Schinder’s list திரைப்படம்,
1939ன் போது, ஜெர்மனியர்கள் மற்றும் யூதர்களின் வாழ்க்கை பற்றியதான படம். ஜெர்மானியர்கள் போலாந்தை போரில் வென்று கோலோச்சி செலுத்தி கொண்டிருக்கும் போது, துவங்கும் திரைப்படம், ஜப்பான் இராணுவம் ஜெர்மனியர்களை வென்று, யூதர்களை மீட்பதோடு படம் நிறைவு பெறுகிறது. இதற்கு நடுவே, யூதர்கள் போரின் போது அடைந்த துயரங்களும், அவர்களின் போராட்டங்களும், இழப்புகளும் உதாசீனத்திற்குரியது அல்ல, என்பதையே Schinder’s lis படம் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது.
ஜெர்மன்
போலாந்தை வென்றதால், ஜெர்மானியா இராணுவம் போலாந்து புகுந்து அங்கிருக்கும் மக்களை எல்லாம், அவரவர் இருப்பிடங்களில் இருந்து விரட்டி, அருகில் இருக்கும் நகரத்திற்கு போக சொல்கின்றனர். அந்த வகையில் ‘க்ராகாவ்’ நகரத்திற்கு மட்டும், ஒரு நாளைக்கு 10000த்திற்கும் மேலான யூதர்கள் வருகை தந்து கொண்டே இருக்கின்றனர். வரும் அனைவருக்கும், ஜெர்மனிய அரசாங்கம் அடையாள அட்டை அளிக்கிறது. அடையாள அட்டை இல்லாத நபரையோ, தொலைத்து விட்ட நபரையோ கண்டவுடன் ஜெர்மானிய இராணுவ வீர்ர்கள் சுட்டு தள்ளுகின்றனர்.
ஒரு
காட்சியில், ஒரு ஜெர்மனிய சிறுமி, எந்த பயமும் இல்லாமல் அந்த பரபரப்பான நகரத்தில் நடந்து வருவாள். அடுத்த காட்சியில், ஒரு யூத ஆணை 15 ஜெர்மனியர்கள் சூழ்ந்து கொண்டு, அவனை காட்சி பொருளாக்கி இம்சித்து சிரித்து மகிழ்வார்கள். இந்த இரண்டு காட்சியின் மூலமே, ஜெர்மானியர்களும் யூதர்களும் எவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று இயக்குனர் சொல்லி முடித்து விடுகிறார். யூதர்களுக்கான பள்ளி கல்லுரிகள் மூடப்படுகின்றன, பணக்கார யூதர்கள் இராணுவத்தால் கொள்ளையடிக்கப்படுகிறார்கள், அவர்களது வீடுகள் பறிக்கப்பட்டு தெருவில் விடப்படுகிறார்கள், புகார் அளிக்க இடம் தெரியாமல் பரிதவிப்பில் அலைகின்றனர். யூதர்களின் அரசாங்க வேலைகள் பறிக்கப்படுகின்றன, தொழிலதிபர்களின் தொழில்கள் முடக்கப்படுகின்றன.
இது
போன்ற ஓர் சூழலில் தான் ஆஸ்கர் ஸின்ட்லர் அந்நகரத்தினுள் வருகிறான். ஸின்ட்லர் ஓர் ஜெர்மானியன். பெரும் பணக்காரனான அவன், அந்நகரத்தினுள் தொழில் தொடங்க நினைக்கிறான். அந்த ஊரில் உள்ள, பாத்திரம் தயாரிக்கும் நிறுவனம் மூடப்பட்டது தெரிந்து, அதனை எடுத்து நடத்த உரியவர்களை சந்திக்கிறான். அதன் மூலம், அவன் Itzhak Sternஐ சந்திக்க நேரிடுகிறது. ஸ்டெர்ன் ஓர் புத்திசாலி கணக்காளன். ஸ்டெர்னை வைத்து அந்த பாத்திர கம்பெனி முதலாளியிடம் பேசி, அந்த கம்பெனியை வாங்கி கொள்கிறான். ஆஸ்கர் ஸின்ட்லர் ஓர் ஜெர்மானியன் என்பதால் அவனால், எந்த ஓர் இடையூறு இன்றியும் அவனால் தொழில் முன்னெடுத்து செல்ல முடிகிறது. அந்த கம்பெனியில் வேலை செய்ய, க்ராகாவ் நகரத்தில் அகதிகளாக வந்து தஞ்சமடையும் அகதிகளை உபயோகப்படுத்தி கொள்கிறான்.
ஆஸ்கர்
ஸின்ட்லர் போன்று பல தொழிலதிபர்கள் க்ராகாவ் போன்று பல்வேறு நகரங்களுக்கு சென்று, அந்நகரத்தில் உள்ள தொழிற்சாலைகளை உடைமையாக்கி கொள்கின்றனர். இதனிடையே, தொழிற்சாலையில் வேலை பார்ப்போரை தவிர, மீதமுள்ள அகதிகள் எல்லாம் தேவையற்றவர்கள்
என்று கருதி கொல்லப்படுகின்றனர் அல்லது நாடு கடத்தப்படுகின்றனர். அந்த ஊரில் உள்ள பணக்காரர்கள் எல்லோரும் இராணுவம் தலைமையில் வெளியேற்றப்படுகின்றனர். கப்பல் போன்று இருக்கும் வீட்டில் எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாமல் கையில் கிடைப்பது அனைத்தும் பெட்டியில் திணித்து வெளியேறுகின்றனர். அவ்வாறாக அவர்கள் வெளியேறும் போது, அந்நகரத்தில் இருக்கும் மக்கள் அவர்களை கல்லெறிந்து வழியனுப்பி வைக்கின்றனர்.
யூதர்கள்
அனைவருக்கும் மிகவும் குறுகலான வீடுகளும், வாழ்விடங்களும் தரப்படுகிறது. ஜெர்மானிய பணக்காரர்கள் அனைவருக்கும் மிக விசாலமான யூதர்களின் வீடு தரப்படுகிறது. யூதர்கள் அந்த குறுகலான வீடுகளிலே 20 பேருடன் சேர்ந்து வாழ வேண்டியதாய் இருக்கிறது. இவர்கள் விட்டு சென்ற விசாலமான வீடுகளில் ஜெர்மானிய பணக்காரர்கள் எந்த சலனமும் இன்றி வாழ்கின்றனர். யூதர்களை விரட்டியடிக்காமல் இருக்க, ஜெர்மானிய இராணுவ வீரர்கள் பெருமளவு பணத்தை லஞ்சமாய் யூதர்களிடம் கேட்டு முறையிட்டனர். நிராகரித்தவர்கள் உடனேயே வெளியேற்றப்பட்டனர், லஞ்சம் கொடுத்தவர்கள் சிறிது நாட்கள் கழித்து வெளியேற்றப்பட்டனர்.
ஆஸ்கர்
ஸின்ட்லர் முன்னெடுத்தி செல்லும் நிறுவனத்திற்கு, ஜெர்மனிய இராணுவத்தின் அங்கீகாரத்தின் பேரிலே ஆட்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். அதுவும் வேலையில் முன் அனுபவம் இருந்து, அதற்கான குறித்த சான்றிதழ் இருப்பவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி கொள்ள ஜெர்மானிய அரசு அனுமதி தருகிறது. முன் அனுபவம் இருப்பவர்கள், எப்படியும் எதாவது ஒரு கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்து விடுவார்கள் என்பதால், ஸ்டெர்ன் முன் அனுபவம் உள்ள ஆட்களை மட்டுமில்லாமல் சாதாரண ஆட்களையும் பணியில் அமர்த்த நினைக்கிறான். அதற்கான போலி சான்றிதழ்களை, அவனே தயாரித்து, அவனால் இயன்ற வரை, சில மக்களை கம்பெனியில் சேர்க்கிறான்.
கம்பெனி
நல்ல முறையில் இயங்கி, லாபகரமாக இயங்க ஆரம்பிக்கிறது. அகதிகளும், இராணுவத்தினரும், நாட்டு மக்களும் பெருமளவு இடப்பெயர்ப்பில் இருப்பதால் பாத்திரங்களின் தேவை நாட்டு மக்களிடைய அதிகமாகி, ஆஸ்கரின் வியாபாரம் சிறக்கிறது. இதனிடையே, தகுந்த அடையாள அட்டையும், அனுபவ சான்றிதழும் இல்லாத ஆட்களை பல்வேறு ஊருக்கு இரயிலில் இடம்பெயர செய்கின்றனர். இரயில் என்றால், நம் கற்பனைக்கே எட்டாத வகையில் காற்றோட்டம் இல்லாததாகவும், நின்றே கொண்டே பயனிக்கும் வகையிலும் இருக்கும் இரயில் அது. இரயிலில் ஏறுவதற்கு முன், பயணிகளை தங்கள் உடைமைகளை தங்களுடன் எடுத்த செல்ல வேண்டாமென்றும், அதில் லேபிள் ஒட்டி தெளிவாக பெயர் எழுதும் படியும், அது உங்களை பின் தொடர்ந்து மற்றொரு இரயிலில் வரும், என அறிவிக்கின்றனர். ஆனால், அவர்களை அனுப்பி விட்டு, அவர்களது பெட்டிகளை அனுப்பாமல் இருந்து விடுகின்றனர். கூட்டம் கூட்டமாக இருக்கும் பெட்டிகளை, இராணுவ வீரர்கள் பிரித்து, துணிகள் ஒரு புறம், ஷூக்கள் ஒரு புறம், நகைகள் ஒரு புறம், போட்டோக்கள் ஒரு புறம், பாத்திரங்கள் ஒரு புறம், பணம் ஒரு புறம் என பிரித்து எடுத்து அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகின்றனர். இரயிலில் மறுபுறம் இறங்கும் அகதிகள் நிர்மூலமாக இறங்குகின்றனர்.
ஜெர்மானிய
இராணுவம் புதிது புதிதாக, ஊர்களில் நுழைந்து, அங்கிருக்கும் மக்களை க்ராக்காவ் போன்ற நகரங்களுக்கு போக சொல்கின்றனர். போகாமல் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடித்து கொல்கின்றனர். வயது முதிர்ந்தவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் நாட்டுக்கு தேவையற்றவர்கள் என கருதி பார்த்த மாத்திரத்தில் சுட்டு தள்ளுகின்றனர். பயத்தின் காரணமாய் தப்பி ஓடும் சிறுவனை, பெற்றோர்களது முன்னிலையிலேயே துப்பாக்கி குண்டால் துளைக்கின்றனர். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை, ஜெர்மனிய ராணுவம் சுட்டு விடும் என்ற காரணத்தினால், மருத்துவர்களே நோயாளிகளை சையனடு கொடுத்து கொன்று விடுகின்றனர். பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் தனித்தனியே பலவந்தமாக பிரிக்கப்பட்டு அடையாள அட்டை சோதனை நடத்துகின்றனர். இல்லாதவர்களை மாய்க்கின்றனர். ஒவ்வொரு தெரு முனையும் பிணங்களால் நிரம்பி வழிகிறது. தெருவெங்கும் மக்களின் உடைமைகள் குப்பைகளாய் சிதறி கிடக்கிறது. உயிரின் இருப்பை உடலில் கிடத்த, ஒவ்வோர் உயிரும் மறைவிடம் தேடி ஓடுகிறது.
Amon என்பவன், ஜெர்மனிய இராணுவ அதிகாரிகளில், ஓர் முக்கியமான ஆள். யூதர்களை ஒழிக்காமல் ஓய்வதில்லை என்ற சபதம் பூண்டவனாய், எந்நேரமும் துப்பாக்கி கொண்டு அலையும் மனித ஓநாய். காலை எழுந்து, மாடத்தின் மேல் நின்று வேலை செய்பவர்களை பார்க்கிறான், சரியாக வேலை செய்யாத ஆட்களையும், இராணுவத்திற்கு கட்டுப்படாமல் அழுந்து கதறும் பெண்களையும், அவனது Sniper கொண்டு சுடுகிறான். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, ஆமன் வீட்டினுள் தூங்கி கொண்டிருக்கும் அவனது காதலி திடுக்கிட்டு எழுகிறாள். ஆமன் பிறரை சுடுவதை கண்டு “இவனுக்கு வேற வேலையே இல்லை..” என்று மொனகி விட்டு, மீண்டும் தூக்கத்தில் ஆழ்கிறாள். மாடத்தில் இருந்து திரும்பும் ஆமன், தன் காதலி தூங்கி கொண்டிருப்பதை கொண்டு, விளையாட்டாக துப்பாக்கியை ‘லோட்’ செய்து க்ளிக் சத்தம் எழுப்புகிறான். அதை கேட்டதும், அவளது காதலி துள்ளி எழுந்து பதறுகிறாள். பதறியவள் ஆமனை கோபித்து அவன் மீது தலையணையை எறிகிறாள்…. மற்றவர்கள் உயிர் போகும் போது அசட்டை காட்டிய அவனது காதலி, அதுவே தன் உயிர் போவதை கணித்து, அதற்காக பதறி எழும் காட்சி சொல்லும் கருத்து, ஆன்மீக ரீதியாகவும், மனிதாபிமானம் ரீதியாகவும் மிக ஆழமானது… உயிரும், வலியும் எல்லோருக்கும் ஒன்று போல தான் இருக்கும் என்பது அது.
யூதர்கள்
பல திசைகளில் இருந்தும் ஆஸ்கர் ஸின்ட்லர் கம்பெனிக்கு தஞ்சம் தேடி வருகின்றனர். முதலில் வேலை அனுபவம் இல்லோதோருக்கு ஆதரவு அளிக்க மறுப்பு தெரிவிக்கும் ஆஸ்கர், பின் யூதர்களின் அவல
நிலை கண்டு இரங்கி, பரிதாபத்தோடு எல்லாருக்கும் தஞ்சம் கொடுக்கின்றான். எங்கெங்கோ இருந்து ஆட்கள் வந்து, தன் பெற்றோரை காப்பாற்றும் படியும், குழந்தைகளை காப்பாற்றும் படியும் முறையிடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் வேலை அளித்து, ஜெர்மானிய அரசாங்கத்தை ஏமாற்றி, அவர்களுக்கு தஞ்சம் அளிக்கின்றான். இந்நிலையில், ஆஸ்கர் ஸின்ட்லர் மீது அரசாங்கத்திற்கு சந்தேகம் எழுகிறது,
க்ராகாவ்
நகரில் உள்ள ஒட்டு மொத்த மக்களையும், ஸின்ட்லர் தொழிலாளிகள் உட்பட எல்லோர்க்கும் மருத்துவ தேர்வு வைத்து, தேர்ச்சி பெற்றவர்களை ஹங்கேரிக்கு விற்க பார்க்கிறது. அந்த மருத்துவ தேர்வினை நடத்துவதற்காக, நகரத்தில் உள்ள மொத்த மக்களையும், ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல், வயது வித்தியாசம் பார்க்காமல், பெரியதொரு மைதானத்தில், நிர்வாணத்துடன் வரச்செய்து சோதனை நடத்துகின்றனர். பெரும்பாலானோரின் குழந்தைகள் க்ராகாவ் நகரத்திலே இராணுவ பாதுகாப்பில் இருப்பதால், குழந்தைகளின் பெற்றோர், தங்களை தகுதியில்லாதவர்களாக ஆக்கி கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்காக இங்கேயே இருக்க துணிகின்றனர். அதற்காக கையிலும், முகத்திலும் இரத்தக்கறையை ஏற்படுத்தி கொள்கின்றனர். பெண்கள் அனைவரும், தாங்கள் எதிர்பார்த்தப்படியே மருத்துவ தேர்வில் தோல்வியடைந்து, இருப்பிடம் திரும்புகின்றனர், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்கின்றனர். அம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட தாக்கு பிடிக்காமல் போகிறது, அவர்கள் கண் முன்னாகவே அந்நகர குழந்தைகள் அனைவரையும், ஒரு லாரியில் ஹங்கேரிக்கு கூட்டி செல்ல படுகின்றனர். அப்போது அந்த பெற்றோரின் கதறல்கள் அனைத்தும், இன்னமும் என் காதுகளில் கேட்டு கொண்டே இருக்கிறது.
இதையெல்லாம்
பார்த்த ஸின்ட்லர் ஒரு முடிவிற்கு வருகிறான். அரசாங்கத்திடம் பேசி, தன்னால் இயன்ற அளவு மக்களை விலைக்கு வாங்குகிறான். அவனிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ, அவ்வளவுக்கும் ஆட்களை வாங்குகிறான். குழந்தைகளை மிக முக்கியமாக வாங்குகிறான். பெண்கள், ஆண்கள்
வயோதிகர்களை எல்லோரையும் பெரும் பணம் கொடுத்து, தனக்கு தேவை என சொல்லி வாங்குகிறான். 850க்கும் மேலானோரை தன் கைப்பணம் போட்டு வாங்குகிறான். தனக்கு யார் யாரெல்லாம் வேண்டும் என நீண்டதொரு பட்டியலை தயாரிக்கிறான். அதில் கூடுமானவரை தனக்கு தெரிந்த எல்லா குடும்பங்களும் இருக்குமாறு பார்த்து கொள்கிறான். அரசாங்கம் அந்த பட்டியலை வாங்கி, அந்த பட்டியலில் இருப்பவர்களை மட்டும் விடுவித்து ஆஸ்கருடன் அனுப்பி வைக்கிறது.
ஒவ்வொருவரும்
முன் வந்து, தன் பெயரை அதிகாரி முன் சொல்லி வெளியேறுவர்…
Isak Hudes
Zucker Helena
Feber Ludwig
Maria Mischel
Donata
Rosners Henry
Olek
Chaja
Chaim Nowak
Michael
Lemper
Rebeka
… என ஒவ்வொருவரும், தன் பெயர் சொல்லி வெளியேறுவார்கள். ஒரு சாலை விபத்தில் 30 பேர் பலி என்பதும், ஒரு இனவெறி படுகொலையில் 6 லட்சம் பேர் பலி என்பதும் எண்ணிக்கை அளவில் நம்மை எந்த வகையிலும் தொந்தரவு செய்வதில்லை. அதுவும் இந்த அவசர உலகத்தில், ஒரு வரி செய்தியில் எந்த உணர்ச்சியும் இருப்பதில்லை. அது போல, 850 பேர் என்பது ஒரு எண்ணிக்கையாக இல்லாமல், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்பதனை திரையின் முன் தோன்றி, அவரவர் பெயர் சொல்லி மறையும் மனிதர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.
எல்லோரும்
ஆஸ்கரின் ஊருக்கு ரயிலில் அனுப்பப்படுகிறார்கள். அதில் ஆண்கள் செல்லும் இரயில், சரியாக ஆஸ்கர் ஊருக்கு போய்விடுகிறது. ஆனால் பெண்கள் செல்லும் இரயில் துரதர்ஷ்டவசமாக ஆஸ்கர் ஸின்ட்லரின் ஊருக்கு போவதற்கு பதிலாக, ஹெர் ஸின்ட்லரின் ஊருக்கு போய் விடுகிறது. அங்கே பெண்களுக்கு முடியை ஒட்ட வெட்டுகின்றனர். முடியை வெட்டும் போதே, நம்மை கேஸ் ரூமிற்குள் பூட்டி, கொன்று விடுவார்கள் என்பதை அவர்களாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லா பெண்களையும் நிர்வாணப்படுத்தி, ஒரு ரூமிற்குள் அனுப்புகின்றனர். அங்கே அவர்கள் உள்ளே சென்று, கதவு முடியவுடனே பீதி பற்றி கொள்கிறது, விளக்குகள் அணைந்த பின்பு கத்தவே ஆரம்பிக்கின்றனர். ஷவரில் இருந்து வரும் கேஸ் முகர்ந்து சாக, தங்களை தாங்களே தயார் படுத்தி கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து, கதறி அழுகின்றனர். வாழ்வின் போராட்டம் இத்துடன் முடியட்டும் என்று சிலர் கடவுளை பிரார்த்திக்கின்றனர். ஒவ்வொரு ஷவராக இயங்க ஆரம்பிக்கிறது. ஷவரில் இருந்து விழும் திரவம் பட்டு, ஆங்காங்கே இயலாமையின் பீதியில் கத்துகின்றனர், ஓடப்பார்க்கின்றனர். ஆனால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை, அப்போது தான், ஷவரில் இருந்து வரும் திரவம் வெறும் தண்ணீர் என்று புரிந்து கொள்கின்றனர். தம்மை குளிக்க வைக்கவே ஏற்பாடு, மாறாக கொல்வதற்கு அல்ல என்பதை உணர்கின்றார்கள். அதை அவர்கள் உணரும் போது, அவர்களது கண்ணில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகளானது, உயிரின் விலையற்றத்தன்மையை சொல்லத்தக்கவை.
விஷயம்
தெரிந்து, அதிகாரிகளுக்கு மேலும் லஞ்சம் கொடுத்து, ஹெர் ஸிண்ட்லர் இருப்பிட்த்திற்கு சென்று எல்லா பெண்களையும் மீட்கிறார் ஆஸ்கர்
ஸின்ட்லர். பெண்கள் சிலர், தங்களது குழந்தைகளை இராணுவத்திற்கு தெரியாமல், மறைத்து மறைத்து இரயில் ஏற்றுகின்றனர். ஆனால் இராணுவ அதிகாரிகள், வலுக்கட்டாயமாக குழந்தைகளை பெண்களிடம் இருந்து பிரிக்கின்றனர். அப்போது, அதை கண்ட ஸின்ட்லர், இராணுவத்திடம் சண்டை போட்டு புழுதியை பறக்க விடவில்லை, பெரிய ராடை கையில் எடுத்து இராணுவத்தினரின் காலை முறிக்கவில்லை, கழுத்தை திருப்பி உயிர் வதம் செய்யவில்லை… ஆனால், தடாலடியாக இராணுவத்தினரை தடுத்து, “அவர்களை எல்லாம் நான் வாங்கியிருக்கிறேன்… இவர்களெல்லாம் ஆராக்யமான குழந்தைகள்.. 0.45 மில்லி மீட்டர் ஷெல் கேஸிங்கை நான் பாலிஷ் போடவேண்டுமென்றால், இவர்கள் தான் எனக்கு தேவை… உன்னால் அதை செய்ய முடியுமா… உன்னால் அதை செய்ய முடியுமா…?” என்று கேட்கிறார். அவன் பதில் பேசாமல், குழந்தைகளையும் பெற்றோருடனே அனுப்ப சம்மதிக்கிறான். ஒரு தீம் ம்யூசிக்கும் பின்னால் ஒலிக்கவில்லை… ஆனாலும், இதை விட ஹீரோயிச காட்சியினை நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை….
ஏழு
மாதங்களுக்கு அம்மக்களை வைத்து, ஆஸ்கர் ஸின்ட்லர் தன் கம்பெனியை நடத்துகிறார். நஷ்டத்தில் கம்பெனியில் சென்றாலும், தளராமல், மக்களின் உயிர் காக்கும் பொருட்டு அதனை செய்கிறார்.
அப்போது,
ஜப்பான் ஜெர்மனியை வீழ்த்துகிறது. ஆஸ்கர் ஸின்ட்லர் ஓர் ஜெர்மானியன் என்பதால், அவர் அவரது மக்களிடம் இருந்து விடைபெற்று கிளம்புகிறார். அவர் கிளம்பும் போது, அம்மக்கள் அனைவரும், ஒரு இனத்தையே காப்பாற்றியதற்காக, அவருக்காக ஒரு தங்க மோதிரத்தை அவருக்கு பரிசாக அளித்து, தம் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர். அவர்களது நன்றியினால் ஆஸ்கர் மிகவும் நெகிழ்ந்து போய் சொல்வது தான், இங்கே மிகவும் முக்கியமானது… மொத்தமாக 1100 பேரை காப்பாற்றிய பின்பும், என்னால் இன்னமும் கூட பலரை காப்பாற்றியிருக்க முடியும், ஆனால், நான் அதில் இருந்து தவறி விட்டேன். தான் வைத்திருக்கும் காரை பார்த்து, நான் இதை விற்றிருந்தால் கூட 10 பேரை காப்பாற்றியிருந்திருக்க முடியும், தான் அணிந்திருக்கும் ஸ்வஸ்திக் பேட்சை காட்டி, இந்த தங்க பேட்சை விற்றிருந்தால் கூட என்னால் இரண்டு பேரை காப்பாற்றியிருக்க முடியும் என சொல்லி தான் காப்பாற்றாமால்
விட்ட 6 மில்லியன் மக்களை நினைத்து நெஞ்சுருகுகிறான். தன் இயலாமையின் பொருட்டு அழுத படி, கண்ணீருடன் விடைபெறுகிறார்.
1908ல் பிறந்து 1974ல் மறைந்த ஆஸ்கர் ஸிண்ட்லரின் உண்மை கதை இது, அவரால் பிழைக்கப்பட்ட 1100 பேரும், தன் தலைமுறைகளை ஸிண்ட்லர் ஜிவ்ஸ் என அறிவித்து கொண்டனர். இன்றும் ஆஸ்கர் ஸின்ட்லரின் நினைவு தினத்தின் போது, ஸின்ட்லர் ஜிவ்ஸ், திரளாக ஒன்று கூடி அவரை நினைவு கூறுகின்றார்கள்.