Tuesday 30 October 2012

அட்டகத்தி, சுந்தர பாண்டியன் – ஒரு பார்வை


சுந்தர பாண்டியன்”, ”அட்டக்கத்திஆகிய படங்களை அடுத்தடுத்து இந்த வாரத்திலே காண நேரிட்டது. இரண்டு படங்களுமே எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு படங்களும் இன்றைய கால கட்டத்தில் ஒரு முக்கியமான படம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. இரண்டும் இரு வேறு படம், இரு வேறு கதை என்றாலும் இவை இரண்டும் பேசும் பொதுவான அம்சம், இங்கு பெரும் விவாதத்திற்கு உரிய எரிபொருளாகும். பேருந்துகளில் நடக்கும் காதல்கள், கலாட்டாக்கள் மற்றும் பிரச்சனைகள்.
                    
இன்றைய சூழ்நிலையில் கிராமங்களில் ஆகட்டும் நகரங்களில் ஆகட்டும், கல்வி வேண்டுமென்றால், அது நடந்து செல்லும் தூரத்தில் பெரும்பாலானவருக்கு இல்லை. ஒரு நல்ல கல்வி வேண்டுமென்றால் அதற்காக பஸ்ஸோ, ரயிலோ ஏறி கூட்ட நெரிசலில் சென்று, நசுங்கி, புழுங்கி, வியர்த்து ,விறுவிறுத்து தினம் போய் வந்தால் தான் உண்டு. பள்ளி கல்விக்கே இந்த பாடு. இன்னும் கல்லூரி கல்வி என்றால் கேட்கவே வேண்டாம். கல்லூரி விடுதியிலே தங்கி படித்தால் தான் ஆயிற்று. அமெரிக்கா போல், அந்தந்த பகுதியில் பள்ளி, கல்வி அரசாங்க சார்பில் வசதி செய்து கொடுக்க இங்கு இன்னும் 40 ஆண்டுகளாவது ஆகும் போல் தெரிகிறது. அமெரிக்காவில் ஒரு குழந்தையை ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்றால் அவர்கள் இருக்கும் பகுதியிலே தான் சேர்க்க வேண்டும். வேறு பகுதியில் இருக்கும் ஸ்கூலில் எல்லாம் போய் ஸீட் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அதற்கேற்றாற் போல் கல்வி சமதரமானதாகவே இருக்கும். ஒரு ஸ்கூலில் நன்றாக சொல்லி கொடுத்தும், இன்னொரு ஸ்கூலில் வாத்தியார் வகுப்பிற்கே வராமல் இருக்கும் அவலம் எல்லாம் அங்கே நடப்பதில்லை. அதனால் பகுதி விட்டு பகுதி சென்று கல்வி கற்பது என்பது நம்மூரை பொறுத்தவரை  ஒரு தவிர்க்க முடியாத செயல் ஆகிறது.

இன்னொரு புறம், பெண்களை எப்படி கையாள்வது என்று தெரியாத/தெரியப்படுத்த படாத மாணவர்கள் பெரும் அளவில் எங்கு திரும்பினாலும் காண கிடைக்கின்றனர். இம்மாணவர்களுக்கு கௌரவத்திற்காகவும், பாலியலுக்காகவும் ஒரு பெண் அவசியம் தேவைப்படுகிறாள். ஏன் ’கௌரவத்திற்காக’ என்று சொன்னேன் எனில், அவன் மனதில் ஆணித்தரமாக விதைக்கப்பட்ட விதை என்னவெனில் “லவ் பண்ணுபவனே ஹீரோ, லவ் பண்ணாதவன் உலகில் வாழவே தகுதி இல்லை”. இது போன்ற விதையை தான் அவன் பார்க்கும் சினிமாக்கள் அவனுக்கு சிறு வயது முதல் விதைத்து வருகிறது. அதனால் ஒரு பெண்னை துரத்தி துரத்தி பின்தொடர்வது, அவளை கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்லி நிர்பந்திப்பது, அவள் மறுக்கும் பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவது போன்ற மனித தன்மையற்ற செயல்கள் எல்லாம் அவனை பொறுத்தவரையில் ஹீரோயிச செயல்கள் ஆகிவிடுகின்றன. இது போன்ற ஹீரோயிச செயல்களை காட்டி பெண்களை வலம் வரும் மாணவர்களை நகரிலும், கிராமத்திலும் எங்கு வேண்டுமானாலும் காண கிடைக்கின்றனர்.

இது போன்ற மாணவர்களுக்கு பெண்களை அணுகுவதே பிரச்சனையாய் இருக்கிறது. மேலும் பெண் என்பவள் பெற்றோரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால் அவளை நினைத்த நேரத்தில் சந்திப்பது என்பது இயலாத காரியம். வீட்டில் இருக்கும் போதும் பார்க்க முடியாது, அவள் படிக்கும் பள்ளிக்கு சென்றும் பார்க்க முடியாது, ஏனென்றால் வாட்ச் மேன் அவனை கேட்டினுள்ளேயே விட மாட்டான். அவளை எங்கேயும் நெருங்க முடியாது. இந்த இடத்தில் பேருந்துகள் அவனுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கிறது. பேருந்து என்ற அந்த மூடிய அல்லது குறுகிய சமூகத்தில் அவன், அவளை கரம் பிடிக்க அவன் ஆவனவற்றை செய்கிறான். பருவம் அடைந்தது முதல் பொத்தி பொத்தி வளர்க்கபட்ட பெண்களும், அவர்களுக்கு உரிய இனக்கவர்ச்சியினால் ஆண்களின் பால் ஈர்க்க பட்டு விடுவதும் இங்கே மிக சாதாரணமான விஷயம்.

இங்கே நான் குறிப்பிட வருவது என்னவென்றால், எப்படி பேருந்துகள் காதல் மையங்களாக மாறி போனது என்று தான் சொல்ல வருகிறேன்.

அட்டக்கத்தி படத்திலும் சரி, சுந்தரபாண்டியன் படத்திலும் சரி கதையின் நாயகன், கதாநாயகியை பேருந்தில் சந்திப்பது போன்று தான் வருகிறது. ஆக, பேருந்துகள் காதல் மையங்களாக ஆகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இந்த இரு படமும் இருக்கிறது.

இந்த மாணவர்களுக்கு பெண்களை ஈர்க்க வேண்டும் என்ற தவிப்பு இருத்தல் இயல்பு. அதற்காக ஓடும் பேருந்தில் ஏறியும், ஓடும் பேருந்தில் இறங்கியும், அநாவசியமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவில் கம்பிகளில் தொங்கி கொண்டு வருவதும் போன்ற ஆபத்தான செயல்களை சாகசங்களாக எண்ணி பெண்களை ஈர்க்க ஆன அளவில் முயற்சி செய்கின்றனர். இந்த இரு படங்களிலுமே இது போன்ற காட்சிகளை சித்தரிக்க பட்டுள்ளன. ஆனால் எந்த வடிவில் சித்தரிக்க பட்டுள்ளது என்றால், இது போன்ற சாகசங்களை ஊக்குவிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இது போல் உயிருக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்தான விளையாட்டுகளை செய்வதெல்லாம் ஹீரோயிசம் என்ற ரீதியில் தான் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த காட்சிகளை துகிலுரித்துக் காட்டும் காட்சியாய் கொள்ள முடியாமல் பொறுப்பில்லாத ஒரு படைப்பாகவே பிரதிபலிக்கிறது. சுந்தர பாண்டியன் படத்தில் பேருந்து நிற்கும் போது ஏறாதே, பேருந்து கிளம்பிய பிறகு ஏறு, அப்போது தான் பெண்களை கவர முடியும் படத்தின் நாயகன் அவனது நண்பனுக்கு அறிவுரை கூறுகிறான். அட்டக்கத்தி படத்திலும் அதே லட்சனம் தான். படத்தின் நாயகன் கொஞ்சமும் அறிவு இல்லாமல் வேகமாக ஓடி கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் படிகளில் கூட காலை வைக்காமல், வெறும் கைகளை கொண்டு பேருந்தின் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் கம்பிகளை பிடிக்கிறான், அப்போது அந்த ஜன்னலின் ஓரம் அமர்ந்திருக்கும் நாயகி அவன் இடறி விழுந்துவிடுவானோ என்ற பயத்தில் ’பார்த்து பார்த்து…’ என பதறி அவனுக்கு உதவி செய்ய முற்படுகிறாள், ஆனால் அவளின் உதவி இல்லாமலே நாயகன் படியில் கால் வைத்து எப்படியோ ஏறி, அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்து அவனின் காதல் லீலைகளை துவங்குகிறான். இப்போது இந்த இரு படங்களிலும் சேர்ந்து மக்களுக்கு செல்லும் கருத்து மிக தெளிவாகவே இருக்கிறது, ஒரு பெண் உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீயும் கண்ட படி பேருந்து படிகளில் தொங்கு…. அப்படி தானே! இந்த மாதிரி சில பொறுப்பற்ற ஹீரோயிச காட்சிகளாலே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனதற்கு உப காரணம்.

நான் ஒரு முறை வேளச்சேரியில் இருந்து தி.நகர் செல்லும் 5A பேருந்தில் போய் கொண்டிருக்கையில் சில பள்ளி மாணவர்கள் பஸ்ஸை துருத்தி கொண்டு, திரட்சை கொத்து கூட்டம் போல் படிகளில் தொத்தி கொண்டு வந்தனர், சின்ன மலை அருகே வந்து கொண்டிருக்கும் போது நாங்கள் இருந்த பேருந்து எங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தை கடந்து செல்ல வலதுபுறமாய் கடக்க முற்படுகையில், முன்னால் இருந்த பேருந்து இந்த துருத்தி கொண்டிருந்த கூட்டத்தை சற்று அசந்திருக்கும் பட்சத்தில் அடித்து விட்டிருக்கும். ஏனெனில் நாங்கள் சென்ற பேருந்து திரும்பிய வலது போதவில்லை, இன்னமும் கொஞ்சம் வலது திரும்பியிருக்க வேண்டும், ஓட்டுனர் துருத்தி இருக்கும் கூட்டத்தை கணக்கில் கொள்ளாமல் கடக்க முற்படுவதை பார்த்து, மாணவர்கள் அனைவரும் சத்தம் எழுப்பினர். கிட்டதட்ட அலறினர் என்று தான் சொல்ல வேண்டும். அவசராவசரமாக உள்ளே வர முடிந்தவர்கள் உள்ளே வந்தனர், இறங்க முடிந்தவர்கள் இறங்கி அவரவர்களை பாதுகாத்து கொண்டனர். இறங்கும் போது 3, 4 பேர் கால் இடறி விழுந்து விட்டனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், பேருந்தில் இருந்த அனைவரையும் இந்த சம்பவம் உலுக்கி போட்டுவிட்டது. அந்த சமயத்தில் பேருந்தில் படியில் தொங்கும் அளவிற்கு கூட்டம் உள்ளே இருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இரு படங்களிலுமே நிதர்சனத்தை துகிலுரித்து காட்டும் காட்சிகள் ஏராளமாக இருக்கிறது. உதரணமாக, பேருந்தில் பாலியல் ரீதியாக ஒருவர் எவ்வாறு துன்புறுத்தப் படுகிறார் மற்றும் வசிய படுத்தப்படுகிறார் என்று காட்ட படுகிறது. இது நாம் பேருந்தில் அவ்வப்போது பார்க்கும் அவலம் என்றாலும், இது போன்ற வரம்பு மீறல்கள் எல்லாம் பேருந்தில் எளிதில் சாத்திய பட்டு விடுகின்றன என்பதை நினைவு கொள்ள வேண்டும். அட்டக்கத்தி படத்தில் ஒரு பெண் தொடுதலின் மூலம் கதாநாயகனின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு கதாநாயகனின் மனதை அசுத்தப்படுத்தி விடுவாள். பின் உடன் இருக்கும் சகபயணி ஒருவர் இதை கண்டு வெளிப்படையாக புலம்பி தள்ளவே, கதாநாயகன் வெட்கங்கொண்டு பேருந்தில் இருந்து வெளியேறி விடுவான். வெளியேறிய பின் அவனை அவனே திட்டி மிகவும் வருத்தப்பட்டு கொள்வான் இது போல் பொறுப்பான காட்சிகள் படத்தில் ஆங்காங்கே இருப்பது தான் படத்தின் பலமாகும். மற்றப்படி படத்தில் சுவாரஸ்யம், ஹாஸ்யம், சண்டை காட்சி யாவும் மூன்றாம் தரத்தில் இருக்கின்றன. சுந்தர பாண்டியனிலும் வாலிப பசங்கள், வரிசையாக பெண்களின் பின் நின்று பாலியல் தொந்தரவு கொடுத்து கொண்டிருப்பார்கள். அதை ஹீரோ வந்து தடுப்பது போன்ற மொக்கையான க்ளீஷே காட்சிகள் தான் சுந்தர பாண்டியனுக்கு சறுக்கலாக போயிற்று. பேருந்துக்கு பேருந்து ஒரு சுந்தர பாண்டியனையா அனுப்ப முடியும்…! அந்த வகையில் நல்ல ஒரு கருத்துக்களத்தை எடுத்து கொண்டு ஹீரோயிஸம் சாயம் பூசி, சொல்ல வந்த கருத்தை கெடுத்து விட்டனர்.

அடுத்ததாய், சுந்தர பாண்டியன் படத்தில் மிக சிறந்த கதாப்பாத்திர வடிவாக்கம் என்றால் அது அப்புக்குட்டியின் கதாபாத்திரம் தான். உண்மையில் அந்த கதாபாத்திரத்தை அவர் மிக சிறப்பாகவும், மிக சரியாகவும் செய்துள்ளார். ஒரு பெண்ணிடம் எப்படி அணுகி, எப்படி காதலை சொல்லி, எப்படி அவளை கரம் பிடிப்பது என்று தெரியாத ஒரு கதாபாத்திரமாக அப்புக்குட்டி வருகிறார். அப்புக்குட்டி என்பது தனி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் அல்ல, ஊரெங்கும் நிறைய மனிதர்கள், அப்புக்குட்டி கதாப்பாத்திரத்தை உரித்து வைத்தாற் போல் இருக்கிறார்கள். என் நிஜ வாழ்விலும் சில அப்புக்குட்டிகளை, எனக்கு தனிப்பட்ட முறையிலேயே தெரியும். மேலும், அப்புக்குட்டியை ஒரு வில்லன் கதாபாத்திரமாக சித்தரிக்காமல் ஒரு கதாபாத்திரமாகவே, அப்புக்குட்டியை உலவ விட்டிருக்கின்றனர். என்ன தான் கதையின் நடுவே அப்புக்குட்டி கதாநாயகியை பார்த்து ஆபாசமாக திட்டினாலும், அப்புக்குட்டி ஒரு வகையில் அப்பாவி என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும். ஏனெனில் சசிக்குமாருக்கு இருக்கும் அழகும், திறமையும், சாதி பலமும், பணமும், குடும்ப பிண்ணனியும் அப்புக்குட்டிக்கு இல்லாமல் போயிற்று, அவ்வளவு தானே தவிர அப்புக்குட்டி வில்லனெல்லாம் கிடையாது, ஆனால் ஒரு அருவருப்பான கதாபாத்திரம், அப்படி அருவருப்பாய் இருப்பது கூட அவனின் தவறு கிடையாது என்பது தான் இங்கு பரிதாபம். இதே போல் அட்டகத்தி படத்திலும் ஒரு கதாபாத்திரம் வருகிறது, அவனும் கிட்டதட்ட அப்புகுட்டி போல் தான் என்றாலும், இவன் கொஞ்சம் அப்புகுட்டியை காட்டிலும் ஃபாஸிஸ்ட். அதாவது அந்த பெண், நம்மை தான் காதலிக்க வேண்டும். என்ன தான் நம்மிடம், அந்த பெண் எதிர்பார்க்கும் அளவுகடந்த அன்பு, வீரம், மேன்மையான குணம் இல்லாவிட்டாலும் அந்த பெண் நம்மை தான் காதலிக்க வேண்டும் என்ற ரீதியலான கதாபாத்திரம். மேலும் அந்த கதாபாத்திரம் கதாநாயகியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்வது மட்டுமில்லாமல், அதை தடுக்க வந்த ஒருவனையும் கன்னத்தில் அறைந்து அவனை அவமானப்படுத்துகிறான். இரண்டாமானவனின் கதாபாத்திரத்தில் வன்முறை சற்று தூக்கலாக இருந்தாலும், அடிப்படியில் இவ்விரு கதாபாத்திரங்களும் ஒன்றே.

இது போன்ற கதாபாத்திரங்கள் நிஜ வாழ்விலும் நிறைய இருப்பதால், சற்று இந்த கதாபாத்திரங்களை உற்று நோக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில், நாளை பாதிக்கப்படும் பெண்ணோ, அல்லது தகராறு செய்யும் ஃபாஸிஸ்ட்டோ நம் வீட்டு நபர்களாக கூட இருக்கலாம் அல்லவா?

உண்மையில் இது போன்றவர்களுக்கு ஹீரோயிஸத்தை பற்றிய ஒரு தவறான மாயை தான் மனதில் பதிந்து விட்டிருக்கிறது. அதற்கு நம் தமிழ் சினிமா உலகமே தார்மீக பொறுப்பு. இவர்களுக்கு உண்மையில் உணர வேண்டிய உடனடி உண்மை என்னவென்றால், ஹீரோவாக இருப்பதை காட்டிலும், நல்ல மனிதனாக இருப்பது தான் மிக தேவையான ஒன்று, அது தான் பெண்களுக்கு பிடித்தமாய் இருப்பதற்கு சுலபமான வழி. பெண்களுக்கு வன்முறை எந்த அளவிலும் பிடிக்காது, பெண்களுக்கு பிடித்தது எல்லாம் வீரம் மட்டுமே. இவர்கள் வீரத்திற்கும், வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல், பெண்களுக்கு முன்னால் பிறரை அடித்து அநாயவசியமாக பெண்களை அச்சுறுத்துகின்றனர். அதனாலே அவர்கள் அருவருக்க படுகின்றனர். தங்களின் போலியான பிம்பத்தை வீணாக காட்டி, பெண்களை கவர பார்க்கின்றனர், அப்படி அவள் கவர படுகிறாள் என்று வைத்து கொண்டாலும், பின்நாளில் உண்மை பிம்பம் வெளியே தெரிய ரொம்ப நாள் ஆகாது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இயல்பாய் இருப்பதே பெண்கள் எப்போதும் விரும்புவர். மறுபுறம், இவர்கள் வளர்க்க படும் விதமும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, பெரும்பாலும், இவர்கள் பெற்றோர்களின் ஒட்டுதல், அரவணைப்பு இன்றி,ஒரே வீட்டில் இருந்தாலும் தன் போக்கில் வளர்பவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்குள் நிறைய நிறைய அந்தரங்கங்களை வைத்து கொள்கின்றனர். எதையும் வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ள கூட வெட்கப் படுகின்றனர். இப்படி அளவிற்கு மீறிய அந்தரங்கங்களை வைத்து கொள்வதாலேயே பெண்களை பார்க்கும் போது, சக உயிராய் பார்க்காமல் வேற்றுகிரகவாசி போல் அணுகிறார்கள். அவர்கள் மறுக்கும் பட்சத்தில் வன்முறையை கையில் எடுத்து அவர்களில் ஆதிக்க முகங்களை காட்டுகின்றனர். இப்படி அக அவலட்சங்களை நிறைய இருக்கும் பட்சத்தில், ஒருவனின் முகம் எவ்வளவு லட்சனமாய் இருந்தாலும், அது பெண்ணிற்கு தேவையற்றது.


சுந்தர பாண்டியனிலும் சரி, அட்டகத்தியிலும் சரி எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. அது என்னவென்றால் இரண்டு படங்களிலுமே கதாநாயகிகள் சுமாரான அழகு தான். அழகான பெண்கள் தான் கதாநாயகிகளாக நடிக்க வேண்டும் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன? கதாநாயகிகள் ஒன்றும் பொம்மைகள் கிடையாது, கதாபாத்திரங்கள் என்று எடுத்து சொல்லும் வகையில் இவ்விரு படங்களும் அமைந்ததில், எனக்குள் ஒரு சந்தோஷம்.    





No comments:

Post a Comment