Friday, 15 March 2013

இலங்கை பிரச்சனை குறித்து...



சமீபமாக தமிழ்மகனின் வனசாட்சி படித்தேன். வனசாட்சி படிப்பத்ற்கு முன்பே அவருடைய ஆண்பால் பெண்பால், வெட்டுபுலி மற்றும் சில சிறுகதைகளை படித்திருந்ததால் கொஞ்சம் “ஓவர் கான்ஃபிடன்ஸ்” கொண்டே வனசாட்சியை வாசிக்க ஆரம்பித்தேன்.

முழுவதுமாகவே வரலாற்றையே பேசுகிறது, அதை ஒரு கோர்வையாய் சொல்லவே புனைவை கையாண்டிருக்கிறார். முற்றிலுமான இலங்கை கதை. எப்போதுமே சென்ஸிட்டிவ் குறையாமல் இருக்கும் பிரச்சனையான, இலங்கை பிரச்சனையை தான் கையில் எடுத்து நாவல் ஆக்கியிருக்கிறார். கொஞ்சம் இம்மி பிசகினாலும் பிரளயமே ஏற்பட்டு விடும் என்று நன்கு தெரிந்தே கத்தி மேல் நடப்பது போல் நடந்து சாகசம் செய்திருக்கிறார். நடந்த ஒரு நிகழ்வை, நிகழ்வாய் சொல்லாமல், அதனை சொல்லும் போதே என்ன மாதிரியான பிம்பம் நம் மனதில் பதிய வேண்டும், யார் சாரராக கதை கேட்பவர்கள் நிற்க வேண்டும் என்ற கவனத்தில் கதை சொல்லும், பல கதை சொல்லிகளை நாம் பார்க்க முடியும். இவர் அந்த கும்பலில் சிக்கி கொள்ளாமல் மிக்க நடுநயத்தோடு கதையை எடுத்து சென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிழைப்பத்ற்கு மிகவும் சிரமப்படுபவர்களை ஆசை வார்த்தைகளை சொல்லி கங்காணிகள் இலங்கை கூட்டி செல்கின்றனர். அவர்கள் இலங்கைக்கு போய் சேர்வதே பெரிய கதையாய் விரிகிறது, அத்தனை போராட்டமான பயணம். 10 பேர் பயணம் செய்தால் 7 பேர் தான் போய் சேர்வோம் என்ற ரீதியான பயணம் அது. அங்கு போய் சேர்ந்ததும், நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு மிகச்சிறிய கொட்டகையை தங்க கொடுத்து, அநியாய கூலி கொடுத்து, கடுமையான வேலைகள் கொடுத்து, அதிகாரத்தின் மொத்த பிடியில் வேலை செய்பவர்களை வைத்திருக்கின்றனர். எல்லோருமே வந்து சேர்ந்து விட்டோம், இனி ஊரில் போய் பிழைப்பு செய்வதென்பதெல்லாம் கனவிலும் நினைக்க முடியாத ஒன்று, வாழும் வரை வாழ்ந்து விட்டு இலங்கையிலே மடிவோம் என்ற பிடிப்பில்லாத வாழ்க்கையை தான் மேற்கொண்டனர்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருக்கும் கம்பெனிகள் தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த தொழிலாளர்களால் மிகுந்த பயனும், பெருத்த லாபமும் அடைகின்றனர். அதன் காரணமாய், மேலும் மேலும் தொழிலாளர்களை கூட்டி வர செய்து தேயிலை தோட்டத்தை மேலும் மேலும் விஸ்தாரிக்கின்றனர். வந்தவர்களும் வழி தெரியாமல், கங்கானிகளிடம் வாங்கிய கடனை அடைக்க திராணியற்று உழைப்பிலே வாழ்க்கையை கழிக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஆங்கில ஆட்சி முடிவிற்கு வருகிறது, அப்போது தேயிலை தோட்டம் முழுவதும் தமிழர் மற்றும் சிங்கள முதலாளிகளுக்கு வந்தடைகிறது. பெருவாரியான இடத்தில் கங்காணிகளே ஆங்கிலேயர்களிடமிருந்து நிலத்தை வாங்கி கொள்கின்றனர். எஜமான்கள் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை எந்த ஒரு திருப்பு முனைகளும் இல்லாமல் செல்கிறது. 4 தலைமுறைகள் இப்படியாகவே உருண்டன.

இதற்கு நடுவே, இலங்கையில் தேர்தல் வருகிறது. இலட்ச கணக்கில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அங்கு சேர்ந்து விடுவதால் பாதிக்கு பாதி இந்தியர்களே தேர்தலில் வெல்கின்றனர். அப்போது தான் இலங்கைக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது, இப்படியே போனால் இலங்கை மொத்தமும் இந்தியர்களின் கைக்கே சென்று விடும் என்று பீதியுறுகிறனர். அந்த பீதியே அவர்களின் இனவெறிக்கு தூபம் போடுகிறது. 70 சதவீதம் இந்தியர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப செல்ல வேண்டும் என்று இலங்கை அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகிறது. அது ஒரு பெரிய இடியென இந்தியர்களின் வாழ்வில் விழுகிறது. இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதே நரகத்தில் தான் என்றாலும், இப்போது இது பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அப்படியாகிய நிலையில், யாரும் இல்லாத இந்தியா சென்று, யாரிடம் வேலைக்கு சேர்ந்து, எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற கேள்வி எல்லாருள்ளும் எழுந்தது. பார்த்த ஒரு நரகம் போதும் என்ற மன ஓட்டமே அவர்களின் பிரதானமாய் இருந்தது.

இந்தியாவே வேண்டாம் என்பவர்களையும், இந்தியாவிற்கே போகிறோம் என்பவர்களையும் எந்த பாரபட்சமும் பார்க்காமல் இழுத்தடித்தது இலங்கை அரசு. அரசாங்க அலட்சியங்களே அவர்களை பாதி கொன்று போட்டது. ஒரு குடும்பத்தில் 4 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தால் 3 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வந்தது, கடவுச்சீட்டு வந்தவர்கள் அனைவரும் இராணுவ உதவியுடன் கப்பல் ஏற்றியது, அடுத்த கப்பலில் மீதமுள்ள ஆட்களை அனுப்பி விடுவோம் என்பன போன்ற பொறுப்பற்ற சமாதானங்களை தான் அவர்கள் அதிகாரிகளிடமிருந்து கேட்க முடிந்தது. அப்படியாகிய நிலைமையில் என்ன செய்ய முடியும்... வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கடவுச்சீட்டு வந்து, வயதிற்கு வந்த 16 வயது பெண்ணிற்கு மட்டும் வராமல் போன ஒரு குடும்பத்தின் கதையை, ஒரு பானை சோற்றின் பதமாய் இந்த நாவல் பேசுகிறது. அந்த ஒரு சோறையே ஜீரனம் செய்ய மனது மறுக்கிறது.

சோக கதைகளை எழுதுவதற்கும் சில ‘டெக்னிக்’ தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

‘வழக்கு எண் 18/9” படத்தில் ஜோதி என்ற கதாப்பாத்திரத்தின் மேல் அமிலம் வீசிய படியால் அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். அப்போது அவரது அம்மா அழுவதை நமக்கு காட்டுவார்கள். லஜ்ஜையாகி போய் விடும். ஜோதிக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை. சோகம். இல்லை என்று மறுப்பதற்கில்லை. யாரேனும் ஒருவருக்கு அவ்வாறு நிகழ்ந்து விட்டால் நாமும் அப்படி தான் அழுவோம், ஆனால் அது ஒரு கலை படைப்பாக வரும் பட்சத்தில், நிஜ வாழ்வு வீரியத்துடனே, படத்திலும் வந்தால் தியேட்டரினுள்ளே பாப்கார்ன் கொரித்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு எப்படியான ஒரு முகசுளிப்பை ஏற்படுத்தும்.

“வாரணம் ஆயிரம்” படம் இன்னொரு ரகம். படத்தின் ஒரு கட்டத்தில் அப்பா சூர்யா இறந்து விடுவார். சிம்ரன் கடற்கரையில் நின்று அவரது பிள்ளைகளுடன் philosophy பேசி கொண்டிருப்பார். அதாகப்பட்டது, நம் அப்பா நம்மை விட்டு எங்கும் போய் விடவில்லை, நம்முடனே தான் இருக்கிறார் என்று சொல்வார். இதுவும் கூட யாருடைய வாழ்விலும் நடக்க கூடிய ஒரு பகுதி தான், அதற்காக மிக மொன்னையான ஒரு தொனியில் மனைவி வசனம் பேசி கொண்டிருந்தால் படம் பார்ப்பவன், “என்னங்க டா டேய்.... எப்ப டா முடிப்பீங்க....” என்று சொல்ல மாட்டானா...!

Departed படத்தில் ஒரு சாவு. இரண்டு சாவு என்றெல்லாம் வராது. நிறைய பேர் பரலோக பதவி அடைவார்கள். அத்தனைக்கு இறப்பிற்கும் நம் மனது கலவரப்படும்.

Departed படம் எப்படி ஒவ்வொரு உயிரின் இறப்பையும் கவித்துவமாக பதிவு செய்ததோ, அந்த கவனத்துடனே இதிலும் பல இறப்புகள் பதிவு செய்ய பட்டிருக்கின்றன. பல்வேறு இனப்படு கொலைகள் இலங்கையில் நடைபெற்றிருப்பதால், எங்கே மனிதன் வைத்து கதற கதற அழவைத்து விடுவாரோ என்ற பயத்துடனே படித்தேன், நல்லவேலையாக என்னை அதுபோல் சாகடிக்கவில்லை. மாறாக பல்வேறு சிந்தனைகளை நம்முள் ஊற்றுடெக்க வைக்கிறார். அவரவர் நியாயங்களை சொல்லவும் அவர் மறக்கவில்லை.

ஆங்கிலேயர்கள் தேயிலை தோட்டத்தை தோற்றுவிக்காமல் போயிருந்தால் இன்றைய மொத்த இலங்கையும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. கங்காணிகளும் அவ்வாறே... ஒட்டுமொத்த நிகழ்வின் மோதலே சொல்லொனா துயரத்திற்கு வித்திட்டது என்று தான் சொல்ல முடியும். அதை விடுத்து ராஜபக்‌ஷேவை மட்டும் ஒரு தனிக்குற்றவாளியாக பார்ப்பதென்பது அறீவினம். தமிழர்களை விரட்டாமல் ராஜபக்‌ஷேவால் அங்கே பிழைப்பு நடத்த முடியாது. அவருக்கு முன் ஆட்சி செய்த ஆட்சியாளர்களுக்கும் அதே நிலைமையே... ஒட்டு மொத்த சிங்கள கூட்டமும் தமிழர்களை வெறுக்கின்றனர். இங்கு நாம் எப்படி முஸ்லீம்களை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறோமோ அதை விட பன்மடங்கிற்கும் மேலாக அவர்கள் தமிழர்களை பார்க்கின்றனர். வெறியின் துவக்கம் எதுவாகினில் அச்சம் தான். அச்சமே துவேஷத்தை மனதினுள் வரவழைக்கிறது. சுயநலமே அச்சத்தின் அச்சானியாய் திகழ்கிறது.

பல தலைமுறைகளுக்கு முன்னர் இலங்கைக்கு தேயிலை தோட்டத்திற்கு வேலை செய்ய வந்தவர்கள் தமிழர்கள், அதிலும் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் ஆட்சி பொறுப்பில் வந்து அமர்வதையும், இலங்கை முதலமைச்சர் யார் என நிர்வகிக்கும் சக்தியாக திகழ்வதையும் சிங்களர்கள் விரும்பவில்லை. இதன் தீர்வு என்ன என்பது யாராலும் வரையறுக்க முடியாத ஒன்று. அவர்கள் வன்முறையை தீர்வாய் கொண்டனர். புலிகளும் அவ்வாறே. 3 தலைமுறைகளுக்கு முன்னர் கூலி வேலை செய்ததற்காக இப்போதும் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மனிதனாய் பார்க்க சிங்களர்கள் மனது விசாலம் அடையவில்லை. அது நம்முடைய துர்பாக்கியம்.

நம் துர்பாக்கியத்தை எண்ணி நொந்து கொள்ளும் முன், இந்த கேள்விக்கும் நாமே பதில் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போது பெருமளவில் அஸ்ஸாம், ஜார்கண்ட் மக்கள் பிழைக்க வழியன்றி தென் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாளை அவர்கள் முதலமைச்சர் யார் என தீர்மானிக்கும் சக்தியாய் மாறி போனால் தமிழக மக்களின் எதிர்வினை என்ன... விசால மனம் கொண்டு அவர்களை அரவணைப்போமா, அல்லது குறுகிய மனம் கொண்டு துரத்தியடிப்போமா... இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு சித்தாந்தம் பேசி பயன் இல்லை...   
  
நம்முள் இருக்கும் மனிதத்தை விரிவு படுத்தாமல், இனப்படுக் கொலைகளை தடுப்பதென்பது, துவேஷம் என்னும் தேயிலை செடியினை வேரோடு பிடுங்காமல், இலைகளை மட்டும் பறிப்பது போன்று தான்.... துளிர்ந்து கொண்டே இருக்கும்.

1 comment:

  1. Mr. Surya kumar what you have written in your blog few points are right but most of the points wrong due to insufficient stuff in history. I hope you may be an engineering graduate/science graduate because the lack of history stuff you have written some wrong information, what matter i am talking in your content is srilankan tamil issues. I agreed & accepted your views, but few points are wrong i.e., Srilankan tamils, all srilanka tamil people not migrated from india to srilanka. you can verify / study history of srilankan tamils many tamil people are, according to anthropological evidences and archaeological evidences, Sri Lankan Tamils have a very long history in Sri Lankan history and have lived on the island since around the 2nd century BCE.

    Tamil people were one of the original inhabitants of the island.

    Settlements of culturally similar early populations of ancient Sri Lanka and ancient Tamil Nadu in India were excavated at megalithic burial sites at Pomparippu on the west coast and in Kathiraveli on the east coast of the island. Bearing a remarkable resemblance to burials in the early Pandyan kingdom, these sites were established between the 5th century BCE and 2nd century CE.

    The two groups of Tamils located in Sri Lanka are the Sri Lankan Tamils and the Indian Tamils.

    Without knowing the complete history how you can view in right way of srilankan tamil issues.

    My suggestions you must improve your stuff in history, otherwise your contributions in your blog is really good.

    ReplyDelete