Friday, 29 June 2012

A Review about Zero degree


நான் ஆரம்பத்தில் சாரு நிவேதிதாவை பற்றியும், ஜீரோ டிகிரி நாவலை பற்றியும் ஒன்றையும் அறிந்திருக்கவில்லை. எனது நண்பன் ப்ரவீன் தான், விகடனில் வெளி வந்த “மனம் கொத்தி பறவை” தொடரை பார்த்து சாரு நிவேதிதாவால் ஈர்க்கப்பட்டான். ஈர்ப்பின் விளைவாய், சாருவின் நாவல்களின் ஏதேனும் ஒன்றினை வாங்கி முயற்சி செய்து பார்க்க ஆர்வமானான். நான் சென்னையில் இருப்பதால் என்னிடம் சொல்லி ஜீரோ டிகிரி நாவலை கூரியர் செய்து விடுமாறு கேட்டான். கடை கடையாய் ஏறி இறங்கி பார்த்தேன், எதிலும் கிடைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக தி.நகரில் உள்ள ஓர் புத்தக கடையில் பெரிய தேடலக்கு பின் கிடைத்தது. நாவலின் 5 பக்கம் கூட புரட்டி இருக்கவில்லை, எழுத்தாளரை பற்றியும் எழுத்தை பற்றியும் மொத்தமாக அருவருப்பான அபிப்ராயம் வந்து விட்டது. அதன் பின் அந்த புத்தகத்தை அவனிடமே கூரியர் செய்து அவனையே  படிக்க சொன்னேன், படித்து விட்டு அவனது கருத்தையும் முன்மொழியுமாறு கேட்டு கொண்டேன். படிக்கும் போது நான் எப்படி உணர்ந்தேனோ, அவனும் அதே போல் தான் உணர்ந்தான், ஆனால் அவன் என்னை போல் வாசிப்பதை நிறுத்தவில்லை, தொடர்ந்து படித்தான். காசு கொடுத்து வாங்கியாயிற்று இனி என்ன செய்ய முடியுமென்று படிக்கிறானோ என்று நினைத்து கொண்டேன். ஆனால், நாவல் முழுதையும் படித்து விட்டு, ஒன்றுமே புரியவில்லை, ஆனால் நாவல் பிடித்திருந்தது, நீயும் படித்து பார் என எனக்கு பரிந்துரைத்தான். அவன் எந்த புத்தகம் படித்தாலும் அந்த புத்தகத்திலே அதற்கான விமர்சனத்தையும் எழுதி விடும் பழக்கமுடையவன் . அவன் ஜீரோ டிகிரி நாவலுக்கு என்ன விமர்சனம் அளித்திருக்கிறான், என பக்கங்களை திருப்பி பார்த்தால், அதில் இருந்தது, பெரியதாய் ஒரு கேள்விக்குறி.

அந்த கேள்விக்குறியே ஒரு தூண்டிலாய் வினையாற்றி என்னை மீனை போல் கொத்தி இழுத்து, ஜீரோ டிகிரி நாவலை படிக்க தூண்டியது. அவன் கேள்விக்குறிய இடத்தில் நானும் கேள்விக்குறி இட கூடாது, என்று தீர்மானித்து படிக்க முடிவு செய்தேன். ஆனால் எடுத்த எடுப்பிலே ஜீரோ டிகிரியை தொட வேண்டாம் எனவும் சாருவின் இன்ன பிற புத்தகங்களை படித்து விட்டு அதன்பின் ஜீரோ டிகிரியை முயற்சித்து பாருங்கள் என வாசிப்பு அனுபவமிக்க சில நண்பர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். அதன்படி கடவுளும் நானும், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும், எக்ஸைல், மனம் கொத்தி பறவை புத்தகங்களை முடித்து விட்டே ஜீரோ டிகிரியை அணுகினேன்.

என்ன ஆச்சர்யம்… இப்போது அந்த முதல் 5 பக்கங்கள் என்னை உறுத்தவே இல்லை, மாறாக வெகு சுவாரஸ்யமான ஒன்றாய் இருந்தது. ஒரு தந்தை ஒரு மகளுக்கு எழுதும் கடிதத்துடன் நாவல் ஆரம்பிக்கும், அதில், மகளே இப்போது நீ கனவு கண்டு கொண்டிருக்கலாம், பீடி சுற்றி கொண்டிருக்கலாம், நாடக ஒத்திகை பார்த்து கொண்டிருக்கலாம் என 62 ‘லாம்’கள் தொடர்ந்து வருகிறது. சற்று நிதானித்து பார்த்தேன், இத்தனை வகையான பெண்களை எப்படி இவர் ஒரே கடிதத்தின் மூலம் கொண்டு வர எத்தனித்தார் என ஆச்சர்யமாய் இருந்தது. அதற்கு அடுத்தாற்பிலே “கோட்டிக்குப்பனின் மொழிபெயர்ப்புகள்”… அதை படித்து முடித்தவுடன் தான் எனக்கு அந்த நாவலின் மேல் ஓர் நம்பிக்கையே வந்தது. அதன் பின் இறக்கை கட்டி கொண்டு 247 பக்க நாவலை 4 தினங்களிலே பரபரவென படித்து முடித்தேன். (பொதுவாக, ஒரு 300 பக்க புத்தகத்தை முடிக்க எனக்கு குறைந்தப்பட்சம் 80 நாட்களாவது தேவை).

இனி நாவலுக்கான விமர்சனம்….

நாவல் மொத்தமும் எந்த இடத்திலும் எழுத்தாளர் எங்கேயும் கருத்து சொல்லவோ, கதை சொல்லவோ முற்படவில்லை. நாவல் மொத்தமும் நிகழ் காலத்தில் நிகழும் அநீதிகளையும், ஒரு பெண்ணின் தற்கால நடைமுறை அசாத்தியங்களையும், மனித மனங்களின் உணர்வுகளையும், சில மனிதர்களின் அபத்தங்களையும், நெகிழ்ச்சியான சம்பவங்களையும், அட்டகாசமான பகடிகளையும், சொந்த அனுபவங்களையும், இனவெறிக் கொலைகள் பற்றிய தகிப்பையும், பத்திரிக்கைகளின் பொறுப்பின்மையையும், மனிதர்களின் அழிக்கும் மனப்பாங்கினையும், மனிதர்களின் காம வேட்கையையும் அதை தணித்து கொள்ள அவர்களின் கையாளும் முறைகளையும், அன்பின் மொத்த வெளிபாட்டினையும் பதிவிட்டிருக்கிறார். இவையனைத்தும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாவல் எழுதப்படவில்லை என்றாலும் என் பார்வையில் ஜீரோ டிகிரி இதையே ஆணித்தரமாக செய்கிறது. 

ஒரு துப்பறியும் நாவலை படிப்பதற்கு வாசகனாகிய நம்மிடத்தே இருந்து எந்த ஓர் முயற்சியும் தேவையில்லை, வெறுமனே படித்தால் மட்டும் போதும், கதை புரிந்து விடும், புத்தகத்தை தூக்கி போட்டு போய் கொண்டே இருக்கலாம். ஆனால் இந்த ஜீரோ டிகிரி வாசகனாகிய என்னை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்கி விட்டது, சொல்ல போனால் இன்னும் வேலை வாங்கி கொண்டு இருக்கிறது…. ஏனெனில் இவருடைய எழுத்துக்கள் ஒரு  சில இடங்களில் Puzzle போல் இருக்கிறது, மிகவும் விழிப்போடு படித்தால் மட்டுமே ஓரளவேனுமாவது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த புதிரை அவிழ்த்து அதனின் அர்த்தங்களை கண்டு கொள்ளும் போது ஏற்படும் சிலிர்ப்புக்காகவே பக்கங்களை புரட்டி கொண்டே இருக்கலாம்.

நாவல் படிக்கும் போது இடையே வரும் வன்மம், வலி, பரபரப்பு ஆகிய அனைத்தும் புத்தகத்தை அழுந்த பிடிக்க வைக்கும் ரகம். ஆனால் இவ்வளவு ஸீரியஸான நாவலில் ஆங்காங்கே தலை தூக்கும் பகடிகளை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது. ஒரு இடத்தில் “ஆர்ய அல்குல் ஆர்ய அல்குல்” என 108 முறை கொடுக்கப்பட்டிருக்கும். ஏதோ ஒரு உள்ளுணர்வு அதை 108 முறை சரியாக கொடுக்க பட்டிருக்கிறதா என எண்ணி பார்க்க சொல்லிற்று, நானும் எண்ணிணேன், அதிலும் கூட ஏதாவது புதிரோ, பகடியோ ஒளிந்து கொண்டிருக்குமென ஒரு நப்பாசை தான்… எண்ணினால் சரியாக 108 இருந்தது. எண்ணி விட்டு அடுத்த வரி படித்தால், “சரியாக 108 முறை எழுதப்பட்டிருக்கிறதா என்று  எண்ணி சரிபார்க்கிற வாசகிகள் இந்த நாவலை தொடர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு வேறு ஏதேனும் உருப்படியான காரியம் பார்க்கப் போகலாம்” என்று எழுதியிருந்தது… வாய் விட்டே சிரித்து விட்டேன், அதுவும் ஜன நெரிசலான ரயிலில்...

முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்நாவலின் பல்வேறு இடத்தில் கையாளப்பட்டிருக்கும் யுக்திகள், சமயங்களில் சொல்ல வரும் விஷயத்தினை ஆழ்ந்து பதிவித்து விடுகிறது.

இந்நாவலை படித்த / படிக்கவிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் “இனி நானும் என் மகளுக்கான கவிதைகளும்” என்னும் பகுதி தான் மனதிற்கு நெருக்கமான பகுதியாய் இருக்க கூடும் என்பது என் யூகம். கவிதைகளை வாசிக்க வாசிக்க கண்களில் நீரும், இதயத்தில் அன்பும் பொங்கி வழிகிறது. அந்த மொத்த பகுதியினையும் முடித்து விட்டதும், எனக்கு குழந்தை பிறந்தால் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும், அதற்கு ஜெனீ என்றே பெயரிட வேண்டும் என்று தீர்மனிக்க மனம் ஏங்கியது.

என்னால் ஒரு சில அத்தியாயங்களும், பகுதிகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை, வெகு எளிமையான வார்த்தைகளையே எளிமையான வடிவத்தில் தான் கொடுத்திருக்கிறார், இருந்தும் அதை புரிந்து கொள்ள முடியாதவாறு கொடுத்திருப்பது  ஆசிரியரின் சாதூர்யம் என்றே நினைக்கிறேன்.

எப்படி சொல்கிறேன் என்றால்,

நாவலின் ஒரு பகுதியில், ”ஆதி மனிதன் குறி வருகை ஸ்டைல் ஸ்ட்ரக்சுரலிஸம் ஸ்டைல் குறி குறியில் அடக்கம் மொழியில் இல்லை மொழி மொழியில் அடக்கம் குறியில் இல்லை குறியில் இல்லை மொழி வேறு குறி வேறு. எல்லோரும் வந்து குறியென்றால் எதுவெனக் கேட்டார்கள். நான் குறியை குறிக்குள் தேடென்றேன்.” என வருகிறது… இதை என்னால் சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இதை தெரிந்து கொள்ளாமல் விடக் கூடாது என்று மட்டும் என் மனதில் ஒரு உறுதியை வர வைத்து கொண்டேன். அதன் விளைவாய் ”சாரு நிவேதிதா வாசகர் வட்டம்” என்னும் வட்டத்தில் இதன் தொடர்பாக ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டேன். அதற்கு நிர்மல் ம்ரின்ஜோ என்னும் அன்பர், “Semiotics for beginners: signs” என்னும் ஒரு வலைப்பூவின் லிங்க்கையும், MG Suresh என்பவரின் லிங்க்கையும் கொடுத்து உதவினார். அதை படித்தும் புரியாததை நிர்மல் ம்ரின்ஜோவிடம் விவாதித்து தெரிந்து கொண்டேன். ஒரு சின்ன தேடலின் விளைவாக நான் Signs, Signifier, Signified, Classism, Mannerism, romantism, modernism, impressionism, expressionism, cubism, purism, futurism, realism, naturalism, symbolism, imagism, constructuvism, kinetic art, tataism, suprematism, the style, pop art, minimalism, conceptual art, existentialism, structuralism, post structuralism, பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம், post modern irony, pseudo modernism, critical realism,  indirect realism, போலி நவீனத்துவத்துக்கும் பின் நவீனத்துவத்துக்கும் உள்ள வித்தியாசம் என எதையெதையோ தெரிந்து கொண்டேன். அது எனக்கு தேவைப்படுமா, தேவைப்படாதா, புரிந்ததா, புரியவில்லையா என்பன போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும், இந்த ஜீரோ டிகிரியை வாசித்திராவிட்டால் இதை பற்றிய அறிமுகமெல்லாம் எனக்கு கிடைத்திராமலே போயிருக்கக்கூடும். இப்படி ஒரு பெரிய தேடலுக்கு பின்பு தான் ஒன்று புரிந்தது, இந்த நாவல் திட்டமிட்டு பல சூத்திரங்களை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்று. அதுவுமில்லாமல் ஒரு விஷயத்தை புரியாதது போல் கொடுத்து, என்னையே அது குறித்து தேட வைத்திருக்கிறார், இதுவும் அநேகமாக அவர் திட்டமிட்ட ஒன்றாகவே இருக்கக் கூடும். இதனால் தான் ஆசிரியரை சாதூர்யசாலி என்றேன்….

நாவலில் இன்னும் பல புரியாத பகுதிகளை விரட்டி சென்று வேட்டை ஆடலாம் என்று என்னை நானே தயார் படுத்தி கொண்டு இருக்கிறேன்.

இதுவரை சாரு நிவேதிதாவின் 5 புத்தகங்களை வாசித்து முடித்திருக்கிறேன். ஒரு மனிதன் எப்படி ஜெண்ட்டிலாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கண்ணியமாக இருக்க வேண்டும், நல்ல ரசிகனாக இருக்க வேண்டும் என நேரடி போதனைகளாய் இவரின் புத்தகங்கள் நமக்கு அளிக்காமல், ஒரு தாக்கமாக மனதில் விதைக்கிறது. அதுவே என்னை திரும்ப திரும்ப சாரு நிவேதிதாவின் புத்தகங்களை வாசிக்க தூண்டுகிறது. கையில் இப்போது …. நேநோ..