White tiger நாவலில்
இப்படி ஒரு வாசகம் வரும்... அதாவது நம் இந்தியர்கள் அனைவரும் ப்ராய்லர் கோழிகள் போல,
அவர்கள் அடைப்பட்டிருக்கும் கூண்டை திறந்து விட்டாலும், அவர்கள் போக தெரியாமல் உள்ளேயே
தான் கிடப்பார்கள் ... எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...
முதல் மரியாதை
படம் பார்த்திருப்போம், அதில் வடிவுக்கரசி கதாபாத்திரத்தை வெறுக்காதவர்கள் யாரும் இருக்க
மாட்டார்கள். சதா முகத்திற்கு பின் அடுத்தவர்கள் பற்றி பேசுவதும், மூஞ்சிக்கு நேரே
குத்தி காட்டி பேசுவதும், வதந்தி பரப்புவதும் என அத்தனை அருவறுப்பான கதாபாத்திரம் அது...
உண்மையில் முக்கால் வாசி தற்கொலைகள் இவர்களின் இருப்பாலே நிகழ்கிறது என்பது என் கருத்து.
நம் நிகழ் உலகிலே இது போல் நமக்கு எத்தனை வடிவுக்கரசியை தெரியும்... ஆனால் நாம் அவர்களை
தொடுவதில்லை, தொட முடியாத அளவிற்கு அவர்கள் சாக்கடையாக கிடக்கிறார்கள். அவர்களுக்கு
இணையாக வாய் கொடுத்து பேச முடியாது என்ற காரணம் ஒன்று இருந்தாலும், பேசுபவர் பெண் என்பதே
பெரும்பாலான தயக்கத்திற்கு காரணம்... பெண்களை எதிர்ப்பது என்பது எப்பவுமே ஒரு சர்ச்சையான
விஷயமாகவே பார்க்கப்படுகிறது, எதிர்ப்பிற்கான காரணங்கள் பார்க்கப்படுவதில்லை.
என்னுடைய நெருங்கிய
உறவினர் ஒருவர் இருக்கிறார், அவர் ஒரு பெண், பேத்தியெல்லாம் கண்டு விட்டவள். என் சிறு
வயது முதலே எனக்கான பணிவிடைகளை அவ்வப்போது செய்தும் இருக்கிறார், ஆனால் அவர் மேல் நான்
கொண்டிருக்கும் அபிப்ராயமானது பூஜ்யம் தான், ஏனெனில் அவர் மேலே சொன்னது போல் புறங்கூறும்
பழக்கமுடையவர். கல்யாண வீடென்றாலும், சாவு வீடென்றாலும் ஒரு சின்ன குறையை கண்டு விட்டால்
50 பேர் முன் சத்தம் போட்டு உரிய நபரை தலை குனிய வைப்பது, கல்யாண வீட்டில் வந்து மணப்பெண்ணின்
நடத்தை குறித்து இல்லாததும் பொல்லாததும் நேரில் கண்டது போல் தரைமட்டத்திற்கு கமெண்ட்
அடிப்பது, ஊரில் ஒரு ஆணோ பெண்ணோ சாதாரணமாக பேசி கொண்டால் கூட அதை ஊதி பெரிதாக்கி
10 பேரிடம் பேசி உள்ளூர மகிழ்ந்து கொள்வது... என இவரின் பயோடேட்டாவை அடுக்கி கொண்டே
போகலாம். இவரை போலவே என் சொந்தத்திற்குள்ளாகவே, 4-5 பேர் இருக்கிறார்கள், சில ஆண்களும்
இருக்கிறார்கள், அவர்களையும் இவர்களுடன் இணைத்து கொண்டால் எண்ணிக்கை 10-15ஐ தொடும்...
இவர்களை 5-6 நாட்கள் கூர்ந்து கவனித்தாலே, அவர்களின் மனப்போக்கை படித்து விடலாம்...
யாரும் கௌரவுத்தடன் இருத்தல் கூடாது என்ற sadist தனம் தான் அவர்களை, பேசாததை எல்லாம்
பேச வைக்கும். மற்றவர்களின் மனத்தை காயப்படுத்தும் வித்தையை எல்லாம் அநாயசமாக “ஜஸ்ட்
லைக் தட்” கையாள்வார்கள்.
நாளடைவில், இது
போல் நபர்களை சுற்றி இருப்பவர்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருந்து கொண்டும், அவர்களுக்கு
ஏற்றார் போல் அவர்களின் குணாதிசியத்தை மாற்றி கொண்டும் காலத்தை தள்ளுவார்கள். ஏனென்று
அவர்களிடையே கேட்டால், சண்டை போட்டு அசிங்கப்படுவதை விட, தலைகுனிந்து அசிங்கப்படுவது
அளவீட்டளவில் குறைவாக இருக்கும் என பதில் அளிப்பர். அதாவது, நம்மவர்கள் அவர்களை சாக்கடையில்
இருந்து விழுந்து எழுந்த பன்னியை போல் பார்த்து ஒதுங்கி போவார்கள், ஆனால் வடிவுக்கரசிகளோ
தங்களை தாங்களே சிங்கம் என நினைத்து கொள்வது தான் இங்கே தாங்கி கொள்ள முடியாதது...
நான் மேலே குறிப்பிட்ட
உறவினருக்கு ஒரு மகன் உண்டு, அவருடைய மகனுக்கு எங்கள் வீட்டு பெண்ணை மணம் முடிப்பதற்காக
கேட்டனர், எங்கள் யாருக்கும் அவர் மீதும், அவர் மகன் மீதும் கொஞ்சமும் நல்ல அபிப்ராயம்
இல்லாததால் மறுத்து விட்டனர். இதனால் எங்கள் குடும்பத்தினரை காயப்படுத்துவதில் அன்றிலிருந்து
கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
சில சமயம் கொடுமை
என்னவெனில், என்னுடைய அப்பா அம்மா இல்லாத போது அவர்களை பற்றி தரக்குறைவாக பேசி கொண்டிருக்கும்
போதே, என் அப்பாவோ அம்மாவோ வந்து நின்றால் அப்படியே பேச்சை மாற்றி, வந்தவர்களிடம் இனிக்க
இனிக்க பேசுவார்கள். அதையெல்லாம் சின்ன வயதில் இருக்கும் போது தட்டி கேட்டிருக்கிறேன்,
அதற்கு “அவனை பேசினா உனக்கென்னடா, உன்னை விட அவனை பேச எனக்கு தான் உரிமை அதிகம்...
அதை தெரிஞ்சிக்கோ முதல்ல...” என்பன போல பதில் தான் வரும். ஒன்றும் மேற்கொண்டு பேச முடியாது,
இதை பெற்றோரின் கவனத்திற்கு எடுத்து சென்றால், “அவங்க பேசினா பேசிட்டு போறாங்க விடு...
என்னை தான பேசறாங்க, நீ கண்டுக்காத...” என்று பதில் வரும்.
உள்ளுக்குள் நெருப்பாய்
கொதிக்கும், எதற்கு தான் இப்படி ஒரு கேவலமான இரட்டை வேஷம் போட்டு இப்படி நெருங்கின
சொந்தத்தை புறம் கூறுகிறார்களோ என்று ஆத்திரமாய் வரும். பெத்த அப்பா அம்மாவை பற்றி
அடுத்தவர் அபாண்டம் சொல்வதை கேட்டு கொண்டு, போபம் அடக்கி கொண்டிருக்கும் தருணத்தை ஒருவன்
உணர்ந்து பார்த்தால் தான் தெரியும். சொந்தமாய் போய் விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக
பல்லை கடித்து கொண்டிருக்கும் நரக வேதனை தாங்க முடியாதது. அந்த நேரத்தில் எல்லாம்,
பெண்ணியம் பேசி, ஆணாதிக்கத்தை அடக்கும் போராளிகளை உயிருடன் எரித்து விடலாம் போல், உள்ளுக்குள்
கனன்று எரியும்...
என் பெற்றொர்களை
அபாண்டம் பேசினார்கள், சகோதரர்களை பேசினார்கள், பாட்டியை பேசினார்கள், என் அம்மாவின்
உறவினர்களை பேசினார்கள், சில பிஞ்சு குழந்தைகளை பேசினார்கள், கிராமத்தில் குடித்தனம்
நடத்தி கொண்டிருக்கும் பெண்களை தரக்குறைவாக பேசினார்கள், என் அப்பாவின் உறவினர்களை
பேசினார்கள், எங்களது தொழிலை பேசினார்கள், என்னை பற்றி பேசாமலே இருந்தார்.... எப்போது
என்னை பற்றி பேசுவார் என, என் முறை வரும் வரை காத்திருந்தேன்...
அந்த பொன்னான நாள்
வந்தது... அந்த நாள் வெற்றியா, தோல்வியா என்பது எனக்கு தேவையில்லாத ஒரு விஷயமாக பட்டது,
பல நாள் பசி தீர்ந்த ஒரு மிருகம் போல் நான் அன்று உலவி கொண்டிருந்தேன்...
சமீபத்தில் சுற்றுலா
போயிருந்தோம். அது ஒரு Group Tour. நாங்கள் சென்ற சுற்றுலாவில், என் வயதில் ஒரே ஒரு
பெண்ணும் வந்திருந்தார். என்னை ஆரம்பம் முதலே ‘அண்ணா’ என்றே அழைத்து வந்தார். மொத்த
சுற்றுலாவிலும் சேர்த்து மொத்தமாக 5 நிமிடம் கூட அந்த பெண்ணிடம் நான் முழுதாக பேசியிருக்க
மாட்டேன். அதுவும் “இந்தாங்க ஸ்நேக்ஸ் எடுத்துக்கோங்க” போன்ற உரையாடலே அது. ஒரு சமயம்,
நாங்கள் எல்லோரும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம், அப்போது அந்த பெண்ணிற்கு உட்கார
இடம் இல்லாததால் எங்களின் இருக்கைக்கு அருகே உட்கார வந்தாள். அந்த சமயத்தில் நாங்கள்
அனைவரும் கடைசி சீட்டில் உட்கார்ந்து இருந்தோம், அந்த 6 பேர் சீட்டில், எனக்கும் ‘வடிவுக்கரசி’க்கும்
இடையே மட்டும் ஒரே ஒரு இருக்கை காலி இருந்தது. அப்போது நம் வடிவுக்கரசி, இடம் விடுவது
பற்றி கொஞ்சமும் யோசிக்காதவராய் மரம் போல் உட்கார்ந்திருந்தார். நிலைமையை பார்த்து
விட்டு, எனது தாயார், வடிவுக்கரசியை தள்ளி உட்கார சொன்னார்கள். அதை சொன்ன உடனே, நம்
வடிவுக்கரசி, அந்த பெண் உள்ளே வந்து உட்காருவதற்கு ஏற்ப வழி விட்டார். எங்கள் எல்லோருக்கும்
மிகவும் வித்தியாசமாய் போயிற்று, அந்த பெண் எப்படி என் அருகில் வந்து அமர்வாள், ஏன்
இப்படி புரியாதது போல் நடந்து கொள்கிறார்கள் என ஆச்சர்யப்பட்டு, வடிவுக்கரசியை என்னருகிலே
வந்து உட்கார்ந்து கொள்ளும் படியும், அந்த பெண்ணை உங்கள் அருகில் உட்கார வைத்து கொள்ளுங்கள்
என்று நானும் என் தாயாரும் விளக்கி சொல்லும் படி ஆயிற்று... அதன் பின் தான் வடிவுக்கரசி
என்னருகே வந்து அமர்ந்து கொண்டு, அந்த பெண் உட்கார இடம் கொடுத்தார்..... அப்படி நகர்ந்து
கொண்டே உட்கார இடம் கொடுத்த போது, வடிவுக்கரசி சொன்ன வசனம் தான் இங்கே ஆக முக்கியமானது....
“நான் வேற எதுக்கு
இடைஞ்சலான்னு பார்த்தேன்...”
இதை சொன்னதும்
சாதாரணமாக சொல்லவில்லை, குரலில் ஒரு நக்கல், ஒரு ஏற்ற இறக்கம், வேண்டுமென்றே 20 பேருக்கு
கேட்கட்டும் என்ற தொனியில் சத்தமாக சொல்லி முடித்து, ஒன்றும் தெரியாதது போல் உட்கார்ந்து
கொண்டார். அப்போது என்னுடைய பெற்றோர் மட்டுமில்லாமல், அந்த பெண்ணினுடைய பெற்றோரும்
முன் இருக்கையில் தான் அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் சங்கடமாக போயிற்று... அந்த பெண்ணும்
சரி, பெண்ணின் பெற்றோரும் சரி அவமானத்தில் தலை குனிந்தவர்கள் குனிந்தவர்களாகவே இருந்தனர்...
அவர்களது வாழ்நாளிலே இது போல் அசூயையான சூழ்நிலையும், ஈனமான ஜந்துவையும் அவர்கள் கண்டதில்லை
போலும்... இது போல் பல ஜந்துவை பார்த்த எனக்கே அந்த சூழ்நிலை ஜீரணிக்க முடியாத ஒன்றாக
இருந்தது, கன்னத்திலே பளார் பளார் என கன்னம் பிய்ந்து தொங்கும் வரை அடிக்கலாம் என கோபம்
உள்ளூர கிளம்பி வந்தாலும், நெருங்கிய சொந்தம் என்பதால், அந்த நேரத்தில் மூடி கொண்டு
இருக்க வேண்டியதாய் போயிற்று... என்ன ஆச்சர்யம் என்றால், என் அம்மாவும் சரி, அப்பாவும்
சரி... அப்படி ஒரு விஷ வார்த்தைகளை உமிழ்ந்த அந்த வடிவுக்கரசியை “ஏன் இப்படி சொன்னீர்கள்?”
என வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்கவில்லை. இப்படி பல வடிவுக்கரசிகளை பார்த்து சொரணை
உணர்வையே இழந்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டேன். இதே எனக்கொரு பையன் இருந்து,
அவனை இது போல் நக்கல் பேசியிருந்தால், பேசியவனை தலை கீழாய் தொங்க விட்டு அடித்து வெளுத்திருப்பேன்...
அப்போது என் முடிவு,
மிக தெளிவானதாக இருந்தது... நாமும் நம் பெற்றோர்
போல் வடிவுக்கரசிகளை சகித்து கொண்டு இருத்தல் கூடாது, கண்டிப்பாக எதிர்வினை ஆற்ற வேண்டும்
என்பதில் மிக உறுதியாக இருந்தேன். ஆனால், சுற்றுலா முடித்து, ஊருக்கு போய் பார்த்து
கொள்ளலாம், சுற்றுலா ‘மூட்’ஐ அநாயவசியமாக கெடுக்க வேண்டாம் என பொறுமை காத்தேன். இடைப்பட்ட
நாளில், என்ன மாதிரியான எதிர்வினை ஆற்ற வேண்டும், திட்டுவது என்றால் என்ன சொல்லி திட்ட
வேண்டும் என்பதை எனக்குள் ஒத்திகை பார்த்து கொண்டேன். பழிக்கு பழி என்பது அறிவற்ற செயலாக
இருந்தாலும், அதை பின்பற்றவே நான் பரபரத்தேன். இந்த விஷயத்தில் நல்லவனாய் இருப்பது
குறித்து கூட எனக்கு எந்த அவசியமும் இல்லை என பட்டது. நல்லவனாய் இருந்து கஷ்டப்படுவதை
விட, கெட்டவனாய் இருந்து சொரனையோடு இருக்கலாம் என்பதில் தெளிவாய் இருந்தேன். என்ன...
எதிர்வினைக்கு பின்பு, இந்த ஜந்து நம் குடும்பத்திடம் பேசாது அவ்வளவு தானே, இது போல்
சொந்தங்கள் எல்லாம் தேவையே இல்லை... நண்பர்கள் வட்டமே போதும், ஒரே ஒரு சொந்தம் இருந்தாலும்,
அது நமக்காக உயிரையே கொடுக்கும் உறவாக இருக்க வேண்டும், காட்டி கொடுக்கும் உறவாக இருக்க
கூடாது.
சுற்றுலாவும் முடிவை
நெருங்கி கொண்டிருந்தது. இடையில் நான் வடிவுக்கரசியிடம் பேசுவதை நான் முழுதும் தவிர்த்தேன்.
அடங்காமாட்டா கோபம் கனன்று விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இன்னொரு விஷயம் என்னவென்றால்,
இப்போதும் கூட அந்த பெண்ணிற்காகவும், பெண்ணின் குடும்பத்திற்காகவும் தான் நான் வருத்தப்படுகிறேன்,
நான் அவமானப்படுத்த பட்டது பற்றி எனக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. ஏனெனில், என்
அளவீட்டில் இதெல்லாம் ஒரு அவமானமே இல்லை, இதை விட பெரிய அவமானமெல்லாம் நான் சந்தித்து
இருக்கிறேன். இருப்பினும் இந்த சம்பவத்திற்கு எதிர்வினை ஆற்றுவது பற்றி நான் ஏன் இவ்வளவு
ஜரூராக இருக்கிறேன் என்றால்... ஆரம்பத்திலிருந்து நடந்த சம்பவங்கள் தான். என் கண் முன்னாலயே
பெற்றோரை, சகோதரர்களை எல்லாம் முதுகு பின்னால் பேசும் போதும் ஒன்றும் செய்ய முடியாமல்
போயிற்று. ஏனெனில், சம்பந்தப்பட்டவரே என்னை தடுப்பவராய் இருந்தார். ஆனால் வடிவுக்கரசி
தொட்டிருப்பதோ என்னை... இதுவே என் வாய்ப்பு, இத்தனை நாட்கள் புறம் கூறியதிற்கும் எதிர்வினை
ஆற்ற இதுவே சந்தர்ப்பம். இதை நழுவ விட கூடாது.
மற்றவர்கள் மனம்
புண்படும் படி, சுறுக்கென பேசும் ஈன வித்தையை கற்று வைத்து கொண்டு தானே இத்தனை நாளும்
வடிவுக்கரசி அத்தனை பேரையும் ஆதிக்கம் செலுத்தினாள். இதோ காட்டுகிறேன், எனக்கும் பேச
தெரியும் என... எதிர்காலத்தில் இதனால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டால் கூட, அதுவே எனக்கு
போதும்.
சுற்றுலா முடிவில்,
மொத்த கூட்டத்திற்கும் ரயிலில் return ticket conform ஆகவில்லை. அதனால் அவசர வேலையாக
செல்பவர்கள், திட்டமிட்ட நாளில் செல்லுமாறும், மற்றவர்கள் ஒரு நாள் கழித்து செல்லுமாறும்
அறிவுறுத்த பட்டது. அதன் படி நான் முதலிலும், என் குடும்பமும், வடிவுக்கரசி குடும்பமும்
அடுத்த நாளும் பயணப்பட்டு வீடு வந்தோம். இதற்கிடையில் நான் எந்த மாதிரியான எதிர்வினையை
நான் புரிய வேண்டும் என்று முடிவிற்கு வந்து விட்டேன். வடிவுக்கரசி, எப்படியும் தானாகவே
முன் வந்து பேசி விடுவாள், அப்படி பேசும் போது இனி என்னிடம் பேச வேண்டாம் என்பதை
hard ஆக சொல்ல வேண்டும் என்பதை நிலை நிறுத்தி கொண்டேன்.
ஊருக்கு வந்ததும்,
அடுத்த நாள் காலை, தான் சுற்றுலா போய் வந்த பெருமைகளை பட்டியல் போட்டு பெருமை பீத்தி
கொண்டிருந்தார் நம் வடிவுக்கரசி. அந்த வழியே சவரம் செய்வதற்காக Shaving set டன் வந்த
என்னிடம் பேச்சு கொடுத்தார் வடிவுக்கரசி...
“என்ன... நேத்து
ஆஃபிஸ் போய்ட்டு வந்துட்டியா...?”
“ம்ம்ம்” – இந்த
சமயத்தில் கொஞ்சம் இடம் பொருளை ஒரு glance விட்டேன். சாதகமாகவே இருந்தது. அடுத்த கேள்வி
கேட்பதற்குள் என்னை நானே தயார் படுத்தி கொண்டேன். அடுத்த கேள்வி கொஞ்சம் நக்கல் கலந்து
வரவே எனக்கு அது முழுசாதகமாக போயிற்று.
“ஒரு நாள் முன்னாடியே
வந்தியே... நல்லா வசதியா இருந்ததா?”
“நீங்கெல்லாம்
எங்கிட்ட பேசவே கூடாது... அப்படியே போயிரணும்... எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு என் கிட்ட
பேசறீங்க... 10 பேர் முன்னாடி வெச்சு அவமானப்படுத்திட்டீங்க தான... எங்கிட்ட பேசாதீங்க...இதே
வேற யாராவது நீங்க பேசினதை பேசி இருந்தாங்கனா, மூஞ்சியிலே காறி துப்பியிருப்பேன், நீங்களா
போனதால அமைதியா விட்டுட்டேன்...”
20 விநாடி கூட
இல்லை... தயார் படுத்தி வைத்திருந்ததை பேசியாயிற்று. கோபத்தில் வேறு எதையும் பேசி விட
கூடாது என்பதும் திட்டமாய் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை... அதன் பின் எல்லாம்
விளக்கம் தான்.
பக்கத்தில் இருந்த
அண்ணன், அண்ணி, அக்கா, பெரியம்மா, பாட்டி எல்லோரும் என்னை தடுப்பதற்குள் பேசி முடித்து
விட்டேன். என்னளவில் ஒரு பெரிய stunt ஐ முடித்து விட்ட திருப்தியில் இருந்தேன். சுற்றி
நின்றவர்களுக்கு தான் தலை கால் புரியவில்லை, குய்யோ முய்யோ என அலறி ஏன் இப்படி பேசுகிறாய்
என விளக்கம் கேட்டனர். எல்லோருக்கும் புரியும் வகையில் நடந்ததை விளக்கமாக சொன்னேன்.
எல்லாம் சொல்லி முடித்தவுடன், வடிவுக்கரசி போட்டாளே ஒரு போடு, “ஐயோ நான் அப்படி சொன்னது
கூட எனக்கு ஞாபகமே இல்லை... என்னமோ மூஞ்சியிலே காறி துப்புவானுமில்ல... அப்படி என்ன
டா நான் பண்ணிட்டேன்..” என சுற்றி நின்று கொண்டிருப்பவரிடம் நியாயம் கேட்க ஆரம்பத்தாள்.
நியாயம் கேட்க கேட்க கண்களில் பொலபொலவென அழ ஆரம்பித்தாள்...
“____ , நீங்க
‘நான் ஏன் இடைஞ்சலான்னு’ அந்த பொண்ணை பார்த்து சொல்லலை? ”
“என்னை ____ னு
கூப்படாத..”
“உங்களை கூப்படனும்னு
எனக்கு என்ன தலையெழுத்தா... சொன்னீங்களா இல்லையா,,, அதை சொல்லுங்க”
“நான் அப்படி சொன்னதே
எனக்கு ஞாபகம் இல்லை...”
“உங்களுக்கு வசதியா
மறந்துட்டேன்னு சொல்லாதீங்க... நீங்க சொன்னதை அம்மா, அப்பாவும் கேட்டுட்டு தான் இருந்தாங்க..
வேணும்னா அவங்களை போய் கேட்டுக்கோங்க... நீங்க சொன்னீங்களா இல்லையான்னு ”
“யப்பா சாமி, இனி
உன் சங்காத்தமே வேண்டாம்டா... ” இப்போது சுற்றி இருப்பவர்களை பார்த்து, “இனிமே நான்
நம்ம வீட்டுக்கே வர மாட்டேன், இனிமே நான் எதுக்கும் வர மாட்டேன், நான் செத்துட்டுன்னு
நினைச்சுக்கோங்க” கதற ஆரம்பித்தாள்.
இத்தனைக்கும் நான்
ஒண்ணுமே சொல்லவில்லை. திட்ட வேண்டும் என்றால் எப்படி எப்படியோ திட்டி இருக்கலாம், ஆனால்
அதற்கெல்லாம் அவகாசம் இருந்திருக்காது, Short and sweet ஆக இருக்க வேண்டுமே என்பதற்காக
தான் மேற்சொன்ன வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நான் இனிமே உங்களிடம் பேச மாட்டேன் என்றேன்.
இதற்கே இப்படி பொலபொலவென கண்ணீர் வருகிறது என்றால், வடிவுக்கரசியின் பாணியிலே ரெய்டு
விட்டிருந்தால் இந்நேரம் தூக்கிலே போய் தொங்கி இருப்பாள் போலிருக்கிறது. நான் அவர்களுக்கு
உணர்த்த விரும்பிய விஷயமும் அதே தான்... ஒண்ணுமில்லாத இந்த உப்பு சப்பற்ற வார்த்தைகளுக்கே
இப்பிடி எழவு விழுந்த மாதிரி அழுகிறார்களே, வடிவுக்கரசி வார்த்தைகளுக்கு எத்தனை மனம்
சுக்கு நூறாகி இருக்கும். நல்லா அழட்டும் என்று போகிற போக்கில் விட்டுவிட்டு, நான்
என் பாட்டுக்கு ஷேவிங் செய்ய ஆரம்பித்தேன். இடையில் வடிவுக்கரசி நான் இருக்கும் திசை
பார்த்து சாஷ்டாங்கமாக கீழே விழுந்து இனி என்னிடம் பேச மாட்டேன் என்று சொன்னதாய் ஞாபகம்,
அவள் செத்தாலும் நான் சாவுக்கு வரகூடாதாம். அவள் செய்த தப்பை மறைப்பதற்காக, என் வார்த்தைகளின்
கொடூரத்தை மேற்கோள் காட்டி, அனுதாபம் சம்பாதிக்கும் மும்மரத்தில் வடிவுக்கரசி தீவிர
பணி ஆற்றி கொண்டிருந்தாள். நான் அதையெல்லாம் எதையும் கண்டுகொள்ளவில்லை. பசி தீர்ந்த
ஒரு மிருகம் போல் உலவி கொண்டிருந்தேன்.
சற்று நேரம் கழித்து
தான் என் அப்பா வந்தார், என்னவென கேட்டார். அதற்கும் சற்று நேரம் கழித்து தான் என்
அம்மா வந்தார். என்னவென கேட்டு, இப்படியெல்லாம் பேசலாமா என திட்டி என்னை அந்த இடத்தை
விட்டு போகும் படி செய்தனர். இதற்கிடையில் என் பாட்டியை தவிர, ஒருத்தர் விடாமல் நான்
செய்தது ரொம்ப ரொம்ப தப்பு என என்னை கரிச்சு கொட்டினர். வடிவுக்கரசி என்ன செய்திருந்தாலும்,
நான் அது போல் ஒரு எதிர்வினை ஆற்றி இருக்க கூடாதாம். இதை சொல்பவர்கள் வேறு யாரும் இலர்.
என் பெரியம்மாவும், அக்காவும், அண்ணாவும். இவர்கள் மூவரும் ஒரு காலத்தில் வடிவுக்கரசி
புறங்கூறலை சகித்து கொள்ள முடியாமல், துயரத்தால் வாடியதை நான் அறிவேன். ஆனால், இன்றே
அவர்களே எனக்கெதிராய் நின்று வடிவுக்கரசிக்கு அனுதாபம் செழுத்தி கொண்டிருந்தனர். அதிலும்
என் அக்கா சொன்னது என் காதில் விழுந்து கொண்டே இருந்தது... என்ன தான் நடந்திருந்தாலும்,
சூர்யா பண்ணது தப்பு தான்... இதையே மந்திரமாக திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தாள்.
போகட்டும்... நான் நினைத்தது நிறைவேறி ஆயிற்று. இந்த அரைவேக்காட்டு குழந்தைகளிடம் எல்லாம்,
நான் என் நியாயத்தை சொல்லி கொண்டிருக்க வேண்டியதில்லை என அந்த இடத்தை விட்டு வந்து
விட்டேன்.
இதுவும் கூட என்
காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமாம்.
ஆனால், இது என் அக்கா சொன்னதா, என் அண்ணன் சொன்னதா என என் ஞாபகத்தில் இல்லை. இது என்ன
மாதிரியான ஒரு பொது புத்தியோ தெரியவில்லை. ஒருவனுக்கு மரியாதை கிடைக்க பெற வேண்டுமென்றால்,
அவன் மனிதனாக பிறந்து 60 வயது வாழ்ந்து, தார் டின் போல் உருவம் வைத்து கொள்ளலே போதுமானதா...
வேறு எதுவும் தேவையில்லையா... அப்படியென்றால் கோத்ரா இரயில் எரிப்பு, குஜராத் வன்முறை,
நாஜிக்களின் இனவெறி, சிங்களரின் இனவெறி ஆகியவற்றிக்கும் துணை போகிறவர்கள் பெரியவர்கள்.
அவர்களை எல்லாம் கூப்பிட்டு பாதபூஜை செய்து மரியாதை செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா
என்ன? யார் பெரியவர்கள் என்ற வரைமுறை இல்லை...?
என் வயது 25, நான்
ஒரு பையன். இப்போது நான் வயதுக்கு வந்த ஒரு பெண்ணையோ, இல்லை கல்யாணம் ஆன ஒரு பெண்னையோ
இப்பிடி பொது வெளியில் வைத்து அநாகரீகமாக ஆபாச கமெண்ட் அடிக்கிறேன் என்று வைத்து கொள்ளுங்கள்.
அப்போது கூட்டத்தினரின் எதிர்வினை என்னவாக இருக்கும்... கூட்டத்தினரின் எதிர்வினையை
விடுங்கள், என் அக்காவின் எதிர்வினையே என்னவாக இருக்கும்... பளார் என கன்னத்திலேயே
கொடுக்க மாட்டாளா என்ன? ஆனால் அதே ஆபாச கமெண்ட்டை ஒரு 50 வயது பெண்மணி அடித்தால் பொத்தி
கொண்டு இருக்க வேண்டுமா? இவளை தான் ‘பெரியவங்க’ என்று மரியாதை கொடுத்து, காலில் விழுந்து
காலை நக்க வேண்டுமா....
ரொம்ப நேரத்திற்கு
வடிவுக்கரசிக்கு சமாதானம் சொல்லி கொண்டிருந்தார்கள். நடுநடுவே என்னை வசை பாடி கொண்டும்
இருந்தார்கள். வடிவுக்கரசி அளவிற்கு இல்லையென்றாலும், பெரியம்மாவும், அக்காவும் முதுகு
பின் பேசுபவர்கள் தாம். நாளை வடிவுகரசி நிலை தமக்கும் வரலாம் என்று யோசித்தோ என்னவோ,
என்னை ரொம்ப நேரம் திட்டி கொண்டு இருந்தார்கள். மூணு மணி நேரம் இருக்கலாம். அந்த வழியே
அவர்களை கடந்து நடந்து போன போது, நான் கேட்ட உரையாடல் இது... “அவன் ஒரு பைத்... கோவக்காரன்,
அவன் பேசினதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க..” என்னை பார்த்த பிறகு, பைத்தியக்காரன்
என்னும் வார்த்தையை கோவக்காரன் என்று மாற்றி விட்டார்கள்... என் மீது என்ன அப்படி ஒரு பயமோ?
இவர்கள் இப்படியெல்லாம்
பேசுகிறார்கள் என்று எனக்கு வருத்தம் இல்லை, என் அப்பா அம்மாவும் கூட இந்த சம்பவத்திற்கு
பிறகு பேசுவதை குறைத்து ஸ்ட்ரைக் செய்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் நான் யாருக்காக
பேசியிருக்கிறேன் கூட தெரியவில்லை. இது போல் குத்தி பேசி அடக்குமுறை கையாண்டு, கூண்டில் அடைத்து வைத்திருப்பவர்களை காக்கும் பொருட்டு,
கூண்டில் இருந்து தப்பி வருவதற்கு கதைவை திறந்து வைத்திருக்கிறேன்.... ஆனால் கூண்டையே
வீடாக்கி கொண்டு விட்டதால், சுதந்திரம் வீண்வேலையாக தெரிகிறது இந்த பொட்டை கோழிகளுக்கு....
இந்த சம்பவத்திற்கு
பிறகு, வடிவுக்கரசி என் அம்மாவிடம் வந்து, “நீ அங்கேயே இருந்தும் அவனை பேச விட்டு வேடிக்கை
பார்த்த இல்ல...” என அபாண்டம் சுமத்தினார். அப்படியெல்லாம் இல்லை, நான் கடைசியாக தான்
வந்தேன், அங்கேயே இருந்திருந்தால் அவனை பேச விட்டிருக்க மாட்டேன் என வடிவுக்கரசிக்கு
வலிக்காமல் என் அம்மா எடுத்துரைத்ததாக கேள்வி பட்டேன்...
விஷயம் இன்னும்
முடியவில்லை... மீண்டும் என் முறை வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க போகிறேன்..