அவனுக்கு வந்த கனவு போலவே
அவளுக்கும் ஒரு கனவு வந்தது குறித்து ராஜீவ்க்கு ஆச்சர்யம் பீறிட்டது. இதை பற்றி
அப்போதே கேட்டு விடலாமா என்று யோசித்து, ஹாஸ்பிட்டலில் வைத்து வேண்டாம் என்று
விட்டுவிட்டான். சற்று நேரத்திலே நிர்மலாவும், ஸ்வாதியும் விடைபெற்று ஹாஸ்டல் கிளம்பினர்.
அன்பு தான் ஹாஸ்பிட்டல் வாசல் வரை சென்று ஆட்டோ ஏற்றி அனுப்பினான். ரோஹித்
அவர்களுடன் போவதை தவிர்த்து என்னுடனே இருந்து கொண்டான். சற்றும் எதிர் பார்க்காத
போது, “நீங்க அவங்களை லவ் பண்றீங்களா ராஜீவ்” என்று கேட்டு விட்டான், ராஜீவிற்கு
என்ன சொல்வது என்று ஒரு கணம் குழப்பம் வந்து விட்டது, உண்மையை சொன்னால் எப்படி
எடுத்து கொள்வானோ என்று சற்று தயக்கத்துடனே ஆமாம் என்று ஒத்து கொண்டான். அவன்
முகம் மலர்ந்து சந்தோஷத்துடன் ”அப்பிடினா சீக்கீரம் சொல்லிடுங்க ராஜீ, அவங்க
உங்களுக்கு ஏத்த Pair தான், அதில சந்தேகமே இல்லை” என்று சொன்ன போது தான்
ராஜீவ்க்கு அப்பாடா என்றது. உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே என்று சொல்ல
வாயெடுத்து கேட்காமல் விட்டு விட்டான், அதை எப்படி கேட்பது என்று வெட்கத்தில் தலை
குனிந்து கொண்டான், அவன் மலர்ந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது வேறு திசை
பார்த்தான். அவனின் முக மாற்றத்தை கவனித்த ரோஹித் என்ன ஆச்சு என பதற்றமாய்
விசாரித்தான், ஒன்னுமில்லை என்று ராஜீவ் மழுப்ப பார்த்தான். பிறகு அவனாக புரிந்து
கொண்டு “ பாஸ், நான் 1st yearல ஸ்வாதியை பண்ணதெல்லாம் லவ்வே இல்லை
பாஸ், 7 வருஷம் boyses schoolல படிச்சிட்டு இங்க வந்து பார்த்தா, பொண்ணுங்களா
இருக்கவே, ஆவேசப்பட்டுட்டேன், இப்ப அதையெல்லாம் நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்கு,
அதையெல்லாம் இன்னுமா நினைச்சுட்டிருக்கீங்க , விடுங்க பாஸ், ரொம்ப பீல் பண்றவங்களா
பார்த்தா எனக்கு சிரிப்பு வந்துரும்” என்று சொல்லி முடிக்க ராஜீவ் சிரித்து
விட்டான். ராஜீவ் சிரிக்க , ரோஹித்தும் சிரித்து விட்டான். அந்நேரம் பார்த்து
அன்பு உள்ளே நுழைய, அவன் எதுக்கு டா சிரிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க அவர்கள்
அவனுக்கு கதையை முதலில் சொல்ல வேண்டியதாய் போயிற்று. முழுதும் கேட்டு விட்டு ”இதுக்கு
தான் புரண்டு புரண்டு சிரிச்சீங்களா, எனக்கு சிரிப்பே வரலையே” என்று சொல்லி
அவர்களை வெறுப்பேற்றி ஹாஸ்பிட்டலை விட்டு எல்லோருமாக ராஜீவ் வீட்டிற்கு
கிளம்பினர். ராஜீவ்வை தானே போய் கொள்வதாக சொல்லியும் அவர்கள் வலுகட்டயமாக அவனை
வீட்டில் விடுவதற்காக கிளம்பினர்.
வீட்டிற்குள் ராஜீவ்வும் அவன்
சகாக்களும் சரியாக உள்ளே நுழையும் போது, ராஜீவ்வின் அம்மா கமலாவும், அப்பா
பாலசுந்தரமும் இவனை பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டல் கிளம்பி கொண்டிருந்தனர். கொஞ்சம்
இல்லையேல் காரில் கிளம்பி இருந்திருப்பார்கள். இவர்களை பார்த்ததும், ராஜீவ்வின்
அம்மா கண்களில் நீரை வைத்து கொண்டு ராஜீவ்வை கட்டி அணைத்து உள்ளே கூட்டி
சென்றார்கள். நிர்மலா தான் இவர்களுக்கு விஷயத்தை சொல்லி விட்டு இருந்தாள்,
ராஜீவ்வின் அம்மா அரை நாள் லீவ் விடுத்து வந்திருந்தார்கள். ராஜீவ்வின் அம்மா
ஹாஸ்பிட்டலில் என்ன மருத்துவம் செய்தார்கள் என்று அன்புவிடமும் ரோஹித்திடமும்
விசாரித்து தெரிந்து கொண்டார்கள். மனது கேட்காமல் ராஜீவ்வின் அம்மா அவர்களது
குடும்ப மருத்துவரை தொடர்பு கொண்டு வந்து பார்த்து விட்டு செல்லுமாறு கேட்டு
கொண்டார். ராஜீவ்வும், அவரது அப்பாவும் அதெல்லாம் தேவையில்லை என்று எவ்வளவோ
தடுத்தும் கூட ராஜீவ்வின் அம்மா கேட்பதாய் இல்லை. ராஜீவ், அவர்கள் நண்பர்கள்
இருவரையும் வீட்டிற்கு போக சொல்லி அவனது அறையில் வந்து படுத்து கொண்டான். அவனுடைய
கைகள் அவனது செல்போனை எடுத்து ஸ்வாதியிடம் பேசலாம் என்று பரபரத்து கொண்டிருந்தது. ஒரு
மணி நேர தனிமை அவனுக்கு அப்போது மிக தேவையாக இருந்தது. ஆனால், அவனது அப்பாவும்,
அம்மாவும் இவனை கவனித்து கொள்வதற்காக இவனை கொஞ்சமும் விலகாது இருந்தார்கள்.
ராஜீவ்வின் அம்மா சட்டு சட்டென்று அழ தொடங்குபவராய் இருந்தார். “நான் வேணும்னா
வேலையை விட்டு உன்னை பத்திரமாய் பாத்துகிட்டுமா கண்ணு” என்று கேட்டு ராஜீவ்வை
கலவரபடுத்தினார்கள். ராஜீவ் அதெல்லாம் வேண்டாம் என்று தான் சின்ன குழந்தை இல்லை
என்றும் தான் எருமை மாடு கணக்காக வளர்ந்தாயிற்று என்றும் சொல்லி சமாதான படுத்த
வேண்டியதாயிற்று. இவன் தன்னை எருமை மாடு என்று பேச்சு வழக்கில் சொல்லி
கொண்டிருக்கும் போது, பாலந்தரத்திடம் ஒரு நகைப்பு ஏற்பட்டதை யாரும்
பார்த்திருக்கவில்லை. சற்று நேரத்திலே ராஜீவ்வின் குடும்ப மருத்துவர் வந்து இவனை
சரிபார்த்து, ஒன்றும் பயப்படுவதிற்கில்லை என்று ஆறுதலை மட்டும் சொல்லி, Consulting
fees ஆக 2000 ரூபாயை பாலசுந்தரத்திடம் வாங்கி சென்றார்.
அவர் சென்ற பிறகு தான்
ராஜீவ்வை அவனது அறையில் படுக்க சொல்லி கதவை சாத்தி சென்றார்கள். அவனது அம்மா சென்ற
சற்று நேரத்திலே சித்ரா உள்ளே நுழைந்து ராஜீவ்வை நலம் விசாரித்து, அனுமார்
கோவிலில் பெற்ற செந்தூரத்தை ராஜீவ் நெற்றியில் பூசி, ஒரு அனுமார் அட்டை படத்தை
தலையணை அடியில் வைத்து சென்றாள். அப்பாடா என்று நிம்மதியாக அவள் சென்ற பிறகு கதவை
தாளிட்டு கொண்டான்.
ராஜீவ் ஸ்வாதிக்கு போன்
செய்யலாம் என்று போனை கையில் எடுத்த போதே அவளிடம் இருந்து “hw u feel nw?” என்று sms வந்தது. அதை பார்த்து ரொம்பவும்
உற்சாகமாகி அவளுக்கு போன் செய்தான். இவ்வளவும் நாளும் பேசிய பெண் தான் என்றாலும்,
இன்று அவளிடம் பேசுவது வித்தியாசமான ஒன்றாய் இருந்தது, அவன் காதலை சொல்லியதற்கு
வேண்டாம் என்று சொல்லி விட்டாலும், இப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று
தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவன் கைவெட்டு வலியினை எல்லாம் மறக்க செய்திருந்தது.
ராஜீவ் காலேஜ் போகவில்லை என்பதற்காக அவளும் ஏன் போகாமல் விட வேண்டும்,
ராஜீவ்விற்கு வந்த கனவு அவளுக்கும் ஏன் வர வேண்டும் என்பன போன்ற இயல்பான
கேள்விகளுக்கு பின்னே காதலே இருக்க கூடும் என்று நினைக்கும் போதே ராஜீவ்விற்கு
மனதிற்குள் குளிர்ச்சியான உணர்ச்சி ஏற்பட்டது.
”ஹலோ”
“சொல்லு ராஜீ… எங்க இருக்க “
“நீங்க கிளம்பன கொஞ்ச
நேரத்திலே நாங்களும் கிளம்பிட்டோம், இப்ப வீட்ல இருக்கேன்… என்ன பண்ற…”
“சும்மா ரூம்ல பேசிகிட்டு
இருக்கோம்… நீ என்ன பண்ற..”
”ரெஸ்ட் எடுத்துட்டு
இருக்கேன், நேத்து சொன்னது பத்தி
யோசிச்சியா?”
“எது?”
“உன்னை பிடிச்சிருக்குனு
சொன்னேனே…. ஏன், மறந்துட்டியா?”
“அது தான், அப்பவே
சொல்லிட்டேனே, என்னால இது பத்தி யோசிக்க முடியாதுனு”
“So…”
” So னா என்னா சொல்றது….”
“என்ன காரணம்…”
”கண்டிப்பா தெரிஞ்சாகனுமா”
“நாங்க பணக்காரங்க, அது தானே…
பணக்காரங்கனா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒருத்தன் ஏழையா பொறக்கறது தப்பில்லை,
ஏழையா சாகறது தான் தப்பு, ஒருத்தன் பணம் சம்பாரிக்கிறது, அவ்ளோ பெரிய தப்பா… ஒண்ணு
புரிஞ்சிக்கோ…”
“ஹேய் நிறுத்து நிறுத்து… நீ
சொல்றதெல்லாம் யாரு கேக்கறது, அதெல்லாம் ஒன்னும் இல்லை… எனக்கு ஒரு தங்கச்சி
இருக்கு, அதை நான் என் பணத்துல படிக்க வைக்கனும்னு ஆசை படறேன், அடுத்த வருஷம் அவ
+2 முடிச்சு வெளிய வர்றா… அதுக்குள்ள நான் வேலை தேடி செட்டில் ஆகனும்..
அதுவுமில்லாம எங்க அப்பா அம்மா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க, அழுது
கெஞ்சி கூட சம்மதம் வாங்க எனக்கு விருப்பமில்ல..
என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது சிக்கலாகிடும், அதுவுமில்லாம எங்க
கிராமத்துல எங்க வீட்டை பத்தி எப்படி ஊருக்குள்ள பேசிப்பாங்கனு சொன்னா, நீயே உன்
லவ்வை தூக்கி எறிஞ்சிறிவ… அவ்வளவு மட்டமா பேசிப்பாங்க… ”
“இத்தனை negatives யோசிக்கிற
நீ ஏன் ஒரே ஒரு positive கூட யோசிக்க மாட்டிங்கிற”
“ஏன்னா அப்படி ஒண்ணு இல்லை…”
“நிஜமாலுமே நீ என்னை லவ்
பண்லையா…”
“என்னை மாதிரி ஒரு பொண்ணால
அதை பத்தி நினைச்சு கூட பார்க்க முடியாது ராஜீவ்… உனக்கோ எனக்கோ அதுக்கு கொடுத்து
வைக்கல ”
”கொடுத்து வைக்கலன்னுலாம்
சொல்லாத, அப்பறம் ஏன் உனக்கும் எனக்கும் ஒரே கனவு வரணும்”
”என்ன கனவு…”
”இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல
சொன்னேனே…”
“ஹய்யோ ராஜீவ், உனக்கு வந்த
அதே கனவு எனக்கு வரல, என் கனவுல நீ நான் ரோஹித் அன்பு நிர்மலா எல்லோரும் ஒரு ஜீப்ல
ஒரு forest area போற மாதிரி தான் வந்தது… “
“இதை ஏன் அப்பவே சொல்லல”
“அப்பறமா சொல்லிக்கலாம்னு
தான் விட்டுட்டேன், ஆனா அதுக்குள்ள நீ இப்பிடி எடுத்துருக்க …. “
”நீ பொய் சொல்ற…”
“நான் ஏன் பொய் சொல்னும்…”
“தெரியல… ஆனா நீ பொய் சொல்ற…
அதை விடு, நான் காலேஜ் போலங்கறதுக்காக நீயும் ஏன் போகாம விட்ட…”
“ஹய்யோ… இதையும் நீ..”
“சரி விடு ஸ்வாதி, இதுக்கும்
ஏதாவது சொல்ல தான் போற… சரி இனிமேல் என்ன..”
“இனிமேல் இது பத்தி பேச்சு
எடுக்க வேண்டாமே ராஜீ… நாமே நண்பர்களாகவே இருந்திடலாமே..”
”சரி, நானும் கூட இனிமேல் இதை
பத்தி பேச பிரிய படல, ஆனா இனி நண்பர்களாக இருக்கிறதெல்லாம் சாத்தியமில்ல.. அதனால
உங்கிட்ட இனிமேல் பேச வேண்டாம்னு பார்க்கிறேன்….”
“என்ன இது, இத்தனை நாள்
பிரண்டா இருந்த உன்னால இனிமே இருக்க முடியாதா என்ன…”
”நான் பர்ஸ்ட் இயர்லயே உன்னை
லவ் பண்ண ஆரம்பிச்சிட்டனு உனக்கு தெரியாது, அதனால இனிமே பிரண்டா பழகுறதுலாம்
சான்ஸே இல்லை…”
”பொய் சொல்லாத…”
“நான் ஏன் பொய் சொல்னும்”
”எனக்கு எவ்ளோ guilty ஆ
இருக்கு தெரியுமா…”
”அதுக்கு என்னால என்ன பண்ண
முடியும், ஒரு ஸாரி தான் கேக்க முடியும் ”
“இப்படி பேசாத ராஜீ, ரொம்ப
வலிக்குது…”
“ ஹேய், எனக்கு எவ்ளோ
வலிக்குது தெரியுமா… உனக்கு தான் என்னை பார்த்தா விளையாட்டா இருக்கு ”
” உனக்கு
வலிக்குதுங்கறதுக்காக என்னை எங்க வீட்டை மறந்து உன்னோட வர சொல்றியா ராஜீ “
” நான் அப்படிலாம் சொல்லல
ஸ்வாதி, சரி அதெல்லாம் விடு, நீ என்னை லவ் பண்ணலைன்னா மட்டும் மேற்கொண்டு நாம
பேசிக்கலாம், இல்லைன்னா வேண்டாம்…”
“பிளாக்மெய்லா ராஜீவ்?”
”என்னை
கோவப்படுத்துறதுக்காகனே கேள்வி கேக்காத, 3 வருஷத்துக்கும் மேல உன்னை
மனசுக்குள்ளேயே லவ் பண்ணியிருக்கேன், நீ எனக்கில்லைனு தெரிஞ்சதுக்குப்பறமும் உன்
கூட நான் எப்படி பேசி பழக முடியும்… எனக்கு கஷ்டமா இருக்காதா…”
”ஏன் அதே மாதிரி என்னை
யோசிச்சு பார்க்க மாட்டிங்கற… 3 வருஷத்துக்கும் மேல உன் கூட நான் பிரண்டா
இருந்திருக்கேன், உன் கூட என்னால எப்படி பேசாம இருக்க முடியும்…”
”ஏன், அன்பு, ரோஹித்லாம்
இருக்காங்கல்ல…”
”செருப்பால அடிப்பேன். என்னை
என்னான்னு நினைச்சிட்டு இருக்க… உன்னை பார்க்கற மாதிரி தான் அவங்களையும்
பார்க்கிறனா… அவங்களையெல்லாம் எனக்கு உன் மூலமா தான் தெரியும்… ரோஹித்தை பத்தி
எப்படி உன்னல பேச முடியுது, அவன் இது வரைக்கும் என் கிட்ட பேசி நீ பார்த்து
இருக்கியா…. .“
“என்னை விட்டுருனு தான்
சொல்றேன், நான் வேற எதையும் mean பண்ணல…”
“அது எப்படி டா முடியும்…”
“அதை பத்தி வருத்தப்படற
நிலைமைல நான் இல்லை”
என்று சொல்லி இணைப்பை
எதிர்பார்க்காத போது துண்டித்து விட்டான். துண்டித்த பிறகு தான், தான் எவ்வளவு
ஆணாதிக்கமாகவும், கீழ்த்தனமாகவும் நடந்து இருக்கிறோம் என்றே அவனுக்கு புரிந்தது. எது
நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கட்டும், இது ஒரு முடிவிற்கு வருவது எவ்வளவோ
பரவாயில்லை, எதற்காக மனதினுள் வீண் ஆசையை வளர்க்க வேண்டும் என்று மனதை சமாதான
படுத்த முயன்றான். அடுத்த 2 விநாடிகளிலே ஸ்வாதியிடமிருந்து அழைப்பு வந்தது. ராஜீவ்
எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து ஸ்வாதி பல முறை தொடர்ந்து கால் செய்தும் ராஜீவ் ஏற்க
மறுத்தான்.
அழைப்பை ஏற்காததால், போனை
எடுக்க சொல்லி sms அனுப்பினாள். எதற்கும் பதலளிக்காமல் வெறுப்பின் உச்சத்தில்
இருந்தான். அவன் அடைந்திருக்கும் வெறுப்பு எதன் மேல், யார் மேல் என்பதை கூட
தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒரு குருட்டு தனமான ஒரு வெறுப்பில் இருந்தான்.
அவன் செயல்கள் எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒன்று என்று தெரிந்தாலும்,
அவனுக்கு என்ன மாதிரியான ஆற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் அவள் வரிசையாக அனுப்பி
கொண்டிருந்த குறுஞ்செய்திகளை மட்டும் திரையில் பார்த்து கொண்டிருந்தான்.
(தொடரும்…..)