Sunday, 2 September 2012

என் முக்கியமான பின்னூட்டம்

http://prawinvenkatesh.blogspot.in/2012/09/blog-post.html

மேற்கண்ட வலைப்பதிவில் உள்ள பதிவிற்கு என் பின்னூட்டம் :


இந்த “நான் ஒரு பைத்தியக்காரன்” என்ற வலைப்பதிவை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். இதை உன்னுடைய Statement ஆகவும் பார்க்க முடிகிறது, அதே சமயம் இது சிறுகதைக்கு உண்டான ஒரு பிரதான வடிவத்தில் பொருந்துவதால் ஒரு சிறுகதையாகவும் பார்க்க முடிகிறது.

எங்கள் வீட்டில், எனது பெரியப்பா குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 9 பேர். நான், அப்பா, அம்மா, என் தம்பி, பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அண்ணா, பாட்டி. எனது குடும்பமும் பெரியப்பா குடும்பமும் எதிரெதிர் வீட்டில் தான் இருக்கிறோம்.

நான் +2 போகும் வரையே, வீட்டில் உள்ள சில்லரை வேலைகள் எல்லாம் என் மேல் தான் வந்து விழும். கடைக்கு சென்று வெங்காயம் வாங்கி வருவது, தண்ணீர் பிடிப்பது, ஆயுத பூஜைக்கு மாவிலை பறித்து வருவது என்பன போன்ற வேலைகள் தான், ஒன்று அத்தனை கடினமான வேலைகள் என்று எல்லாம் சொல்லி விட முடியாது, இருந்தாலும் எல்லாமும் என் மேல் தான் வந்து விழும், வேறு யாரிடமும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் அண்ணன் வீட்டிற்கே பெரிய பையன் அவனுக்கு டிவி. பார்ப்பது, தூங்குவது போன்ற இன்ன பிற வேலைகள் இருக்கும் அதனால் அவனை அனுப்ப முடியாது, அக்கா வீட்டிற்கு ஒரே பெண் குழந்தை, அவளை அனுப்பவதும் இயலாத ஒன்று, அப்புறம் என் தம்பி, அவன் தான் வீட்டிற்கே செல்ல கடை குட்டி, அவனையும் அனுப்ப முடியாது, கடைசியாக யார் மிஞ்சி இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான் தான் என்னை தான் அனுப்புவார்கள். எனக்கு மிகவும் பிரச்சனையாய் இருந்தது எது என்றால் என் அம்மா, அப்பா, பெரியப்பா, பெரியம்மா, பாட்டி எல்லோரும் மற்ற மூன்று பேரையும் ஒரு பேச்சுக்கு கூட “கடைக்கு போறியா” என்று கேட்காமல் நேரடியாக என்னிடம் தான் வந்து சொல்வார்கள்.

யோசித்து பாருங்கள், ஒரு ஞாயிற்று கிழமை காலையில் நான், எனது தம்பி, அக்கா, அண்ணன் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சன் டிவி. Top 10 movies பார்த்து கொண்டு இருக்கும் போது, என்னிடம் மட்டும் வந்து “கடைக்கு போய் 4 முட்டை வாங்கிட்டு வா” என்று சொன்னால் எவ்வளவு எரிச்சல் வரும். நியாயமாக என்னிடம் அவர்கள் கேட்பது என்ன…. உதவி, ஆனால் அதை ஒரு உதவி கேட்பதாய் என்னை அணுகாமல், செய்வது என்னுடைய கடமை என்ற ரீதியில், ஒரு அதிகாரமாக என்னை அந்த வயதில் அழுத்தியதே எனக்கு பிரச்சனையாய் இருந்தது.
    
இப்போது பரவாயில்லை, என்னுடைய தம்பி சற்று வளர்ந்தவனாகி விட்டதால், அவனாகவே என் எடுபிடி வேலைகளில் பங்கு எடுத்து கொள்கிறான். வேலை கிடைத்து சென்னை வந்து விட்டதால் அந்த எடுபிடி வேலைகளில் இருந்து தப்பித்து கொண்டோம். நான் மட்டுமல்லாது என் அண்ணன், அக்கா, தம்பி எல்லோரும் அவரவர் பணி/படிப்பு நிமித்த காரணமாக வீட்டில் இல்லாமல் வெளியூரில் தங்கி இருக்கிறோம். அதனால் என் வீட்டு மக்கள், 4th standard படிக்கும் யோகா-வை  (என்னுடைய இன்னொரு அக்காவின் மகள், அவர்களும் எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார்கள்)  பிடித்து கொண்டார்கள். இந்த விஷயமே விடுமுறைக்கு வீட்டிற்கு போயிருந்த போது தான் தெரிந்தது, விளையாடி கொண்டிருந்த அவளை கூப்பிட்டு பால் வாங்கி வர அனுப்பினர், பார்த்த மாத்திரத்தில் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டோஸ் விட்டு, இனி யோகாவிற்கு யாரும் வேலை வைக்க கூடாது என்று கட்டளையிட்டோம். ஆனால் அடுத்த முறை வீட்டிற்கு செல்லும் போதும் அவளை கூப்பிட்டு வேலை வைத்து கொண்டு தான் இருந்தனர். (கவனிக்க- என் அக்கா கல்யாணம் ஆகி அடுத்த வீட்டிற்கு செல்லும் வரை இது போல் பால் வாங்கி வர அனுப்ப படவில்லை)

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் தெரியுமா ப்ரவீன். உன்னை எப்படி பைத்தியக்காரனாய் பாவித்து உன்னை எடுபிடி வேலைகளுக்கு உபயோக படுத்தி கொண்டிருந்தார்களோ, அதே போல் தான் என்னையும், அடுத்த தலைமுறையான யோகாவையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் என் விஷயமோ, யோகா விஷயமோ வேறு, நாங்கள் உபயோக படுத்த பட்டிருந்தால், நாங்கள் எங்கள் குடும்பத்தால் உபயோகபடுத்த பட்டிருக்கிறோம். என்ன, எங்களை அதிகாரத்திற்கு உட்படுத்தாமல் உபயோக படுத்தியிருந்தால் சந்தோஷமடைந்திருப்போம். ஆனால் உன் விஷயம் வேறு, ஒரு பகுதி மக்களே உன்னை உபயோக படுத்தியிருக்கிறார்கள்.

உனக்கு எந்தெந்த மாதிரியான வேலைகள் வழங்கபட்டது என்பதனை சொல்லப்பட்டுருந்ததை பார்க்க முடிந்தது. அதில் சிலவற்றது என்னை மிகவும் உறைய வைத்தது. ஒரு தாயையும் கைக்குழந்தையையும் மருத்துவமனைக்கு கூட்டி சென்று வரும் வேலை, பள்ளி குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டி வரும் வேலை, கணவனுக்கு சாப்பாடு கொடுத்து விடுவது போன்ற வேலை. இது போன்ற வேலைகளை எல்லாம் என் வீட்டு மக்களே எங்களுக்கு சொன்னதில்லை. ஆனால், உன் வாழ்வில், எப்படி அடுத்த வீட்டு ஆட்கள் எல்லாம் உன்னை அந்த வேலைகளை எல்லாம் செய்ய வைத்துள்ளனர் என்பதை நினைக்கும் போதே தலை முதல் கால் வரை பற்றி கொண்டு வருகிறது.

கை குழந்தையையும், அதன் தாயையும் ஒரு ஆட்டோ வைத்து மருத்துவமனை கூட்டி செல்லாத அளவிற்கு அவளது கணவன் என்ன மயிரை பிடுங்கி கொண்டிருக்கிறான், அந்த ஒன்றுக்கும் உதவாத சொம்பை வேலைக்கு போனதாகவே இருக்கட்டும், அவனது அம்மாவும் அப்பாவும் என்ன எழவு முக்கியமான காரியம் செய்து கொண்டிருந்தார்கள், என்று உன்னை அனுப்பினார்களாம். வெட்டி போட வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது. அவனவன் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் குமுறி கொண்டிருக்கிறான், இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அத்தனை உதாசீனம், அத்தனை அலட்சியம். குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட கூட்டி வர முடியாத படி, அப்படி என்ன மதிய தூக்கமும், மெகா சீரியலும் கேட்கிறது நம் நாட்டு பெண்களுக்கு. இதெல்லாம் கடமை, கடமைக்கும் மேலான உன்னத உரிமை. இதை கூட செய்ய முடியாமல், அடுத்த ஆளை தேடுபவர்களை எதை கொண்டு அடிக்க? இவர்களெல்லாம்,  முதலிரவு அன்று மாப்பிள்ளை களைப்பாயிருப்பார் என்று அடுத்த ஆளை அனுப்புவார்களோ என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

எனக்கு ஆத்திரம் மேல் ஆத்திரமாய் வர வைப்பது எது தெரியுமா, ஒரு சிறுவனின் ஏழ்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிச்சைகாரனுக்கு விட்டெறிவது போல் சில்லறைகளை விட்டெறிந்து உன்னை வேலை வாங்கியிருக்கின்றனர். அவர்கள் விட்டெறியும் சில்லறைகளுக்கு ஆசைப்பட்டு நீ படிப்பை விட்டிருந்தால், அவர்கள் பொறுப்பேற்று கொள்வார்களா? Assholes அவர்களையெல்லாம் வரிசையில் நிற்க வைத்து முகத்தில் காறி உமிழ்ந்து, ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் கன்னம் பழுக்கும் வரை செருப்பால் அடிக்க வேண்டும். Bastards.

மனிதர்கள் இயல்பிலேயே அடுத்தவர்களை வீழ்த்த எந்த கணமும் தயாராகவே இருக்கின்றனர். சட்டம், நியதி, தூக்கு தண்டனை, சிறை, அடுக்குமுறை ஆகியவை இவர்களுக்கு தடையாய் இருப்பதாலே மனிதர்கள் கட்டுண்டு இருக்கின்றனர். இல்லையெனில் நாய்களின் எண்ணிக்கை இந்த உலகத்தில் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தான் மனிதனின் எண்ணிக்கையும் இருந்திருக்கும். மனிதன், அவனின் தேவைகளுக்காகவே அடுத்தவனிடம் சமரசம் பாராட்டி கொண்டிருக்கிறான். உன் எதிரி, உன் எதிரி என்று முருகானந்தத்தை பற்றி நீ எழுதியிருந்ததை படித்த போது இதுவே எனக்கு ஞாபகம் வந்தது. அவனை போன்ற Culpritகளை எல்லாம் அட்டை பூச்சிகளோடு எளிதில் ஒப்பிடலாம், அவர்களை சுற்றியுள்ளவர்களை எங்கு சுரண்டலாம் என்பதில் மட்டும் தான் அவர்கள் புத்தி யோசிக்கும். இது ஒரு புறம் இருக்க அவன் யார், அவன் அப்பா யார் என்று பார்த்தால் பெரும் வசதி படைத்தவனாக இருப்பான்…. த்தூ.

கல்லூரி படிக்கும் போது, பகுதி நேரமாக நீ வேலை பார்த்தது எனக்கு தெரியும். இதை வினோத் தான் என்னிடம் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டான். மிகவும் அதிர்ச்சியாகி விட்டேன். உன் வீட்டில் அவ்வளவு கஷ்டம் என்பதால் அல்ல, இவ்வளவு கஷ்டம் இருந்தும் நெருங்கிய நண்பனாக என்னிடம் கூட நீ பகிர்ந்து அனுதாபத்தை தேடாததே, என் அதிர்ச்சிக்கு காரணம். உண்மையில் இது போன்று ஒரு மன துணிவு உனக்கிருந்ததை நினைத்து நான் பெருமை தான் பட்டேன்.

நீ சென்னைக்கு வந்து என்னிடம் சில நாள் இருந்து சென்று, அதை பற்றி நீ எப்படி உணர்ந்தாய் என்பதை கடிதமாக எழுதுகிறாய் என்று சொன்ன போது ”ஏன்டா ரொம்ப எமொஷனல் ஆகற, அதெல்லாம் வேண்டாம்” என்று மறுதலித்ததை பற்றி உன் பதிவை படித்த பிறகு வருத்தம் கொள்கிறேன். நான் எல்லாம் ஒரு ஊருக்கு செல்வதே சுற்றி பார்க்கவும், ஜாலியாக ஆட்டம் போட்டு விட்டு வருவதற்காகவும் தான். இன்னமும் சொல்ல போனால் பணம் இருக்கிறதே என்ற கொழுப்பில் தான் சுற்றி பார்க்க போவேன். ஆனால் நீ சென்னை வந்து போனதை பற்றிய  காரணத்தை தெரிவித்த இடத்தில், உன் கஷ்டங்களில் இருந்து தப்பி வருவதற்க்காக சென்னை வந்து போவதாய் சொல்லி இருந்தாய். நான் என்னை போல் எல்லோரையும், முக்கியமாக உன்னையும் நினைத்ததே பிழையாய் போயிற்று. நீ நிச்சயம் அந்த கடிதத்தை எழுதி அனுப்பு, நான் அதற்காக காத்திருக்கிறேன்.

உனக்கு நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை பற்றி மிகவும் புலம்பி எழுதியிருந்தாய். கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய, உன்னை சிறப்பாக எழுத வைக்க வேண்டுமே. நீயே பார், இவ்வளவு சிறப்பான பதிவினை வெளியிட்டு இருக்கிறாய். இந்த பதிவு அத்தனை அழகாக சமகால மனிதர்களின் குறுக்கு வெட்டு தோற்றங்களை படம் பிடித்து காட்டியிருக்கிறது. அந்த வகையில் இதை ஒரு வெற்றி அடைந்த ஒரு பதிவு என்றே சொல்வேன்.

இந்த வெற்றிக்கு நானும், பால கணேசன், ராஜ ராஜேந்திரன், ப்ரவீன் வின் போன்றோரே காரணம் என்பதனை நீ ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும்.

உன்னுடைய பதிவில் நிறைய எழுத்து பிழைகள் வந்து விடுகிறது. தாய்மொழியை தமிழாக கொண்ட நானே கூட சில எழுத்து பிழைகளை செய்து விடுகிறேன். ஆனால் கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட நீ தமிழில் எழுதும் போது நிறைய எழுத்து பிழைகள் வர தான் செய்யும். அது தவிர்க்க முடியாது. ஆனால் அதனை நீ திருத்தி கொள்ள தயராக இருத்தல் அவசியம். உன் பதிவினை படிப்பவர்கள் உன்னை மேன்மையான இடத்தில் வைத்திருப்பதாலே உன்னிடம் அப்படி ஒரு Perfection எதிர்பார்க்கிறார்கள் என்று நீ புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழை முழுதாக கற்காமல் இனி நீ எழுத போவதில்லை என்ற அறிவிப்பு என்னை குற்ற உணர்ச்சி கொள்ள செய்கிறது. தமிழை நீ முழுதாக கற்பது குறித்த உன் முயற்சி பாராட்டதக்கது தான் என்றாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் எழுதுவதை நீ நிறுத்த வேண்டாம். என் அம்மா சொல்வது போல் எழுதுவது என்பது ஆண்டவனின் கொடை. அது எல்லோராலும் முடியாது. உனக்குள் இருக்கும் Creativity நீ எழுத எழுத தான் மெருகு ஏறும். இதை நீ விடும் பட்சத்தில் உன் creativityக்கு பங்கம் வந்து விடுமோ என்று அச்சம் கொள்கிறேன். தயவு செய்து, நீ தமிழில் ஆழமாக வேர் ஊன்றும் வரை, உன்னுடைய பதிவுகளை, நன்கு தமிழ் அறிந்த ஒருவரை வைத்து Proof reading பார்த்து, தொடர்ந்து பதிவிடு.

பால கணேசன் உன்னை பற்றி என்னிடம் பேசும் போது “ஒருத்தனை என்ன தான் திட்டினாலும் அவன் நல்ல கவிதையை எழுதி காட்டுவேன்னு முனைப்போடு எழுதறான் பாத்தீங்களா, அவனால தான் பாஸ் சாதிக்க முடியும், உண்மையிலே ப்ரவீனை அந்த விஷயத்தில பாராட்டணும்” என்றார். நீ எழுத நிறுத்தும் முன் பால கணேசன் உன்னிடம் கண்டு புகழ்ந்த விடாமுயற்சியை இழக்க விரும்புகிறாயா என்பதை ஒரு கணம் யோசித்து பார், சகோதரனே….





Saturday, 1 September 2012

ஸ்வாதி ராஜீவ் (4)


எனக்கு பசிக்கல என்று பெற்றோரிடத்து என எறிந்து விழுவது, வண்டியில் செல்லும் போது கூட்ட நெரிசலில் அதீத வேகத்தில் செல்வது, கைப்பேசியின் இணைப்பில் ஏதாவது கோளாறென்றால் உடனடியாக வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு காய்ச்சி எடுப்பது, ஸ்வாதியிடம் சமாதானமாக போகும் படி பேச நண்பர்கள் போனில் அழைத்தால் எடுக்காமல் இருப்பது, நட்ட நடு ராத்திரியில் வண்டி எடுத்து கொண்டு ஆளில்லாத ரோட்டில் மென்மையான வேகத்தில் நகரை ஒரு உலா வருவது, பிச்சைகாரர்களோ சேல்ஸ்மேன்களோ அணுகினால் எதுவும் பேசாமல் அவர்களை முறைத்து பார்ப்பது, டி.வி ரிமோட் வேலை செய்யாத பட்சத்தில் ஓங்கி தரையில் எறியும் வரை போய் மனசு கேட்காமல் அருகில் இருக்கும் சோபாவை முஷ்டியால் ஓங்கி குத்துவது, வீட்டு நாய் எப்போதும் போல் பாசமாக வந்து வாலாட்டி முன் நின்றால் அதை உதாசீனப்படுத்துவது என விரக்தியின் உந்துதலில் ராஜீவ் இயங்கி கொண்டிருந்தான். அவனுள் எங்கிருந்தோ வந்து குடியமர்ந்த வேதனையை விரட்ட வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தான்.

என்னன்னவோ செய்தும் ராஜீவ்வின் ஆள்மன வெறுப்பு தகித்தப்படியே தான் இருந்தது. எத்தனையோ குறுஞ்செய்திகளை ஸ்வாதி தட்டி விட்ட போதும் ராஜீவ் அதனை மதிக்கவில்லை. அதில் பெரும்பாலானவை “call me” என்றும் “why you doing this to me?” என்றுமே இருந்தன. ஒரு கட்டத்தில் அவள் “Atleast speak me upto the end of our college, afterwards I’ll not force you to talk me, you can go away” என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள். ராஜீவ்விற்கு பரிதாபமாக இருந்தது ஒரு புறம் இருந்தாலும், அந்த செய்தியை பார்த்த மாத்திரத்திலே அவன் திகைத்து போனான். இன்னும் 3 மாதங்களில் கல்லூரி முடிவடைந்து விடும், அதற்கு மேல் ஸ்வாதியை பார்க்கவே முடியாதா, ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாள், பிரிவு பொறுக்க முடியாமல் அவளுள் இருக்கும் காதலை வெளிபடுத்துவாள் என்று பார்த்தால் இப்படி அனுப்பி விட்டாளே, பெரிய தவறு செய்து விட்டோம், மிக பெரிய தவறு செய்து விட்டோம், காதலை வற்புறுத்தியிருக்க கூடாது என மிகவும் வருந்தினான். இனி பேசுவதில்லை என்ற முடிவில் ராஜீவ் தான் ஆரம்பம் முதலே ஆர்வமாய் இருந்தான் எனினும், ஸ்வாதியும் அந்த முடிவில் ஆர்வத்தை திருப்புவது ராஜீவால் ஏற்று கொள்ள முடியவில்லை. கண்களில் கண்ணீரை முட்ட செய்தது. அவனது நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் பதற்றம் கொள்ள ஆரம்பித்தது. You can go away என்று எதற்காக அவள் சொல்ல வேண்டும், நான் அவளை அவ்வளவு வருத்தி விட்டேனா என்ற கேள்வி மலையை போல் தோற்றம் கொண்டு அவனை திகில் அடைய செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அவளுக்கு கால் செய்தான்.

“ஹலோ”

“ம்…. சொல்லு”

“எப்படி இருக்க”

“நல்லா இருக்கேன், இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா….”

“ப்ளீஸ் அதை பத்தி இப்ப பேச வேண்டாமே”

“சரி சொல்லு, நீ எப்படி இருக்க…”

”நீ என்னை மிஸ் பண்லையா”

“பண்ணேன்”

“அது ஏன் லவ்னு உனக்கு புரிய மாட்டேங்குது”

“உன் மேல எனக்கு பாசம் மட்டும் தான் இருக்கு, நான் லவ்வை பத்தியே இது வரைக்கும் யோசிக்கலை, கல்யாணம் மாதிரியான ஒரு ஜெயில் எதுவுமேயில்லை, என்னோட Cousin sisters கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்டப்படறத பார்த்துகிட்டே தான் இருக்கேன்…. நானும் ஒரு மெஷின் ஆகறத பத்தி இப்பவே கனவு காண சொல்றியா, எனக்கு அதுல கொஞ்சமும் விருப்பமில்லை ” – இவ்வளவு தெளிவான பதிலை சொன்ன பிறகு ராஜீவ்வால் மேற்கொண்டு அது தொடர்பாக பேச முடியவில்லை. நாமும் ஏன் லவ், கல்யாணம், குழந்தை என்று குறுகிய வட்டத்துக்குள்ளே சிந்தித்து கொண்டிருக்கிறோம், இதில் இருந்து வெளி வருவதை பத்தி யோசித்தாக வேண்டும், கண்டிப்பாக யோசித்தாக வேண்டும். யாருக்கு தெரியும் தான் காதலின் மேல் ஈடுபாடாற்றவனாக காட்டி கொள்வது கூட சமயத்தில் அவளை ஈர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என மாற்று வழியில் சிந்தித்து அந்த பிரச்சனைக்கு அத்தோடு ஒரு முற்று புள்ளி வைத்தான் ராஜீவ்.

”அப்புறம், என்ன முடிவு பண்ணியிருக்க…. இனிமேல் என்கிட்டலாம் பேசுவீங்களா மாட்டீங்களா…. அன்பு, நிர்மலாலாம் போன் பண்ணியும் கூட எடுக்கலையாமே”

“ஹேய், பேச மாட்டேன்னு சொல்றதுக்கு போய் யாராவது call பண்ணுவாங்களா… ”

”அப்ப பேசுவேன்னு வாயை திறந்து தான் சொல்லேன்…”

“பேசுவேன், போதுமா”

………..
……….
………..
…………
………..
………

என அன்றைய உரையாடல் ஆரம்பித்து பல புன்னகை பரிமாற்றங்களுடன் நெடு நேரம் நீள ஆரம்பித்தது. மாலை ஆரம்பித்த செல்போன் பேச்சு ராஜீவ் கட்டிலிலே தூங்கி போகும் வரை நீண்டது.

ராஜீவ்வின் அடுத்தடுத்த நாட்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது. கல்லூரி முடியப்போகும் தருணம் என்பதாலோ என்னவோ ராஜீவ்விற்கு நாட்கள் வெகு வேகமாக நகர்வதாக தெரிந்தது. காதலை தான் சொல்லி விட்டோமே என்ற தையரியத்தில் முன்பை விட ராஜீவ் ஸ்வாதியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை, அடிக்கடி செய்பவனாய் இருந்தான். இது ஸ்வாதிக்கு தெரிந்திருந்தாலும் அவள் அமைதியாய் அனுமதித்து கொண்டிருந்தாள். Slam books, Group photographs, outing என் ராஜீவ் நண்பர்களுடன் சந்தோஷமாக வலம் வந்தாலும், அவனுள் ஸ்வாதி தன் காதலை நிராகரித்து விட்டாளே என்ற எண்ணம் அவனை நெருடி கொண்டு இருந்தது. இது விஷயமாக நிர்மலாவிடம் தனித்து இருக்கும் போது பேசி விடலாம் என்று முடிவு செய்தான். நிர்மலா ஸ்வாதியின் அறையிலே தங்கி இருப்பதால் அவளிடம் பேசுவது குறித்த அவசியம் அவனுக்கு அதிகமாக பட்டது. ஸ்வாதி தன்னை காதலிப்பதை நிர்மலாவிடம் மட்டும் ரகசியமாக சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாய் ராஜீவ் உணர்ந்தான்.

ஒரு மதிய வேளையில் நிர்மலாவை கேண்ட்டினுக்கு வரவழைத்து ஸ்வாதி அப்படி ஏதாவது சொல்லியிருக்கிறாளா என்று கேட்டு பார்த்தான், அப்படி ஏதும் சொல்லவில்லை என தெளிவாக சொல்லி விட்டாள். அவளது பதில் அவனை சுருங்க செய்து விட்டது. நிர்மலா அவனுக்கு தைரியம் கூறுவதற்காகவும், அவனை தேற்றவும் 45 நிமிடங்களுக்கும் மேலாக அவள் பல ஆறுதல் வார்த்தைகளை அவள் சொல்லி கொண்டிருந்தாள். அவன் எதையும் காது கொடுத்து கேட்டு கொள்ளவில்லை, அவள் சொல்வதற்கெல்லாம் சரி சரியென்று தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தான். அவள் அவ்வளவு நேரம் பேசியதில் ராஜீவ்விற்கு எதுவுமே சுவாரஸ்யமாய் இருந்து விடவில்லை. ஆனால் அவள் சொன்ன ஒரே ஒரு விஷயம் ராஜீவ்விற்கு மிகவும் புதிதாக பட்டது.

“ஒரு பையன் எதையும் எதிர்பார்க்காம தன்னை லவ் பண்றான்னு அந்த பொண்ணுக்கு தோணிடுச்சுனா, அந்த பொண்ணால அவனை திரும்பி லவ் பண்ணாம இருக்கவே முடியாது”   

அவள் இதை சொன்னதிலிருந்து ராஜீவ்விற்கு இதுவே மனதில் ஓடி கொண்டிருந்தது, எங்கோ வாயில் நுழையாத பெயரை கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து இவள் வந்ததே இதை சொல்ல தானோ என்று ஆச்சர்யமடைந்தான். இது நாள் வரை கல்யாணத்தை எதிர்பார்த்து அவளை காதலித்தது கூட அவனது காதலுக்கு முட்டுகட்டையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகித்தான். அதனாலேயே பின்வரும் நாட்களில் ஸ்வாதியிடம் கல்யாணத்தை பற்றி பேச்செடுப்பதை தவிர்த்தான்.

நிர்மலாவிடம் அற்புதமாக ஓவியம் வரைவாள், கேட்டால் அவனது அண்ணன் சொல்லி கொடுத்தது என்பாள், அவள் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் கண்ணிற்கு அத்தனை இனியனவாக இருக்கும். எப்போதும் போன்ற ஒரு நாளில் நிர்மலா ராஜீவ் முன்னால் வந்து நின்று அவனை கண்ணை மூட சொல்லி சொன்னாள். அவள் ஒரு ஓவியத்தை எடுத்து அவன் மூடிய கண் முன் விரித்து வைத்ததற்கு பிறகு அவனை கண் திறக்க சொன்னாள்.

அம்மாவுடன் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு குட்டி பெண், பிளாட்பார்த்தில் சட்டையில்லாமல் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு ஒரு Lolly pop ஐ நீட்டுவது போல் வரையபட்டு, கீழே Giving is Loving என்று எழுதபட்டிருந்தது.

ராஜீவ்விற்கு அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருந்தது, கண்களில் ஒத்தி கொள்ளலாம் என்பது போன்ற ஓர் அழகு. அந்த மிட்டாயை வாங்கும் அந்த சிறுவனின் கண்களில் இருக்கும் பரவசம் ராஜீவ்வை மிகவும் சிலிர்ப்படைய வைத்தது. அதை பார்த்து கொண்டிருக்கும் போதே “இது உனக்கு தான், வெச்சுக்கோ” என்றாள். அந்த நிமிடம் ஓவியத்தில் இருந்த சிறுவனின் பரவசம் ராஜீவ்வின் கண்களில் மிளிர்ந்தது. நிர்மலா எதற்காக இந்த ஓவியத்தை நமக்கு அளித்திருக்கிறாள் என்பதை உள்ளூர புரிந்தவனாய் நன்றியுடன் அந்த பரிசை ஏற்று கொண்டான்.

அடுத்த நாள் காலேஜ் கேண்டினுக்கு ஸ்வாதியை ராஜீவ் தனியாக வர சொல்லியிருந்தான். ஸ்வாதியும் மாலை 5 மணிக்கு மேல் வருவதாக சொல்லி நீல வண்ண கலரில் ஒரு சுடிதாரை அணிந்து சென்றிருந்தாள். அங்கே இவள் வருவதற்கு முன்னரே ராஜீவ் காத்து அமர்ந்திருந்தான். ராஜீவ் கறுப்பு கலரில் ஒரு டீ சர்ட் போட்டு, ஒரு Coolers போட்டு வந்திருந்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த helmetஐ பார்த்து அவன் வண்டியில் வந்திருக்கிறான், என்பதை அவளால் எளிதில் யூகிக்க முடிந்தது. போய் ஹாய் சொல்லி அவன் எதிரில் அமர்ந்தாள். அவனும் பதிலுக்கு ஹாய் சொல்லி புன்னகைத்தான். என்ன விஷயமாக வர சொன்னாய் என்று கேட்டதற்கு, “சும்மா தான், உன்னோட சேர்ந்து பானி பூரி சாப்பிடனும் போல தோணிச்சு அதான் வர சொன்னேன்” என்றான். அவள் “இதுக்கு தான் வர சொன்னியா, சரி போய் வாங்கிட்டு வா” என்றாள். அவன் பதிலுக்கு நீ போய் வாங்கிட்டு வாயேன் என்று சொல்லி கண்களால் கெஞ்சினான். அவள் அவளது Hand bagல் உள்ள purse ஐ மட்டும் எடுத்து கொண்டு, hand bagஐ அவனிடமே கொடுத்து சென்றாள். இதற்கு முன் 10 ரூபாய் இருந்த பானி பூரி, 12 ரூபாய் ஆகி விட்டதற்காக கேண்ட்டினை சபித்து கொண்டே டோக்கனை வாங்கினாள். டோக்கனை வாங்கி கவுண்ட்டருக்கு சென்றால் இவளுக்கு முன்னரே 4 பேர் வரிசையில் பானி பூரி டோக்கனை கையில் வைத்து கொண்டு வரிசையில் வைத்து காத்து கொண்டிருந்தனர். காத்திருந்து அந்த பானி பூரிகளை வாங்கி வர வேண்டியதாய் போயிற்று. 2 பானி பூரி தட்டுகளையும் அத்தனை லாவகமாக எடுத்து வந்தும், தட்டு லேசாக சாய்ந்ததில், பானி பூரியின் புளி தண்ணீர் (பானி) 2 துளி அவளது நீல சுடிதாரின் மேல் பட்டு விட்டது. அவள் வந்து அமர்ந்ததும் “ஹேய் தண்டம் நீயே போய் வாங்கிட்டு வர வேண்டியது தானே, பாரு என் சுடிதார்ல கறை பட்டுருச்சு” என்று பொய்யாய் கோவித்து கொண்டாள். இவனும் “ஐயையோ, என் கறுப்பு ட்ரஸ்ல அழுக்கு பட்டுருச்சுனா எங்க அம்மா என்னை திட்டுவாங்கல்ல, அதனால தான் உன்னை அனுப்பினேன்” என்று சொல்லி சிரித்தான். ”பன்னி, கறுப்பு டிரஸ்ல அழுக்கு பட்டா என்ன டா ஆய்ட போது” என்று கையில் இருந்த purseஐ தூக்கி அவன் மேல் எறிந்தாள். சாப்பிட்டு விட்டு ஆரம்பித்த பேச்சு, கொஞ்ச நேரத்திலேயே முடிவிற்கு வந்தது. ராஜீவ்வே ஸ்வாதியை நேரம் ஆகி விட்டதால் கிளம்ப சொன்னான்.

அவள் கிளம்புவதற்கு எழுந்து நின்று, அவள் purse ஐயும் hand bagஐயும் கொடுக்க சொன்னாள். அவன் அவளது purseஐ கொடுத்து விட்டு, ஒரு புதிய அழகான hand bagனை அவள் முன் நீட்டினாள்.

”டேய், இது என்னுடைய hand bag இல்லை டா” என்று கிட்ட தட்ட  பதறினாள்.

“இது என்னோட gift, வாங்கிக்கோ”    

“gift ஆ, எதுக்கு…”

“உன்னுடைய பழைய bag ல தான் முன்னாடி இருக்குற குட்டி ஜிப் ஜாம் ஆய்டுச்சே அதுக்கு தான்” என்று சொல்லி அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த அவளது பழைய bagஐ எடுத்து காட்டினான்.

“உனக்கு எப்படி தெரியும்”

“உங்க ஏரியா கவுன்சிலர் போன் பண்ணி சொன்னாங்க…”

அவள் முகத்தில் வெட்கம் மிளர சிரித்து கொண்டே அடை வாங்கி “நல்லா இருக்கு, யார் செலக்ட் பண்ணது” என்று கேட்டாள்.

“உங்க கவுன்சிலரே தான்”

“டேய், எங்க ஏரியா கவுன்சிலர் 2 நாள் முன்னாடி இறந்து போய்ட்டாரு, அதனால எங்க ஏரியாக்கு கவுன்சிலரே இல்லை, ஓவரா கதை விடாத… re-election வெச்சா தான் உண்டு”

வைத்த கண் வாங்காமல் அதை பார்த்து, பின் உள்ளே எத்தனை ஜிப் இருக்கிறது என்பதை பார்க்க bagஐ திறந்தால் அவளின் அத்தனை பொருட்களும் புதிய bagல் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ராஜீவ்வை பார்த்து நன்றி சொல்லி, பழைய hand bag ஐயும் கொடுக்க சொல்லி கையை நீட்டினாள், அதற்கு அவன் இது என்னிடமே இருக்கட்டுமே என்று சொல்ல, அவள் சிரிப்புடன் சம்மதித்து அறைக்கு கிளம்பினாள். ஸ்வாதி அறைக்கு போனவுடன் அவளது டைரியில் ”இன்றைய நாள் என் வாழ்வின் அழகான நாள்” என்று அன்றைய நாளில் எழுதி வைத்து கொண்டாள்.

கல்லூரி நாட்கள் வெகு சீக்கரம் முடிந்ததாய் போல் தான் எல்லோருக்கும் பட்டது. கல்லூரி முடியவிருக்கும் கடைசி 2 மாதங்களில் மட்டும் ராஜீவ் ஸ்வாதியை 7 முறை “இன்றைய நாள் என் வாழ்வின் அழகான நாள்” என்று அவளது டைரியில் அவளை எழுத வைத்திருந்தான். புடவை ; பார்பி பொம்மை ; குட்டியான ஒரு  pink coloured pillow ; sonata ladies watch ; coffee mug ; eva women’s body spray ; dairy milk silk.

கல்லூரி முடிந்ததும், அன்பு அவனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று கொஞ்ச நாள் இருந்து விட்டு, மீண்டும் சென்னைக்கே வேலை தேட வந்துவிட்டான்.

ரோஹித் அவனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் இருந்த படியே வேலை தேடி கொள்வதாக சொல்லிவிட்டான்.

ராஜீவ்வின் சொந்த ஊரே சென்னை என்பதால், அவன் வீட்டில் வேலை தேடுவதில் அவனுக்கு சிக்கல் இருந்து விடவில்லை.

நிர்மலா கடலூரிலே இருந்து கொள்வதாகவும் ஏதாவது நேர்காணல் இருக்கும் பட்சத்தில் மட்டும் சென்னை வந்து விட்டு போவதாகவும் சொன்னாள்.

ஸ்வாதி அவளது சொந்த ஊரான சேலத்தில் கொஞ்ச நாள் இருந்து கொள்வதாகவும், வீட்டில் கல்யாணம் செய்து கொள்ள நிர்பந்தித்து கொண்டிருப்பதால், அவர்களை கல்யாணம் வேண்டாம் என்று சமாதான படுத்தி விட்டு அதன் பின் தான் வேலை தேடுவதை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறினாள். ஸ்வாதி இதை ராஜீவ்விடம் சொன்ன போது, ராஜீவ்விற்குள் எங்கிருந்தோ வந்த மிக கனமான கல் நெஞ்சில் அறைந்து, அது நெஞ்சிலே தங்கி விட்டாற் போல் கனத்தது.

ஆனால் யார் செய்த புண்ணியமோ ஸ்வாதி வீட்டில் அவளது வேண்டுகோளிற்கு அத்தனை முரண்டு பிடிக்கவில்லை, கல்யாணத்தை 2 வருடம் ஒத்தி போட சம்மதம் வாங்கி இருந்தாள். ஸ்வாதி சென்னைக்கு வந்து அவளது சித்தி வீட்டில் இருந்த படியே வேலை தேட ஆரம்பித்தாள். வேலை தேடிய ஒரே மாதத்தில் வேலை கிடைத்தது ஸ்வாதிக்கு மட்டும் தான். அவளுக்கு HCL technologies கம்பெனியில் வேலை கிடைத்தது.

ராஜீவ்வும் 2 மாதம் வேலை தேடி பார்த்தான், எந்த பெரிய நிறுவனமும் அவனை தேர்ந்தெடுத்து கொள்ளவில்லை. அதனால் அவன் அவனது அப்பாவின் கம்பெனியையே பார்க்க போய் விட்டான்.

அன்புவிற்கும் கூட ஒரு சின்ன கம்பெனியில் ஒரு சொல்லி கொள்ளும் படியான ஒரு வேலை கிடைத்தது. ஆனால், அவனால் அந்த வேலையிலும் ரொம்ப நாள் தங்க முடியவில்லை. அதன் பின்னும் அவனுக்கு அடுத்தடுத்து 3 கம்பெனியில் வேலை கிடைத்தது, ஆனால் எதிலும் அவன் பிடிமானமாக வேலை செய்யவில்லை.

”முதலாளிக்கு கும்பிடு போட்டுகிட்டுலாம் என்னால வேலை பார்க்க முடியாது, அவன் யார் ரா என்னை டைம்க்கு வர சொல்றதுக்கு, ராஸ்கல், அதான் நீயும் வேணா உன் வேலையும் வேணாம்னு வந்துட்டேன்” என்ற காரணத்தையே ஒவ்வொரு கம்பெனியில் இருந்தும் அவனை dismiss பண்ணும் போதும் அன்பு  சொன்னான். ராஜீவ்வும் அன்பை தன்னுடன் வந்து இருந்து கொள்ளும் படி கூப்பிட்டான், அவன் நமது நட்பு கெட்டு விட கூடாது என்று பார்க்கிறேன் என்று மறுத்து விட்டான்.  

ரோஹித்தும், நிர்மலாவும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் வேலை தேடியும், எந்த வேலையும் கிடைக்காமல் கஷ்டபட்டனர். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் Distinctionல் pass செய்தவர்கள்.

ஒரு நாள் திடீரென்று, அன்பு எல்லோரையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது, எல்லோரும் வரும் ஞாயிறு சந்திக்கலாம் என்று அனைவருக்கும் போன் செய்து சொன்னான். முழுதாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சந்திக்க இருப்பதால் எல்லோரும் சம்மதித்து வந்தனர். அந்த சந்திப்பு எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் ஒரு சம்பிரதாய சந்திப்பு என்று நினைத்தே எல்லோரும் வந்திருந்தனர். ஆனால் அன்பு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்கே அவர்கள் எல்லோரையும் அழைத்திருந்தான்.


                                           (தொடரும்….)