால், அந்த அக்கவுண்டில் இருந்தது வெறும் 46 ரூபாய். கடுப்போடு ரூமிற்கு திரும்பினால், பணம் எடுத்துக்கிட்டீங்களா என்று கேட்கிறான்… பணம் ஏதும் அதில் இல்லை, நீ ஒழுங்காக கையிலே கொடுத்து விடு என்று சொல்லியிருக்கிறான். இதை எதிர்பார்த்து, அவனும் பணத்தை வாங்கி விட்டு பிரச்சனை செய்கிறார்கள் என்று தாம் தூம் என்று குதித்தான். பணம் போட்டவர் யார் என்று கேட்டதற்கு, தன் அம்மா தான் போட்டதாகவும் வேண்டுமானால் கேட்டு பாருங்கள் என்று சொல்ல, அவரது அம்மாவுக்கு போன் அடித்தால், தன் பையன் அக்கவுண்டுக்கு பணம் போட்டு விட்டதாக சொன்னார்கள். ஒரு வேளை இவன் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டானா, இல்லை இவரது அம்மா பொய் சொல்கிறாரா என்று எதுவும் புரியவில்லை.

சங்கரின் அம்மாவிற்கே போன் செய்து, பேங்க் chalanல் இருக்கும் நம்பரை சொல்ல சொன்னான். அவரும் பார்த்து சொல்வதாய் சொல்லி, ஒரு நம்பரை தந்தார். அது பார்ப்பதற்கு பேங்க் chalan no போல தான் இருந்தது, என் உறவுக்கார பையனும், அவனது நண்பர்களும் பேங்க் பேங்க்காக ஏறி இறங்கி பார்த்து இருக்கிறார்கள், பல கஸ்டமர் கேர் அலுவலர்களிடம் பேசியும் ஒன்றும் தகவல் பெற முடியவில்லை. ஒரு கட்டத்தில் சங்கரின் அம்மா மேல் சந்தேகங்கள் எழ, அவனது அம்மாவிற்கு போன் அடித்து பேசினார்கள். பேங்க் மேனேஜர்க்கு conference போடுகிறேன் என்று சொல்லி, தனக்கு தெரிந்த பையனுக்கு போன் செய்து, பேங்க் மேனேஜர் போல் பேச சொல்லி, conference போட்டான். பேங்க் மேனேஜர் போல் பேசியவனும், தன் பங்குக்கு ரெண்டு ஏறு ஏறி, பணம் போடாமலே போட்டேன் என்று சொல்லி, பேங்க்குக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்கிறார்களா என்று மிரட்டியவுடன், உண்மையை ஒத்து கொண்டார். தன் பையன் தான் அது போல் சொல்ல சொன்னதாகவும், அதனால் தான் அது போல் செய்ய வேண்டியதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டார். பணம் எப்போது வரும் என்று கேட்டனர். 15 நாள் டைம் கேட்டார். பத்து நாளிலே கொடுத்து விட்டார். அசல் மட்டும் கொடுத்தார், வட்டி ஏதும் பேசவில்லை என்றாலும், இந்த பணம் மூன்று நாட்களில் கொடுத்து விடுவதாக சொல்லி வாங்கியது ,ஒரு வருடம் கழித்து கொடுத்தால் என்ன அர்த்தம், 3 வட்டி போட்டாவது கொடுங்கள் என்று கேட்டிருக்கிறான். அதான் என் பையனை அடிச்சிட்டீங்கள்ல, அப்பறம் ஏன் வட்டி கேட்கறீங்க, வட்டிக்கும், என் பையனை அடிச்சதுக்கும் சரியாப் போய்டுச்சு என்று சொல்லி போனை துண்டித்து விட்டார். கடைசியில் மறுபடியும் அவரது பையனின், செல்போனை பதுக்கி வைத்து தான் அந்த வட்டி பணத்தை வாங்கினார்கள் என்பது தனி பின்கதை.

இவர்கள் எல்லாரையும் விட, மிக மோசமான கடன்காரர்கள், அன்றாடம் வீட்டு பொருட்களை கடன் வாங்குபவர்கள். வீட்டு பாத்திரங்கள் வாங்கி செல்வார்கள், மொபைல் சார்ஜார் வாங்கி செல்வார்கள், பேப்பர் வாங்கி செல்வார்கள் எதுவும் திரும்பி வராது, நாமாய் போய் கேட்டால் தான் கிடைக்கும். இது போல் சிறிய பொருட்களையெல்லாம் போய் கேட்கவும் வேண்டுமா என்று சும்மா இருந்து விடுவோம், அது போல் நாம் தயக்கம் காட்டும் இடத்தை தான், கடன் வாங்குபவர்களுக்கு நாம் கொடுக்கும் ஸ்பேஸாக அமைகிறது.

இது ஆபிஸ்களிலும் நடக்கும். கடன் வாங்கி சென்ற whitener, stapler, a4 sheet, carbon paper எல்லாம் ஒரு நாளும் திரும்பி வந்ததாய் சரித்தரம் இல்லை. இதனாலே, எது கேட்டாலும் இல்லை என்பதையே அனிச்சையாக சொல்ல பழகி விட்டனர், நம் ஆபிஸ் வேலையாட்கள்.

வண்டியை கடன் வாங்கி செல்பவர்களை தவிர்த்தல் என்பது ஓர் கலை, அதை மட்டும் வெற்றிகரமாக செய்து விட்டால், நம் வண்டி ஏழேழ் ஜென்மத்திற்கும் சுபிட்சமாக இருக்கும். வண்டியை கடன் கொடுத்து விட்டு, திரும்பி வரும் வரை திகலாக காத்திருக்கும் தருணங்கள், எத்தனை பேய் படம் பார்த்தாலும் வராது. ஒரு முறை, என் உடன் பணிபுரிபவர் அவசர வேலையாக Xerox எடுக்க செல்ல வேண்டும் என்று என் வண்டியை கடன் கேட்டார். இல்லை என்று சொல்ல முடியாத ஓர் நிலை, எனக்கே புரிகிறது, அவரது வேலை கொஞ்சம் அவசர வேலையென்று, வண்டியை அடுத்தவருக்கு தருவதில்லை என சொல்லி தவிர்க்க முடியாது. 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் போகிறது, பஸ்ஸில் போ என்று சொல்லவும் முடியாது, அப்படி ஏதும் சொன்னால் வண்டி இருக்கும் திமிர்க்காரன் ஆகி விடுவேன். வேறு ஒன்றும் சொல்ல முடியாமல், வண்டியை கொடுத்து அனுப்பினேன்.

அவர் போக இருப்பது வெறும் 2 கிமீ, போய் வர முழுதாக 10 நிமிடம் கூட ஆகாது, எவ்வளவு லேட்டானாலும் அரை மணி நேரத்தில் வந்து விடலாம். அவ்வளவு பக்கத்தில் தான் ஜெராக்ஸ் கடை இருக்கிறது. ஆனால் 1 மணி நேரம் ஆகியும் ஆளை காணவில்லை. எந்த போன் தகவலும் இல்லை. எதுவும் கேட்க வேண்டாமே என்று அமைதி காத்தேன். அந்த நேரம் பார்த்து, என் உயர் அதிகாரி ஒருவர் அவசரமாக வர சொல்லி கால் செய்தார். அவர் அலுவலகம் போக கண்டிப்பாக வண்டி வேண்டும், 1 கிமீக்கும் மேலே போக வேண்டும். நடந்து செல்வதெல்லாம் முடியாதது, அது தேவையும் இல்லாதது.

நண்பருக்கு போன் அடித்தேன். கால் வெயிட்டிங்கில் இருந்தது. 5 நிமிடம் பொறுத்து மறுபடியும் போன் அடித்தேன். மறுபடியும் கால் வெய்ட்டிங். இந்த முறை 2 நிமிடம் மட்டுமே வெயிட் செய்து மறுபடியும் போன் அடித்தேன். அதற்கு மேல் எனக்குள் இருக்கும் மிருகத்தை சங்கிலி போட்டு என்னால் அடக்க முடியவில்லை. தொடர்ந்து போன் அடித்தேன். எனக்கு என்ன பயமென்றால், எங்கே அவர் வண்டியை ஓட்ட தெரியாமல் ஓட்டி விபத்துக்குள்ளாகி விட்டாரோ என்று ஓர் பயம், அப்படி இல்லாவிட்டால் போலீஸில் ஏதும் மாட்டி கொண்டாரா என்று பீதியில் ஏதேதோ யோசித்தேன். போன இடத்தில் தாமதமாகி இருந்தால், போன் செய்திருக்கலாமே, ஏதும் விபத்தாகி விட்டதால் தான் நம் போனை எடுக்க தயங்குகிறாரோ என்று என் எண்ணங்கள் வேறு ஓர் விஸ்வரூபம் எடுத்தன. 20 முறைக்கு மேலும் கால் செய்த பின்னர், ஏதோ போனால் போகட்டும் என கால் அட்டென்ட் செய்தார். ரொம்பவும் கூலாக பேசினார், வந்த இடத்தில் ஜெராக்ஸ் மெஷின் வேலை செய்யவில்லையாம், அதனால் தான் வெயிட் செய்து கொண்டு இருப்பதாக சொன்னார். ஏன் எனக்கு சொல்லவில்லை, ஏன் கால் செய்த போதும் எடுக்கவில்லை என்று கேட்டதற்கு, முக்கியமான கால் பேசி கொண்டிருப்பதாக சொன்னார், உச்சக்கட்டமாக அப்பறம் பேசுவதாக சொல்லி போனை வேறு துண்டித்து விட்டார்.

விடாமல் மறுபடியும் கால் அடித்தேன். இந்த முறை அடுத்த முறையிலேயே எடுத்தார், வண்டி மிக அவசரமாக தேவை படுகிறது, ஜெராக்ஸ் பிறகு எடுத்து கொள்ளுங்கள் என்று கிட்டத்தட்ட மன்றாடினேன். ஓகே வர்றேன் என்று சொல்லி, இந்த முறையும் எந்த அறிவிப்பும் இல்லாமல் தொடர்பை துண்டித்து விட்டார். இந்த முறை 15 நிமிடம் ஆகியும் ஆளை காணோம். எனக்கு அப்போது இருந்த சூழ்நிலையில், ஒன்று எனக்கு அழுகை வந்திருக்கும் அல்லது வெறி பிடித்திருக்கும். இத்தனைக்கும் அவர் பழகுவதற்கு மிகவும் மென்மையானவர், இவர் இப்படியெல்லாம் இழுத்தடித்து கதிகலங்க வைப்பார் என் கனவிலும் கூட நான் நினைத்து பார்த்ததில்லை. மறுபடியும் போன் அடித்தேன், வெயிட்டிங்கில் இருந்தது, அட்டென்ட் செய்தார், வந்து கொண்டிருப்பதாக சொன்னார். போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறார் போலும், பாவம் உண்மையிலே முக்கியமான கால் தான் போல இருக்கிறது என நினைத்து கொண்டேன்.

அவர் வந்த பின், என்ன ஆச்சு, ஏது ஆச்சு அன்று சம்பிரதாயமாக எதுவும் கேட்கவில்லை. போனில் யார், அப்படி என்ன முக்கியமான பிரச்சனை என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன். பொதுவாக இது போல் மற்றவர்களின் ப்ரைவசியில் எல்லாம் நான் தலையிடமாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஆனால், அந்த தருணத்தில் என்னால் அதை கேட்காமல் இருக்க முடியவில்லை. அவரது தோழி ஒருவர், ரொம்ப நாளாக யாரையோ காதலித்து கொண்டிருக்கிறாராம், அவரது தோழி வீட்டில் கல்யாணம் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் அவரது காதலர் இது பற்றி எந்த பிரஞ்சையும் இல்லாமல், இந்த விஷயத்தில் பொறுப்பற்று இருக்கிறாராம். அதனால் அவரது தோழி ரொம்பவும் கலக்காமாக இருக்கிறாராம், அதனால் அவர் ஆறுதல் சொன்னாராம். எனக்கு கெட்ட கோபம் வந்தது, அதை வண்டியை கொடுத்து விட்டு பேச வேண்டியது தானே என்று கேட்க தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. ஏனென்றால் மிகவும் நெருங்கிய நண்பர் அவர். வண்டியை எடுத்து கொண்டு, எதுவும் பேசாமல் வந்து விட்டேன்.

என் நண்பர் ஒருவரின் பெயர் ப்ரவின் வின், அவருக்கு விவேக் என்பவர் மூலம் ஏழரை வந்து வாய்த்தது. ப்ரவினுக்கு வரவேண்டிய பணம் ரூ.5000 ஒருவரிடம் இருந்தது. அந்த பணத்தை நேரில் வரும் போது வாங்கி கொள்ளலாம் என ப்ரவின் காத்திருக்க, இதற்கிடையில் விவேக்கிற்கு அவசரமாக ஆயிர கணக்கில் பணம் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் அந்த பணத்தை தான் ப்ரவினிடம் தந்து விடுவதாக வாங்கி, விவேக் அந்த பணத்தின் உதவி கொண்டு, தன் சொந்த வேலைகளை முடித்து கொண்டார். பிறகு பணம் கிடைக்கும் போது தந்து விடலாம் என்ற எண்ணத்தில் வாங்கினாரோ, என்னவோ, பணம் வாங்கிய விஷயத்தை கூட ப்ரவினிடம் சொல்லவில்லை. பணம் கொடுத்த நபரும் சொல்லவில்லை. ப்ரவின் எதேச்சையாக, பணம் குறித்து அந்த நபரிடம் கேட்க, அவர் தான் பணத்தை விவேக்கிடம் கொடுத்து விட்டதாக சொல்லி விட்டார். யாரை கேட்டு கொடுத்தீர்கள் என்று இவன் என்ன எகிறியும் பிரயோஜனப் படவில்லை. அவன் உன்னிடம் அக்கவுண்ட்டில் பணம் போட்டு விடுகிறேன் என்று சொல்லி தான் வாங்கி போனான். அவன் உன் நண்பன் என்பதால் தான் கொடுத்தேன் என்பன உப்பு சப்பில்லாத விவாதங்களை முன் வைத்தார். இவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்பதால் விவேக்கிற்கு போன் அடித்து கேட்டால், பணம் தன்னிடம் தான் இருக்கிறது, அக்கவுண்ட்டில் போட்டு விடுவதாக கூறி, அக்கவுண்ட் தகவல்களை வாங்கி கொண்டார்.

நம் ப்ரவினும் நாளொரு, பொழுதொருமாய் பணம் வந்ததா, பணம் வந்ததா என்று அடிக்கடி atm-ல் பணம் செக் செய்து பார்த்திருக்கிறார். பணம் ஏதும் வராததால் போன் அடித்து கேட்டால், சாப்பாட்டுக்கே பணம் இல்லாததால் உன் பணத்தை எடுத்து கொண்டேன், சீக்கரமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என மன்றாடினார். பிரவினுக்கு மிகவும் கடுப்பு தான். ஒன்றும் செய்ய இயலாததால், அவன் அமைதி காக்க வேண்டியதாய் போயிற்று.

பணத்தை எப்போது கேட்டாலும், ரெண்டு வாரம் டைம் வேண்டும், 10 நாள் டைம் வேண்டும் என்று கேட்டு கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், 2000 ரூபாய் மட்டும் fund transfer செய்தான். பணத்தை மொத்தமாக வாங்கி கொண்டு, ஏதோ நாய்க்குட்டிக்கு போடுவது போல் பிஸ்கட் பிஸ்கட்டாக போடுவது போல் ஓர் அயோக்யத்தனம் ஏதுமில்லை என்பது என் கருத்து, இத்தனைக்கும் இது ஒன்றும் பெரிய பணமும் இல்லை, விவேக் சம்பாதிப்பது 18000+ சம்பளம், அதில் ஒரு மாதத்தை இறுக்கி பிடித்தால் கூட தாரளமாக தந்து விடலாம். ஆனால் மனது வரவில்லை. 2000, 2000 ரூபாயாக தருகிறேன், ஒரேயடியாக தர முடியாது, அவ்வளவு வசதி இல்லை என்னிடத்தில் என்று கறார் காட்டினான். அதன் பிறகு, மாதம் ஒன்றாம் தேதி ஆகும் வரை கேட்க கூடாது, கேட்டால் துரை திட்டுவார், நம்மிடமே எதிர்கேள்வி கேட்பார், ஏன்டா, சம்பளம் பிறந்தா தான் டா, காசு கொடுக்க முடியும், நான் என்ன நோட்டா அச்சு அடிக்கிறேன், ஏன்டா உசுர வாங்குற… இது போல் பதில்களையெல்லாம் ப்ரவின் எதிர்கொண்டார்.

ஒரு மாதம் 2000 வந்ததோடு சரி, அடுத்த மாதம் பணமே வரவில்லை. போன் செய்தால் எடுப்பதில்லை, சில சமயம் கட் செய்வதும் உண்டு, சில சமயம் ஸ்விட்ச் ஆஃபும் உண்டு. தூரத்தில் இருப்பதால் இருக்கும் பயன்களை நல்லமுறையில் உபயோகித்து கொண்டார். விவேக்கின் நிலை ஏழ்மை நிச்சயம் கிடையாது, ஆனால் படோடபமான வாழ்க்கை வாழ்பவன். மணிக்கணக்கில் போன் பேசுவான், உயர் விலையிலான HTC phone வைத்திருப்பான், இன்டர்நெட் பில் கட்டி நாள் முழுதும் ஃபேஸ்புக்கில் கிடப்பான், ஆனால் பணம் கேட்டால் மட்டும், மச்சி இங்க சாப்பாட்டுக்கே காசு இல்லை டா…. நீ வேற ஏன்டா… புரிஞ்சிக்க மச்சி என்று சொல்வான்.

கொஞ்ச நாட்கள், இந்த புரிஞ்சிக்க மச்சி போன்ற வாசகங்களுக்கெல்லாம் செவி சாய்த்து கொண்டிருந்த ப்ரவின், ஒரு கட்டத்திற்கு மேல் காட்டம் காட்டினான். காட்டம் காட்டியதன் விளைவாக, நம்பரை மாற்றி விட்டான், புது நம்பரை தரவும் இல்லை. Whatsapp, facebook போன்ற பொதுவெளியில் தொடர்பு கொண்டால், பதில் அளிப்பதில்லை. திடீரென்று ஒரு நாள், 1000 ரூபாயை ட்ரான்ஸ்ஃபர் செய்து, போன் செய்து அதை சொல்லி விட்டு வைத்தான். அந்த நம்பருக்கு திரும்ப அழைத்தால் பதில் ஒன்றுமில்லை.

ஒரு முறை அந்த நம்பருக்கு தொடர்ந்து அழைக்கையில், போனை எடுத்து காட்டு கத்து கத்தி, இந்த பணத்தை கொடுக்கலைன்னா நீ என்ன செத்தா போய்டுவ, என்று கேட்டிருக்கிறான். ஆனால் உண்மையில், பிரவினின் நிலை அந்த காலக்கட்டத்தில் அப்படி தான் இருந்தது, அந்த பணம் கிடைத்தால் மிக்க உதவியாக இருக்குமே என்று கேட்டதன் விளைவாய், விவேக் பிரயோகித்த வார்த்தை, மரணத்திலும் மறக்க முடியாத ஒன்று. ப்ரவினின் பணம் கொஞ்சம் அங்கே சிக்கியிருக்கும் பாவத்தினால் மட்டுமே, இது போல் பேச்சுக்களையெல்லாம் கேட்க வேண்டிய நிலை.

அதன் பின் ஓர் 1000 ரூபாய் வந்தது. அவ்வளவு தான், அதற்கு பிறகு ஒரு தகவலும் காணோம். இதை எழுதி கொண்டிருக்கும் இந்த நாள் வரை, அந்த 5000 ரூபாய் பணம் வாங்கி ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிறது. மாதம் 1000 ரூபாய் என்ற வீதத்தில் கொடுத்திருந்தால் கூட 5 மாதங்களில் கொடுத்திருக்கலாம், ஆனால் மனம் இல்லை. என்னை பொறுத்தவரை இது போல் கடனை கொடுக்காமல் இழுத்தடிக்கும், நயவஞ்சகர்கள் எல்லாம் எந்த தண்டனைக்குமே தகுதி பெறாதவர்கள். மனிதனாக வாழவே தகுதியில்லாதவர்கள், ஆனால் இவர்களிடையே தான் நாம் நம் வாழ்க்கையை நடத்த வேண்டியதாய் உள்ளது. நமக்கு தான் உண்மையில் இது தண்டனையாய் உள்ளது… வேறு என்ன சொல்ல…


இவ்வளவு சொன்னதன் பிறகும், இந்த கட்டுரைக்கு நீதி என்று தனியாக ஒரு பஞ்ச் லைன் போட தேவையில்லை என நினைக்கிறேன்….

Thursday, 1 August 2013

இணையத்தில் உலவும் ஆபாச விளம்பரங்கள்



முன் குறிப்பு : 21 வயதினருக்கு மேலோனவர்கள் மட்டும் படிக்க…. Has sex contented writings

நேற்று ஓர் சமூக வலைத்தளத்தில் ஓர் செக்ஸ் போஸ்டரை கண்டவுடன், எனக்கு உண்மையில் ஆச்சர்யம் ஆகி போனது, இது போல் போஸ்டர்கள் எல்லாம் ஏன் சமூக வலைதளத்தில் இருக்கிறது என்பதை குறிப்பிட்டு நேற்று ஓர் பதிவு போட்டிருந்தேன். அதை பலரும் கண்டு கொள்ளவில்லை, சிலர் மட்டும், என்னை அது போல் போஸ்டர்களை கண்டு கொள்ளவேண்டாம் என்ற தோரணையில் எனக்கு அறிவுரை புகட்டினார்கள். ஒரே ஒருவர் மட்டும், அந்த பதிவை கண்டு, அது குறித்து வருத்தப்பட்டதாக அறிந்தேன். மேலும் அவர் தகுந்த இடத்தில் அது குறித்து பேசியதாகவும் அறிந்தேன். ஓர் ஆணாகிய எனக்கு இருக்கும் தார்மீக கோபம் கூட, எப்படி அந்த சமூக வலைத்தளங்களை பார்க்கும் பெண்களுக்கு கூட இல்லாமல் போகிறது என்பது குறித்து வருத்தமடைந்தேன்..

நமக்கு ஏன் வம்பு, நாம் ஒருவர் சொல்லி என்ன ஆக போகிறது, சொன்னா மட்டும் திருந்திட போறாங்களாஎன்பதெல்லாம் நம் நாட்டில் உள்ள எல்லோரது எண்ணங்களிலும் ஆழ பதிந்து விட்டது. இந்த எண்ணங்களின் தாக்கம், நாளை அது நம்மையே பாதிக்கும் என்றாலும் கூட, அது குறித்து நாம் செயலாற்றுவதில்லை. சொல்ல போனால், அவலங்களை கண்டு கொள்ளாமல் இருக்க நம்மை நாமே பழக்கி கொண்டோம். இதனால், மிக எளிதில் தீர்வு காணக்கூடிய எத்தனையோ சிறிய விஷயங்களுக்கு கூட செயலாற்றாமல் முடங்கி நிற்கிறோம்இதை நாம் நமது வாழ்க்கை முறையாக மாற்றி கொண்டோம், நம் பிள்ளைகளுக்கும் இது போல் இருக்கவே வழிகாட்டுகிறோம்.

கலைஞர் டிவியில், மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டு வருகிறது. அடிப்படையில் இது ஓர் நடன நிகழ்ச்சி, டிவி நட்சத்திரங்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும். இது என்ன வகையிலான நியாயம் என்று தெரியவில்லை, ஆனால் நாம் அவர்களிடம் நியாயம் கேட்கும் பட்சத்தில், டிவி நட்சத்திரங்களை காட்டும் பட்சத்தில் தான், அதிக நபர்கள் பார்ப்பார்கள் என்று அவர்கள் பதில் அளிக்க கூடும் என நம்புகிறேன். அந்த வகையில், அங்கேயே அது பணத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்றும், தேர்ந்த நடன கலைஞர்களை தேர்ந்தெடுப்பது அவர்கள் நோக்கம் அல்ல, என்பதை புரிந்து கொள்ளலாம். அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன், எந்தெந்த வயதினர் இந்நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு எந்த வகையான எச்சரிக்கையும் நமக்கு அளிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், ஆணும் பெண்ணும் நடனமாடி கொண்டே இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டனர். இது போல் நிகழ்ச்சிகளை எப்படி குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை.

வேறொரு, மானாட மயிலாட நிகழ்ச்சியின் போது, நடன கலைஞர்கள் அணிந்து வந்த உடைகளில் பெண்களின் உடை மட்டும் மிகவும் இறுக்கமாகவும், ஆண்களின் உடை சாதரணமாகவும் இருந்தது. இது ஓர் அடல்ட்ஸ் ஷோவாக இருந்தாலும் கூட இது எப்பேற்பட்ட அநீதிஆண்களுக்கு மட்டும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஏன் இப்படி ஓர் ஏற்பாட்டை செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல், வழக்கமாக நடன கலைஞர்கள் ஆடும் போது, அதை பல்வேறு கேமராக்களில் பதிவு செய்வது வழக்கம். அந்த கேமராக்களில் பதிவு செய்த்தை தொகுத்து அதன் பின் தான் டிவியில் ஒளிபரப்புவார்கள். நான் பார்த்த ஷோவில், அந்த பெண் குனிந்து குனிந்து கவர்ச்சிகரமாய் ஆடியதை மட்டும், க்ளோஸ் ஷாட்டில் இருக்கும் கேமராவில் காண்பிக்கப்பட்டது. மற்ற படி, சாதாரணமாக ஆடிய போதெல்லாம் லாங் ஷாட்டில் காண்பிக்கப்பட்ட்து. இன்னொரு விஷயம், அவர், நடன அசைவுகளை மறந்து வெறுமனே சில இடங்களில் நின்றார், அப்போதெல்லாம் லாங் ஷாட்டில் இருந்து ஜூம் போய், பிற நடன கலைஞர்களை மட்டும் காட்டப்பட்டதுஆக நடனம் ஆடி திறமை காட்டுவதென்பதெல்லாம் வெறும் பிதற்றல்.

இது போல் அயோக்யத்தனமான ஷோ தான், சீசன் முடிந்து சீசனாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாரும் எதிர்ப்பு தெரிவித்த மாதிரியோ, தட்டிக்கேட்ட மாதிரியோ ஏதும் தெரியவில்லை. அரசியல் தலைவர் இராமதாஸ் மட்டும் ஒரு முறை அந்நிகழ்ச்சியை மானாட மார்பாட என்று நக்கலடித்ததாய், நண்பர் ஒருவர் சொன்னார். ஆனால் அவர் மீது பல்வேறு விமர்சங்கள் இருப்பதால், அவர் சொன்னதால் எந்த வகையான எழுச்சியும், மாற்றமும் வந்து விடவில்லை. இன்னமும் முகம் சுளிக்க வைக்கும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. எல்லோரும் அன்னப்பறவை அவதாரம் எடுத்து விட்டார்கள் போல் இருக்கிறது, கெட்டதை விடுத்து நல்லதை எடுத்து கொள்கிறார்களாம்.

இங்கு யாரும் செக்ஸிற்கோ, க்ளாமருக்கோ எதிரி இல்லை. அதற்கென ஓர் தளம் இருக்க வேண்டும் என்பதை தான் நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். இங்கே பலர், இது நமக்கு தொடர்பு இல்லாத ஓர் இடம் என்று இது போன்ற விஷயங்களுக்கு காது கொடுக்க மறுக்கிறார்கள். ஏனெனில் செக்ஸ் சார்ந்த பேச்சுக்கள் கேட்பது, பார்ப்பது, சொல்வது எல்லாமே இப்போது ஓர் தீட்டாகி விட்டது. இது பற்றி கொஞ்சம் கொச்சையாக/ வல்கராக/ அசிங்கமாக/ உபயோகமாக பேசலாம் என்று இருக்கிறேன். பசி எடுத்தால் சாப்பிடுவதில் இருக்கும் இயல்பும் எதார்த்தமும், காமம் வந்தால் தீர்த்து கொள்வதில் இருப்பதில்லை. குழந்தையாய் இருக்கும் போது குழந்தையாய் வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்றும், இளமையாய் இருக்கும் போது தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் பல மனநல மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அப்படி 100ல் ஒருவர் தவறும் பட்சத்தில், அது 100 பேருக்குமே பிரச்சனையையே கொடுக்கும்.

கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்கள்மனிதனும் மிருகமும்என்ற புத்தகத்தில் இது பற்றி விரிவாக கூறியிருக்கிறார். பெரும்பாலான சைக்கோக்கள், சீரியல் கில்லர்கள், வுமன் பீட்டர்கள் தன் சுயவிவரங்களை டாக்டர்களிடம் கூறுகையில், தான் குழந்தையாய் இருக்கும் போது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் தான் இளமை காலங்களில், தனக்கு தேவையான காமம் கிடைக்கவில்லை என சொல்கிறார்கள். குழந்தையாய் இருக்கும் போது குழந்தைத்தனத்தை தொலைத்தவர்களும், இளமை காலங்களில் இளமையை தொலைத்தவர்களுமே வரலாற்றில் இந்நாள் வரை சைக்கோக்கள் ஆகவும், சீரியல் கில்லர்களாவும் உருவெடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் பல சிறு குழந்தைகளை வெட்டி புதைத்த சைக்கோ கூட, தன் இளமை காலத்தில் child sex க்கு ஆளாக்கப்பட்டதை விவரிக்கிறான்.  

இப்போது, மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்கும் போதும், குழந்தைகளிடத்து பாலியல் குறித்து எந்த எச்சரிக்கைகளும் பெற்றோர்கள் செய்யாமல் விடும் பட்சத்தில்,  இரண்டு விஷயங்கள் நடக்க கூடும். ஒன்று, உங்கள் குழந்தையை யாராவது child sex க்கு உட்படுத்தும் போது, அது என்ன செய்வதென்பதை அறியாது அவன் மிரட்டலிற்கு உடன் பணியக்கூடும். மற்றொன்று மிக சிறிய வயதிலே காதலில் விழக்கூடும்.
எழுத்தாளர் சிவசங்கரி கூட சமீபத்தில் child sex குறித்து ஆனந்த விகடனில் ஓர் சிறுகதை எழுதினார். ஓர் குழந்தையை ஐஸ் க்ரீம் ஆசை காட்டி ஓர் கார் ட்ரைவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி விட்டதால், அந்த குழந்தை பெரிய பெண்ணாக மாறி, அவள் திருமணத்திற்கு பின்னும் அவளுக்கு செக்ஸ் என்றாலே அருவருப்பை வரவழைக்கும், அதனால் அவள் கணவன் அவளை நிராகரித்து விட்டு, வேறு ஓர் திருமணம் செய்து கொள்வான். இவள் வாழ்நாள் முழுதும், இவளது அம்மா வீட்டிலே துயரத்தில் கிடப்பாள். அந்த வாழ்நாள் துயரத்திற்கெல்லாம் ஒரே ஓர் சம்பவம் மட்டுமே காரணம் என்பது எத்தனை கொடுமையானதுஇந்த கொடுமையெல்லாம் நினைத்து பார்க்கவே கொடூரமானது, இதை எடுத்து சொல்லும் போதும், அதை நமக்கான எச்சரிக்கையாக எடுத்து கொள்ளாமல், ஏன் சாக்கடையை பார்க்கிறாய், தாமரையை பார், சூர்யோதயத்தை பார், வென்பனியை பார்அது எத்தனை அழகானது என்று மறுமொழி சொன்னால், நான் என்னவென்று சொல்ல…?

மிக சிறுவயதில் காதலில் விழும் குழந்தைகளை நீங்கள் வாழ்நாளில், எந்த சந்தர்பத்தின் போதும் சந்தித்து இருக்கிறீர்களாநீங்கள் என்ன சொன்னாலும் அக்குழந்தை பெரியவர்கள் போல் பேசும், தான் காதலித்தவன் நல்லவன் என வாதாடும், வெளிநாடுகளில் பெற்றோர்க்கு எதிராகவே புகார் கொடுக்கும், ரெண்டு அடி அடித்து கட்டுக்கு கொண்டு வரலாம் என எத்தனித்தால் வீட்டை விட்டு ஓடி போகும்….

பெரியவர்களை பொறுத்த வரை, காமம் என்பது இந்தியாவில் ஆண்களின் முழு ஆதிக்கமாக இருக்கிறது என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறி வருகிறார். காலையில் எழுந்தால் பல் விளக்குவது போல், இரவு ஆனால் ஆண்கள் செக்ஸ் வைத்து கொள்கிறார்கள். மனைவிக்கு உடன்பாடே இல்லையென்றாலும் கூட அவன் அதை சட்டை செய்ய மாட்டான். செக்ஸ் என்பது ஒரு காலத்தில் கலைநயமாக போற்றப்பட்டது. இப்போது அது எந்த உணர்வும் இல்லாமல் வீட்டுக்கு வீடு நடக்கிறது.

எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால், மனதில் காதல் என்பது இல்லாமலே செக்ஸ் வைத்து கொள்கிறார்கள். கணவனும் மனைவியும் பேசி கொள்ள மாட்டார்கள், சிரித்து கொள்ள மாட்டார்கள், எங்கேயும் சகஜமாக வெளியே போக மாட்டார்கள், ஆனாலும் அவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்று கொள்வார்கள். இது போல் அவலங்கள் தான் மனிதனை கள்ள காதலை நோக்கி தள்ளுகின்றன. பெரும்பாலான விலைமாதர்களிடம் வரும் கஸ்டமர்கள், திருமணமானவர்கள்.

கொருக்குப்பேட்டையில் ஓர் கள்ள காதல் விவகாரத்திற்காக, இரண்டு மாத குழந்தையை அடித்து கொன்றிருக்கிறார்கள். திருமண உறவு கசந்ததற்காக கணவனின் சகோதரரை ஆரம்பத்தில் அணுகி வந்தார். ஆனால் பிற்பாடு குழந்தை பிறந்த பின், மனம் திருந்தி வாழ, அப்பெண் முடிவெடுத்ததை சகித்து கொள்ள முடியாமல், அவளின் கள்ள காதலன், அக்குழந்தையை அடித்தே கொன்று விட்டான். பெரும்பாலான பெண்கள் orgasm என்னும் உச்சநிலையை தனது காமத்தின் போது அடைவதில்லை, அதற்குள் ஆணுக்கு அடங்கி விடுகிறது. அவள் ஒவ்வொரு இரவும் ஏமாற்றமே அடைகிறாள். அதுவே அவளை இன்னோர் ஆணை தேட செய்கிறது. நிச்சயமாக இதற்கு காரணம் பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும் தான் குற்றவாளி….

ஆனால் zee tv யில் நடக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, தொடந்து கள்ளகாதல் விவகாரங்களை கையாள்கையில், கள்ளகாதலர்களை மட்டுமே குற்றவாளியாக சித்தரிக்கிறது.

பார்ப்பதற்கு எல்லாமே சிறிய விஷயம் போல் தான் இருக்கும்.. ஆனால் அது ஏற்படுத்தும் வீரியம் என்பது தாங்கி கொள்ள முடியாதது

White tiger நாவலில், அரவிந்த் அடிகா மொத்த இந்தியாவையும் காறி உமிழ்கிறார். என்ன அநியாயம் நடந்தாலும் பொறுத்து கொண்டு, குற்றவாளியை அனுமதிக்கும் கேடு கெட்ட நாடு இந்த இந்தியா என்று ஏளனம் செய்கிறார்.

இன்னும் எத்தனை நாள் இதே போல் இருக்க போகிறோம்